புது டயரி/புது டயரி
சமீபத்தில் புத்தாண்டு பிறக்க இருந்தது.
ஒரு நல்ல டயரியாக வாங்கி நாள்தோறும் விடாமல் எழுதவேண்டுமென்று தீர்மானித்தேன். நல்ல டயரியாக வாங்கவேண்டும்; கிடைப்பதற்குள் பெரியதாக வாங்க வேண்டும்.
‘பெரியதாக வாங்கி எதை எழுதப் போகிறோம்?’ என்ற எண்ணம் தோன்றினாலும் பிறகு அதுதான் சரி என்று நினைத்தேன். ஆம். அன்றன்று நடக்கும் நிகழ்ச்சிகளை எழுதலாம். யாரை யாரைச் சந்தித்தோம் என்று எழுதலாம். யார் யார் என்னைப் பார்க்க வந்தார்கள் என்று எழுதலாம். முக்கியமான நிகழ்ச்சிகளையும், நான் எழுதிய கட்டுரைகளையும், பேசிய சொற்பொழிவுகளையும் பற்றி எழுதலாம். வேண்டுமானால் வரவு செலவுகூட எழுதி வைக்கலாம். தனித் தனி விவரமாக இல்லாவிட்டாலும் ஒரு நாளில் மொத்தமாக என்ன வரவு வந்தது, என்ன செலவு என்று எழுதலாம். இப்படி எழுதினால் ஒரு பக்கம் என்ன, இரண்டு பக்கம் கூட வேண்டியிருக்கும்.
எனவே, கடைக்குப் போய் எட்டு ரூபாய் கொடுத்து ஒரு பெரிய டயரியை வாங்கி வந்தேன். அதைப் பார்க்கிற போதே எனக்குப் பெருமையாக இருந்தது. ஒரு வருஷம் கழித்து அதைப் பார்த்தால் எப்படி இருக்கும்! என்னுடைய வாழ்க்கையின் ஒர் ஆண்டுப் பகுதியே அதில் இருக்கும். இப்படித்தானே பெரிய மனிதர்களெல்லாம் டயரி எழுதி வைத்துக்கொண்டு சுய சரிதம் எழுதுகிறார்கள்? என் முன்னால் இருந்த டயரி, டயரியாகத் தோன்றவில்லை; என்னுடைய சுயசரிதத்தின் ஒரு பாகமாகவே தோன்றியது. அதைப் பத்திரமாக மேஜை டிராயரில் வைத்து மூடினேன்.
புத்தாண்டு பிறந்தது. பல் தேய்த்துவிட்டு வந்தேன். பால்கூடக் குடிக்கவில்லை. ஆம், என்னுடைய கடுமையான விரதத்தை இங்கே சொல்லிக் கொள்ளாமல் வேறு எங்கே சொல்வது? நான் காபி குடிப்பதில்லை; ஒவல்டின் அருந்து வதில்லை; போன்விடா சாப்பிடுவதில்லை; டீக்கூட நுகர்வதில்லை; பால் சாப்பிடுவேன்; தப்பினால் ஹார்லிக்ஸ் சாப்பிடுவேன்; அவ்வளவுதான்.
பல் தேய்த்து வந்தேனா? வந்தவுடன் டிராயரிலிருந்த டயரியை எடுத்தேன். முதல் தேதிப் பக்கத்தைத் திருப்பினேன். முதலில் பிள்ளையார் சுழி போட்டேன். பிறகு எழுதத் தொடங்கினேன்.
‘இன்று இங்கிலீஷ்ப் புது வருஷம் ஆரம்பமாகிறது. ஜனவரி முதல் தேதி’ என்று எழுதினேன். அதன் மேல் ஓர் யோசனை வந்தது.‘ஆங்கிலப் புத்தாண்டுத் தொடக்கம் என்று எழுதாமல் இங்கிலிஷையும் வடமொழியையும் கலந்து எழுதியிருக்கிறோமே யாராவது நமது தமிழுணர்வைப்பற்றி ஐயப்பட்டால் என்ன செய்வது?’ இப்படி எண்ணினேன்; இங்கே ஒன்றை அவசியம் சொல்லவேண்டும். நான் தமிழுணர்வு என்றுதான் நினைத்தேன். ஏனென்றால் இப்போதெல்லாம் தமிழறிந்தவர்களில் பல பல வகுப்புப் பிரிவினைகளைச் செய்திருக்கிறார்கள். தமிழ்ப்புலமை, தமிழறிவு, தமிழ்த் தேர்ச்சி, தமிழ் அன்பு என்ற இவ்வளவும் தமிழுணர்வு இல்லாவிட்டால் வீணாகிவிடும். தமிழுணர்வு உள்ளவன்தான் உயர்ந்த சாதி, மற்றவர்களெல்லாம் தாழ்ந்தசாதி. அதனால்தான் தமிழுணர்வு என்ற மேல்சாதியைப் பற்றிச் சொன்னேன்.
