புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்/சுவைமிகுந்த பேச்சுக்கள்

சுவைமிகுந்த பேச்சுக்கள்

புதுமைப்பித்தனோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோமானால் சர்வ சாதாரணமாக சில ‘நகைச்சுவை வெடிகளை’ உபயோகிப்பார். ‘முல்லைப் பதிப்பக’த்துக்கு அடிக்கடி வருவார்; மணிக்கணக்காகப் பேசிக் கொண்டிருப்பார், நான் மற்ற வேலைகளை அப்படி அப்படியே விட்டு அவரோடு பேசி, அவர் உதிர்க்கும் மணிமொழிகளை ரசிப்பதில் ரொம்ப மகிழ்ச்சி அடைவேன். காபி குடிப்பது வெற்றிலை சீவல் போடுவதைப் போல் சுவையான பேச்சும் அவருக்குச் சர்வ சாதாரணமானது. நமக்கு அது ரொம்பவும் ரசிக்கக் கூடியதாகும். சொல்லிச் சொல்லி வியந்து மகிழ்கிறோம். அவருடைய பேச்சுக்களிலிருந்து அவற்றைத் தொகுத்திருந்தால் அதுவே ஒரு தனிப் புத்தகமாக ஆகிவிடும்.

அவர் கூறிய இந்த விஷயங்களைத் தனி ஒருவர் காதில் மட்டும் ஓதிச் சொல்லவில்லை. பல சந்தர்ப்பங்களில், பலரின் மத்தியில் ‘நகைச்சுவை மணி’களை உதிர்த்திருக்கிறார், இதில் உள்ளவை சிலருக்குத் தெரிந்தவையாகவும், பலருக்குத் தெரியாதவையாகவும் இருக்கும். இன்னும் சில எழுத முடியாத நகைச்சுவைகளாகவும் இருக்கின்றன. புதுமைப்பித்தன் முன்னிலையில் யாருடைய பேச்சும் எடுக்காது. ஏதாவது ஒன்று படீரென்று, பேராசிரியர் வ. ரா. சொன்னது போல் ‘பாசு பதாஸ்திர’மாகவே விளங்கும். இந்த விஷயங்களை நாம் ரசிக்கும் போது பேரறிஞர் பெர்னாட்ஷாவின் நினைவு வந்தே தீரும்.


தர்மம் தான் வெற்றி பெறுகிறதா?

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை “அவளும் அவனும்” எனும் கவிதை காவியம் எழுதியிருந்தார், அதைப் பார்த்த நான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடம் அதைப் போல் ஒரு காவியம் எழுதுமாறு கேட்டுக் கொண்டேன்.

கவிஞர் “பாண்டியன் பரிசு” என்ற காவிய நூலை எழுதினார். அது அச்சிட்டு வெளிவந்தது. அந்த நூலின் முதற் பக்கத்தில் “பாண்டியன் பரிசு” முகப்பு அட்டைப் படத்தையும் பின்புறத்தில் பாண்டியன் பரிசு பற்றிய விவரமும் எழுத நினைத்திருந்தேன். அப்போது புதுமைப்பித்தன் அவர்கள் முல்லைப் பதிப்பகத்துககு வந்தார். மேற்படி விவரத்தைச் சொல்லி, பாண்டியன் பரிசு நூலை அவர் கையில் கொடுத்து சிறு விளக்கம் எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டேன். 1946-ல் நடந்தது. மேற்படி குறிப்பு கிடைக்கவில்லை.

அதன் கருத்து :

பாரதிதாசனுக்கும் ஏனைய கவிஞர்களைப் போல முடிவில் தர்மம் தான் வெற்றி பெறுகிறது. உலகில் தர்மா தர்ம பிரச்சனைகளில் அப்படித்தானா? என்று அந்தக் குறிப்பில் கேட்டிருந்தார், புதுமைப்பித்தன் எழுதிய குறிப்பை பாரதிதாசனிடம் காண்பித்தேன்.

அவர் “அதில் என்ன மாற்றம் நல்லது செய்தவன் நன்றாக இருப்பான்” என்றார்.

