புது டயரி/தலையசைத்தால் போதும்!
கலைகள் யாரால் வளருகின்றன? இந்தக் கேள்விக்கு இரண்டு வகையான விடைகள் உண்டு. கலைஞரால் கலைகள் வளருகின்றன என்பது ஒரு விடை, ரசிகர்களால் கலைகள் வளருகின்றன என்பது மற்றொரு விடை, இரண்டும் சரி தான்.ஆனால் யாருடைய பங்கு அதிகம்? இந்தக் கேள்விக்கு யோசிக்காமல் உடனே பதில் சொல்ல முடியாது. தாயும் தங்தையும் வளர்ப்பதனால் குழந்தை வளர்கிறது. தாயின் பங்கு அதிகமா, தந்தையின் பங்கு அதிகமா? என்று கேட்டால் என்ன சொல்வது? அது போன்றதுதான் அந்தக் கேள்வியும்.
அந்த உவமையைவிட வேறு ஒர் உவமையைச் சொல்கிறேன். ஒரு பெண்ணைப் பெற்றோர் வளர்க்கிறார்கள்; அருமையாக வளர்க்கிறார்கள். பிறகு ஒரு நல்ல மாப்பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறார்கள். பெண்ணின் வாழ்க்கையின் ஆரம்பப் பகுதி பெற்றோர்களால் வளம் பெறுகிறது; ஆனால் அதோடு நின்றுவிட்டால் போதாது. அந்தப் பெண்ணின் வாழ்வு முழுமை பெறுவது அவளுடைய கணவனால்தான். கலைஞனைக் கலையின் தகப்பனாகக் கொண்டால் ரசிகனாகக் கலையின் மணவாளனாகக் கொள்ளலாம். கலை என்ற பெண் முழுமை பெறவேண்டுமானால் ரசிகன் வேண்டும். கலையை அநுபவிக்க ஆள் இல்லாவிட்டால் கலைஞன் கலையை உற்பத்தி செய்ய முந்துவானா? அப்படியானால் கலை முழுமைபெற ரசிகர்களின் ஆதரவு மிகுதியாக வளர்ந்து வரவேண்டும் என்று தெரிகிறது.
இதை நான் ஏதோ புதியதாகச் சொல்லி விடவில்லை. கலைஞர்களே தங்கள் கலை வளர்ச்சிக்குக் காரணம் ரசிகர்கள் என்பதை உணர்ந்து சொல்லியிருக்கிறார்கள்.
பேச்சுக் கலையில் வல்லவர் ஒருவர் இருக்கிறார். அவர் பேச்சைக் கேட்க ஆள் இல்லாவிட்டால் அவருக்கு உற்சாகம் உண்டாகுமா? கேட்கிற ஆள் வெறும் ஆளாக இருந்தால் பயன் இல்லை; கேட்டுச் சுவைக்கும் ரசிகனாக இருக்கவேண்டும். அப்போது பேசுகிறவனுடைய கலை வளரும். இதைத் திருவள்ளுவர் சொல்கிறார்.
‘ஒரு பாத்தியில் செடி வளர்கிறது; மழை பெய்வதனால் தானே வளருகிறது. அந்தச் செடிக்குத் தண்ணீரும் விட்டால் அது எப்படிச் செழித்து வளரும்? அதுபோலத் தான், சொல்வதை உணர்ந்து சுவைப்பவர்களின் முன்னலே ஒன்றைச் சொன்னால் அது வளரும் என்கிறார் அவர்.
- “உணர்வது உடையார்முற்
- சொல்லல், வளர்வதன்
- பாத்தியுள் நீர்சொரிங் தற்று.”
