புறநானூற்றுச் சிறுகதைகள்/23. நீரும் நெருப்பும் ஒன்றே!

23. நீரும் நெருப்பும் ஒன்றே!

அரசர்க்கெல்லாம் அரசனாகப் பேரரசு செலுத்தி வாழ்ந்த பூதப்பாண்டியனுடைய பெருவாழ்வு அன்றோடு முடிந்து விட்டது. கதிரவன் மறைந்தபின் சூழ்கின்ற இருட் படலத்தைப் போலப் பாண்டி நாடெங்கும் துன்பமென்கிற அந்தகாரம் சூழ்ந்திருந்தது.மக்களைத் தாயாக இருந்து பேணிய பெருவள்ளல் ஒருவன் மாண்டு போய்விட்டான் என்றால் அது சாதாரணமாக மறந்துவிடக்கூடிய துன்பமா?

ஆதவன் கதிரொளி மங்கிக் கொண்டிருக்கும் அந்தி நேரம் மதுரை மாநகரத்துக் மயானத்தில் எள் போட்டால் கீழே விழ இடமின்றி மக்கள் கூடியிருந்தனர். அத்தனைபேர் முகத்திலும் ஒளியில்லை; களையில்லை; சோகம் குடி கொண்டிருந்தது.

பூதப்பாண்டியனின் சடலத்தை ஈமச் சிதையில் எடுத்து வைத்தனர். சிதையைச் சுற்றிக் காலஞ்சென்ற மன்னரின் மெய்க்காவலர்களும் அவருக்கு மிகவும் பழக்கமான புலவர் பெருமக்களும் துக்கமே வடிவமாக நின்று கொண்டிருந்தனர். வேறு சிலர் அமைதியாகக் கண்ணிர் சிந்திக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் அமைதியாகத் தலைகுனிந்தவாறே நின்று கொண்டிருந்தனர்.

சிதைக்கு நெருப்பு மூட்டினார்கள். செங்கோல் நெறி தவறாமல் அரசாண்ட அந்தப் பெருந்தகையாளனின் உடலைப் புசிப்பதில் நெருப்புக்கு ஏன் அவ்வளவு வெறியோ தெரியவில்லை. நெருப்பு வேகமாகப் பற்றியது. தீ நாக்குகள் மேலே எழுந்து படர்ந்தன.

அந்த நிலையில் யாரும் எதிர்பாராத நிகழ்ச்சி அங்கே நடந்தது. நெருக்கியடித்துக்கொண்டு நின்ற கூட்டம் வழிவிட்டு விலகியது. திரைச்சீலையிட்டு மூடிய சிவிகை ஒன்றைச் சுமந்து கொண்டு வந்து சிதைக்கு அருகில் வைத்தார்கள். சிவிகையின் இரண்டு பக்கத்துத் திரைச் சிலைகளிலும் மகரமீன் வடிவான பாண்டியப் பேரரசின் இலச்சினைகள் வரையப்பட்டிருந்தன.

அந்தச் சிவிகையின் வரவை அங்கிருந்தவர்களில் யாருமே எதிர்பார்க்கவில்லை யாகையால் அதிலிருந்து இறங்கி வரப் போவது யாராயிருக்கலாம் என்ற ஆவலுடன் அனைவர் கண்களும் சிவிகையின் திரைச் சீலையில் நிலைத்து விட்டிருந்தன. வளைகளனியாததனால் மூளியான இரண்டு மலர்க்கரங்கள் சிவிகையின் திரைச்சீலையை விலக்கின.

அடுத்தகணம், முடியாமல் விரித்த கூந்தலும், நீர்வடியும் சிவந்த விழிகளும் களையிழந்த தோற்றமுமாகப் பூதப் பாண்டியனின் தேவி பெருங்கோப் பெண்டு திரையை விலக்கிக் கொண்டு பல்லக்கிலிருந்து வெளியே வந்தாள். யாவரும் திகைத்தனர்.

திலகமில்லாத அவள் முகம் அங்கிருந்தோரின் துயரத்தை வளர்த்தது. “கற்பரசியாகிய இந்த அம்மையாருக்கு இத்தகைய துன்பத்தைச் செய்யக் கடவுள் எவ்வாறு துணிந்தார்? கடவுளுக்கு இரக்கமே இல்லையா?” என்று விதியையும் கடவுளையும், பலவிதமாக நொந்து கொண்டிருந்தனர் அங்கிருந்தோர்.