இதைப் புதுமைப்பித்தனிடம் சொன்னேன் “அப்புறம் என்ன புரட்சிக் கவிஞர்” என்று சொல்லி சிரித்தார்.

அசலும் போலியும்

புதுமைப் பித்தனுக்கு பெரும்பாலும் அசல்தான் பிடிக்குமே தவிர போலி பிடிக்காது, ஒரு சமயம் தேசிய முஸ்லீம், வெஜிடபிள் பிரியாணி, ஆங்கிலோ இண்டியன் இதை சொல்லிவிட்டு இதெல்லாம் என்ன வேடிக்கை என்று சிரித்தார்.

தனித்தன்மை

க. நா. சு. “சூறாவளி” என்ற பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தார். அதன் அலுவலகம் பிராட்வேயில் இருந்தது. மாதம் ஒருமுறை கூட்டம் நடைபெறும் பிரதமவிருந்தினராக ஒருவர் பேசுவார். ஒருமுறை கூட்டத்துக்கு ரசிகமணி டி. கே. சி. வந்திருந்தார். அப்போது சற்று தூரத்தில் மஞ்சரி ஆசிரியர் தி. ஜ. ர., புதுமைப் பித்தன், நான் மூன்று பேரும் நின்று பேசிக் கொண்டிருந்தோம் அந்த இடத்திற்கு ரசிகமணி வந்து “என்ன விருத்தாச்சலம் செளக்கியமா” என்ற கேட்டார்.

மற்றவர்களானால் பிரமுகர்களைத் தேடிப் போவார்கள். புதுமைப்பித்தன் அப்படியெல்லாம் போகவில்லை. அவருடைய தனித்தன்மையை நான் அப்போது உணர்ந்தேன்.

நாதஸ்வரம் வாசிக்கக்கூடாதா?

புதுமைப்பித்தன் ராயப்பேட்டை நெடுஞ் சாலையில் ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தார். அவர் வீட்டில் ஒரு சமயம் தவில் நாதஸ்வரம் முதலானவை இருந்தன. அதைப் பார்த்துவிட்டு இவை என்ன என்று கேட்டபோது நாதஸ்வரம் வாசிக்கக் பழகிக் கொள்கிறேன் என்று கூறி, ராஜரத்தினம் பிள்ளை கட்டுரை எழுதும் போது நான் ஏன் நாதஸ்வரம் வாசிக்கக்கூடாது என்று கேட்டு விட்டுச் சிரித்தார்.

ஓட்டல் சாப்பாடு

புதுமைப்பித்தனும் அவர் மனைவியும் பெரும்பாலும் ஓட்டலில்தான் சாப்பிடுவார்கள்.

“நெருப்பைத் தருவேன்”

ஏ. கே. செட்டியார் ‘குமரி மலர்’ பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தார்.

ஒரு சமயம் புதுமைப்பித்தனிடம் கட்டுரை எழுதித் தருமாறு கேட்டார்.

அதற்கு, புதுமைப்பித்தன் ‘நான் நெருப்பை அல்லவா அள்ளித் தருவேன்’ என்றார்.

‘சரி கொடுங்கள் நான் வாங்கிக் கொள்கிறேன்’ என்றார் ஏ. கே. செட்டியார்.

‘கை சுட்டு விடும்’ உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்றார் புதுமைப்பித்தன்.

‘கலைமகள்’ தவிர வேறு எந்தப் பத்திரிகைக்கும் அவர் எழுதியதில்லை.

எப்போது போவாய்?

புதுமைப்பித்தனின் தந்தை விருத்தாச்சலத்தில் அரசு உத்தியோகத்தில் இருந்தார். அப்போது புதுமைப்பித்தன் வீட்டிற்கு உறவினர்கள் வந்தால் அவருடைய தந்தையார் அவர்களை வாவா என்று வரவேற்று எப்போது திரும்ப போகப் போகிறாய் என்று கேட்பாராம் (உறவினர் முகம் சுளிப்பர்) அதாவது உடனே சென்று விடாமல் இரண்டு மூன்று நாள் தங்கி விட்டுப் போக வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் கூறுவாராம்.