கேட்கிறவர்கள் எல்லாரும் ரசிகர்களாக இருப்பதில்லை. தரம் அறிந்து ரசிப்பவர்கள், கூட்டத்தில் சிலரே இருப்பார் கள். அவர்களுக்காகவே கலைஞன் தன் கலை நுட்பத்தைக் காட்டுவான். வெறும் ஜடமாக இருப்பவர்கள்முன் பாடவோ, பேசவோ நேர்ந்துவிட்டால் அதைவிட நரகம் கலைஞருக்கு வேறு இல்லை. அதனால்தான் ஒரு வடமொழிக் கவிஞர் பாடினர்; ‘எ பிரம்மாவே, என் தலையில் எதை வேண்டுமானாலும் எழுது. ஆனால் ரசிகன் அல்லாதவனிடத்தில் என் கவியைப் பாடும்படியான துர்ப்பாக்கியம் எனக்கு உண்டாகும்படி எழுதாதே, எழுதாதே, எழுதாதே’ என்கிறார். ‘அரளிகேஷு— கவித்வநிவேதனம் சிரஸி மாலிக! மாலிக! மாலிக!’ என்பது அந்தச் சுலோகப் பகுதி. ‘எழுதாதே, எழுதாதே, எழுதாதே,என்று மூன்றுதடவை சொல்லும்போது அந்தக் கவிஞருடைய உள்ளக் குமுறல் எவ்வளவு இருக்கும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ளலாம்.
சுவையுள்ளது, சுவையில்லாதது என்று தரம் பார்ப்பதைச் சங்க காலத்து நூல்களில் ‘வரிசை அறிதல்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘வரிசை அறிந்து பாராட்டுவார் யாராவது இருக்கிறார்களா?’ என்று புலவர்கள் ஏங்கியிருப்பார்களாம். “வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை” என்று ஒரு புலவர் சொல்கிறார்.
ஒரு கற்பனைக் கதை இங்கே நினைவுக்கு வருகிறது. தங்கம் தன்னைப் படைத்த பிரம தேவனிடம் சென்று குலுங்கிக் குலுங்கி அழுததாம். உலகத்தைப் படைத்தவன் அதைப் பார்த்து, “தங்கம்மா, பொன்னம்மா, ஏன் அம்மா இப்படி அழுகிறாய்?” என்று கேட்டான்.
தங்கம், “என்னையும் படைத்து அந்தத் தட்டானையும் படைத்தாயே! அதனால் அழுகிறேன்” என்று சொல்லியது.
“ஏன் உனக்கு அவன்மேல் கோபம்? உன்னை அவன் நெருப்பில் இட்டு உருக்குகிறானே; அதனால் வருத்தமா!”
“இல்லை. அப்படிச் செய்வதனால் நான் மாசு நீங்கி ஒளிர்கிறேன்.” “அப்படியானால் அவன் பட்டறையில் வைத்துத் தகடாகத் தட்டுகிறானே; அதனால் உனக்கு வேதனை உண்டாகிறதா?”
“இல்லை, இல்லை. தகடாக மாறி இறைவனுக்கே கவசமாகிவிடுகிறேன்.”
“பின்னே அவன் பெரிய துளையிலிருந்து சிறிய துளையிலிட்டுக் கம்பியாக இழுக்கிறானே; அப்போது உன் உடல் நலிந்து நைந்து துன்புறுகிறாயோ?”
“இல்லை, இல்லை; நல்லவர்களையெல்லாம் தங்கக் கம்பி என்று என்னை உபமானமாகச் சொல்லும்படி ஆகிறேன். ஆகையால் அதனாலும் வருத்தம் இல்லை.”
“இவ்வளவினாலும் உனக்கு வருத்தம் இல்லையென்றால், நீ புலம்புவதற்குக் காரணம் இல்லையே! எதை நினைந்து அழுகிறாய்?” என்று ஏறெடுத்துப் பார்த்து நான்முகன் கேட்டான்.
“அந்தப் படுபாவி என்னை நிறுக்கும்போது தராசில் என்னை ஒரு தட்டில் வைத்து, எனக்குச் சமானமாக மற்றொரு தட்டில் குன்றி மணியை வைத்து நிறுக்கிறானே; அந்த அவமானத்தை என்னால் தாங்க முடிய வில்லையே!” என்று மறுபடியும் அந்தத் தங்கம் புலம்பியதாம்.
