புது மெருகு/யமன் வாயில் மண்

யமன் வாயில் மண்
1

காலத்தின் கோலத்தால் சோழநாடு இரண்டு பிரிவு பட்டு இரண்டு அரசர்களின் ஆட்சிக்கு உட்பட்டது. நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்னும் இருவரும் சோழ குலத்தினரே. இருவரும் தனித்தனியே ஒவ்வொரு பகுதியை ஆண்டுவந்தனர். அவ்விருவருக்கும் இடையே இருந்த பகைமை மிகக் கடுமையானது. கடுமை, கொடுங்கடுமை மிகக் கொடுங்கடுமை என்று அந்தப் பகைமையின் உரத்தை எப்படிச் சொன்னாலும் பற்றாது. இருவரும் வீரத்திலும் கொடையிலும் ஒத்தவர்கள்; புலவர்களைப் போற்றுபவர்கள். ஆயினும் அவ்விருவரும் ஒன்றவில்லை.

இந்தப் பகைநிலைக்கிடையே துன்புற்றவர்கள் குடிமக்களே. சோழநாடு மிகப் பழங்காலமுதல் பிரிவின்றிச் சிறந்திருந்தது. நாடு முழுவதும் உடல் போலவும் அதனைத் தனியாளும் அரசன் உயிர்போலவும் இருப்பதாகக் கவிஞர் வருணிப்பது வழக்கம். இப்பொழுதோ அந்த உடல் இரண்டு துண்டுபட்டுக் கிடக்கின்றது. ஒரு பகுதியில் உள்ள குடிகள் மற்றொரு பகுதியிலுள்ளா ரோடு கலந்து பழக வழியில்லை. அது பகைவன் நாடு என்ற ஒரு பெருந்தடை. அவர்களிடையே நெடுங்காலமாக இருந்த உறவையும் நட்பையும் வியாபாரம் முதலியவற்றையும் அறுத்துவிட்டது. மகளைக் கொடுத்த தந்தை நலங்கிள்ளியின் ஆட்சியின் கீழ் இருப்பான்; மகளும் மருமகனும் நெடுங்கிள்ளியின் குடிமக்களாக இருப்பார்கள். இருசாராரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் பழக வாய்ப்பில்லை.

என்ன செய்வது! அரசர்களுக்குள் உண்டாகிய பகைமை நாடு முழுவதும் துன்புற ஏதுவாகியது. 'இதைக்காட்டிலும் அரசன் இல்லாத நாடு சிறந்ததாகஇருக்குமே. நினைத்தபடி நினைத்த இடத்துக்குப் போகலாம், வரலாம், திரியலாம்' என்று எண்ணி வருந்தினர் சிலர்.

தமிழ்நாட்டில் புலவர்களுக்கு இருந்த நன்மதிப்பை என்னவென்று சொல்வது! சாதாரண ஜனங்களுக்கு இல்லாத பெருமையும் உரிமையும் அவர்களுக்கு இருந்தன. ஒருவருக்கொருவர் பகைமை சாதிக்கும் இரு பெருவேந்தரிடத்தும் சென்று பரிசு பெறும் உரிமையை அவர்கள் படைத்திருந்தார்கள். இன்று ஒரு புலவர் மதுரையிலே பாண்டியன் அவைக்களத்தில் தம்முடைய நாவன்மையைப் புலப்படுத்திப் பரிசு பெறுவார். நாளை அவரே பாண்டியனுக்குப் பரம விரோதியாகிய சோழன்பால் சென்று அவனையும் பாடிப் பரிசு பெறுவார். அவர்களுக்கு எங்கும் அடையா நெடுங்கதவுதான்.

இளந்தத்தன் என்னும் புலவன் இளம் பருவத்தை யுடையவன்; கற்பன கற்றுக் கேட்பன கேட்டு இப்பொழுதான் உலக அரங்கத்தில் உலவக் கால் வைத்திருக்கிறான். அவனைப் பலர் அறியார். இனி மேல்தான் அவன் தன் புலமையைத் தமிழ்நாட்டில் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும். தகுதியறிந்து பரிசளிக்கும் வள்ளல் யாரென்று ஆராய்ந்தறிந்த அப்புலவன் சோழன் நலங்கிள்ளியின் அரசவையை அணுகினான். தன்னுடைய புலமைத் திறத்தைப் புலப்படுத்தினான்.