இயற்பெயர்

புதுமைப்பித்தனின் தந்தையார் விருத்தாச்சலத்தில் அரசு உத்தியோகத்தில் இருந்தார். அப்போது புதுமைப்பித்தன் பிறந்தார். அதனால் அவருக்கு விருத்தாச்சலம் என்று பெயர் சூட்டினார் (புதுமைப் பித்தனின் இயற்பெயர் விருத்தாச்சலம்)

எறும்பு சிவம்

ராய.சொ. நடத்திய ‘ஊழியன்’ பத்திரிகையில் புதுமைப்பித்தனை ஒரு உதவியாசிரியராக அமர்த்தி வைத்தார் பேராசிரியர் வ.ரா ஈ சிவம் என்பவரும் உதவியாசிரியராக இருந்தார். சிறிது காலம் வேலை பார்த்தபின் புதுமைப்பித்தன் ஊழியனிலிருந்து வெளியேறி விட்டார். அப்போது புதுமைப்பித்தனைச் சந்தித்த வ.ரா., ஈசிவம் எப்படியிருக்கிறார்” என்று கேட்டார். அவர் ஈசிவமாயிருந்தால் தேவலை. எறும்பு சிவமாயிருந்து என்னைப் பிடுங்கி விட்டார்.” என்றார் புதுமைப் பித்தன்.

நந்தன் சிதம்பரத்துக்கு...

புதுமைப்பித்தன் அடிக்கடி தம் சொந்த ஊருக்குப் போவது வழக்கம், நாள் ஒன்று குறிப்பிட்டு விடுவார். அந்த நாளில் போக செளகரியப்படாமல் ஏதாவது தடை ஏற்பட்டுவிடும். “ஊருக்குப் போவதாகக் சொன்னீர்களே ஏன் போகவில்லை” என்று யாரேனும் கேட்டால் “நந்தன் சிதம்பரத்துக்குப் போன மாதிரிதான் நான் ஊருக்குப் போவது” என்பார் புதுமைப்பித்தன்.

முன்பாரா பின்பாரா
புதுமைப்பித்தனுடன் தோழர் ரகுநாதனும் நானும் (முல்லை முத்தையா) ஒரு சமயம் காலையில் ஒய். எம். ஐ. ஏ. க்குச் சென்றோம்; சர்வரைப் பார்த்து, இட்லி கொண்டு வரும்படி சொன்னார் புதுமைப்பித்தன். சிறிது நேரம் ஆகும் என்றார் சர்வர். “அப்போது முதலில் காபி கொடு, பிறகு இட்லி கொண்டு வா, அப்புறம் ஒரு காபி, முன்பாரா பின்பாராவுடன் இட்லி உள்ளே செல்லட்டும்” என்றார் புதுமைப்பித்தன்.
குட்டு வெளிப்பட்டது!

ஒரு தமிழ் எழுத்தாளர் எழுதிய கதையை, மற்றொருவர் பாட்டாக எழுதி ஒரு பத்திரிகையில் வெளியிட்டு விட்டார். ‘என்னுடைய கதையைப் பாட்டாக்கித் தம் சொந்தப் பாட்டுப் போல் வெளியிட்டிருக்கிறார். என்று கதையை எழுதிய எழுத்தாளர் கோபப்பட்டாராம். இந்த விஷயம் புதுமைப் பித்தனுக்குச் சொல்லப்பட்டது. அவர் உடனே சொன்னார்: “அந்தக் கதையே காப்பிதான். கதையை எழுதியவரும், பாட்டை எழுதியவரும் ஒரு மூலத்திலிருந்து காப்பியடித்திருக்க வேண்டும். இதற்கு ஒரு உதாரணம் சொல்லுகிறேன். ஒருவன் தன் மனைவிக்குத் தெரியாமல் தன் வைப்பாட்டியைப் பார்ப்பதற்காக இருட்டில் நடந்து சென்றான். அவன் மனைவியோ தன் கணவனுக்குத் தெரியாமல் தன் ஆசைநாயகனைப் பார்க்க அதே இருட்டிலேயே நடந்து சொன்றாள். பரஸ்பரம் ஒருவருக்கொருவர் தெரியாமலே இருவரும் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்து விட்டார்கன். தன் ஆசைநாயகன் என்று மனைவியும், தன் ஆசைநாயகி என்று கணவனும் நினைத்து, இருட்டில் ஒருவர் கையை ஒருவன் பிடித்துக் கொண்டார்கள். பின்னர் கவனித்துப் பார்த்தபோது தான் இருவருக்கும் குட்டு வெளிப்பட்டது! அவர்களைப் போல, இந்த எழுத்தாளரும், கவிஞரும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் போய் ஒருவர் கையை - ஒருவர் பிடித்துக் கொண்டார்கள்.

