பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்/வாழ்க்கை வரலாறு

இத்தகைய பேராற்றல் பெற்ற அவர், ஒரு செல்வச் சீமான் வீட்டிலே பிறந்தவர் அல்லர். சாதாரண மெழுகுவர்த்திகளையும், சோப்புக் கட்டிகளையும் செய்து பிழைக்கும் பிராங்ளின் என்ற பெற்றோர்களுக்கு ஏழை மகனாக 1706-ம் வருடம் அமெரிக்காவிலே உள்ள போஸ்டன் என்னும் நகரிலே பிறந்தார் பெஞ்சமின் ஃபிராங்ளின் என்ற மனிதகுல மாணிக்கம். சிறு வயதிலே எவ்வளவு துன்பங்களையும் வறுமைகளையும் அனுபவிக்க முடியுமோ அனைத்தையும் அனுபவித்து வாழ்ந்த மனிதர் அவர்.

பெஞ்சமின் குடும்பம் பதின்மூன்று பேர்கள் கொண்ட ஒரு பெரிய குடும்பம். அவர்கள் அனைவரும், போஸ்டன் நகரின் இரவு காவலுக்காக மெழுகுவர்த்திகளைச் செய்து பிழைக்கும் குடும்பமாக உழைத்து வந்தார்கள். கூடவே சோப்புக்கட்டிகளையும் செய்து பிழைத்தார்கள். ஏழைக் குடும்பம் தான். ஆனாலும் ஒரு தகுதியோடு வாழும் குடும்பமாகும்.

ஏனென்றால், அக்காலகட்டத்திலே போஸ்டன் நகருக்கு தெரு விளக்குகள் கூட கிடையாது. தெரு வீடுகளுக்கு எண்கள் கூட போட்டிடும் அரசு ஊர் அமைப்புகள் இல்லை. பெஞ்சமின் வீட்டு வாசல் முன்பு ஓர் ஊதா நிறப் பந்து உருவத்தில், “இங்கே மெழுகுவர்த்திகள், சோப்புக் கட்டிகள் விற்பனைக்குக் கிடைக்கும்,” என்ற பெயர்ப் பலகைதான் தொங்கும். இந்த அடையாளப் பலகையைப் பார்த்துதான் போஸ்டன் நகர மக்கள் அவற்றை விலைக்கு வாங்கிட அவர் வீட்டிற்கு வருவார்கள், போவார்கள். அத்தகைய ஓர் ஏழைப் பெற்றோர்களுக்கு மகனாகப் பிறந்தவர்தான், பெஞ்சமின் ஃபிரோங்ளின். அந்த தொழில்தான் அவர் ஆரம்பத்தில் தமது பெற்றோர்களுக்குரிய உதவியாளராகப் பணியாற்றி வரும் நிலையும் இருந்தது.

அந்த நகர், கப்பல்கள் அடிக்கடி வந்து தங்கும் ஒரு துறைமுகப் பட்டினம். அங்கே இங்கிலாந்து போன்ற நாடுகளிலே இருந்து கப்பல்கள் வரும், தங்கும், போகும்.. அங்குள்ள மக்களுக்குரிய பண்டங்களும், சரக்குகளும் அக் கப்பல்களில் வரும், அந்த நகர் மக்கள் நடமாடிடும் ஒரு பண்டகக் கரை ஊராகவே எப்போதும் காட்சி தந்தது.

அந்த நகரிலே உள்ள சிறுவர்கள், அங்குள்ள கடற் கரையிலே விளையாடுவார்கள், மீன் பிடிப்பார்கள், அதே நேரத்தில் அந்நகருக்குரிய புதுப் புது வீடுகளைக் கட்டிட செங்கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் அங்கே உண்டு. தொழிலகங்களில் பணியாற்றிடும் கொத்தனார்கள் ஏராளமாகக் குடியிருப்பார்கள். இந்த கூட்டங்களிலே எல்லாம் சிறுவன் பெஞ்சமின் ஃபிராங்ளின் கலந்து கொண்டு, அவர்கள் இடையே ஒரு குறிப்பிடத்தக்க சிறுவனாகவே விளங்கி வந்தார்.

ஒரு நாள், பெஞ்சமின் நீர்க்கரை அருகே நின்று கொண்டு ஒரு காற்றாடியை உயரே பறக்க விட்டுக் கொண்டிருந்தார். அப்போது காற்றுக்கு எதிராக அவரை இழுப்பது போன்ற ஒரு சக்தி, உணர்ச்சி அவருக்குத் தோன்றியது; ஆச்சரியமும் திகைப்பும் அவருக்கு ஏற்பட்டது. வேகமாக அடித்த காற்று, ஃபிராங்ளினை இழுத்துச் செல்வது போல தோன்றவே, “தண்ணீரில் இருந்தால் காற்று நம்மை இழுத்துக் கொண்டு போகுமோ” என்று எண்ணலானார்; சிந்தனை செய்தார்!

மறுநாள், அவர் ஒரு குளத்திலே நீந்திக்கொண்டே காற்றாடியை உயரப் பறக்கவிட்டுக் கொண்டிருந்தார். தண்ணீரில் இருந்தால் பட்டத்தைப் பறக்கவிட முடியாது என்று அவரது விளையாட்டு நண்பர்கள் கூறினார்கள்.

உடனே ஃபிராங்ளின், காற்றாடியின் நூலைக் கையில் பிடித்துக்கொண்டு தண்ணீரில் மிதந்தார். காற்றால் உந்தப்பட்ட பட்டம், அவரை குளத்தின் எதிர் கரையிலே கொண்டுபோய் தள்ளியது. இதைப் பார்த்த மற்ற சிறுவர்கள் எப்படி அக்கரைக்குப் போனான் என்று ஆச்சரியப்பட்டார்கள். அவர்களும் அவரைப் போலவே செய்து பார்க்க விரும்பினார்கள். ஆனால், அந்த மன உறுதி அவர்களுக்கு வரவில்லை; முடியவில்லை.

இந்தப் பட்டம்விடும் பழக்கத்தால் ஃபிராங்ளின் நீந்தல் கலையில் வல்லவரானார். மற்றவர்களுக்கும் தண்ணீரில் நீந்தக் கற்றுக் கொடுக்கும் ஒரு காட்சியையே உருவாக்கினார்.

அந்நேரத்தில், பெஞ்சமின் ஃபிராங்ளினின் தமையனார் ஜேம்ஸ் என்பவர், அச்சகம் ஒன்றை நிறுவி பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் ஒரு முன்கோபி. எப்போது பார்த்தாலும், சிடுசிடுக்கும் சுபாவம் கொண்ட எரிச்சல் உடையவர். அவரிடம் பெஞ்சமின் சேர்ந்து அச்சக உதவியாளராகப் பணியாற்ற ஆரம்பித்தார்.

சம்பளம் ஏதும் இல்லாமல். அச்சக வேலையைக் கற்றுக் கொண்டு வந்தார். வேலை செய்த நேரம் போக, ஓய்வு நேரங்களில் பெஞ்சமினுக்கு எந்த புத்தகங்கள் அவர் கைக்கு கிடைக்கின்றதோ அதையெல்லாம் படிப்பார்.

இவ்வாறு, ஏராளமான புத்தகங்களைப் படித்ததின் பயனாக, அவரும் கவிதைகளையும் கட்டுரைகளையும் தனது அறிவுக்கு ஏற்றவாறு எழுதும் ஊக்கத்தைப் பெற்றார். அதன் விளைவாக, கலங்கரை விளக்கத்தின் சோக நாடகம் என்ற கவிதை ஒன்றை எழுதினார். எல்லாருடைய கவனத்தையும் அது ஈர்த்தது.

ஜேம்ஸ் அந்த கவிதையை ஒரு சிறு புத்தகமாக அச்சு இயற்றி, அந்த புத்தகங்களை விற்பனை செய்ய தனது தம்பி பிராங்கிளினையே வேலை வாங்கி வந்தார். அவரும் தான் எழுதிய புத்தகங்களாயிற்றே என்ற ஆசையில் அவற்றை விற்பனை செய்து வந்தார்.

ஒரு கப்பல் தலைவன், தனது இரண்டு பெண்களுடன் கடலில் மூழ்கி இறந்து போன சோகமயமான கதையாக அந்த புத்தகம் அமைந்திருந்ததால், மக்களிடையே அப் புத்தகம் நல்ல பரபரப்புடன் விற்கலாயிற்று. அதனால் மீண்டும் ஒரு கப்பல் மாலுமியைப் பற்றிய மற்றொரு கவிதையை பெஞ்சமின் எழுதினார். அக்கவிதையும் ஒரு சோகக் கவிதையாகும்.

பெஞ்சமின் ஃபிராங்களினின் இவ்வாறே படிப்படியாக ஓர் எழுத்தாளராக மாறினார்.பகல் நேரம் எல்லாம் அச்சகத்தில் பணியாற்றிவிட்டு, மற்ற நேரங்களில் போஸ்டன் நகர வீதிகளில் உள்ள ஒவ்வொரு வீடு வீடாக ஏறி இறங்கி கடுமையாக வேலைசெய்துவிட்டு, தனது கவிதைப்புத்தகங்களையும் விற்றுப் பணம் சேர்த்து, தனது அண்ணனுடைய அச்சகத்தை விரிவுபடுத்தியதோடு புகழையும் உருவாக்கி வந்தார். அதேநேரத்தில் பெஞ்சமினுடைய புகழும் வளர ஆரம்பித்தது. பெஞ்சமினின் இந்தக் கடுமையான உழைப்பு தமையன் ஜேம்சுக்கு மன எரிச்சலையும், பொறாமையையும் ஏற்படுத்தியது. இதனால் அண்ணன் தம்பியிடையே அடிக்கடி மன உளைச்சல்களும் சண்டைகளும் குழப்பங்களும் உருவாயின.

போஸ்டன் நகரில் அப்போது, ‘போஸ்டன் செய்திக்கடிதம்’ 'Boston News Letter' பத்திரிகையும், 'Boston Gazetts'மற்றொரு வெளி வந்து கொண்டிருந்தன.

இந்த இரு பத்திரிகைகளைப் பார்த்த ஜேம்சுக்கு, தாமும் ஒரு பத்திரிகையைத் துவக்கினால் என்ன என்ற ஆசை தோன்றி, மூன்றாவதாக 'The New England Courant' “நவ இங்கிலாத்து செய்தித்தாள்” என்ற ஒரு பத்திரிகையை, தனது அச்சகத்திலே அச்சடித்து வெளியிடலானார். அந்த பத்திரிகை நல்லமுறையிலே மக்களிடையே செல்வாக்கோடு விற்பனையாகி வந்தது. அதற்கும் பெஞ்சமின் உழைப்பே முக்கிய காரணமாகும்.

ஏற்கனவே எழுத்தாளராக உருவாகி இருந்த பெஞ்சமின், அண்ணனுடைய பத்திரிகையிலே தானும் எழுதலாமே என்ற ஆசை ஏற்படுவது இயற்கைத்தானே எவ்வளவோ முயன்று பார்த்தும் ஜேம்ஸ் தனது தம்பியை பத்திரிகையிலே எழுதவிடாமல், விற்பனைக்கு மட்டுமே ஃபிராங்ளினை ஏவி, கடுமையாகவே வேலை வாங்கி வந்தார்.

ஒருநாள் பெஞ்சமின் இரவு எல்லாம் கண்விழித்து ஒரு கட்டுரையை எழுதி, வழக்கம்போல அச்சகத்துக்கு வரும் கட்டுரைகளிலே ஒன்றாக சேர்த்துவிட்டார். அந்த கட்டுரை மிக நன்றாக இருந்ததைப் பார்த்து ஜேம்ஸ் அதைப் பிரசுரித்தார். அந்த கட்டுரை நன்றாக இருப்பதால், அச்சக ஊழியர்கள் எல்லாம் பாராட்டினார்கள். இந்தப் புகழைக் கண்ட பெஞ்சமின், தன்னையுமறியாமல் ‘நான்தான் அக் கட்டுரையை எழுதியவன்’ என்று அவர்களிடையே அறிமுகம் செய்துகொண்டது, அண்ணன் ஜேம்சுக்கு அறவே பிடிக்கவில்லை. காரணம், தனது தம்பி ஒரு பத்திரிகை ஆசிரியன் என்று பெயரைப் பெற்றுவிட்டால், பிறகு அந்த பத்திரிகை தனது தம்பியின் பெயருக்கு மாறிவிடுமோ என்ற அச்சம் ஜேம்சுக்கு அதிகமாக வளர்ந்து வந்ததுதான் காரணமாகும்.

எப்போதுமே சுயேச்சை உணர்ச்சியும் சுறு சுறுப்பும் கொண்ட பெஞ்சமினுக்கு, அண்ணனுடைய அற்பப்போக்கு அறவே பிடிக்காததால், மனவெறுப்போடு அதைப் பொறுத்துக் கொண்டே, பத்திரிகைப் பணிகளிலே வல்லவராகத் தேர்ந்து வந்தார்.

ஒரு முறை ஜேம்ஸ், தனது பத்திரிகையிலே மாசாசூ செட்ஸ் சட்டசபை நிகழ்ச்சியை தவறாக வெளியிட்டதால், அந்த செய்தியைக் கண்ட சம்பந்தப்பட்ட சட்டசபை உறுப்பினர் ஒருவர், ஆசிரியரான ஜேம்ஸ் மீது வழக்கு தொடர்ந்து ஒரு மாதம் சிறை தண்டனையைப் பெற்றுத் தந்துவிடவே, ஜேம்ஸ் சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

இந்த இக்கட்டான நேரத்தில் வேறு வழியில்லாமல், பெஞ்சமின் அண்ணனது பத்திரிக்கைக்கு ஆசிரியராக அமர்ந்தார். சந்தர்ப்பம் கிடைத்தபோது எல்லாம் பெஞ்சமின் அந்த சட்டசபை நிகழ்ச்சிகளை எழுதி, கேலியும் கிண்டலும், கண்டிப்புமாக வெளியிட்டு வந்தார். அப்போதுதான், ஜேம்சுக்கு தனது தம்பியின் திறமையைப் பாராட்டும் சகோதரப் பாசம் உருவானது.

ஆனால் ஜேம்ஸ், அவருடைய பத்திரிகைக்கு அவர் ஆசிரியராக இருக்கக்கூடாது என்ற நிபந்தனையோடு அவர் சிறையிலே இருந்து விடுதலையாகி வரும்நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் அண்ணன் தம்பிக்குள்ளே பெரிய சச்சரவு உருவானதால், பெஞ்சமின் பத்திரிகை ஆசிரியர் பொறுப்பிலே இருந்தும், அச்சகப் பணியிலே இருந்தும் விலகிவிட்டு சுதந்திர மனிதனாக வெளியே வந்தார். வேறு வேலை தேடலானார்.

எந்த அண்ணன் புகழைக் காப்பாற்றினோமோ அந்த தமையனை விட்டுவிலகி, போஸ்டன் நகரிலே இருப்பதை விட வெளியூருக்கு எங்கேயாவது போய்விடலாம் என்று முடிவு செய்து கொண்டு, பிலடெல்பியா என்ற நகருக்குப் புறப்பட்டார். பெஞ்சமின் தந்தை பிராங்ளினுக்கு அண்ணன் தம்பி சச்சரவு பிரச்னை மனவேதனையைக் கொடுத்துவிட்டது.

போஸ்டன் நகரைவிட்டு யாருக்கும் தெரியாமல் கப்பல் ஏறிய பெஞ்சமின், நியூயார்க் நகரம் வந்து, அங்குள்ள தனது நண்பர் மூலமாக, பல கடுமையான இடையூறுகளை யெல்லாம் கப்பலில் ஏற்று, கப்பல் பயணப் போராட்டங்களை எல்லாம் பொறுமையாகச் சமாளித்துக்கொண்டு விரக்தியான நெஞ்சோடு பிலடெல்பியா நகரை வந்தடைந்தார். பாவம் பசிப்பிணி வாட்டி எடுத்தது. கையிலே ஒரு காசும் இல்லை. என் செய்வார்.

படகைவிட்டு, தள்ளாடித்தள்ளாடி பசி மயக்கத்தோடு நடந்து வந்த பெஞ்சமினைப் பார்த்து, டிபோரார்ட் என்ற ஒரு சீமாட்டிப் பெண் பரிதாபமாகச் சிரித்தபோது, அந்த வழியே ரொட்டி விற்றுக் கொண்டு வந்த ஒருவன் ஃபிராங்ளின் பசியைத் தீர்க்க ரொட்டி ஒன்றைக் கொடுத்தான். அந்தப்பெண் அந்தக் காட்சியைக்கண்டு நையாண்டி செய்தபடியே சென்றார்.

அந்த பெண் சீமாட்டிதான், பிற்காலத்தில் தனக்கு மனைவியாக வரப்போகிறவள் என்பது பெஞ்சமினுக்குத் தெரியாது. ஆனால், அந்தப் பெண்ணின் சிரிப்பையும் கிண்டலையும் கண்டதும் பெஞ்சமினுக்கு ஒருவித வெட்கம் ஏற்பட்டது.

பசி களைப்பு தீர்ந்த பெஞ்சமின் பிலடெல்பியா நகரை சுற்றி வேலை தேடினார். எந்தெந்த வேலை கிடைத்ததோ அதையெல்லாம் தனது சூழ்நிலைக்கு ஏற்றபடி செய்து பணம் பெற்றார். பசி ஏக்கத்தோடு திரிந்த அவருக்கு இப்போது நாலு காசும் கையிலே சேரும் அளவுக்கு அங்கங்கே கிடைத்த வேலைகளை எல்லாம் சளைக்காமல் செய்தபடியே, கண்ட இடங்களிலே உண்டு அங்கங்கே உறங்கி நாட்களை கழித்து வந்தார்.

போஸ்டன் நகரைவிட்டுப் புறப்பட்ட பெஞ்சமின், நியூயார்க்கில் இருந்த நண்பரைச் சந்தித்தபோது, அவர் கொடுத்த பிலடெல்பியா அச்சக உரிமையாளரான வில்லியம் பிராட்போர்டு என்பவரைத் தேடிக் கண்டுபிடித்தார்.

இந்த வில்லியம் பிராட்போர்டுதான், பெஞ்சமின் பில டெல்பியாவுக்கு பசிமயக்கத்தோடு களைப்பாகத்தள்ளாடித்தள்ளாடி நடத்ததைப் பார்த்துக் கேலிச் சிரிப்பு சிரித்த டிபோராரீட் என்ற பெண்ணின் தகப்பனார் ஆவார். இது பெஞ்சமினுக்கு தெரியாது அல்லவா?