தமிழுணர்வு இல்லாதவன் என்று சொன்னால் என்ன செய்வது?
இது யார் கண்ணில் படப்போகிறது? இது என்னுடைய பிரைவேட் டயரி. எனக்கே சொந்தம். வேறு யாரும் பார்க்கக்கூடாது; பார்க்கவும் அனுமதிக்கமாட்டேன். அப்படியிருக்க, இதைப்பற்றி யார் விமரிசனம் செய்யப் போகிறார்கள்? என்னுடைய தமிழ்ப் புலமையையும் தமிழுணர்வையும் வேறு பிரித்துப் பார்க்க, இது அகப்பட்டால்தானே? ‘சரி, மேலே எழுதுவோம்' என்று தொடங்கினேன்.
‘முருகன் திருவருளால்’ என்று எழுதி நிறுத்தினேன். முருகன் திருவருளால் இந்த டயரியைத் தவறாமல் எழுத வேண்டும் என்ற என் விருப்பத்தைக் குறிக்க நினைத்தேன். முருகன் திருவருள் மட்டும் போதுமா? நம்முடைய சொந்த முயற்சியும் வேண்டாமா? எனவே, ‘முருகன் திருவருளும் என்னுடைய இடைவிடாத முயற்சியும் கொண்டு ஒவ்வொரு நாளும் இந்த டயரியை எழுதுவதாக...’ என்று எழுதி நிறுத்தினேன். மேலே என்ன போடலாம்? எழுதுவதாக எண்ணியிருக்கிறேன் என்று போடலாம். எண்ணம் போதுமா? அதில் ஒரு திண்ணம் வேண்டாமா? எழுதுவதாகத் தீர்மானம் செய்கிறேன் என்று எழுதத்தோன்றியது. அது கூட அவ்வளவு அழுத்தமாகப் படவில்லை. ஒருவாறு யோசித்து, ‘எழுதுவதாக உறுதியை மேற்கொள்கிறேன்’ என்று எழுதி முடித்தேன். ஒரு வாக்கியம் முடிந்தது.
மேலே என்ன எழுதுவது என்று யோசித்தேன். அப்போது என் மனைவி வந்து குரல் கொடுத்தாள்; “இங்கே
தான் இருக்கிறீர்களா? எங்கோ நண்பர் வீட்டுக்குப் போய் இட்டிலி பால் சாப்பிட்டு வரப் போயிருப்பீர்களாக்கும் என்றல்லவா எண்ணினேன்? உங்களுக்குப் பால் கீல் ஒன்றும் வேண்டாமா?”
“சரி வருகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டேன். இப்போதுதானே விடிந்திருக்கிறது? இப்போதே டயரியை எழுத முடியுமா? ஒரு நாள் நிகழ்ச்சி முழுவதையும் நினைவுக்குக் கொண்டுவந்து மாலையிலோ இரவிலோ எழுதுவதுதான் முறை.
போய்ப் பால் குடித்தேன். மற்றக் காரியங்களைப் பார்த்தேன்.
அன்று அலுவலகத்துக்கு விடுமுறை. ஜனவரி முதல் தேதியல்லவா? ‘அடடா இதையும் குறித்திருக்கலாமே?’ என்று உள்ளே போய் டயரியை எடுத்து, ‘இன்று அலுவலகத்துக்கு விடுமுறை’ என்று எழுதிவிட்டு வந்தேன் பிறகு அன்று சில நண்பர்களைப் பார்க்கப் போயிருந்தேன். போன இடங்களில் பழம் கிடைத்தது; பால் கிடைத்தது. ‘இங்கே எனக்குப் பழம் பால் கிடைத்தது’ என்று ஒரு சிலேடையை உதிர்த்து வைத்தேன்.அப்போதெல்லாம் என் ஞாபகம் என் டயரியிலேயே இருந்தது. டயரியில் இந்தச் சிலேடையையும் எழுத வேண்டும் என்று நினைவில் வைத்துக் கொண்டேன்.