-கு. அழகிரிசாமி சொல்லியது


நல்லதெல்லாம் பிடிக்காது!
நானும் [முல்லை முத்தையா] இன்னும் இரண்டு நண்பர்களும் புதுமைப்பித்தனோடு, ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் போய்க் கொண்டிருந்த போது, ஒரு முறை வழியில் கொத்தமங்கலம் சுப்புவைச் சந்தித்தோம். புதுமைப்பித்தனிடம் தம் கவிதைகளைப் படித்துக்காட்ட வேண்டுமென்று .சுப்புவுக்குப் பெரும் விருப்பம், தம் வீட்டுக்கு எங்கள் எல்லோரையும் அழைத்துச் சென்று தம் கவிகளைப் படித்துக் காட்டினார். எங்களுடைய கஷ்டத்துக்குப் பிரதிபலனாக, அவருடைய வீட்டில் உப்புமா தயாராக்கி இருந்தார். அதைச் சுப்புவின் சகோதரர் எங்களுக்குப் பரிமாறிவிட்டு, அதற்கு நெய் ஊற்றிக் கொண்டு வந்தார். அப்பொழுது புதுமைப்பித்தன், ‘எனக்கு நெய் வேண்டாம்’ என்றார். அதற்கு சுப்பு, அவனுக்கு நல்லதெல்லாம் பிடிக்காது’ என்றார். ‘அதோடு உன் கவிதையையும் சேர்த்துக் கொண்டு விடாதே!’ என்று படீரென்று சொன்னார் புதுமைப்பித்தன்.
கதை தானே

பிரபலமான ஒரு கவிஞர், தன் வாழ்க்கை வரலாற்றை ‘என் கதை’ என்ற பெயரில் எழுதி இருந்தார். புதுமைப்பித்தனிடம் ‘என் கதை’ எப்படி இருக்கிறது? என்றேன். அதற்கு அவர், “அது கதைதான்!” என்றார். [கதைக்கும் வரலாற்றுக்கும் வித்தியாசம் உண்டு என்பதை, நகைச் சுவையாகக் குறிப்பிட்டார்!]

ஒன்வே ட்ராபிக் அல்ல!

புதுமைப்பித்தன் ஒரு நண்பரோடு பழகிக் கொண்டிருந்தார்; அவருக்கு ஏதோ உதவியும் செய்தார். அந்த நண்பர் ஒரு சமயம் புதுமைப்பித்தனின் முக்கிய தேவைக்கு உதவாமல் மெளனமாக இருந்து விட்டார். அதைக் குறித்து புதுமைப்பித்தன் “நட்பு என்பது ஒன்வே ட்ராபிக் அல்ல!’ என்றார்.

எல்லோரையும் தாங்கும் பொறுப்பு

புதிதாக ஒரு லிமிடெட் கம்பெனி ஆரம்பமாகி இருந்தது. டைரக்டர்களுள் ஒருவர் அதிகப்படியான பணம் போட்டிருந்தார். அந்தக் கம்பெனியில். ஆனால் அவருடைய பெயர் எல்லோருக்கும் கடைசியில் [கீழே] ‘லெட்டர் ஹெட்’டில் அச்சிடப் பட்டிருந்தது. ஒரு சமயம் புதுமைப்பித்தனுடன் பேசிக் கொண்டிருக்கும்போது இந்தக் கம்பெனியைப் பற்றிய பேச்சு வந்தது. “அதிகப்படியான பணம் போட்டிருக்கிறதாகச் சொல்லப்படும் நபரின் பெயர் அடியில் இருக்கிறதே ஏன்?” என்றேன். அதற்கு “எல்லோரையும் தாங்கும் பொறுப்பு அவரைச் சேர்ந்தது; அதனால் தான். அவர் அடியில் இருக்கிறார்” என்றார் புதுமைப்பித்தன்.

