புதியதோர் உலகு செய்வோம்/பெண்களும் குழந்தைகளும்

10. பெண்களும் குழந்தைகளும்

(நுகர்வுக் கலாச்சாரத்துக்கு தீனி போடும் இலக்குடன் இன்றைய பெண்கள் தங்கள் மகத்தான இல்லப் பங்களிப்பை அலட்சியமாகக் கருதுவது சரிதானா என்ற ஒரு மறுபரிசீலனை மேற்கொள்வது எனக்கு இச்சமயம் அவசியமாகப்படுகிறது. இந்த நோக்கில் காந்தியடிகளின் கருத்தும் அறிவுரையும் தீர்க்கதரிசனங்கள். இதைக் கருத்தில் கொண்டு இதை எழுதுகிறேன்)

காலை ஏழு மணி, இளங்குழந்தைகள் இருக்கும் குடும்பங்களுக்கு நெருக்கடி நேரம் கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனித்தனியாக அடுக்குமாடிப் பொந்துகளிலும், கூடம், தாழ்வரை ஒன்றாங்கட்டு, இரண்டாங்கட்டு என்று இன்னமும் புறநகர்ப்பகுதிகளிலும் எஞ்சியிருக்கும் புராதன வீடுகளிலும் சிதறிப் போன பிறகு, நெருக்கடிகளுக்கும் இரைச்சல்களுக்கும் மோதல்களுக்கும் எல்லோரும் பழகிப் போயிருக்கிறார்கள். ஒற்றைக் குடும்பங்களில், தந்தையும் தாயும் பொருள் தேடப் போகிறார்கள். இருவரும் இல்லம் விடுவதானால், கைக்குழந்தையில் இருந்து, மழலைப் பள்ளிக்குப் போகும் பிஞ்சுகளையும் தயார் செய்தாக வேண்டும். தண்ணீர் பிரச்னை, குளியலறை பிரச்னை, உணவு தயாரிக்கும் சங்கடங்கள் எல்லாவற்றுக்கும் மேல், மழலைப் பள்ளிகளுக்குச் செல்லும் இரண்டுங் கெட்டான்களுடன் போராடும் குரல்கள் அக்கம் பக்கங்களில் வந்து மோதும்.

‘சனியனே? பாலைக் குடி! மணி எட்டுடா? வேன் வந்துட்டுப் போயிடும். அன்னாடம், ஆட்டோவுக்கு அழ முடியாது...!’

அழும்பு, அடம்!...

‘டேய், குடிடா, நேரமாயிடுச்சில்ல...?’

சாமதான பேதங்களுக்கு மசியாத பிஞ்சின் முதுகில் அடிவிழும். வலுக்கட்டாயமாகப் பாலைக் கொடுக்க, துப்பியோ வாந்தி எடுத்தோ ரகளை கிளம்பும். மேலும் அடிகளுடன் சொற்களையும் கடித்துத் துப்பிக் காயப்படுத்துவார் அன்னை ஒருவழியாகப் புத்தகமூட்டை, பகலுணவுக்கான டப்பி, தண்ணீர்க் குப்பி இவற்றுடன் தரதரவென்று சாலையில் வந்து நிற்கும் வண்டிக்குள் திணிக்க இழுத்துச் செல்வார்கள். இடையில் சனி-ஞாயிறு விடுப்புகள் வந்துவிட்டால், குழந்தை அந்த சுகத்தை அநுபவித்துவிடும். திங்கட்கிழமை மனசிக்கலில், பிரளயமே வெடிக்கும்.

குழந்தையின் வளர்ச்சி, இயல்புக்கேற்ற ஆரோக்கியத்துடன் நிகழ இன்றைய சூழல் அநுமதிப்பதில்லை. தாய்ப்பால், தாய்மடி, தாய்மொழி இவை பல குழந்தைகளுக்கும் வலுகட்டாயமாக அந்நியமாக்கப்படுகின்றன. தன் பணிச் சுமையிலிருந்து விடுபட இயலாத பெரும்பாலான தாய்மார், உள்ளே குற்ற உணர்வுகளாலும் பாதிக்கப்படுகிறார்கள். காலையில் இருந்து இரவு பத்து பத்தரை மணி வரையிலும் இல்லம்விட்டு வெளியே தொழில் செய்யும் ஒரு மருத்துவர் தம்பதியின் குழந்தைகள், ஆயா, சமையற்காரி போன்ற ஊதியத்துக்குப் பொறுப்பேற்கும் பெண்களிடமே வளருகின்றன. இந்தக் குற்ற உணர்வை மாற்றிக் கொள்ள அன்றாடம் இரவு வீடு திரும்புகையில் குழந்தையின் உடல்நலத்துக்குத் தீமை பயக்கும் என்று உணர்ந்தும், அவன் விரும்பி உண்ணும் ஐஸ்கிரீம், சாக்லேட் போன்ற பண்டங்களை வாங்கி வந்து, உறங்கினாலும் எழுப்பிக் கொடுத்து, முத்தமிட்டு ஆறுதல் பெறுகிறாள் தாய்.