சிவிகையிலிருந்து சோகச் சித்திரம் ஒன்று எழுந்து வெளிவருவது போல வெளிவந்த பெருங்கோப்பெண்டு எரிகின்ற ஈமச்சிதையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந் தாள். கயல் மீனின் உருவ அமைப்பும் கருவண்டின் சுழற்சியும் செந்தாமரை மலரின் நிறமும் கொண்ட அவள் விழிகள் மாலை மாலையாகக் கண்ணிர் வடித்தன. அவளுடைய உள்ளத்து ஆசைகளும், அந்த ஆசைகளால் மலர்ந்த கனவுகளும் அந்தக் கனவுகளால் விளைந்த இன்பமும் - அவ்வளவேன் - அவள் சம்பந்தமான சர்வமும் அந்தச் சிதையில் தியோடு தீயாக எரிந்து தீய்ந்து கொண்டிருப்பதாக அவளுக்குத் தோன்றியது. பித்துப் பிடித்தவளைப்போல அப்படியே சிதையைப் பார்த்துக்கொண்டு நின்றாள் அவள். என்ன நடக்கக் போகிறதோ, என்ற திகைப்பும், பயமும்கொண்டு கூட்டத்தினரும் நின்றனர்.

மெய்க்காவலர்கட்கும் புலவர் பெருமக்களுக்கும் பெருங்கோப்பெண்டு அங்கே வந்ததன் நோக்கமென்ன என்று கேட்பதற்கு வாயெழவில்லை. அஞ்சி நின்றனர். “தேவி என்ன நோக்கத்தோடு அங்கே வந்திருக்கிறாளோ?” என்ற அச்சம் அவர்கள் மனத்திலும் இருந்தது.

சிதையில் தீ இப்போது முற்றும் பரவி நன்றாகக் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. சிதையையே பார்த்துக் கொண்டிருந்த பெருங்கோப் பெண்டு கண்ணிரைத் துடைத்துக் கொண்டாள்.இப்போது அவள் முகத்தைப் பார்த்தால் ஏதோ ஒரு வைராக்கியமான முடிவிற்கு வந்தவளைப் போலத் தோன்றியது.

சட்டென்று எரியும் சிதையை நோக்கி ஆவேசத்தோடு - பாய்ந்தாள் அவள் கூடியிருந்தவர்கள் ஒன்றும் செய்யத்தோன்றாமல் “ஆ, ஐயோ!” என்று பரிதாபமும் பயமும் நிறைந்த குரல்களை எழுப்பினர். மெய்க்காவலர்களும் புலவர்களும் அந்த ஒரே ஒரு விநாடிஅஜாக்கிரதையாக இருந்திருந்தால்பெருங்கோப் பெண்டு கணவன் உடலை எரித்துக் கொண்டிருந்த தீயோடு தீயாகத் தானும் சங்கமமாகியிருப்பாள். நல்ல வேளை அவள் குபிரென்று பாய்ந்தபோது காவலர்களும் புலவர்களும் விரைவாகக் குறுக்கே பாய்ந்து அப்படிநேர்ந்துவிடாமல் அவளை மறித்துக் கொண்டனர்.

பெருங்கோப் பெண்டு அவர்களையும் மீறித் திமிறிக் கொண்டு சிதையில் பாய்வதற்கு யத்தனித்தாள். புலவர்களும் காவலர்களும் சூழ நின்று கொண்டுவிட்டதனால் அது முடியவில்லை.

“ஏன் என்னைத் தடுக்கின்றீர்கள்? நான் என் கணவரோடு போகப் போகிறேன். என்னைவிட்டு விடுங்கள்.” பெருங்கோப் பெண்டு துயர வெறி நிறைந்த குரலில் ஒலமிடுவது போலக் கூறினாள்.

“தேவி வீண் ஆத்திரம் கொள்ளாதீர்கள். தங்கள் கணவரை இழந்து துயரமுற்றிருக்கும் இந்த நிலையில் தாங்களும் இப்படி வலுவில் உயிரை மாய்த்துக்கொள்ள முயல்வது எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாதது. பெருங்கோப் பெண்டுடன் ஏற்கனவே அறிமுகமாயிருந்த புலவர்கள் இவ்வாறு வேண்டிக் கொண்டனர்.

அவன் அவர்களைச் சுட்டெரித்து விடுவதுபோல ஏறிட்டுப் பார்த்தான்.

“ஆம் தாயே! எங்கள் வேண்டுகோளை நீங்கள் புறக்கணிக்கக்கூடாது.இந்த அதிபயங்கரமானகாரியத்தை எங்கள் கண்காண நீங்கள் செய்யவிடமாட்டோம்” புலவர்கள், மெய்க் காவலர்கள் எல்லோரும் சேர்ந்து ஏகோபித்துக்கூக்குரலிட்டனர்.

பெருங்கோப்பெண்டின் முகத்தில்துயரம் நீங்கி ஆத்திரமும் கடுகடுப்பும் நிழலிட்டன. கண்களின் சிவப்பு முன்னை விட அதிகமாயிற்று.

