புது டயரி/சென்ற இடம் எல்லாம்



சென்ற இடம் எல்லாம்...

அவர் ஏழை. எவ்வளவு தூரமானலும் நடந்தே செல்வார். ஆகையால் அவருக்குச் செருப்பு மிகவும் அவசியம். அதைக் கூடிய வரைக்கும் ஜாக்கிரதையாகக் காப்பாற்றி வந்தார். பழைய செருப்புப் பிய்ந்துவிட்டது. புதிய செருப்பு வாங்கினார். ஒருநாள் போகும் வழியில் ஒரு பெருமாள் கோயில் இருந்தது. உள்ளே போய்ப் பெருமாளைச் சேவித்துவிட்டுச் செல்லலாம் என்ற எண்ணம் எழுந்தது. காலில் செருப்பு இருந்தது. அதோடு கோயிலுக்குள் போக முடியாது. பெருமாளைச் சேவிக்க வேண்டும் என்ற விருப்பம் அதிகமாக இருந்தது. கோயிலுக்கு வெளியில் செருப்பைக் கழற்றிவைத்துவிட்டு உள்ளே சென்று விரைவாகத் தரிசனத்தை முடித்துக்கொண்டு வந்துவிடலாம். அதற்குள் யாராவது செருப்பை எடுத்துக் கொண்டு போய்விட்டால்? அவர் மனம் தடுமாறியது. ‘சிறிது நேரந்தானே? அதற்குள் யார் எடுத்துக்கொண்டு போவார்கள்?’ என்று சமாதானம் செய்துகொண்டு செருப்பை வெளியே கழற்றி வைத்துவிட்டுக் கோயிலுக்குள் நுழைந்தார். நேரே பெருமாள் சந்நிதிக்குள் சென்றார். தாயாரைப் பிறகு வேண்டுமானல் சேவித்துக் கொள்ளலாம். பெருமாளைச் சேவித்துக்கொண்டு போய் விடலாம்.  உள்ளே போன போது பட்டாசாரியார் இருந்தார். அவர் வந்த வைஷ்ணவரைக் கண்டதும், “அர்ச்சனை பண்ண வேண்டுமா?” என்று கேட்டார். “கற்பூரம் பண்ணினால் போதும்” என்று இவர் சொன்னர். அப்படியே அவர் செய்துவிட்டுத் தீர்த்தம் கொடுத்தார். சடகோபம் சாதிப்பதற்கு முன்பு பட்டாசாரியார் எதையோ தேடினார். சிறிது நேரமாயிற்று, வந்தவருக்கோ மிகவும் அவசரம். செருப்பை யாராவது தூக்கிக்கொண்டு போய் விடுவார்களோ என்ற அச்சம். பட்டாசாரியார் சடகோபம் சாதிக்கத் தாமதம் பண்ணினார். வந்தவர் பொறுமையை இழந்தார். “சுவாமி சீக்கிரம் செருப்புச் சாதியுங்கள்”, என்றார். அவருடைய உள்ளத்தில் இருந்த செருப்பின் ஞாபகம் வார்த்தையில் வெளியாகிவிட்டது. எங்கே என்ன வேலையில் இருந்தாலும் இறைவனை நினைக்க வேண்டும் என்று சொல்லி, ‘செருப்பு வைத்துச் சேவடி தொழுமாப்போலே’ என்று இந்த வரலாற்றை நினப்பூட்டுவார்கள்.

இந்த அனுபவம் அந்த வைஷ்ணவருக்கு மட்டுமா உண்டாயிற்று? புதிய செருப்பு வாங்கின எல்லாருமே எங்கேயாவது நாலு பேர் நடமாடும் இடத்தில் அதைக் கழற்றி வைக்க நேர்ந்தால் அதையே நினைத்துக்கொண்டு தான் இருப்பார்கள். எல்லாருமே ‘செருப்பு வைத்துச் சேவடி தொழுகிறவர்களே!’

