புல்லின் இதழ்கள்/தந்தி வந்தது
கன்டோன்மென்ட் ஸ்டேஷனுக்குள் பங்களுர் மெயில் நுழையும் போது, மணி ஆறரை இருக்கும். வரவேற்க ஸ்டேஷனில் தயாராக, சபா உற்சவக் கமிட்டிக் காரியதரிசியும், தலைவரும் வந்திருந்தனர்.
காரியதரிசி, ஹரிக்கு வணக்கம் தெரிவித்தபடியே, பக்கத்திலிருந்த தலைவர் ரகூத்தம ராவை அறிமுகம் செய்து வைத்தார். ஹரியும் அவருக்குப் பதில் வணக்கம் தெரிவித்தபடியே, வண்டியிலிருந்து இறங்கினான்.
காரியதரிசி, ஹரியின் பெட்டி படுக்கைகளை வெளியிலிருந்த தம் காரில் ஏற்ற ஏற்பாடு செய்தார். ராஜப்பாவும், பஞ்சு அண்ணாவும், முதல் நாளே வந்து விட்டனர். அவர்கள் எல்லாரும், கச்சேரி ஜாகையிலேயே தங்கியிருந்தனர். ஹரியை காரியதரிசி தம்முடைய வீட்டுக்கே அழைத்துச் சென்றார்.
மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிறகு, சிறிது நேரம் படுக்கலாமென்று ஹரி படுக்கையை விரித்தான். அதிலிருந்து கடிதம் ஒன்று துள்ளி விழுந்தது. ஆச்சரியத்துடன் பிரித்தான். சுசீலா எழுதியிருந்தாள்:
“உங்களைப் பிரிந்து எப்படி இந்த நான்கு நாள் இருக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. மனத்துக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது—சுசீலா”
கடிதத்தைத் திரும்பத் திரும்பப் படித்தான். வார்த்தைகள் அவன் வசமாகி விட்டன. அவள் நினைவு அவனைப் புரட்டி எடுத்தது.
எப்படி இருந்த சுசீலா எப்படி மாறிப் போய் விட்டாள்! சுசீலா ஒரு புதிர்தான்!
நினைத்தால் வாரி வழங்கக் கூடிய இத்தனை அன்பையும், ஆசையையும் வைத்துக் கொண்டா, அவள் இத்தனை காலம், சினத்தையும், சிடுசிடுப்பையும் உமிழ்ந்து கொண்டிருந்தாள்?
பங்களூருக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும் ⟨ஹரியிடம்⟩ சுசீலா தானும் வருவதாகக் கூறினாள். அவளுடைய துணிச்சலையும், ஆசையையும் பார்த்த ஹரி சிரித்துக் கொண்டே, “இன்னும் . கொஞ்ச காலம் பொறுத்திரு” என்று கூறி விட்டு வந்தான்.
மணமானால், அவளையும் எல்லா ஊர்களுக்கும் அழைத்துக் கொண்டு போக வேண்டுமென்று ஹரி மனத்துக்குள் திட்டமிட்டுக் கொண்டான்.
புவனேசுவரி ஹால் நிரம்பி வழிந்தது. சரியாகக் குறிப்பிட்ட நேரத்துக்கு, ஹரியின் சுச்சேரி ஆரம்பமாயிற்று. அன்று மாலை நடந்த ஹரியின் கச்சேரிதான் முதல் கச்சேரி. அதைப் போலவே, கச்சேரியும் முதல் தரமாக அமைந்து விட்டது. ஹரியின் இசையில், பங்களூர் ரசிகர்கள் தங்களை மறந்தார்கள். அவர்களை மேலும் மகிழ்விக்க, தனி ஆவர்த்தனத்துக்குப் பிறகு, ஹரி அதிகம் ஸ்ரீபுரந்தரதாசரின் கிருதிகளாகப் பாடினான். இறுதியில், தர்பாரி கானடாவில், ‘நானின்ன த்யான தொளிரெல்லூ பாண்டுரங்கா’ என்னும் தேவர நாமாவை மனமூருகிப் பாடி, சபையிலிருந்தோரின் கண்களில் நீரை வரவழைத்து; பக்திப் பரவசத்தில் திளைக்க வைத்து விட்டான். நான்கு மணி நேரத்தையும், நான்கு நிமிஷங்களாக ஓட்டி விட்டு, ஹரி மங்களம் பாடிய போது; புவேனசுவரி ஹால் தன்னுள் எழுந்த கரகோஷத்தை ஜீரணிக்க முடியாமல் திணறி எதிரொலித்தது.