இளமை முறுக்கோடு அவன் வாயிலிருந்து வந்த தமிழ்க் கவிதை நலங்கிள்ளியின் உள்ளத்தே இன்பத்தைப் பாய்ச்சியது."இவ்வளவு காலமாகத் தாங்கள் இந்தப் பக்கம் வந்ததேயில்லையே" என்றான் நலங்கிள்ளி.

"கூட்டைவிட்டு முதல் முதலாக வெளியேறும் சிறு குருவி நான். இன்னும் தமிழ்நாட்டின் விரிவை உணரும் பாக்கியம் கிடைக்கவில்லை. முதல் முதலாக இந்த அவைக்களத்திலே என் கவிக் குழந்தையைத் தவழவிடுகிறேன். அதனை ஆதரித்துப் போற்றும் செவிலித் தாயைக் கண்டுகொண்டேன். நல்ல சகுனம் இது. இனி நான் ஊக்கம் பெறுவேன்; தமிழ் மன்னர்களை என் கவிதைக் காணிக்கையுடன் கண்டு நட்புப்பூண்பேன். உலகையும் வலம் வருவேன்."

இளம் புலவன் உற்சாகத்தோடு பேசிய பேச்சிலே அவனுடைய உள்ள எழுச்சி பூரணமாக வெளிப் பட்டது. மனிதன் தொடங்கும் முயற்சிகளிலெல்லாம் வெற்றி உண்டாகிவிடுகிறதா? பெரும்பாலும் தோல்வியைத்தான் அவன் காண்கிறான். இந்தப் புலவன் தன் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றான். வரிசை யறிந்து பாராட்டும் வள்ளலிடம் முதற் பரிசைப் பெற்றான். அவனுக்கு ஊக்கம் உண்டாகத் தடை என்ன? உலகத்தையும் வலம் வரலாமென்ற பெருமிதம் எழுவதற்கு அந்த ஊக்கமும் பயமறியாத இளமையும் ஆதாரமாக இருந்தன.

புலவர்களுக்குச் சம்மானம் பெரிதல்ல; விருந்தும் பெரிதல்ல. யானைகளையும் குதிரைகளையும் ஆயிரம் ஆயிரமாகக் கொடுத்தாலும் அவர்கள் மகிழ மாட்டார்கள். தரம் அறிந்து பாராட்டும் வள்ளல்களையே அவர்கள் தேடுவார்கள். தம்முடைய கவிதையின் நயத்தை அறிந்து இன்புற்றுப் பாராட்டி அவர்கள் அளிக்கும் பரிசில் எவ்வளவு சிறியதானாலும் பெரு மகிழ்ச்சியோடு பெற்றுக்கொள்வார்கள். நலங்கிள்ளி வரிசை யறிபவர்களிற் சிறந்தவன். இனிய கவிதையைக் கேட்பதிலும், அக்கவிதையின் தரந்தெரிந்து பாராட்டுவதிலும், நல்ல கவிஞர்களை நாட்டுக்கு அணியாக எண்ணிப் போற்றி வழிபடுவதிலும் யாருக்கும் இளையாதவன். இது தமிழ் உலகம் அறிந்த செய்தி. இளந்தத்தன் அவன் புகழைப் பலரும் சொல்லக் கேட்டுத்தான் அவன்பால் வந்தான். வந்தது வீண் போகவில்லை. வீண் போவதா? புலவன் தான் நினைத்ததற்குப் பல மடங்கு அதிகமான பரிசிலைப் பெற்றான்; பாராட்டைப் பெற்றான்; எல்லாவற்றையும் விட, 'இனி எங்கும் உலாவித் தமிழ் பரப்பலாம்' என்ற தைரியத்தைப் பெற்றான்.

