புல்லின் இதழ்கள்/அருணோதயம்

 
1. அருணோதயம்

வைகறை நேரம். ஞானமும் அஞ்ஞானமும் இணைந்தாற் போல ஒளியும் இருளும் கலந்து உறவாடும் நேரம். எங்கும் இளம் பனி பெய்து கொண்டிருந்தது. புல்லின் நுனிகள் வைரமுடி தாங்கி ஒளிர்ந்தன. காலை நேரத்துக் குளிர்ந்த காற்று, ஆலமரத்தின் தளிர் இலைகளை மெல்லக் ‘கிசு-கிசு’ செய்து கொண்டே ஓடிற்று.

புலர்ந்தும் புலராத அந்த இனிய பொழுதைச் சுவாமிமலை மக்கள் உறக்கத்தில் கழித்துக் கொண்டிருந்தனர். கீழைத் தெருவில் இருக்கும் மகாவித்துவான் சுப்பராம பாகவதரின் வீடு மட்டும் விழித்துக் கொண்டிருந்தது. பாகவதருடைய பிரதம சிஷ்யன் ஹரி தம்பூராவை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தான். அவன் நெற்றியில் அணிந்திருந்த திருநீற்றின் நறுமணம் அறை முழுவதும் கமழ்ந்தது. அவன் உடம்பெல்லாம் மணத்தது. அவன் மனம் குருவின் தியானத்தில் நிரம்பி வழிந்தது.

உயிர் பெற்ற விரல்கள் தழுவிக் கொண்டிருந்த தம்பூராவின் தந்திகளை வருடின. மறு கணம் அலையலையாகப் பரவிய நாத வெள்ளம் நிறைந்து வீடு முழுவதும் பரவி, வெளியெங்கும் வழிந்தது. அந்த இனிய நாதத்தில் தன்னை மறந்து, சுருதியுடன் இணைந்து, கணிரென்று பாடிய ஹரியினுடைய குரல் தேவ கானமாக ஒலித்தது, அந்த இன்னிசையில் இளந்தென்றல் தவழ்ந்தது.

மெல்லிய துயில் நீங்கி அன்னை காவிரி சிறு சலசலப்புடன் சென்று கொண்டிருந்தாள். அழகிய கரிய கூந்தலைப் போல, ஆற்றின் இரு மருங்கிலும் நீண்டு ஒயிலாகக் கரிய நிற மணல் படிந்திருந்தது. அதன் மீது யாரோ விண்ணிலிருந்து சொரிவதே போல வெண்மையும் செம்மையும், பொன்னிறமும் நீலமும் கலந்த நறுமலர்கள் மரங்களிலிருந்து உதிர்ந்து கொண்டிருந்தன.

ஹரி பாடிக் கொண்டே இருந்தான். தெய்வீக மணத்தைப் பரப்பிய அந்த இசையில் பிரபஞ்ச மலர் ஒவ்வோர் இதழாக மலர்ந்தது. கீழ் வானம் வர்ண ஜாலங்களை வாரி இறைத்த வண்ணம் வெளுத்து வந்தது.

ஹரியின் அந்த இசைக்குப் போட்டியாக பாடுவதே போல் பறவையினங்கள் இனிய குரலில் சுப்ரபாதம் பாடிக் காலைக் கதிரவனை வரவேற்றன. தாய்மை பெற்ற பெண்ணின் பசுமை அழகோடு, செடி கொடி மரங்கள் பூர்ண கும்பம் ஏந்தி நிற்பன போல் தங்கள் மலர்க் கொத்துக்களைத் தாங்கிய வண்ணம் இசையில் லயித்து நின்றன.

பாற்கடலைக் கடைவதே போல, நாபியிலிருந்து நாதத்தைக் கொணர்ந்து ஹரி பாடிக் கொண்டே இருந்தான். அமுதமென ஸ்வரக் கோர்வைகள், அவனுடைய தொண்டையினின்றும் விளம்ப, மத்திம, துரித கால கதிகளில் புரண்டோடிக் கொண்டிருந்தன. செங்கோளமாகக் கீழ்த் திசையில் கதிரவன் உதயமானான், கமலம் நாணத்தோடு சிரித்து மலர்ந்தது. சிருஷ்டியின் அற்புதத் தத்துவத்தை விளக்கும் மலர்கள் ஆதித்தனைச் சிரம் தாழ்த்தி வணங்கின.