ஒருகால் சில பேருக்கு அந்த நினைவு வராதிருக்கலாம். அவர்கள் பாக்கியசாலிகள். என்னைப் பொறுத்தமட்டில் நான் அந்த வைஷ்ணவர் கோஷ்டியில் சேர்ந்தவன்தான். எத்தனையோ ஜாக்கிரதையாக இருந்தும் பல ஜோடிச் செருப்புகளை இழந்திருக்கிறேன். அதுவும் அடிக்கடி கூட்டங்களுக்குப் போக வேண்டியிருப்பதனால் இந்தச் செருப்புத் தியாகம் மூன்று மாதத்துக்கு ஒரு முறையாவது நிகழ்வதுண்டு.  ஒரு முறை ராஜபாளையத்துக்குப் போயிருந்தேன். ஒரு கூட்டத்தில் பேச ஒப்புக் கொண்டிருந்தேன். மேடைக்குப் போவதற்கு முன் செருப்பை எங்காவது பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டுமென்று பார்த்தேன். என் எண்ணத்தை அறிந்த செயலாளர், ஓர் இடத்தைக் காட்டி, “இங்கே விடுங்கள்; யாரும் எடுக்கமாட்டார்கள்” என்றார். அவர் காட்டிய இடம் சற்றே ஒதுக்குப்புறமாக இருந்தது; ஒரு ஹாலில் இருந்தது. அங்கே செருப்பை விட்டு விட்டு மேடைக்குச் சென்றேன்.

கூட்டத்தில் நான் மட்டும் பேசினேன். அவைத் தலைவர் ஒருவர் இருந்தார். வரவேற்பு முதல் நன்றியுரை வரையில் எல்லாம் நடைபெற மூன்றுமணி நேரம் ஆயிற்று. கூட்டம் முடிந்தவுடன் செருப்பை விட்ட இடத்துக்குப் போய் அதைப் போட்டுக் கொள்ளலாம் என்று புறப்பட்டேன். “நானே எடுத்துக் கொண்டு வந்து விடுகிறேன்” என்று செயலாளர் போனார். நான் பேசின மேடையின் கீழே இறங்கிவந்து நின்றேன். அது பெரிய கலையரங்கம், போனவர் வரவில்லை. உடனிருந்த அன்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன் ஆனால் என் மனத்தில் செருப்பு ஞாபகமே இருந்தது. கால்மணியாகியும் போன நண்பர் வரவில்லை. “எங்கே, செருப்பை எடுத்துவரப் போனவர் வரவில்லையே” என்று கேட்டேன். அவருடன் சென்ற ஒருவர் வந்து, “இதோ வந்து விடுவார்” என்றார்.

அரை மணி ஆயிற்று. செருப்புத் தொலைந்து போயிற்று என்றே தீர்மானித்துக் கொண்டேன். உடன் இருந்தவர்கள் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். என்னை அழைத்துச் செல்ல வேண்டிய காரையும் காணோம். “அவசரமாகப் பக்கத்தில் போயிருக்கிறார், வந்துவிடுவார்” என்று அன்பர்கள் சொன்னர்கள்.  செருப்புத்தான் காணவில்லை; காருக்கு என்ன வந்து விட்டது?

முக்கால் மணி ஆயிற்று. அப்பாடி செயலாளர் காரில் வந்தார். கையில் ஒர் அட்டைப் பெட்டியுடன் வந்தார். காரிலிருந்து இறங்கி வேகமாக ஓடிவந்தார். “இதைப் போட்டுப் பாருங்கள்” என்று அட்டைப் பெட்டியிலிருந்து ஒரு ஜோடிச் செருப்பை எடுத்து வைத்தார். என் செருப்புக் கெட்டுப் போய்விட்டது. அவர் செருப்புக் கடைக்குப் போய்ப் புதியதாகச் செருப்பை வாங்கி வந்திருக்கிறார்! நல்ல வேளை! அது என் காலுக்குச் சரியாக இருந்தது.

“எதற்காக விலை கொடுத்து இதை வாங்கினீர்கள்?” என்று அன்பரைக் கேட்டேன். நான் கேட்டது வெறும் ஒப்புக்குத்தான். செருப்புப் போய்விட்டதே என்று அந்த முக்கால் மணிநேரம் என் மனம் பட்ட பாடு எனக்குத் தானே தெரியும்?

