புது டயரி/காது குத்தாதே!


காது குத்தாதே!

“எனக்குக் காது குத்தாதே; எனக்கு எல்லாம் தெரியும்” என்று அன்பர்கள் பேசுவதை நாம் கேட்டிருக்கிறோம். ஒருவரை நம்முடைய கருத்துக்கு இணங்கச் செய்வதற்காக நாம் காரணங்களை எடுத்துச் சொல்லும்போது, நாம் சப்பை கட்டுவதாக எண்ணி அப்படிச் சொல்வது வழக்கம். காது குத்துவதற்கும் நம்முடைய கருத்தை ஏற்றுக்கொள்ளும்படி செய்வதற்கும் என்ன சம்பந்தம்?

இன்னும் சில சமயங்களில், “ஏன் அப்பா, எனக்குக் குல்லாப் போடுகிறாய்?” என்று நாம் கேட்பதுண்டு. அப்போதுகூட நம்மைத் தம்வழிப் படுத்துவதற்காக யாரேனும் ஒருவர் நம்மைப் புகழ்ந்தால் அப்படிச் சொல்கிறோம். குல்லாப் போடுவதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?

மேலே சொன்ன காது குத்துவதும், இந்தக் குல்லாப் போடுவதும் வெவ்வேறு செயல்களைச் சொல்லளவில் குறித்தாலும், இரண்டும் கிட்டத்தட்டத் தம்முடைய கருத்துக்கு இணங்கும்படி செய்வதையே புலப்படுத்துகின்றன. இரண்டுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

இந்த இரண்டும் மதமாற்றம் செய்பவர்களின் செயல்களிலிருந்து எழுந்த வார்த்தைகள். இந்துக்களாக இருந்தவர்களை முகம்மதியர்களாக மாற்றும்போது அவர்களுக்கு  முஸ்லிம் உடை அணிவித்தார்கள்; குல்லாப் போட்டார்கள்; இந்துவைத் தம்முடைய மதத்துக்கு மாற்றினார்கள். இந்த மாற்றத்தையே குல்லாப் போடுதல் குறிக்கிறது. அவ்வாறே முஸ்லிமாக இருந்த ஒருவரை இந்துவாக்கி அவர் காதில் துளையிட்டுக் கடுக்கன் போட்டார்கள். முஸ்லிம்களில் ஆடவர்கள் காது குத்திக் கொள்வதில்லை. ஆகவே அவர்களை இந்துக்கள் ஆக்கும்பொழுது மதம் மாறியதற்கு அடையாளமாகக் காது குத்தினார்கள். மத மாற்றத்துக்கு அறிகுறிகளான குல்லாப் போடுவதும் காது குத்துவதும் மனத்தை மாற்றச் செய்யும் முயற்சியைக் குறிப்பவையாகப் பிற்காலத்தில் வந்துவிட்டன.

பூச்சாண்டி என்ற சொல்ல நாம் அடிக்கடி குழந்தைகளிடம் சொல்லிப் பயமுறுத்துகிறோம். அதுகூட மதமாற்ற முயற்சியிலிருந்து வந்த வார்த்தைதான். பூச்சு என்றால் திருநீறு பூசுவதைக் குறிக்கும்; திருநீறு பூசுபவர் ஆண்டி; அவரே பூச்சாண்டி. சைவர்கள் பலம் பெற்றிருந்த காலத்தில் சைனர்களையும் வைணவர்களையும் மதம் மாற்றித் திருநீறு பூசச் செய்தார்கள். அப்படிச் செய்த சைவர்களை மற்றவர்கள் பூச்சாண்டி என்று சொன்னார்கள். இப்போது சைவர்களே தம் குழந்தைகளுக்குப் பூச்சாண்டி காட்டுகிறார்கள்! எப்படி அந்தச் சொல் வந்ததென்று யோசித்தால் அதைச் சொல்வார்களா?

வைஷ்ணவர்கள் மற்றவர்களை மதமாற்றம் செய்த போது அவர்களுக்கு நாமம் போட்டார்கள். அதையே இப்போது, “என்ன, அவனுக்கு நாமம் போடுகிறாயா?” என்று மனம் மாற்றி ஏமாற்றும் செயலைக் குறிக்கச் சொல்லுகிறோம்.

