புதியதோர் உலகு செய்வோம்/மிகப் பெரிய கேள்வி?
அண்மைக் காலங்களில் நம் நாட்டில் அரசு மதநல்லிணக்கம் என்ற பொதுப் போர்வையைப் போர்த்திக் கொண்டாலும், மதவாதப் பிரிவுகள் பொருளாதார நோக்கில் ஏற்கனவே நலிவுற்று அழுந்திக் கிடக்கும் மக்களை மேலும் எழும்பவே முடியாத அவநம்பிக்கையில் பிணிக்கும் வகையில் செயல்படுகின்றன. மதமாற்றத் தடைச்சட்டம் இந்து மதவாதச் செயல்பாடுகளின் ஒர் உச்சகட்ட விளைவாகப் பரிணமித்திருக்கிறது.
மதப்பிரசாரம் எங்கள் உரிமை என்று சொல்பவர்களும், ஆசைகாட்டி, வலிய இழுக்கிறார்கள் என்று, இந்நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் சமயத்தினரும், தங்கள்தங்கள் தரப்பில் நியாயங்கள் பேசுகிறார்கள். இந்தப் பெரும்பான்மைச் சமயத்தினரான இந்துக்கள் கூற்று, உலகிலேயே தங்கள் மதம்தான் சகிப்புத்தன்மையுடையது என்றும் பெருமை பேசிக் கொள்கிறார்கள். ஒருபுறம் ‘இந்து' என்றால் இந்தியர் இந்தியர் எல்லோரும் இந்து என்று குறிப்பிடப்படுகிறார்கள் என்ற வாதமும் வைக்கப்படுகிறது. 'இந்து’ என்று ஒரு தனிமதமே கிடையாது, பிரிட்டிஷ்காரர் வேறுபடுத்திக் குறிப்பிடக் கையாண்ட சொல்லே இந்துமதம் என்பதாகும் என்றும் விளக்கம் கொடுக்கப்படுகிறது. அன்றாடம், மதத் தலைவர்கள், குருபீடங்கள், அரசியல்வாதிகள் எல்லோரும் பல்வேறு கருத்துக்களை ஆய்வுகளைச் சொல்லி மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்வின் ஜீவாதாரமான உணவுக்கான விவசாயத் தொழிலுக்கு இன்றியமையாத நீர் - காலம் காலமாகத் தமிழகத்தை வாழ வைத்து உணவூட்டும், அன்னை காவிரி தமிழகத்தில் பஞ்சப்பராரியாக வற்றிக்கிடக்கிறாள். அரசியல் தேரோட்டி ஆட்சிப் பசியைத் தீர்த்துக் கொள்ளும் மோதல்களை உருவாக்கி, மக்களின் முக்கியப் பிரச்னைகளைத் திருப்பும் உத்தியாக இதை நினைக்கச் செய்கிறது.
எந்த ஒருசமயமும், உலகில், பிறப்பால் ஒரு மனிதனின் தலைவிதியை நிர்ணயித்து ஆதிக்கம் செலுத்துவதாகத் தெரியவில்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நிர்ணயிக்கும் தொழில்கள் எல்லாச் சமுதாயங்களிலும், நாடுகளிலும் இருக்கின்றன. இந்த இந்தியத் திருநாட்டில் மட்டுமே, காலம் காலமாகப் பிறப்பால் ஒரு தனி மனிதனின் தலைவிதியை நிர்ணயித்து, தொழில்களை, வாழ்வை, வரையறுத்து, ஆதிக்க உரிமைகளை, ஒடுக்குதல் நியாயங்களை கருத்தியல் ரீதியாக சமுதாயத்தை நெறிப்படுத்தும் வருணதருமம் தழைத்தோங்கிக் கொண்டிருக்கிறது. கருத்தியல் சார்ந்தும், செயல்பாடுகள் சார்ந்தும் வருணதர்மங்கள் ஆழப்பதிந்த ஒரு சமுதாயமே, இந்துமதம் என்று கொள்ளப்படும் இந்நாட்டின் பெரும்பான்மை சமுதாயமாகும்.
