புது டயரி/பட்டி மண்டபம்



பட்டிமண்டபம்

கடந்த சில ஆண்டுகளாகப் பட்டிமண்டபம் என்ற நிகழ்ச்சி பிரபலம் அடைந்து வந்திருக்கிறது. கவியரங்கம், கருத்தரங்கம் ஆகியவற்றுக்குக் கூடுகிற கூட்டத்தைவிடப் பட்டிமண்டபத்துக்கு ஏராளமாகக் கூட்டம் வருகிறது. கட்சி கட்டிக்கொண்டு பேச்சாளர்கள் வாதம் செய்யும் போது கோழிச் சண்டை, ஆட்டுக்கிடாய்ச் சண்டைகளைப் பார்க்கிறவர்களுக்கு உள்ள உற்சாகம் அவையினருக்கு உண்டாகிறது.

முதல் முதலாகக் காரைக்குடிக் கம்பன் விழாவில் தான் பட்டிமண்டபம் தொடங்கியது. முதலில் ஒரே தலைப்பில் கருத்துக்களை வெவ்வேறு பேச்சாளர்கள் பேசினார்கள். பிறகு விவாத அரங்காகப் பட்டிமண்டபம் மாறியது. அப்போத்தான் அதற்குச் சூடு பிடித்தது. முதலில் இரண்டு கட்சிகள் வாதம் செய்தன; பிறகு மூன்று கட்சிகள் வந்தன; அப்பால் நான்கு கட்சிகள் வந்தன. அப்பீல் கோர்ட்டுக்கூடக் காரைக்குடிப் பட்டிமண்டபத்தில் வந்திருக்கிறது.

இந்த நிகழ்ச்சி இப்போது எங்கும் பரவியிருக்கிறது. எந்த இலக்கிய விழாவானாலும் பட்டிமண்டபம் இல்லாமல் இருப்பதில்லை. பருப்பில்லாமல், பாயசம் இல்லாமல், கல்யாண விருந்து இருக்கலாம்; பட்டி மண்டபம்  இல்லாமல் இலக்கிய விழா இல்லை; இருந்தால் சுவாரசியப் படுவதில்லை.

பழங்காலத்தில் - அதாவது சங்க காலத்திலேயே பட்டிமண்டபம் இருந்தது. புலவர்கள் கூடி ஆராய்ச்சி செய்யும் மண்டபம் அது. தக்க புலவர்கள் கூடி கடத்தும் அவை அது. இந்திரவிழாவில் ‘பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறினர்’ புலவர் என்று மணிமேகலையால் அறிகிறோம். “பட்டிமண்டபம் ஏற்றினை ஏற்றினை” என்று மாணிக்கவாசகர் பெருமிதம் அடைகிறார், “பன்னரும் கலைதெரி பட்டிமண்டபம்” என்று கம்பன் பாடுகிறான். அந்தக் காலத்தில் புலவர்கள் கூடி ஆராய்ச்சி செய்தது பட்டிமண்டபம் என்று இவற்றால் தெரிய வருகிறது. இப்போது விவாத அரங்காக, இலக்கியப் போர்க்களமாக, ஏசல் வீதியாகப் பட்டிமண்டபங்கள் நிகழ்கின்றன.

பட்டிமண்டபம் என்பதிலுள்ள மண்டபம் என்பது வடசொல். அது தனித்தமிழருக்குப் பிடிக்கவில்லை. ஆகவே அதை மன்றமாக்கிப் பட்டிமன்றம் என்று போடுகிறார்கள். இரண்டு சொற்கள் இணைந்து வந்த தொடர் அது. அதில் ஒரு சொல்லை மாற்றிப் பட்டியை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டது வேடிக்கையாக இருக்கிறது. ஸ்ரீமான் என்பதைத் திருவாளர் என்று தமிழாக மாற்றியவர்கள் ஸ்ரீமதி என்எதில் உள்ள ஸ்ரீயை மட்டும் மாற்றி மதியை அப்படியே வைத்துத் திருமதி என்று வழங்குவதும் இது போன்ற வேடிக்கைதான். திருவாட்டி என்றால் தூய தமிழாக இருக்குமே! இப்போது திருமதி என்று சொல்லியும் எழுதியும் பழக்கத்துக்கு வந்துவிட்டது. நானும் அப்படித்தான் எழுத வேண்டியிருக்கிறது!