வரிசை அறியாப் பேதைமையை அழகாகக் கற்பனை செய்து வடமொழிக் கவிஞர் ஒருவர் இப்படிப் பாடியிருக்கிறார்.
சொற்பொழிவு செய்கிறவர்களுக்கு ஓர் அநுபவம் உண்டாவது இயல்பு. நன்றாகக் கேட்டு ரசிப்பவர்கள் கூட்டமாக இருந்தால், நம்மை அறியாமலே புதிய புதிய கருத்துக்களும் சுவையான உவமைகளும் புங்கானுபுங்க மாக வரும். பேச்சு முடிந்த பிறகு, நாமா இப்படிப் பேசினோம் என்ற வியப்புணர்ச்சி நமக்கே எழும். ரசிகர்கள் அல்லாத கூட்டத்தில் இந்த உணர்ச்சி உண்டாவதில்லை. ஏதோ பேசி முடித்தோம் என்ற அளவிலே திருப்திப்பட வேண்டியிருக்கும்.
என்னுடைய ஆசிரியப் பிரானாகிய ஐயரவர்கள் சொல்வார்கள்: “பேசும்போது கூட்டத்தில் முன் வரிசையில் ரசிப்பவர்கள் இருந்து அவ்வப்போது தம்முடைய முகக் குறிப்பால் மகிழ்ச்சியைக் காட்டினால், சுவாரசியமாகப் பேசவரும். சில பேர்வழிகள் இருக்கிறார்கள்; அவர்கள் முன் வரிசையில் உட்கார்ந்திருப்பார்கள். நாம் ஏதாவது பேசினால் அதை ரசிக்கமாட்டார்கள். “நம்மைப் பேசவிட்டால் இதைவிட அழகாகப் பேசலாமே!” என்று எண்ணிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் முகத்தைப் பார்த்தாலே அவர் உள்ளத்திலே ஓடும் எண்ண ஓட்டம் தெரியும். அந்த விளக்கெண்ணெய் தடவிய முகத்தைப் பார்த்துவிட்டால் நமக்கு இருக்கும் உற்சாகமே குறைந்து போகும். அடிக்கொருதரம் எடுத்துச் சொல்லும் மேற்கோள் பாட்டுக்கூடச் சொல்ல வராது. அந்த மகானு பாவர்களுடைய சந்நிதான விசேஷம் அது என்பார்கள். இது எத்தனை துாரம் அநுபவத்கோடு ஒத்தது என்பதைப் பேச்சாளர்கள் உணர்வார்கள்.
அரியலூர் ஜமீன்தாராகக் கச்சிரங்கன் என்பவர் இருந்தார். அவர் பரம ரசிகர். இசையையும் தமிழையும் தரமறிந்து ரசித்துப் பராட்டுகிறவர். அந்தக் காலத்தில் அரியலூரைச் சுற்றிக் காடாக இருக்கும். எளிதில் அந்த ஊருக்குப் போக முடியாது. என்றாலும் புலவர்கள் கச்சிரங்கனிடம் சென்று தம் புலமையைக் காட்டிப் பரிசு பெற்று வருவார்கள். அந்த ஜமீனில் அவைக்களப் புலவர் ஒருவர் இருந்தார். அவரிடம் வேற்றுார்ப் புலவர்கள், “இங்கே ஏன் இருக்கிறீர்கள்? வேறு இடங்களுக்குப் போனால் உங்களுக்கு நிறையப் பரிசு கிடைக்குமே!” என்று சொன்னார்களாம். அதைக் கேட்டு அந்த அவைக்களப் புலவர், “நயம் அறிந்து தரம் அறிந்து எங்கள் ஜமீன்தார் தலையை அசைக்கிறாரே, அதைவிடவா பெரிய பரிசு வேண்டும்?” என்றாராம். அந்தக் கருத்தைப் பாட்டாகவே பாடி விட்டார். பாட்டு முழுவதும் கிடைக்கவில்லை “கச்சிரங் கேத்ரன் சிரக்கம்பம் போதும் இக் காசினிக்கே!” என்பது கடைசி அடி. அதில்தானே பாட்டின் உயிரே இருக்கிறது?
