புத்தர் பொன்மொழி நூறு/முன்னுரை



முன்னுரை

நூல் அமைப்பு : ‘கவுதம புத்தர் காப்பியம்’ என்னும் காப்பியம் ஒன்று அடியேன் இயற்றியுள்ளேன். அதனையடுத்து, புத்தரின் பொன்னான அறிவுரைகள் பலவற்றை நூறு அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பாக்களில் தொகுத்து ‘புத்தர் பொன்மொழி நூறு’ என்னும் இந்நூலை இயற்றினேன்.

நன்கொடை அளிப்பவர்கள், 101 உரூபா அல்லது 1001 உரூபா எனப் பேரெண்ணோடு ஒன்று கூட்டி அளிப்பதுபோல், சரியாக நூறு பாக்களோடு நிற்காமல், வளர்ச்சி முகம் நோக்கி மேலும் ஒரு பாடல் எழுதிச், சேர்த்துள்ளேன். எனவே, இந்நூலுள் 101 பாடல்கள் இருக்கும். வழக்கம்போல் நூலின் தொடக்கத்தில் பாயிரப்பாடல் ஒன்றும், நூலின் இறுதியில் ‘நூல் பயன்’ கூறும் பாடல் ஒன்றும், மேற்கொண்டு கூடுதலாக உள்ளன. இவை இரண்டும் வெண்பாக்கள் ஆகும்.

‘புத்தர் பொன்மொழி நூறு’ என்னும் தொடரில் உள்ள நூறு என்னும் எண்ணுப் பெயர். முதலில், எண்ணல் அளவை ஆகுபெயராக நூறு பாக்களைக் குறித்து, பின்னர் இருமடி ஆகுபெயராக நூறு பாக்கள் உள்ள நூலைக் குறிக்கிறது.

புத்தர் வரலாறு: புத்தர் இந்தியாவின் வடபகுதியில், சாக்கிய நாட்டின் தலைநகரான கபிலவாஸ்த்து என்னும் இடத்தில், சுத்தோதனன் என்னும் அரசனுக்கும் அரசி மாயா தேவிக்கும் மகனாகக் கி.மு. 563ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் இளமையிலேயே வா ழ் க் கை யி ல் வெறுப்புற்றிருந்தார். ஆயினும், தந்தையின் முயற்சியால், யசோதரை என்னும் பெண்ணை ம ண ந் து கொண்டார்; இராகுலன் என்னும் மகனையும் பெற்றார். இருபத்தொன்பதாம் அகவையில் மனைவி, மகன் முதலிய சுற்றத்தார் அனைவரையும் விட்டு நீங்கி துறவு கொண்டு காட்டில் ஆறு ஆண்டு அருந்தவம் புரிந்து, பின்னர், ஆழ்ந்த எண்ணத்தால் (தியானத்தால்) மெ ய் ய றி வு (போதம்) பெற்றுப் ‘புத்தர்’ என்னும் பெயருக்கு உரியவரானார். இவரது இளமைப் பெயர் சித்தார்த்தன் என்பதாகும்.

புத்தரின் அறவுரைகளைப் பின்பற்றி அவருக்கு அன்பராகவும் அடியவராகவும் பலர் இருந்த தன்றி, துறவறத்தையும் பலர் மேற்கொண்டனர். புத்தர் சங்கம் அமைத்துத் தம் கொள்கைகளை உலகெங்கும் பரவச் செய்தார். அவரது அறநெறி ‘பெளத்தம்’ என்னும் ஒரு புது மதமாக உருவெடுத்தது. வேத வைதிக நெறிக்கு எதிராகப் பெளத்தம் செயல்பட்டது, புத்தரின் அறவுரைகள் பெளத்த மறை நூல்களாகக் தொகுக்கப் பெற்றன,

புரட்சியாளராகவும், சீர்திருத்தக்காரராகவும், பகுத்தறி வாளராகவும் விளங்கிய புத்தர், பல அருஞ்செயல்கள் ஆற்றி குசீ என்னும் இடத்தில் கி.மு. 483 ஆம் ஆண்டு தம் எண்பதாம் அகவையில் இறுதி எய்தினார். இது புத்தரின் சுருக்கமான வரலாறு.