இந்த வருண நியாயத்தை, மதம் சார்ந்த புராணங்கள், வலியுறுத்திய பக்திக் கதைகள் பல்வேறு சமயங்களில் மக்கள் மனங்களை நெறிப்படுத்தி வந்திருக்கின்றன.
இந்திய கலாசாரத்தின் ஆணி வேரே, 'இந்த வருணபேத மானிட தர்மங்கள்’ என்றால் தவறில்லை.
அந்நாளில் அருச்சுனனுக்குப் போர்க்களத்தில் கண்ணன் உபதேசம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்தப் போர்க்கள உரை, இன்றளவும் இந்துக்களின் தெய்வீக வேதநூலாக, சத்தியப் பிரமாணமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்திய ஆன்மீகதத்துவம் என்றால் உடனே கீதையைப் புரட்டும் அறிவாளரும் சான்றோரும் தாம் நினைவில் வருகின்றனர். இந்தப் போர்க்கள உபதேசத்துக்குக் காலம் காலமாகப் பல வேத விற்பன்னர்கள், தத்துவவாதிகள், புதிய சித்தாந்தங்களை வகுத்தவர்கள் தத்தம் நோக்கில் உரைகள் எழுதியுள்ளனர். இந்த நூலில், கண்ணனின் உரைக்குத் தோற்றுவாய் என்று கருதும் முதல் அத்தியாயத்தைப் படிக்கையில் ஒரு பெரிய உண்மை புலப்படுகிறது.
அருச்சுனன் எதிர்த் தரப்பில் தன் சுற்றத்தாரையும் வணங்குவதற்குரிய சான்றோரையும் காண்கிறான். பலவீனமடைகிறான். அதனால் மட்டுமே அவனுக்குத் துணிவூட்ட, கண்ணன் உரை செய்ததாக, கீதை நூலைப் பற்றிய கருத்து மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
ஆனால், அவன் கூறும் காரணம், வருணதருமத்தைக் காப்பாற்ற முடியாத ஒரு விளைவு வரும் என்பதுதான். 'பேராசையின் உந்துதலால் திருதராஷ்டிரனின் மக்கள் குலநாசம் விளைவிக்கும் பாவத்தைச் செய்ய முன் வந்துள்ளனர். ஏனெனில், போரில் கொல்லப்படும் மாவீரனின் மனைவியர் மாற்றானை, வேறு குலத்தவரைச் சாரும் அதர்மம் விளையும். (அக்காலத்தில், கைம்பெண் கொடுரங்கள், சதிக்கொடுமை இருந்திருக்கவில்லை என்று கொள்ளலாம்) பெண்களின் துஷ்டத்தனத்தினால் வருணக்குழப்பம் நேரிடும். சாதி தருமங்கள் கெடும். அதனால் வருணதருமங்களை அழிப்போரும் அழிப்புக்கு உள்ளாகும் மக்களும்/பித்ருக்களுக்கு நீத்தார்க்கடனாற்றும் கடமையில்லாதவர்களாவார்கள். இதனால் முன்னோர், நீர்க்கடனாற்றுதலால் ஏற்படும் குலதருமத்தைக் காப்பாற்ற இயலாமல் கொடிய நரகத்தில் வீழ்வர். இந்தக் கொடிய பாவத்தை நான் செய்யமாட்டேன்’ என்றே சொல்கிறான். பகவத்கீதையில் நம் கருத்தைக் கவர்ந்து பிணிக்கும் இன்னும் சில செய்திகளையும் காணலாம்.
கண்ணன், சத்வம், ராஜசம், தாமசம் ஆகிய முக்குணங்களின் அடிப்படையில் நான்கு வருணங்களைப் படைத்ததாகக் கூறுகிறான். (அத்-4) இந்த முக்குன இயல்புகளின் அடிப்படையில், வருணங்களைப் பிரிப்பதாகக் கூறப்படுகிறது.