வியம் பிராட்போர்டு என்ற அந்த அச்சக உரிமையாளரை, அச்சகப் பணிக்காக பெஞ்சமின் சந்தித்தார். ‘அவர் எனக்கு வேலையாள் தேவையில்லை. எனது மகன் ஆண்ட்ரு பிராட்போர்ட் என்பவரிடம் சென்று பார்’ என்று தனது மகனின் முகவரியை கொடுத்து அனுப்பிவிட்டார்.

முகவரியோடு சீமான் பிராட்போர்டுவைச் சென்று கண்ட பெஞ்சமின், அவர் சிலநாட்களுக்கு முன்புதான் தனது வேலைக்கு பணியாளை அமர்த்திக்கொண்டு விட்டதால், அந்த சீமான் சாமுயல் கெய்மா என்ற வேறொரு அச்சகத்தாருக்குப் பணியாள் தேவைப்படலாம், அவரைப்போய் பாருங்கள் என்று கூறிவிட்டார்.

சாமுயல் கெய்மர், பெஞ்சமினைத் தனது அச்சகத்தில் கூலி வேலைக்கு வைத்துக்கொண்டார். அங்கு வேலைசெய்த காலத்தில் தனது கூலிவேலைக்கு வரும் வருவாய் பணத்தைச் செலவானதுபோக, பணம் சேமித்து வைத்து வந்தார்.

அக்காலத்தில், அமெரிக்க குடியேற்ற நாடுகளில், மிகப் பெரிய நகரமாகும் பிலடெல்பியா. அங்கு வாழ்ந்த மக்கள் கற்றறிந்த உணர்வாளர்கள். பணக்காரர்களும், பிரபுக்களும் அதிக எண்ணிக்கையில் வாழ்பவர்கள். அந்த நகர மக்கள் நாகரிக வாழ்க்கைக்கு ஏற்ற ஆடை அணிகலன்களோடும் அழகான வீடுகளோடும், ஆடம்பர வாழ்க்கையோடும் வசிப்பவர்கள் ஆவர்.

கெய்மர் அச்சகத்தில் பணியாற்றியபோது, பெஞ்சமின் ஏராளமானப் புத்தகங்களைப் படித்தார். அன்றாட அறிவு முதிர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கற்று உலகத்தை உணர்ந்து கொண்ட அறிஞராகத் திகழ்ந்தார். தனக்கென ஓர் இல்லத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, நண்பர்களை ஒன்று சேர்த்து உரையாடல்களை அடிக்கடி நடத்துவார். அதனால் பேச்சாற்றலையும் நுட்பமாக உணர்ந்து பேசும் ஆற்றலை வளர்த்துக்கொண்டார். எனவே, பிலடெல்பியா நகர் அவருக்கு மிகவும் மனத்திருப்தியோடு வாழும் நகரமாக அமைந்துவிட்டது.

இந்த நேரத்தில், பெஞ்சமின் போஸ்டன் நகரைவிட்டு ஓடிவந்துவிட்ட செய்தி, அவரின் தந்தை ஃபிராங்ளினுக்கும், அவரது சுற்றத்தாருக்கும் மனக்கவலை உருவாக்கி, பெஞ்சமினைத் தேடிக் கண்டுபிடிக்க எல்லாரும் முயற்சித்தார்கள். இந்த முயற்சிச் செய்தி டிலவேர் நகருக்கும் போஸ்டன் நகருக்கும் இடையே செல்லும் வியாபாரக் கப்பலின் தலைவராக விளங்கிய கேப்டன் ராபர்ட் ஹோல்ம்ஸ் என்பவருக்கும் எட்டியது. அந்த கேப்டன், பெஞ்சமின் சகோதரிகள் ஒருத்தியின் கணவர் ஆவார். அவருக்கு பெஞ்சமின் பிலடெல்பியா நகரில் பணியாற்றுவதும் தெரிந்துள்ளதால், அவர் தனது மைத்துனருக்கு வீடு போய் சேருமாறு கடிதம் எழுதினார்.

கடிதத்தைக் கண்ட பெஞ்சமின், தனது குடும்ப நிலை யையும், தமையன் தன்னிடத்தில் நடந்து கொண்ட சம்பவங்களையும், சுயேட்சையாக தான் இயங்க வேண்டிய வாழ்க்கை சூழலையும் விளக்கி தனது மாமாவுக்கு கடிதம் ஒன்று எழுதினார்.

அக்கடிதம் கேப்டன் ஹோல்ம்சுக்கு சேரும்போது, பென்சில்வேனியா நகரின் ஆங்கிலக் கவர்னராக இருந்த சர் வில்லியம் கெய்த் என்பவரோடு பேசிக்கொண்டிருந்த நேரமாகும். அதனால் கவர்னருக்கும் பெஞ்சமின் விவரம் தெரிந்தது. அவர் தற்காரியங்களைச் செய்வதில் உணர்ச்சி வயப்படும் ஓர் இரக்க சுபாவமுடைய மனிதராவார்.

உடனே கவர்னர், முன்பின் எதுவும் யோசியாமல், பெஞ்சமின் வேலை செய்யும் சாமுவேல் கெய்மரின் அச்சகத்திற்குச் சென்றார். கவர்னரே தேடிக்கொண்டு வந்து விட்டாரே என்ற பரபரப்பு அச்சுக்கூடத்திலும், அக்கம் பக்கத்திலும் பரவியது. சாமுவேல் கெய்மர் ஒன்றும் புரியாமல் திகைத்தார்.

கவர்னருடன், அதிகாரிகளும், தளபதி பிரெஞ்சு என்ற நண்பரும் வந்தார்கள். அச்சகச் சீமான் கவர்னரை வரவேற்றபோது “உமது அச்சகத்தில் பணிபுரியும் ஃபிராங்ளின் என்பவரைப் பார்க்க வந்தேன், தயவு செய்து அவரை இங்கே அழைத்து வாருங்கள்” என்று கவர்னர் கூறினார்.

அவரும் உடன் பெஞ்சமினை அழைத்து வந்தார். கவர்னரும் பெஞ்சமினும் தேநீர் அருந்தும் ஒரு கடையுள் நுழைந்தார்கள்.

‘ஃபிராங்ளின், நீ சொந்தமாக ஒர் அச்சுக்கூடம் நடத்தி வருமானம் தேடலாமே அரசுக்கு ஏராளமான அச்சுப்பிரதிகள் தேவை இருக்கிறது. அதற்கு வேண்டிய உதவிகளையும் நான் செய்கிறேன்’ என்றார் கவர்னர்.

‘என்னிடம் அதற்கான பணம் இல்லை ஐயா’ என்று கூற, அதற்கு கவர்னர், ‘உனது தகப்பனார் உனக்கு வேண்டிய பணம் கொடுப்பார் என்றார். உடனே, எனது தகப்பனார் என்ன கூறுவாரோ! என்றார் பெஞ்சமின்.

'நானே அவருக்கு கடிதம் எழுதுகின்றேன், நீ போஸ்டன் நகருக்குப் போ’ என்றார் கவர்னர். இன்னது சொல்வது என்று தெரியாமல் விழித்த பெஞ்சமின் ‘உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்’ என்றார்.

இந்த உரையாடல், அச்சகத்துள் நடக்கவில்லை; தெரு முனையிலே உள்ள ஒரு தேநீர் கடைக்கு அழைத்துச் சென்று, தேநீர் அருந்திக்கொண்டே கவர்னர் பேசி, பிறகு பெஞ்சமினை அச்சுக்கூடத்திற்கு அனுப்பிவிட்டுச்சென்றார் கவர்னர். அச்சக உரிமையாளருக்கு இதை கூறக்கூடாது என்றும் தெரிவித்துச் சென்றார்.

அச்சக உரிமையாளர் வற்புறுத்தி, கவர்னர் என்ன கூறினார் என்று கேட்டுக்கொண்டே இருந்தவரிடம் ஃபிராங்ளின் ஏதும் கூறாமல் 'எனது குடும்ப விஷயம்' என்று அவரது மாமாவின் விவரத்தை விளக்கினார்.

சில நாட்கள் கழிந்தது! கவர்னர் பரிந்துரைக் கடிதம் ஒன்றை அவரது தந்தை முகவரியிட்டு ஃபிராங்ளினுக்கு அனுப்பி, உடனே சென்று தனது தகப்பனாரைப் பார்க்குமாறு கவர்னர் கூறியிருந்தார்.

பெஞ்சமின் மீண்டும் போஸ்டன் நகருக்குச் சென்று, தனது தந்தையாரையும், குடும்பத்தினரையும், தமையன் ஜேம்ஸையும் பார்த்து மகிழ்ந்தார். கவர்னர் கடிதத்தை தந்தையிடம் கொடுத்தார்.

அதைப் படித்த பெஞ்சமின் தந்தை ஃபிராங்ளின், 'உனக்கு இந்த அனுபவம் போதாது, தனியாக ஒரு நிறுவனத்தை நடத்தும் வயதும் உனக்கு வரவில்லை. பிறர் பணத்தை கையாடும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் காலம் வரும்போது நானே உனக்கு வேண்டியதைச் செய்கிறேன்’ என்றார் ஃபிராங்ளின். கவர்னருக்கும் இதே பதிலை அவர் எழுதிவிட்டார்.

தகப்பனார் கூறிய வார்த்தைகளைக் கேட்ட பெஞ்சமின் மீண்டும் பிலடெல்பியா திரும்ப விரும்பினார். தகப்பனாரும் அவரது பயணத்தைத் தடுக்கவில்லை. காரணம், பெஞ்சமின் தந்தையிடம் தனது வாழ்க்கை நிலையில் உயரும் சந்தர்ப்பங்களை விளக்கிவிட்டு, அமைதியாகப் பயணமானார் பிலடெல்பியா நகருக்கு.

பென்சில்வேனியா கவர்னரை மீண்டும் சந்தித்து பெஞ்சமின் நடந்தவைகளைக் கூறினார். உடனே கவர்னர் அச்சகத்துக்கு வேண்டிய பொருட்களை வாங்க பெஞ்சமினை லண்டனுக்கு அனுப்பி வைத்தார்.

இலண்டன் மாநகரில் உள்ள அச்சகங்களில் ஒன்னரை ஆண்டு காலம் மீண்டும் பணியாற்றி, முன்பைவிடத் தன்னை எல்லா அச்சுப் பணிகளிலும் தொழிலறிஞனாக மாற்றிக்கொண்டார். பிறகு, மீண்டும் பிலடெல்பியா நகர் வந்து முன்பு பணியாற்றிய அச்சகத்திலேயே வேலைக்கும் சேர்ந்தார்.

சாமுவேல் கெய்மர் திடீரென்று இறந்துவிடவே, அந்த அச்சகத்திலிருந்த ஹ்யூமெரிடிக் என்ற தனது நண்பனும் பெஞ்சமினும் சேர்ந்து, நண்பரின் தந்தையிடம் கடனாகப் பணம் பெற்று அச்சகச் சாமான்களை இங்கிலாந்திலே இருந்து வரவழைத்து அச்சகம் ஆரம்பித்தார்கள்.

பெஞ்சமின் அச்சகம் ஆரம்பித்து செய்த முக்கியமான முதல் வேலை என்னவென்றால், அமெரிக்காவிலே இது வரையில்லாத முதன்முறையாக, தாமிரத் தகட்டின்மூலம் அச்சிடும் இயந்திர முறையைக் கண்டுபிடித்ததுதான்.

நியூ ஜெர்சியின் காகித நாணயப்பத்திரங்களுக்கு அவர் பலவிதமான ஓவிய வகைகளை வரைந்து தயாரித்து;அவற்றை அலங்கரிக்கக்கூடிய தகடுகளையும் வெட்டி, நாணய வகைகளை பிரமாதமாக அச்சடித்துக் கொடுத்தார்.

இதன் மூலமாக, அவருக்கு நண்பர்கள் பெருகினார்கள். அந்த நகரில் சட்டசபை உறுப்பினர்களின் நட்பும் கிடைத்தது. பெஞ்சமினுடைய அச்சகத்துக்கு ஏராளமான பெருமையும் புகழும் ஏற்பட்டது. மக்கள் அவருடைய நாணய அச்சடிப்பு முறைகளை வானளாவாக வரவேற்றுப் புகழ்ந்தார்கள். அதனால், ஒவ்வொரு உயர் அதிகாரிகளும் பெஞ்சமினை தங்களது வீட்டிற்கு அழைத்து விருந்துகளை நடத்தி விழா கொண்டாடினார்கள்.

பெஞ்சமின், ‘பென்சில்வேனியா வர்த்தமான இதழ்’ என்ற பத்திரிகையை ஆரம்பித்து, அதற்கு ஆசிரியர், எழுத்தாளர், விற்பனையாளர், விளம்பரதாரர், நிருபராகவும் பணியாற்றினார். பென்சில்வேனியா நகர் உள்ளூர், வெளியூர் மக்கள் செய்திகளை அதிகமாக வெளியிட்டார்.

இந்த வழக்கத்தை, இவர் செய்வதற்கு முன்பு யாரும் அன்றுவரை இதுபோல் பத்திரிகையில் செய்ததில்லை. அவரே மக்களது தேவைக்கேற்ற கேள்விகளை எழுதிக் கொண்டு, பதிலையும் அவரே எழுதி வந்தார். இதனால், இந்த புதிய முறை மக்களிடையே ஒரு நல்ல செல்வாக்கையும், புகழையும், விற்பனையையும் தேடிக் கொடுத்து வந்தது. பத்திரிகைத் துறையில் பெஞ்சமினுக்குப் போட்டியும், பொறாமையும் மென்மேலும் தொடர்ந்தபடியே இருந்தது. கிராமங்களிலே எல்லாம் பத்திரிகைகள் அதிகமாக விற்பனையாகத் தொடங்கி விட்டன.

அவரே தமது பத்திரிகைக்குரிய தேவையான அச்சடிக்கும் காகிதம், வாங்கி வந்து, ஒரு வண்டியிலே அதை ஏற்றித் தெருத்தெருவாக உருட்டிக் கொண்டு போய் அச்சகத்தில் இறக்கி அவற்றை அச்சடிப்பார். இதனால் அவர் ஆசிரியராகவும் வண்டியோட்டியாகவும் வாழ்ந்தார்.

தனது பத்திரிகைக்குத் தேவையான பொருள்கள் எதெதுவோ, அவற்றை வாங்கி வைத்து ஒரு ஸ்டேஷனரி கடையையும் உருவாக்கினார். அதனால் அவர் ஒரு வணிகராகவும் விளங்கினார்.

பெஞ்சமின், பஞ்சாங்கம் ஒன்றைத் துவங்கினார். அதற்கு, ‘ஏழை ரிச்சர்டின் பஞ்சாங்கம்’ என்று பெயரிட்டார். அந்த பஞ்சாங்கத்தில் அமெரிக்க நாட்டின் பழமொழிகளை எல்லாம் மக்களுக்கு நினைவுபடுத்தி, அதற்கான ஓவியங்கள், படங்கள், கதைகள், துணுக்குகள், கணக்குகள், உரையாடல்கள், அரசியல் கண்டனங்கள், நையாண்டிகள், புதிர்கள், கவிதைகள், சோதிடச்செய்திகள், கோள்கள் பற்றிய விவரங்கள், மருந்து முறைகள், உணவு முறை குறிப்புகள், நல்வாழ்வுத் துறைக்கான ஒழுக்கங்கள், பருவகால தட்பவெப்ப புள்ளிகள், சந்திர சூரிய மாறுதல்களுக்கு ஏற்ற விதிமுறைகள், காற்றலைகளின் ஏற்ற இறக்கங்கள், வானிலைச் செய்திகள், விவசாயிகளுக்கான பயிர் வகைச் செய்திகள், மூடநம்பிக்கை ஒழிப்புகள், சாஸ்திர சம்பிரதாய விதிமுறைகள், மற்றும் பலவகையான செய்தித் தொடர்புகளுடன் ‘ஏழை ரிச்சர்டின் பஞ்சாங்கம்’ வெளிவந்தது.

இந்த அறிவுபூர்வமான, ஆராய்ச்சி வடிவமான, அறிவியல் முறையான செய்திகளை எல்லாம், புனைப் பெயர்களுடனும், சொந்தப் பெயருடனும், சான்றோர்களின் விளக்கத்துடனும் தவறாமல் எழுதிக்கொண்டு தொடர்பாக வெளி வந்ததால், அந்தந்த துறையைச் சார்ந்த மக்கள் ஏழை ரிச்சர்டு என்ன எழுதுகிறார் என்று மக்கள் எதிர்பார்த்தபடியே இருப்பார்கள். இதனால், பத்திரிகைகள் ஏராளமாக விற்பனையாயின. இந்தப்பத்திரிகை 1772-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ம் தேதி வெளி வந்தது.

அமோகமான விற்பனையால், ஏழை பெஞ்சமின் பணக்காரராக மாறினார். தாம் அச்சகத்திற்காகப் பெற்ற எல்லாக் கடன்களையும் தீர்த்தார். அதே நேரத்தில் பிலடெல்பியாவில் குறிப்பிடத்தக்க ஓர் அச்சாளராகவும் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தார். இந்த பத்திரிகைக்குப் போட்டியாக வேறு எந்த பத்திரிகையாலும் முன்னேற முடியவில்லை. அந்த அளவு அவர் செல்வாக்கும் பெற்றார்.

‘ஏழை ரிச்சர்டின் பஞ்சாங்கம்’ பத்திரிக்கைத் துறையின் முன்னோடியாக வெற்றி பெற்றதைப் போலவே, அவருடைய மற்றொரு பத்திரிகையான ‘பென்சில்வேனியா வர்த்தமான சஞ்சிகையும்’ ஓங்கி வளர்ந்து புகழடைந்தது. அந்த இரு ஏடுகளும் பல்லாயிரக்கணக்கான இதழ்கள் விற்க ஆரம்பித்து நிலை நின்றன.

இந்த இரண்டு பத்திரிகைகளும், அமெரிக்க குடியேற்ற நாடுகளில் மிக முக்கியமான மக்கள் செல்வாக்கைப் பெற்று வளர்ந்தன. விரைவில் மக்களிடம் இந்த இதழ்கள் போய் சேர வேண்டும் என்பதற்காக, பெஞ்சமின் குதிரை வீரர்களைக் கூலிக்கு ஏற்பாடுசெய்து வழங்கி வந்தார். அதனால் பெஞ்சமின் எப்போதும் தன்னை ஓர் அச்சாளன் என்று கூறியே பெருமை பட்டுக் கொண்டார்.

