புது ஓவர்சியர்/கண்டிராக்டு உடையார்
கோவிந்தராஜ உடையாரின் தந்தை அவருக்குப் பத்து வேலி நன்செய் நிலமும், மற்றும் வீடு, வாசல், தோட்டம்-துறவு, மாடு கன்றுகளும் வைத்து விட்டுக் காலஞ்சென்றார். அப்போது உடையார் பாலிய வயதினர். தந்தை இறந்த இரண்டு வருஷத்தில், மைனர் விளையாட்டுக்களில் பதினையாயிரம் வரையில் கடன்பட்ட பின்னர் திடீரென்று விழித்துக் கொண்டார். சொத்தில் பற்று அவர் தந்தையிடமிருந்து அடைந்த பிதிரார்ஜிதங்களில் ஒன்று. தந்தை வைத்துப் போன நிலத்தில் ஒரு குழியேனும் விற்கக் கூடாதென்று அவர் தீர்மானஞ் செய்துகொண்டார். மகசூல் வருமானத்தைக் கொண்டு வீட்டுச் செலவு செய்து நிலவரியும் வட்டியும் கொடுத்துக் கடனையும் அடைப்பது இயலாத காரியமென்று தோன்றிற்று. உத்தியோகத்துக்குப் போவதற்கு வேண்டிய ஆங்கிலப் படிப்பு கிடையாது. என்னவெல்லாமோ யோசனை செய்துவிட்டுக் கடைசியில் 'கண்டிராக்ட்' தொழிலை மேற்கொண்டார். நல்ல வாசாலகர்; ஆட்களை வைத்து நடத்துவதில் சமர்த்தர். எனவே அந்தத் தொழிலில் அவர் வெற்றி பெற்றார். அந்தப் பக்கத்திலேயே சாலை, 'லயன்கரை', மதகு வேலை எதுவாயிருந்தாலும் அவரைத் தப்பிப் போகாது. சில "கண்டிராக்டு"களைத் தம் பெயருக்கே எடுத்துக்கொள்வார். சிலவற்றைத் தமக்கு வேண்டியவர்கள் பெயரால் எடுத்துக் கொள்வார். ஆயிரம் ரூபாய் கண்டிராக்டுக்கு ஒரு வேலை ஒப்புக் கொண்டால் இருநூறு ரூபாய் வேலைக்குச் செலவு செய்வார். 500 ரூபாய் தாம் எடுத்துக் கொள்வார். 300 ரூபாய் கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்துச் சரிப்படுத்திவிடுவது வழக்கம். ஆதலின், தற்போது, அதாவது தமது நாற்பதாவது வயதில் அவர் அறுபது வேலி நிலத்துக்கும், 50,000 ரூபாய் ரொக்கத்துக்கும் எஜமானனாயிருந்ததில் ஆச்சரியமில்லையல்லவா?
இன்றைய தினம் உடையார் தமது சவுக்கண்டியில் சாய்வு நாற்காலியில் படுத்துக் கொண்டு சிந்தனை தேங்கிய முகத்தினராயிருந்தார். அவரை இரண்டு கவலைகள் பிடுங்கித் தின்றன. ஒன்று மேட்டூர் மைனரின் 40 வேலி நிலத்தை வாங்கித் தம் நிலத்தை முழுசாக 100 வேலியாக்கி விட வேண்டுமென்பது. அதற்கு இரண்டு லட்சம் ரூபாய் வேண்டும். ரூ.50,000 கையில் இருந்தது. இன்னும் 11/2 லட்சத்துக்கு என்ன செய்வது? கடன் வாங்குவதில்லையென்பது உடையார் பாலியத்தில் செய்து கொண்ட உறுதி. அதிலும் இருபதாயிரம், ஐம்பதாயிரம் என்றாலும் யோசிக்கலாம். ஒன்றரை லட்சம் கடனா! பின்னர் என்ன உபாயம்?
