பூவும் கனியும்/இளைஞர்களுக்கு அறிவுரை
மாணவ மாணவியர்களே !
உங்கள் பருவம் மீண்டும் கிடைக்காத பருவம்; பொன்போற் போற்றிப் பயன்படுத்தப்பட வேண்டிய பருவம். வாய்ப்போ கிடைத்தற்கரிய வாய்ப்பு. தொடக்கப் பள்ளிக்கூடங்களே இல்லாத ஆயிரக் கணக்கான சிற்றூர்களும், படிக்க வாய்ப்பில்லாத பல இலட்சம் மக்களும் உள்ள இந்நாட்டில், உங்களுக்காவது ஏதோ படிக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறதென்றால், அதை எளிதானதாகவோ அலட்சியப்படுத்தக் கூடியதாகவோ கருதாதீர்கள்; இப்பருவத் தையும், வாய்ப்பையும் நன்றாக முழுதும் பயன் படுத்திக்கொள்ளுங்கள்; மாணவப் பருவத்தில் கற்க வேண்டுவன வெல்லாம்'கற்றுக்கொள்ளுங்கள்; பெற வேண்டிய திறமைகளை யெல்லாம் பெற்றுக்கொள்ளுங்கள், தேடிக்கொள்ள வேண்டுவன வெல்லாம் தேடிக்கொள்ளுங்கள்.
கற்க வேண்டுபவை உங்கள் பாட நூல்களோடு முடிந்துவிட்டனவாக எண்ணாதீர்கள். கற்கவேண்டு பவைகளை அறிமுகப்படுத்துபவைகளே அவை. பாட நூல்களுக்கு அப்பால் - பரீட்சைகளுக்குத் தொடர்பில்லாத-பலவற்றை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்; படிப்பை முடித்தபின், அவைகளைக் கற்கலாம் என்றுமட்டும் காலங் தாழ்த்தாதீர்கள்.
வெறும் ஏட்டுப் படிப்பு தகவல்களைத்தான் கொடுக்கும்; அறிவொளியைத்தான் வீசும். அவற்றை வாழ்க்கையோடு இணைத்துப் பயன் பெறும் திறமையை நீங்கள் பெற முயலவேண்டும். வாழ்க்கைக்கு ஊக்கம், உறுதி, உழைப்பு, தன்னம்பிக்கை இன்றியமையாதவை. அவற்றை யெல்லாம் நீங்கள் இடை விடாத பயிற்சியாற் பெறலாம்; அப்படிப் பெறத் தவறவேண்டா.
இளம்பருவத்தே உங்களை மயக்கக் கூடியவை பற்பல.
தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப
என்ற அறவுரையை மனத்திற் கொண்டு கல்வியிலே உங்கள் முழுக் கவனத்தையும் செலுத்துங்கள். கல்வியின் பகுதியாகத்தான் நீங்கள் சமூகம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றைப் படித்துச் சிந்தித்துத் தெளிவுபெற வேண்டும். மாணவர்களாக இருக்கும்போதே அரசியல்வாதிக ளாகிவிட வேண்டா என்றுமட்டும் அறிவுறுத்த விரும்புகிறேன். எதற்கும் காலமுண்டு. காலம் வரும்போது கருத்தோடு செயலாற்ற ஆயத்தம் செய்துகொள்ள வேண்டுவதே மாணவர் கடமை, மாணவர்களாக இருக்கையிலேயே அரசியல்வாதிகளாவது பிஞ்சிற் பழுப்பதாகும். அப்பழத்தின் சுவையும் பயனும் எப்படி இருக்குமென்பது நீங்கள் அறியாத தன்று.
உடலோம்பலின் இன்றியமையாமையை நான் அதிகம் வற்புறுத்தத் தேவை இல்லை. அதன் தேவையையும் சிறப்பையும் உணர்ந்திருந்தாலும், வசதிக் குறைவும் வேறு பொழுதுபோக்குக் கவர்ச்சிகளும் உடற்பயிற்சியை மறக்கச்செய்து வருகின்றன. இது பெருந் தீங்கு. " உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்பது பொருள் நிறைந்த பொன் மொழி. உடல் வலிமை இல்லாதவன் எல்லா வசதிகளும் பெற்றிருந்தாலும் தனக்கும் பிறருக்கும் முழுப்பயன் அற்றவனாகத்தான் இருக்க நேரிடும். எனவே எப்படியும் ஒழுங்காக உடற்பயிற்சி செய்ய வழி வகை செய்துகொள்ளுங்கள்.
தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப்
என்ற பொய்யாமொழியையும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.ஏட்டுப் படிப்பு அல்லது தொழிலறிவு ஆகியவற்றை ஊட்டுவதோடு கல்வி நிற்கக் கூடாது. அது நமக்குக் கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் கற்பிக்க வேண்டும். ஒழுக்கம் என்னும் போது வழக்கமாகக் கூறும் ஐம்பெருங் குற்றங்களை நீக்குவதைமட்டும் நான் குறிக்கவில்லை; மக்களோடு மக்கள் எப்படிப் பழகுவது, எங்கெங்கு எப்படி நடப்பது, பொது இடங்களில் எப்படி நடப்பது என்பவைகளையும் சேர்த்துத்தான் குறிக்கிறேன். கட்டுப் பாடும் ஒழுங்கும் அற்ற அறிவாளி, கூடிய இடமெல்லாம் புரண்டோடிக் கண்டதையெல்லாம் பாழாக்கும்
காட்டாறு போன்று தீமை பயப்பவன் ஆவான். எனவே கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் இளமையிலேயே கற்றுக்கொள்க.
நல்ல உறுதியான உடலும், கூரிய மதியும், கட்டுப்பாடும், ஒழுங்கும் எதற்குப் பயன்பட வேண்டும்? யாருக்குப் பயன்பட வேண்டும்? ஆக்கத்திற்கா? அழிவிற்கா? தனக்கா ? பிறருக்கா?
அணுவைப் பிளந்து ஆற்றல் மிக்க சக்தியைக் கண்ட மனித சமுதாயம், அச் சக்தியால் உலகம் என்று அழிக்கப்படுமோ என அஞ்சி அஞ்சி அல்லலுறுகின்ற தன்றோ? காரணம் என்ன? ஆக்க வேலைக்கு அவற்றைப் பயன்படுத்தத் தவறியதேயாகும். அறிவும் வலிவும் வளர்ந்த அளவுக்கு மக்களின் உள்ளம் வளர்ந்தபாடில்லை. ஆகவே வலிமை யெல்லாம்-அறிவெல்லாம்-இதுவரை `தான்' என்கிற சிறையிலிருந்து வெளிப்படவில்லை. தன் பெண்டு, தன் பிள்ளை என்கிற தன்னலம், பொதுநலத்திற்கு ஊறாக நிற்கிறது. `தான்' என்பதைக் குறைத்து 'நாம்' என்பதைப் பெருக்கப் பெருக்கத்தான், நாம் மக்கள். நிலையை எய்துவோம். தனி உணர்ச்சி குறைந்து, சமூக வளர்ச்சி வளர வளரத்தான் நம் துன்பங்கள் தொலையும்.
பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய் உள்ள குறள்,
ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில் லா
என்று இடித்துரைப்பதை மறந்துவிடாதீர்கள். கல்வியின் நோக்கம் மக்கட் பண்பைப் பெறுவதே. எது மக்கட்பண்பு என்று சிறிது சிந்திப்போம். மக்கட் பண்பாவது, பிறிதினோய் தந்நோய்போல் நோக்குதலாகும். எனவே, மக்கள் துன்பத்தைத் தன் துன்பமாக எவன் கருதுகிறானோ, அவனே கல்விமான். மற்றவர்கள் எவ்வளவு அறிந்திருந்தாலும், எத்துணைப் பட்டங்கள் பெற்றிருந்தாலும், எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் மக்கள் நிலையை அடையாதவர்களே. மக்கள் நிலையை அடையவே நாம் எல்லோரும் விரும்புவோம் என்பது உறுதி. எனவே, நம்மைச் சூழ்ந்துள்ளோர் அடைகிற துன்பங்கள் எவை எவை, அவற்றை நீக்க வழிகள் எவை எவை? என்று கவனிப்போம்.