சபா காரியதரிசிக்கும், தலைவருக்கும் அளவு கடந்த சந்தோஷம்.
மறுநாள் காலை, ஹரியின் அறைக்குள் காரியதரிசி, தம்முடன் ஒரு பிரமுகரையும் அழைத்து வந்து, ஹரியிடம், “இவர்தாம் மிஸ்டர் மூர்த்தி; என் நெருங்கிய நண்பர். சென்னையில், ‘அலெக்ஸாண்ட்ரா ஆட்டோமோபைல்ஸ்’ என்று ஒரு மோட்டார் கம்பெனியும், இங்கு ‘அன்னபூரணி கெமிக்கல்ஸ்’ என்று ஒரு பெரிய மருந்துக் கம்பெனியும் வைத்திருக்கிறார். இதெல்லாம் முக்கியமல்ல; பெரிய சங்கீத ரசிகர். கர்நாடக சங்கீதம் என்றால் உயிர். அதிலும் நம் பாகவதருடைய பாட்டு என்றால் ஒரு கச்சேரி தவற மாட்டார். அதைப் போல, நேற்று உங்கள் கச்சேரிக்குத்தான் இறுதி வரை இருந்து ரசித்தார்’ என்று அறிமுகப்படுத்தினார்.
உடனே மூர்த்தியும், “ஆமாம், நேற்று நீங்கள் பிரமாதப்படுத்தி விட்டீர்கள். இந்த மாதிரிப் பாட்டைக் கேட்டு ரொம்ப நாளாயிற்று” என்று மிகவும் உணர்ச்சியோடு கூறினார்.
பிறகு காரியதரிசி, ஹரியிடம் “இன்று இவர்கள் கம்பெனி ஆண்டு விழாவாம். அதற்கு உங்கள் கச்சேரியை வைக்க வேண்டும் என்று மூர்த்தி ஸார் ஆசைப்படுகிறார். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? உங்கள் சம்மதத்தைக் கேட்டுப் போகத்தான் வந்திருக்கிறார்” என்று கூறினார்.
“நீங்கள் சொன்னால், நான் அதை மறுத்தா பேசப் போகிறேன்? ஆனால், பஞ்சு அண்ணாவுக்கும், ராஜப்பாவுக்கும் சௌகரியம் எப்படி இருக்கிறதோ?” என்று ஹரி கூறிக் கொண்டிருந்த போதே, வாசலில் தந்திச் சேவகரின் குரல் கேட்டுக் காரியதரிசி போனார்.
தந்தியைக் கையெழுத்துப் போட்டு வாங்கி வந்த அவர், “ஹரி ஸார், தந்தி உங்களுக்குத்தான்” என்று, அப்படியே கவருடன் நீட்டினார்.
அவசர அவசரமாகப் பிரித்துப் படித்த ஹரி, அப்பொழுதே பாகவதரை இழந்து விட்டதைப் போல் நடுங்கி, சிலை போல் பிரமித்து நின்று விட்டான்.
-‘அப்பாவுக்கு உடம்பு மிகவும் கவலைக்கிடம், உடனே வருக. சுசீலா.’
ஹரியின் பதற்றத்தையும், தவிப்பையும் கண்ட மூர்த்தியும், காரியதரிசியும், “என்ன ஸார் விஷயம்?” என்று மிக்க கவலையுடன் விசாரித்தனர்.
தந்தியை ஹரி அவர்களிடம் நீட்டினான். சபாக் காரியதரிசியிடம், பாகவதரின் உடல் நிலை பற்றிய விவரம் தெரிந்து கொண்ட மூர்த்தி கூறினார்: “பாகவதருக்கு ஒன்றும் நேராது. கவலைப்படாதீர்கள். எங்கள் ‘வேனை’ அனுப்புகிறேன். உடனே புறப்படுங்கள். மெட்ராஸில் என் தம்பி இந்த சிகிச்சையில் ரொம்பக் கெட்டிக்காரன். பெரிய ‘நர்சிங் ஹோம்’ வைத்திருக்கிறான். எப்படியாவது பாகவதரை ‘வேனி’லேயே அங்கே அழைத்துச் சென்றால் நல்லது.”
இவ்வாறு கூறிய மூர்த்தி, தன் தம்பி சேகருக்கு அவசரமாகக் கடிதம் ஒன்று எழுதி, விலாசத்துடன் ஹரியிடம் கொடுத்தார்.