சாந்தம், மென்மை, தூய்மை, தியாகம் இவற்றின் பிறப்பிடம் சத்வகுணம். இவன் மேலாம் ஞான ஒளியையே உண்மையெனக் கொள்வான். சாத்துவீகமான, ரசம் பொருந்திய நல்லுணவை மிதமாக உண்பவன். இவனே மேலாம்-முதல் (பிராமணன்) வருணத்தினன்.ராஜஸகுணம், ஆசை, கோபம், வீரம், தோள்வலி, உடலால் திளைக்கக் கூடிய இன்பங்களை வேட்டல், காரம், உப்பு, உவர்ப்பென்ற உஷ்ண உணவுகளை விரும்பி உண்பான். இவனே இரண்டாம் வருணமாகிய rத்திரிய தர்மத்துக் குரியவன். அருச்சுனன் கூடித்திரியன் என்று வலியுறுத்தப்படுகிறது.
தாமசகுணம், மந்தபுத்தி, சோம்பல், செயலின்மைக்கு இருப்பிடம் வைசியர்’ என்ற மூன்றாவது வருணம் பற்றிக் குறிப்பாக இல்லை என்றாலும், உழவர், பெருமக்களும், பசுக்களை - கால்நடைகளை வளர்ப்பவர்களும், இடைப் பட்டவர்களாகின்றனர். சூத்திரர் என்ற வருணம், கடை வருணம். கடை வருணத்துக்குத் தொழில் வரையறுக்கப் படவில்லை என்றாலும் ஆண்டைகளாகிய உயர் வருணத்தவருக்கு ஊழியம் செய்வதே இவர்கள் தொழில் இதில் உழுவதும், கன்றுகாலிகளைப் பேணும் அடிமைப் பணியும் அடக்கம். இவர்கள் எழுச்சியற்றவர்கள். ஏவல் பணி செய்து அவர்கள் கொடுக்கும் மிச்சம், மீதி, பழையது, அழுகியது போன்ற உணவை உண்பதே இவன் தருமம். இப்படி வரையறுக்கப்படுகிறது. ஸத்வகுணம் ஓங்கியிருக்கும்போது மரணமடைவானாயின் ஞானவான்களின் நல்லுலகை அடைகிறான். ரஜோகுணத்தில் காலமாகிறவன் செயலூக்கம் உடையவர்களிடையே பிறக்கிறான். தாமசகுணத்தில் ஊன்றி விழிப்பெய்தாமலே மரணம் எய்துபவன் அறிவிலிகளின் கர்ப்பத்தில் பிறக்கிறான்.
இதெல்லாம் நியாயம், தர்மம் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், ஒரு மனிதன் எங்கே பிறப்பெடுக்கிறானோ, அங்கேயே தான் வருணதர்மம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற வகையில், ஒருவன் தன் 'ஸ்வதர்மத்தை'யே கடைப்பிடிக்க வேண்டும். ‘பரதர்மம்' கைக் கொண்டு ஒழுகலாகாது. (அத்-3)
அவரவர் அவரவருக்குரிய தருமத்தை, கருமத்தைச் செய்தலே நியாயம். அந்தந்தக் கருத்துக்குரிய குணங்களிலேயே ஊன்றும் வகையில் தொழிலும் உணவும் உரியன என்று அறிவித்துவிட்டு, மூடயோனிகளில் தாமச குணமுடையவர் பிறக்கின்றனர் என்றால் என்ன பொருள்? அடிமை, ஏவல் பணி செய்து கொண்டு அவர்கள் வழங்கும் எஞ்சிய உணவைப் புசிக்கவே, ஜீவமரணப் போராட்டம் நிகழ்த்துபவர், விழிப்புணர்வே எய்தக்கூடாது என்றுதானே ஆகிறது?
இந்த அனைத்துப் பாகுபாடுகளும் ‘மனிதன்’ என்று பொதுத் தத்துவத்துடன் நிறுத்திப் பேசப்படுகிறதா? இல்லை.
இதில் பெண் அடக்கம் இல்லை. இவள் ஏற்கனவே அடிமையாகித் தீர்ந்தவள். இது மீண்டும் ஒன்பதாம் அத்தியாயத்தில் தெளிவாகிறது.