வறுமை, அதன் விளைவான பட்டினி; அறியாமை, அதன் விளைவான மூட நம்பிக்கைகள், மூடப் பழக்க வழக்கங்கள்; சாதி ஏற்றத் தாழ்வு, அதன் விளைவான சாதிச் சண்டை; சமய வெறி, அதன் விளைவான சமயப் போராட்டங்கள்; இவற்றின் கட்டு விளைவான அமைதியின்மை-ஆகிய துன்பங்களை நாம் அனுபவித்துவருகிறோம். இத்துன்பங்களை நீக்க முடியுமா? இப்படியே விட்டுவைக்கலாமா ? நீக்க முடியும், நீக்கவேண்டும் என்பதே என் முடிவு. பிற நாடுகள் செய்துகாட்டிய முடிவுமாகும்
வறுமை ஒரு சமூகத் தொற்று நோய். அதைப் போக்குவது சமூகத்தின் முதற் கடமை. அதனை எவ்வழியிற் போக்குவது என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். உழைப்பைப் பெருக்கி உற்பத்தியைப் பெருக்கினால் எல்லோரும் வறுமையின்றி வாழலாம் என்பது உண்மையா? பெற்ற பொருள்களை இப் போதுள்ள முறைக்கு மாறாக விநியோகிப்பது வாயிலாக வறுமையைப் போக்குவதா? என்ற கேள்விகளுக்குப் பதில் என்னிடத்திலிருந்து எதிர்பார்க்காதீர்கள். இரண்டில் எதைக் கொண்டாலும், இரண்டும் மறந்துவிட்ட மற்றொன்றை நான் நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். அது எது ? செலவு முறை; நம் மக்களின் செலவு முறையைக் குறிப்பிடுகிறேன். மயக்கத்திற்கோ, வீண் பெருமைக்கோ ஆனவற்றிற்கு நாம் ஏராளமான செல்வத்தைப் பாழாக்கு கிறோம். அவற்றைத் தடுத்து வாழ்க்கையை நிரந்தரமாக நல்வழிப்படுத்தும் துறைகளுக்கு மிகுதியாகச் செலவிடக் கற்றுக்கொள்ள வேண்டும். அளவறிந்து செலவிடத் தெரியாத மக்களை எம்முறையும் காப்பாற்றாது என்பதை மறவாதீர்கள்.
தற்குறித்தன்மை நமக்குள்ள அடுத்த துன்பம். மக்கட் பெருக்கத்திற்குப் பெயர்போனதைப் போன்றே தற்குறித்தன்மைக்கும் நம் நாடு உலகறிந்ததாய் இருக்கிறது. அறியாமையின் விளைவாய் நம்மிடையே உள்ள மூட நம்பிக்கைகளும் கண்மூடி வழக்கங்களும் எண்ணிறந்தன. நாம் மக்கள் தன்மையை முழுதும் அடைவதற்குக் குறுக்கே நிற்கும் இவற்றையெல்லாம் விரைவில் குழி தோண்டிப் புதைக்கவேண் டும். மன்னர்களாகிவிட்டவர்களை மண்ணாங்கட்டி நிலையில் விட்டுவைப்பது இழிவுமட்டு மன்று, பெரும் தீங்குமாகும். எனவே, இத் தலைமுறையின் முழு கவனமும் முயற்சியும்
பன்னரும் கலைஞா னத்தால்,
பராக்கிர மத்தால், அன்பால்,
கீர்த்தி ஓங்கிடுவதற்கான பணிகளில் திருப்பப்பட வேண்டும். இதற்கான பொறுப்பையும் உழைப்பை
யும் நாட்டு அரசிற்குமட்டுமே விட்டுவிடாமல் பொது மக்களும் பகிர்ந்துகொள்ள வேண்டும்; விரைவில் பகிர்ந்துகொண்டு வேகமாகப் பணிபுரியவேண்டும். அப்படிப் பகிர்ந்துகொள்ள முடியுமா? என்ற ஐயம் எழலாம். முடியும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. இன்றும் நாட்டில் நடக்கும் 'தர்மங்களை'ப் பார்த்தவர் களுக்கு ஐயமிராது. நாட்டில் நடக்கும் அறங்களை யெல்லாம் கல்விக்கூடங்கள் மூலமாக நடக்கும்படி செய்வது நம்முடைய கடமை.
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியங் கோடி
என்ற காலத்திற் கேற்ற நல்லுரையை எடுத்துக் காட்டி, கல்விப்பணிக்கான எல்லா உதவிகளையும் செய்யக் கேட்டுக்கொள்ளுகிறேன்.