உடையார்பாளையமும் காட்டுக்கு நடுவே இருக்த ஊர். அங்கே இருந்த ஜமீன்தார்களில் யுவரங்கர் என்பவர் ஒருவர். அவரே கவிஞர். வடமொழி, தென் மொழி வல்லவர்களையும் சங்கீத வித்துவான்களையும் ஆதரித்து வந்தார். நயமறிந்து பாராட்டிப் பரிசளிப்பார். அவருடைய அவைக்களப் புலவராக அனந்தகிருஷ்ண சாஸ்திரிகள் என்ற வடமொழிக் கவிஞர் ஒருவர் இருந்தார். யுவரங்கர் அவரை மிகவும் மதிப்புடன் ஆதரித்து வந்தார்.
அவ்வப்போது பல இடங்களிலிருந்து இசைப் புலவர்களும் வடமொழிப் புலவர்களும் தமிழ்க் கவிஞர்களும் வந்து யுவரங்கருடன் பழகி அவருடைய உபசாரத்தையும் பரிசையும் பெற்றுச் செல்வார்கள். கொடுக்கும் பரிசு சிறிதானாலும் யுவரங்கர் ரசிக சிகாமணியாக இருந்தமையால் புலவர்களுக்கு அவரைக் கண்டு பழகுவதில் அதிக இன்பம் உண்டாயிற்று.
ஒரு முறை மைசூரிலிருந்து ஒரு வடமொழிக் கவிஞர் உடையார் பாளையம் வந்தார்; யுவரங்கரைப் பார்த்தார். அனந்தகிருஷ்ண சாஸ்திரிகளோடு பழகினார். சாஸ்திரிகளுடைய விரிந்த புலமையையும் கவித்துவத்தையும் அறிந்து வியந்தார். அவர் இந்தச் சிறிய ஜமீனில் இருக்கிறாரே என்ற அங்கலாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. அதைச் சாஸ்திரிகளிடமே சொல்லிவிட்டார். “இந்தக் காட்டுக்கு நடுவில் இருக்கிறீர்களே! குடத்தில் வைத்த விளக்குப் போல் ஆகிவிட்டீர்களே! நீங்கள் எங்கள் சம்ஸ்தானத்துக்கு வந்தால் எத்தகைய சம்மானங்களெல்லாம் கிடைக்கும். தெரியுமா?” என்றார். அதைக் கேட்ட அனந்தகிருஷ்ண சாஸ்திரிகள் புன்னகை பூத்தார்; “இந்தக் காட்டில்தான் யுவரங்கன் என்னும் ரசிகசிகாமணியாகிய சிங்கம் இருக்கிறது” என்று சொல்லி ஒரு சுலோகத்தைச் சொன்னார். ‘ஆண்டு முதிர்ந்த, கிழவி ஒருத்தி கட்டியணைத்து என்ன பயன்? இளம் மங்கை ஒருத்தி காலால் உதைத்தாலும் அந்த இன்பத்துக்கு ஒப்பாகுமா? யுவரங்கன் ரசிகத்தன்மைக்கு ஈடும் எடுப்பும் இல்லை’ என்ற கருத்தை உடையது அது.
கவிதை, சங்கீதம், நாடகம் முதலிய கலைகளில் எதுவானாலும் ரசிகர்கள் இருந்தால்தான் கலைஞர்கள் மகிழ்வார்கள்; மேலும் மேலும் தம் திறமையைக் காட்டுவார்கள். கலைஞர் உள்ளம் வெறும் பணத்துக்கோ பேய்க் கொடைக்கோ மகிழாது.