புத்தரின் புரட்சிக் கொள்கைகள்: புத்தர் புரட்சி மிக்க கொள்கையாளர். "கடவுள் என ஒருவர் இல்லை; அப்படி ஒருவர் இருந்து கொண்டு எதையும் படைக்கவில்லை; எனவே கடவுள் பற்றிக் கவலைப்பட வேண்டா. உயிர் எனத் தனியே ஒன்று இல்லை. உடலில் உள்ள  உறுப்புக்கள்.ஒருங்கிணைந்து செயற்படும் இயக்க ஆற்றலே உயிர் எனப்படுவது. துறக்கம் (சுவர்க்கம்) என ஒன்று இல்லை, எனவே இல்லாத ஒன்றை அடைய வீண், முயற்சி செய்ய வேண்டா."

“ஏதோ நற்பேறு பெறலாம் என்ற நம்பிக்கையில், பட்டினியாலும் கடுந்தவ முறையாலும் உடலை அளவு மீறி, வருத்தி வாட்டலாகாது; அதேபோல, அளவு மீறி உண்டு கொழுத்து உடலைப் பெருக்கச் செய்யவும் கூடாது; தேவையானபோது தேவையான அளவு உணவு கொண்டு உடலை ஓம்பி, நல்லன நாடும் ‘நடுநிலை வழி’யே வேண்டத் தக்கது.”

"பேரவாக்களே (பேராசைகளே) எ ல் லா வ கை த், துன்பங்கட்கும் முதல் (காரணம்) ஆகும்; எனவே பேரவாக்களை ஒழிக்க வேண்டும். நல்லொழுக்க-நல்லற நெறிகளைப் பின்பற்ற வேண்டும். நல்லன கொண்டு அல்லன நீ க் க வேண்டும். எவ்வுயிருக்கும் தீமை செய்யாது நன்மையே செய்ய வேண்டும். இன்ன பிற நன்முறைகளைக் கைக்கொள்ளின், கிடைக்கக் கூடிய தற்பயன் கி டை த் தே தீரும்ட- புத்தரின் புரட்சிக் கொள்கைகளுள் இன்றியமையாதவை இவை.

முதல் நூல்: மற்ற மதங்கட்கு மறைநூல் (வேதம்). இருப்பது போலவே, பெளத்த மதத்திற்கும் மறைநூல்கள் உண்டு. அவை புத்தரின் அறநெறிக் கோட்பாடுகளின் தொகுப்பாகும். ‘திரிபிடகம்’ (மூன்று நூல்கள் என்னும், தொகுப்புப் பெயருடன், சுத்த பிடகம், விநய பிடகம், அபிதம்ம பிடகம் என்னும் மூன்று மறை நூல்கள் பெளத்தத்திற்கு உள்ளன. இவற்றுள் ஒன்றான சுத்த பிடகத்தில், ‘நிகாயம்’ என்னும் பெயர் உடைய ஐந்து பிரிவுகள் உள்ளன. இவ்வைந்து நிகாயங்களுள் ஒன்றான ‘குந்தக நிகாயம்’ என்னும் பிரிவில் ‘தம்ம பதம்’ என்னும் ஒரு பகுதி உள்ளது அற (தரும) நெறியை வற்புறுத்தும் 'தம்ம பதம்' என்பது, பெளத்த மதத்திற்கு மிகவும் இன்றியமையாத மறைநூல் பகுதியாகும்.

இந்தத் 'தம்மபதம்' என்னும் பிரிவுநூலில், 'இரட்டைச் செய்யுள் இயல்' (யமக வர்க்கம்) முதலாகப் பிராமண இயல்; (பிராமண வர்க்கம்) ஈறாக இருபத்தாறு (26) பிரிவுகள் உள்ளன. இந்த இருபத்தாறிலும் மொத்தம் நானுற்று இருபத்து மூன்று (423) அறவுரைகள் (உபதேசங்கள்) அடங்கியுள்ளன. தம்மபதம் பாலி மொழியில் எழுதப்பட்டது.