மூர்த்தியின் ‘வேன்’ சுவாமிமலை வீட்டை அடைந்த போது, வாசலில் இரண்டு மூன்று கார்கள் நின்று கொண்டிருந்தன. அச்சத்துடன் உள்ளே விரைந்த ஹரியைக் கண்ட லட்சுமி அம்மாள், வாய் விட்டே அழுது விட்டாள்.
பாகவதரின் கட்டிலின் அருகில், குடும்ப டாக்டரும், கும்பகோணத்திலிருந்து வந்துள்ள பெரிய டாக்டர் ஒருவரும், ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். லட்சுமியம்மாளையும், ஹரியையும் தனியாக அழைத்துக் குடும்ப டாக்டர் கூறினார்: “பாகவதருடைய நிலைமை மிகவும் மோசமாய்த்தான் இருக்கிறது. இந்த வியாதிக்குத் தேவையான வைத்திய வசதிகள் கும்பகோணத்திலும் இல்லை. உடனடியாக பட்டணத்துக்குப் போவதுதான் நல்லது; வேறு வழியே இல்லை. பிரயாணம் செய்தால், ஆபத்து ஒன்றும் இல்லை. ஆனால், அதிகம் அசங்காமல், காரை மெதுவாக ஓட்டிக் கொண்டு போக வேண்டும்.”
இதைக் கேட்டதும் சுந்தரியும், லட்சுமியம்மாளும் மிகவும் பயந்து போய் விட்டனர். ‘பட்டணத்துக்குத் திடீரென்று எப்படிப் புறப்படுவது? அதற்கு வேண்டிய வசதிகள் வேண்டாமா? போனதும், எங்கே தங்குவது? இங்கிருந்து யார் போவது; யார் இருப்பது? எவ்வளவு செலவாகும்? அதெல்லாம் நம்மால் ஆகுமா?’ என்று அவர்கள் கவலைப்பட்டுக் குழம்பிக் கொண்டிருந்தனர்.
“டாக்டர் சொல்லி விட்டுப் போனதைக் கேட்டாயா ஹரி?” என்று கேட்டாள் லட்சுமி.
அதற்கு ஹரியிடமிருந்து என்ன பதில் வரப் போகிறது என்று, எல்லாருமே அவனுடைய முகத்தை ஆவலுடன் நோக்கிய வண்ணம் இருந்தனர். சுசீலாவின் பார்வையும், நெஞ்சும், ‘ஹரி பட்டணம் போவதற்கு எப்படியாவது ஒப்புக் கொள்ள வேண்டுமே’, என்று துடித்துக் கொண்டிருந்தது.
“டாக்டர் கூறியபடி, இப்பொழுதே புறப்பட்டு விட வேண்டியதுதான். ஐயாவை இந்த நிலைமையில் வைத்திருப்பது தவறு. நான் அதற்குத் தயாராகவே வந்திருக்கிறேன்” என்று கூறி விட்டான். பஞ்சு அண்ணாவும், ஹரியின் கருத்தையே ஆதரித்து, “அண்ணாவை நாம் இத்தனை பேர் இருந்தும், நல்ல வைத்தியம் பார்க்காமல் இருக்கலாகாது. ஹரி கூறுவது போல், உடனே புறப்படுவதுதான் நல்லது” என்றார்.
சுந்தரியும், லட்சுமியும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டனர்.
ஹரி, தம்புராவைக் காரிலிருந்து எடுத்துக் கொண்டு, உள்ளே வந்த போது விழித்துக் கொண்ட பாகவதர், “வா, இப்போதுதான் வருகிறாயா?” என்று வரவேற்றார்.
பிறகு, பஞ்சு அண்ணாவையும், ராஜப்பாவையும் பார்த்து, “பெங்களுர்க் கச்சேரி எப்படி அமைந்தது. நாளைக்கு உங்களுக்கு மைசூரில் கச்சேரி ஆயிற்றே; எப்படி வந்தீர்கள்? கான்ஸல் ஆகி விட்டதா?” என்று காலண்டரைப் பார்த்துக் கேட்டார்.
அருகில் உட்கார்ந்து கொண்டு பஞ்சு அண்ணா, பாகவதரை அலட்டிக் கொள்ளக் கூடாது என்று தடுத்து, எல்லா விவரங்களையும் ஆதியோடந்தமாகக் கூறி, “இன்னும் சற்றைக்கெல்லாம் நீங்கள் பட்டணம் புறப்படப் போகிறீர்கள்” என்று நிறுத்தினார்.