நிரந்தர வாந்தி பேதி

தமிழ்நாட்டில் கொஞ்ச காலத்துக்கு முன், எந்தப் பத்திரிகையைப் புரட்டினாலும் ஒரு யோகியாரின் கவிதை, கதை, கட்டுரை, காவியம் ஏதாவது ஒன்று தென்படும். அல்லது எல்லாமே நிறைந்திருக்கும். இது பலருக்கும் வெறுப்பை உண்டாக்கியது. அதைப் பற்றி புதுமைப்பித்தன், “அது நிரந்தர வாந்திபேதி” என்றார்.

குளவிக் கூடு
பிரபலமான ஆசிரியர் ஒருவர் தினப் பத்திரிகை ஒன்று நடத்தினார். அதில் ‘குளவிக் கூடு’ என்ற மகுடமிட்டு கிண்டல் விஷயங்கள் எழுதப்பட்டு வந்தன. புதுமைப்பித்தனிடம் ஒரு முறை நான் (முல்லை முத்தையா) ‘குளவிக் கூடு’ எப்படி இருக்கிறது என்று விசாரித்தேன். அதற்கு அவர் “பத்திரிகை மண் மூட விட்டுத்தானே குளவிக் கூடு கட்டும்” என்றார். அந்த வாக்கு உண்மையாகி. பத்திரிகையும் நின்ற மண் மூடி விட்டது.
மேல்மாடி காலி

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைவின் பிறந்த நாள் சென்னையில் முதன் முதலாக சக்தி காரியாலயத்தில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவிற்குப் பலரும் வந்திருந்தனர். புதுமைப்பித்தனும் வந்திருந்தார். கு. அழகிரிசாமியும் வந்திருந்தார். இருவருக்கும் அறிமுகம் இல்லை. அப்போது புதுமைப்பித்தனிடம் அழகிரிசாமியை அறிமுகப்படுத்த விரும்பிய நண்பர், அழகிரிசாமியைப் பக்கத்தில் அழைத்து புதுமைப்பித்தனிடம் சொன்னார்: “இவர் உங்கள் சிஷ்யர், உங்கள் எழுத்துக்களில் மிகப்பெரும் ஆர்வம் உடையவர் உங்களைப் பார்க்க வேண்டுமென்னும் ஆவலோடு இருந்தவர்...” உடனே புதுமைப்பித்தன் இடைமறித்து, “சிஷ்யன் என்று சொல்லாதீர்கள், சிஷ்யன் என்றால் மேல் மாடி காலி என்று அர்த்தம். ‘நண்பர்’ என்று சொல்லுங்கள்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

வயதிலும் அறிவிலும் சிறியவர்களாக இருந்தாலும் அவர்களை, அவர் தமக்கு சமமானவர்களாகக் கருதுவதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் உதாரணம்.

(கு. அழகிரிசாமி சொல்லியது)

இது உங்களுக்குத்தான்...

எழுத்தாளர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் உள்ள, உறவு நிலைமையைப் பற்றி ஒரு சமயம் பேச்சு எழுந்தது. அதற்குப் புதுமைப்பித்தன், “எந்தப் பதிப்பாளர் வந்தாலும் இதை உங்களுக்காகத்தான் எழுதி வைத்திருக்கிறேன்” என்று சொல்ல வேண்டும்; பணத்தை யார் முதலில் கொடுக்கிறார்களோ அவர்களிடம் ‘ஸ்கிரிப்ட்’டைத் தூக்கிக் கொடுத்து விட வேண்டும். அதாவது எழுத்தாளன் தாசியைப் போல் இருக்க வேண்டும்” என்றார்.