மயிலாப்பூர்க் கபாலீசுவரர் கோயிலுக்குப் போய்ச் சுவாமி தரிசனம் செய்துகொண்டேன். என்னுடைய பிரார்த்தனைகளில், ‘என்னுடைய டயரி இனிது நிறைவேற வேண்டும்’ என்பதையும் சேர்த்துக் கொண்டேன்.
வீட்டுக்கு வந்து உணவு கொண்டேன். பிறகு சிறிது இளைப்பாறினேன். அப்பால் என்னைப் பார்க்கப் பல நண்பர்கள் வந்தார்கள். அவர்களில் ஒரு நண்பர், “இந்த வருஷம் பட்ஜெட்டில் வரிகளெல்லாம் உயரும் என்று சொல்கிறார்களே!” என்றார். நான், “அப்படியா!வருஷம் பிறக்கிற போதே ஜனவரி வந்துவிடுகிறது. அதனுடைய பலன் மார்ச்சு மாதப் பட்ஜெட்டில் தெரியும்” என்று ஒரு ஜோக்கை வெடித்தேன்.
நண்பர்கள் விடைபெற்றுப் போனார்கள். மாலை நேரம் வந்துவிட்டது. நேரே என் அறைக்குப் போய் என் மேஜையைத் திறந்தேன். என் அருமையான டயரியை எடுத்து வைத்துக்கொண்டேன். இன்று யார் யாரைப் போய்ப் பார்த்தோம் என்று எண்ணிப் பார்த்தேன். எல்லோரையும் நினைவுக்குக் கொண்டு வந்து எழுதினேன். பிறகு என்னைப் பார்க்க வந்தவர்களையும் எழுதினேன். மறவாமல் நான் பேசிய சிலேடையையும் ஜோக்கையும் இடையிலே பெய்தேன். கோயிலுக்குப் போனதை எழுதினேன்.
டயரிப் பக்கத்தில் முக்கால் பங்கு நிரம்பி விட்டது. என் வயிறே முக்கால் பங்கு நிரம்பி விட்டது போன்ற திருப்தி உண்டாயிற்று. அதற்கு மேல் எழுதவில்லை; சோம்பல் வந்துவிட்டது. இப்படியே எழுதி எழுதி நிச்சயமாக இந்த டயரி ஒர் அற்புதச் செய்திக் களஞ்சியமாகத் திகழப் போகிறது என்று பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
மறுநாள் எழுந்தேன். டயரியை எடுத்தேன். முதல் நாள் எழுதியதை எல்லாம் ஒரு முறை படித்துச் சுவைத்தேன்; பிறகு ‘இன்று ஜனவரி இரண்டாந்தேதி’ என்று எழுதினேன். அப்போது, ‘இது என்ன பைத்தியக்காரத்தனம் மேலேதான் அச்சுப் போட்டிருக்கிறானே! அதை மறுபடியும் ஒவ்வொரு நாளும் எழுத வேண்டுமா?’ என்று எண்ணி எனக்குள்ளே சிரித்துக் கொண்டேன். ‘சரி,இன்று மாலையில் வந்து எழுதலாம்’ என்று டயரியை மூடி வைத்து விட்டுக் குளிக்கப் போனேன்.
உணவு உண்டு அலுவலகம் போனேன். அங்கே சில நண்பர்கள் பார்க்க வந்தார்கள். “நான் முதல்முதலாக இந்தக் கதையை எழுதினேன். இதை எங்கே கொடுக்கலாம் என்று எண்ணியபோது உங்கள் ஞாபகம் வந்தது. என் முதல் படைப்பைக் கலைமகளுக்கு நிவேதனமாக்குகிறேன்” என்று ஒருவர் தாம் எழுதிய கதையைக் கொடுத்துவிட்டுச் சொன்னார். தலைச்சன் பிள்ளையை மடத்துக்குக் கொடுப்பதுபோலவும், முதலில் பழுத்த பழத்தைக் கடவுளுக்கு அர்ப்பணம் செய்வது போலவும் அவர் நினைத்துக்கொண்டார் போலும்! நினைத்துக்கொள்வதாவது அவர் இதற்கு முன்பு எந்த எந்தப் பத்திரிகைக்கெல்லாம் போய் அலைந்தாரோ, யாருக்குத் தெரியும்? அதையெல்லாம் சொல்வாரா? முதல் முதலாக எழுதும் கதையும் முதல் முதலாகப் பிறக்கும் பிள்ளையும் ஒன்றாகுமா? இது வெறும் வெள்ளோட்டம்.