ஒரு வித்தையாடி பல வகை விலங்குகளைப் போல நடிப்பான்; குரல் எழுப்புவான். கோகர்ண வித்தை, கஜகர்ண வித்தை எல்லாம் செய்வான். மாடு தனியே தன் காதை ஆட்டும்; அதைப்போல ஆட்டுவது கோகர்ண வித்தை. யானை தன் காது நுனியை மட்டும் ஆட்டும்; அப்படி ஆட்டிக் காட்டுவது கஜகர்ண வித்தை. அந்த வித்தையாடி காதை ஆட்டுவதோடு மட்டும் அல்லாமல் பசுமாடு மாதிரி முக்காரம் செய்வான்; யானை மாதிரி பிளிறுவான். ஒரு நாள் அவன் ஒர் அரச சபையில் தன் வித்தைகளைக் காட்டத் தொடங்கினான். அரசனும் வேறு பலரும் பார்த்துக் களித்தார்கள்.ஒவ்வொரு வித்தை முடிந்தவுடனும் அரசன் ஒவ்வொரு பரிசை அளித்து வந்தான். அங்கே பார்க்க வந்த கூட்டத்தில் பசு மேய்க்கும் இடையன் ஒருவன் இருந்தான். ஒரு கோலை ஊன்றிக்கொண்டு ஓர் ஒட்டைக் கம்பளியைத் தலையின் மேல் போட்டுக்கொண்டு நின்றபடியே வித்தைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான்.
கலைஞன் பசுமாடு மாதிரி நடிக்கத்தொடங்கினான். வால் போன்ற ஒன்றைப் பின்னலே செருகிக்கொண்டு அதை ஆட்டிக் காட்டினான். காதைத் தனியே ஆட்டினான். அப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இடையன் வித்தைக்காரன் அருகில் வந்து என்னவோ செய்தான். அடுத்த நிமிஷம் தன் மேலிருந்த ஒட்டைக் கம்பளியை அவன் மேல் போட்டுவிட்டுப் போய்விட்டான்.
வித்தைகளெல்லாம் முடிந்தன. வித்தைக்காரன் முதலில் அந்தக் கறுப்புக் கம்பளியை எடுத்து மடித்துத் தலையில் வைத்துக் கண்ணில் ஒத்திக்கொண்டு பெட்டிக்குள் வைத்தான். பிறகு அரசன் தந்த பரிசுப் பொருள்களை வைத்தான். அரசன் அவன் செயலைப் பார்த்துக்கொண்டே இருந்தான். அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. “அவனை இங்கே அழைத்து வாருங்கள்” என்றான். வித்தையாடும் கலைஞன் அரசனிடம் சென்றான்.
“என்ன, நீ என்னை அவமதிக்கிறாய்?” என்று கோபத்தோடு கேட்டான் அரசன்.
“அரசே, நான் ஒன்றும் அவமதிக்கவில்லையே” என்று அஞ்சியபடியே சொன்னான் கலைஞன்.
“அந்த இடையன் போட்ட கம்பளிக்குக் கொடுத்த மரியாதையை நான் வழங்கிய பரிசுகளுக்குக் கொடுக்க வில்லையே! அந்த ஒட்டைக் கம்பளி உனக்குப் பெரிதாகி விட்டதா?”
“மகாராஜா, மன்னிக்கவேண்டும். தாங்கள் என் வித்தைகளில் எதைச் சிறப்பாகச் சுவைத்தீர்கள்?”
“எல்லாமே நன்றாக இருந்தன. இந்த ஒரு காரியந்தான் போக்கிரித்தனமாகப் படுகிறது.”
“மகாராஜா அவர்களை நான் கேள்வி கேட்பதற்காகக் கோபித்துக் கொள்ளக்கூடாது.”
“என்ன கேட்கப் போகிறாய்? கேள்.”