ஆத்மாவின் குளிர்ச்சி

புதுமைத்பித்தன் தினமணியில் இருந்த சமயத்தில் அவரும் இன்னும் சில நண்பர்களும் ஹோட்டலுக்குச் சென்றார்கள். சூடாக இட்லி, சாம்பார் கொண்டு வரும்படி சர்வரிடம் சொன்னார் புதுமைப் பித்தன். இட்லி, சாம்பார் வந்தது. இட்லியைத் தொட்டுப் பார்த்துவிட்டுப் புதுமைப்பித்தன் சொன்னார் : “என்னப்பா ஆத்மா குளிர்ந்து விட்டதே” என்றார். (இட்லி ஆறிப் போயிருந்தது -சாம்பார் சூடாக இருந்தது.)

ஊர் திருநெல்வேலியா?

தமிழில் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த ஒரு கவிஞரைக் கண்டு, ரசிகமணி டி.கே.சி. ‘உங்களுக்கு ஊர் திருநெல்வேலியா?’ என்று கேட்டிருக்கிறார். இல்லை, ‘எனக்கு ஊர் மதுரை’ என்று சொல்லி இருக்கிறார் அந்தக் கவிஞர். மற்றொரு சமயம் என்னைச் [முல்லை முத்தையா] சந்தித்த அந்தக் கவிஞர், 'நான் நன்றாகக் கவிதை எழுதுகிறேனாம்; அதனால் நான் திருநெல்வேலியாகத்தான் இருக்க வேண்டும், எனக் கருதி, டி. கே. சி. என்னிடம், திருநெல்வேலியா? என்றார். நான் மதுரை என்றதும் அவர் வாயடைத்து விட்டார் என்றார்.

புதுமைப்பித்தனிடம் உரையாடிக் கொண்டிக்கும் போது மேற்கண்ட நிகழ்ச்சியை அப்படியே சொன்னேன். அதற்கு, “அது அல்ல விஷயம், இவ்வளவு மட்டரகமான கவிதைகள் எழுதும் நீ-மனதுக்குள் எண்ணிக்கொண்டு திருநெல்வேலியா? என்று சந்தேகத்துடன் கேட்டிருக்கிறார். இல்லை, மதுரை என்று அவர் சொன்னதும் தான் எண்ணியது சரிதான் என்று டி.கே.சி. தீர்மானித்துக் கொண்டார். இவ்வளவுதான் விஷயம்” என்றார்.

நீ ஏமாந்து போவாய்

ஒரு பதிப்பாளர் புதுமைப்பித்தனிடம் இரண்டு மூன்று முறை வந்தார். அவருக்குத் தருவதாகச் சொன்ன விஷயம் எழுதப்படாமலே கடத்தி வந்தார். அந்தப் பதிப்பாளர். நல்ல ஏர்கண்டிஷன் ரூமிலே, ஒரு சொம்புத் தண்ணீர், வெற்றிலை, சீவல், புகையிலை இவைகளுடன் உங்களை வைத்துப் பூட்டிவிட்டு சிறிது நேரத்திற்குப் பிறகு திறந்து பார்த்தால் அழகாக எழுதி வைத்திருப்பீர்கள்” என்றார். அதற்குப் புதுமைப் பித்தன், ‘அதுதான் இல்லை நீ ஏமாந்து போவாய், தண்ணீரைக் குடித்துவிட்டு, வெற்றிலை எல்லாம் போட்டுக் கொண்டு ஆனந்தமாகத் தூங்கி எழுந்திருப்பேன்” என்றார்.

வாழ்த்து அல்ல - வணக்கம்!

மரபு, பண்பு இவை சரிவரத் தெரியாமல் கவிதைகள் எழுதி வருகிறார்கள் என்பதைப் பற்றி புதுமைப்பித்தன் ஒரு சமயம் சொல்லிக் கொண்டிருக்கும்போது, ஒரு கவிஞரைப் பற்றி வெளிவந்த தொகுப்பு நூலைப் பார்க்க நேர்ந்தது. அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்ட கவிஞர் ஒருவருக்குச் சிஷ்யர் என்ற கவிஞர் ஒருவரும் அவரைப் பாராட்டி ஒரு கவிதை எழுதியிருந்தார். அதில், ‘...எந்தன் ஆசான், பீடெல்லாம் பெற்று வாழ்க!’ என்று இருந்தது. ஆசானுக்கு வாழ்த்துக் கூறுவதில்லை. வணக்கம் தான் கூற வேண்டும். இதைச் சொல்லுங்கள் அந்தக் கவிஞரிடம்!” என்றார் புதுமைப் பித்தன்.

