புது டயரி/டிரிங் டிரிங்



டிரிங் டிரிங்!

அன்று அந்த நண்பர் வந்திருக்கிறாரா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள வழியில்லை. அவரைப் பார்க்க வேண்டியது அவசியமாக இருந்தது. நேரே போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்று டாக்ஸியில் ஏறிக்கொண்டு போனேன். அவர் வரவில்லை. அவர் வந்து தங்கும் இடம் ஒரு டாக்டர் வீடு. டாக்டரிடம் அவர் வந்தாரா என்று கேட்டபோது, “அவர் எங்கே ஸார், சொன்னபடி வருகிறார்? நீங்கள் மயிலாப்பூரிலிருந்து வீணாக வந்து அலைவது தான் மிச்சம். டெலிபோன் பண்ணிக் கேட்டிருந்தால் நான் சொல்லியிருப்பேனே! பாவம் உங்களுக்கு வீண் அலைச்சல்” என்றார்.

“டெலிபோன் இருக்கிற இடம் தேடிப்போய்ப் பேச வேண்டுமே!” என்று முணுமுணுத்தேன்.

வேறு ஒரு சமயம், அவசரமாக ரெயிலுக்குப் போக வேண்டியிருந்தது. ஏதோ ஒன்றை எழுதிக் கொண்டிருந்தேன். அதை ஒரேயடியாக முடித்து விடவேண்டும் என்று தோன்றியது. அதை முடிப்பதாக இருந்தால் ரெயிலுக்குப் போக முடியாது. எங்கும் மழை பெய்து பல இடங்களில் உடைப்பு எடுத்திருந்ததனால் சரியான நேரத்தில் ரெயில்கள் புறப்படுவதில்லை, வருவதில்லை என்று பத்திரிகையில் பார்த்தேன். அப்படியானல் நான் புறப் பட வேண்டிய வண்டியும் தாமதமாகப் புறப்படுமா? எத்தனை மணி கழித்துப் புறப்படும் ஒன்றும் தெரியவில்லை. யாரையாவது போய்க் கேட்டுவரச் சொல்லலாம் என்றால், எழும்பூர் ரெயில்வே ஸ்டேஷன் பக்கத்திலேயா இருக்கிறது? ஆறு மைல் போக வேண்டும். எழுதினதைப் பாதியில் நிறுத்திவிட்டுப் பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டேன். அங்கே போனால், இரண்டு மணி கழித்தே ரெயில் புறப்படும் என்று தெரிந்தது. பிளாட்பாரத்தையே என் அறையாக்கிக்கொண்டு எழுத உட்கார முடியுமா? இது வீட்டிலேயே தெரிந்திருந்தால் எழுதி முடித்துக்கொண்டு வந்திருக்கலாமே என்று தோன்றியது. வீட்டிலே தெரிந்திருந்தால்தானே?

‘டெலிபோன் இருந்தால் ரெயில் புறப்படும் நேரத்தைத் திட்டமாகத் தெரிந்து கொள்ளலாம்’ என்று ஒரு நினைவு வந்தது.

இப்படி எத்தனையோ சமயங்களில் டெலிபோன் இல்லாக் குறை பெருங்குறையென்று தோன்றலாயிற்று. டெலிபோன் இருந்தால் இருந்த இடத்திலிருந்தே நண்பர்களுடன் பேசலாம். அவசரமாக அச்சேறும் புத்தகத்தில் இன்ன பிழையைத் திருத்த வேண்டுமென்று போனிலே சொல்லலாம். மிகவும் அவசரமாக இருந்தால் வெளியூரில் உள்ள நண்பர்களுடன் டிரங்க் டெலிபோனில் பேசலாம். இப்படி நூற்றுக்கு மேற்பட்ட அநுகூலங்கள் டெலிபோனால் கிடைத்துவிடும் என்பதை எண்ணிப் பார்த்தேன். டெலிபோன் இல்லாமல் வாழ்நாளை விணாக்குவதாகவே பட்டது. அலைச்சல், பணச்செலவு, வீண் காலம் போக்குதல், நினைத்ததைச் செய்யமுடியாத சங்கடம் இத்தனை இடையூறுகளும் டெலிபோன் என்னும் ஒரே வரத்தால் போய்விடும் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.  “டெலிபோன் வேண்டும்; நான் பொதுநல வேலைகளில் ஈடுபட்டவன். சொற்பொழிவாற்றுபவன்” என்று என் பிரதாபங்களையெல்லாம் எழுதி விண்ணப்பம் செய்து கொண்டேன். நான் எழுதியவற்றை ஒப்புக்கொண்டு எனக்கு ஒரு டெலிபோன் கொடுத்துவிட்டார்கள்.