சாதி உயர்வு தாழ்வு நம்மைப் பிடித்துள்ள மற்றொரு பெரு நோய்; தமிழர்கள் நல்ல நிலையில் இருந்த காலத்தே இல்லாத நோய்; இடையிலே பெற்ற நோய்; விரைவில் ஒழிக்கப்பட வேண்டிய நோய். `உயர்வு தாழ்வு எங்கு இல்லை ? ஒவ்வோர் இடத்தில் ஒவ்வோர் உருவில் இருக்கிறது' என்கிற முடக்கு வாதம் நம்மை முன்னேறவொட்டாமல் தடுக்கும். அவ்வாதத்திற்குச் செவி கொடுத்தால் நீங்கள் மககள் தன்மையை எட்ட முடியாது.
எல்லோரும் ஓர் இனம்'
'யாதும் ஊரே யாவரும் கேளிர்'
என்ற நல்லுரைகளை நாம் பல்லாண்டுகளாகப் பலப்பல மேடைகளிலும் கேட்டுத்தான் வருகிறோம், இவற்றைத் தமிழனின் உயர்விற்கு எடுத்துக்காட்டாகப் பயன்படுத்திக்கொண்டு வருகிறோம். ஆனால் நாம் உண்மையிலே சாதிகளை விட்டு மக்களாகும் வழியில் நடக்கிறோமா? தேர்தல்களில் ஆதரவு தேடும் முறையைக் கவனித்தாலே போதுமே, நம்மை விட்டுச் சாதி வெறி போகவில்லை என்பதற்கு. காரணம் என்ன? சாதிகளை வைத்துக்கொண்டே பேச்சளவில் சாதிப்பற்று வேண்டாமென்று கூறி, வெறும் பொழுதுபோக்காக வேலை செய்துகொண்டிருக்கிறோம். எனவே, இடமும் காலமும் கிடைத்தபோது சாதிவெறி முழு ஆட்டம் ஆடுகிறது. மக்கட் பண்பை மறைக்கும் சாதிப்பற்று ஒழியவேண்டு மென்றால், சாதிகள் இல்லாத நிலை ஏற்படவேண்டாமா? அதற்கான வழியை இனித்தான அறிந்துகொள்ளப் போகிறீர்கள்? அந்நிலை வெறும் விறுவிறுப்பான பேச்சால் மட்டும் கிட்டுமா? கூட்டத்திற் கூடி நின்று கூவிப் பிதற்றிவிட்டு நாட்டத்திற் கொள்ளாவிட்டால் ஏற்படுமா ? நெஞ்சில் உரத்தோடு, நேர்மைத் திறனேடு எல்லாச் செயல்களிலும் சாதியை நீக்கினால் அன்றோ முடியும்? அந்த நேர்மையும் உரமும் உங்களிடம் எதிர்பார்ப்பது அதிகமா?
சமயப் பற்றும் சமய வெறியாக மாறி அடிக்கடி நம்மை அலைக்கழிக்கிறது. சமயம் மனிதனுடைய தனி கூட்டு வெளிச்சத்திற்காக அதைப் பொது விவகாரமாக்கி, பகையை வளர்க்கும் வெறியாக மாற்றுவது ந ல் ல த ன் று. சமயம் மக்களை ஒழுங்குபடுத்திப் பண்படுத்தாமல் சண்டையை வளர்ப்பதா? சமயத்தின் மதிப்பு அதைப் பின்பற்றுபவர்களின் கோலத்தில் இல்லை; சீலத்தில் இருக்கிறது என்பதை நினைந்து, அதற்கேற்றபடி நடந்து கொள்ளுங்கள்.
உருவால் மக்களாய்ப் பிறந்த நாம், நிலையால் மக்க ளாகாமல் இருப்பதற்கான காரணங்கள் சிலவற்றை உங்களிடம் காட்டினேன். அவற்றைச் சிந்தித்துப் பார்ப்பீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. அதன். விளைவாக உங்களுக்குத் தெளிவு ஏற்படும் என்பதிலும் எனக்கு ஐயமில்லை. உங்கள் தெளிவில் பிறக்கும் நேரிய வழியில் நடக்க உரமும். உறுதியும், இருக்குமா என்பதைக் காலந்தான் காட்ட வேண்டும் அத்தகைய உரமும் உறுதியும் பெருகி உங்களுக்குத் துணையாக நிற்கும்படி நாட்டின் நலத்தில் நாட்டமுடைய பெரியோர்களை வணக்கத்துடன் வேண்டிக்கொள்கிறேன்.
கற்பவை: கற்றபின்
நிற்க அதற்குத்
தக’
என்று வள்ளுவர் காட்டிய வழியை நினைவூட்டுவதோடு என் உரையை முடித்துக்கொள்கிறேன்.