தலைப்பாக் கட்டாதீர்

புதுமைப்பித்தன் வீட்டிலே ஒரு முறை பலர் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு நண்பர், 'தான் ஒரு குறிப்பிட்ட பணத்தை எதிர்பார்ப்பதாகவும் அந்தப் பணம் வந்ததும் தன்னுடைய சொந்த உபயோகத்துக்கு ஒரு கார் வாங்க எண்ணியிருப்பதாகவும்' கூறினார். அவர் ஒரு வியாபாரமும் செய்யாமல் வெறுமனே இருப்பவர். பணம் வந்தால் ஏதேனும் ஒரு வியாபாரத்தில் ஈடுபடாமல், கார் வாங்கப்போவதாக கூறியது புதுமைப்பித்தனுக்குப் பிடிக்கவில்லை. எனவே வெறுப்புடன், ‘வேஷ்டியை அவிழ்த்து தலைப்பாக் கட்டிவிடாதீர், என்றார்.

காலத்தேவா அடிச்சு விடு

ஒரு பத்திரிகையில் அதன் ஆசிரியர், ‘காலத் தேவன் அடிச்சுவடு’ என்ற தலைப்புடன் ஒரு ஆராய்ச்சி விஷயத்தைத் தொடர்ந்து எழுதி வந்தார். அந்தக் கருத்துக்கள் புதுமைப்பித்தனுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. விஷயம் ஒன்றிருக்க இவர் எதையோ ‘அடிச்சு விடுகிறார்’ அதற்கு நான் மறுப்பு எழுதப் போகிறேன். உன்னுடைய ‘முல்லை’யில், “காலத்தேவா அடிச்சு விடு” என்ற தலைப்புடன் என்னுடைய கட்டுரை வெளிவருவதாக விளம்பரப்படுத்திவிடு என்றார் புதுமைப்பித்தன். அவருடைய தலைப்பே அதற்கு மறுப்பாகவும் சவாலாகவும் அமைந்திருத்தது.

கோவணம் கிழித்து விடுதல்

தமிழ்ப் புத்தகங்களைப் பற்றியும் பதிப்பாளர்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். புதுமைப்பித்தன். சின்னஞ் சிறு புத்தகங்களாக வெளியிடுவது புதுமைப்பித்தனுக்குப் பிடிப்பதில்லை அப்போது “கோவணம் கிழித்து விடுவது”-அது ரொம்ப சுலபமாயிருக்குமல்லவா? என்றார் புதுமைப்பித்தன்.

குடுகுடுப்பைக்காரன் சட்டை

நம்முடைய தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் பிற படங்களைப் பார்த்துக் காப்பியடிக்கிறார்கள் என்பதைப் பற்றி ஒரு முறை உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது புதுமைப்பித்தன், “ஒரு பட முதலாளி, தன்னுடைய படம் எடுத்து முடிக்கும் வரை மற்ற படங்களைப் பார்க்கக்கூடாது என்று தடை விதிக்க வேண்டும்; இல்லையானால் அவர் எடுக்கும் படம் குடுகுடுப்பைக்காரன் சட்டை போலாகிவிடும்” என்றார்.

முன்னுரை எழுதவில்லை

ரகுநாதனின் புத்தகம் ஒன்றிற்கு புதுமைப் பித்தன் முன்னுரை எழுதுவதாக இருந்தது. ரகுநாதன் ஆசிரியராக இருந்து முல்லை முத்தையா நடத்திய ‘முல்லை’ மாத இதழில் ரகுநாதனின் நூல் வெளிவரவிருக்கும் விவரம் பற்றி அறிவிப்பும் வந்தது, ஆனால் புதுமைப்பித்தனால் அந்நூலுக்கு முன்னுரை எழுத இயலாது போயிற்று அதன் பின்னர் தாம் எழுதிய எல்லா நூல்களுக்கும் தாம் மட்டுமே முன்னுரை எழுதினார் ரகுநாதன்

திருப்பூர் கிருஷ்ணன்
தினமணி

புதுமைப்பித்தனின் எச்சரிக்கை!