காலையில் சாலையில் மோதும் வாகன நெருக்கடிகளில், நூற்றுக்கணக்கில் நம் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய மழலைகள் அடைப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.

தாயும் தந்தையும், தங்கள் வாழ்க்கையையே பணயம் வைத்துப் பொருளீட்டி, இந்தப் பிஞ்சுகளின் இளம் பருவ இனிமைகளைக் கொள்ளையடிக்கும் குரூரமே மழலைக் கல்வி, சிறார் கல்வி என்ற பெயரில் நாற்பது ஐம்பது ஆண்டுகளாக இங்கே நடைபெற்று வருகிறது. ஒற்றையடித் தடங்களுக்கப்பால் ஒளிந்திருக்கும் கிராமங்களைத் தேடிச் சென்று பேருந்துத் தடமமைத்து அதிகாலையில் பிஞ்சு நெஞ்சங்களை அதிர வைக்கும் குழலொலியுடன் வந்து, பிஞ்சுகளை அள்ளிச் செல்லும் தீப்பெட்டித் தொழிற்சாலை வண்டிகளுக்கும் இவற்றுக்கும் அதிக வித்தியாசமிருப்பதாகத் தெரியவில்லை.

அங்கே பிள்ளைகள் கையில் தூக்குப் பாத்திரத்துடனும், பதிவுச் சிட்டையுடனும் திரும்பி வரும்போது தகப்பன், அதில் எத்தனை பதிவாகி இருக்கிறதென்று பார்ப்பான்.

இங்கே தாய், முன்னிரவில் பிள்ளையின் நோட்டைத் திறந்து பார்க்கிறாள். ஹோம்வொர்க் பூதம், பிள்ளையின் அறிவுத்திறனைத் தெரிவிக்கும் ‘மார்க்’குகள் என்று கண்காணிக்கிறாள். பெரும்பாலும் ‘டியூசன்’ என்று இன்னும் ஒரு மணி நேரம் சிறைச்சாலைக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

குழந்தைக்கு மலச்சிக்கல், மனச்சிக்கல் இருக்கிறதா, உணவு கொண்டு மகிழ்ச்சியுடன் விளையாடுகிறதா என்ற கவனம், பிள்ளை மற்றவர்களைவிட ‘மார்க்குகள்’ எடுத்து சாதனையாளனாக வளர வேண்டுமே என்ற ஒரே இலக்கில் அடிபட்டுப் போகிறது. மீறும்போது, பிள்ளைக்கு உடம்பு சுடும்; தலைவலி, வாந்தி, கவனக்கோளாறு எல்லாம் சேரும். அப்போது அலறிப் புடைத்து மருத்துவரிடம் கொண்டு செல்வார்கள். பரிசோதனைகள், மருந்துகள், ஃபீஸ் என அது தனிக் கொள்ளை.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் வளரும் பிள்ளைகளைப் பற்றிச் சொல்ல வேண்டாம். அரசுப் பள்ளிகள் தனி ரகம். இந்தக் குடும்பங்களில் பிஞ்சுகள் விளைந்து பலன் கொடுப்பது அபூர்வம். இப்போதெல்லாம் இந்த இடங்களில் இருந்து, ஐ.ஏ.எஸ், கைவினையாளர் என்று பத்திரிகைகளில் பிரபலமாகுமளவுக்கு வருகிறார்கள். என்றாலும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், அரைகுறை வளர்ச்சியை எட்டு முன்பே ‘டிராப் அவுட்’ என்ற கணக்கைப் பெருக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பொன்விழாக் கண்டுவிட்ட இந்தக் குடியாட்சியின் குழந்தைகளையும் நடப்பியலையும் பார்க்கும்போது, முந்நாள் சோவியத் நாட்டில் நான் கண்ட குழந்தைக் காப்பகங்கள், மழலைப் பள்ளிகளைப் பற்றிய நினைவு வருகிறது. 1976, 1979, 1983 என்று மூன்று முறைகள் நான் சென்றபோது, ‘குழந்தைகளே நாட்டின் எதிர்காலம்’ என்ற வாசகம் எங்கு திரும்பினாலும் கவர்ந்தது. குழந்தைகள் ஆண்டில் இந்த வாசகம், மிக அதிகமாக ஒடும் ஊர்திகளிலும்கூட இருந்தன. இங்கேயும் இத்தகைய வாசகங்களுக்குப் பஞ்சமில்லை. “பெண்ணுக்குத் திருமண வயது 21” என்று எழுதப்பட்ட ஆட்டோ வாகனத்தை ஒட்டுபவனுக்கு 20 வயது இருக்காது. அவன் ஒரு 15 வயதுப் பெண்ணை மணந்து ஒரு மகவுக்குத் தாயாக்கியும் இருப்பான். இங்கு நடப்பியல் வேறு; எழுத்து வாசகங்கள் வேறு. நான் சென்ற ஒவ்வொரு தடவையும் அங்கே, பல இடங்களில் பல குழந்தைப் பள்ளிகள், அவற்றோடு இணைந்த சேய் காப்பகங்களையும் கண்டேன். அநேகமாகத் தாய்மார் எல்லோருமே வேலைக்குச் சென்றார்கள். வேலைக்குச் செல்வதனால் குழந்தைகளைக் கவனிக்க முடியவில்லையே என்ற குறை இருந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் குழந்தைகள் நாட்டின் செல்வமாகக் கருதப்பட்டார்கள். தாயும் தகப்பனும் பிள்ளையைத் தூக்கிச் சென்று அருகாமையில் இருந்த காப்பகப் பள்ளியில் விட்டுவிட்டுச் செல்லும் காட்சி மிக இயல்பாக இருந்தது. கூடுவண்டி, தள்ளுமுள்ளு எதுவுமே இல்லை.