இந்தச் சொல்லாராய்ச்சியில் இன்னும் ஒன்று நினேவுக்கு வருகிறது. ‘காந்தியடிகளின் சிலையைத் திறந்து  வைத்தார்கள்’ என்ற செய்தி வருகிறது. அங்கே காந்தியடிகளின் . வெண்கலத் திருவுருவத்தைத் திறந்து வைத்திருப்பார்கள். வெண்கலத்தாலோ, வெள்ளியாலோ, செம்பாலோ ஆன எந்தப் படிவத்தையும் இப்போது சிலை என்கிறார்கள். சிலை என்பது கல்லைக் குறிக்கும் சிலா என்ற வடசொல்லின் திரிபு. அது ஆகுபெயராகக் கல்லாலான வடிவத்தைக் குறிக்கும். ஆகவே, சில கல்லாலான வடிவத்துக்குத்தான் பெயர். இப்போது சிலை என்பதற்கு விக்கிரகம் அல்லது வடிவம் என்று பொருள் கொண்டு பொற்சிலை, வெண்கலச் சிலை என்று வழங்குகிறார்கள். கோர்ட்டுக் கச்சேரி என்பது போலக் கற்சிலை என்றும் சொல்கிறார்கள்.

அது கிடக்கட்டும்; பட்டி மண்டபத்துக்கு வருவோம். கம்பன் விழாவில் தொடங்கிய பட்டிமண்டபம் எல்லா விழாவுக்கும் வந்துவிட்டது. ஆனால் கம்பராமாயணப் பட்டிமண்டபம் மாதிரி மற்றப் பொருளைப் பற்றிய பட்டி மண்டபம் சுவைப்பதில்லை. காரணம், இராமாயணக் கதை எல்லாருக்கும் தெரியும். பேசுகிறவர்கள் கருத்தை எடுத்துச் சொல்லும்போது சபையில் உள்ளவர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். “இலக்குவன் அங்கே நின்றுகொண்டிருக்கிறான், குகன் அவனைத்தான் முதலில் பார்த்தான்” என்று ஒருவர் பேசும்போது, “யார் அந்த இலக்குவன்? யார் அந்தக் குகன்” என்று சபையில் உள்ளவர்கள் கேட்க மாட்டார்கள்; யோசிக்க மாட்டார்கள். சிலப்பதிகாரப் பட்டிமண்டபம் நடக்கிறது. “மாடல மறையோன் கோவலனைப் பார்க்கிறான்” என்று ஒருவர் பேசும்போது, “அந்தப் பேர்வழி யார்? மாடல மறையோனாம்! யார் அவர்?” என்று சபையோர்கள் யோசிப்பார்கள். அதற்குள் பேச்சாளர் நெடுந்துாரம் போய்விடுவார். அவர் மாடல மறையோன் இன்னர் என்று விளக்கிவிட்டுக் கருத்தைச்  சொல்லத் தொடங்கினால் அது ஒரு சொற்பொழிவைப் போல ஆகிவிடும். பட்டிமண்டபத்தின் விறுவிறுப்புக் குறையும்; தொய்வு உண்டாகும்; பிறகு பாட்டிமண்டபம் ஆகிவிடும்!

இப்போதெல்லாம் பட்டிமண்டபத்துக்குப் பொருள் கண்டுபிடிப்பது அரிதாக இருக்கிறது. கம்பராமாயணத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் பார்த்து இரண்டு கட்சி, மூன்று கட்சி என்று வைத்து வாதப்பொருளைத் தேர்ந்தெடுத்துப் பேசியாகிவிட்டது. தம்பியரிற் சிறந்தவர் யார், தந்தையரிற் சிறந்தவர் யார், மனைவியரிற் சிறந்தவர் யார், கொடியவர் யார், வீரர் யார் என்றெல்லாம் கேட்டாகிவிட்டது. இராமன் சிறந்தவனா சீதை சிறந்தவளா என்றும் வாதமிட்டாகிவிட்டது. மற்ற விழாக்களில் பட்டிமண்டப விவாதப் பொருள்கள் சில விசித்திரமாக இருக்கின்றன. இன்னும் சில காலத்தில், “சுரைக்காய் ருசியா, வெண்டைக்காய் ருசியா?” என்பது போன்ற வாதம் எழக்கூடும்.

