புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்/புதுமைப்பித்தன் எழுதிய கடிதம்

புதுமைப்பித்தன் எழுதிய கடிதம்


பலர் கடிதம் எழுதுகிறார்கள். நீண்ட கடிதங்களே எழுதுகிறார்கள். ஆனால் சிலருடைய கடிதங்கள்தாம் இலக்கியமாக அமைகின்றன. அத்தகைய அருமையான கடிதம் இது; கவிதை என்றால் ‘ஆஹா’ என்று கூச்சலிடுவது மட்டுத் தான் என்ற அபிப்பிராயம் பலரிடையே இருந்து வருகிறது. இலக்கியத்தில், முக்கியமாக, கவிதையில் அமைதியும் உருவமும் அற்புதமான அம்சமாகும். இளவேனில் என்னும் கவிதை நூலைக் குறித்து ‘சொ. வி.’ எழுதிய இக்கடிதத்தை மகிழ்ச்சியுடன் பிரசுரிக்கிறோம்.

170. ராயப்பேட்டை ஹைரோடு, ராயப்பேட்டை 3–7–46

அருமைச் சோமையாவுக்கு,

இன்று மத்தியானந்தான் இளவேனில் பருவத்தைக்கூட பார்ஸல் செய்யக்கூடிய கெட்டிக்காரர்கள் திருச்சியில் உண்டு என்பதை அறிந்தேன். Surprise Packet கிடைத்ததும், மத்யானம் முழுவதும் ஸினிமாத் தொழிலுக்கு கல்தா கொடுத்து விட்டு, உட்கார்ந்து விட்டேன். ‘வீசுதென்றலும் வீங்கின வேனிலும்’ என்ற வரியை நினைப்பூட்டும் படியான தலைப்பு. அந்தப் பாட்டின் இனப் பிரிவுகளின் விரிவான காட்சிகள் இந்தச் சிறு கனவுக் குவியல் என்று முதல் வாசிப்பில் பட்டது. ‘என்ன ஸோமு ஸார், பாட்டு நேர்த்தியாக இருக்கே’ என்ற ரகமான அபிப்பிராயம் உன்னை insult செய்வதற்கு ஒரு வழி. அந்த வழியை விட்டு ருத்திரசன்மனாக உட்கார்ந்து கொண்டு பார்ப்போம் என்றால்......

வண்ண மதுக்கிண்ணம்
வார்த்த கவிதையெலாம்
எண்ணக் குகையினிலே
எதிரொலித்து விம்முதடா

என்றுதான் சொல்ல வேண்டும். வசனத்தில் அமையவில்லை.

முடியாதது என நான் நினைத்திருந்த ஒரு கலவை அது. பொதியை, மதுக்கிண்ணம் சிக்கந்தர், சின்னக் குயிலி, மாரணம், மன்மதன், எத்தனை எத்தனை படங்கள்.

“In Xanadu did Kublaikhan.” என்று தொடங்கும் அடிகளை நினைத்துப் பார்.

Caverns measureless to Meri.........

Where Damsel with a dulcimer.........
எண்ணிக் கனவுகளை வாரிச் சொரியும் பாட்டுக் குவியல் இது.

பாட்டுக்கள் முச்சூடும் ஒரே அமைதியில் மனசின் ஆழத்தில் உள்ள ஏக்கத்தின் எதிரொலியாக அமைந்திருப்பது, நினைவின் கோடியிலே மறைந்தும் மறையாது நின்றிருக்கும் துயரத்தின் பிரதிப்பலிப்பாகத் தென்படுகிறது. உனக்கு இந்த மாதிரி ஏக்கம் வரக் காரணம் என்ன? வெறும் Artists Pose என்று சொல்லுவார்களே அதுவா என யோசித்தேன். அதுவல்ல; சூழ நிற்கும் வரட்டுத் தவளைக் கவிதைகள் மனசை நிலைதடுமாறச் செய்வது இயல்பு தானே.

இது நன்றாக இருக்கிறது என ஒன்றை மட்டிலும் சுட்டிக் காட்ட எனக்குத் தெரியவில்லை. பொருளைக் கரைக்கும் பொதியைக்கும் இழுத்துச் செல்லும் இந்தப் பாட்டுகள், கவிதையிலே ஒரு புதிய துறையை இயற்றுகின்றன. இதுவரை சரிவர புரிந்து கொள்ளாமல் பாரதியின் எதிரொலிச்சான் கோவில்களாக, அல்லது Frustration Complex ஐ பரிபூரணமாக கசப்புக்குன்றாமல் சொல்லக் கூடி திறனில்லாத ‘கவிஞர்’ கூட்டங்கள், யாப்பு என்ற வாணலி (இருப்புச் சட்டியில்} வார்த்தைகளைப் போட்டு வறுத்து கருக்கி எடுத்து வைப்பதைத்தான் பார்த்திருக்கிறேன். ஒரு Personality ஐ Reveal செய்யும் பாட்டுகள் கோவையாக ஒரு புதிய துறையை இலக்கியத்தில் ஏற்படுத்துகிறது என்றால் அது நம் அதிர்ஷ்டந்தான். தமிழ் வழக்கொழிந்த மொழியாகிவிடுமோ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுத விரும்பிய எனக்குக் கொடி துளிர்க்கிறது என்பதைக் காண உற்சாகமிருக்கத்தானே செய்யும். அதற்காக மன்னிப்பு,

நிற்க, கைலங்கிரியில் நடந்த கதையை என்ன அழகாக ஜோடித்து விட்டாய். சிதம்பரச் செய்யும் கோவையிலே பிரபஞ்ச உற்பவமும் ஒடுக்கமும், ஈசன்-பார்வதி விளையாட்டாக, அம்மை சிற்றில் கட்டுவதும் ஈசன் அழிப்பதுமாக ஒரு கற்பனை, அது ஒரே பாட்டு. ஆனால் இங்கோ நிஜமான அநாயசமான விளையாட்டு. குழந்தைகள் விளையாட்டல்ல. காதல் விளையாட்டு, கண்ணைப் பொத்தவும் காரிருள் படர்ந்த கதை பயமாக பிறகு விளையாட்டாக அமைந்திருப்பது நயமாக இருக்கிறது.

இந்தப் பாட்டுகள் எல்லாவற்றிலும் அமைந்த ஏக்கமும் அழகும் ஒரு விசித்திரமான கலவை. தமிழுக்குப் புதிது. எந்த விதத்தில் என்றால், அழகோடு ஆனந்தம் வரும். இருளோடு துயரத்தின் சாகை வரும்; தனித்தனியாக அமைவதை விட்டு, இரண்டும் தாமரை இலையில் உருளும் தண்ணீர் போல அழகை வாரி வீசுகிறது.

இப்படிக்கு உனது,
சா. வி.