மொழி பெயர்ப்புகள்: தம்மபதம் பாலி மொழியிலிருந்து பிறமொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களும், நிலக்கொடை இயக்கத் தலைவராயிருந்த விநோபா அவர்களும், ஆங்கில அறிஞர் மாக்சுமில்லர் அவர்களும் இதனை ஆங்கிலத்தில் பெயர்த்துள்ளனர். தமிழிலும் இரண்டு மொழி பெயர்ப்புகள் உள்ளன. இவற்றின் துணை கொண்டு, உயர்திரு அ. லெ. நடராசன் அவர்கள் தமிழில் ஒரு மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். எளிய உ ரை நடையில் உள்ளது இப்பெயர்ப்பு.

கி. பி. 1979 ஆம் ஆண்டில் வெ ளி யா ன திரு. அ. லெ. நடராசன் அவர்களின் மொழிபெயர்ப்பு நூலின் மு த ல் பதிப்பைப் படித்த யான், அந்நூலின் துணைக்கொண்டு நானூற்று இருபத்து மூன்று அறவுரைகளுள் மிகவும் சிறப்பாகத் தோன்றிய நூற்றுக்கு மேற்பட்ட அறவுரைகளை நூற்றொரு பாடலில் தொகுத்து இந்நூலாக யாத்துத்தந்துள்ளேன்.

உரைநடை வடிவத்தினும் செய்யுள் வடிவத்திற்குத் தனி மதிப்பு உண்டு. செய்யுள் வடிவம், நெட்டுரு செய்து நினைவில் இருத்திக் கொள்வதற்கு ஏற்றது. செ ய் யு ள் வடிவில் கருத்துக்களைக் கூறின், மக்கட்கு நன்மதிப்பும்  தன்னம்பிக்கையும் ஏற்படும். அதனால் இம்முயற்சியில் ஈடுபட்டேன்.

தம்ம பதம் நூலிலுள்ள கருத்துக்கள் சிலவற்றை நூற்றொரு பாடல்களில் தொகுத்துக் கூறியிருப்பதல்லாமல் மேற்கொண்டு, புத்தர் தம் வாழ்க்கையில் பலர்க்குப் பல வேளைகளில் கூறிய அறவுரைகள் சிலவற்றைப் பதினொரு பாடல்களில் தொகுத்துப் டபிற் சேர்க்கை' என்னும் தலைப்புடன் இந்நூலின் இறுதியில் அமைத்துள்ளேன்.

கி.பி. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகிய இந்தக் காலத்தில், புதுமை, பொதுவுடைமை, புரட்சி, பகுத்தறிவு, சீர்திருத்தம், முன்னேற்றம்-என்னும் பெயர்களில் கூற ப் படும் கருத்துக்கள், இன்றைக்கு ஏறக்குறைய 2500 ஆண்டு கட்கு முன்பே புத்தரால் அருள்ப் பெற்றுள்ள கருத்துக்களில் கருக்கொண்டவை எனக்கூறலாம். புத்தர் தம் கருத்துக்களில் வலுக்கட்டாயப் படுத்தித் திணிக்கவில்லை; ஆ ய் ந் து பார்த்து நிலைமைக்கு ஏற்ப ஏற்றுக் கொள்ளலாம் என்ற உரிமையும் அளித்துள்ளார். எனவே, புத்தரின் புரட்சி பழம் பெரும் புரட்சியாகும். இதனை, இ ந் நூ லைக் கற்றுணர்வோர் நன்கு நம்புவர்.

நூலைக் கற்பதோடு அமையாமல், நூலில் கூறப்பட்டுள்ள அறக் கொள்கைகளை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. உலகில் அறநெறி ஓங்குக!.

இந்த நூலை நன்முறையில் வெளியிட்ட நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தாருக்கு நன்றி செலுத்தும் கடப்பாடு மிகவும் உடையேன்.

புதுச்சேரி

அன்புள்ள அடியவன்

பிப்ரவரி, 1985

சுந்தர சண்முகன்