“பார்த்தா! கீழான பிறவிகளாக இருக்கும் பெண்கள் (பாவ யோனிகளில் ஜனித்தவர்களாகிய ஸ்திரீகள்) மற்றும் வைசியர், சூத்திரர் ஆகியோரும் என்னைச் சார்ந்தபின் பரகதி அடைவர்” என்று கூறுகிறான் கண்ணன்.
அவனுடைய பெருங்கருணை மகிமைப்படுத்தப்படும் இந்த சுலோகத்தில் பெண்ணின் நிலையும் கடைசி வருணத்தாரின் நிலையும் துல்லியமாகக் குறிக்கப்படுகிறது.
இந்த வருணக்கலப்பு நிகழாமலிருக்கவே, பெண்ணின் சுதந்தரச் சிறகுகள் வெட்டப்பட்டன. சிறகுகள் வெட்டப்பட்ட கிளிக்குஞ்சு, முதிர்ந்து, தன் எசமானனின் சமிக்ஞைக்கேற்ப, கூட்டைத் திறந்து விட்டதும் வெளிவந்து அடுக்கு அட்டைகளில் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டிவிட்டு அவன் தரும் நெல்மணிக் கூலியை வாங்கிக் கொண்டு கூட்டுக்குள் அடைந்துவிடும் கிளியாக, ஆணாதிக்கக் கூட்டுக்குள் பெண். தங்கள் கஞ்சிக் குடிப்பதற்கிலாத விதி எதனால் என்ற விழிர்ப்புணர்வே இல்லாத மக்களின் நிலையை அந்த அட்டைகளாகிய பொய்ம்மைகளில் தெரிந்துகொள்ள வரும் எளியர் சோதிடக்காரனாகக் கூண்டையும், பொய்ம்மை வாக்குறுதிகளையும் ஏந்தித் திரியும் ஆட்சி அரசியல் ஆதிக்கங்கள்.
உயர் வருணப்பெண் வினாத் தெரியாத பருவத்திலேயே கட்டி வைக்கப்பட்டாள். மாற்றானை நாடாமலிருக்க சதிக்கொலை, கைம்பெண் குரூரங்கள். இத்தனை கடுமைகளையும் மீறி ஆண் பெண் வருணக் கலப்புகள் நிகழ்ந்தன.
இந்தக் கலப்பு மண ஒழுக்க மீறல்கள் இரு பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன.
தந்தை உயர்குலத்தவனாகவும், தாய் பிற வருணங்களுக்குரியவளாகவும் இருந்தால் பாதகமில்லை. அந்தச் சமுதாயத்திலிருந்து பெண்தான் விலக்கப்படுவாளே ஒழிய, தந்தைக்கு எந்த இழுக்கும் இல்லை. அவன் ஆண். சில தலைமுறைகளில், அவர்களின் கிளை உயர் வருணத்துக்கே ஏற்றம் பெற முடியும். ஆனால், தாய் உயர் வருணமாக இருந்து தந்தை மிகவும் தாழ்ந்த சூத்திரவருணத்தவனாக இருந்துவிட்டால், அவர்கள் சந்ததி, இந்த நால்வருணங்களிலும் சேராத, தீண்டத்தகாத, ‘பஞ்சமர்’ என்ற இழிகுலத்தவராகக் கருதப்பட்டனர். தச்சுவேலை செய்பவர், மிருகங்களைக் கொன்று புசிப்பவர் என்றெல்லாம் சாதிகள் பலவும் இந்தக் கலப்பு சந்ததியின் விளைவாகவே தோன்றின என்று கருதலாம்.
சமுதாயவிலக்கு என்றாலே, நெருப்புக் கொடுக்க மாட்டார்கள். நீர்நிலைகளைத் தீண்டலாகாது. ஆயுதங்கள், தொழிற்கருவிகள் ஏந்த உரிமையில்லை. செத்து வீழ்ந்த மிருகங்களை அப்புறப்படுத்துதல், இழிவான மலங்களை அப்புறப்படுத்த வேண்டும்; ஆனால் உயர்சாதியினரின் முகங்களிலும் விழிக்கலாகாது.