இப்படி வேறு பலர் வந்தார்கள். பல கடிதங்கள் வந்திருந்தன. எல்லாவற்றிற்கும் பதில் எழுதினேன். “முருகப் பெருமானுடைய எந்தப் புறத்தில் வள்ளிநாயகி இருக்கிறாள்?” என்று ஒருவர் கேட்டிருந்தார். அவருக்குப் பதில் எழுதினேன். வேலைகளைக் கவனித்தேன். வந்திருந்த கதைகளையும் கட்டுரைகளையும் படித்தேன்.
மாலையில் வீட்டுக்குப்போனேன். சிற்றுண்டி உண்டு விட்டு டயரியின்முன் அமர்ந்தேன். இரண்டாந் தேதியின் கீழே எழுதத் தொடங்கினேன். அலுவலகத்தில் கவனித்த வேலைகளை எழுதினேன். வந்தவர்களைப் பற்றி எழுதினேன். வந்த கடிதங்களையும் எழுதிய பதில்களையும் எழுதலாமா என்று யோசித்தேன். சில பேருக்குத் திருமண வாழ்த்துக்களை அனுப்பினேன். சில கூட்டங்களுக்கு, ‘நன்கு நிறைவேறுக’ என்று எழுதினேன். ஒருவர் இறந்த செய்தி தெரிந்து உரியவருக்கு அநுதாபக் கடிதம் அனுப்பினேன். இவற்றை எல்லாம் போய் எழுதிக் கொண்டிருக்க லாமா? முக்கியமான கடிதங்களையும் பதிலையும் எழுதினால் போதும் என்று தீர்மானித்தேன். அப்படியே சிலவற்றை எழுதினேன்.
பிறகு வீட்டு விலாசத்துக்கு வந்திருந்த கடிதங்களைப் பார்த்தேன்; பதில் எழுதிப் போட்டேன். அவற்றிலும் முக்கியமானவற்றைப் பற்றி டயரியில் எழுதினேன். இன்று முக்கால் பக்கத்துக்கு மேலே எழுதிவிட்டேன். ஆகவே அதிகத் திருப்தி, உடனே மூடிவைத்துவிட்டு வேறு வேலையைப் பார்க்கப் போய்விட்டேன்.
3 -ஆம் தேதி, அலுவலகத்திலிருந்து வந்ததும் சோர்வாக இருந்தது. அதோடு சொல்லி வைத்தாற்போல இரண்டே நண்பர்கள் அலுவலகத்தில் பார்க்க வந்தார்கள். அதிகக் கடிதங்களும் இல்லை. ஆகையால், இராத்திரி எழுதிக் கொண்டால் போகிறது என்று எண்ணி வெளியிலே உலாவப் போய்விட்டேன்.
இரவு உணவுண்டு விட்டுப் படுக்கையை விரித்து அதில் உட்கார்ந்தபடியே டயரியை எடுத்து வைத்துக் கொண்டு, வந்த இரண்டு பேர்களைப் பற்றி எழுதினேன். கடிதங்களில் ஏதும் முக்கியமில்லை. மூன்று வரிகள் கூட நிரம்பவில்லை. என்ன எழுதுவது என்று திகைத்தேன். அப்போது ஒர் அற்புதமான யோசனை தோன்றியது. என்ன என்ன படித்தேன் என்று எழுதலாமே! நம்முடைய காலத்துக்குப் பிறகு நம்முடைய சந்ததிகள் இதைப் பார்த்து, அடேயப்பா இவர் எத்தனை புத்தகம் படித்திருக்கிறார் என்று பிரமித்துப் போவார்கள். அன்று காலையில் திருக்குறள் பரிமேலழகருரை படித்துக்கொண்டிருந்தேன். திருமுருகாற்றுப் படையையும், அப்பர் தேவாரத்தையும் புரட்டிப் பார்த்தேன். திருக்குறளைப் படித்தேன் என்று பொதுவாக எழுதுவதைவிட இன்ன இன்ன அதிகாரம் படித்தேன் என்று எழுதலாம் என்று தோன்றியது. அப்படியே எழுதினேன்.
