புதியதோர் உலகு செய்வோம்/பெண்களின் பலவீனம் எது?

8. பெண்களின் பலவீனம் எது?


தாவர இனங்கள் பருவங்களில் பூத்துக் காய்த்துக் கனிகின்றன. கனி என்ற இலக்கின்றியே ரோஜா, மல்லிகை, முல்லை போன்ற மலர்கள் தம் பிறவிப் பயனை வண்ண வாசனைகளுடன் முடித்துக் கொள்கின்றன. பறவை இனங்கள் பார்க்கவும், கேட்கவும் மகிழ்ச்சியையும் பரவசத்தையும் அளிக்கின்றன. விலங்குகளிடமும்கூட, ஒளிவு மறைவோ கபடமோ இல்லை. ஏனெனில் ஐந்தறிவுடன் நிற்கும் உயிரினங்கள் இயல்பூக்க நெறிப்படி வளர்ச்சி பெற்று இனப்பெருக்கம் செய்து மடிகின்றன. இந்த இயற்கை உயிர் வளையத்தில் மனிதர் சுயநல - பேராசை அறிவுகள் புகுந்துவிட்டன. வாழும் காலத்திலேயே ஒரு நரகத்தைப் படைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பல்லி பூச்சியைப் பிடிக்க வருகிறது. பூச்சி அங்கேயே நிற்கும். அதுவே சுவர்க்கமென்று கருதுமோ?

எல்லோருக்கும் பொதுவானதாக இயக்கை, நீர், மண், காற்று என்று கொடைகளை வழங்கி இருக்கிறது. ஆனால் இந்த வாழ்வாதாரங்கள் குறிப்பிட்ட மேல் வர்க்கத்தினர் தங்குதடையின்றி அனுபவிப்பதற்காக எஞ்சியுள்ள அடித்தட்டு வர்க்கம் செயல்படுகிறது. இந்தப் போராட்டத்தில் அடிபட்டுப் போகிறவள் பெண்தான். மார்ச் 8, மகளிர் தினம் என்று சொல்கிறார்கள். சுமார் பதினைந்தாண்டுகளுக்கு முன் ஒரு மாநாட்டில் உரையாற்ற சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தேன். மாநாடு, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் நடந்தது. என் வசதிக்காக ஒரு பெரிய ஒட்டல் அறையை ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் அதை மறுத்து, மாநாட்டுக்குக் குழந்தை குட்டிகளுடன் அண்டை அயல் ஊர்களிலிருந்து வந்திருந்த பெண்கள் தங்கிய விடுதியில் இருந்தேன். விடுதி வாயிலில் ஓர் அடி பம்பு இருந்தது. அது ஒய்வு ஒழிவு இல்லாமல் ஆஸ்துமாக்காரரின் இதயம் போல் சிரமப்பட்டு இயங்கிக் கொண்டிருந்தது. முக்கடலும் சங்கமிக்கும் நீர்ப்பிரளயம் இருந்தும் பயனில்லை. பெண்கள் இடைவிடாமல் இயக்கிக் கொண்டிருந்தார்கள். அன்றிரவு முழுவதும் எனக்கு உறக்கம் வரவில்லை. முக்கடலின் அலையோசையினால் அல்ல; மாநாட்டில் வீட்டுக் கடமை மறந்து பங்கு பெறவந்திருந்த பெண்களின் பேச்சொலியோ, குறட்டையொலியோ, குழந்தைகளின் அழுகையொலியோ காரணமில்லை. மரணாவஸ்தையில் போராடும் பம்பு அடியோசையும் கூடக் காரணமில்லை. அந்தத் தண்ணீர்ப் போராட்டத்தில் ஒர் ஆண் குஞ்சுகூடப் பங்கு பெற வரவில்லை. அடுத்தநாள் பேச்சில் இதைக் குறிப்பிட்டேன்.