இத்தகைய (அ)தருமபரிபாலனம் செய்த சநாதன மதம், பாரதநாட்டுக்கே உரியதாக ஆதிக்கம் செலுத்தியது; செலுத்துகிறது; இப்போது இது சட்டரீதியான ஒடுக்குதல் என்ற அம்புடன் புதிய அவதாரம் மேற்கொண்டிருக்கிறது. மனிதருக்கு மனிதர் ஒடுக்குதல் குரூரங்களை இன்றும் நிகழ்கின்றன.
‘மதம்' என்ற ஓர் அடிப்படையே ஒரு சாரார் மற்றவர் மீது செலுத்தும் ஆதிக்க அமைப்புக்கானதுதான். ஏனெனில் உண்மையாகவே ஒரு மனிதனை ஆன்மிக நோக்கில், ஒருமைப்படுத்துவதென்பது, வாழ்வியலின் அடித்தளத்திலிருந்து பிரிப்பதால் சாத்தியமாகாத பொய் என்றே கூறலாம். ஆதி மனிதர், தம் அநுபவங்களின் வாயிலாகவே, இயற்கையின் தன்மைகளை உணர்ந்து, அந்த இயற்கை யோடிணைந்து வாழ்வியலின் மேன்மைகளைக் கற்று வந்திருக்கின்றனர். இயற்கையை வெல்ல வேண்டும் என்றோ, ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றோ, அந்த வாழ்வியல் அவர்களுக்குக் கற்பித்திருக்கவில்லை. இன்றும் காடுகளில் வாழும் ஆதிக்குடியினரோ, மலைகளில் வாழும் பழங்குடி இனத்தவரோ, காடுகளை அழிக்கவோ, மரங்களை வெட்டவோ, அருவிகளைத் தடுத்துத் தேக்குவதையோ விரும்புவதில்லை.
மதத்தலைவர்கள், ஆட்சி அதிகார பீடங்களைக் கைப்பற்றி மக்களைத் தங்கள் ஆதிக்கங்களில் கொண்டு வரும் நோக்கில்தான் போர்களும் பூசல்களும் உலகெங்கும் நிகழ்ந்திருக்கின்றன. மக்கள் தொகுதிகளை, மத ஆதிக்கங்கள் வெல்லுகின்றன. நாகரிகம் என்ற பெயரில், இயற்கையோடிணைந்த வாழ்வுமுறைகள் அடியோடு மாற்றம் பெற, இந்த ஆதிக்கங்களே தலைமுறை தலைமுறையாக, மக்களைத் தன்னுணர்வு பெறா வண்ணம் நெறிப்படுத்தி வந்திருக்கின்றன.
ஏற்கனவே குறிப்பிட்டபடி, இந்துமதம் என்று இன்று அறியப்படும் ஒரு சமயத்துக்கு, வேதங்களே மூலாதாரம் என்று சொல்லப்படுகிறது. கீதை, வேத உபநிடதநூல்களின் சாராம்சம் என்று போற்றப்படுகிறது. ஆனால் மனித சமுதாயம் உய்வதற்கான சமத்துவநோக்கை முன் வைத்து, ஓர் உன்னத அடிப்படையைத் தோற்றுவித்திருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால், இதே மதத்தலைவர்கள், வேதம் தெய்வம் என்ற போதனை போதிப்பவர்கள், மதமாற்றம் ஏன் நிகழ்கிறது என்று சிந்தித்திருப்பார்கள். மீனாட்சிபுரத்துக்கோ, மண்டைக்காட்டுக்கோ சென்று, மனித சமுதாயத்தின் புரையோடிய புண்களுக்குத் தாங்களே காரணம் என்று கழுவாய் தேடிக் கொண்டிருப்பார்கள்.
இந்திய நாட்டில் இவர்கள் அடிவைத்து முதலில் ஆதிக்குடிகளை வென்று, அல்லது அழித்து, தங்கள் செல்வாக்கைப் பதிக்க வருண பேதத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக நெறிப்படுத்தியிருக்கிறார்கள். தாயாண் மரபுகளும், இயற்கையோடிணைந்து வாழும் பழக்கங்களும் அறிவியல் வெளிச்சங்களால் காப்பாற்றப்பட்டிருக்கவில்லை. அவைகளைத் தொலைத்த அடிமைகளாகவே மாற்றப்பட்டிருக்கின்றனர்.