டெலிபோன் என் வீட்டுக்கு வந்த அன்று ஏதோ ஒரு தேவதையே பிரசன்னமானது போன்ற உற்சாகம் எனக்கு. ஒரு பெருமிதம்; இனிமேல் உலகம் அத்தனையோடும் தொடர்பு வைத்துக்கொண்டு விடலாம் என்று ஒரு கற்பனை. முதல் நாள் டைரெக்டரியைப் பார்த்துப் பார்த்து எனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் பேசினேன். எனக்கு டெலிபோன் வந்துவிட்டதை வலியச் சொன்னேன். “நல்ல காரியம்; இனி எனக்கும் அலைச்சல் குறைவு” என்று சிலர் சொன்னார்கள். “இத்தனே நாள் வைத்துக் கொள்ளாதது பெரிய தப்பு” என்று நெருங்கிய நண்பர் ஒருவர் செல்லமாகக் கடிந்து கொண்டார்.

எங்கேயாவது வெளியிலே கூட்டங்களுக்குப்போவேன். யாராவது, “உங்களைப் பார்க்கவேண்டும், பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன்; ஒழியவே இல்லே. எப்போது வந்தால் செளகரியமாக இருக்கும்?” என்பார். நீங்கள் வந்து அலைய வேண்டிய அவசியமில்லை. டெலிபோனிலே பேசலாம்; எனக்கு டெலிபோன் இருக்கிறது” என்று சொல்லி டெலிபோன் எண்ணையும் சொல்வேன்.

எங்காவது டெலிபோன் உள்ள இடத்துக்குப் போனால், “கொஞ்சம் டெலிபோனில் பேசலாமா?” என்று கேட்பேன்; “தாராளமாகப்பேசுங்கள்” என்பார்கள். நான் என் வீட்டுக்கு டெலிபோன் பண்ணுவேன், என் மனைவி, “ஹலோ” என்று மெல்லிய குரலில் பேசுவாள். “யாராவது வந்தார்களா? டெலிபோன் ஏதாவது வந்ததா?” என்று கேட்பேன். அவள் சிரித்துக் கொண்டே, “ஒன்றும் இல்லை” என்பாள்.

நான் இல்லாதபோது டெலிபோன் மணி அடித்தால் குழந்தைகள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு ஒடிப் போய் டெலிபோனை எடுப்பார்களாம். கடைசிப் பையன் எடுத்தால் பள்ளிக்கூடத்தில் ஒப்பிப்பது போல, “ஜே. முருகன்” என்று சொல்வான். இந்தத் தொந்தரவு தாங்காமல் என் மனைவி, “நீங்கள் போகும்போது உங்கள் அறையைப் பூட்டிக்கொண்டு போய்விடுங்கள். இந்தக் குரங்குகள் பண்ணுகிற குறும்புகள் என்னால் பொறுக்க முடியவில்லை. ஒரே ரகளையாக இருக்கிறது” என்றாள்.

ஒரு நாள் பூட்டிக்கொண்டு போனேன். வெளியிலிருந்து வந்தேனோ இல்லையோ, என் மனைவி சண்டையிடத் தொடங்கிவிட்டாள். “டெலிபோன் மணி லபோ லபோ என்று அடித்துக் கொண்டிருக்கிறது. யார் கூப்பிட்டார்களோ, தெரியவில்லை. நீங்கள் அறையைப் பூட்டிக் கொண்டு போய்விட்டீர்கள். டெலிபோன் இருந்து என்ன பிரயோசனம்?” என்று இரைந்தாள்.

“நீதானே, இந்த வால்கள் சும்மா இருப்பதில்லை, ஆகையால் பூட்டிக்கொண்டு போங்கள் என்று சொன்னாய்?” என்று கேட்டேன்.

“ஏதோ வார்த்தைக்குச் சொன்னால் நீங்கள் இப்படியா செய்வது? எதிர்வீட்டுப் பெண் யாருடனோ பேசவேண்டு மென்று படியேறி வந்தாள்; ஒரு நாளும் வராதவள் வந்த போது கதவு பூட்டியிருக்கிறது என்று சொல்லி அனுப்பி விட்டேன்; அப்போது எவ்வளவு அவமானமாக இருந்தது தெரியுமா?”