பத்திரிகைத் தொழிலிலும் அவர் ஒரு முன்னோடியாக நின்றார்! அச்சாளர் துறையிலும் அவருக்கு முன் ஈடு எடுப்புமாக எவரும் அன்றுவரை விளங்க முடியாமல் இருந்தார்கள். இந்த இரண்டு தொழில்களும் அவருக்கு ஏராளமான பொருட் செல்வத்தையும், புகழ் செல்வத்தையும் ஈட்டித்தந்து வந்தன.

இந்த நேரத்தில், தான் அவர், முதன் முதலில் பிலடெல்பியாவில் சந்தித்துக்கேலிச்சிரிப்பு சிரித்த பெண்ணான டிபோராவேத் திருமணம் செய்து கொண்டு, பிலடெல்பியா நகரக்குடிமகனாக நிலை பெற்றார். அதனால், நண்பர்கள் கூடத்திலேயே அவர் நடமாடலானார்! எப்போது பார்த்தாலும் ஒரு கூட்டம் அவர் வீடு முன்பு கூடியிருந்தபடியே காணப்படும்.

பெஞ்சமின் வாழ்ந்த வீடு மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரளும் சந்தப் பேட்டையிலே இருந்த வீடு! அந்த வீட்டை எப்போது கூட்டி, சுத்தப்படுத்தினாலும் குப்பைக் கூளங்கள் காற்றினால் அடித்துக்கொண்டு வந்து குவிந்தபடியே பாணப்படும். அவ்வளவு ஜன நெருக்கமும், போக்குவரத்துகளும் உள்ள சந்தை வெளிப்பகுதி.

சந்தைக்கு வருகின்ற மக்கள் தண்ணீர் தேங்கும் குட்டைகளிலும், சேறும் சகதிகளிலும், குப்டைப் புழுதிகளிலும், குழியும் குண்டுமாக உள்ள பாதைகளிலும் தான், நடமாடி வரும் சூழ்நிலை அப்போது இருந்தது. எந்த அரசும் மக்கள் நடக்கும் அந்த பாதைகளைப் பற்றிக் கவலைப்பட்டு சீரமைப்புச் செய்ய முன்வரவில்லை. மக்கள் தினந்தோறும் மிகவும் கஷ்டப்பட்டு நடக்கும் சூழ் நிலைகளை பெஞ்சமின் அடிக்கடி, கண்டு மனவேதனை கொண்டார்.

தன்னிடம் வந்து போகும் நண்பர்களையும், அச்சகப் பணியாளர்களையும், சில கூலிவேலையாட்களையும் வைத்து சந்தைவெளிக்கு ஒரு நடை பாதையைப் போட்டார்.

நடை பாதை உருவானதும், சந்தை வெளிக்கு வரும் மக்கள், சேறும் சகதியுமில்லாமல், காலில் ஈரம்படாமல், வரவேண்டும் என்பதற்காகத் தனது பத்திரிக்கையிலே எழுதினார். தெருக்கள் கற்களைக் கொண்டு தளமேடை நடைபாதைகளை அமைக்கும் படியும், கற்களைப் பரவி மண் கொட்டுமாறும் தனது பத்திரிகையில் எழுதினார், இந்த பணிகளை பிலடெல்பியா நகர சபை உடனடியாகச் செய்து பெஞ்சமின் வழியைப் பாராட்டியது. இந்த நடை பாதை சீரமைப்பால் எத்தனையோ வீடுகளில் தெருப்புழுதி மக்கள் நடமாடும்கால், சகதி, சேறு புகாமலிருக்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டது. மக்கள் பகுதியிலே இருந்த பணக்காரர்களும் ஏழைகளும் பெஞ்சமினின் நடைபாதை அமைப்பு முறையை வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தார்கள். அவர்களால் ஆன உதவிகளையும் செய்தார்கள்.

யார் யார் வேலையில்லாமல் கஷ்டப்பட்டார்களோ, அவர்களுள் சிலரை ஒன்று சேர்த்து அவர்கள் தினந்தோறும் தெருக்களைக் கூட்டிச் சுத்தப்படுத்தினால் அவர்களுக்கு ஒரு நாளைக்கு ஆறு பென்ஸ் கூலி என்றும் பத்திரிகையில் எழுதி, அவர்களை வீதிகூட்டும் பணிக்கு அமர்த்தியதால் வீதிகள் எல்லாம் சுத்தமாகக் காட்சி தந்தன. இன்றைக்கு இதைத்தான் நகராட்சிகளும் மாநகராட்சிகளும் செய்கின்றன.

இந்த ஆறு பென்ஸ் கூலியை அந்தந்த வீதிகளிலே உள்ள வீடுகளிடம் இருந்து வசூல் செய்யப்பட்டு, தெரு கூட்டு வோருக்குரிய கூலியாக வழங்கப்படும் முறையை முதன்முதலில் கொண்டு வந்தார். இதற்கு முன்பு இப்படியொரு தெரு கூட்டும் சுகாதாரப் பணியே நடந்தது இல்லை. பெஞ்சமின் தான் இந்த திட்டத்தைப் புகுத்தனார். உலக நாடுகள் எல்லாம் இன்று இதைப் பின்பற்றி வருகின்றன.

தெருக்களைக் கூட்டி விட்டால் மட்டும் போதுமா, வீதியைக் கூட்டி சேர்க்கும் குப்பைக்கூள அசுத்தங்களை என்ன செய்வது என்று பெஞ்சமின் சிந்தித்தார்.

கூட்டிய குப்பைக் கூளங்களை தெருக் கூட்டிகள் ஆங்காங்கே குவியலாகக் குவித்து வைப்பார்கள். அந்த குப்பைக்கூளங்களை கூடையில் அள்ளியள்ளரிப் போட. சில கிழவிகளைக் கூலிக்கு நியமித்தார் பெஞ்சமின்.

அவ்வாறு குவிந்த அந்தக் குப்பைகளை ஒரு குதிரை கட்டிய வண்டியில் கிழவிகளை அள்ளிக் கொட்டச் செய்தார். அந்த குதிரை வண்டியிலே குப்பைகளை ஏற்றி, நகரத் தெருக்களைத் தாண்டி ஓரிடத்தில் கொட்டுமாறு பள்ளங்களை உருவாக்கம் செய்தார்!

இப்போது, தெருவில் குவிந்த குப்பைக் கூளங்கள் எல்லாம் குதிரை வண்டிகள் மூலம் அகற்றப்பட்டன. வீதி சாக்கடையில் சேரும் சாக்கடைச் சேறுகளை, வீதிகள் ஓரங்களிலே, நாற்றமில்லாதவாறு தெருக்கூட்டிகள் ஆங்காங்கே கரைமேல் சேர்த்துக் குவிக்க, குவிந்த குப்பைக் கூளச்சேறுகளை எல்லாம் கூடையிலே வாரி, குதிரை வண்டியிலே கொட்ட அந்த வண்டிகள் ஊருக்கு வெளியே உள்ள பள்ளங்களில் அவற்றைக் கொட்டி மண் மூடச் செய்யும் பழக்கத்தை முதன் முதலில் உருவாக்கிக் காட்டித் திட்டம் வகுத்துச் செயல்படுத்திய மாமனிதர் பெஞ்சமின் ஃபிராங்ளின்தான். எவ்வளவு பெரிய மக்கள் நல்வாழ்வுப் பணி பார்த்தீர்களா?

இன்னும் தமது நகரில் நடக்கும். இந்த நகராட்சி சுகாதாரப் பணிகள் மிக மிகச் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், இப்படி ஒரு சுகாதார முறை ஒன்றை உருவாக்கி செயல்படுத்திக் காட்டியவர் யார்? பெஞ்சமின் ஃபிராங்ளின் என்ற இந்த ஒரு மாதரண மனிதர் அல்லவா?

பிலடெல்பியா பட்டின நகரின், தெருக்கள் எல்லாம், சந்தைப் பேட்டை நடைமேடை தளவரிசை போல ஆவதற்குரிய சிந்தனையாளராக அதைச் செயல்படுத்தும் முதல் செயல் வீரராகவும் திகழ்ந்தவர் ஃபிராங்ளின், இவருக்கு முன்பு இப்படி யாரும் செய்யவில்லை.

பிலடெல்பியா நகர் வீதிகளில் ஏற்கனவே விளக்குகள் இருந்தன. அதைக் காலத்துக்கு ஏற்றவாறு மாற்றிச் சீரமைத்தவர் பெஞ்சமின் ஃபிராங்ளின்! எப்படி?

ஒரே உருண்டையான சுண்ணாடி. தெரு விளக்குதான் பெஞ்சமின் சீர்திருத்தத்துக்கு முன்பு இருந்தது. ஆனால், அந்த உருண்டை கண்ணாடி விளக்கு, நான்கு புறமும் நான்கு சிறிய கண்ணாடிப் பட்டைகளையுடைய புதியதொரு விளக்காக மாற்றி புதிய ஒரு அமைப்பைக் கண்டு பிடித்தவர் பெஞ்சமின்!

இந்த சதுர வடிவமான கண்ணாடி தெருவிளக்குகளை நாம் இப்போது காணமுடியா விட்டாலும், நமது நாட்டிலும் அந்த விளக்குகளை நகராட்சியினர் மின் விளக்கு அமைப்பு வருவதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட விளக்குமாக இருந்ததை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. ஏன் நமது நகரங்களிலேயே நூறாண்டு காலத்துக்கு முன்பு இருந்தது.

இந்த விளக்குத் திரியிலே இருந்து புகை வரும். விளக்கை அன்றாடம் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். அதே நேரத்தில் ஒளியை அதிகமாகவும் கொடுப்பனவாகவும் அந்த விளக்குகள் இருந்தன.

சதுர அமைப்புள்ள இந்த கண்ணாடி, விளக்குகளை அடிக்கடி நாமே சுலபமாகப் பழுது பார்த்துக் கொள்ளவும் முடியும். நான்கு பக்கச் சதுர கண்ணாடித் துண்டுகளில் ஏதாவது ஒன்று உடைந்து போனால் கூட, இதற்குப் பதிலாக வேறு ஒரு கண்ணாடித் துண்டை பதித்துக் கொள்ளும் வசதியை உடைய விளக்கு அது.

இன்றும் கூட நாம் பார்க்கிறோம். குடிசைப் பகுதிகள் தீ பிடித்துக் கொள்வதை. உடனே நாம் தீயணைப்புப் படைக்கு தொலைபேசி மூலம் தகவல் தருகின்றோம். தீயணைப்பு வண்டிகள், அதிலே தீயணைக்கும் வீரர்கள், அதற்கான வசதிகளோடு தீப்பற்றிய இடத்திற்கு வந்து, நெருப்போடுப் போராடித் தீயை அணைக்கிறார்கள். எனவே, தீயணைப்புப் படை, அதற்கான நிலையங்கள், அதற்கென ஒரு நிர்வாகத்துறை, எண்ணற்ற தீயணைப்புப் படை வீரர்கள் இருப்பதையும், அதற்கென்ற சம்பளமாக மக்கள் வரி பணத்தில் ஒரு பகுதி செலவழிக்கும் நிதி நிலையையும் நாம் அனுபவித்து வருகிறோம்; இல்லையா?

இந்த நெருப்பணைக்கும் இயந்திரங்கள், அதற்கான நீர் பரிமாற்றத் திட்டங்கள், ஏணியும் கொக்கியும் உள்ள வண்டிகள், இல்லாத அக்காலத்தில், எங்காவது தீப்பற்றிக் கொண்டால் அது பெரும் பொருட் சேதத்தையும், உயிர் சேதத்தையும் விளைவித்து வந்ததை பெஞ்சமின் கண்டு வேதனைப்பட்டார். அந்த சோக சம்பவத்தைப்பற்றிய வருணனைகளைத் தனது பத்திரிகையிலே எழுதினார்! சிந்தித்தார்! மக்கள் அறியும்படிச் செய்தார்.

தீயணைப்பு பற்றிய நெருப்புத் தடுப்பிற்கு பல திட்டங்களை வகுத்துக் கொடுத்து அது வளர வழிகாட்டினார் பெஞ்சமின்.

நெருப்புக் ‘கணப்புத் தட்டு’ இறுக மூடியிருக்க வேண்டும்; அப்போதுதான் ஓர் அறையிலே இருந்து மற்றோர் அறைக்கு மக்கள் நெருப்பை எடுத்துச் செல்லலாம் என்ற ஒரு விதி அப்போது மக்களிடையே இருந்தது.

பிலடெல்பியா பட்டினத்தில் எங்காவது தீ பிடித்தால் அதை அணைக்க தீயணைப்புத் தொண்டர் படைக்குழு அமைக்கலாம் என்று பெஞ்சமின் கூறினார். இதன் எதிரொலியாக ஒரு தொண்டர் படையை அமைத்தார். அவர்களிடம் தோல்களால் செய்யப்பட்ட வாளிகளும், தீயணைப்பு பற்றிய பொருட்களை எடுத்துச்சென்றிட ஒரு கித்தான் பையும் அவர்களுக்குச் சொந்தமாக வழங்கப்பட்டிருந்தன.

பணக்காரர்கள் ஒவ்வொருவர் சார்பாக, அவர்களே தங்களது பணத்தில் வாளியையும் கித்தான் பையையும் விலைக்கு வாங்கிக்கொண்டு, நெருப்பணைப்புக் குழுக்களில் அவர்கள் தொண்டர்களாகச் சேர்ந்தார்கள்.

இந்த நெருப்பணைக்கும் குழுக்கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்கும். இக்கூட்டத்துக்கு வரத்தவறும் தொண்டர்களிடம் அபராதமும் வசூலிக்கப்படும். இந்த அபராதப் பணத்தில்தான், அந்த தொண்டர்களுக்குரிய வண்டிகள், ஏணி கொளுவிகள் எல்லாம் வாங்கப்படுவதுண்டு.

இவ்வாறு ஆரம்பமான தீயணைப்புத் தொண்டர்கள் படை, நீர்த்தேக்கத் திட்டங்கள், ஏணி கொளுவிகள், ஃபையர் இன்ஜின் வண்டிகள், இதற்கான ஃபையர் ஸ்டேஷன்கள், இவற்றை இயக்கும் தனி துறை, எல்லாம் இன்றும் கண்டு, அவற்றின் பலனைக் குடிசை வாழ் மக்கள் அனுபவிக்கிறார்களே, அது யாரால் கண்டுபிடிக்கப்பட்டது பெஞ்சமின் ஃபிராங்ளின் என்ற புனிதனின் சிந்தனை வரலாறு அல்லவா இது?

பிலடெல்பியா நகரில் இருந்த காவல் துறையினர்மீது பெஞ்சமினுக்குப் போதிய மனநிறைவு இல்லை. ஏனென்றால், அவர்களில் பெரும்பகுதியினர் சாராய வியாபாரிகளுக்கு ஒத்துழைப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதை நன்றாக உணர்ந்தார் பெஞ்சமின்.

தேவைக்கேற்ப போலீஸ்காரர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையில் அவருக்குத் திருப்தியில்லை. அதனால் நிரந்தரமாகப் போலீஸ்காரர்களை அழைத்து, அவர்களுக்குரிய சம்பளத்தையும், மற்ற வசதிகளையும் வழங்கி வருவதுதான் சிறந்தது என்று யோசனை கூறினார் பெஞ்சமின். கூலிக்கு துணையாட்களை போலீஸ்காரர்கள் அழைத்துச் செல்வது, மக்களுக்குரிய நல்ல பாதுகாப்பாக அமையாது என்பதை அவர் திட்டவட்டமாக நம்பினார்.

இன்று போலீஸ் படைகளும், அதன் வசதிகளும், வளர்ச்சிகளும் பெஞ்சமின் அன்று கூறிய அடிப்படைக் கருத்தின்மீது நடைபெற்று வருவதைக் காண்கிறோம். ஆனால், ஒன்று, கூலிப்படை போலீஸ் முறை அவர் நினைத்ததைப் போலவே அகற்றப்பட்டு விட்டது என்ற நிலையை பார்க்கிறோம், இல்லையா?

பெஞ்சமின் ஒரு புத்தகப் பிரியர். புத்தகங்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கும் ஓர் அறிவுப் பெட்டகமாக அமைத்துள்ளது. அதனால் மக்களுக்கு அறிவுரை கூறும் ஏடுகள் சுலபமாக கிடைக்க ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அதுதான் லைப்ரரி என்ற வாசகசாலை என்பதாகும்.

பெஞ்சமின், ஜண்டோ என்ற ஒரு நண்பர்கள் கழகத்தை ஆரம்பித்தார், அவரவர்களிடம் உள்ள ஏராளமான புத்தகங்களை கற்க விரும்புபவர்களுக்கு இரவலாக, கொடுத்து வாங்கப்பட்டன. அவரவர் பெற்றவற்றைப் படித்து முடிக்கும்வரை புத்தகங்கள் சுற்றுலா வருவது வழக்கமாக இருந்தது. அதற்குப் பிறகு, வாசிப்பவர்கள் புதுப்புது புத்தகங்களைப் படிக்க விரும்புவார்கள்.

இந்த புத்தகங்களை வாங்குவதற்கு ஜண்டோ சங்க அங்கத்தினர்கள் குறிப்பிட்ட தொகையைச் சந்தவாக செலுத்த வேண்டும் என்று பெஞ்சமின் யோசனை கூறி, அதையே ஒரு விதியாகவும் உகுவாக்கினார். இவ்வாறாக, அந்த சங்கத்திலே உள்ளவர்கள் செலுத்திய பணத்தில் புத்தகம் வெளியீட்டாளர்களுக்கு அனுப்பி வெவ்வேறு புதிய புத்தகங்களை வரவழைக்கலாம்.

அவ்வாறு வந்த புத்தகங்களை ஜண்டோ சங்கத்தில் வரிசை வரிசையாக அடுக்கி வைக்கலாம். உள்ள புத்தகங்களில் யார் யாருக்கு எது தேவையோ அவற்றை அங்கேயே படிக்கலாம். உறுப்பினர்கள் மட்டுமே புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம் என்ற விதி முறைகளை வகுத்துக்கொடுத்தார் பெஞ்சமின்.

அமெரிக்காவிலும் சரி, இன்றைய உலக நாடுகளிலும் சரி, பெஞ்சமின் கையாண்ட முறைதான் வாசகசாலை (Library) என்ற பெயரில் இன்றும் நடந்து கொண்டிருப்பதைப்பார்க்கிறோம்! படிக்கிறோம்.

ஃபிராங்கிளின், மக்களிடம் நூல் அறிவை உருவாக்கவே வாசகசாலையை ஆரம்பித்தார் என்பது மட்டுமல்ல; அஞ்சல் துறையிலேயும் அரிய திட்டங்களை ஆற்றியுள்ளார்.