வியாபாரம் என்ற பெயரில் நாடுபிடிக்க வந்த வெளிநாட்டார் தங்கள் சமயக் குடைக்குக் கீழ், எளிய மக்களைக் கொண்டு வருவது மிக எளிதாக இருந்தது. மனித உரிமையே மறுக்கப்பட்டு வெறும் மேற்குலத்தோரின் ஊழிய அடிமைகளாக இயங்கிய மக்களுக்கு இந்தச் சமயக் குடை, வாழ்வு தரும் புகலிடமாக விளங்கியது. அதேபோல், மேற்குலத்து சநாதன விதவைக் கொடுமைகளில் சிக்குண்ட பெண்களுக்கும், இந்த மதமாற்றம் ஏற்புடையதாக இருந்தது. அந்நிய ஆட்சியினரே, மனம் வருந்தி, சதி, விதவைக் கொடுமைகளை எதிர்த்துச் சட்டமியற்ற வேண்டிவந்தது. பெண் கொடுமைகளையும் மனிதருக்கு மனிதர் என்றில்லாத சாதி-குலக் கொடுமைகளையும் இன்றுவரை எந்தச் சட்டமும் ஒழித்திருக்கவில்லை. ஏனெனில், மேல்குல, ஆணாதிக்க நிலைபாடுகள் அந்த அளவுக்கு மக்கள் சமுதாயத்தில் வேரூன்றி நூற்றாண்டுகளாக அவர்களைப் பதப்படுத்தி இருக்கின்றன. ஆட்சி பிடிப்பதற்கான அரசியல் சக்திகள், இந்த ஐம்பத்தைந்தாண்டுகளின் சுதந்தர ஜனநாயகத்தையும் மிகப்பெரிய கேள்விக்குறிகளாக்கியிருக்கின்றன.சுதந்தரப் போராட்டம் தோன்றுவதற்கு மூலகாரணங்களாக, இந்திய சமுதாயத்தில் நிலவிய இந்தக் கேடுகளே தலைவர்களுக்கு உந்துசக்தியாக இருந்திருக்கின்றன. பெண் கொடுமைகளும் தீண்டாமை இழிவுகளும் சாதிப் பிளவுகளும் இந்நாட்டில் சமுதாயச் சீர்திருத்தத்தின் பால் பெரியவர்களின் கவனங்களைத் திருப்பியிருக்கின்றன. காந்தியடிகள், தம் வாழ்நாள் முழுவதுமே, கடைநிலை மக்களின் பால் கருணைகொண்டு, தம்மை அவர்களில் ஒருவராகவே கருதிக் கொண்டார். அரிசனங்கள், கடவுளின் குழந்தைகள் என்று அவர்களை மேன்மைப்படுத்தினார். என்றாலும் தம் சார்ந்திருந்த இந்து மதம், அல்லது வருணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்ட சமயத்தை மறுத்துவிடவில்லை. வேறுமதம் சிறந்ததென்று மறையவில்லை. ஓர் உண்மை இங்கே நமக்குப் புலனாகிறது.
இந்திய சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் ஒவ்வொருவரும், தத்தமக்கு ஏற்பட்ட அநுபவங்களின் வாயிலாகவே தங்கள் இலட்சியங்களையும், கொள்கைகளையும் வகுத்துக் கொண்டனர் எனலாம்.
அமரகவி பாரதி சநாதனத்தைச் சாடினார். அதனால் தமக்கேற்பட்ட இன்னல்களைப் பொருட்டாக்கவில்லை. விலக்கப்பட்ட மனிதராகவே இறுதிவரையிலும் தீரராக வாழ்ந்தார். என்றாலும், சிறையில் நோய்வாய்ப்பட்டு, கிறிஸ்தவப் பாதிரிகளின் ஆதரவை ஏற்று மதம் மாறி வந்த ஆர்யாவைக் கண்டதும் மதம் மாறியதற்காகச் சங்கடப்பட்டார். முழு மனதோடு மதமாற்றத்தை அவரால் ஏற்க முடியவில்லை.