“நான்தான் மிகவும் பாதுகாப்பான இடம் என்று ஓரிடத்தைக் காட்டினேன். அந்த இடத்துக்கு யாரும் வர மாட்டார்கள், அப்படி வந்தாலும் செருப்பைத் திருடமாட்டார்கள் என்று நினைத்தேன். என் நினைப்பு, பொய்யாகிவிட்டது” என்றார் அவர்.

“இப்படிப் பல இடங்களில் பரதாழ்வார்கள் வந்து என் மிதியடியை எடுத்துப் போயிருக்கிறார்கள்” என்று சொன்னேன். பரதப் பயல்கள் என்று சொல்லியிருப்பேன். அப்படிச் சொன்னால் நரகரிகமாக இராதென்றெண்ணிப் பரதாழ்வார்கள் என்று சொன்னேன்.

கல்யாணம் விசாரிக்கப் போனால் அநேகமாகச் செருப்பு மறைந்து போய்விடும். இப்படிச் செருப்புப் போகாமலிருக்க ஒரு நண்பர் ஒரு வழி சொன்னர். “மகாத்மா காந்தியே இந்த வழியைச் சொல்லியிருக்கிறார்” என்று அவர் அதைச்  சொன்னார். ‘காந்தியடிகள் எப்போது எங்கே சொன்னார்?’ என்று ஆராய நான் முற்படவில்லை. யார் சொன்னால் என்ன? என் செருப்பைத் தொலையாமல் நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அந்த நண்பர் தம் கருத்தையே காந்தி சொன்னதாகப் பொய் சொன்னால்தான் என்ன? அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. “என்ன வழி? சொல்லுங்கள்” என்று கேட்டேன், “கூட்டத்துக்குப் போனால் கையில் ஒரு பையை எடுத்துக்கொண்டு போங்கள். உள்ளே போகும்போது செருப்பைப் பைக்குள் போட்டுக் கொள்ளுங்கள். எங்கே உட்காருகிறீர்களோ, அங்கே அந்தப் பையைக் கீழே போட்டு அதன்மேல் உட்கார்ந்து கொள்ளுங்கள். நீங்கள் செருப்பைப் பைக்குள்ளே வைத்திருப்பது யாருக்கும் தெரியாது. கையில் எடுத்துக்கொண்டு. போனால் உள்ளே கொண்டுபோக முடியாது. ஆகையால் அதை மறைத்துக்கொண்டு போக இப்படி ஒரு வழி சொல்லியிருக்கிறார் காந்தி” என்றார்.

“இதற்கெல்லாம் காந்தியை ஏனையா இழுக்கிறீர்?” என்று சொல்லியிருப்பேன். சொல்லத் துணிவு வரவில்லை. அந்த மனிதர் சொன்ன தந்திரம் நல்லதுதான். ஆனால் கூட்டத்தில் சொற்பொழிவைக் கேட்கப் போகிறவர்கள் அப்படிச் செய்யலாம். மேடையின்மேல் ஏறிப் பேசப் போகிறவர்கள் அப்படிச் செய்யலாமா?

ஒரு முறை இந்தத் தந்திரத்தை மேற்கொண்டேன். கையில் ஒரு பையை எடுத்துக்கொண்டு பேசப் போனேன். மேடைக்குப் போவதற்குமுன் செருப்பைப் பையில போட்டுக்கொண்டு மேடைக்குப் போய் நான் அமரும் நாற்காலிக்கு அருகில் அந்தப் பையை வைத்துக் கொண்டேன். ஏதோ புத்தகம் கொண்டு வந்திருப்பதாக மற்றவர்கள் நினைத்துக் கொள்ளட்டும் என்று நினத்தேன்.  கூட்டத்தில் நானும் மற்றொருவரும் பேசினோம். எங்ககளுக்கு மாலை போட்டார்கள். பேச்சு முடிந்தவுடன் நாங்கள் எழுந்திருந்தோம். அதற்குள் அங்கிருந்த அன்பர் மேஜையின்மேல் நான் கழற்றி வைத்திருந்த மாலையை எடுத்தார். அருகில் கீழே வைத்திருந்த என் பையில் அதை வைக்கலாம் என்று பையை எடுத்திருக்கிறார், நான் வேறு எங்கோ பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தேன். அவர் பையை எடுத்ததைப் பார்க்கவில்லை. அவர் பையைத் திறந்திருக்கிறார், பையில் நான் கழற்றி வைத்திருந்த செருப்பு அவர் கையில் நான் கழற்றி வைத்திருந்த மாலை! அவர் திகைத்திருக்க வேண்டும். “என்ன ஸார் இது” என்று அவர் ஆச்சரியத்தோடு கூவியபோதுதான், அவரைத் திரும்பிப் பார்த்தேன். உண்மை தெரிந்துவிட்டது. “அது கெட்டுப் போகாமல் இருக்க...” என்று நான் சொல்லும் போதே இடிஇடியென்று சிரித்தார். அவருக்குத் தெரியுமா என்னுடைய அநுபவங்கள்? அவர் கையிலிருந்த பையையும் மாலையையும் தனித்தனியே வாங்கிக் கொண்டேன். இனி இந்தப் பைத்தியக்காரத்தனம் செய்யக்கூடாது என்று தீர்மானித்தேன். காந்தி சொன்னால்தான் என்ன? கடவுளே சொன்னல்தான் என்ன? செருப்புக்கு மாலை போடுகிற வேலை நாகரிகமாக இருக்குமா?

