புது மெருகு/சில குறிப்புகள்

சில குறிப்புகள்

தொல்காப்பியரின் வெற்றி:

இந்த வரலாற்றுக்கு ஆதாரம் தொல்காப்பியப் பாயிரத்துக்கு நச்சினார்க்கினியர் எழுதியிருக்கும் உரைப்பகுதி. அது வருமாறு:

'பாண்டியன் மாகீர்த்தி இருபத்துநாலாயிரம் யாண்டு வீற்றிருந்தானாதலின் அவனும் அவன் அவையிலுள்ளோரும் அறிவு மிக்கிருத்தலின் அவர்கள் கேட்டிருப்ப அதங்கோட்டாசிரியர் கூறிய கடாவிற்கெல்லாம் குற்றந்தீர விடைகூறுதலின் அரில்தப என்றார்.

அகத்தியனார் அதங்கோட்டாசிரியரை நோக்கி, "நீ தொல்காப்பியன் செய்த நூலைக் கேளற்க" என்று கூறுதலானும், தொல்காப்பியரும் பல்காலும் சென்று "யான் செய்த நூலை நீர் கேட்டல் வேண்டும்" என்று கூறுதலானும், இவ்விருவரும் வெகுளாமல் இந்நூற்குக் குற்றங்காட்டி விடுவலெனக் கருதி, அவர் கூறிய கடாவிற்கெல்லாம் விடை கூறுதலின் "அரில் தபத் தெரிந்து" என்றார்.

'அவர் கேளற்க என்றற்குக் காரணம் என்னையெனின், தேவரெல்லாங் கூடி யாம் சேர இருத்தலின் மேருத் தாழ்ந்து தென்றிசை உயர்ந்தது; இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற் குரிய ரென்று அவரை வேண்டிக் கொள்ள, அவரும் தென்றிசைக்கட் போதுகின்றவர் கங்கையாருழைச் சென்று காவிரியாரை வாங்கிக்கொண்டு, புலத்தியனாருழைச் சென்று அவருடன் பிறந்த குமரியார் உலோபமுத்திரையாரை அவர் கொடுப்ப நீரேற்று இரீஇப் பெயர்ந்து, துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடி யண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்குடி வேளிர் உள்ளிட்டாரையும் அருவாளரையும் கொண்டு போந்து, காடு கெடுத்து நாடாக்கிப் பொதியிலின்கண் இருந்து, இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து, இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கி, திரணதூமாக்கினியாராகிய தொல்காப்பியனாரை நோக்கி, "நீ சென்று குமரியாரைக் கொண்டு வருக," எனக் கூற, அவரும், "எம்பெருமாட்டியை எங்ஙனம் கொண்டு வருவல்?" என்றார்க்கு, "முன்னாகப் பின்னாக நாற்கோல் நீளம் அகல நின்று கொண்டு வருக" என, அவரும் அங்ஙனம் கொண்டு வருவழி, வையை நீர் கடுகிக் குமரியாரை ஈர்த்துக்கொண்டுபோக, தொல்காப்பியனார் கட்டளை இறந்து சென்று ஓர் வெதிர்ங்கோலை முறித்து நீட்ட, அதுபற்றி ஏறினார். அது குற்றமென்று அகத்தியனார் குமரியாரையும் தொல்காப்பியனாரையும், "சுவர்க்கம் புகாப்பிர்" எனச் சபித்தார்; "யாங்கள் ஒரு குற்றமும் செய்யாதிருக்க எங்களைச் சபித்தமையான் எம்பெருமானும் சுவர்க்கம் புகாப்பிர்" என அவர் அகத்தியனாரைச் சபித்தார். அதனான் அவர் வெகுண்டாராதலின் அவன் செய்த நூலைக் கேளற்க வென்றாரென்க.'

முற்றுகை

ப. 21. இங்கே குறிப்பிட்ட செய்யுள் வருமாறு:

அளிதோ தானே பாரியது பறம்பே
நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும்
உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே
நான்கே, அணிநிற ஓரி பாய்தலின் மீதழிந்து
திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே
வான்கண் அற்றவன் மலையே, வானத்து
மீன்கண் அற்றதன் சுனையே, ஆங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும்
புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினும்
தாளிற் கொள்ளலிர் வாளிற் றாரலன்
யான்அறி குவன்அது கொள்ளு மாறே:
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி
விரையொலி கூந்தல்நும் விறலியர் பின்வர
ஆடினிர் பாடினிர் செலினே,
நாடும் குன்றும் ஒருங்கீ யும்மே.
                        —புறநானூறு, 109

ப.29 கபிலர் பாடல்:

அளிதோ தானே பேரிருங் குன்றே
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே
நீலத்து இணைமலர் புரையும் உண்கட்
கிணைமகட் கெளிதாற் பாடினள் வரினே.
                              —புறநானூறு,111

ப. 30. கபிலர் கிளிகளை வளர்த்து நெல்லைக் கொண்டுவரச் செய்தார் என்ற செய்தியைப் பின்வரும் செய்யுட் பகுதிகள் புலப்படுத்துகின்றன:

உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை
வாய்மொழிக் கபிலன் சூழச் சேய்நின்று
செழுஞ்செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு
தடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி
யாண்டுபல கழிய வேண்டுவயிற் பிழையாது
ஆளிடூஉக் கடந்து வாளமர் உழக்கி
ஏந்துகோட் டியானை வேந்தர் ஓட்டிய
கடும்பரிப் புரவிக் கைவண் பாரி.