அம்பேத்கர் மட்டுமே ஒடுக்குதல்களின் நேர் அநுபவங்களை உணர்ந்தவர். அவருடைய போராட்டம், முனைப்புடன் தாழ்த்தப்பட்ட மக்களைப் பெரிதும் விழிப்புணர்வுக்குக் கொண்டு செல்ல தூண்டுதலாக இருந்தது. சாதீய மேலாதிக்கமும் ஒடுக்குதல்களும் அவர் உயர் கல்வி பெற்றுத் தம் மேன்மையை நிலைநாட்டிய பின்னரும், தொடர்ந்தது. எனவேதான், தாம் கண் விழித்த மதத்தையே மாற்றிக் கொண்டார். அவரோடு பலரும் பவுத்தம் தழுவினர்.
பவுத்த சமயமே, சனாதனத்துக்கு மாற்றாகத் தோன்றியதுதான்.'கடவுளே இல்லை, மதமே தேவையில்லை' என்ற நிலைப்பாடும் இங்கே செயல்ரீதியாக மக்களிடையே செல்வாக்குப் பெறவில்லை. பெரியார் ஈ.வே.ரா. கண்ட பகுத்தறிவு இயக்கம் இந்நாள் எப்படி எப்படியோ சின்னபின்னமாகிவிட்ட நிலையைக் காண்கிறோம்.
‘மதம் மனித சமுதாய முன்னேற்றத்துக்குத் தடையானதே தவிர தேவையில்லை' என்ற கொள்கையை முன் வைத்த சமத்துவ நெறியாட்சி, சோவியத் ருசியாவில், எழுபதாண்டுகளுக்குப் பின் வீழ்ச்சியடைந்ததைப் பார்க்கிறோம்.
எழுபதுகளில் நான் சோவியத் நாட்டுக்குச் சென்றிருந்தபோது ஒரு பெண்மணியிடம் கேட்டேன்.
பெண் இயல்பில் உணர்ச்சிமயமானவள். அவள் தாயாவதற்கே இயற்கை படைத்திருக்கிறது. குடும்ப வாழ்வில் அவள் பொருந்தி, மக்களைப் பெற்று ஓர் ஒழுக்க நெறியில் வளர்த்தெடுக்கும்போது அவளுக்குப் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. சங்கடங்கள் நேருகின்றன. குறிப்பாக, தன் மகவுக்கு நோவென்றால்கூடதுடி துடித்துப் போகிறாள். அப்போதெல்லாம் பற்றிக் கொள்ள அவளுக்கு ஓர் ஆதரவு, கண்ணுக்கெட்டாத சக்தியின்மீது ஒரு நம்பிக்கை வேண்டியிருக்கிறது. இதைக் கடவுள் வழிபாடு, நம்பிக்கை என்று சார்ந்திருக்க மதம் தேவையாகிறது. “உங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லை என்றால், துன்பமயமான காலங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?" என்று கேட்டேன்.
இந்த எதிர்பாராக் கேள்வியைக் கேட்டு அந்தப் பெண்மணி சிறிது திகைத்தாள். பிறகு எப்படியோ சமாளித்து, “எங்களுக்கு அப்படி ஒரு பற்றுக்கோல் தேவையில்லை; எங்கள் குழந்தைகளைப் பெரியவர்கள் தாய்நாட்டை நேசிக்கும் ஒழுக்கமுடையவர்களாக வளர்க்கிறோம்” என்றாள்.
ஆனால், சமத்துவநெறி ஆட்சி வீழ்ச்சியுற்றபிறகு, இதே பெண்கள் குடும்பம், வீடு, கோயில், எல்லாம் எங்கள் உரிமைகள் என்றார்கள். சமத்துவநெறி மலை மேலிருக்கும் தீபம்போல் நமக்குப் பாதை காட்டலாம்; அதை அடைய முடியாது என்றார் ஒரு பெண்மணி.