என்னுடைய நண்பர் ஒருவரிடம் இப்படி அடிக்கடி செருப்புத் தொலைகிற அனுபவத்தைச் சொல்லிக் கொண்டிருந்தேன். “ஒவ்வொரு தடவையும் இருபத்தைந்து முப்பதென்று பணம் கொடுத்துப் புதுச் செருப்பு வாங்க வேண்டியிருக்கிறது” என்றேன்.

“அதற்காகத்தான் நான் அதிக விலை போட்டுச் செருப்பே வாங்குவதில்லை. ஐந்து ரூபாய்க்குள்ளேதான் வாங்குவேன்” என்றார் அவர்.  “அது நெடுநாள் வராதே!”

“மூன்று நான்கு மாதங்கள் வந்தால் போதாதா? ஒவ்வொரு தடவையும் இருபத்தைந்து ரூபாய் போட்டு வாங்கிப் பறி கொடுப்பதனால் எவ்வளவு கஷ்டம் உண்டாகிறது?”

அவர் சொல்வது நியாயமாகவே பட்டது. அவருடைய உபதேசத்தின் படியே அடுத்த முறை செருப்புத் தொலையும் போது செய்யலாம். ஏன், இப்போதே மலிவுச் செருப்பு ஒன்றை வாங்கி வைத்துவிட்டால் சமயம் வரும்போது உபயோகித்துக் கொள்ளலாம். ஐந்து ரூபாய் தானே? அது ஒரு பிரமாதமா?

அன்று மலிவாக ஐந்தரை ரூபாயில் ஒரு ஜோடி செருப்பு வாங்கினேன். நடுவில் அட்டையை வைத்துத் தைத்திருந்தார்கள். சொல்லி வைத்தாற் போல மறுநாளே நல்ல செருப்புக் கெட்டுப்போயிற்று. ஒரு கல்யாணத்தில் தான் தொலைந்து போயிற்று. ‘நான் இருக்கும்போது நீ வேறு ஒன்றை ஏன் வாங்கினாய்?’ என்ற சக்களத்திக் கோபம் போலும் மறுநாள் அலுவலகம் போகும்போது புதிதாக வாங்கின மலிவுச் செருப்பைப் போட்டுக் கொண்டு போனேன். கனமே இல்லாமல் இருந்தது அது.

அடுத்த நாள் மழை பெய்தது. மழை நின்றபிறகு அலுவலகம் போகிற போது ஈரமான ரோடில் நடந்ததனால் செருப்பு ஈரமாயிற்று. உள்ளே உள்ள அட்டை நனைந்து போகவே செருப்புக் கனமாக இருந்தது. ஒருவிதமாக அலுவலகம் போய்ச் சேர்ந்தேன். மாலையில் வீட்டுக்குத் திரும்பினேன். ஒரு செருப்பின் வார் அறுந்து போயிற்று. ‘காலுக்கு உதவாத செருப்பைக் கழற்றி எறி’ என்ற பழமொழி நினைவுக்கு வந்தது. அந்த்ப் பழமொழி உண்டான காலத்தில் செருப்பின் விலை கால் ரூபாய் அரை ரூபாயாக இருந்திருக்க வேண்டும். அஞ்சும், இருபத்தஞ்சும் போட்டு வாங்கியிருந்தால் கழற்றி எறியத் தோன்றுமா?