அப்போதுதான் அவள் கோபத்துக்குக் காரணத்தைத் தெரிந்துகொண்டேன். பூட்டுவதை விட்டுவிட்டேன். இப்போதும் யாரிடம் பேசினாலும் எனக்கு டெலிபோன் இருக்கிறதென்றும் எப்போது வேண்டுமானலும் பேசலாமென்றும் சொல்லி வைத்தேன். எத்தனையோ அலைச்சலை மிச்சப்படுத்திக் கொண்டதாகவே எண்ணினேன்.

எனக்கு டெலிபோன் இருப்பதை அன்பர்கள் அறிந்து கொண்டார்கள்; அடிக்கடி கூப்பிட்டார்கள். சாப்பிட்டுக் கொண்டிருப்பேன்; அப்போது டிரிங் டிரிங் என்று மணி அடிக்கும். குழந்தைகள் ஒடுவார்கள்; டெலிபோனை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டு, “அப்பா, அப்பா!” என்று கத்துவார்கள். “யாரோ கூப்பிடுகிறார்கள்; சீக்கிரம் சாப்பிட்டு வா” என்று கூவுவார்கள். டெலிபோனில் கூப்பிட்டவர் அந்தக் கூப்பாட்டைக் கேட்டிருப்பார்; அவர் சிரித்திருப்பார். அவசர அவசரமாகச் சாப்பிட்டு வந்து பேசுவேன்; ஒன்றும் இராது; ஏதோ தப்பு எண்ணாக இருக்கும்!

மத்தியான்ன வேளையில் அலுப்பாகக் கொஞ்சம் படுத்துக்கொள்ளலாம் எனறு கட்டையைக் கிடத்துவேன். அப்போது பார்த்து, ‘டிரிங், டிரிங்’ என்று அடிக்கும். இந்தச் சனியன ஏண்டா வைத்தோம்” என்று தோன்றும். டெலிபோனை எடுத்து வைத்துவிட்டுக் கொஞ்ச நேரம் படுத்திருக்கலாம் என்று எண்ணுவேன். கழுத்தைத் திருகிப் போட்டால் பேச்சு வராது அல்லவா? அது போலத் தான் ‘ரிஸீவரை’ எடுத்துக் கீழே வைப்பேன். அரைமணி கழித்துப் பழையபடி வைத்துவிட்டால் ஓர் அன்பர் குறை கூறுவார். “அதென்ன ஸார், மணிக்கணக்காகக் கூப்பிடுகிறேன்; உங்கள் டெலிபோன் எப்போதும் இயங்கிய வண்ணமாகவே இருக்கிறது” என்பார். அவர் சொல்வது முக்கியமான சமாசாரமாக, உடனே புறப்பட்டுப் போக வேண்டிய காரியமாக இருக்கும். முன்பே தெரிந்திருந்தால்  நிதானமாகப் போகலாமே!’ என்று வருந்துவேன். அது யார் தவறு?

ஏதாவது சுவாரசியமாக எழுதிக்கொண்டிருப்பேன். எதையாவது எழுதினால் ஒரேயடியில் எழுதி முடித்தால் தான் எனக்கு ஒடும். நடுவிலே நிறுத்தினால் முன்பு எழுதியதைக் கிழித்துப் போட்டுவிட்டுப் புதிதாகத்தான் எழுதுவேன். இப்படியே வழக்கமாகி விட்டது. பாதி எழுதிக் கொண்டிருக்கும்போது ‘டிரிங், டிரிங்’ அடித்தால் கவனிக்க மாட்டேன். கூப்பிடுகிறவர் விடாக்கண்டராக இருந்து விட்டால் ஆபத்துத்தான். டெலிபோன் வைத்த புதிதில் வீணாகானமாக ஒலித்த அந்த மணி இப்போது நாராசமாக இருக்கும். பல்லைக் கடித்துக்கொண்டு எடுத்து, “யார்?” என்று கேட்பேன். கல்கத்தாவிலிருந்து வந்திருக்கும் நெருங்கிய நண்பர், தம் குடும்ப சமாசாரத்தைச் சொல்வார்; எப்போது வந்து பார்க்கலாம் என்று கேட்பார். என் கோபம் மாறிவிடும். அவர் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவராக இருப்பார். பேசி முடித்துவிட்டு மீண்டும் தொடர்ந்து எழுதத் தொடங்கினால் மூளை ‘பிரேக்’ போட்டது போல நின்றுவிடும்.