இரவெல்லாம் கடுங்குளிரில் தன் காதலனை நினைந்துருகிய நிலமகளை, ரவி தன் பொற்கரங்களால் தாவி அணைத்தான். அந்த மஞ்சள் நிற மேனி அழகி, வைரம் பதித்த அழகிய புல்லின் இதழ்களைத் தன் மலர் விழிகளால் பார்க்கிறாள். கதிர்கள் உயிரினத்துக்குப் புத்துயிரூட்டி வாழ்த்துகின்றன.

ஒவ்வொரு நாளும் புறத்தே நிகழும் இந்த விசித்திரமான இயற்கையின் நிகழ்ச்சிகளையும், நிலைகளையும் உள்ளத்திலே கண்டு, இசையிலே தோய்ந்து ஹரி அநுபவித்துப் பாடிக் கொண்டிருந்தான். இசையிலே பிறந்து, இசையிலே முடியும் இந்த உலகில் ஒவ்வோர் அங்கமும் இசையின் அம்சமே அல்லவா? பூபாளம், தேவக்ரியா, ரேவகுப்தி, தேவகாந்தாரி என்று மாறி மாறி, ஆனால் அதன் அதன் உண்மை உருவம் சிறிதும் மாறாமல், காலத்தின் வளர்ச்சிக்கேற்ப, ஞானத்தின் சிறப்பை எடை போட்டுப் பூரணத் தன்மையுடன் முறைப்படி அவன் இசைத்துக் கொண்டிருந்தான்.

தன்யாசியை அவன் பாடிக் கொண்டிருந்த போது, பூமியில் தெளிவு பளிச்சிட்டது. பைரவிக்கு வந்தான். மண்ணின் மாண்பு தெரிந்தது; மாந்தரின் குணம் புரிந்தது—

ஹரி பாடுவதை நிறுத்தினான். தம்பூராவை எடுத்துக் கொண்டு எழுந்திருந்தான். கதவு மூடியிருந்ததைக் கண்டதும் ‘திக்’கென்றது. ஒரு கணம் யோசித்தான். கதவை மூடிக் கொண்டு உட்கார்ந்ததாக அவனுக்கு நினைவில்லை. அது பழக்கமும் இல்லை, கதவை மூடிக் கொண்டு பாடக் கூடாது என்பது, பாகவதரின் - குருநாதரின் உத்தரவு. சாதகம் செய்வது தெளிவாகக் கேட்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.

ஹரி சாதகம் செய்யும் போது அவர் கட்டிலில் படுத்திருந்தவாறே கேட்டுக் கொண்டிருப்பார். தவறு இருந்தால், உடனுக்குடன் கவனித்துத் திருத்துவது வழக்கம். இன்று அவர் ஊரில் இல்லை. ஆனால்—

அந்தப் பழக்கத்தையொட்டிய தன் செய்கைக்கு இன்று ஏற்பட்ட கண்டனத்தை அவன் பூரணமாக அறியா விட்டாலும், அது யாரால் ஏற்பட்டிருக்கும் என்பதை அவனால் ஊகிக்க முடிந்தது. அதை எண்ணிப் பார்க்கையில் மனத்துக்கு வேதனையாகவும் இருந்தது.

சுசீலாவுக்கு ஆதியிலிருந்தே அவனிடம் வெறுப்பு. ஆனால், அது ஏன் ஏற்பட வேண்டும்? ‘அப்படி ஏற்பட நான் என்ன தவறு செய்தேன்?’ என்று அவன் பல முறை யோசித்துப் பார்த்திருக்கிறான். அப்படி அவள் நடந்து கொள்ள ஒரு குற்றமும் தான் செய்ததாக அவனுக்கு நினைவே இல்லை. ஆயினும், அவனுக்கு ஒன்று புரிந்தது; அன்பு காட்டுவதற்கும், வெறுப்பூட்டுவதற்கும் காரண காரியம் எதுவும் தேவையில்லை. எல்லாவற்றையும் மீறி ஏதோ ஒன்று இருக்கிறது. அது அவரவர் மனத்தைப் பொறுத்த விஷயம். அதை ஆராய்ந்து மூளையைக் குழப்பிக் கொள்வதை விட, ‘சுசீலாவுக்கு என்னை ஏனோ பிடிக்காமற் போய் விட்டது’ என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுவது எளிதாக இருந்தது.