சிலநாள் நலங்கிள்ளியின் உபசாரத்தில் பொழுது போவதே தெரியாமல் இருந்த இளந்தத்தன், "தமிழ் நாட்டின் விரிவை அளந்தறிய விடை கொடுக்க வேண்டும்" என்று சோழனிடம் தெரிவித்தான். வரும் புலவரை வாவென்று சொல்லத் தெரியுமேயன்றிப் போகும் புலவர்களைப் போவென்று சொல்லத் தெரியாது அவனுக்கு.

"அடிக்கடி வரவேண்டும் என்னை மறவாமல் இருக்கவேண்டும். உலக முழுவதும் புலவர்களுக்கு ஊர். ஆனாலும் இந்த இடத்திலே தனிப்பற்று இருந்தால் நான் பெரும் பேறு பெற்றவனாவேன்" என்ற நயஞ் செறிந்த வார்த்தைகள் சோழனிடமிருந்து வந்தன.

"மறப்பதா? எப்படி முடியும்? முதல் முதலாகப் பரிசு பெற்ற இந்த இடத்தை மறந்தால் என்னிலும் பாவி ஒருவனும் இருக்க முடியாது. எனக்குத் தாயகம் இது" என்று கூறிப் புறப்பட்டான் புலவன்.

2

சோழ நாட்டின் மற்றொரு பகுதிக்கு உறையூர் தலைநகரம். அங்கிருந்து ஆண்டு வந்தான் நெடுங்கிள்ளி. நலங்கிள்ளியின் குணச்சிறப்பு அவ்வளவும் அவனிடம் இல்லை. ஆயினும் பழங்குடியிற் பிறந்து பயின்ற பெருமையால் பல நல்லியல்புகள் அவனிடம் அமைந்திருந்தன.

இளந்தத்தன் நலங்கிள்ளியிடம் பெற்ற வரிசையுடன் புறப்பட்டான். உறையூர் சென்று நெடுங்கிள்ளியையும் பார்த்துப் பிறகு மற்ற நாடுகளுக்குப் போகலாம் என்று எண்ணினான். 'இனி நமக்கு எங்கும் சிறப்பு உண்டாகும்' என்ற உறுதியான நம்பிக்கையோடு அவன் நெடுங்கிள்ளியின் ராஜ்யத்தில் புகுந்து உறையூரை அடைந்தான்.

'நெடுங்கிள்ளியின்மேல் படையெடுப்பதற்காகச் சோழன் நலங்கிள்ளி படைகளைக் கூட்டுகிறான்' என்ற செய்தி அப்போது நாட்டில் உலவியது. அதனால் நெடுங்கிள்ளியும் தன் நாட்டுப் படைவீரர்களை நகரத்தில் கூட்டிவைத்திருந்தான். போருக்கு ஆயுத்தமாக அவ்வீரர்கள் இருந்தனர்.

இந்தச் சமயத்தில் இளந்தத்தன் உறையூர் வீதியிலே சென்றான். அவனைக் கண்ட ஒரு வீரன், 'இவன் யாரோ புதியவனாக இருக்கிறான். பகைவன் நாட்டிலிருந்து வருகிறானோ என்னவோ?' என்று எண்ணித் தன் படைத்தலைவனுக்கு அதனைக் கூறினான். தலைவன் பார்த்தான்; உடனே, "சந்தேகம் என்ன? நலங்கிள்ளியிடமிருந்து ஒற்றனாக வந்திருப்பான். இவனை மறித்துக் காவல் செய்யுங்கள்" என்ற கட்டளையை அவன் இட்டுவிட்டான்.

இளந்தத்தன் சிறைப்பட்டான். அவன் வார்த்தை ஒன்றும் முரட்டுப் போர்வீரர்களின் காதில் ஏறவில்லை." நான் நலங்கிள்ளியிடமிருந்து வருவது உண்மைதான். ஆனால் நான் ஒற்றன் அல்ல. அவனிடம் பாடிப் பரிசு பெற்று வருகிறேன். அவன் அளித்த பரிசுப் பொருள்களை இதோ பாருங்கள்" என்றான்.

"இதெல்லாம் வேஷம்; பொய். புலவன் போல வேஷம் போட்டால் சர்வ சுதந்திரம் உண்டென்று தெரிந்துகொண்டு இப்படிப் புறப்பட்டாய் போலும்!"