பிலடெல்பியா நகரின் தபால் துறை விவரங்களை மேற்பார்வையிடும் அதிகாரியாக பெஞ்சமினை நியமித்தது பிலடெல்பிய அரசு நிர்வாகம்; அத்துறையிலிருந்த கணக்கு வகைகளை புனரமைப்புச் செய்தார். பிலடெல்பியாவுக்கும் நியூயார்க்குக்கும் இடையே வாரம்ஒரு முறையாக மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த அஞ்சல்கள் எல்லாம், பெஞ்சமின் நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு வாரம் மூன்று முறையாக வழங்கஅதை மாற்றியமைத்தார்.

பிலடெல்பியா நகரிலிருந்து போஸ்டன் நகருக்கு ஓர் அஞ்சல் அனுப்பி, அதற்கு மூன்றே வாரத்திற்குள் பதில் கிடைக்கும் திட்டத்தை முதன்முறையாக அவர் அமல்படுத்தினார்.

அமெரிக்க குடியேற்ற நாடுகளிலுள்ள அஞ்சல் வழிகள் கரடுமுரடாயுள்ள மற்ற நெடுந்தூர அஞ்சல் பட்டுவாடாக்கள் அனைத்தையும் கவனிக்க அவர் குதிரை மேலேயே சவாரி சென்றார். வழிகளிலே உள்ள அஞ்சலகக் கணக்கு வழக்குகளை இடத்திற்கு ஏற்றவாறு மக்கள் கணக்குகளுக் குகந்தவாறு அவர் மாற்றியமைத்தார்.

குடியேற்ற நாட்டுத் தபால் வருவாய் திட்டங்கள் லாபகரமாக இயங்க என்னென்ன வழிகளுண்டோ அதற்கேற்ப செம்மைப்படுத்தி வருவாய் பெற வைத்தார்.

இந்த நேரத்தில் தான் அமெரிக்காவிலே உள்ள குடியேற்ற நாடுகளில் எல்லாம் தங்களது சுதந்திர உரிமைகளுக்காக போராட்டம் நடத்த ஆரம்பித்தார்கள். போராட்ட நேரத்தில், குடியேற்ற நாடுகளின் தேசியக் காங்கிரஸ் மகா சபை கூடும் நேரத்தில், பெஞ்சமின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் என்ற பெரிய அதிகாரப் பதவியைப் பெற்றார்.

அந்த பதவி மூலமாக அவர் பெற்ற ஆயிரம் டாலர் பணத்தை: குடியேற்ற நாடுகளின் சுதந்திரத்துக்காகப் போராடி, போர்க்களத்திலே காயமடைந்த போர்வீரர்களின் நிதிக்கு கொடையாகக் கொடுத்து தனது தேச பக்திக்கு அடைமாக நின்றார், பெஞ்சமின்.

அதற்குப் பிறகு, அரசு நிர்வாகத்திலே பணியாற்றிய அஞ்சல் துறை நின்று விட்டதால், பெஞ்சமின் புதிய தபால் திட்டத்தை நிலை நிறுத்திவார். பெஞ்சமினால் ஆரம்பித்த இந்த முறைதான், இன்றும், ஐக்கிய அமெரிக்காவிலே நடை முறையில் இருந்து வருகிறது.

பிலடெல்பியா அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாகப் பதவி வகித்த பெஞ்சமின், புதிய தபால் தலைகளை வெளியிட்டார். அதிலே ஒன்று ஐந்து செண்ட் தபால் தலையாகும். பெஞ்சமின் ஃபிராங்ளின் முகத்தை அந்த ஐந்து செண்ட் தபால் தலையிலே அச்சிட்டு பெருமை பெற்றது அஞ்சல் துறை நிர்வாகம்.

தபால் நிலயத்திற்கு வருகை தந்து தான், பொதுமக்கள் அவரவர் அஞ்சல்களைப் பெற்றுப் போவது அக்காலப் பழக்கம் இருந்தது. பெஞ்சமின் இந்த வழக்கத்தை மாற்றி அமைத்து, பொதுமக்கள் வீடுகளுக்கே அஞ்சலர்கள் சென்று அஞ்சல் வழங்கும் திட்டத்தை ஏற்படுத்தினார். அந்த திட்டம் தான், இன்று, நம்முடைய தபால்காரர்கள் தமது வீடு தேடி வந்து கடிதங்களைக் கொடுத்துவிட்டுச் செல்லும் முறை என்றால் வியப்பீர்கள் இல்லையா?

குதிரைகள் மீது சவாரிசெய்து தனது பத்திரிக்கைகளை விற்பனை செய்து வந்த ஃபிராங்களின், அவர் போஸ்ட் மாஸ்டராக மாறிய பின்பு அஞ்சலகங்கள் மூலமாகவே, பத்திரிக்கைகளைப் பட்டுவாடா செய்யும் முறையை, முதன் முதலாக, பத்திரிகை வரலாற்றிலே பெஞ்சமின் பிராங்ளின்தான் செய்து காட்டினார். இவ்வாறு பணியாற்றிட சிறு தொகையும் பெறப்பட்டது.

இந்த முறையால், தபால் துறையிலே உள்ள பெரிய அதிகாரி முதல் சிறிய ஊழியர்கள் வரை, அவரவர் தொழிலின் முக்கியத்துவம் என்ன என்பதை அவர் உணர வைத்தார்.

அஞ்சல்மீது எழுதப்பட்டுள்ள முகவரிகளின்படி அஞ்சலகம் வந்து கடிதங்களைப் பெறாதவர்களது பெயரை, முகவரியோடு தனது சஞ்சிகையிலே வெளியிட்டுப் பெற்றிக் கொள்ளச் செய்தார் ஃபிராங்ளின். இதற்குப் பிறகும்கூட, அந்த தபால்களைப் பெற்றுக்கொள்ள முகவர்கள் வராது போய், அக்கடிதங்கள் அங்கேயே தங்கிவிடுமானால், மூன்று மாதங்கள் சென்றபின்பு, அவை பிலடெல்பியா நகரிலுள்ள சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பப்படும் முறையை முதன் முதலில் செயல்படுத்தியவர் பெஞ்சமின் ஃபிராங்ளின்தான். இவ்வாறுள்ள தபால் சேமிப்பு கிடங்கிற்கு என்ன பெயர் தெரியுமா; Dead Letter Office என்பதாகும்.

இந்த DLO என்கிற டெட் லெட்டர் ஆஃபிஸ் இன்றும் நம்மிடையே இருந்து கொண்டே பெஞ்சமின் புகழைப் பாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

இவ்வாறு போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாக பெரிய பதவியைப் பெற்ற பெஞ்சமினால், என்னென்ன நன்மைகள் அஞ்சல் துறைக்கும், பொது மக்கட்கும் ஏற்பட்டது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டிய சம்பவம் மட்டுமன்று.

அதே கால கட்டத்தில், குடியேற்ற நாடுகளின் சுதந்திரப் போராட்டம் துவங்கப்பட்டிருக்கும் உணர்ச்சிகரமான வேளையில், பெஞ்சமின் ஃபிராங்ளின் அஞ்சல் துறை பணியின் வேகம், கவனமும் அவருக்குப் பெருமை வழங்கியது மட்டுமல்ல; அஞ்சல் துறையும் ஒழுங்கான சீரமைப்பைப் பெற்று வருக்கு ஒரு வழிகாட்டி இயக்கமாகவும் அமைந்தது எனலாம்.

இதைவிட மிக முக்கியமானது என்னவெனில், பதின்மூன்று குடியேற்ற தூர தூரப் பகுதி நாடுகள் எல்லாம் இந்த அஞ்சல் துறை தான் அந்த நாடுகளை ஒற்றுமை வட்டத்துக்குள் இணைகும் புள்ளியாக அமைந்தது. பெஞ்சமின் ஃபிராங்ளினால் வெற்றி பெற்ற அஞ்சல்துறை தொண்டுகள்தான் சிதறிக் கிடந்த குடியேற்ற நாடுகளின் பகுதிகளை எல்லாம் ஒரே நாடு என்ற ஒற்றுமை உணர்ச்சியை உருவாக்கிக் கொடுத்தது என்றால், மிகையல்ல.

பிலடெல்பியா நகரில் பாதுகாப்பு, அந்நகர மக்களின் உயிருக்கும், உடமைக்கும் உரிய காவல் நிலை, பிராங்ளின் மனதுக்கு நிறைவைக் கொடுக்காமையால், ஓர் இராணுவ பாதுகாப்பு முறை தேவையென்று எண்ணினார்.

தற்காலத்தில் ‘குடி’ப்படைக்கு ஊர் மக்களை சேர்க்கிறோம் இல்லையா? இதுபோல, பிலடெல்பியா நகரின் மக்களிடையே ஓர் இராணுவப் படையைப் பாதுகாப்புக்காக அமைக்க பெஞ்சமின் திட்டமிட்டார். காரணம், பிரான்ஸ், ஸ்பெயின், நகரக் கொள்ளையர்களது கொடூரங்களை அமெரிக்க குடியேற்றப் பகுதி மக்களால் சதித்துக் கொள்ள முடியாதனவாக இருந்தன. இந்தக் கொள்ளைக் கும்பல்களின் கொலைகளையும், திருட்டுகளையும், வழிப்பறிகளையும் தடுக்க, ஓர் இராணுவ அமைப்பு தேவை என்று நம்பினார்.

பிலடெல்பியா சட்டசபையில் மக்களது பாதுகாப்புக்கான துப்பாக்கிகளுக்குத் தேவையான பணத்தை ஒதுக்குமாறு தனது பத்திரிகையில் எழுதினார் ஃபிராங்ளின். அதற்கான எல்லாத் தேவைகளுக்கும் வாக்கெடுப்பு ஒன்று நடத்துமாறு சட்டசபையைக் கேட்டுக் கொண்டார்.

ஆனால், சட்டமன்றத்தை ஆட்டிப் படைத்து வந்த குவாக்கர்கள் எனப்படும் சமையக் கோட்பாளர்கள், சமாதானம் பற்றிப் பேசி பிற நாட்டவரோடு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று வாய் வேதாந்தம் பேசினார்கள். இதனால், பெஞ்சமின் எண்ணம் வெற்றி பெற இயலவில்லை. இந்தப் பிரச்னையை பெஞ்சமின் பொதுமக்களிடம் வைத்துப் பேசினார், எழுதினார்.

இராபர்டின் காபி மாளிகை என்ற இடத்தில் 1200 பேர், இராணுவத் தற்காப்புச் சங்கப் படையில் சேர்ந்திட கையொப்பமிட்டனர். இந்தசங்கம் ஒவ்வொரு குடியேற்றப் பகுதிகளிலும் பரவியதால், ஏறக்குறைய பத்தாயிரம் வாலிபர்கள் கையொப்பமிட்டனர். இந்த படை வீரர்கள் அனைவரும் பல பிரிவுகளாகப் பிரிந்து, குடிப்படைகளாக உருவெடுத்தன. தாய்மார்கள் அங்கங்கே பணம் திரட்டியது மட்டுமின்றி, ஒரு படை அமைப்புக்கு என்ன தேவையோ அதைச் செய்து கொண்டிருந்தார்கள். பல்வேறு குழுப் பிரிவுகளுக்கேற்றவாறு, பட்டுத்துணியாலானக்கொடிகள், இலட்சிய முத்திரைகள் போன்ற இராணுவப் பணிகளை அங்குள்ள பெண்கள் செய்து வந்தார்கள்.

இந்த நேரத்தில் தோமஸ் பாண்ட் என்பவர், பிலடெல்பியா நகரில், பைத்தியம் பிடித்தவர்களுக்கான விடுதி, மருத்துவமனையைக் கட்ட பணம் சேர்த்துக் கொண்டிருந்தார். அப்போது, பெஞ்சமின் உதவியையும் அவர் நாடினார். ஆனால், அவரது முயற்சி தோல்வி பெற்றது. காரணம், சித்த சுவாதினிகளுக்கு மருத்துவ மனையா? இதை நாம் கேள்விப்பட்டதும் இல்லையே என்ற அறியாமைதான்.

உண்மையை உணர்ந்த பெஞ்சமின், பைத்தியக்காரர்களுக்கு மருத்துவமனை தேவைதான்், அவர்களுக்குத் தங்கும் விடுதியும் அவசியம் வேண்டும் என்ற காரண காரியங்களை விளக்கி தனது வர்த்தமான சஞ்சிகையில் எழுதினார். இந்த பிரச்னையை சட்ட மன்றத்திற்கே கொண்டு சென்றார். சட்டசபை போதிய நிதியை வழங்கியது. 1753-ம் ஆண்டு அந்த மனநோய் மருத்துவமனையின் திறப்பு விழா நடந்தது. பெஞ்சமினே அந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு தலைவரும் ஆனார். இந்த பைத்தியக்கார மருத்துவமனை, இன்றும் பென்சில்வேனியா மாநகரிலே இயங்கிக் கொண்டு வருகிறது.

இவ்வளவு சாதனைகளை ஒரு மனிதரால் ஆற்ற முடியுமா? என்று நினைத்தவர்கள் அவரை அணுகி எப்படி இவ்வளவு திறமையாகப் பணியாற்றுகிறீர்கள் என்று சிலர் கேட்டதற்கு, அதற்கு அவர், என் நேரத்தில் ஒரு வினாடியைக் கூட நான் வீணாக்கியது இல்லை. முன் தூங்கி முன் எழுதல் என்பதை எவன் கடைப்பிடிக்கின்றானோ அவன், நிச்சயமாய் வெற்றி பெறுவான் என்ற மனோதிடம் கொண்டவர் பெஞ்சமின் ஃபிராங்ளின்.

எந்த துறையில் ஈடுபட்டாலும் அவர், புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்துக் கொண்டே இருப்பவர். எந்த பிரச்னையே ஆனாலும், அதை எப்போதுமே ஆராய்ந்து கொண்டிருப்பவர்; இதற்கு அடையாளமாக, அவர் பல புதிய கண்டு பிடிப்புகளை உலகுக்கு வழங்கியிருக்கிறார்.

பெஞ்சமின் சிந்திக்காத விஷயங்கள் இல்லை; எதிர் காலத்தில் என்னென்ன நடக்கும் என்பதிலே மட்டும் அவர் சிந்தனை செல்லவில்லை. அவருடைய காலத்திலே இருந்த அறிவாளிகள் அனைவரையும், அவர்களுடைய ஆற்றல்களையும் அவர் நன்கு உணர்ந்து இருந்தவர்.

பிலடெல்பியா நகரின் குளிர்கால தட்பவெப்பங்களையும் நன்றாகச் சிந்திப்பவர் ஃபிராங்ளின். குளிர் காலத்தில் தனது உடல் எல்லாம் நடுநடுங்குவதைக் கண்டார். கை கால்கள் கணப்பின் சூடேற்றத்தில் இருக்கும்போது, அவரது முதுகுப்புறத்தில் ஜில்லென்று பனி உறைவதைக் கண்டு, இதை அகற்றுவது எப்படியென்று அவர் சிந்தித்தார். சூடேற்றும் திட்ட்ங்கள் வ்ளர்ச்சியுறுவதற்கு வழி என்ன என்று ஆய்வு செய்தார்.

காற்று உயரே செல்வதையும், அந்த இடத்திலே குளிர் வேறு காற்று உள்ளே புகுவதையும் பெஞ்சமின் கண்டு சிந்தித்தார். அவர் காலத்தில் இருந்த கண்டுபிடிப்புகள் சிறிய திறவைகளுடன், வெப்பத்தைவிட காற்று வீச்சுக்கே அதிக இடமளிப்பதாய் இருந்தன.

மேற்கண்ட விஞ்ஞான உண்மைகள் மக்களுக்குப் பயன்படுபவனாக இல்லையே என்றுணர்ந்து குறைவான எரிசாதனத்துடன் அதிகமான வெப்பம் தரக்கூடிய ஒரு நல்ல ஸ்டவ் என்ற கணப்படுப்புக்குத் திட்டமிட்டார்.

ஃபிராங்ளினின் கணப்படுப்பு, இதன் அருகிலேயே அமர்ந்துள்ள பெண்களுக்கு அவ்வளவாக குளிரும், பல் வலியும் வராமல் இருப்பதை சோதனை செய்து பார்த்தார்.

இராபர்ட்கிரேஸ் என்ற அவரது நண்பர் ஒரு இரும்பு வார்ப்புப் பட்டரை வைத்திருந்தார். அதில், தனது ஸ்டவ் அடுப்பை செய்து தருமாறு, மாதிரி அடுப்பொன்றையும் கொடுத்தார்.

‘இந்த புது அடுப்பு, பழைய அடுப்பைவிட இரண்டு மடங்கு வெப்பம் தருகிறது. இதை எரிய விடவும் கால் பங்கு விறகு இருந்தால் போதுமே’, என்று ராபர்ட் கிரேஸ் கூறினார். அதுமட்டுமல்ல, நான் வியாபாரி அல்லன், என்னால் விற்கவும் இயலாது, இரும்புக் கொல்லனுக்கு இது வீண் வேலையானால் என்ன செய்வேன்?’ என்று கொல்லன் ஃபிராங்ளினிடம் சொன்னான்.

இந்த புது ஸ்டவ் பற்றி, ஃபிராங்ளின் தனது வர்த்தமான இதழில் எழுதினார். ‘எனது ஸ்டவ் அதிக வெப்பத்தைத்தரக்கூடிய ஒன்று. அமர்த்தியுள்ள இடத்தைக் கதகதப்பாகவே வைத்திருக்கும். தீயை அதிகமாக எரியவிட்டால் உடல் நலம் குன்றும்! வயோதிகத்தோற்ற வாய்ப்பை வழங்கி, தோல்களைச் சுருங்க வைத்துவிடும். எனவே, அதிகம் எரிய விடாமல் அதிகப் பணமும் செலவு செய்யாமல் இந்த ஸ்டவ்வைப் பயன்படுத்தலாம் என்று தனது பத்திரிகையிலே எழுதினார். துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார்! இந்த கட்டுரையின் எழுத்துக்கள் பொதுமக்களைக் கவர்ந்தன.

பென்சில்வேனியா கவர்னராக அப்போது இருந்த தோமாஸ் என்பவர், பெஞ்சமினுக்குரிய வியாபார உரிமையைக்கொடுத்து, வேறு எவரும் அதைச் செய்து விற்க முடியாதவாறு தடுத்தார்.