“புலவர் பெருமக்களே! நீங்கள் எல்லோரும் சான்றோர்கள் தாமா? உண்மையில் உங்களிடம் சான்றாண்மை இருக்கிறதா? என் ஆருயிர்க் கணவன் பிரிவைப் பொறுக்க முடியாமல் அவரோடு சிதையில் ஏறப்போகும் என்னைத் தடுப்பதற்கு நீங்கள் யார்? ஏன் தடுக்கின்றீர்கள்? என் நன்மையை விரும்புகிறதானால் என்னைத் தடுக்காதீர்கள்.”

கோபம் தொனிக்கும் குரலில் அவள் இப்படிக் கூறியதும், புலவர்களில் துணிவுள்ள சிலர் பதில் சொல்ல முன்வந்தனர். “தேவீ தங்களைத் தடுக்க நாங்கள் யார்? தங்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்ற முறையில் பணிவோடு வேண்டிக் கொள்கிறோம்”

“சான்றோர்களே! எது என் நலன், எது என் நலன் இல்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். கணவனை இழந்து துயரத்தைப் பொறுத்துக்கொண்டு, நெய்யில்லாத சோறும் தாளிக்காத வேளிக் கீரையும் பிண்டம் பிண்டமாகப் பிழிந்து எடுத்த பழைய சோறும் உண்டு, பாய் விரிக்காமல் வெறுந் தரையிலே படுத்து வாழும் பயங்கரமான அந்தக் கைம்மை வாழ்வைக்காட்டிலும் இன்றே இப்போதே என் கணவரின் ஈமச் சிதையில் வீழ்ந்து இறப்பதே எனக்கு நன்மை. புலவர் பெருமக்களே! மெய்க்காவலர்களே! தாமரைப் பூக்கள் மலர்ந்திருக்கும் குளிர்ந்த தடாகத்தில் மூழ்கிக் குளிப்பதைப் போன்ற இன்பம் இந்தத் தீயில் எனக்குக் கிடைக்கப் போகிறது. இப்போது நான் இருக்கும் நிலையில் அந்தப் பொய்கை நீரும் இந்த ஈமச் சிதையின் நெருப்பும் ஒன்றுதான். அந்தக் குளிர்ந்த நீரின் தண்மைதான் இந்த வெப்ப நெருப்பின் கொழுந்துகளிலும் இருக்கின்றது. தயவு செய்து என்னைத் தடுக்காதீர்கள். இந்த நெருப்பு என்னைச் சுட்டு எரிக்கும் என்று நீங்கள் கருதினால் அது உங்களுடைய அறியாமையே அன்றி என் குற்றமில்லை. இது நெருப்பில்லை. குளிர் பூம் பொய்கை.

“தாயே! தாங்கள் சித்தப் பிரமையால் எங்களிடம் ஏதேதோ சொல்கிறீர்கள்.” “யாருக்குச் சித்தப்பிரமை புலவர்களே? எனக்கா? இல்லை! இல்லை! நினைவோடுதான் கூறினேன். இதோ கூறியதை நிரூபித்தும் காட்டிவிடுகிறேன். பாருங்களேன்.” இப்படிக் கூறிக் தொண்டே வழியை விலக்கிச் சரேலென்று சிதையை எரித்துக் கொண்டிருந்த தீமூட்டத்திற்குள் பாய்ந்துவிட்டாள் பெருங்கோப் பெண்டு. யாருக்கும் அவள் பாய்ந்த வேகத்தில் தடுக்கவே தோன்றவில்லை. பேயறைந்தவர்கள் போலத் திகைத்து நின்றார்கள் அத்தனைபேரும்.அந்தக் கற்பின்செல்வியும் தனக்குக் கிடைத்த பெருமையில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. நீரும் நெருப்பும் ஒன்றுதான் என்று குரல் கொடுப்பது போலிருந்தது சடசடவென்று தீ எரியும் ஒலி.

பெருங்கோப்பெண்டின் கற்பை என்னென்று புகழ்வது!

பல்சான் ஹீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லாது ஒழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது
அடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்ளெட் சாந்தொடு புளிபெய்து அட்ட
வேளை வெந்தை வல்சி ஆகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரிது ஆகுக தில்ல எமக்கெம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்பற
வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையும் தீயுமோ ரற்றே! (புறநானூறு- 246)

கொடுங்காய் = வெள்ளரிக்காய், போழ்தல் = அரிதல், காழ் போல் நல்விளர் =நறுநெய் = விதைபோல உறைந்த வெள்ளிய நெய், அடை = இலை, கைப்பிழி பிண்டம் = நீரில் ஊறிய பழஞ்சாறு, எட்சாந்து = எள்ளுத் துவையல், வல்சி = உணவு, பரற்பெய் கரடுமுரடான தரையில், உயவற் பெண்டிர் = கைம் பெண்கள், ஈமம் சிதை, ஒரற்றே = ஒரே தன்மையை உடையனவே.