" நான் பிறவியிலேயே புலவன் தான். நான் பாடின பாட்டை வேண்டுமானால் சொல்லுகிறேன், கேளுங்கள்."

"அதெல்லாம் சூழ்ச்சி. வேறு யாராவது இயற்றிய பாட்டை நீ தெரிந்துகொண்டு இங்கே கதை பேசு கிறாய்."

"புதிய கவிதையைச் சொல்லட்டுமா? அப்பொழுதாவது நான் புலவனென்று தெரிந்துகொண்டு விட்டு விடுவீர்களா?"

"புதிய கவிதையும் வேண்டாம்; மண்ணும் வேண்டாம். அதெல்லாம் யமதர்மராஜன் சந்நிதானத்தில் போய்ச் சொல்லிக்கொள். நீ புலவனென்றால் பல பேருக்குத் தெரிந்திருக்குமே. இங்கே யாரையாவது தெரியுமா?"

இளந்தத்தன் இப்பொழுதானே வெளியே புறப்பட்டிருக்கிறான்? அவனுக்கு யாரைத் தெரியும்?

"ஐயோ! இந்த ஊருக்கே நான் வந்ததில்லையே! இப்பொழுதுதானே வருகிறேன்? எனக்குப் பழக்க மானவர் ஒருவரும் இல்லையே!" என்று புலம்பினான்.

நெடுங்கிள்ளியிடம், 'பகையரசனிடமிருந்து வந்த ஓர் ஒற்றனைச் சிறைப்படுத்தியிருக்கிறேன்' என்ற செய்தி படைத்தலைவனிடமிருந்து சென்றது. அரசன் முன்பின் யோசிக்கவில்லை; "தாமதம் ஏன்? கொன்று விடுங்கள்" என்ற ஆணையை வீசினான்.

'முதற் பரிசு நலங்கிள்ளி தந்தான். இரண்டாம் பரிசு யமனிடம் பெறப்போகிறோம்!' இதுதான் இளங் தத்தன் உள்ளத்தில் நின்ற எண்ணம். அட மனித வாழ்வே! அற்ப சந்தோஷமே! நேற்று அவன் இருந்த இருப்பென்ன! நின்ற நிலை என்ன! வைத்திருந்த நம்பிக்கை என்ன~! உலக முழுவதும் தன்னை வரவேற்கும் கைகளையும் பாராட்டும் வாய்களையும் கற்பனைக் கண்ணாலே கண்டான்; இன்றோ யமன் அவன் முன் நிற்கிறான். எந்தச் சமயத்தில் அவன் தலை தனியே பூமியில் உருளப்போகிறதோ!

எந்த வேளையில் அவன் புறப்பட்டானோ! அவன் தமிழ்நாடு முழுவதும் பிரயாணம் செய்து திரும்ப எண்ணிப் புறப்பட்டிருக்கவேண்டும்; திரும்பாப் பிரயாணத்துக்காகவா அவன் நாள் பார்த்தான்! எவ்வளவோ சம்மானங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து வரலாமென்ற ஆசையோடு புறப்பட்டான். இந்த உடற்பாரங்கூட இல்லாமல் செய்யுமென்றால் உறையூருக்கு அவன் வந்திருப்பானா?

அவன் கவிதையை மறந்தான்; நலங்கிள்ளியை மறந்தான். உயிர் நின்று ஊசலாட வாழ்நாளின் இறுதி எல்லையிலே நின்றான்.

3

"புறப்படு."

"எங்கே?"

"கொலைக்களத்திற்கு."