கவர்னரின் வியாபார உரிமையை பெஞ்சமின் ஏற்க மறுத்தார். ‘பிறருடைய கண்டுபிடிப்புகளின் பலனை நாம் அனுபவிப்பது போலவே, என் ஸ்டவ்வும் மக்களுக்காகப் பயன்பட வேண்டும்’, என்று கூறி அந்த உரிமத்தை அவர் பெற மறுத்துவிட்டார்.

இது ‘ஃபிராங்ளின் ஸ்டவ்’ என்று பொதுமக்களிடையே பெயரிடப்பட்டு நல்ல செல்வாக்கும் பெற்று, மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. அமெரிக்காவில் மட்டுமல்ல, ஐரோப்பா கண்டம் முழுவதுமே நல்ல பாராட்டைப் பெற்று மக்களுக்குப் பயன்பட்டது. கி.பி. 1771-ம் ஆண்டு இந்த ஸ்டவ்வின் செல்வாக்கும் விற்பனையும் பரவலான உச்சக்கட்டத்தைப் பெற்று வந்தது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

பெஞ்சமின் ஃபிராங்ளின் ஒருநாள் பிலடெல்பியா வயற்காடுகளிலே வந்து கொண்டிருந்தார். அப்போது, தரையில் முளைத்திருந்த புல்வகைகள் பச்சை பசேலென்று இருப்பதை நோக்கினார். இந்த புல் ஏன் பச்சை நிறமாக இருக்கிறது? என்று அவர் சிந்தித்தபோது, வயல்களில் ‘சிலா சத்து’ (GYPSUM) வைக்கொண்டு சில எழுத்துக்கள் எழுதப்பட்டிருப்பதுபோலப் பார்த்தார். இந்த சிலாசத்துக்கள் விழுந்த இடங்களிலே மட்டும் புற்கள் பச்சை நிறமாக இருக்கின்றதே ஏன் என்று அவர் ஆராயலானார்.

வயலில் விளையும் பயிர்கள் வளமாக இருக்க வேண்டுமா? ‘சிலா சத்து’ வைத்தெளிக்க வேண்டும் என்று பிராங்ளின் கூறியதைக்கேட்டு, அந்த நாட்டு விவசாயிகளில் பலர், பெஞ்சமினுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றார்கள்.

ஏன் அந்த விவசாயிகள் அவ்வாறு கூறினார்கள்? அவர்கள், அன்று வரை பயிர்களுக்கு செயற்கை உரம்இடுவதைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லையாதலால், அவரைப் பைத்தியம் என்று தூற்றலானார்கள்.

ஆனால், இப்போதுள்ள விவசாயிகள் அனைவரும் இயற்கை உரம் இடுவதையே மறந்து விட்டார்கள்.

செயற்கை உரமிடுங்கள் என்று அரசு விளம்பரம் செய்து அந்த உரங்களை விற்பதும், விவசாயிகளும் செயற்கை உரங்களை இடுவதற்கே முக்கியத்துவம் கொடுப்பதுமான விவசாயம் தான் நமது நாட்டில் அதிகமாக நடக்கின்றது. இது பெஞ்சமின் கண்டுபிடித்த உர முறையாகும்.

புயல், சூறாவளிகள், விஷப்பூச்சிகளால் பயிர்கள் அழிவதை நாம் ஆண்டாண்டு தோறும் பார்க்கின்றோம். அவ்வாறு அழிகின்ற காலங்களில் அந்த பயிர் இனங்களுக்கு ‘ஆபத்து உதவி நிதி’ என்ற பெயரில் இன்சூரன்ஸ் செய்து, கொள்ள வேண்டும் என்ற யோசனையை, முதன் முதலில் உலகுக்கு கூறிய விவசாய விஞ்ஞானி பெஞ்சமின் ஃபிராங்ளினே ஆவார்.

ஆனால், பெஞ்சமின் கூறியதைக் கேட்ட விவசாயிகள், விவசாய மக்கள் வியப்படைந்து வெருண்டார்கள்! செயற்கை உரமிட்டுப் பயிர்களை வளர்ப்பது, கடவுளின் முகத்திலே இயற்கைக்கு விரோதமாக அடிப்பது போல அமையாதா? என்று விவசாயிகள் மனம் பொறுமி, ஃபிராங்ளினைக் கண்டவாறு எல்லாம் கண்டித்துப் பேசினார்கள்.

வயலைச் சூழ்ந்துள்ள பகுதிகளில் ஒருநாள் அவர் வந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த நீரோடை ஒன்றைத் தாண்டி வரவேண்டிய நிலை இருந்தது.

நீரோடையைத் தாண்டிட பெஞ்சமின் இறங்கும் போது இரண்டு மூன்று ஓலைக் கூடைகள் வரிசையாக அந்த ஓடையில் மிதந்து வருவதைக் கண்டார். பிறகு, அந்த ஓலைக்கூடையை எடுத்து ஃபிராங்ளின் உற்றுப் பார்த்தபோது, கூடையிலே இருந்த கீற்றுக்களில் ஒன்றிரண்டு வெளியே வந்திருப்பதை அவர் கண்டார்.

கூடையின் கீற்றுக்கள் தண்ணீரில் முளைவிட்டு, சிறிய சிறிய தளிர்களாக முளைத்திருப்பதை உணர்ந்த பெஞ்சமின், “இந்த ஓலைக்கூடைக்கு உயிர் இருக்கிறது.” என்று உறைத்தார். அந்த ஓலைக் கூடையை வீட்டிற்கு எடுத்துச் சென்று அதை முளை, கிளம்ப வைத்தார். அமெரிக்காவில் அன்றுவரை அலரி மரம் உற்பத்தியின் ஆரம்பம் இதுதான் என்பதை அவர் கண்டறிந்தார்.

நிலங்களில், விவசாயிகள் பயிர்களை அறுவை செய்து கொண்டிருக்கும்போது, அவர்களது உடலிலே வியர்வைத் துளிகள் சிந்திச்சிந்தி அது உடலையே நனைத்துவிடும்.

இந்தக் காட்சியை பெஞ்சமின் ஒவ்வொருவர் உடலிலேயும் நேரிடையாகவே பார்த்தார். உடனே ஒரு சிந்தனை அவர் மூளையில் உதித்தது. ‘உடம்பில் நீராவியாகும் வியர்வைத் துளிகள் உடம்பை ஜில்லென்று குளிர்மையாக்கும்’ என்ற முடிவைக் கண்டார். இந்த குளிர்மையை நம்பி ஓர் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

வெந்நீர், தேன், காடி, இவற்றைக்கொண்டு கொதி ஆவி கிளம்ப ஒரு பானகம் தயாரித்து; தர்மா மீட்டர் 100 டிகிரி உஷ்ண அளவைக் காட்டும்போது, அந்தப் பாணகத்தைக் குடித்தார்.

இந்த பானகத்தின் சக்தி வியர்வையைப் பெருகி எழச் செய்தது. ஆனால், அப் பானகம் ஜில்லென்ற-குளிர்ச்சியான உணர்ச்சியைப் பருகியவுடன் கொடுத்தது. இந்த ஆய்வுக் கருவை பெஞ்சமின் நன்கு சோதனை செய்தார். ஏனென்றால், பிலடெல்பியா பட்டினம் வெயில் காலத்தில் வெப்பமாய் இருக்கும். அந்த வெப்பம் தன்னைத் தாக்கும் போது அதைத் தடுப்பது எப்படி என்பதற்காகவே, இந்த சோதனையின் கொதி ஆவி பானகத்தைக் கண்டுபிடித்தார்.

இன்றைக்கும் நாம், மழைக் காலங்களில் நமது உடலைச் சூடேற்றிக் கொள்ள, தேநீர் காஃபி, சுக்கு காஃபி போன்ற சூடான பானங்களைக் குடிக்கிறோம் இல்லையா? இதற்கு மூலமே பெஞ்சமின் மூளைதான்.

அதே போல கோடைக்காலம் வந்ததும், கொக்கோ கோலா, பெப்சி, பாதம்கீர், ரச்னா, மோர் போன்ற பிற குடிநீர் பொருட்களையும் ஜில்லென ஐஸ் கட்டி கலந்து குடிக்கிறோமே மறக்க முடியுமா அதனை?

இதற்கு எல்லாம் அடிப்படைகளான பானகக் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த மக்கள் நல்வாழ்த்துறை மாமனிதன் பெஞ்சமின் ஃபிராங்களின் என்றால் ஆச்சரியப்படமாட்டீர்கள்!

கோடைக் காலத்தில் வெயில் நம்மை வாட்டி வேதனையாக்கி விடுகின்றது. அப்போது துணிகள் எல்லாம் நனைந்து, துணி உவர் நீராய் மாறி, சிலருடைய உடலில் ஒருவித கத்தாய் நாற்றத்தையும் எழுப்புவதையும் நாம் இன்றும் பார்க்கிறோம்.

பெஞ்சமின் ஃபிராங்ளின், இந்த நாற்றம் உடலை எவ்வாறு நாறடிக்கிறது என்பதையும் அதனால், பிறரிடம் நாம் முகம் கூட காட்ட முடியாமல் பிறரது ஏளனச் சொற்களுக்கு ஆளாகும் நிலை உருவாகி, பலர் முன்னால் முணு முணுக்கும் சூழ்நிலையும் நமக்கு வருகின்றது.

இதற்கு என்ன காரணம் என்பதை பெஞ்சமின் குளிர் காலத்திலே சோதனை செய்தார். கறுப்புத்துணி, இருள் நீலம் துணி, மெல்லிய நீலம் துணி, வெள்ளை நிறம் போன்ற துணிகளை சிற்சில சிறிய துண்டுகளாக வெட்டி அப்போது தரையில் தேங்கி படர்ந்திருக்கும் உறை பனி மீது, சூரிய கதிர்களுக்கு நேராக, கீழே, அந்த துண்டுகளை ஒவ்வொன்றாக வைத்தார். என்னவாயிற்று தெரியுமா அந்த துணிகள்? பாருங்கள் பிராங்ளினின் சோதனை அறிவை!

கீழே உறைபனிமீது சூரிய கிரணங்களுக்கு எதிராகப் பரப்பிய கறுப்பு நிறத்துணி, விரைவாகவே உருகி பனியில் அமிழ்ந்து விட்டது. கருநீல நிறத்துணியும் அதைவிடக் கொஞ்சமாகப் பனியில் உருகிப் புதைந்து போயிற்று. மெல்லிய நீல நிறத்துணியின் கதி என்ன தெரியுமா?

அதனுடைய மென்மைக்கு ஏற்றவாறு மெதுவாகத் தான் பனியை உருகச் செய்து புதைந்து போனது. ஆனால், வெள்ளை நிறத்துணியின் நிலை என்ன?

வெள்ளை நிறத்துணி, அவருடைய பரிசோதனைகள் எல்லாம் முடிந்து அதிகநேரமான போதும் கூட அது பனியில் முழுகாமல் அப்படியே இருந்தது. அதனால் இதன் காரணம் என்ன என்பதைக் கண்டறிய விரும்பிய அந்த மாமேதை, இறுதியில் என்ன கண்டு பிடித்தார் தெரியுமா?

“மென்மையான வண்ணம் உஷ்ணத்தை எதிர்த்து நிற்கிறது” என்பதையும், ‘மெல்லிய வெள்ளை நிற ஆடைகள், துணிகள், தான் கோடைக்கால வெப்பத்தின் கொடுமையை எதிர்த்து நிற்கும் ஆற்றல் வாய்ந்தவை’ என்றும் கண்டு பிடித்து உலகுக்கு உரைத்தார்.

அதனால்தான், குளிர்காலம் வந்தால் கம்பளி ஸ்வெட்டர், உள்ளன் பணியன், கம்பளி கோட்டு, கம்பளி சட்டைகள், போர்வைகள் பலவற்றை அணிந்து இயற்கையின் வலிமையையே எதிர்த்து வாழ்கின்றோம்.

அதே போலவே, கோடையின் கொடுமைகள் நம்மைத் தாக்கும்போது, மென்மையான வெண்மை வேட்டிகளையும் சட்டைகளையும், கிளாஸ்கோமல் போன்ற துணிகளால் தைக்கப்பட்ட ஜிப்பாக்களையும் சட்டைகளையும் அணிந்து கொண்டு இயற்கையான கோடையைச்செயற்கை யாகவே எதிர்த்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

குளிருக்கும் கோடைக்கு உரிய இந்த ஆடை வசதிகளை நமக்கு உருவாக்கிக் கொடுத்த பேரறிஞர் யார்? அவர்தான் பெஞ்சமின் ஃபிராங்ளின் என்ற மனிதர்.

கிராம மக்களானாலும், பட்டினத்து மக்களானாலும், பட்டணத்துப் பாமரர்களானாலும், அவர்கள் நலமாக, ஆரோக்கியமாக வாழவேண்டும் என்று அக்கறை கொண்டார் பெஞ்சமின்.

முதலாக, அவர் அச்சாளராக இருந்ததால் அந்த தொழிலாளர்கள் நிலை என்ன? ஏதாவது சொந்தமாக, பாத்திரத்தொழில் நடத்துபவர், பானை வளையும் குயவர்கள் வாழ்க்கை நிலை, வண்ணமடித்து வாழும் ஏழை சுண்ணாம்புக்காரர் அல்லது பெயிண்டர், உலோகங்களுக்கு இடையே மாட்டிக் கொண்டு காலாகாலமாய் வேலை செய்யும் தொழிலாளர்கள் சுகமாக, தேகாரோக்கியமாக, திட காத்திரமாக அவர்களால் ஏன் வாழ முடிவதில்லை என்பதை நாள்தோறும் தனது அனுபவத்துக்கு ஏற்றவாறு ஆராய்ந்தார்.

இவர்கள் எல்லாருக்கும் நோயென்று ஒன்று வந்தால், நோய் ஒரே மாதிரியாகவே அவர்கள் அனைவரையும் தாக்குவது ஏன்? என்றும் சிந்தித்தார்.

இந்த தொழிலாளர்கள் எல்லாம் வெள்ளை ஈயத்தைக் கையாள்பவர்கள். இந்த ஈயம் விஷத்தன்மை கலந்தது. அவர்கள் ஆயுள் முழுவதும் இந்த வெள்ளை ஈய உலகத்தோடே போராடுவதால், இறுதியில் அவர்கள் ஒருவித விஷநோயால், பாதிக்கப்பட்டு மரணமடைகிறார்கள் என்று பெஞ்சமின் ஃபிராங்ளின் கண்டு பிடித்தார்.

பெஞ்சமின், எம்.பி.பி.எஸ். அல்லது எம்.டி படித்துப் பட்டங்கள் பெற்ற ஒரு டாக்டரும் அல்லர். ஆனால், மருத்துவத்துறையிலே ஒரு விதமான புதிய விஷநோய் ஊடுருவியுள்ளதை அதுவரை எவரும் கண்டுபிடித்திராதபோது முதன்முதலில் கண்டு பிடித்து மனித இனத்தை எச்சரித்து மறைந்த ஒரு மாமனிதர் பெஞ்சமின்.

மூக்குக் கண்ணாடியை கண்டு பிடித்தவர்

பெஞ்சமின் முதுமையின் சிகரத்துக்கு ஏறும் படிக்கட்டுகளிலே ஏறினார். ஒன்றிரண்டு என்று வயது படிகளைத் தாண்டிக் கொண்டே வரும்போது, அவருடைய கண் பார்வையின் ஒளி குறைந்தது-மங்கியது. அதனால், மூதறிஞரான அவர், ஒவ்வொரு கிழவனுக்கும், இரண்டு ஜோடி மூக்குக் கண்ணாடிகள் தேவை என்பதை ஆராய்ந்து அறிவித்தார்.

ஏன் இரண்டு வகை மூக்குக் கண்ணாடிகள்?

ஒரு கண்ணாடி படிப்பதற்கு மட்டுமே தேவை. அது மட்டுமல்ல, கண் அருகே என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டுமோ அதற்காகவும், கண்ணருகே எதை யெதை நேருக்கு நேர் பார்க்க வேண்டுமோ அதற்காகவும், கிட்டப் பார்வைக் காட்சிகள் எல்லாம். நன்றாக, நல்லபடியாக, முழுமையாகத் தெரியவும் ஒரு கண்ணாடி அவசியம் தேவை என்று உணர்ந்தார்.

அருகே உள்ள பார்வைக்கு ஒரு கண்ணாடி தேவைப்படுவதைப் போல, எங்காவது தூரமாகப் போகும்போது துாரப்பார்வைக்கும் ஒரு மூக்குக் கண்ணாடி தேவை என்கிறார் பெஞ்சமின்.

எங்கே போனாலும் இரண்டு மூக்குக் கண்ணாடிகளை எடுத்துக் கொண்டு திரியும் நிலை அவருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால் என்ன செய்யலாம் என்று அவர் சிந்தித்தவாறே இருந்தார்.

திடீரென வந்த சிந்தனையால் அவர் மூக்குக் கண்ணாடி லென்சுகள் செய்பவர்களிடம் சென்று, தனது பார்வைக் கோளாறுகளைக் கூறினார். அதனால் தான்படும் தொல்லைகளை எடுத்துச் சொல்லி அந்த லென்ஸ்காரரிடம் ஒரு லென்சைப் பாதி பாதி அளவில் இரண்டாக வெட்டச் சொன்னார். அந்த இரண்டு லென்ஸ் துண்டுகளை தனது மூக்குக் கண்ணாடி வட்டத்துக்குள் இணைத்து ஒட்டி பதிக்கச் சொன்னார். அதேபோல, மற்றொரு லென்சையும் இரண்டாக வெட்டி தனது கண்ணாடி வட்டத்துக்குள் இரண்டு துண்டுகளையும் கீழும் மேலுமாக இணைக்க வைத்தார்.

இப்போது அவர் கீழ்நோக்கிப் பார்த்தார், அண்மையில் நடப்பது எல்லாம் அவருக்கு நன்றாகத் தெரிந்தது. அதேபோல, மேல் நோக்கிப் பார்த்தார், தூரப் பார்வைக் காட்சிகள் எல்லாம் துல்லியமாகத் தெரிவதைக் கண்டு பலப்பல பேசியபடியே கூத்தாடினார். இரண்டு கண்ணாடிகளைத் தூக்கிக் கொண்டு அங்குமிங்கும் ஓடும் தொல்லைகள் அகன்றது என்று மகிழ்ச்சியடைந்தார் பெஞ்சமின்.

