புறப்பொருள் வெண்பாமாலை/கரந்தைப் படலம்

துறைகள்

தொகு
கதமலி கரந்தை கரந்தை யரவம்
அதரிடைச் செலவே அரும்போர் மலைதல்
புண்ணொடு வருதல் போர்க்களத்து ஒழிதல்
ஆளெறி பிள்ளை பிள்ளைத் தெளிவே
பிள்ளை யாட்டொடு கையறு நிலையே
நெடுமொழி கூறல் பிள்ளைப் பெயர்ச்சி
வேத்தியன் மலிபே மிகுகுடி நிலையென
அருங்கலை யுணர்ந்தோர் அவைபதி னான்கும்
கரந்தையும் கரந்தைத் துறையும் என்ப.

கரந்தைத் திணை

  1. கரந்தை
  2. கரந்தை யரவம்
  3. அதரிடைச் செலவு
  4. போர் மலைதல்
  5. புண்ணொடு வருதல்
  6. போர்க்களத்து ஒழிதல்
  7. ஆளெறி பிள்ளை
  8. பிள்ளைத் தெளிவு
  9. பிள்ளையாட்டு
  10. கையறு நிலை
  11. நெடுமொழி கூறல்
  12. பிள்ளைப் பெயர்ச்சி
  13. வேத்தியன் மலிபு
  14. குடிநிலை

என்று 14 துறைகளைக் கொண்டது.

எண்- துறைகள் - நிலைகள்

1)கரந்தை,கரந்தை அரவம், அதரிடைச் செலவு. ----ஆநிரையை மீட்க செல்லல்.

2)போர் மலைதல், புண்ணோடு வருதல்,போர்களத்து ஒழிதல் ------போரும் விளைவும்

3)ஆளெறி பிள்ளை,பிள்ளைத் தெளிவு, பிள்ளையாட்டு. -----இளைஞர் சிறப்பு.

4)கையறு நிலை,நெடுமொழிக் கூறல்,பிள்ளைப் பெயர்ச்சி. ------ போர்நிகழ்ச்சி

5)வேத்தியல் மலிபு,குடிநிலை.-----மன்னர் பெருமையும் வீரர்சிறப்பும்



கரந்தை

தொகு
மலைத்தெழுந்தோர் மறஞ்சாயத்
தலைக்கொண்ட நிரைபெயர்த்தன்று. - கொளு
போரிட்டவர் மறம் சாய
கவர்ந்து சென்ற ஆனிரைகளை மீட்பது
அழுங்கனீர் வையகத் தாருயிரைக் கூற்றம்
விழுங்கியபின் வீடுகொண் டற்றாற் – செழுங்குடிகள்
தாரார் கரந்தை தலைமலைந்து தாங்கோடல்
நேரார்கைக் கொண்ட நிரை.
கூற்றம் கொண்ட உயிர் வீடு பேறு பெறுவது போல
கரந்தைப் பூ மாலை அணிந்துகொண்டு
கவர்ந்து சென்ற ஆனிரைகளைக் குடிமக்கள் மீட்டனர்

கரந்தையரவம்

தொகு
நிரைகோள் கேட்டுச் செய்தொழி லொழிய
விரைவனர் குழூஉம் வகையுரைத் தன்று. - கொளு
ஆனிரை கவர்ந்து செல்லப்பட்டதை கேட்டு,
செய்யும் தொழிலை விட்டுவிட்டு,
விரைந்து ஒன்று கூடல்
காலார் கழலார் கடுஞ்சிலையார் கைக்கொண்ட
வேலார் வெருவந்த தோற்றத்தார் – காலன்
கிளர்ந்தாலும் போல்வார் கிணைப்பூசல் கேட்டே
உளர்ந்தார் நிரைப்பெயர்வு முண்டு.
காலில் வீரக்கழல், கையில் வில்,, வேல் கொண்டோர் அச்சம் தரும் தோற்றத்தராய், வெட்சியார் முழங்கிய கிணை ஒலி கேட்டு திரண்டனர். இவர்கள் ஆனிரையைப் பெயர்த்து மீட்டு வருவர் எனத் தெரிகிறது.

அதரிடைச் செலவு

தொகு
ஆற்றா ரொழியக் கூற்றெனச் சினைஇப்
போற்றார் போகிய நெறியிடை யேகின்று.
போரிட மாட்டாதவர் விலகிக்கொள்ள, பிற மறவர், ஆனிரைகளை மீட்பதற்காக, கவர்ந்து சென்ற அதே வழியில் செல்லல்
சங்குங் கருங்கோடுந் தாழ்பீலிப் பல்லியமும்
எங்கும் பறையோ டெழுந்தார்ப்ப- வெங்கல்
அழற்சுரந் தாம்படர்ந்தா ரான்சுவட்டின் மேலே
நிழற்கதிர்வேன் மின்ன நிரைத்து.
சங்கு, கொம்பு, பல ஒலிக்கருவிகள் - பறை முழங்க
சுரத்தில் ஆனிரைகள் சென்ற அடிச்சுவட்டைப் பின்பற்றி
மின்னும் வேலுடன் சென்றனர்