வார் அறுந்த செருப்பை எப்படிப் போட்டுக் கொண்டு நடப்பது? கையிலே தூக்கிக் கொண்டு கடப்பதற்கும் அவமானமாக இருந்தது. அருகில் பத்திரிகைகள் விற்கும் கடையிருந்தது. அதுவரையில் செருப்பை எப்படியோ காலிலே இழுத்துக் கொண்டு வந்தேன். காலைப் பத்திரிகைப் பிரதிகள் சில விற்காமலே இருந்தன. நான் ஒரு பத்திரிகையை விலைக்கு வாங்கினேன். கடைக்காரன், “இது காலைப் பத்திரிகை” என்று சொன்னான். நான், “தெரியும் அதுதான் வேண்டும்” என்றேன். அவன் என்னை உற்றுப் பார்த்தான். ‘இப்படியும் ஒரு பைத்தியம் உண்டா?’ என்று பார்த்திருக்க வேண்டும். நான் பத்திரிகையை வாங்கிக் காலில் இருந்த செருப்பை அதில் வைத்துப் பொட்டலம் கட்டிக் கொண்டேன். மடிக்கிறபோது அந்தப் பக்கத்தில் ஒருவர் படம் இருந்தது. என் செருப்பை அவர்மேல் படும்படி வைத்து மடித்தேன். அவரைக் கண்டால் எனக்குப் பிடிக்காது. என் கோபத்தைக் காட்டச் சரியான சந்தர்ப்பம் கிடைத்ததென்று மகிழ்ச்சி அடைந்தேன். பஸ் ஏறி இறங்கி வீட்டுக்குப் போகும் வழியில் ஒரு செருப்புச் செப்பனிடும் தொழிலாளி இருந்தான். அவனிடம் பொட்டலத்திலுள்ள செருப்பை எடுத்துச் சரிபண்ணித் தரச் சொன்னேன். அவன், “என்னங்க ஐயா, இப்படி நனைச்சு வச்சிருக்கிங்களே? இது அட்டைச் செருப்பாச்சே ஒரு தரம் நனஞ்சா இது உபயோகப்படாதே” என்றான். “இந்த வாரை மட்டும் தைத்துக் கொடு; மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றேன்.

அவன் வாரைத் தைத்துத் தந்தான். பத்திரிகைக் காகிதத்தை எறிந்துவிட்டுச் செருப்பைப் போட்டுக்கொண்டு.  கம்பீரமாக நடந்தேன். எங்கள் வீட்டு வாசற்படிக்கு முன் போகும்போது படி தட்டியது. அப்போது ஒரு காற் செருப்பிலுள்ள அட்டை பிதுங்கி வெளியிலே வந்து விட்டது. ஒரு பக்கம் எனக்குக் கோபம். ஒரு பக்கம் திருப்தி. அது பிய்ந்ததனால் கோபம். நல்ல வேளை வீட்டு வாசலுக்கு வந்த பிறகு பிய்ந்ததே என்று திருப்தி.

மலிவுச் செருப்பு வாங்கினால் நமக்கு ஒத்து வராதென்று மறுபடியும் இருபத்தைந்து ரூபாய் போட்டுச் செருப்பு வாங்கினேன். ஒரு நாள் ஒரு வார இதழில் ஒரு குறிப்பு வந்திருந்தது. “செருப்புக் கெட்டுப் போகாமல் இருக்க ஒரு வழி” என்று தலைப்பில் இருந்தது. ஆவலோடு பார்த்தேன். “கல்யாணத்துக்கோ மக்கள் கூடும் கூட்டத்துக்கோ போகும்போது பல சமயங்களில் நம்முடைய செருப்புத் தொலைந்து போகிறது. அப்படித் தொலையாமல் இருக்க ஒருவழி உண்டு. இரண்டு செருப்புக்களையும் ஒரே இடத்தில் போடாமல் தனித்தனியே வேறு வேறு இடத்தில் போட்டால் யாரும் ஒற்றைச் செருப்பை எடுத்துக் கொண்டு போக மாட்டார்கள்” என்று இருந்தது. இது நல்ல யோசனையாகப் பட்டது.