பட்டி மண்டபத் தலைவரை நடுவர் என்று சொல்கிறார்கள். நடுவர் என்றால் நீதிபதிக்குப் பெயர். யமனுக்குக் கூட அந்தப் பேர் உண்டு. சில தலைவர்கள் தம் கருத்தை வற்புறுத்துவதற்காகவே பட்டிமண்டபத்துக்குப் பொருள் கொடுப்பார்கள். இராவணனைப் பாராட்ட வேண்டும் என்பது அவருடைய குறிக்கோளாக இருக்கும். ‘இராவணன் வீரம் மாசற்றதா, இராமன் வீரம் மாசற்றதா?’ என்று வாதமிடச் செய்வார். இராவணன் விரமே சிறந்தது என்று முடிவு கூறுவார்.

“பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்” என்று மணிமேகலை கூறுகிறது. அக்தக்காலப் பட்டி மண்டபம் எப்படி நடந்ததோ தெரியாது. அதற்கு வேண்டிய இலக்கணமாகிய பாங்கு இந்தக் காலத்துப் பட்டிமண்டபத்துக்கு மிகமிக அவசியம். பாங்கு என்பது பக்குவம்; இங்கிதம்; பிறர் உள்ளம் புண்படாமல் நயமாகப் பேசுவது. இப்போது பல பட்டி மண்டபங்களில் இந்தப் பாங்கு அமைவதில்லை. கோழிகள் கழுத்தைச் சிலிர்த்துக்கொண்டு போரிடுமே, அப்படிக் காட்சியளிக்கின்ற இடமும் உண்டு. ஒருவரை ஒருவர் இழித்தும், பகடி செய்தும், பேசும் பொருளுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாமல் செய்கிறவர்கள் பலர். ஒன்று அது திட்டு மண்டபம் ஆகும்; அல்லது வெட்டி மண்டபம் ஆகிவிடும். சிலர், “அன்பருடைய மனைவி அவருக்கு இந்த அறிவுரையைச் சொல்லியிருப்பார்கள். அப்படிக் கேட்டு வருவது அவர் வழக்கம்” என்று வீட்டில் உள்ளவர்களையெல்லாம் இழுத்து வருவார்கள். அதைக் கேட்டுச் சபையிலுள்ளவர்கள் ஆரவாரிப்பார்கள்; கை தட்டுவார்கள். “என் நண்பர் இராமாயணத்தைப் படிக்காமலே வந்து பேசுகிறாரே! இவரிடம் படிக்கும் மாணாக்கர்களை நினைந்து இரங்குகிறேன்” என்று பேசுவார். முன் அமர்ந்திருக்கும் கூட்டத்தில் சிரிப்பும் கைதட்டலும் எழும். அப்போது எதிர்க்கட்சிக்காரர் சும்மா இருப்பாரா? “அவரவர்கள் தம்முடைய சொந்த அனுபவத்தைக் கொண்டே பிறரை அளப்பார்கள். எதிர்க் கட்சி நண்பர் தம்முடைய பழக்கத்தையே மற்றவர்களும் கொண்டிருப்பதாக எண்ணுகிறார். பாவம்! அவருடைய பரிதாப நிலைக்கு இரங்குகிறேன்” என்பார். மறுபடியும் கைதட்டல் ஆரவாரம்.

இலக்கியச் சுவையை வளர்ப்பதற்காகப் பட்டிமண்டபம் நடக்க வேண்டும். இப்படியெல்லாம் பேசினால் இலக்கியச் சுவையா தோன்றும்? திரு.வி.க. அவர்கள் அடிக்கடி சொல்வார்கள்; “முன்பெல்லாம் இயல்தமிழ், இசைக் தமிழ், நாடகத்தமிழ் என்று மூன்று தமிழ்கள் இருந்தன.  இப்போது நாலாவது தமிழ் ஒன்று வந்திருக்கிறது. அது தான் வசைத்தமிழ்” என்பார். பல பட்டிமண்டபங்களில் அந்த நாலாவது தமிழ் நடமாடுகிறது.