இந்தக் காலத்திலே வாழும் நாம் எல்லாம் ஒரே மூக்குக் கண்ணாடியில் இரட்டைப் பார்வைக் கண்ணாடிகளை அணிந்து பணியாற்றி மாதாமாதம் ஊதியங்களை கை நிறையப் பெற்று ஜேபியிலே திணித்துக் கொள்கிறோமே இது யாரால்? நமது மாமேதை பெஞ்சமின் ஃபிராங்ளின் என்ற இந்த மனிதன் கண்டுபிடித்த மூக்கு கண்ணாடியால் அல்லவா? சிந்தித்து பார்க்க வேண்டும். கண் உள்ள போதெல்லாம் நாம் அந்த மனிதப்புனிதனை மறக்க முடியுமா?

பெஞ்சமின் ஃபிராங்ளினை அடிக்கடி ஜலதோஷம் என்ற நோய் வந்து தாக்கும். இதனால் அவர் அவதிப்படும் போது ஜலதோஷம் என்ற நோயைப்பற்றிச் சிந்திப்பார். அதற்குரிய வழிகள் என்ன என்பதை ஆராய்வதைவிட, மக்களை இந்த நோய் எவ்வாறு பற்றுகிறது என்பதைத் தடுக்க அவர் வழி கண்டார்.

ஜலதோஷம் காரணம் என்ன?

கடுமையான குளிர் காலங்களிலே ஜலதோஷம் மக்களைப் பிடிப்பது உண்டு. ஜனங்கள் நெருக்கமாக வாழும் போதும், வீடுகள் அல்லது வீட்டின் அறைகள் அடுத்தடுத்து அருகருகில் உள்ளபோதும் இந்த ஜலதோஷ நோய் மக்களைப் பற்றுவது உண்டு. ஒருவர் தும்மும்போது அந்த நோய் மற்றவரைத் தாக்கித் தொற்றுவதும் உண்டு.

அசுத்தமான படுக்கைகள், அறைகள் தூசுகள் படிந்த பழைய துணிமணிகள், அழுகிப்போன மிருகக் கொழுப்புகள் முதலியன அதிகமான ஜலதோஷத்தை மக்களிடம் தொற்றிக்கொள்ளும் தன்மையுடையதாகும்.

ஜலதோஷக் கிருமிகளையோ, நச்சுத் தன்மையான நீரையோ அவர் காலத்தில் பெஞ்சமின் அறிந்தது இல்லை. ஆனால், நாம் இன்று ஜலதோஷம்பற்றி என்ன நினைக்கின்றோமோ அதனையே அவரும் அறிந்திருக்கிறார் என்பது மட்டும் உண்மை.

கிரேக்கர்கள் கடலில் எண்ணெய் ஊற்றுவது ஏன்?

முற்கால கிரேக்கக் கப்பற்படை மாவீரர்கள், கடற் பயணம் செல்லும்போது மண்ணெண்ணெயைக் கடலில் ஊற்றுவார்கள். ஏனென்றால், முன்காலங்களில் கடல்களில் அடிக்கடி புயலடிப்பது வழக்கமாகும். அந்த நேரத்தில் கடல்களை அடக்கி அமைதிபெறச் செய்யும் நிலை, கப்பல் செல்லும் பாதைகளில் இருந்தால்தான், கப்பல்கள் புயலை அடக்கி அமைதியாகச் செல்லும். அக்கால கிரேக்க மாலுமிகள் கடலில் மண்ணெண்ணெய் ஊற்றும் பழக்கத்தை அதனால்தான் மேற்கொண்டிருந்தார்கள்.

கப்பலின் சமையலறையிலே உள்ள கிரீஸ்களை எல்லாம் கப்பலின் வழியாக, அதன்வழிச் சுவருகளில் சமையல்காரன் வெளியேற்றி வந்ததை, பெஞ்சமின் நேராகவே பார்த்தபோது, இந்த சிந்தனை அவருக்கும் தோன்றியதெனலாம்.

ஒருநாள், ஏரியின் தண்ணீரில் அடித்துக்கொண்டிருந்த விரல்களை எல்லாம் தம் நண்பர்களோடு பார்த்துப் பிரமித்தபடியே பெஞ்சமின் கூறினார், “நான் இந்த ஏரியின் அலைகளை அடக்கி அமைதி செய்வேன்” என்றார்.

இதைக் கேட்ட அவரது நண்பர்கள் அது முடியக்கூடிய காரியமா? என்று கிண்டலடித்தார்கள். ‘ஏன் முடியாது?’ என்று பந்தயம் கட்டுவார் பெஞ்சமின். அவரை எதிர்த்த எல்லா நண்பர்களும் ‘அது முடியாது’ என்று எதிர் பந்தயம் கட்டினார்கள்.

உடனே பெஞ்சமின், தன் கையிலிருந்ததைப் பிடி கொப்பி வளைவுள்ள ஓர் உருண்டை வடிவமான தடி போன்ற ஒரு பிரம்பை தனது கையில் ஏந்திக்கொண்டு, ஏதோ ஜெபம் ஜெயிப்பது போல் உதடுகளை உதறிக் கொண்டு, அந்த பிரம்பினால் ஏரியைச் சுற்றிச்சுற்றி சுழற்றிக் கொண்டிருப்பார்.

உடனே ஏரி அலைகள் எல்லாம் ஏற்கெனவே இருந்த தண்ணீருக்குள் அமுங்கி அமைதியாகி விட்டதைக் கண்ட அவரது நண்பர்கள் பெஞ்சமின் ஏதோ அற்புதம் செய்துள்ளார் என்று கூவிக்கூவி ஆரவாரமிட்டார்கள்.

இது அதிசயமோ அற்புதமோ அல்ல; பெஞ்சமின் கையிலே வைத்திருந்த பிரம்பின் மூட்டுக் கொப்பிக்குள்ளே எண்ணெய் பசையை நிரப்பிக் கொண்டு வந்திருந்தார் அல்லவா? அந்த எண்ணெய்தான். கடலிலிருந்த கப்பலின் சமைக்காரன் கலந்த கிரீஸ் எண்ணெய்க் காட்சியைப் போல ஏரியின் அலைகளும் பிரம்பில் அடைக்கப்பட்ட எண்ணெய்ப் பசை கலந்த நீருக்குள் அமிழ்ந்து விட்டன; அவ்வளவுதான்!

பெஞ்சமின், அட்லாண்டிக் பெருங்கடலுள் பல தடவை பயணங்கள் செய்தபோது, கடலில் எழும் நீரோட்டப்பாதை, கடலின் மற்ற இடங்களிலே இருப்பதைவிட வேறுபட்டிருப்பதை அவர் கண்முன்பாகப் பார்த்தார். அந்தக் கடலின் கடற்கரைகளை வெதுவெதுப்பாக்கி வரும் கல்ஃப்ஸ்ட்ரீம் எனும் குடாக்கடல் நீரோட்டமான Gulf-stream தான், அது என்று அவருக்குப் புரிந்தது. அந்த நீரோட்டத்தை எந்த விஞ்ஞானியும் அன்றுவரைக்கேள்விப்பட்டிராத நேரத்தில், இதனை ஆராய்ந்து பார்த்தவர் பெஞ்சமின்.

அந்த நீரோட்டப் பாதையை ஒரு முன்னறிவிப்பாக எண்ணி, கப்பலைச் செலுத்தும் மாலுமிகளுக்கு இடையூறு வராவண்ணம் ஒரு கடல்வழிப் படமும் வரைந்து கொடுத்து மாலுமிகள் அவரவர் கப்பலை வேகமாகச் செலுத்த புதிய பாதையைக் வகுத்துக் கொடுத்துக் கப்பல் வழிகாட்டியாக விளங்கினார்.

அந்த நீரோட்டம், சுற்றியுள்ள மற்ற கடல் தண்ணீரை விட தட்பவெப்ப நிலையில் வேறுபட்டிருப்பதையும் அவர் கண்டார். இந்த உண்மைகளை எல்லாம் ஒன்று சேர்த்து சிந்தித்த பெஞ்சமின், அந்த நீரோட்டமும் ஒரு நதிதான் என்றார். காய்ந்த நிலத்தின் வழியாக அது ஒடுவதற்கு பதில், கடல்வழியாக ஓடுகிறது என்று எண்ணினார். இந்த செய்திகளை எல்லாம் பெஞ்சமினுக்கு முன்னால் வேறு எந்த விஞ்ஞானிகளின் மூளை அணுக்களில்கூட கருவாக முளைக்கவில்லை என்பது அவரது கடல் ஆய்வுப் பரிசோத னையிலே குறிப்பிடத்தக்க ஒன்று.

பாரசூட் கப்பல் கண்டுபிடிப்பு

கி.பி. 1776ம் ஆண்டு பெஞ்சமின் ரிப்ரைசல் என்ற கப்பலிலே பிரான்ஸ் நாட்டிற்குப் போய்க்கொண்டிருந்தார். அப்போது அமெரிக்க குடியேற்ற நாடுகள் தங்களது சுதந்திரப் பிரகடனத்திற்கான போர்களைச் செய்துகொண்டிருந்தன. அவர் பயணம் செய்த கப்பல் எதிரிகளிடம் சிக்கினால், அவர் ஒரு துரோகி என்று கூறப்பட்டுத்தூக்கிலே தொங்க விடப்பட்டிருப்பார். ஆனால் நல்வினை காரணமாக இவ்வாறு பிடிபடாமல் பிரான்ஸ் நாட்டை பல இன்னற்களுக்கு இடையே பெஞ்சமின் அடைந்துவிட்டார்.

அப்போது அவர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது, முதன் முதலாக வீதிகளிலே, திடல்களிலே காஸ் பலூன்கள் பறக்கப்பட்டிருந்தன. அந்த பலூன்கள் பட்டுத் துணிகளால் செய்யப்பட்டு, அதனுள்ளே ஆவி என்ற காஸ் Gas அடைக்கப்பட்டிருந்தது. பெஞ்சமினை வரவேற்க 50 ஆயிரம் மக்களுக்குமேல் அக்காலத்தில் ஆடிப்பாடிக் கோலாகலமாகத் திரண்டிருந்தார்கள். அப்போதுதான் அவரை வரவேற்கும் மகிழ்ச்சியின் ஒரு சம்பவமாக gas Balloon உயரே பறந்து பறந்து இறுதியில் அது மேக மண்டலத்துள் மறைந்துவிட்டதை அவர் பார்த்தார்.

அந்த பலூன் வானவழியாகப் பறக்கக்கூடிய ஒரு கப்பல். ஒருநாள் அந்த காஸ் பலூன் கப்பல் விமானமாக மாறி, பொதுமக்களை ஏற்றிச் செல்லும் விமான வசதியாக மாறும் நிலை வரும் என்று அவர் முன்கூட்டியே அறிந்தார், இந்தக் கப்பலை இன்று நாம் பாரசூட் என்று பெயரிட்டு, இராணுவ தளவாடங்களை எல்லாம் ஒரு காலத்தில் வானவழியாக ஏற்றிச்செல்லும் போர்சாதனமாக மாறி அமையும் என்று அப்போது அவரை வரவேற்கக் கூடியிருந்த மக்களிடையே அந்த காஸ் பலூனின் அருமை பெருமைகளை விளக்கிப்பேசினார். அந்தக் கப்பல், இன்றும் போர்க்காலங்களிலே பாரசூட் என்று யுத்த தளவாடங்களிலே ஒன்றாகப் பயன்பட்டு வருகிறது அல்லவா? இந்த தத்துவத்தை அன்றே எவரும் கண்டுபிடிக்காத காலத்திலேயே சிந்தித்துப் பேசியவர் பெஞ்சமின் ஃபிராங்ளின்.

இசைக் கருவி ஆர்மோனியம்

ஒருசமயம் விளையாட்டாகப் பொழுது போக்கிட கண்ணாடித் துண்டுகளின் நடுவில் ஒரு துவாரத்தை துளைத்தார். அதை இசைப்பொருள்தரும் கோளமான ஓர் உருவில் அடித்தார். அவற்றில் அதிக அகலமான கண்ணாடியின் குறுக்கே ஒன்பது அங்குல் அளவும், மிகச்சிறிய கண்ணாடியின் அளவில் மூன்று அங்குல அளவும் உள்ளதாக வடிவமைத்தார்.

இதுபோன்ற முப்பத்து ஏழு கண்ணாடித் துண்டுகளைச் செய்து, அந்தக் கண்ணாடி பட்டைகளைத் தேய்த்து, அவற்றின் அகல நீள பரப்பளவுகளுக்கு ஏற்றவாறு ஓசை எழுப்பும் ஸ்வரங்களைச் சரியாகச் சிந்தித்து, அவற்றை ஓர் இரும்புக் கதிர்மீது ஏற்றிப் பொருத்தினார்.

அதிக அகலமான கண்ணாடிகளை இரும்புக் கதிரில் இருபுற மூலைகளிலும், மிகச் சிறிய கண்ணாடிகளை மத்தியிலும் பதித்தார். அவற்றை நான்கு கால்களையுடைய ஒரு பெட்டிக்குள் அந்த இரும்புக் கதிரானது மட்டவசமாக வைத்தார். அந்தப் பெட்டியின் மூலம் இசை ஒலியை எழுப்பலாம் என்று எண்ணிய அவர், அந்த இரும்புக்கதிரின் முன் உட்கார்ந்து கொண்டு, கதிர் சக்கரத்தில் காணப்படுவது போன்ற ஒரு கைப்பிடி மூலம், இரும்புக் கதிரைச் சுற்றிக்கொண்டே நகரும் கண்ணாடிகளின் முனைகளைத் தன் விரல்களால் அமுக்கினார்.

இவ்வாறு எல்லாம் முற்காலத்தில் இருந்த ஓர் பழைமையான இசைக் கருவியைப் பற்றி அவர் கூறும் போது, “இந்த புதிய இசைக் கருவியின் நன்மைகள் என்னவென்றால், இதன் ஸ்தாயிகளை வேறு எந்த இசைக் கருவியையும் விட, விரல்களை மென்மையாகவோ, வன்மையாகவோ அழுத்துவதின் வாயிலாக, அவரவர் விருப்பம்படி எல்லாம் ஓசையைக் கூட்டவும் குறைக்கவும் செய்யலாம். இசைக்கருவியில் ஒரு முறை நன்றாக ஸ்ருதி கூட்டி, மறுபடியும் ஸ்ருதி கூட்ட வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

இந்த இசைப்பெட்டியை தானே கண்டுபிடித்து செய்ததுமன்றி எவ்வாறு அதை இயக்குவது என்பதையும் விளக்கிக்கூறி, அந்தப்பெட்டிக்கு “ஆர்மோனிகா” என்ற ஓர் அழகு பெயரையும் சூட்டினார் பெஞ்சமின் ஃபிராங்ளின். அதை எவ்வாறு இசைப்பது என்பதையும் அவர் வாசித்துக் காட்டினார்.

நாளாவட்டத்தில் அந்தப்பெட்டி இசை உலகத்தில் கையாளப்பட்டு, சங்கீதங்களை இயக்கி வந்தபோது, ‘ஆர்மோனிகா’ என்ற அந்தப்பெட்டி தற்போது ஆர்மோனியம் என்று தமிழால் அழகாக அழைக்கப்படுவது மட்டுமல்லாமல் முதன் முதலாக இசையைக்கற்க முன்வரும் எவரும் அவர் முன்னாடி அந்தப் பெட்டியை வைத்து வணக்கம் செய்த பிறகே அந்தக் கருவியை அழுத்தி இயக்குவதை இன்றும் நாம் பார்க்கிறோமே, இதைக் கண்டு பிடித்த அந்த மகானுக்காக நாம் என்ன கைமாறு செய்தோம்? ஓர் உருவ சிலையையாவது வைத்தோமா அவரை மறவாது நன்றி காட்டிட?

இந்த இசைக் கருவிக்கு அக்காலத்தில் மக்களிடையே மிகுந்த பரபரப்பும் செல்வாக்கும் ஏற்பட்டது இசை உலகையே அது மயங்க வைத்து மகிழ்ச்சியையூட்டியது. இசைக் கலைஞர்கள் எல்லாம் அந்தக் கருவியை தத்தங்களது இசை மேடைக் கச்சேரிகளிலே மிக அருமையாகக் கையாண்டு பெருமை பெற்றார்கள்.

உலகப் புகழ்பெற்ற இசைமேதைகளான மோசார்ட், பீத்தோவன் என்ற இருபெரும் கலையுலகச் சித்தர்கள், பெஞ்சமின் கண்டு பிடித்துக் கொடுத்த ஆர்மோனியப் பெட்டியின் மூலமாகவே, இசை மெட்டுகளைப் போட்டுப் புகழடைந்தார்கள்.

மின்சாரம் என்ற ஓர் மின் சக்தியை 1746-ம் ஆண்டில் பெஞ்சமின் மீண்டும் போஸ்டன் நகருக்கு வந்திருந்தபோது கேள்விப்பட்டார். அதாவது ஆர்மோனிய இசைக் கருவியைக்கண்டு பிடிப்பதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பே, அதைப் பற்றி அறிந்திருந்தார்.

இருவகை மின்சாரம் நெகட்டிவ்-பாசிட்டிவ்!

டாக்டர் ஸ்பென்சர் என்பவர், மின்சாரம் பற்றி ஆய்வு செய்த உபகரணக் கருவிகளை பிலடெல்பியா திரும்பிய பெஞ்சமின், அங்கே அவற்றை விலைக்கு வாங்கிக் கொண்டார். அந்த கருவிகளைப் பற்றிய ஆராய்ச்சியிலே பெஞ்சமின் தீவிரமாக ஈடுபட்டார்.

தனது வீட்டிலிருந்த சாமான்களை வைத்துக்கொண்டு இரவும்பகலுமாய் மனம்போனபாடி ஓர்உப்பு உறை, காடிக் குப்பி, ஒருதும்புக் குழாய் கைப்பிடி, ஒரு புத்தக பைண்டிங் கிலிருந்து எடுக்கப்பட்ட தங்கம், இவற்றை வைத்துக் கொண்டு சோதனையில் ஈடுபட்டார் பெஞ்சமின்.

மின்சாரப் பொறிகளைப் பிடித்து அடைத்து வைக்க ஓர் இயந்திரம் உருவாக்கினார். அதை நண்பர்களுக்கு முடுக்கிக் காட்டினார். அதைப் பார்க்க மக்கட் கூட்டத்தினர் திரண்டார்கள். ஆனால், தனது கடுமையான மின் ஆய்வு அறிவால், மின்சாரம் என்றால் என்ன? அது ஒரு திரவப் பொருள் என்பதைக் கண்டு பிடித்தார்.

அந்த மின்சாரத்தில் இருவகை வேறுபாடுகள் இருக்கின்றன. ஒன்று நெகட்டிவ், மற்றொன்று பாசிட்டிவ் என்பதை உலகிலேயே முதன் முதலாகக் கண்டு பிடித்த முதல் மனிதரே பெஞ்சமின் ஃபிராங்ளின் தான்.