போர்மலைதல்

தொகு
வெட்சி யாரைக் கண்ணுற்று வளைஇ
உட்குவரத் தாக்கி யுறழ்செருப் புரிந்தன்று. - கொளு
ஆனிரை கவர்ந்து சென்ற வெட்சியாளரைக் கண்டு
அவர்களை வளைத்து
அவர்கள் அஞ்சுமாறு போரிடல்
புலிக்கணமுஞ் சீயமும் போர்க்களிறும் போல்வார்
வலிச்சினமு மானமுந் தேசும் – ஒலிக்கும்
அருமுனை வெஞ்சுரத் தான்பூசற் கோடிச்
செருமலைந்தார் சீற்றஞ் சிறந்து.
புலிக்கூட்டம், சிங்கம், யானை ஆகியவை
தாக்கிக்கொள்வது போல
சினம், தன்மானம், புகழ் ஆகியவற்றுக்காகப்
போரிட்டனர்

புண்ணொடு வருதல்

தொகு
மண்ணோடு புகழ்நிறீஇப்
புண்ணோடுதான் வந்தன்று. -கொளு
தன் மண்ணின் புகழைக் காப்பாற்றி,
விழுப்புண்ணோடு திரும்புதல்
வெங்குருதி மல்க விழுப்புண் ணுகுதொறூஉம்
இங்குலிகஞ் சோரும் வரையேய்க்கும் – பைங்கண்
இனம்போக்கி நின்றா ரிகல்வாட்டி வேந்தன்
மனம்போல வந்த மகன்.
வேந்தன் விருப்பப்படி
வெற்றியுடன் திரும்பிய மகன்
மலையில் அரக்கு வழிவது போல
மார்புப் புண்ணில் குருதி வழியத்
தோன்றினான்

போர்க்களத் தொழிதல்

தொகு
படைக்கோடா விறன்மறவரைக்
கடைக்கொண்டு களத்தொழிந்தன்று. - கொளு
குதிரைப் படைக்கருவி இல்லாத நடைமறவரைத் தாக்கியதால்
அவன் கடைசி வரையில் போராடிப்
போர்க் களத்திலேயே ஒழிதல்
உரைப்பி னதுவியப்போ வொன்னார்கைக் கொண்ட
நிரைப்பின் நெடுந்தகை சென்றான்- புரைப்பின்
றுளப்பட்ட வாயெல்லா மொள்வாள் கவரக்
களப்பட்டான் றோன்றான் கரந்து.
சொன்னால் அது வியப்போ
பகைவர் கைக்கொண்ட ஆனிரையை மீட்டுக்கொண்டு வந்த நெடுந்தகை
வாளால் தாக்கப்பட்டுப் போர்க்களத்தில் மாண்டான்

ஆளெறி பிள்ளை

தொகு
வருவாரை யெதிர்விலக்கி
ஒருதானாகி யாளெறிந்தன்று. - கொளு
தாக்க வருபவரை விலக்கித்
தனி ஒருவனாக ஆள்மறவரைக் கொல்லல்
பிள்ளை கடுப்பப் பிணம்பிறங்க வாளெறிந்து
கொள்ளைகோ ளாயந் தலைக்கொண்டார் – எள்ளிப்
பொருதழிந்து மீளவும் பூங்கழலான் மீளான்
ஒருதனியே நின்றா னுளன்.
ஆண்பிள்ளை போல்
போர்மறவர் பலரைப் பிணமாக்கித்
தனியே போரிட்டான்

பிள்ளைத் தெளிவு

தொகு
கண்மகிழ்ந்து துடிவிம்மப்
புண்மகிழ்ந்து புகன்றாடின்று.
பகைவரை வென்ற மறவன்
துடி முழக்கத்துடன்
போர்க்களத்தில் மகிழ்வுடன் ஆடியது
மேவா ருயிருணங்க மேன்முடித்த பிள்ளையன்
பூவா ளுறைகழியாப் போர்க்களத் – தோவான்
துடியிரட்டி விம்மத் தொடுகழலார் முன்னின்
றடியிரட்டித் திட்டாடு மாட்டு.
பகைவர் மாயும்படி முடித்து வைத்த பிள்ளை
தன் வாளைச் சுழற்றிக்கொண்டு
போர்களத்தில்
துடி முழக்கும் ஓசைக்கு ஏற்ப ஆடினான்

பிள்ளையாட்டு

தொகு
கூடலர்குடர் மாலைசூட்டி
வேறிரித்து விரும்பியாடின்று.
பகைவர் குடலை வேலில் தூக்கிக்கொண்டு மறவன் மகிழ்வுடன் ஆடல்
மாட்டிய பிள்ளை மறவர் நிறந்திறந்து
கூட்டிய வெஃகங் குடர்மாலை – சூட்டியபின்
மாறிரியர் சீறி நுடங்குவான் கைக்கொண்ட
வேறிரிய விம்முந் துடி.
பகைவர் மார்பில் பாய்ச்சிய வேலில் பகைவர் குடலை மாட்டிக்கொண்டு மறவன் ஆடும்போது
பாணர் துடியை முழக்கினர்