எடுத்துக் கொண்ட பாத்திரத்தின் சிறப்பையும் எதிர்ப் பாத்திரத்தின் குறையையும் எடுத்துக் காட்டி வாதிடுதல் வாதமுறை. குறைகளை எடுத்துக் காட்டும் போது அந்தப் பாத்திரத்தை மிகவும் இழித்துப் பேசுவது பாங்கு ஆகாது. இராமனுக்கு எதிரே சீதையை வைத்து வாதிடும் பட்டிமண்டபத்தில், “இராமன் மனிதனா? கோழை” என்று சிலர் பேசுவதுண்டு. அப்போது அவையிலுள்ள சிலருடைய மனம் புண்படும். பக்தர்கள் உள்ளம் புண்படுவது இயல்பு. ‘இனிமேல் பட்டிமண்டபத்துக்குப் போகக் கூடாது’ என்று அவர்கள் எண்ணுவார்கள். சில ஊர்களில் பட்டி மண்டபம் நடந்து, இப்படிப் பிறர் மனம் புண்படப் பேசியதால் அந்த நிகழ்ச்சியையே நிறுத்திவிட்டார்கள். பட்டிமண்டபத்துக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்று தெரியாது. பட்டி என்ற சொல் உயர்ந்த பொருளில்தான் அமைந்திருக்க வேண்டும். அது இன்னதென்று தெரியவில்லை. ஆனால் அந்தச் சொல்லுக்கு நாய் என்று ஒரு பொருள் உண்டு. சில பட்டி மண்டபங்களில் வெறி கொண்டவர்களைப் போல வாதமிடுமவர்கள் பேசுவதைப் பார்த்தால் அந்தப் பொருளைக் கொள்ளலாமோ என்று தோன்றுகிறது.

ஒரு சமயம் கோயம்புத்துரில் நன்னெறிக் கழகத்தில் சேக்கிழார் விழா நடந்தது. அதில் ஒரு பட்டி மண்டபம். மூன்று கட்சிகள். ‘நம்மால் பின்பற்றுவதற்கு எளியவர் யார்? இளேயான்குடி மாற நாயனரா? மெய்ப்பொருள் நாயனரா? இயற்பகை நாயனரா?’ என்பது வாதப் பொருள். நான் பட்டிமண்டப நடுவர்.  இளையான்குடி மாற நாயனார் விதைத்த நெல்லைச் சிவனடியாருக்காக அரித்து வந்து சமைக்கச் செய்து உணவு வழங்கியவர்; மெய்ப்பொருள் நாயனார் சிவவேடம் பூண்டு வந்த பகையரசனை வணங்கி அவனால் கொல்லப்பட்டவர்; இயற்பகையார் சிவனடியாருக்குத் தம் மனைவியைக் கொடுத்தவர். பெரியபுராணத்தைக் கண்டிக்கும் கொள்கையுடையோர் இயற்பகை நாயனரை மிகக் கேவலமாகப் பேசுவார்கள். நன்னெறிக் கழகத்தினர் கடவுள் உணர்ச்சியும் அடியார் பக்தியும் உடையவர்கள். ஆனாலும் பேசுபவர்கள் இயற்பகை நாயனரைச் சாடும்போது மிகவும் இழிவாகப் பேசிவிடலாம். இதை எண்ணி, அழைப்பிதழைப் பார்த்த சிலர், “இப்படி ஒரு பட்டிமண்டபம் அமைக்கலாமா? இதற்குக் கி.வா.ஜ. தலைமை தாங்கலாமா?” என்று குறை கூறினார்கள்.

நானோ தலைமை தாங்க ஒப்புக்கொண்டு விட்டேன், நடுவராக அமர்ந்துவிட்டேன்.

என்னுடைய முன்னுரையில், வாதத்துக்கு வரம்பு எண்ணினேன். இது என் வழக்கம். “இன்று இங்கே நடைபெறுவது சேக்கிழார் விழா. சேக்கிழார் தெய்வம் போன்றவர். அவருடைய தெய்வங்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள்; தெய்வத்தினும் மேலானவர்கள்; அதனால் தான் அவர்கள் வரலாற்றைச் சொல்லும் புராணம் பெரியபுராணம் ஆயிற்று. அடியார்கள் புராணம் பெரியபுராணம் என்றால் ஆண்டவன் புராணம், சிறிய புராணம் என்று தானே கொள்ள வேண்டும்? இப்போது இங்கே சேக்கிழார் காட்டும் மூன்று தெய்வங்களைப் பற்றிய வாதம் நிகழப் போகிறது. தெய்வங்கள் என்ற உணர்வோடு பேசுவதுதான் இந்த மேடைக்கு ஏற்ற பாங்கு. தீர்ப்பில், யாரேனும் ஒருவரைத்தான் தெரிந்தெடுக்க வேண்டிவரும்; மற்ற  இருவர்களை ஒதுக்கவேண்டியிருக்கும். அப்படி ஒதுக்கப்பட்டவர்கள் தாழ்ந்தவர்கள் என்று எண்ணக்கூடாது. நம்மால் பின்பற்றுவதற்கு எளியவர் யார் என்பதுதான் வாதப் பொருள். நாம் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறோம். நம்மால் பின்பற்றுவதற்கு உரியவர் நமக்கு எளியவராக, இந்த மூவரிலும் நம்மால் தொடுவதற்குரிய சமீபத்தில் இருப்பவராக இருப்பவர். மற்றவர்கள் மேல் நிலையில், நம்மால் அணுகுவதற்கரிய மேல்நிலையில் இருப்பவர்கள் ஆவார்கள். இவற்றையெல்லாம் மனத்திற் கொண்டு பாங்காகப் பேச வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்” என்றேன். வாதம் மிகவும் பாங்காக, பெரிய புராணத்தில் உள்ள நுட்பங்களை விளக்குவதாக அமைந்தது.