சில நாள் கழித்து ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். செருப்புகள் மலையாகக் குவிந்திருந்தன. பத்திரிகையில் வந்திருந்தபடி செய்துபார்க்க நல்ல சக்தர்ப்பம் கிடைத்ததென்று மகிழ்ந்தேன். அந்தச் செருப்புக் குவியலுக்குச் சற்றுத் தூரத்தில் ஒரு செருப்பை வைத்தேன். மற்றொன்றை வேறு ஓரிடத்தில் வைத்தேன். அப்போது அங்கே ஒரு பையன் இருந்தான். “என்ன ஐயா, ஒற்றைச் செருப்போடு வருகிறீர்கள்?” என்று கேட்டான். “ஒன்று தொலைந்து போய்விட்டது” என்று சொல்லிவிட்டு விறுவிறு என்று உள்ளே போய்விட்டேன். அவன் மேலே ஏதாவது கேள்வி களைக் கேட்கப் போகிறானே என்ற எண்ணம் என் மனத்துக்குள் இந்த முறை செருப்புத் தொலையாத வகையில் பத்திரப்படுத்திவிட்டோம் என்ற திருப்தி இருந்தது. கல்யாணம் விசாரித்துவிட்டு உள்ளே போட்டிருந்த ஒற்றைச் செருப்பைப் பாாத்தேன். அதைக் காணவில்லை. சுற்றியுள்ள இடங்களில் தேடினேன். கிடைக்கவில்லை. மற்றொரு செருப்பை விட்டஇடத்திலே போய்ப் பார்த்தேன். அதையும் காணவில்லை. நிச்சயமாக அந்தப் பையன்தான் இரண்டையும் எடுத்துப் போயிருக்க வேண்டும். அவன் நான் வெவ்வேறு இடங்களில் வைப்பதைக் கவனித்திருக்கிறான். பிறகு எடுத்துக்கொண்டு போயிருக்கிறான்.

அவனுக்கு இந்தச் செருப்புக் காலுக்குச் சரியாக இருக்குமா? அவன்தான் அதைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்பது என்ன? யாருக்காவது விற்றுவிடுகிறான். அவன் என்ன, செருப்பைப் பணம் கொடுத்து விலைக்கா வாங்கினான்? நாலு ரூபா அஞ்சு ரூபாய்க்கு விற்றுவிடுகிறான்; கிடைத்த வரைக்கும் லாபம்!

செருப்பைத் தொலைக்காமல் இருக்க நானறிந்த இந்தக் தந்திரமும் பலிக்கவில்லை. செருப்புப் போடாமலே இருந்து விட்டால் காலஞ்சென்ற எழுத்தாளர் ரா. ஸ்ரீ தேசிகன் செருப்பே போடுவதில்லை. திருமுருக கிருபானந்த வாரியாரவர்கள் செருப்புப் போட்டு நான் பார்த்ததில்லை. நானும் அப்படியே இருந்துவிட்டால் என்ன? நான் தீா்மானம் பண்ணினால் போதுமா? இவ்வளவு காலம் செருப்பைப் போட்டு நடந்து வந்த என் காலையல்லவா கேட்க வேண்டும்?

‘கற்றோர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு’ என்று ஒரு பாட்டு உண்டு. அதை என்னிடமே பல அன்பர்கள் சொல்வதுண்டு. இனிமேல் அப்படி யாராவது சொன்னால் 

நான் அதற்குப் பதிலாக ஒரு வெண்பாவைச் சொல்லலாம் என்று எண்ணியிருக்கிறேன்.

கூட்டம் நடக்கும் இடம்,
கோயில், மணநிகழ்ச்சி,
ஆட்டம் இசைநிகழும்
அவ்விடங்கள்—வாட்டமுற்றுக்
கன்றிநையக் காணாமல்
போகுமே,கற்றோர்க்குச்
சென்றஇடம் எல்லாம் செருப்பு!