                 —நக்கீரர் பாட்டு - அகநானூறு, 78.

புலங்கந் தாக இரவலர் செலினே
வரைபுரை களிற்றொடு நன்கலன் ஈயும்
உரைசால் வண்புகழ்ப் பாரி பறம்பின்
நிரைபறைக் குரீயீஇனம் காலைப் போகி
முடங்குபுறச் செந்நெல் தரீஇயர் ஓராங்
கிரைதேர் கொட்பின வாகிப் பொழுதுபடப்
படர்கொள் மாலைப் படர்தந் தாங்கு.
            —ஔவையார் பாட்டு - அகநானூறு, 303.

யமன் வாயில் மண்

இவ்வரலாற்றுக்கு ஆதாரமான பாட்டு வருமாறு:
திணை - வஞ்சி, துறை - துணைவஞ்சி.

சோழன் நலங்கிள்ளியுழை நின்று உறையூர் புகுந்த இளந்தத்தென்னும் புலவனைக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, ஒற்று வந்தானென்று கொல்லப் புக்குழி கோவூர்கிழார் பாடி உய்யக்கொண்டது.

வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி
நெடிய என்னாது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஓம்பா துண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந் தன்றோ இன்றே, திறப்பட
நண்ணார் நாண அண்ணாந் தேகி
ஆங்கினி தொழுகின் அல்லது ஓங்குபுகழ்
மண்ணாள் செல்வம் எய்திய
நும்மோ ரன்ன செம்மலும் உடைத்தே.
                               —புறநானூறு, 47.

யானைக்கதை:

ஆதாரம்:
திணை-பாடாண் திணை. துறை-செவியறிவுறூஉ.

பாண்டியன் அறிவுடை நம்பியுழைச் சென்ற பிசிராந்தையார் பாடியது.

காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
மாநிறை வில்லதும் பன்னாட் காகும்
நூறுசெறு வாயினும் தமித்துப்புக் குணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்
மெல்லியன் கிழவ னாகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்

யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான், உலக மும் கெடுமே.
                                —புறநானூறு, 184.

குடிப்பெருமை:

திணை-வாகை. துறை-அரச வாகை.

சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும் தாமப்பல் கண்ணனும் வட்டுப் பொருவுழிக் கைகரப்ப வெகுண்டு வட்டுக்கொண்டு எறிந்தானைச் சோழன் மகன் அல்லையென நாணியிருந்தானைத் தாமப்பல் கண்ணனார் பாடியது.

நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
கால்உண வாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்
கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇத்
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி அஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக.
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
தேர்வண் கிள்ளி தம்பி, வார்கோற்
கொடுமர மறவர் பெரும, கடுமான்
கைவண் தோன்றல், ஐயம் உடையேன்
ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர், மற்றிது
நீர்த்தோ நினக்கென வெறுப்பக் கூறி
நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்
நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே,
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல்,
இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணுமெனக்
காண்டரு மொய்ம்ப காட்டினை, ஆகலின்
யானே பிழைத்தனன் சிறக்கநின் ஆயுள்;

மிக்குவரும் இன்னீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே!
                               —புறநானூறு, 43.

நிர்வாண தேசம்:

மணிமேகலையில் 16-ஆம் காதையாகிய 'ஆதிரை பிச்சையிட்ட காதை' என்பதில் இங்கே உள்ள வரலாற்றுக்கு மூலம் இருக்கிறது.

ப.64 சாதுவன் செய்த உபதேசம்:

மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்
கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்:
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின்
நல்லறம் செய்வோர் நல்லுல கடைதலும்
அல்லறம் செய்வோர் அருநர கடைதலும்
உண்டென உணர்தலின் உறவோர் களைந்தனர்;
கண்டனை யாகெனக் கடுநகை எய்தி
உடம்புவிட் டோடும் உயிர்உருக் கொண்டோர்
இடம்புகும் என்றே எமக்கீங் குரைத்தாய்
அவ்வுயிர் எவ்வணம் போய்ப்புகும் அவ்வகை
செவ்வனம் உரையெனச் சினவா திதுகேள்
உற்றதை உணரும் உடல்உயிர் வாழ்வுழி;
மற்றைய உடம்பே மன்னுயிர் நீங்கிடின்
தடிந்தெரி யூட்டினுந் தான்உண ராதெனின்
உடம்பிடைப் போனதொன் றுண்டென உணர்க
போனார் தமக்கோர் புக்கில்உண் டென்பது
யானோ வல்லேன் யாவரும் உணர்குவர்
உடம்பீண் டொழிய உயிர்பல காவதம்
கடந்துசேட் சேறல் கனவினும் காண்குவை
ஆங்கனம் போகி அவ்வுயிர் செய்வினை
பூண்ட யாக்கையிற் புகுவது தெளிநீ.