மற்றொரு கவலை, கீழண்டைக் கிராமத்துப் பெரிய மிராசுதாரை எப்படிப் பழி வாங்குவதென்பது. அவர்களுக்குள் மனஸ்தாபம் தாலூகா போர்டு தேர்தல் சம்பந்தமாக எழுந்தது. உடையார் தேர்தலுக்கு நின்றாரென நினைக்கிறீர்களோ? அத்தகைய அசட்டுக் காரியம் எதுவும் அவர் செய்வதில்லை. ஆனால் அந்தப் பக்கத்தைச் சேர்ந்த தாலூகா போர்டு, ஜில்லாபோர்டு அங்கத்தினர்கள் எல்லாரும் 'கண்டிராக்ட்' உடையார் கைக்குள் அடக்கம் என்பது பிரசித்தம். கண்டிராக்டருக்கு அவர்களுடைய உதவி தேவை என்று சொல்லவேண்டுவதில்லை. அந்தப் பக்கத்தில் எந்தத் தேர்தல் நடந்தாலும் உடையாரின் ஆதரவு பெற்றோருக்குத்தான் வெற்றி. சென்ற வருஷம் வரை இந்தத் திருப்திகரமான பரஸ்பர ஒத்துழைப்பு நிலைமை இருந்து வந்தது. இவ்வருஷத்துத் தேர்தலில் கீழண்டைக் கிராமத்து மிராசுதார் தமது உறவினரான போட்டி அபேட்சகரை ஆதரித்தார். அந்த அபேட்சகருக்குச் சில அதிக வாக்குகளால் வெற்றி கிடைத்து விட்டது. இதை உடையார் எப்படிச் சகித்துக் கொண்டு இருப்பார்? அது முதல் அவரைப் பழி வாங்குவது எப்படி என்பதே உடையாரின் ஓயாக் கவலையாயிற்று. மனஸ்தாபம் முற்றுவதற்குப் புதிய புதிய காரணங்களும் ஏற்பட்டு வந்தன. இன்றைய தினம் மேற்சொன்ன இரு விஷயங்களையும் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில் திடீரென்று உடையார் முகம் விளக்கமுற்றது. ஓர் அற்புதமான யோசனை அவர் உள்ளத்தில் உதயமாயிற்று. நதியிலே புது வெள்ளம் பெருக்கெடுத்தோடுவதைக் காலையில் போய்ப் பார்த்து வந்திருந்தார். 'லயன் கரை' மீது ஜலம் வழிந்தோட இன்னும் ஒரு முழமே பாக்கியிருந்தது. கையெழுத்து மறையும் நேரத்தில் அய்யனார் மூலைக்குச் சென்று மண் வெட்டியினால் ஒரு கோடுமட்டும் கிழித்து விட்டு வந்தால்? பகைவனுடைய நிலங்கள் அம்மூலைக்கு நேரே இருக்கின்றன. முப்பது வேலியும் ஓர் ஆள் உயரத்திற்குக் குறையாமல் மணலடித்து விடும். அத்துடன் அவன் அழிந்தான். நமக்கோ ஒரு நஷ்டமுமில்லை. ஜலம் மேற்கே முட்டிக் கொண்டு வந்தாலும் வண்டல் படிந்து நிலம் இரு மடங்கு விளையுமேயன்றி வேறில்லை. பின்னர், உடைப்பு அடைத்தல் சம்பந்தமாக ஏராளமான 'கண்டிராக்ட்' வேலைகள் இருபதினாயிரம் முப்பதினாயிரம் கிடைத்தாலும் கிடைக்கலாம். அப்போது மேட்டூர் மைனர் நிலம் வாங்குவதும் சாத்தியமாகிவிடும். தர்மம், அதர்மம் என்னும் எண்ணங்கள் உடையாருக்குத் தோன்றவே இல்லை. அவற்றையெல்லாம் அவர் மறந்து நீண்ட நாளாயிற்று.
சூரியன் அஸ்தமிக்கும் சமயத்துக்கு உடையார் கேசவனை ஒரு மண்வெட்டி எடுத்துக்கொண்டு வரச் சொல்லிவிட்டுக் கொல்லைப்புறத்தால் கிளம்பிச் சென்றார். அவர்கள் சில நிமிஷங்களுக்கெல்லாம் நதிக்கரையை அடைந்து, அதிவேகமாகக் கிழக்கு நோக்கிச் சென்றார்கள். நதியில் பூரணப்பிரவாகம் ஓடிக்கொண்டிருந்தது. நீர் ஓட்டத்தின் 'ஹோ' என்ற இரைச்சலும், படுகையிலிருந்த மூங்கில் மரங்கள் உராயும் சத்தமும், மேலக் காற்றின் கோஷமும், தூரத்தில் நரியின் ஊளையும், நாயின் குலைப்பும் கலந்து பயங்கரமாகத் தொனித்தன. கண்ணுக்கெட்டியதூரம் தண்ணீர் மயமாய் இருந்த பிரவாகத்தின் காட்சியும், மேன்மேலும் வந்து கலந்த இருளும், மேற்குத் திக்கில் ஓடி ஒளிந்து கொண்டிருந்த மங்கிய ஒளியும், மரங்களின் நிழலும் பயங்கரத்தை மிகைப்படுத்தின. உடையாரும், கேசவனும் நதி வளைந்து செல்லும் ஒரு முடுக்குக்கு வந்து சேர்ந்தார்கள். உடையார், அங்கு வந்து நின்று "சரி வெட்டு" என்றார். இருபது வருஷ காலமாய் எதிர்த்துப் பதில் சொல்லியறியாத கேசவன் இன்று தயங்கி நின்றான். "சீ, மடையா, இங்கே கொடு" என்று கூறி, உடையார் மண்வெட்டியை வாங்கி, மளமளவென்று கரையை வெட்டினார். சுமார் பதினைந்து நிமிஷம் மூச்சு வாங்கும்படி வெட்டிய பின்னர், ஜலம் ஒரு சிறு மடையளவாக நகர்ந்து வந்து லயன் கரையின் மறுபுறத்தில் விழுந்தது. "இன்னும் ஒரு மணி நேரத்தில் பாதி ஆறு இம்மடை வழியாகப் பாயும்" என்று உடையார் எண்ணிக் கொண்டே தலை நிமிர்ந்தார். தமக்கு இரண்டு கஜதூரத்தில் இரண்டு மனிதர்கள் சைக்கிள் வண்டிகளில் வந்திறங்குவதைக் கண்டார். "யார் அது?" என்று சத்தம் வந்தது. உடையாருக்குப் "பகீர்" என்றது. மின்னொளி போல் ஓர் எண்ணம் தோன்றிற்று. மண் 'வெட்டியை' வீசி ஆற்றில் எறிந்தார். கொடக் என்ற சத்தத்துடன் பிரவாகமானது உடையார் குற்றத்தின் சாட்சியத்தை விழுங்கி ஏப்பம் விட்டது.