இதைக் கேட்டதும் பாகவதர் சிரித்தார்.
“என்ன சிரிக்கிறீர்கள்? இந்தப் பூட்டுக்குப் பிழைத்துக் கொண்டு விட்டோம்; பார்த்துக் கொள்ளலாம் என்றா? டாக்டர் கண்டிப்பாகச் சொல்லி விட்டார். நீங்கள் பட்டணம் போய்த்தான் ஆக வேண்டும்” என்றார் பஞ்சு அண்ணா.
“பூட்டாவது, சாவியாவது பஞ்சு? இத்தோடு எத்தனை பூட்டுக்களாச்சு? அடுத்த பூட்டோ அல்லது அதற்கடுத்த பூட்டோ இல்லை என்றால், எனக்குப் பூட்டுக்களே இல்லையோ என்னவோ. பாபிக்கு சதாயுசு என்பார்களே, இன்னும் உலகத்தில் என்னவெல்லாம் பார்த்து அநுபவிக்க வேண்டியது பாக்கி இருக்கிறதோ; அதையெல்லாம் பாக்கி வைத்து விட்டுப் போனால் எப்படி? நான் இந்த இடத்தை விட்டு எங்கும் ஓர் அடி கூட வர மாட்டேன். எனக்கு இனி மேல், எந்த மருந்தும் வேண்டாம். வைத்தியமும் வேண்டாம். கடைசிக் காலத்தில், இந்தக் கட்டைக்குக் காவேரிக் கரையில் எரிகிற பாக்கியமாவது கிடைக்கட்டும். இந்த ஜென்மம் கடைத்தேற அதை விடச் சிறந்த வைத்தியமே இல்லை. என்னை ஓர் இடத்துக்கும் இழுக்காதீர்கள்” என்று விரக்தியாகப் பேசினார் பாகவதர்.
பாகவதருடைய வார்த்தைகள், லட்சுமியம்மாளையும், சுந்தரியையும் மிகுந்த வேதனையில் ஆழ்த்தின. பாகவதர் இப்படிப் பிடிவாதம் செய்வார் என்று பஞ்சு அண்ணாவும், மற்றவர்களும் எதிர் பார்க்கவில்லை. ஆயினும், அவர் கருத்தை அங்கே யாரும் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை.
“அண்ணா, உங்களுடைய நல்ல மனத்துக்கு ஒரு விதக் குறைவும் வராது, வரக் கூடாது என்பதுதான் எங்கள் எல்லாருடைய பிராத்தனையும். இங்கே உங்களை நம்பியிருக்கும் இந்த வீட்டிலுள்ளவர்களை மட்டும் மனத்தில் வைத்துக் கொண்டு நான் பேசவில்லை.
“நீங்கள் முன் போலக் கச்சேரி செய்ய வேண்டும்; உங்களுடைய இசையைப் பருக வேண்டும் என்று சங்கீத உலகமே ஆவலுடன் வேண்டுகிறது. உங்கள் ரசிகர்களுடைய அபிமானம் வீண் போகவில்லை. உங்களுடைய வியாதி குணமாகப் போகிறது; நீங்கள் முன் போல் தொழில் செய்யப் போகிறீர்கள்; அதற்கான வேளை வந்து விட்டது.
“பங்களூரில் உங்களுடைய ரசிகர் ஒருவர், ஹரியின் பாட்டைக் கேட்டு பரவசமாகிப் பட்டணம் போக காரும், சிபாரிசுக் கடிதமும் கொடுத்திருக்கிறார். எங்களுக்காக இல்லா விட்டாலும், இப்படிப்பட்ட அன்பர்களுக்காகவாவது, நீங்கள் எங்கள் பேச்சைக் கேட்கக் கூடாதா? இந்தப் பாக்கியம் எல்லாருக்குமா கிடைத்து விடுகிறது?” என்று பஞ்சு அண்ணா விடாப் பிடியாகக் கூறி பாகவதரைச் சம்மதிக்க வைத்து விட்டார்.
அதற்குப் பிறகு, பிரச்னைகள் வேறு திசையை நோக்கித் திரும்பின.