மின்சாரம் என்பது மின்னல் ஓட்ட பிளம்புகளை உள்ளிழுக்கவும், வெளியே எறியவும் கூடிய ஒரு கூர்மையான பொருள்களுக்குள்ள சக்தியைப் பற்றியும், பேசினார், அதற்கு இடிதாங்கி என்று பெயரிட்டார்.

மழைமேக வானத்தில் இடி, பேரிடியாக இடிக்கும் போது, அந்த இடி எங்கே விழுகின்றதோ அந்த இடம் தீப்பிடித்து எரிந்து கருகிவிடும் அவ்வளவு நெருப்புச் சக்தி கொண்டது இடி. அந்த இடி வீடுகளின் மீது விழுந்தால் அந்த வீடே எரியும். அதனால்தான் பெரிய பெரிய பங்களா கட்டுபவர்கள், கோட்டைகளை உருவாக்குபவர்கள், பல அடுக்குமாடி கட்டிடங்களை எழுப்பி முடிப்பவர்கள், இறுதியாக அந்தக் கட்டடத்தின் உச்சிகளில் கூர்மையான இரும்புக்கம்பிகளை வைத்து அதைப்பூமியில் பதியுமாறு இணைப்பார்கள். அப்படிச் செய்வதால், எங்கே இடி விழுந்தாலும், அந்த இரும்புக்கம்பி விழுகின்ற இடியை இழுத்து பூமிக்குள் புகுத்தி விடும். இந்த இடி தாங்கியை முதன் முதலாக உலகுக்கு கண்டு பிடித்துக்கொடுத்தவரே பெஞ்சமின்தான்.

ஜன்னல் கண்ணாடியிலிருந்து எடுத்த பதினொன்று கண்ணாடிப்பட்டைகள் மெல்லிய ஈயத்தட்டுக்கள், பட்டு நூல்கள், ஈயக்கம்பி போன்ற வெறும் இந்த பொருட்களைக் கொண்டே மின்சார பேட்டரியை அதாவது டார்ச் லைட்டைக் கண்டுபிடித்தவர் பெஞ்சமின். இப்போது கூட கிராமப்புற வீடுகளிலே பேட்டரி இல்லாத வீடே கிடையாது. அவ்வளவு ஓர் இன்றியமையாத பொருளாக அது அமைந்துள்ளது அதன் ஒளியைப் பெறுவதற்காக.

மின்னல் என்றால் மின்சாரமே ஆகும் என்பதை நிரூபிக்க நினைத்தார். வானத்திலே, எப்படியாவது ஒரு கூரிய முனையைச் செலுத்த வேண்டும் என்று கருதினார்.

பெஞ்சமின் ஒரு காற்றாடியை வானத்தில் பறக்கவிட்டார். காற்றாடியின் குறுக்காக இரண்டுக்குச்சிகளை வைத்துக்கட்டினார். அதன்மீது ஒரு பட்டுக் கைக்குட்டையை இறுக்கமாக விரித்து முடிந்திருந்தார். காற்றாடிக்கு தேவையான ஒரு வால், வளையம், ஒரு நூல் பந்து ஆகியவை பொருத்தப்பட்டிருந்தன.

இரண்டு குறுக்குக் குச்சிகளில் ஒன்று மேல் நோக்கி நேராக நிற்கும் இல்லையா? அந்நிற்கும் குச்சியின் மேல் முனையில் கூரிய முனையுடைய கம்பி ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது. குறுக்குச் சட்டத்திற்கு மேலே அந்த கம்பி ஓர் அடி உயரம் எழும்பி நின்றது. காற்றாடியைக் கட்டி அதைப் பிடித்துக் கொண்டிருக்கும் நூலின் ஒரு முனையில் இரும்புச்சாவி ஒன்றையும், பட்டு ரிப்பன் மூலம் பெஞ்சமின் இணைத்திருந்தார்.

வானத்தை நோக்கி அவர் நிமிர்ந்து, இடிகளை முழக்கி கடமுடா என்று மக்களைப் பயமுறுத்தும் கருமேகங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டே தகப்பனும் பிள்ளையுமாக இருந்தார்கள். பிறகு, மகன் வில்லியத்திடம் காற்றாடியைக் கைமாற்றிக் கொடுத்தார். காற்றாடியின் நூலைப் பிடித்துக் கொண்டு புல்தரை மேலே மகனை ஒட வைத்தார். இந்த அதிசயமான கருவியைக் காற்றிலே பறக்க விடுவோம் என்று கீழ்மூச்சு மேல் மூச்சு வாங்க தகப்பனும் மகனும் ஓடியபோது, காற்றாடி இருண்ட மேகங்களை நோக்கிப் பறந்தது.

இடிகளை முழக்கும் கார்காலக் கருமேகங்களை நோக்கிப் பறந்த காற்றாடியில் எந்தவித பயனும் தென்படவில்லை. தகப்பனாருக்கும் மகனுக்கும் ஏமாற்றம்தான் மிஞ்சியது.

அப்போது மழை தூற்றல் போட்டது. இருவரும் அணிந்திருந்த உடைகளோடு நனைந்தார்கள். நூல் கண்டைச் சுற்றிக் கொண்டு வீட்டுக்குப்போக முடிவெடுத்தார்கள்.

திடீரென்று பெஞ்சமின் பிடித்திருந்த காற்றாடி நூலின் பிசிறுகள், மிரண்டு போன நாய் ஒன்றுக்கு மயிர் கூச்செடுத்து குத்திட்டு நிற்பது போன்று விரைந்து, நிமிர்ந்து நிற்பதைப் போன்ற ஓர் உணர்வைப் பெற்றார்.

மகனே, இதோ பார், ‘இது வேலை செய்யத் தொடங்குகிறது’ என்றார்.

அதே நேரம் அவருடைய கையில் பிடித்திருந்த இரும்புச் சாவியில் இருந்து ‘கிலுகிலு’ப்பு மூட்டியது. அந்த உணர்ச்சி அவருக்கு ஒரு மயக்கத்தை ஊட்டியது. ஆனால், அதை அவரால் வருணனை செய்து வெளியே சொல்ல முடியாத நிலையிலே பெஞ்சமின் இருந்தார்.

மழை பெய்யத் தொடங்கியவுடன், நூல் நனைந்தது. மனவில் இருந்த மின்சாரம் என்விதத் தடையுமில்லாமல் சாவியின் மூலம் பாய்ந்து அவரைத் தாக்கத் தொடங்கியது. அப்போது தனது கையிலிருந்த கண்ணாடி புட்டியிலே, மின்சாரப் பொறிகளை அதற்குள் பிடித்து அடைத்து விடுவதிலே முனைந்தார்; வெற்றியும் பெற்றார்.

மின்சார இயக்க வரலாற்றிலே அன்று பெஞ்சமின் சாதித்த சாதனை வரலாறு மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

பெஞ்சமின் ஃபிராங்ளின் இவ்வாறு மின்சாரத்தை சிறைபடுத்திய சம்பவத்தைக் கேள்விப்பட்ட யேல் பல்கலைக் கழகமும், ஹார்வார்டு பல்கலைக் கழகமும், வில்லியம் மேரி கல்லூரியும் பெஞ்சமின் ஆய்வையும் ஆற்றலையும் பாராட்டிக் கெளரவப் பட்டங்களை வழங்கின.

மிக அற்பமான வசதிகளைக் கொண்டே மிக அரிய செயல்களைச் சாதிக்க முடியும், அதற்கு எவ்வித முடிவும் எப்போதுமில்லை என்பதை மெய்ப்பித்துக் காட்டிய மாமனிதர் பெஞ்சமின் பிராங்ளின்.

அரசியல் துறையில் பெஞ்சமின் காலடி

பெஞ்சமின் ஃபிராங்ளின் ஓர் இராஜதந்திரி ராஜதந்திரி! என்றால் என்ன?

நாட்டு மக்கள் முழுவதும் எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் ஓர் அரிய பிரச்னையை எவனொருவன் தொய்வில்லாமல், தோல்வியில்லாமல் செய்து வெற்றி பெறுகிறானோ, அந்த வெற்றிக்கு வருந்தி அழைக்கப்படுகிறானோ அவனே ராஜதந்திரயாவான். அதற்கான அறிவு நுட்பமும், அஞ்சா நெஞ்சமும், அதி சாதுர்ய சிந்தனைகளும் மின்னலடிப்பது போல மூளையிலே மின்னி எழுந்து அவனுக்குள் ஒளிதர வேண்டும்.

பெஞ்சமின் ஃபிராங்ளின், அமெரிக்காவின் ராஜதந்திரிகளிலே ஓர் அரிய அறிஞராகவும், மிகச்சிறந்த ராஜதந்திரியாகவும் மிளிர்ந்து விளங்கியதால், அவர் மக்களால் பெரிதும் போற்றப்பட்டார். அதனால், அவரை ஓர் அரசு அங்கமாகவே மதித்து, தங்களது சுதந்திரப் போராட்டங்களுக்கு உதவியாக இருக்குமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

பெஞ்சமினின் பொதுமக்கள் தொண்டு அவரை மாஜிஸ்திரேட்டாக நியமித்ததிலிருந்தே ஆரம்பமாயிற்று எனலாம். பிலடெல்பியா நகராட்சி அவரை ஓர் உறுப்பினராக்கி மரியாதை அளித்துப் பாராட்டியது! அதற்குப் பிறகு அந்த நகரமன்றத்திற்கும் தலைவர் ஆனார்.

1751-ம் ஆண்டு பெஞ்சமின் ஃபிராங்ளின் பென்சில்வேனியா சட்டசபை உறுப்பினரானார். சபை விவாதங்களை மிகக் கவனத்துடன் பின்பற்றி வாதாடவேண்டிய திட்டத்தின்மீது கடுமையாக வாதாடுவார். நேர்மையான வாதமும் நெஞ்சுரமும், செயற்றிறனுமுடைய ஆற்றலோடு அவர் பேசுவதும் பிரச்னைகளை விளக்குவதும் மக்களின் உள்ளங்களை வெகுவாக ஈர்த்தன.

பொது மக்கள் எல்லோர்க்கும் ஒருமுகமாகப் பயன்படக்கூடிய சட்டங்களையே அவர் சிந்திப்பார், அதனை நிறைவேற்றுவார். அங்குள்ள சட்டசபை உறுப்பினர்கள் கவனமெல்லாம் பெஞ்சமின் பக்கமே சென்றது. அவர் சட்டசபையில் மட்டுமல்ல, மற்ற பிரச்னைகளிலும் அவரைப் பெருந் தலைவராகவே மதித்து ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் சபையோர் பெற்று வந்தார்கள்.

சிவப்பு இந்தியர்களிடையே ஓர் உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டிய பிரச்னை பென்சில்வேனியா சட்ட சபைக்கு ஏற்பட்டதால், அதற்கு பெஞ்சமினையே சமாதானத் தூதுவராகத் தலைமையேற்குமாறு கூறப்பட்டு, கார்லைல் கப்பலிலே அவரை அனுப்பி வைத்தார்கள்.

பெஞ்சமின் சிவப்பு இந்தியர் நாட்டுக்கு வந்ததும், சமாதானத் தூதுவரான பெஞ்சமின், சிவப்பு இந்தியர் விரும்பி அருந்தும் மதுபானமான ரம்முக்கு தடை விதித்தார். ஏனென்றால், ரம்மைக் குடித்தவுடன் அவர்கள் ஆடிப்பாடி கோலாகலமான மயக்கத்திலே தள்ளாடி மங்கையர் மஞ்சங்களிலே தவழ்ந்து கொள்வார்கள். பிறகு வந்த பணிமுடியாது. அதனால்தான், அவர் அதற்கு தடை விதித்தார்.

இந்த தடைவிதிப்பைக்கண்டு சிவப்பு இந்தியர்கள் மன வருத்தமும், முணுமுணுப்பும் கொண்டு உற்சாக ஆற்றலை இழந்தார்கள். இதைக் கண்ட பெஞ்சமின், உடன்படிக்கை முடிந்தவுடன் சிவப்பு இந்தியர்கள் தாராளமாக ‘ரம்’ பானம் அருந்தலாம் என்ற உத்தரவை மறுகணமே பிறப்பிக்க வைத்தார்.

அவ்வளவுதான், சிவப்பு இந்தியர்கள் உடன்படிக்கையை வெற்றிகரமாக முடித்துக்கொடுக்க உழைத்தார்கள். பெஞ்சமின் ஒப்பந்தமும் வெற்றி பெற்றது; மீண்டும் சிவப்பு இந்தியர்கள் ரம் பானரானார்கள்.

சிவப்பு இந்தியரோடு பெஞ்சமின் உடன்படிக்கையை நிறைவேற்றியதைப்பற்றிச் சட்டசபை பெரிதும் மகிழ்ச்சியுற்றது! நிலைமையை வெகுசாமர்த்தியமாகக் கையாண்ட ராஜதந்திரி அவர் என்று மக்களால் பெரிதும் போற்றிப் புகழப்பட்டார். ஆனால், சிவப்பு இந்தியர் ஒப்பந்தம் பற்றி எழுந்த சட்டசபைத் தகராறுகள் சம்பந்தமாக பெஞ்சமின் இலண்டன் மாநகரம் செல்ல வேண்டும் என்று அவரையே தூதுக்குழுவுக்குத் தலைவராக நியமித்து அனுப்பி வைத்தது.

தனது மகனான வில்லியமும், பெஞ்சமினும் கி.பி. 1775-ம் ஆண்டு மார்ச் மாதம் இலண்டன் மாநகருக்குப்புறப்பட்டுச் சென்றார்கள். கப்பல் பிரயாணம் அவர்களுக்குப் பெரும் கஷ்டமாக இருந்தது. கி.பி. 1775-ம் ஆண்டு ஜூலை மாதம் தகப்பனும் மகனும் இலண்டன் நகரை வந்து அடைந்தார்கள்.

இலண்டனிலே உள்ள க்ரேவன் என்ற ஒரு விதவை வீட்டிலே பெஞ்சமினும் மக்னும் வந்து தங்கினார்கள்.வில்லியம் சட்டக்கல்வி படிப்பதற்கு மிடில்டெம்பிள் என்ற கல்லூரியிலே சேர்ந்து படித்தார்.

இலண்டன் மாநகரிலே அவர் தங்கியிருந்தபோது பென்சில்வேனியா சட்டசபைக்காக சந்தர்ப்பம் கிடைத்த எல்லாம் இங்கிலாந்து முடியரசோடு வாதாடி வந்தார். ஆங்கிலக் கவர்னர்களுக்கும் சட்டசபை உறுப்பினர்களுக்கும் இடையே இருந்துவந்த தகராறுகளை சமாதானத்தை உண்டாக்கவும் அரும்பாடுபட்டார்.

அமெரிக்க குடியேற்ற நாடுகளின் உரிமைகளைக் காப்பதற்காகப் போராடியவாறே சமாதானத்தையும் நிலை நிறுத்ததிக்கொண்டு, அதே நேரத்தில் பிலடெல்பியாவிலே உள்ள தமது வீடு, குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் விட்டுவிட்டுப் பிரிந்து பல ஆண்டுகள் வேதனையோடும் இருந்தார். அதே நேரத்தில் அவர் யாருக்காக தூது வந்தாரோ அவர்களின் கட்சியும் அங்கே அவ்வளவு பிடித்தமானதாக இயங்கவில்லை. என் செய்வார் பாவம். இரு கொள்ளிபோலவே அவர் வாழ்ந்து வந்தார். அவர் தயாரித்த திட்டங்கள் எல்லாம் வெற்றிபெறாமல் குழப்பங்களிலே பாழாகிவிட்டன. அவருடைய பிலடெல்பியா வீட்டைத் தீயிட்டுக் கொளுத்தி விடுவதாகவே அங்கிருந்து அரசியல் வெறியர்கள் மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

அவருடைய குடும்பத்துக்கு அவர் எழுதிய கடிதங்கள் எல்லாம் பிரித்துப் படிக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும் பெஞ்சமின் கேள்விப்பட்டார். அதனால் திட்டங்கள் தோல்வியடைந்ததையும் எண்ணி, மீண்டும் ஊர் திரும்பி விடுவோம் என்ற எண்ணமும் பெஞ்சமினுக்குத் தோன்றியது. ஆயினும், லண்டனிலே தனது ஒப்பந்த திட்டங்களுக்காக போராடியே வந்தார். தாய்நாட்டில் உள்ள கட்சியினரையும் பொறுமையோடு இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால், ஆங்கிலேய சட்டசபை குடியேற்ற நாடுகளுக்கு விதித்த எந்த வரிகளையும் குறைக்காமல், மேன் மேலும் அதிகமான வரிகளை விதித்து வந்ததால், அமெரிக்க குடியேற்ற நாட்டவரிடையே அதிகக் கோபம் பொங்கி எழுந்தது. எனவே, அனைவரும் பெஞ்சமின் பணியை ஒருமுகமாகக் குறைகூறி வந்தார்கள்.

‘நாம் ஒரு தனி மனித சமுகமாக இருந்த காலத்திலிருந்து; என்றைக்கும்-இப்போது உள்ளதைப்போல் இங்கிலாந்திலே தம் நண்பர்கள் இவ்வளவு குறைவாக இருந்த தில்லை என்று நினைக்கிறேன்’ என்று மனம் நொந்தார்.

ஆயினும், உண்மையான ராஜதந்திரியாக, விடாப் பிடியாக, பெஞ்சமின் தங்கி, எந்தெந்த காரணங்கள் மீது இங்கிலாந்து அரசோடு போராட முடியோ அதற்கேற்பவே செயலாற்றி வந்தார். காலம் நகர்ந்து நகர்ந்து முதுமையும் வந்து மோதியது. வயதும் ஏறியபடியே இருந்தது. இருமல், ஜலதோஷம் ஊளைச் சதைநோய் மற்றும் இதர நோய்களால் அவர் தாக்கப்பட்டார். அவர், தனது வீட்டின் மீது அதிகமாக ஏக்கம் பிடித்தவரானார்.

அப்போது, பிலடெல்பியா நகரிலே இருந்த அவரது மனைவி டிபோரா மரணமடைந்து விட்டாள் என்ற செய்தி இடிபோலவந்து தாக்கியது. அவ்வளவுதான், மனமுடைந்த சோகத்தோடும் துயரத்தோடும் அடுத்தக் கப்பலிலேயே பெஞ்சமின் தனது ஊருக்குப் புறப்பட்டு விட்டார்.