எங்கள் எதிர் வீட்டில் ஒரு பெரிய கம்பெனி மானேஜர் இருக்கிறார். அவருக்கு இன்னும் டெலிபோன் வரவில்லை. அவருடைய மனைவி இளம் பெண். அவளுக்குப் பல தோழிமார்கள். அந்தப் பெண்மணி கையில் பதினைந்து நயா பைசாவை வைத்துக்கொண்டு வருவாள். அவள் வரும் போதே என் மனைவி அவளை எதிர்கொண்டு அழைப்பாள். பெரிய வேலைக்காரர் மனைவி எளிதில் வந்து விடுபவளா? டெலிபோனைச் சாக்கிட்டாவது வருகிறாளே என்று என் மனைவிக்கு மகிழ்ச்சி. “காசு கீசு வேண்டாம்” என்பாள் அவள். அந்தப் பெண்மணி கேட்கமாட்டாள்.

“கொஞ்சம் இந்தப் பக்கம் வருகிறீர்களா?” என்று என் மனைவி என்னிடம் வந்து மெல்லச் சொல்வாள். எதிர் வீட்டு மங்கை டெலிபோனில் பேசவேண்டும்மே; அதற்காகத்தான். நான் எதையாவது ஆழ்ந்து படித்திக் கொண்டிருப்பேன்; அல்லது எழுதிக் கொண்டிருப்பேன். அப்போது இந்த இடையீடு. நாகரிக மங்கைக்கு உதவி செய்வது ஆண்மைக்கு அழகல்லவா? அதோடு என் வீட்டு ராணியின் பலத்தோடு புகும்போது நான் மறுக்க முடியுமா? பேசாமல் எழுந்து கூடத்துக்குச் செல்வேன். டெலிபோனை என் மேஜையின்மீது பொருத்தியது தவறோ என்று ஆராய்வேன். அந்தப் பெண்மணி ஒரு நிமிஷமும் பேசுவாள்; பத்து நிமிஷமும் பேசுவாள். அது யாருடன் பேசுகிறாளோ, அதைப் பொறுத்தது. பழைய கல்லூரித் தோழியாக இருந்து விட்டாலோ கேட்க வேண்டாம்; தமிழ் பாதி, இங்கிலீஷ் பாதி, சிரிப்புப் பாதி, கொஞ்சலான மிரட்டல் பாதி. இப்படியாக இருபது நிமிஷம் அந்த நிகழ்ச்சி நிகழும்.

எங்கள் பக்கத்து வீட்டில் என் நெருங்கிய நண்பர் இருக்கிறார், அவருக்குச் சென்னையில் உறவினர்கள் அதிகம். அவர்கள் அதிகமாக அங்கெல்லாம் போவதில்லை. அதற்கும் சேர்த்து அவருடைய தாயாரும் மனைவியும் போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வருவார்கள். அவர்களில் இரண்டு பேர் வீட்டில் டெலிபோன் இருந்தது. அந்த வீடுகளில் யாருக்காவது ஜலதோஷம் பிடித்தாலும் போதும்; என் டெலிபோனுக்குத் தலைவலி வந்து வடும்.

டிரிங், டிரிங்.. டக்... “யாரது?”

“கொஞ்சம் பக்கத்துவிட்டு அத்தையைக் கூப்பிடுகிறீர்களா?” என்று ஒரு பெண் குரல் கேட்கும். நான் ஜன்னல் வழியாகப் பக்கத்து வீட்டுக்காரரைக் கூப்பிட்டுச் செய்தி சொல்வேன். அந்த அத்தை வந்து பேசுவாள்; அவள் மருமகள் வந்து பேசுவாள். அரைமணி என் வேலை கெட்டு விடும். இந்தத் தொந்தரவுகளையாவது சகித்துக் கொள்ளலாம். வேறு ஒருவகைத் தொல்லையை எண்ணும்போது தான் எரிச்சல் எரிச்சலாக வருகிறது. அவசர அவசரமாக ஒருவர் கூப்பிடுவார். அவருக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இராது. அவர் டெலிபோன் வழியாகப் பேசத் தெரிந்தவர்; நான் டெலிபோன் வசதி உள்ளவன்; அவ்வளவுதான். அவர், “ஸார், ஸார், ஓர் உபகாரம்: என்னை மன்னித்துக் கொள்ளவேண்டும்; அந்த நாலாந் தெருவிலுள்ள... அவரைத் தயை செய்து கூப்பிடவேண்டும். ஒரு முக்கியமான சமாசாரம். உங்களுக்குத் தொந்தரவு கொடுக்கிறதற்கு வருந்துகிறேன். யாரையாவது அனுப்பி அவரை அழைத்துவரச் சொல்லுங்கள். பெரிய உபகாரம் என்று கெஞ்சுவார். மனிதர் ஏதோ சங்கடத்தில் மாட்டிக் கொண்டிருப்பார் என்று தோன்றும், பையனை விட்டு அவரை அழைத்துக் கொண்டு வரச் சொல்வேன். அவர் வந்து பேசுவார். இன்னும் ஒரு வாரம் கழித்து எங்கோ போவதாக ஏற்பாடானதை, இரண்டு நாள் தள்ளிப் போட்டிருப்பதாகச் சொல்லுவார், அவசரப்பட்ட ஆசாமி. இதற்குத்தான் இத்தனை கெஞ்சல், இத்தனை கொஞ்சல்!