"ஆ!" அவன் மூர்ச்சையாகி விழுந்துவிட்டான். முகத்தில் நீர் தெளித்து அவனை எழுப்பினார்கள். எதற்காக? அடுத்தபடி அவனைக் கொல்வதற்காகத்தான். அப்பொழுது அங்கே ஏதோ ஆரவாரம் உண்டாயிற்று. ஒரு சிறு கூட்டத்தினர் சந்தோஷ கோஷத் தோடு அந்த வழியே வந்தனர். கோவூர்கிழார் என்ற நல்லிசைப் புலவர் வந்திருக்கிறார். அவரைச் சுற்றி ஜனங்கள் கூடிக்கொண்டு குதுகலித்தார்கள். தமிழுலக முழுவதும் பெரும் புகழ்பெற்ற சிறந்த கவிஞர் அவர். அரசனை நோக்கிச் செல்லும் அப்புலவரைச் சூழ்ந்த கூட்டம் யமனை நோக்கிச் செல்லும் இளந்தத்தனை அணுகியது. அப்பொழுதுதான் அந்த இளம் புலவன் மூர்ச்சை தீர்ந்து கண் விழித்தான். கோவூர் கிழார் போகிறார் என்பதை அந்தக் கூட்டத்தினரின் பேச்சால் உணர்ந்துகொண்டு ஓலமிட்டான்: "புலவர் திலகரே ஒலம்! கோவூர்கிழாரே ஓலம்!' என்று கதறினான்.

கோவூர்கிழார் காதில் இந்தப் புலம்பல் பட்டது. அவர் நின்றுவிட்டார். விஷயத்தை விசாரித்தார். இளந் தத்தனை அணுகிப்பேசினார். "யாதொரு பாவமும் அறியாதவன் நான். என்னை ஒற்றனென்று கொல்லப்போகிறார்கள்."

அறிவிற் சிறந்த அப்பெரியார் அவனோடு சில கணம் பேசினார்.'உண்மையில் அவன் புலவன் தான்' என்பதை உணர்ந்துகொண்டார். இனம் இனத்தை அறிவது இயல்புதானே?' என்ன காரியம் இது? பெரிய பாதகச் செயலுக்கு இவ்வரசன் உள்ளாகி விட்டானே! இந்த இளம் புலவன் குற்றமின்றியே கொலைப்படுவதா?" என்று நினைத்தபோது அவர் உடல் நடுங்கியது. கொலையாளிகளைப் பார்த்து," சற்றுப் பொருங்கள். இவரை நான் அறிவேன். இவர் ஒற்றர் அல்ல. மன்னனிடம் இதைப் போய்ச் சொல்லி வருகிறேன்" என்று கூறிவிட்டு விரைவாக அரண்மனையை நோக்கி நடந்தார்.

யமன் வாயை நோக்கிச் சென்ற கவளம் அந்தரத்திலே நின்றது.

"அரசே, அந்தப் புலவர்களின் பெருமையை நான் என்னவென்று சொல்வேன்!" என்று நிதானமாகப் பேச ஆரம்பித்தார் கோவூர்கிழார்.

"அதில் என்ன சந்தேகம்? புலவர்களால்தான் எங்களுடைய புகழ் நிலைநிற்கிறது" என்று ஆமோதித் தான் நெடுங்கிள்ளி.

"அவர்களுடைய முயற்சியைச் சொல்வதா? அடக்கத்தைச் சொல்வதா? திருப்தியைச் சொல்வதா? அவர்களும் ஒரு விதத்தில் அரசர்களாகிய உங்களைப் போன்றவர்களே!"

"கவிஞர்களென்ற பெயரே சொல்லுமே."

"எங்கெங்கே ஈகையாளர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் போகிறார்கள். பழுத்த மரம் எங்கே உண்டோ அங்கே பறவைகள் போய்ச் சேருகின்றன அல்லவா? கடப்பதற்கரிய வழிகள் நீளமானவை என்று நினைக்கிறார்களா? இல்லை இல்லை. ஒரு வள்ளல் இருக்கிறானென்றால் நெடிய என்னாது சுரம் பல கடக்கிறார்கள். அவனை அடைந்து தமக்குத் தெரிந்த அளவிலே அவனைப் பாடுகிறார்கள்.அவன் எதைக் கொடுக்கிறானோ அதைத் திருப்தியோடு பெற்றுக்கொள்கிறார்கள். பெற்றதைத் தாமே நுகராமல் தம்முடைய சுற்றத்தாரும் நுகரும்படி செய்கிறார்கள். நாளைக்கு வேண்டுமென்று வைத்துக் கொள்வதில்லை. திருப்தியாக உண்ணுகிறார்கள்; எல்லோருக்கும் தாராளமாகக் கொடுக்கிறார்கள். மறுபடியும், வரிசை அறிந்து கொடுக்கும் உபகாரி எங்கே இருக்கிறானென்று தேடிப் புறப்பட்டு வருகிறார்கள். வரிசை அறிவோர் கிடைக்காவிட்டால் வருந்துகிறார்கள். இந்த நல்ல பிராணிகளால் யாருக்காவது தீங்கு உண்டோ? கனவிலே கூட அவர்கள் மற்றவர்களுக்குத் தீங்கு நினைக்க மாட்டார்கள்; நினைக்கவும் தெரியாது. பரம சாதுக்கள். நான் சொல்வது உண்மையல்லவா?"