மற்றொரு சமயம் குருவிக்கரம்பை என்ற இடத்தில் ஒரு பட்டி மண்டபத்துக்குத் தலைமை தாங்க நேர்ந்தது. “வள்ளுவர் வகுத்த நெறியில் சென்றவர் கண்ணகியா, சீதையா?” என்பது வாதப்பொருள். சீதையை இழித்திப் பேச இந்தத் தலைப்புச் சிலருக்கு இடம் கொடுக்கலாம், அத்தகைய நோக்கத்தோடே இது போன்ற தலைப்பைக் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள் என்று முன்பே சொன்னேன்.

ஆகவே என் முன்னுரையில் வரம்பு கோலினேன். “இன்று இரண்டு கற்புடைத் தெய்வங்களைப் பற்றிய ரசமான வாதம் நிகழப் போகிறது. கண்ணகி தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் தெய்வமாக வழிபடப் பெறும் கற்பரசி. சீதை பாரத நாடு முழுவதும் கற்பின் கனலியாக வழிபடும் தெய்வம். இங்கே வள்ளுவர் வகுத்த நெறியின் படி வாழ்ந்தவர் யார் என்பது பற்றியே பேச வேண்டும். அதன்படி வாழாதவர் கற்பரசி அல்லர் என்று சொல்லக் கூடாது. கற்பைப் பற்றிய வாதம் அன்று இது” என்று சொன்னேன்.  பேச்சாளர்கள் வாதம் புரிந்தார்கள். கண்ணகி பக்கத்தில் வாதிட்ட இளைஞர் ஒருவர், “அயலான் இடத்தில் பல மாதங்கள் இருந்தவளைக் கற்புடையவள் என்று எப்படிச் சொல்ல முடியும்?” என்றார், நான் உடனே எழுந்து “இப்படிப் பேசக்கூடாது என்று முன்பே நான் சொன்னேன்” என்றேன். அந்த இளைஞர், “நடுவரவர்களுக்குச் சீதையின்மேற் காதல் போலும்” என்றார். “ஆம்! எனக்குச் சீதையின் மேலும் தாய்க்காதல்; கண்ணகியின் மேலும் தாய்க்காதல்” என்றேன். இளைஞர் வாதிட்டு அமர்ந்தார். இராமாயணத்தை நன்றாகப் படித்தவர்களும் அங்கே வாதிட்டார்கள்.

நான் தீர்ப்பளிக்கத் தொடங்கினேன். அந்த இளைஞரும் அவரைச் சார்ந்தவர்களும் நான் சீதையின் சார்பில் தீர்ப்பளிப்பேன் என்று எண்ணியிருக்கலாம். நான் கண்ணகியின் சார்பில்தான் தீர்ப்பளித்தேன். தீர்ப்பளித்த முறையைச் சொல்கிறேன்.

“திருவள்ளுவர் ‘தெய்வம் தொழாஅன் கொழுநற் ருெழுதெழுவாள், பெய்யெனப் பெய்யும் மழை’ என்று ஒரு நெறி வகுக்கிறார். கண்ணகியிடம் காமவேள் கோட்டம் கைதொழுதால் நலம் என்று சொல்ல அவள், ‘பீடு அன்று’ என்று சொல்லித் தொழவில்லை. சீதையோ இராவணனால் எடுத்துச் செல்லப்பட்டபோது வனத்துறையும் தெய்வங்களுக்கு முறையிட்டாள். அதனால் வள்ளுவர் வகுத்த நெறியில் சென்றவள் கண்ணகி. தண்டவாளத்தில் செல்லும் ரெயில் போன்றவள் அவள். சீதை கார் போன்றவள்” என்று சொல்லி நிறுத்தினேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறந்த வாகனங்தானே?

"https://ta.wikisource.org/w/index.php?title=புது_டயரி/பட்டி_மண்டபம்&oldid=1534704" இலிருந்து மீள்விக்கப்பட்டது