இவையெல்லாம் அந்தக் காலத்தில் மதம் மாற்றிய முயற்சிகளைக் குறிப்பவை. அந்த முயற்சிகள் மாறி அந்த  அடையாளங்கள் மாறினாலும் அவற்றினூடே உள்ள பொதுக் கருத்தாகிய மனம் மாற்றுதலைக் குறிக்க அந்த வார்த்தைகளெல்லாம் இப்போதும் வழங்கி வருகின்றன.

சமயபேத உணர்வால் மிகவும் வேடிக்கையான சம்பவங்கள் நிகழ்வதுண்டு, ஒரு சைவரிடம் ஓர் இளைஞன் போனான். சைவர், “உன் பேர் என்ன அப்பா?” என்று கேட்டார். அந்த இளைஞன், “சிவராமலிங்கன்” என்றான். கேட்ட சைவர் மிகவும் குதூகலத்துடன் கையைக்கொட்டி, “அப்படித்தான் நசுக்க வேண்டும்; அப்படித்தான் நெருக்க வேண்டும்!” என்றாராம். இளைஞன் ஒன்றும் தெரியாமல் விழித்தான். “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டான். “இந்தப் பக்கம் சிவன்; அந்தப் பக்கம் லிங்கன்; இரண்டு பேருக்கும் நடுவில் ராமன் அகப்பட்டு நசுங்குகிறான்; அதுதான் சரி” என்று சைவர் விளக்கினாராம்: பாவம்! அந்த இளைஞருடைய தந்தையார் சைவ வைஷ்ணவ சமரச எண்ணத்தோடு சிவராமலிங்கன் என்று தம் மகனுக்குப் பெயர் வைத்திருக்க, அந்தச் சைவர் ராமனை நசுக்க அப்படி வைத்ததாகக் குதூகலித்தாராம்.

மத பேத உணர்ச்சியில் சைவரோ, வைஷ்ணவரோ, சைனரோ, பைளத்தரோ, கிறிஸ்தவரோ யாரும் விலக்கு அல்ல.

ஒரு வைஷ்ணவர் ஸ்ரீரங்கத்தில் இருந்தார். அவருக்குச் சிறுநீர் கழிக்கும் உணர்ச்சி வந்தால் அங்கிருந்து திருவானைக்காவலுக்கு ஓடி வந்து அவ்வூர்க் கோயிலின் திருமதில் சுவருக்குக் கீழே இருப்பாராம். ஒரு நாள் அப்படிச் சிறுநீர் கழித்தபோது மதில் மேல் ஒரு காக்கை தத்தித் தத்தி நடந்து கொண்டிருந்ததாம். அப்போது பெயர்ந்திருந்த கல்லொன்றைக் காலால் இடறவே, அது கீழே இருந்த வைஷ்ணவர் தலையில் விழுந்து காயம் உண்டாக்கியது;  தலையிலிருந்து ரத்தம் வழிந்தது. அதைக் கண்ட வைஷ்ணவர் கோபம் அடையவில்லை. “சபாஷ், காக்காய்! நீ ஸ்ரீரங்கத்துக் காக்கையாகத்தான் இருக்கவேணும். இப்படியே இந்த மதில் சுவரை மேலே இடி; நான் கீழே இடிக்கிறேன்” என்றாராம்!

இப்படி நடந்திருக்கும் என்று சொல்ல முடியாது. சமயபேத உணர்வு எவ்வளவு பைத்தியக்காரத்தனமான விளைவை உண்டாக்கும் என்பதைப் புலப்படுத்த இப்படி எவ்வளவோ கதைகள் வழங்குகின்றன. “அரிசிவாரு என்று வைஷ்ணவர்கள் சொல்லமாட்டார்கள். இடையே சிவா என்ற சொல் வருகிறதல்லவா? அமுதுபடி எடு என்று தான் சொல்வார்கள்” என்று சும்மா கற்பனையாகச் சொல்வதுண்டு.

திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களுடைய மாணாக்கர் வித்துவான் தியாகராச செட்டியார். அவர் பச்சைச் சைவர். பிள்ளையவர்கள் புராணங்களில் விஷ்ணுவையும் வைஷ்ணவர்களையும் தாழ்வாகச் சொல்லும் இடங்கள் உண்டு. அவற்றைப் பார்த்துச் செட்டியார் மகிழ்ச்சி அடைய மாட்டாராம். “இவ்வளவு சாமானியமாகவா சொல்கிறது? கடுமையாகச் சொல்ல வேண்டாம்?” என்பாராம். என்னுடைய ஆசிரியப் பிரான் இந்தச் செய்தியைச் சொன்னார்கள்.