இந்தப் பள்ளிகளுக்குள் நுழைந்தால், அற்புதக் காட்சிகளே விரியும். ஏழை, பணக்காரர் என்ற நிலையோ, சீருடைச் சமாசாரங்களோ இல்லாத சுதந்தரங்கள். விரிந்து பரந்த பூங்காவாக, மண்ணில் விளையாட ஆசையுடன் நடப்பதற்கு உகந்ததாக, நீரில் விளையாடக்கூடிய சிறு நீச்சல் குளங்களுடன் இருந்தன. இங்கே பணிபுரிந்த அன்னையர், செவிலியர், மருத்துவம் பயின்றவர், மழலைக் கான ஆடல்பாடல்களில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் ஆகியோர். ‘விருந்தினர் வருவதாக’ முன்கூட்டி அறிவிப்பு எதுவும் செய்திராத நிலையில்தான் நானும், மற்ற இரு பெண்களும் சென்றோம். சிரிப்பும், பாட்டும், களிப்பும், நாணமும் தயக்கமும் தவிர எந்தக் கடுமையையும், எங்கும் பார்க்கவில்லை. ஒரு காப்பகப் பள்ளியில் கட்டிடத்துக்குள் சென்று, பல்வேறு விளையாட்டுச் சாதனங்களுடன் ஆடிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்தோம். அப்போது, இன்னொரு கட்டிடத்துக்குள் இருந்து அழுகுரல்களும், பாட்டொலியும் தாள ஒலிகளும் மென்மையாகச் செவிகளில் விழுந்தன. நான் அந்த வாயிலுக்குள் நுழைந்தேன். எட்டிப் பார்த்தேன்.

என் முகத்தைப் பார்த்ததும் ஒரு செவிலி விரைந்து வந்தாள். அவள் கையில் நம் சிப்ளாக்கட்டை மாதிரி, ஒரு தாளக்கருவி, மென்மையாக ஒலிக்கக்கூடியது இருந்தது. இன்னொரு செவிலி மென்மையான குரலில் பாடிக் கொண்டிருந்தாள். ஏழெட்டுக் குழந்தைகள் மலம் கழிக்கும் பீங்கான்களில் அமர வைக்கப்பட்டிருந்தன. நான் தடையானேன். இரண்டொரு குழந்தைகள் புதிதாகக் குரலெழுப்பின.

நான் இந்த இடையூறுக்கு மன்னிப்புக் கோரி வெளி வந்தேன்.

இத்தகைய சிறார் பள்ளிகளை மறக்க முடியவில்லை. இப்போது அந்தக் கட்டமைப்பு துண்டுதுண்டுகளாகி விட்டது. பெண்கள், தாய்மார், குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியாது. சாலைச் சந்திகளில் பிச்சையெடுக்கும் பிஞ்சுகளோ, காலணிகள் மெருகிடக் காத்திருக்கும் சிறாரோ தோன்றியிருக்கலாம்.

பல ஆண்டுகள் திட்டமிட்டு உருவாக்கிய அந்தக் குழந்தைகள் எத்தகைய எதிர்காலத்தைச் சாதித்து விட்டார்கள்; நம் நாட்டுக் குழந்தைகள் - இந்தியப் பிரஜைகள் எதைச் சாதிக்கவில்லை என்ற கேள்வி எழலாம். ஆனால் இங்கே உருவாகும் ஒர் ஒட்டு மந்தை அந்நாட்டில் உருவாவது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது.

பாரதமணி
டிசம்பர், 2003