சுசீலா தன் வெறுப்பை ஒவ்வொரு சிறு செயலிலும் காண்பித்தாள். முதலாவது தன் தந்தை ஹரியைத் தேடிக் கண்டு பிடித்து, வீட்டோடு வைத்துக் கொண்டு வித்தை சொல்லிக் கொடுத்தது அவளுக்குப் பிடிக்கவில்லை. மற்றச் சிஷ்யர்களை விட, அவர் அவனிடம் அதிகச் சிரத்தையும், அக்கறையும் காட்டுவது பிடிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, காயத்திரி அவனிடம் அன்போடும், கருணையோடும் நடந்து கொள்வது கட்டோடு பிடிக்கவில்லை. தான் வெறுக்கிற ஒருவனை அக்காவும் வெறுக்க வேண்டும் என்பது அவள் எண்ணம்.

ஆனால் விருப்பையும், வெறுப்பையும் ஒருவர் மனத்தில் பலவந்தமாகத் திணிக்க முடியாமல் இருப்பதை எண்ணித் தான் சுசீலா உள்ளத்துக்குள்ளேயே பொருமி வந்தாள். ஹரி பாட ஆரம்பித்ததும், விழித்துக் கொண்ட சுசீலா முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள். தன் தாயிடம் எரிந்து விழுந்தாள். “தூங்க விடாமல் என்ன அம்மா இது? அப்பா ஊரில் இல்லாத இந்த ஒரு நாள் சாதகம் பண்ணா விட்டால் என்ன? குடியா முழுகிப் போய் விடும்? பொழுது விடிந்து பாடினால் போதாதா? கூப்பிட்டுச் சொல்லேன் அம்மா” ஒன்று கெஞ்சினாள்.

“உனக்குத் தூக்கம் வந்தால் தூங்கேன்” என்று லட்சுமியம்மாள் ஒரே வார்த்தையில் கூறி விட்டாள்.

பெண்ணுக்காக என்னதான் பரிந்து பேசுகிறவளாக இருந்தாலும், மகாவித்துவானுக்கு வாழ்க்கைப்பட்டு, அவருடன் இத்தனை காலமாக வாழ்வதனால், லட்சுமி அம்மாளுக்குச் சிறிது சங்கீத ஞானம் ஏற்பட்டிருந்தது. ‘பாடுகிறவனைத் தடுக்கக் கூடாது; அது தவறு. மேலும், அதற்காகத்தானே அவர் அவனை இந்த வீட்டில் கொண்டு வந்து வைத்துக் கொண்டிருக்கிறார்?’ என்ற விஷயங்கள் அவளுக்கும் புரிந்தன. அதனால், அவள் ஏதும் கூறவில்லை.

அக்காவிடம் சொல்லச் சுசீலாவுக்கு விருப்பம் இல்லை. ‘இந்த வீட்டில் அப்பா, அம்மா, அக்கா எல்லாரும் ஒரே கட்சி; நான்தான் தனி’ என்று மனத்தில் பொங்கி எழுந்த ஆத்திரத்தோடு அவள் எழுந்தாள். ஹரி பாடிக் கொண்டிருந்த அறையின் கதவைப் ‘படீ’ரென்று அறைந்து சார்த்தி விட்டுத் திரும்பவும் தன் படுக்கையில் வந்து தொப்பென்று விழுந்தாள்.

இதை எல்லாம் கவனிக்காத ஹரி பாடிக் கொண்டே இருந்தான். அந்த அறையின் நான்கு சுவர்களையும் தாண்டி, சுசீலா மூடிய கதவையும் கடந்து, அந்த இன்னிசை அப்பொழுதும் கேட்டுக் கொண்டேதான் இருந்தது. அது காயத்திரிக்குத் தேவகானமாகவும், லட்சுமிக்கு ஆதியிலிருந்தே பழகிப் போன ஒன்றாகவும் இருந்தது. சுசீலாவுக்கு மட்டும் நாராசமாக இருந்ததோ?

சுசீலாவின் புறச் செய்கைகளைப் பார்ப்பவர்களுக்கு அப்படித்தான் எண்ணத் தோன்றும். ஆனால், மற்றவர்களுக்குத் தெரியாமல், அவள்தான் மற்றவர்களை விட ஆத்மார்த்தமாக ஹரியின் பாட்டைக் கேட்டு ரசித்தாள். ஆம்! ஹரியை வெறுக்க முடிந்த அவளால், அவனது கந்தர்வகானத்தை வெறுக்கவோ, வேண்டாமென்று ஒதுக்கிச் செவிகளைப் பொத்திக் கொண்டு ஓடவோ முடியவில்லை.