ஒரு முறை தியாகராச செட்டியார் ஒரு வைஷ்ணவ அன்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த ஒரு குழந்தை அழுக்குப் பண்ணிவிட்டது. அந்த வைஷ்ணவர் சும்மா இராமல், “உங்கள் பெருமான் பூசும் திருநீற்றைக் கொண்டு வந்து அதன் மேலே போடச் சொல்லுங்கள்” என்றார், அவர் சாம்பலையே இடக்காகத் திருநீறு என்று குறித்தார். செட்டியார் சும்மா விடுவாரா? 

“அது வேண்டாம். உங்கள் பெருமாளையே மறுபடி வராகாவதாரம் எடுத்துவரச் சொல்லுங்கள்” என்றாராம்.

சில சைவர்கள் தம் குழந்தைகளுக்குத் திருமாலின் பெயரை இடுவதில்லை. ஒருகால் அவர் வைத்தாலும் தீவிர வைணவர்கள் சைவப் பெயரை வைப்பதில்லை. என்னுடைய ஆசிரியப் பெருமாளுகிய ஐயரவர்களுக்குரிய பிள்ளைத் திருநாமம் வேங்கடராமன். வீட்டுப் பெரியவர்களுடைய பேராதலின் அதைச் சொல்லக் கூடாதென்று சாமா என்று வீட்டில் உள்ளவர்கள் அழைப்பார்கள்.

ஐயரவர்கள் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் மாணாக்கராகச் சேர்ந்தபோது அவர்களுடைய பெயர் வேங்கடராமன் என்பதை அறிந்து, “வேறு பெயரால் உம்மை அழைப்பதுண்டோ” என்று கேட்டாராம். “சாமா என்று வீட்டில் அழைப்பார்கள்” என்றார் மாணாக்கர். “அந்தப் பெயர் எதைக் குறிக்கிறது?” என்று ஆசிரியர் கேட்டார். “சாமிநாதன் என்ற பெயரையே அப்படிக் குறுக்கி வழங்குவார்கள்” என்று மாணாக்கர் சொன்னார். “அப்படியானால் உமக்குச் சாமிநாதன் என்ற பெயரே இருக்கட்டும். அப்படியே நான் அழைக்கிறேன்” என்றார். அது முதல் ஐயரவர்களுக்கு வேங்கடராமன் என்ற பெயர் மறைந்து சாமிநாதன் என்ற பெயரே நிலை பெறுவதாயிற்று. ஐயரவர்கள் இளம் பருவத்தில் படித்த புத்தகத்தில் வேங்கடராமன் என்ற பெயரை எழுதியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

இதைச் சொல்லும் பொழுது ஒரு நிகழ்ச்சி என் நினைவுக்கு வருகிறது. ஒரு முறை ஐயரவர்கள் இராமேசுவரத்துக்குச் சென்றிருந்தார்கள். நானும் உடன் போயிருந் தேன். இராமேசுவரத்தில் இராமநாத சுவாமியைத் தரிசித்துக் கொண்டோம். பிறகு தனுஷ்கோடி சென்று நீராடி விட்டு வரலாமென்று புறப்பட்டோம். அப்போதெல்லாம் இராமேசுவரத்தில் மிகுதியான உணவுச்சாலைகள் இல்லை. தனுஷ்கோடியில் நீராடிவிட்டு வந்து இராமேசுவரத்தில் உணவு கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு ஒர் உணவுச் சாலையில் எங்கள் இருவருக்குமுரிய சாப்பாட்டை எடுத்து வைக்கச் சொல்லி, அதற்குரிய பணத்தையும் கொடுத்து விட்டுப் புறப்பட்டோம்.

தனுஷ்கோடியில் நீராடி இராமர் சந்நிதி சென்று தரிசனம் செய்தோம். அங்கே ஒர் அன்ன சத்திரம் இருந்தது. ஐயரவர்கள் அதைக் கண்டவுடன் அதற்குள் நுழைந்தார்கள். அங்கே உண்ணலாம் என்ற எண்ணம் வருகிறவர்கள் பெயர்களை ஒருவர் எழுதிக் கொண்டார். ஐயரவர்கள் தம் பெயரை, ‘வேங்கடராமன்’ என்று சொன்னார்கள். அங்கே தூய்மையான எளிய உணவை உண்டோம்.