மணி இரவு பதினென்று; டிரிங் டிரிங் கேட்கும்; நான் எடுக்க மாட்டேன்; என் மனைவி எடுத்துக் கேட்பாள், “பாவம்! யாருக்கோ உடம்பு சரியில்லையாம்” என்று என்னிடம் இரக்கத்தோடு சொல்வாள், “இது டாக்டர் வீடு அல்லவே!” என்று நான் சொல்வேன். “அவர்களுக்கு யாரோ இங்கிருந்து வரவேண்டுமாம்” என்று அவள் கூறுவாள். “நீ போகப் போகிறாயா?” என்று கிண்டல் பண்ணுவேன், “நன்றாயிருக்கிறது நீங்கள் பேசுவது! ஆபத்து ஸம்பத்து என்பது எல்லோருக்கும் உள்ளது தானே? மனிதர்களுக்கு மனிதர் உபகாரம் பண்ணாவிட்டால்...” “சொல்லுங்கள்... நாலாந்தெருவா?... ராமகிருஷ்ணனா... அத்தையா... ருக்மிணி அம்மாளா?... வரச்சொல்கிறேன்” என்று அவளே பேசி முடித்து விடுவாள். அவசர அவசரமாகப் பையனை எழுப்பி அந்த நள்ளிரவில் நாலாந்தெருவில் உள்ள ருக்மிணியம்மாளை உடனே மண்ணடிக்குப் போகும்படி .சொல்லி அனுப்புவாள்.

பகல் பதினோரு மணி. பையன்கள் பள்ளிக்கூடம் போய் விட்டார்கள், வீட்டில் நான் மட்டும் தனியாக இருந்தேன். டெலிபோனில் யாரோ கூப்பிட்டார்கள். யாரோ ஒருவர் விம்மினபடியே பேசினார். “ஸார், ஸார். அந்த ஐந்தாங் தெருவில் என் தம்பி...... இருக்கிறான், அம்மா செத்துப் போய்விட்டாள் என்று சொல்லி உடனே வரச் சொல்லுங்கள்.” — அவர் அழுதுகொண்டே சொன்னார். ஐந்து தெருத் தாண்டிச் சமாசாரம் சொல்ல யார் ஆள்? ஆள் இல்லை என்று சொல்லுகிற செய்தியா அது அந்த அம்மாள் காலை வேளையிலே செத்துப் போயிருக்கக் கூடாது? அப்போது எங்கள் பையன்களில் ஒருவனிடம் சொல்லி அனுப்பலாமே!

இப்போது வேறு என்ன செய்கிறது? ரிஸீவரைத் தனியே வைத்துவிட்டு, பனியனோடு வேகமாகப் போனேன். ஐந்தாங் தெருவுக்குப் போய்ச் சமாசாரம் சொன்னேன். நல்ல சமாசாரம் அல்லவா? அந்த மனிதர் வந்தார். அந்தக் கண்ணராவியில் நான் அலைந்தது கூட மறந்து போய் விட்டது.

வேலை கெடுகிறது; தூக்கம் கெடுகிறது; சம்பளம் இல்லாத வேலைக்காரனாக உழைக்க வேண்டியிருக்கிறது! இத்தனை தொல்லைகளையும் பொறுத்துக் கொண்டு அந்த டெலிபோனை வைத்திருப்பானேன் என்று பல சமயங்களில் தோன்றுகிறது. ஆனாலும்....

டிாிங்.. டிாிங்...

டெலிபோன்தான்; பேசிவிட்டு வருகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=புது_டயரி/டிரிங்_டிரிங்&oldid=1534722" இலிருந்து மீள்விக்கப்பட்டது