“அந்தக் கம்பளியைக் கொடுத்தவர் எதைப் பார்த்து ரசித்தார், தெரியுமா?”
“அவன், நீ பசுமாடுமாதிரி நடந்ததை, காதை ஆட்டினதை, முக்காரம் போட்டதைப் பார்த்திருப்பான். அவனுக்குப் பசுமாடுதானே தெரியும்?”
வித்தையாடி நிதானமாகச் சொல்லலானான். “அரசே, அவர் ஒரு நுட்பத்தைக் கண்டு மகிழ்ந்தார். நான் மாடாக நடித்தபோது ஒரு சிறு பருக்கைக் கல்லை எடுத்து என்மேல் போட்டார். அந்த இடத்தை மட்டும் நான் சுழித்துக் காட்டினேன். மாட்டின்மேல் ஈ உட்கார்ந்தால் மாடு அந்த இடத்தைச் சுழிக்கும். ஈ ஓடிவிடும். அந்த நுட்பமான காரியத்தை நான் செய்து காட்டினேன். அதன் அருமையை உணர்ந்து அந்தக் கம்பளியை அளித்தார். நுட்பம் அறிந்து வழங்கியதாதலால் அதைப் பெரிதாகக் கருதுகிறேன். அவர் மன்னராக இருந்திருந்தால் காட்டிலே பாதியையே வழங்கியிருப்பார்” என்று விளக்கினான்.
கலைஞனுடைய உள்ளம், ரசிகர்கள் நுட்பமுணர்ந்து, தரமுணர்ந்து, வரிசையறிந்து பாராட்டும்போது களிக்கிற அளவுக்கு வேறு எந்தச் சமயத்திலும் களிக்காது. பழங்காலப் புலவர் அதனால்தான் ஒரு வள்ளலைப் பார்த்துச் சொன்னார். ‘ஒர் ஊரில் ஒருவன் பணக்காரனாக, பிறருக்கு வழங்குபவனாக இருந்தால், அவனைத் தேடிக் கொண்டு நாலு திசைகளிலிருந்தும் பரிசைப் பெறுவதற்குரிய புலவர் முதலிய பலரும் வருவார்கள். தரமறிந்து பரிசளிப்பது இருக்கிறதே, அதுதான் அருமையான காரியம். பணத்தைக் கொடுப்பது மிகவும் எளிய செயல். ஆகையால் பெரிய வண்மையையுடைய செல்வனே, அந்த உண்மையை நீ அறிந்தாயானால், புலவர்களிடத்தில் எல்லாரையும் ஒரே மாதிரி பார்க்கும் செயலை வைத்துக் கொள்ளாதே’ என்றார்.
- “ஒருதிசை ஒருவனை உள்ளி, நால்திசைப்
- பலரும் வருவர், பரிசில் மாக்கள்;
- வரிசை அறிதலோ அரிதே; பெரிதும்
- ஈதல் எளிதே மாவண் தோன்றல்!
- அதுநற்கு அறிந்தனை ஆயின்,
- பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே.”
(உள்ளி-எண்ணி, பரிசில் மாக்கள்-பரிசிலைப் பெறும் புலவர், பாணர் முதலியோர். நற்கு-நன்றாக, பொது நோக்கு-எல்லாரையும் ஒரே மாதிரிப் பொதுவாக மதித்தல். ஒழிமதி-நீங்குவாயாக.)
கபிலர் என்ற புலவர் மலையமான் திருமுடிக்காாி என்ற வள்ளலைப் பார்த்துச் சொன்ன பாட்டு இது. வரிசையறியும் ரசிகனைத் தேடும் கலைஞர்களே உண்மைக் கலைஞர்கள். ரசிகன் தரம் அறிந்து, நயம் அறிந்து, நுட்பம் அறிந்து தலையை அசைத்தால் போதும்; ஆயிரம் பொன்னுக்குச் சமானம் அல்லவா அது?