திருமுருகாற்றுப்படையை எப்படி எழுதுவது? கந்தனுக்கும் கண்ணனுக்கும் உள்ள ஒப்புமையைக் குறித்து நான் பேசுவதுண்டு. கண்ணன் கையில் வேல் உண்டு; கந்தன் கையில் குழல் உண்டு என்று சொல்லி, ‘நின்கையில் வேல் போற்றி’ என்ற ஆண்டாள் பாசுரத்தையும் ‘குழலன் கோட்டன் குறும்பல்லியத்தன்’ என்ற திருமுருகாற்றுப் படை அடியையும் மேற்கோள் காட்டுவேன். இப்போது அதையும் அதைச் சார்ந்த இரண்டு மூன்று அடிகளையும் பார்த்தேன் இதை எழுதலாமா?
அப்போது பின் சந்ததியார்கள் இதைப் பார்க்கப் போகிறார்கள் என்ற ஞாபகம் வந்தது. திருமுருகாற்றுப் படையையும் அப்பர் தேவாரத்தையும் படித்தேன் என்று எழுதலாம். முழுமையும்,படித்ததாக அவர்கள் நினைத்துக் கொள்ளட்டுமே! அதனால் நம்முடைய பெருமைதானே உயரும்? அப்படியே எழுதினேன்.
அப்பொழுது என் மனைவி பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்; “என்ன எழுதுகிறீர்கள்?” என்று கேட்டாள்.
“நாட் குறிப்புப் புத்தகம்” என்று மிடுக்காகப் பதில் சொன்னேன்.
“அந்தப் புத்தகம் எதைப் பற்றி?”
“டயர் தெரியாது? அதுதான்.” “பூ இதுதான? ஏதோ பிரமாதமாகப் பெரிய புத்தகமாகத்தான் எழுதப் போகிறீர்களாக்கும் என்று எண்ணினேன். அவ்வளவு பொறுமை உங்களுக்கு எங்கிருந்து வந்தது என்றுகூட ஆச்சரியப்பட்டேன்.”
அதற்குமேல் டயரி ஒடவில்லை. பத்து வரிகளோடு அந்தப் பக்கம் முடிந்தது. படுத்துக் கொண்டேன்.
4-ஆம் தேதி இராத்திரி எழுதத் தொடங்கினபோது என்ன என்ன கடிதம் வந்தது, என்ன என்ன பதில் எழுதினேன் என்று சரியாக ஞாபகம் வரவில்லை இதற்காக மண்டையை உடைத்துக் கொள்வானேன் என்று, நான் படித்த புத்தகங்களை எழுத எண்ணினேன். அன்று ஒரு நாவல் படித்தேன்; அவ்வளவுதான். சில பத்திரிகைகளைப் படித்தேன். பத்திரிகைகளை எழுதலாமா? அதிலே ஒரு சங்கடம், எந்தப் பத்திரிகையை எழுதுவது? மாதப் பத்திரிக்கையை எழுதுவதா? இல்லை, தினப்பத்திரிகையும் சேர்த்து எல்லாவற்றையும் எழுதுவதா? இப்படி எண்ணும்போது எனக்கே சிரிப்பு வந்தது. எழுதுவதற்கு விஷயம் இல்லாமல் தவிக்கிற தவிப்பினால்தானே இப்படியெல்லாம் எண்ணாத் தோன்றுகிறது? நாவலை மாத்திரம் எழுதினேன். அப்புறம் செய்த வேலைகள் இரண்டொன்றை எழுதி மூடிவைத்து விட்டேன். அன்று என்னுடைய சுய சரித்திரப் பகுதி ஐந்தே ஐந்து வரிகள்!
ஐந்தாம் தேதி எனக்கு இருந்த சுவராசியம் குறைந்து விட்டது. இனிமேல் தொல்காப்பியத்தைப் பற்றிச் சில நூல் எழுதும் எண்ணம் உதித்ததாக எழுதி ஒப்பேற்றினேன். அதோடு சரி. ஆறாந்தேதி முதல் டயரி டிராயரில் துாங்கியது. என்றைக்காவது கட்டுரை எழுதினால் அதை மட்டும் அந்தத் தேதியில் குறித்துக் கொண்டேன்.