தேவரும் குருவும்:

சீவக சிந்தாமணியின் உரையில் நச்சினார்க்கினியர். 'செம்பொன் என்னும் கவியால் குருக்கள் அருகனை வணங்குதலின் தாம் சித்தனை வணங்கினார். குருக்கள் கூறுதலானும் அருகனை வணங்குதலானும் அதனை முன் வைக்கவெனின், அவர், "இது நன்று; இதனை முன்னே வைக்க" என்றலின் முன் வைத்தார், என்று எழுதிய குறிப்பு இக்கதைக்கு ஆதாரம்.

ப. 73. திருத்தக்க தேவரைப் பாராட்டி அவருடைய குரு பாடிய செய்யுள் வருமாறு:

முந்நீர் வலம்புரி சோர்ந்தசைந்து
      வாய்முரன்று முழங்கி யீன்ற
மெய்ந்நீர்த் திருமுத் திருபத்தேழ்
      கோத்துமிழ்ந்து திருவில் வீசும்
செந்நீர்த் திரள்வடம்போல் சிந்தா
      மணியோதி உணர்ந்தார் கேட்டார்
இந்நீர ராயுயர்வர் ஏந்துபூந்
      தாமரையாள் காப்பா ளாமே. (3143)

இது தேவர் குருக்கள் கூறினாரென்றுணர்க: தேவர் இங்ஙனம் புனைந்துரைத்தல் ஆகாமையின்' என்பது நச்சினார்க்கினியர் குறிப்பு.

மூங்கிலிலை மேலே

இவ்வரலாற்றைக் கூறினவர்கள் என் ஆசிரியப் பிரானாகிய மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள்.

'தூங்குபனி நீர்' என்பதற்கும் தொங்கும் பனிநீர் என்று சிலர் பொருள் கொள்வர். இலக்கிய வழக்காகிய தூங்கு என்பது நாடோடிப் பாடலிலும் வருதல் கூடுமானாலும் பாட்டின் எளிமையை அது கெடுக்கிறது. அன்றியும் இலை மேலே தொங்குவதைவிடத் தூங்குவதே பொருத்தமாகத் தோன்றுகிறது.

நெடுஞ் சுவர்

வேலியின் வீட்டுச் சுவரில் ஒரு பேய் இருந்து, எடுக்க எடுக்கக் குலைத்துக்கொண்டு வந்ததென்றும், கம்பர் பாடி அதனை ஓட்டிச் சுவரை எடுத்து கூலி பெற்றாரென்றும் விநோதரஸ மஞ்சரி கூறும் வரலாறு இங்கே இயற்கைக்குப் பொருத்தமாக மாற்றப்பட்டிருக்கிறது.

சம்பந்தச் சர்க்கரை:

கொங்குமண்டல சதகத்தில் உள்ள பின்வரும் பாடல் இச்சரித்திரத்திற்கு ஆதாரம்.

சங்க கிரிதுருக் கத்திற் சிறையினிற் சார்ந்திடுநாள்
சங்கை யிலாதொரு பாவாணன் சென்று தமிழுரைக்க
அங்கண் இருந்துதன் இல்லாள் கழுத்தில் அணிந்திருக்கும்
மங்கலி யந்தனைப் பெற்றளித் தான்கொங்கு மண்டலமே. (66)

வாணன் உரைத்திட மால்ராமப் பையன் மனமகிழ்ந்து
வேணது கேளெனச் சம்பந்தச் சர்க்கரை வேளினுமிவ்
வீணரைக் காவல் விடீரென்று கூறிட விட்டிடலும்
தாணுவென் றிம்முடிக் காணிக்கைச் சாசனம் தந்தனரே

என்பது ஒரு தனிப்பாடல்; இச்சதகப் பதிப்பாசிரியர் ஸ்ரீ தி.அ.முத்துச்சாமிக் கோனார் மேற்கோள் காட்டியது.

பூங்கோதை:

அம்புவி மெச்சுகுன் றத்தூரில் ஆயரில் ஆய்கலைதேர்
எம்பெரு மானைக் கொடுதக்கை என்னும் இசைத்தமிழால்
நம்பும் இராம கதையைஅன் பாக நவிலஇசை
வம்பவிழ் தார்ப்புயன் நல்லய னுங்கொங்கு மண்டலமே.
குறுமுனி நேர்தமிழ் ஆழியுண் வாணர் குழாம்வியப்ப
அறிவில் இளைஞரே ஆண்மக்கள் என்ன அறுதியிட்ட
சிறிய இடைச்சிஎம் பெருமான் மனைவி சிறந்துவளர்
மறுவறு சங்க கிரிசேர் வதுகொங்கு மண்டலமே.
                  —கொங்கு மண்டல சதகம், 63,64.

கற்பூர நாயக்கர்:

இது நாடோடியாக வழங்கி வரும் கதை.