பட்டணத்துக்கு யார் போவது, யாரை இங்கே வைத்து விட்டுப் போவது என்று யோசித்தார்கள். ஹரியும், லட்சுமியும் பாகவதருடன் செல்ல வேண்டியவர்கள் என்று ஆன பிறகு, காயத்திரியையும், சுசீலாவையும் தனியே வைத்து விட்டுப் போக லட்சுமியம்மாள் விரும்பவில்லை.
சுசீலா, தகப்பனாருடன் பட்டணம் போகத் துடித்துக் கொண்டிருப்பதை நன்கு காட்டிக் கொண்டாள்.
“அங்கே என்ன, இடம் பிடிக்க வேண்டுமா, வீடு பார்க்க வேண்டுமா? எல்லாருமே புறப்பட்டுப் போவதுதான் நல்லது” என்று பஞ்சு அண்ணாவே முடிவு செய்து விடவே, சுசீலாவுக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
இரவு சாப்பாடெல்லாம் ஆன பிறகு, பதினொரு மணிக்குப் புறப்படுவதாக முடிவாயிற்று. அதற்குள், திருவிடைமருதூரிலிருந்து வசந்தியும் வந்து சேர்ந்தாள்.
பாகவதரும், லட்சுமியம்மாளும் பின் சீட்டில் ஏறிக் கொண்டனர். அவர்களுக்குப் பக்கத்தில் சுசீலாவும், காயத்திரியும் அமர்ந்திருந்தனர்.
ஹரி, சுந்தரியின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தான். சுந்தரியின் விழிகள் பனித்தன.
“பட்டணம் போய்ச் சேர்ந்ததும், ஐயாவின் உடல் நிலைக்குக் கடிதம் எழுதுகிறேன் அம்மா.”
“எல்லாம் நீதான் இனிமேல் ஐயாவுக்கு. அவரை உன் கையில் ஒப்படைத்தாகி விட்டது. அவரை கவனித்துக் கொள்ள வேண்டியது முழுக்க முழுக்க உன் பொறுப்புத்தான். கவலைப்படத்தான் நாங்கள் எல்லாரும் இருக்கிறோம்; எங்களால் என்ன பிரயோசனம்?” இந்த வார்த்தைகளைக் கூறி முடிக்கு முன், சுந்தரியின் குரல் கரகரத்தது.
“ஏன் வசந்தி, என் மீது கோபமா?” என்று ஹரி அவளிடம் மெல்லக் கேட்டான். பதில் கூறாமல், இரு கைகளிலும் முகத்தைப் புதைத்துக் கொண்டு, அழுத வண்ணம் அவள் உள்ளே சென்று விட்டாள்.
“வண்டி உனக்காக நிற்கிறது; சீக்கிரம் புறப்படு, ஹரி” என்ற வண்ணம் சுந்தரி மடியிலிருந்து ஐந்நூறு ரூபாய் பணத்தை எடுத்து, “எதற்கும் இதை நீ கையோடு வைத்துக் கொள்” என்று ஹரியிடம் நீட்டினாள்.
“வேண்டாம் சின்னம்மா. பங்களுர்க் கச்சேரிப் பணம் பையிலேயே இருக்கிறது. பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று சுந்தரியின் மனம் நோகாதபடி கூறி விட்டு, “வருகிறேன் வசந்தி; வாத்தியாரிடம் கோபமே கூடாது” என்று அவள் இருந்த திசையை நோக்கிக் கூறி விட்டு, காரில் முன் சீட்டில் ஏறிக் கொண்டான்.
கார் புறப்படும் போது, லட்சுமியருகில் வந்து சுந்தரி நின்று கொண்டிருந்தாள். பாகவதரும், லட்சுமியும் விடை பெற்றுக் கொண்டனர். சுசீலாவும், காயத்திரியும், “போய் விட்டு வருகிறோம் சித்தி” என்று ஏக காலத்தில் விடை பெற்றுக் கொண்டனர்.
லட்சுமியம்மாள்தான், “வசந்தி எங்கே?”என்று கூப்பிட்டாள். வாசற்படியில் நின்று கொண்டிருந்த பெண்ணைச் சுந்தரி அழைத்தாள்.
“பெரியம்மா” என்று வசந்தி, லட்சுமியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
கார் புதிய பாதையை நோக்கி மெல்ல ஊர்ந்தது.— வசந்தியும், சுந்தரியும் அந்தத் திசையையே பார்த்த வண்ணம், தெருவில் நின்றனர். வசந்திக்கு இருதயமே வெடித்து விடும் போலிருந்தது.