பிப்ரவரி மாதம் முதல் தேதி பிறந்தது. அன்று புது ஊக்கம் உண்டாயிற்று. இன்று டயரியை எப்படியாவது மீண்டும் எழுதத் தொடங்க வேண்டுமென்று மூர்த்தன்யமாக உட்கார்ந்தேன். எதை எழுதுவது? மூளை காலியாக இருந்தது. ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. பழக்கமும் விட்டுப் போய்விட்டது. காலையில் பத்திரிகையில் ஒரு பெருந்தலைவர் இறந்த செய்தி வந்திருந்தது. அதை எழுதினேன். போயும் போயும் மாசம் முதலில் இந்த மரணச் செய்தியையா எழுதுவது என்று உடனே அதை அடித்து விட்டு, அந்தப் பக்கத்துக் கடைசி இரண்டு வரிகளில் அதை எழுதினேன். மேலே, என்னைப் பார்க்க வந்த சாமியாரைப் பற்றி எழுதினேன். எவ்வளவு வேகமாக எழுத முனைந்தேனே, அவ்வளவு வேகமாகச் சோம்பல் வந்துவிட்டது மனைவியும் வந்தாள். மூடி டிராயரில் வைத்து விட்டேன்.
மறுபடியும், எங்கேயாவது பேசப்போனால் அதை ஒரு வரியில் அந்தத் தேதியில் எழுதினேன். அப்படியே ஒன்று இரண்டு கட்டுரைகள் எழுதின தேதிகளைக் குறித்தேன். டயரி டிராயரில் தூங்கிக்கொண்டிருந்தது.
மார்ச்சு மாதம் முதல் தேதி வேதாளம் மறுபடியும் வந்தது. டயரியை எடுத்து வைத்துக் கொண்டேன். அப்பொழுது என் மனைவி வந்தாள். “என்ன, நீங்கள் டயரி எழுதப் போகிறேன் என்கிறீர்கள். முதலில் அஞ்சாறு நாள் எழுதியிருக்கிறீர்கள். பிறகு அங்கங்கே ஒரு வரி இரண்டு வரி மட்டும் எழுதியிருக்கிறீர்கள். இதற்குத் தானா எட்டு ரூபா கொடுத்து இதனை வாங்கினீர்கள்?” என்று கேட்டாள்.
“இதை நீ படித்துப் பார்த்தாயா?”
“ஏன், பார்க்கக் கூடாதா?” “பிறருடைய டயரியைப் படிப்பது நாகரிகம் அல்ல, குற்றங்கூட என்று சொல்வார்கள்!” .
“மற்றவர்கள்தாமே பார்க்கக் கூடாது?” “நீ மற்றவள் அல்லவா?”
“என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் வேறு, நான் வேறா நீங்கள் சங்ககாலக் கவிகளில் வரும் கணவன் மனைவி ஒற்றுமையைப் பற்றியெல்லாம் பேசுவீர்களே! இப்போது இந்த டயரி வந்து நம்மைப் பிரித்து விட்டதா?”
அவள் அழவில்லை. அடுத்த காட்சி அதுதான் என்று எனக்குப் பயமாகப் போய் விட்டது.
“இப்போது என்ன செய்யச் சொல்கிறாய்?”
“வீட்டுக் கணக்கு எழுத நல்ல நோட்டு இல்லை. இதைக் கொடுங்கள். இதில் எழுதுகிறேன்.”
“நானும் நினைத்ததுதான்.”
“என்ன நினைத்தீர்கள்?”
“டயரியில் வரவு செலவுகூட எழுதலாமென்று நினைத்தேன். என் உள்ளத்துக்குள் நீ இருக்கிறாய். ஆகையால் அதை உணர்ந்து கொண்டு, நான் செய்யாததை நீ செய்வதாகச் சொல்கிறாய். இந்தா, எடுத்துக் கொள்.”
இதைவிடவா முன் உளறின உளறலுக்காகக் கேட்கும் மன்னிப்புப் பயனுடையதாக இருக்கும்?
அப்பாடி என் தர்மபத்தினி டயரி எழுதும் அல்லலினின்றும் என்னை விடுதலை செய்து விட்டாள்!