உண்டுவிட்டு வெளியில் வந்த பிறகு, “இராமேசுவரத்தில் ஹோட்டலுக்கு முன்பணம் கொடுத்திருக்கிறேராமே!” என்று ஐயரவர்களிடம் சொன்னேன். “பணம் போனால் போகட்டும், அங்கே எத்தனையோ அசுத்தமான நிலையில் சாப்பிட வேண்டியிருக்கும். இங்கே எந்தப் புண்ணியவானோ இந்தச் சத்திரத்தை வைத்திருக்கிறார். இங்கே கிடைக்கும் தூய்மையான உணவைச் சாப்பிட்டதனால் நமக்குத்தான் புண்ணியம்” என்றார்கள். அந்த வேங்கடராமன் உண்டதால் சத்திரம் வைத்தவர்களுக்குக் கிடைத்த புண்ணியத்துக்கு அளவே இராது என்று நான் எண்ணிக் கொண்டேன். மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் சவேரிநாத பிள்ளை என்ற கிறிஸ்தவர் படித்து வந்தார். அவருடைய பெயரைச் சிவகுருநாதபிள்ளை என்று மாற்றித் திருநீறும் அணியச் செய்தார். ஆனால் ஒன்று சொல்லவேண்டும். வேங்கடராமனைச் சாமிநாதன் ஆக்கியதும், சவேரிநாதனைச் சிவகுருநாதனாக்கியதும் வலிந்து செய்த காரியங்கள் அல்ல. இருசாராரும் உடன்பட்டுச் செய்த செயல்களே. அதனால் தான் இன்றளவும் தமிழ் தந்த வள்ளலுக்குச் சாமிநாதன் என்ற பெயரே நிலைத்துவிட்டது.

இந்த நிலைக்கு மாறாகச் சமரச மனோபாவத்தைக் காட்டும் செயல்கள் எவ்வளவோ உண்டு. சைவர்கள் வீட்டில் கிருஷ்ணசாமியையும் ராமசாமியையும் பார்க்கிறோம். ஆதிசைவர்களில் இராமசாமிக் குருக்கள் இருக்கிறார். சிதம்பரம் திக்ஷிதர்களில் வேங்கடேச திக்ஷிதர் இருக்கிறார். வீரசைவர்களில் இராமசாமி அடிகளார் இருக்கிறார்.

மயிலாப்பூரில் வைஷ்ணவர்கள் வீட்டில் கற்பகம் என்ற பெயருடைய பெண்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் விட ஆச்சரியமான செய்தி சுப்பிரமணிய ஐயங்கார் என்று ஒரு வைஷ்ணவர் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார். ஒர் அன்பர் எனக்கு அனுப்பிய பழைய விவாக முகூர்த்தப் பத்திரிகையில் (9-3-59) இந்த அதிசயத்தைக் கண்டேன்.

அவருடைய கனிஷ்ட புத்திரனாகிய சிரஞ்சீவி எஸ்.ஸ்ரீனிவாசனுடைய திருமணத்துக்குரிய அழைப்பு அது. அதில் அவர், ‘தாசன், எம். ஏ. சுப்பிரமணிய அய்யங்கார், மதுரை’ என்று கையெழுத்திட்டிருக்கிறார். அவர் மதுரையில் போக்குவரவுத் துறையில் பணிபுரிந்து விலகினவர்.  என்று அந்த அழைப்பிலிருந்து தெரியவருகிறது. இந்த அழைப்பிதழை அனுப்பிய அன்பர் திரு ஆழ்வை அ.பட்சிராஜன், திருக்குறுங்குடி; அவருக்கு என் நன்றி உரியது.

காந்தியுகத்தில் சமயசமரசம் உதயமாகி விட்டது.

‘ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித பாவன ஸீதா ராம்
ஈச்வர அல்லா தேரேநாம்
ஸப்கோ ஸன்மதி தே பக்வான்’

என்ற மந்திரத்தைத் தந்த அந்த மகானை வாழ்த்துவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=புது_டயரி/காது_குத்தாதே!&oldid=1534715" இலிருந்து மீள்விக்கப்பட்டது