ஆத்திரத்துடன் பேசினேன். மார்ச் 8 மகளிர் தினங்கள் எத்தனையோ வந்து போகின்றன. கிளாரா ஜெட்கின் அம்மை, உலக மகளிரெல்லாம் உழைப்பு மதிப்பையும் மனித உரிமையையும் பெற வேண்டுமென்று அந்த நாளை ஒதுக்கி, ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளாகின்றன. நம் தாய் நாட்டில் வீட்டுக்குத் தண்ணீர் கொண்டு வரும் பொறுப்பு, இல்லத்தை ஆளவந்திருக்கும் மகராசியின் தலையில்தான் கிரீடமாக வைக்கப்பட்டிருக்கிறது. நீலகிரிப் பழங்குடி மக்கள் திருமணங்களில் முன்பு மணமகள் அருவிக்குச் சென்று குடத்தில் நீரெடுத்து வருவதோடு சடங்கு நிறைவேறும். கோவையைச் சார்ந்த கிராமங்களில் கூட மணமகள் சீர்த் தண்ணீர் கொண்டுவரும் சடங்கு உண்டு. கிணற்றில் இருந்து நீர் எடுத்துக் கொண்டு வருவாள். இந்த மரபுகள் இன்றும் கட்டாயமாகப் பெண்களின் கடமையாகவே விடிந்திருக்கிறது.

ஆனால் ஒர் ஆண் தன் உழைப்பால் குடும்பப் பொருளாதாரச் சுமையை ஏற்று, அவர்களை வாழவைக்க வேண்டும் என்ற கடமை மட்டும், அவன் வசதிப்படி காற்றோடு விட்டுவிடலாம். சம்பாதித்ததைக் குடித்து அழிக்கலாம்; பெண் சுகம் தேடி பெண்ணின் மானம் அழிக்கலாம். அப்படி ஒரு தொழிலை ஆதரித்து, அவளை இழிகுழியில் தள்ளலாம். கட்டிய மனைவியை உதைத்து இம்சை செய்யலாம். பெற்ற குழந்தைகளைப் பிச்சையெடுக்க வைக்கலாம்; அல்லது விலைக்கு விற்கலாம்...

பெண், இந்நாள் பொருளாதரத் தற்காப்புக்காகவும் உழைக்கிறாள். பிள்ளைகள் படிப்புக்கும் அவளே உத்தரவாதம் ஏற்க வேண்டியதாகிறது. அவள் ஈட்டும் பொருளில், நுகர்பொருள் வாணிப அசுரன் மடிபிடித்துக் கொள்ளை அடிக்கிறான்.

அவள் உடலும் உள்ளமும் சோர்ந்து நொந்து நூலாகத் துவண்டாலும் நியாயங்கள் அவன் பக்கமே பேசபடுகின்றன.

“அவெ என்ன செய்யிவா, பாவம். வேல சரியாகக் கெடக்கல. புருச வாரப்ப முகம் காட்டாம சோறு போடுறாளா? சதா குடிக்கப் போறா குடிக்காத ஆம்புள எவ இருக்கா?..” என்று மூத்த தலைமுறைகள், வித்தாரம் பேசும். மனசுக்குள் இவள் புருசன் குடித்துவிட்டு வந்து உதைத்த நினைவு முட்டும். ‘அவளும் படட்டுமே?’ என்றுதான் நினைக்கிறாள்.