இன்றும், சமயப் பூசாரிகளும் குருமார்களும், பெண்களையும் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களையுமே அதிகமாகத் தங்கள் ஆதிக்கத்துள் கொண்டுவரப் பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றனர். வருணப்பிரிவுகளுக்கேற்ப, இந்திய சநாதனம், தெய்வங்களிலும்கூட மேல், கீழ் நடை முறைகளை வகுத்திருக்கின்றன. இந்த வழிபாடுகளிலும், மெல்ல மெல்ல மேல் நிலையாதிக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஆங்கிலேயர் நம்மை ஆட்சி செய்ய வந்தபோது, மதமாற்றம் நிகழ்ந்தாலும், இந்து வருணத்தின் சாதிய அடுக்குகளை அவர்கள் தொடவே இல்லை. ஆட்சியாளருக்கு, இத்தகைய சமுதாய சாதிப்பிரிவுகள், ஆள்வதற்குரிய வலிமையையே உறுதிப்படுத்தின.சுதந்தரம் வந்தபின், தாழ்த்தப்பட்டவர் முன்னேற வசதியான சலுகைகளும் ஒதுக்கீடுகளும் அரசாட்சிகளில் காணப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் பொருளாதார மேம்பாடடைந்தாலும், சமுதாயம் சார்ந்து, முழுமையான முன்னேற்ற விடுதலைகளை எய்தவில்லை. வருண தருமங்களை ஒழிக்க வேண்டும் என்ற இலட்சியத்துக்கு மாறாக, மேல் வருண நடைமுறைகளை மறைமுகமாக ஏற்பதில் மட்டுமே முடிகிறது. அடிப்படை வருணதருமங்கள், சாதி அடுக்குகளை மேலும் மேலும் மரபு வழிப்படுத்திக் கொண்டு, பகுத்தறிவு பெற்ற, ஜனநாயக மதச்சார்பற்ற சமுதாயத்தையும் மனித உரிமைகள் என்ற அடிப்படையையும் கேலிக்குரியதாக்குகின்றன.
தொலைக்காட்சி போன்ற மக்கள் செல்வாக்கு ஊடகங்கள், தீண்டாமைக்கு எதிரான போராட்டக் கருத்துக்களை முன் வைப்பதைக் காட்டிலும், நுகர் பொருள் வாணிப சாதனமாக, பெண்களை சோகப் பொருளாகவும் போகப் பொருளாகவும் கடை விரிப்பதில் தான் கவனம் செலுத்துகின்றன. மேலும் பாதிக்கப்பட்டவரின் நிலை கண்டு பொங்கி எழும் மக்கள் கூட்டம் இன்று இல்லை. மலம்தின்னச் சொல்லும் வன்முறையையும், தாலியறுத்துப் பொட்டழித்து நடுவீதியில் தள்ளும் கொடுமையையும், ஊடகங்கள் வெறும் பொழுதுபோக்கு - களிப்பூட்டும் நேரம் போக்கும் அம்சங்களாக மாற்றி விட்டன. சகமனிதர் என்ற உணர்வே மரத்துப் போய்விட்ட நிலையில் அவரவர், பணம், பதவி, போகம், பொருட்கள் என்ற இலக்குகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.
எனவே, மதமாற்றப் பிரச்னையும் தலித் ஒடுக்குதல்களும், ஆட்சியாளருக்கு மக்களைத் திசை திருப்பும் கருவிகளாகக் கை கொடுத்திருக்கின்றன. சமயச் சார்பை முன்வைத்த அரசியல் அரங்கத்தில், ஆதாயம் தேடும் துறவிகளும் குட்டைகளைக் கலக்கித் தங்கள் செல்வாக்கை நிலைப்படுத்திக் கொள்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை மாறப் போகிறதா? நூற்றாண்டுகளின் தழும்புகள், ஆறாப்புண்களாக மாறாமலிருக்க வேண்டும். தொழுநோய், புற்றுநோய்க்கும்கூட மருந்துகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்தச் சாதிய ஒடுக்குதல் நோய்க்கு யார் அதிரடி சிகிச்சைகளை, எப்படிச் செய்யப் போகிறார்கள்? இளைய சமுதாயத்தினர் முன் எழுந்துள்ள கேள்வி இது.
‘இளைஞர் முழக்கம்'
DYF1 டிசம்பர், 2002