கையறுநிலை

தொகு
வெருவரும் வாளமர் விளிந்தோற் கண்டு
கருவி மாக்கள் கையற வுரைத்தன்று.
வாள் போரில் மாண்டவர் பற்றி அவர்களது உறவினர்களிடம் தன் இரங்கலைப் பரிமாறிக் கொள்ளல்
நாப்புலவர் சொன்மாலை நண்ணார் படையுழக்கித்
தாப்புலி யொப்பத் தலைக்கொண்டான் – பூப்புனையும்
நற்குலத்துட் டோன்றிய நல்லிசையாழ்த் தொல்புலவீர்
கற்கொலோ சோர்ந்திலவெங் கண்.
புலவர் பாராட்டும்படி
போர்களத்தில் பகைவரை வென்றவன் புகழை
அவன் குலத்தவர்களிடம்
பாணன் யாழ் மீட்டிப் பாடினான்

நெடுமொழி கூறல் .

தொகு
மன்மேம் பட்ட மதிக்குடை யோற்குத்
தன்மேம் பாடு தானெடுத் துரைத்தன்று. - கொளு
அரசன் முன்னர் போர்மறவன் தன் மேம்பாட்டை எடுத்துரைத்தல்
ஆளமர் வெள்ளம் பெருகி னதுவிலக்கி
வாளொடு வைகுவேன் யானாக – நாளும்
கழிமகிழ் வென்றிக் கழல்வெய்யோ யீயப்
பிழிமகி ழுண்பார் பிறர்.
வெற்றி விரும்பும் வேந்தனே
ஆள் வெள்ளம் பெருகித் தாக்கினால்
அதனை விலக்கி என் வாளால் தாக்குவேன்
மற்றவர்கள்
பழத்தில் பிழிந்த ‘மகிழ்’ தேறலை உண்பர்

பிள்ளைப் பெயர்ச்சி

தொகு
போர்தாங்கிப் புள்விலங்கியோனைத்
தார்வேந்தன் றலையளித்தன்று. - கொளு
பகைவர் போரை எதிர்த்து நின்று
புள் நிமித்தத்தை வென்றவனுக்கு
வேந்தன் பரிசு வழங்கிப் பாராட்டல்
பிணங்கமருட் பிள்ளை பெயர்ப்பப் பெயரா
தணங்கஞர்செய் தானெறித னோக்கி – வணங்காச்
சிலையளித்த தோளான் சினவிடலைக் கன்றே
தலையளித்தான் றண்ணடையுந் தந்து.
பிணங்கும் போர்
ஆண்பிள்ளையாக அவன் வென்று பெயர்ந்தான்
அணங்கு போல் போரிட்டான்
இதனை அறிந்த அரசன் அவனை வணங்கினான்
அரசன் மலை போன்ற தோளான்
வென்ற சினவிடை தலைலில் விருதுப் பூ சூட்டித்
தண்ணடை நிலங்களையும் வழங்கினான்

வேத்தியன் மலிபு

தொகு
தோள்வலிய வயவேந்தனை
வாள்வலிமறவர் சிறப்புரைத்தன்று.
தோளாற்றல் மிக்க வேந்தனின் சிறப்பினை வாள் மறவர்கள் சிறப்பித்துப் போற்றுதல்
அங்கையு ணெல்லி யதன்பய மாதலாற்
கொங்கலர் தாரான் குடைநிழற்கீழ்த் – தங்கிச்
செயிர்வழங்கும் வாளமருட் சென்றடையார் வேல்வாய்
உயிர்வழங்கும் வாழ்க்கை யுறும்.
உள்ளங்கை நெல்லிப் பழம் போல உதவுபவன் அரசன்
அவன் குடை நிழலில் வாழ்கிறோம்
நாம் போருக்குச் செல்லவில்லை
போர்த்தாக்குலைத் தடுத்து நமக்கு உயிர் வழங்கியிருக்கிறான்
என்று மக்கள் மன்னனைப் போற்றினர்

குடிநிலை

தொகு
மண்டிணி ஞாலத்துத் தொன்மையு மறனும்
கொண்டுபிற ரறியுங் குடிவர வுரைத்தன்று.
உலகில் தொன்மையும், மறமும் கொண்டு விளங்கிய குடி வழிவழியாக வரும் சிறப்பினை எடுத்துரைத்தது
பொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் – கையகலக்
கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு
முற்றோன்றி மூத்த குடி.
உலகில் உணவுக்காக, கிழங்கு முதலானவற்றைக் கல்லி (தோண்டி) எடுத்து உண்ணும் காலம் தோன்றி
உழுது உண்ணும் மண் தோன்றாத காலத்திலிருந்தே
கையில் வாளுடன்
முன்னே தோன்றிய
மூத்த குடிமக்கள் இவர்கள்
இவர்கள் மன்னனுக்குப் புகழ் வ்விளைவிப்பதில் என்ன வியப்பு

இரண்டாவது கரந்தைப்படலம் முற்றிற்று.