பெண் சமுதாயத்தின் பலவீனமே இவ்வாறு ஒருவரையொருவர் குதறிக் கொள்வதில்தான் நாளொரு வண்ணமும், பொழுதொரு வசைச் சொல்லுமாக நிலைபெற்றிருக்கிறது. அடித்தளத்திலிருந்து உயர்மாடி வரையிலும் இதில் வேற்றுமை இல்லை. எனவே ஆள்பவனின் மிருகபலம் அகிம்சையை நோக்கிப் பரிணாமம் பெறும் பேச்சுக்கே இடமில்லாமல் போகிறது. பாலியல் வன்முறைகளும் வரதட்சணைக் கொலைகளும் உயர்கல்விக்கும், வண்மைக்கும் எந்த ஒரு சமுதாயப் பரிணாம உயர்வும் வந்துவிடவில்லை என்றே காட்டுகின்றன. கல்விச்சாலைகளில் அதிகார உயர்பீடங்களில் நாம் நம்பிக்கை இழந்து கொண்டிருக்கிறோம். அதுவும் சமுதாய ஒழுங்கைக் காக்கும் காவல்துறை ஆள் வன்முறைக்கு எடுத்துக்காட்டான பிம்பமாகப் படிந்து போயிருக்கிறான், இருக்கிறாள் என்றும் சொல்லாம். இதற்குக் காரணம், தொலைக்காட்சிகளில் அன்றாடம் விவரிக்கப்படும் காட்சிகளாகவும் இருக்கலாம். முந்நாட்களில் தாயார், “அதோ போலீசுக்காரன் வரான், அடம் புடிக்காம சாப்பிடு” என்று பயம் காட்டுவார்கள். அந்தத் தாயே போலீசை அறிந்திருக்கமாட்டாள். ‘பூச்சாண்டி’ என்ற சொல்லைப் போல் அச்சுறுத்தும் சொல்தான் அது. ஆனால் பூச்சாண்டி பயம் விலகி பூச்சாண்டிகளை நேர் கொள்ளும் நிலைக்கு இந்நாளைய மக்கள் தள்ளிவிடப் பட்டிருக்கிறார்கள். இந்த ஜனநாயகத்தில், அவர்கள் காவலர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. ‘குண்டாந்தடி அடக்கு’க் காவலர்களாகவே திகழ்கிறார்கள்.

தண்ணீரிலிருந்து எங்கோ திசை மாறிவிட்டேனா?

இல்லை.

இந்நாட்களில் சென்னை மாநகர வீதிகளில் சாலைகளில் குடிநீர் லாரிகள் ஒருவகை யமதூதர்களாகத் தங்களை மெய்ப்படுத்திக் கொண்டாலும் பெண்களுக்கு உயிர்நாடிகள், உயிர் காக்கும் தெய்வங்கள். இந்த நெடுநகரில் பூக்கட்டியும் பலபல சிறு தொழில்கள் செய்து பெரிய வீடுகளில் சீமாட்டிகளுக்குத் துணி துவைத்து, அழுக்கு மலங்கள் துடைத்து, ஏவல்கள் செய்தும், வயிறு பிழைக்க வரும் குடும்பக் கொத்துகள் பதுங்க, எலி வளைகள் போன்ற பொந்துகள் உண்டு. இவர்களுக்கெல்லாம் குடித்துவிட்டு வரும் கணவன்மார்களுக்கும், பிற ஆண்களுக்கும் சோறு வடித்துக் கொட்ட தண்ணீர் சுமந்து வீடுகளுக்குக் கொடுக்கும் தொழில் பொருளாதாரம் தருகிறது. இவர்கள் குடியிருந்து புழங்கும் தெருக்களில் சில சமயங்களில் ஈர்க்கு நுழைய இடமில்லாமல் பளபளக்கும் கார்களும் ஏனைய வண்டி வாகனங்களும் அணிதிரண்டு நிற்கும். பெரிய சாலையில் ஆட்சி முதல்வரோ வேறு ஆட்சி பீடப் பெருமகனோ முன்னும் பின்னும் ஊளையிடும் எச்சரிக்கைகளுடன் செல்வார்கள். முன்பெல்லாமானால் யார் யாரோ போராட்டக்காரர்கள் போக்குவரத்தை மூச்சைப்பிடித்து நிறுத்துவார்கள். இப்போதெல்லாம் அந்தப் பேச்சுக் கிடையாது. சட்டம் ஒழுங்கு நிலை நிறுத்தப் பெறுகிறது.