"முக்காலும் உண்மை. புலவர்களால் நன்மை உண்டாகுமேயன்றித் தீமை உண்டாக வழியே இல்லை அவர்கள் கடிந்து சொன்னாலும் அது நன்மையைத் தான் விளைவிக்கும்."

"அதைத் தான் நான் வற்புறுத்திச் சொல்கிறேன். இவ்வளவு சாதுவாக இருந்தாலும் அவர்களுடைய பெருமை பெரிது. உங்களைப் போன்ற சிறப்பு அவர்களுக்கும் உண்டு. பகைவர்கள் நாணும்படி தலை நிமிர்ந்து சென்று வெற்றி கொள்ளும் தன்மை அவர்களிடமும் உண்டு. கல்விவீரர்கள் அவர்கள். ஓங்கு புகழ் மண்ணாள் செல்வம் எய்திய நும்மனோரைப் போன்ற தலைமை அவர்களுக்கும் உரியதே."

"மிகவும் பொருத்தமான வார்த்தைகள்." கோவூர்கிழார் சிறிது மௌனமாக இருந்தார்.

"பிறர்க்குத் தீதறியாத வாழ்க்கையுடைய அவர்களைக் குற்றவாளிகளாக எண்ணுவது--"

"மடமையிலும் மடமை" என்று வாக்கியத்தை முடித்தான் நெடுங்கிள்ளி.

"அரசே, இன்று இந்த உண்மை இவ்வூரில் பொய்யாகிவிடுமென்று அஞ்சுகிறேன்."

"ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்?" என்று திடுக்குற்றுக் கேட்ட்டான் அரசன்.

"ஒரு பாவமும் அறியாத புலவனாகிய இளந்தத்தனைக் கொலைக்களத்துக்குப் போகும் வழியில் கண்டேன். புலவர் உலகமே தூக்கு மரத்தில் தொங்குவது போல அஞ்சினேன். ஓடி வந்தேன் இங்கே. அவன் யான் அறிந்த புலவன்."

கோவூர்கிழார் முன்னம் அப்புலவனை அறியாவிட்டாலும் ஒரு கணத்தில் அவனை அறிந்துகொண்டார் என்பதில் பிழை என்ன? ‘அப்படி அல்ல அவர் சொன்னது பொய்' என்றாலோ, ஒருவன் உயிரைப் பாதுக்காக்கச் சொன்ன அச் சொல்லைக் காட்டிலும் வாய்மை வேறு உண்டோ?

"பொறுத்தருள வேண்டும் நான் செய்தது பிழை....யர் அங்கே! ஓடுங்கள். இளந்தத்தரை விடுவித்து அழைத்து வாருங்கள்...ஆசனம் கொண்டு வாருங்கள்... என்ன பாதகம் செய்தேன்! அபசாரம்! அபசாரம்! ...பகைமை இருள் என் கண்ணை மறைத்துவிட்டது.. உங்களால் நான் அறிவு பெற்றேன்." - அரசன் வார்த்தைகள் அவன் உணர்ச்சியைக் காட்டின. அச்சமும் பச்சாதாபமும் துள்ளின அவன் வாக்கில்.கோவூர்கிழார் முகத்தில் ஒளி புகுந்தது. இளந்தத்தன் உடம்பில் உயிர் புகுந்தது. யமன் வாயில் மண் புகுந்தது. இந்த நிகழ்ச்சியை அறிந்த உலகத்தார் உள்ளத்தில் வியப்புப் புகுந்தது.