“...இவையாவும் கலை உதாரணத்திற்கென்று கங்கணம் கட்டிக்கொண்டு செய்த சேவை அல்ல. இவையாவும் கதைகள். உலகை உய்விக்கும் நோக்கமோ, கலைக்கு எருவிட்டுச் செழிக்கச் செய்யும் நோக்கமோ, எனக்கோ, என் கதைகளுக்கோ சற்றும் கிடையாது. நான் கேட்டது. கண்டது, கனவு கண்டது, காண விரும்பியது, காண விரும்பாதது ஆகிய சம்பவக் கோவைகள் தாம் இவை.

...நான் கதை எழுதுகிறவன். கதையிலே சல் உயிர்ப்பெற்று மனிதத் தன்மை அடைந்துவிடும். மூட்டைப் பூச்சி அபிவாதயே சொல்லும். அதற்கு நான் என்ன செய்யட்டும்? கதையுலகத்தின் நியதி அது. நீங்கள் கண்கூடாகக் காணும் உலகத்தில், மனிதன் கல்லுப் பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருப்பதைப் பார்க்கவில்லையா? மனிதன் கல் மாதிரி இருக்கும்போது கல்தான் சற்று மனிதன் மாதிரி இருந்து பார்க்கட்டுமே. தவிரவும் பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்றுகொண்டு பார்க்க எங்களுக்கு உரிமையுண்டு.

...பொதுவாக என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் பண்ணி உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல, பிற்கால நல்வாழ்வுக்குச் செளகரியம் பண்ணி வைக்கும் இன்ஷ்யூரன்ஸ் ஏற்பாடு அல்ல. எனக்குப் பிடிக்கிறவர்களையும், பிடிக்காதவர்களையும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறேன். சிலர் என்னோடு சேர்ந்துகொண்டு சிரிக்கிறார்கள். இன்னும் சிலர் கோபிக்கிறார்கள். இவர்கள் கோபிக்கக் கோபிக்கத்தான் அவர்களை இன்னும் கோபிக்க வைத்து முகம் சிவப்பதைப் பார்க்க வேண்டும், என்று ஆசையாக இருக்கிறது. ஆனால் இப்படிக் கோபிப்பவர்கள் கூட்டம் குறைய குறையத்தான் எனக்குக் கவலை அதிகமாகி வருகிறது.

இவர் இன்னமாதிரித்தான் எழுதுவது வழக்கம் அதைப் பாராட்டுவது குறிப்பிட்ட மனப்பக்குவம் தமக்கு இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் என்றாகி, என்னைச் சட்டம் போட்டுச் சுவரில் மாட்டிப் பூப் போட்டுப் மூடிவிடுவதுதான் என் காலை இடறி விடுவதற்குச் சிறந்த வழி. அந்த விளையாட்டெல்லாம் என்னிடம் பலிக்காது. மனப்போக்கிலும், பக்குவத்திலும் வெவ்வேறு உலகில் சஞ்சரிப்பதாக நினைத்துக்கொண்டு நான் வெகு காலம் ஒதுங்க முயன்ற கலைமகள் பத்திரிகை என் போக்குக்கெல்லாம் இடம் போட்டுக்கொடுத்து வந்ததுதான் நான் பரம திருப்தியுடன், உங்களுக்குப் பரிசயம் செய்து வைக்கும் காஞ்சனை, நீங்கள் இவைகளைக் கொள்ளாவிட்டாலும் நான் கவலைப்படவில்லை. வாழையடி வாழையாகப் பிறக்கும் வாசகர்களில் எவனோ ஒருவனுக்கு நான் எழுதிக் கொண்டிருப்பதாகவே மதிக்கிறேன்.”