குடிநீர் யமன்கள் தம் நீண்ட சரீரங்களுடன் நிற்க முடியாமல் அவதிப்படும் இப்படி ஒரு சந்தி மூச்சுத் திணறலில் ஆகாசக் கருப்பு, நாகாத்தம்மன், யேசுநாதர், மாஷா அல்லா என்ற மதநல்லிணக்கம் பேசிக் கொண்டு முடங்கும் பாரவண்டிகள், இடைஇடையே எங்களுக்கில்லாத சாலையா என்று பளபளக்கும் புத்தம் புது வண்டிகளின் சொகுசுகள் முகம் சுளிக்க, தேர்தல் பிரசாரத்துக்கு சமத்துவ வாக்குகளை அள்ளி வீசும் பரபரப்பில் துடிக்கும் வெள்ளைகள் என்று நிற்க, சமத்துவப் புழுதி தன் மதச்சார்பற்ற இந்தியத் தன்மையால் எல்லா வாகனங்களையும் போர்த்தி கவுரவிக்க ஒருபுறம் இடுப்பில் ஏறிய ஆரஞ்சு வண்ண நிறைகுடநீருடன் ஒரு பெண் உள்ளே புகுந்து மறுபுறம் வரலாமா என்று கண்ணோட்டமிடுகையில் எதிர்பாராதது நிகழ்கிறது. எதிர்ப்புறப்பொந்து வாயிலில் நின்ற ஒரு மூன்று வயதுப் பிஞ்சின் கையில் இருந்த மிட்டாய் வழுக்கி எட்டி நின்ற ஏதோ ஒரு சக்கரத்தடிக்குப் போகிறது. பிஞ்சு இடுக்குகளில் புகுந்து, கையால் துழாவுகையில் ஏக உறுமல்களுடன் தடைப்பட்ட சுவாசங்கள் அசைந்து நகர, “யம்மா, யம்மா, புள்ள புள்ள!” என்று கூக்குரல்களில் குடத்தோடு இடையே புகுந்த பெண்ணின் குடம் சரிந்து நீர் அனைத்தும் புழுதியைக் குளிப்பாட்ட, ஒரே கூச்சல். ஒரு காக்கிச் சட்டைப் போலீசு, பிஞ்சுக் குழந்தையை அலக்காக மீட்க, இரத்தக்களேவரம். கேசு எல்லாம் தடுக்கப்பட, சுபம், சுபம்

ஆனால், போலீசுக்கு வந்த வேட்டை போயிற்றே?

“என்னம்மா நீ? புள்ளய அங்கிட்டிருந்து கூப்புடுற? இப்ப நா எடுக்கலன்னா இன்னாவுது? நசுங்கிச் செத்திருக்குமே?” இவளோ, குடத்து நீர் சரிந்த இழப்பில் கப்பல் கவிழ்ந்த பிரலாபத்தைத் தொடங்குகிறாள்.

“சரி, சரி, புள்ளய பத்திரமாகக் குடுத்திட்டேன். எதுனாச்சும் குடுத்தனுப்பு. இந்நேரம் சட்டினியாயிருக்கும் அது.”

புள்ளையோ மிட்டாயை இழந்த துக்கத்தில் பெருங்குரலெடுத்து அழுகிறது.

தாயார்க்காரி, அதன் முதுகில் இன்னும் நாலு சாத்துகிறாள். “யோவ் நீயாரய்யா புள்ளயக் காப்பாத்துறது? இது பொட்டக் கயித. எவனையாயினும் இட்டுகினு போகும். அவ குடிச்சிட்டு வந்து ஒதிப்பா. இது செத்திருந்தா ஒயிஞ்சிதின்னிருப்பே. எதாலும் கேசு போட்டு காசு வாங்கலாம். உன்ன யாரு இங்க வரச்சொன்னது! அங்க தண்ணிடாங்கு கிட்ட முடியப் புடிச்சுக்கிட்டு சண்ட வலிச்சி இந்நேரம் பண்ணிட்டாளுவ அதுவும் பாயாப் போச்சி. உனுக்கு அங்க நின்னு இவ்வளுவுவ கொட்டத்த அடக்க பவுசில்ல. இங்க வந்து புள்ளியக் காப்பாத்திட்டன்னு துட்டு வேற கேக்குற அங்க போயி நில்லு!”

குடம் நசுங்கி இனி உபயோகமில்லை என்று செப்புகிறது. மீண்டும் பொட்டக்கயிதக்கு அடிகள் விழுகின்றன. ‘காவல்’ அங்கிருந்து நகருகிறது.

மகளிர் தினம் வாழ்க !


‘தினமலர்’ பெண்கள் மலர்
மார்ச் 27, 2004