அமெரிக்க யுத்தம் விரைவிலே ஆரம்பமாகி விடும்என்ற சூழ்நிலை நெருங்கி வருவதையும் உணர்ந்தார். அது நீண்ட நாட்கள் நடக்கும் யுத்தமாகவே இருக்கும்என்று பயந்தார். இங்கிலாந்துக்கும் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கும் இடையே போர் மூளக் கூடாது என்பதற்காகவே பத்து வருஷங்களாகப்போராடி வந்த மனிதநேயராக பெஞ்சமின் இருந்தார். இருந்தும், எந்த விதப்பயனும் ஏற்படவில்லை.

இவற்றையெல்லாம் சிந்தித்தபடியே பில்டெல்பியா திரும்பினார். வந்ததும்வராததுமாக அவரை பிலடெல்பியா காங்கிரசிலே டெபுடியாக ஆக்கப்பட்டு விட்டார். துப்பாக்கி ஒன்றை அவர் ஏந்தவில்லையே தவிர, மற்ற உடல், உழைப்பு, உயிர் மூன்றையும் அமெரிக்க குடியேற்ற நாட்டுக்காகத் தியாகம் செய்தபடியே வாழ்ந்தார்.

உடலெங்கும் கட்டிகள், ஆங்காங்கே தோன்றி அவரை படுத்த படுக்கையிலே நோயாளியாக வாட்டி வந்தது. இந்த லட்சணத்திலே GOUT என்ற கீல் வாத நோய் பீடித்து விட்டது. அதனால், டவாலி போட்ட வேலைக்காரர்கள் இரன்டு பேர், பல்லக்கு போன்ற அவருடைய நாற்காலியிலே உட்காரவைத்து சுமந்து கொண்டு, அவரை காண்டினெண்டல் காங்கிரஸ் நடத்தும் திட்டங்களில் கலந்து கொள்வதற்காக, அரசாங்க மாளிகை வாசலுக்கு அவர் வந்து விட்டால் போதும், மக்கள் அவரைப் பார்க்கப் பெருங்கூட்டம் கூடிவிடுவார்கள் என்று சுமந்து செல்வார்கள்.

பல்லக்கு போன்ற நாற்காலிதான் அக்காலத்திலே பிலடேல்பியால் இருந்த கார் வசதி. இரண்டு தண்டுகளின் மீது பொறுத்தப்பட்டிருந்த அந்த நாற்காலியை, திட உடம்போடுள்ள அவரை வேலைக்காரர்கள் தங்களதுதோள்களிலே சுமந்து கொண்டு வருவார்கள். கீல்வாத நோயும் உடன் வாட்டிக் கொடுமைபடுத்தியதால் தான், அவரால் நடக்க முடியாமல் நாற்காலியில் தூக்கிச்செல்லும் வாதநோயம் கடன்: பாட்டிக் கொடுடைப்படுத்தியதால் தான், அவரால் நடக்க முடியாமல் நாற்காலியில் தூக்கிச்செல்லும் நிலைக்கு வந்து விட்டது, பாவம்!

அமெரிக்கப் புரட்சியை பெஞ்சமின் ஃபிராங்ளின் ஆதரித்தார் என்பது ஒன்றே, அந்த புரட்சியின் மீது உலகம் அதிக அக்கறையைக் காட்டியது எனலாம். இருந்தும், அமெரிக்க குடியேற்ற நாடுகளில் வசித்து வந்த மக்களில் பலர் புரட்சிக்கு விரோதிகளாகவே இருந்தார்கள். அதனால்தான், இங்கிலாந்தின் ஆங்கிலேயர் ஏஜமானர்களுக்கே விசுவாசிகளாக வாழ்ந்தார்கள்.

அமெரிக்காவின் விடுதலைக்கு கையெழுத்திட்டவர்கள் யார் யார் என்பதைப் பார்த்தாலே எத்தனைபேர் அந்த சுதந்திரத்துக்கு உண்மையாக உழைத்தவர்கள் என்பதை நம்மால் திட்டவட்டமாக அறிந்து கொள்ளமுடியும்.

பெஞ்சமின் ஃபிராங்ளினைப் பற்றி, மற்றொரு அமெரிக்க விடுதலை விரும்பியான தாமஸ் ஜெபர்சன் என்ன கூறுகிறார் தெரியுமா?

“ஃபிராங்ளின் பத்து நிமிடங்களுக்கு மேல் சேர்ந்தாற் போல ஒரே சமயத்தில் பேசி நான் கேட்டதே இல்லை. அது மட்டுமல்ல, விவாதத் தீர்மானத்திற்கு வரக்கூடிய மூலாம்சமான விஷயத்தைத் தவிர, வேறு எதைப் பற்றியும் அவர் பேசிக் கேட்டதில்லை” என்கிறார் என்றால், அமெரிக்காவின் விடுதலை மீது எத்தகைய அக்கறையும் அன்பும் பெஞ்சமின் வைத்திருந்தார், என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

ஆனால், இக்கட்டான பிரச்னைகள் வரும்போது எல்லாம் பெஞ்சமின் அடிக்கடி வேடிக்கையான கதைகளைக் கூறுவார். அனைவரும் அதை விரும்பிக் கூடிக் கேட்பார்கள். பேச்சுக்கலையிலே நகைச்சுவையாகவும், வேடிக்கையாகவும் பேசுவதிலே ஃபிராங்ளின் மிக சாமர்த்தியம் வாய்ந்தவர்.

அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தைப்பற்றிய பேச்சுக்கள், அந்த விடுதலை இயக்கங்களிலே பிரச்னையாக வரும் போது எல்லாம், அந்தப் பிரகடனத்தின் முக்கியக் கர்த்தாவான, தாமஸ் ஜெபர்சனின் பக்கத்திலே ஃபிராங்ளின் இருந்தார்.

ஏனென்றால், சுதந்திரப்பிரகடனம் உருவானபோதும், அதுபற்றி விமர்சனம் செய்யும்போதும், அதன் ஒவ்வொரு விடுதலை விரும்பியும் உடன் அமர்ந்திருந்தாக வேண்டிய கட்டாய நிலை இருந்தது. காரணம், அவரவர்கள் கருத்துக்கள் என்னவென்பதைக் கண்டறிவதற்குத்தான் அவ்வாறு இருக்க வேண்டிய நிலை.

இதுபோன்ற சம்பவம் ஒன்றில், ஒருவர் சுதந்திரப் பிரகடன தீர்மானத்தைக் கிழித்து சபையிலே எறிந்தார். அவை அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருப்பதைக் கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்த பெஞ்சமின் ஃபிராங்ளின், “இந்த கிழித்தெறியும் சம்பவம், எனக்கு ஜான் தாம்சனை நினைவுப் படுத்துகிறது” என்றார்.

அமெரிக்க காங்கிரஸ் சபையில் உடனிருந்த தாமஸ் ஜேபர்சன் ஜான் தாம்சன் என்றால் யார்? என்று கேட்டார்.

ஜான் தாம்சன் எனது நண்பர்களிலே ஒருவர். அவர் தொப்பிகள் செய்யும் கடையிலே குமாஸ்தாவாக இருந்தவர். நாளடைவில் சொந்தத்திலே தொப்பிகளைத் தயாரித்து விற்கும் நிலைக்கு முன்னேறியவர். அவரது தொழிலை மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக ஒரு விளம்பரப் பலகையில் தொப்பி போன்ற படம் ஒன்றை எழுதி அதன் கீழே “தொப்பிக்காரன் ஜான் தாம்சன் தொப்பிகளைத் தயாரித்து ரொக்கப் பணத்திற்கு விற்பவன்” என்பதே அந்த விளம்பரப் பலகையில் எழுதப்பட்ட வாசகமாகும்.

இந்த விளம்பரம் எப்படி இருக்கிறது? அதைப்பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதை அறிய விரும்பி ஒரு விளம்பரக்குழுவை நியமித்து அபிப்பிராயம் கேட்டான் ஜான் தாம்சன்.

குழுவிலுள்ள ஒருவர் கருத்துக் கூறும்போது, தாம்சன் அவர்களே, தொப்பிகளைத் தயாரித்து விற்பவன்” என்று சொல்லும்போது ‘தொப்பிக்காரன்’ என்ற வார்த்தை தேவையில்லையே என்றார்.

உடனே ஜான் தாம்சன் அந்த விளம்பரப் பலகையிலே எழுதியிருந்த ‘தொப்பிக்காரன்’ என்ற வார்த்தையை அதிலிருந்து நீக்கிவிட்டார்.

குழுவில் மற்றொருவன் கருத்துக் கூறும்போது, ‘தொப்பிகள் விலைக்கு கிடைக்கும்போது, அதைத் ‘தயாரிப்பவன்’ யார் என்று எவனாவது கேட்டுக்கொண்டிருப்பானா? அதனால் தயாரிப்பது வார்த்தையை நீக்கிவிடலாமே!’ என்றார். ஜான்தாம்சன் அவர் கூறியதைப் போல, அந்த விளம்பர வாசகத்திலே இருந்த ‘தயாரிப்பவன்’ என்ற பதத்தை நீக்கிவிட்டார்.

வேறொருவன், ‘தாம்சன்தான் கடனுக்கு விற்பதில்லையே. எனவே ரொக்கப் பணத்திற்கு என்று எழுதியிருப்பது முட்டாள்தனம்’ என்றார். உடனே ஜான் தாம்சன் ‘ரொக்கப் பணத்திற்கு’ என்ற சொல்லையும் நீக்கி விட்டார்.

இப்போது அந்த விளம்பரத்தில் உள்ள சொற்கள், “ஜான் தாம்சன் தொப்பிகள் விற்பவன்” என்ற வாக்கியச் சொற்கள்தான்.

இன்னொரு நண்பர் பேசும்போது, ‘ஜான் தாம்சன் தொப்பிகளை இனாமாகவா கொடுக்கிறார்? இல்லையே! அவ்வாறானால் ‘விற்பவன்’ என்ற சொல் தேவையா விளம்பரத்தில்?’ என்றார்.

உடனே ஜான்தாம்சன் அந்த விளம்பரப் பலகையில் இருந்த விற்பவன் என்ற சொல்லைவும் நீக்கிவிட்டார்.

நீக்கிய வார்த்தைகள் எல்லாம் போக, இப்போது மீதமுள்ள விளம்பரச் சொற்கள் என்ன தெரியுமா? ‘ஜான் தாம்சன் தொப்பிகள்’ என்பவைதான்.

அடுத்தொருவர் கேட்டார், ‘தொப்பியின் உருவம் விளம்பரப் பலகையில் எழுதப்பட்டிருப்பதால், ‘தொப்பிகள்’ என்ற வார்த்தை தேவையில்லை அல்லவா?’ என்றார். உடனே தாம்சன் ‘தொப்பிகள்’ என்ற சொல்லையும் நீக்கினார்.

இவ்வாறாக, ஜான் தாம்சன் எழுதிய விளம்பரப் பலகைச் சொற்களைப் பற்றிய கருத்து விமரிசனம் கேட்க ஜான் தாம்சன் அமைத்தக் குழுவினர் அனைவரும் ஆளுக்கொரு கருத்தைக் கூறி, இறுதியில் எஞ்சி நின்றது என்ன தெரியுமா?

விளம்பரப் பலகையில் தொப்பியின் உருவம் ஒன்றும் அதன் கீழே ஜான் தாம்சன் என்ற பெயரும்தான் மிஞ்சி நின்றன என்றார் ஃபிராங்ளின். “என்ன ஜெபர்சன் சிலை போல உட்கார்ந்து விட்டீர்கள்!” என்றார் ஃபிராங்ளின். இருந்தும் ஜெபர்சனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அதற்கு ஃபிராங்ளின் என்ன சொன்னார் தெரியுமா ஜெபர்சனிடம், ‘எதைப் பற்றியும் பிறரிடம் ஆலோசனை கேட்டால் என்ன நடக்கும் என்பதை இவ்விதம் கதையைக் கூறினார். இதைக் கேட்டு விலா நோகச் சிரித்த ஜெபர்சன், அப்படியானால் அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் பற்றிக் கருத்து கேட்பதும் இப்படித்தான் இருக்குமோ!’ என்று வியந்ததுமட்டுமல்ல, வியர்த்தும் நின்றார் அவர்.

இறுதியில், அமெரிக்க குடியேற்ற நாடுகளின் விடுதலை சாசனம், அந்நாட்டு தேசிய சபைக்கு மனநிறைவை அளித்தது. அதனால், அமெரிக்க குடியேற்ற நாடுகள் தங்களது சுதந்திரப் பிரகடனத்தை எதிரொலிக்கத் தயாராகி விட்டார்கள் என்பதை ஃபிராங்ளின் உணர்ந்தார்.

தேசபக்தரான, ‘சுதந்திர வேட்கையாளரான கடைசி மூச்சுள்ளவரை சுதந்திரத்துக்காக போராடி அதைக் காண்பதற்கான துணிச்சலும் உயிர்த் துடிப்பும் அவருக்கு இருந்தது.

பிலடெல்பியாவில் கூடிய சுதந்திர சாசனக் கூடத்திலே அந்த புரட்சிகரமான பத்திரத்தில் கையொப்பமிடத் திரண்டிருந்த பணக்காரர்கள், சீமான்கள், ஏழைகளின் பிரதிநிதிகள், தொழிலாளர் பிரதிநிதிகள் தங்கள் பெயரை அதிலே எழுதுவதற்குத் தயங்குகின்ற நேரத்திலேதான், பெஞ்சமின் ஒரு வெடிகுண்டை வீசினார்.

என்ன வெடிகுண்டு அது! இதோ அந்த குண்டின் சிதறல்கள்: “நாம் எல்லோரும் ஒன்றாகக் கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்குவோம். இல்லாவிட்டால் நிச்சயம் தனித்தனியாக நாம் தூக்கு மரத்தில் தொங்க நேரிடும்” என்ற துணிவை அந்த சுதந்திரப் பிரகடனக் கூட்டத்திற்குக் கூறினார்.

பெஞ்சமின் ஃபிராங்ளினின் இந்த துணிவு போதனையை நகைச்சுவையை, வெடிகுண்டு என்று சிலர் எண்ணினார்கள். ஆனால், பதினெட்டாம் நூற்றாண்டின் கடுமையை அது குறைத்தது. எல்லோரையும் தைரிய உணர்ச்சி கொள்ளச் செய்தது. இதனால், மக்கள் தளரா வீரமும் தள்ளா முடியா உணர்ச்சியும் பெற்றார்கள். ஃபிராங்ளின் பேச்சு அத்தகைய ஓர் எச்சரிக்கைக் குண்டாக தனது கருத்தை அந்த சபையிலே வெடித்தார். அதனால், அமெரிக்கப் புரட்சிக்கு விதையும் தூவப்பட்டு விட்ட ஒரு உணர்ச்சி நிலை தோன்றியது. அந்த ஒப்பந்த விடுதலை சாசனத்தில் பெஞ்சமின் தனது முதல் கையொப்பத்தைப் போட்டார்.

அமெரிக்கப் புரட்சியிலே அடியெடுத்து வைக்கும் அமெரிக்க குடியேற்ற நாடுகளிடையே போர்ப் பிரகடனம் புரிய போதுமான பொருளாதாரம் இல்லை, படைபலம் இல்லை. தேவையான பொருட்களை வாங்கிப் பயிற்சி கொடுக்க ஆயுத வகைகள் இல்லை.

இவ்வளவு பெறுவதானால் யாரிடம் போவது? யாரைக் கேட்பது? ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து அமெரிக்க போர் புரட்சி செய்வதானால் போதுமான பண பலம் வேண்டுமே என்றெல்லாம் பிலடெல்பியா சட்டசபை உறுப்பினர்கள் சிந்தித்தார்கள்.

அதனால், பிரான்ஸ் தேசத்திற்கும், பாரீஸ் நகரத்திற்கும் பெஞ்சமின் ஃபிராங்ளின் சென்றால், அவருக்குப் போதுமான அரசியல் உதவிகளும் கடனாகப் பணமும் பெற முடியும் என்று நம்பி அவரை பிரான்ஸ் நாட்டு மன்னன் பதினாராம் லூயியிடம் தூதுவராகச் செல்லுமாறு ஃபிராங்ளினை பென்சில்வேனிய சட்டசபையினரும், அரசியல் பெரும்புள்ளிகளும் கேட்டுக் கொண்டார்கள்.

அமெரிக்க நாடு அவரை ஆணையர் Commissioner என்ற பெயரோடு பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பிவைத்தது. ஆனால், பிரான்ஸ் நாடோ ஃபிராங்கிளினை இராஜாங்கத் தூதர் Ambassador என்ற பெயரால் அவரை வரவேற்று மகிழ்ந்து மாபெரும் விழாக்களை எல்லாம் நடத்தியது. அவருக்கு அங்கே அவ்வளவு அரிய நண்பர்களும் அரசு செல்வாக்கும் இருந்தன.

பிரெஞ்சு அரண்மனையிலும், அரசாங்கத்திலும்தமக்கு ஏற்பட்ட நெருங்கிய நட்பின் மூலம், பெஞ்சமின், அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கு ‘நாலரை கோடி ‘லிவர்’ எனும் பிரெஞ்சு நாணயங்களைக் கடனாகப் பெற்று அனுப்பி வைத்தார்.

இது மட்டுமல்லாமல், பதினாராம் லூயி மன்னரிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, தனியாக ஒரு கோடி ‘லிவர்’ நாணயங்களை நன்கொடையாகப் பெற்று தனது நாட்டுக்கு அனுப்பி வைத்தார்.

வால்டேரும்-ஃபிராங்ளினும்

பிரான்ஸ் நாட்டில் அக்காலத்தில் வாழ்ந்த மாபெரும் மனிதர்கள், தத்துவ ஞானிகள், அரசியல் வாதிகள், இராச் தந்திரிகள், வரலாற்றாசிரியர்கள் அனைவரும் ஃபிராங்ளினைச் சந்திக்க விரும்பினார்கள்.

பிரெஞ்சு தத்துவஞானியான வால்டேர், ஃபிராங்ளினைத் தனது வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். தனது மகன் வில்லியத்தையும் உடன் அழைத்துக்கொண்டு வால்டேர் வீட்டுக்குப் போனார்.

பெஞ்சமின் ஃபிராங்ளின் வருவதைக் கேள்விப் பட்ட பேனா மன்னர் வால்டேர், நோயுற்றுக் கிடந்ததையும் பாராமல், தள்ளாமையால் வயதான கிழவரான அந்தப் பெருமகன், நாற்காலியில் சாய்ந்து எதிர்பார்த்து இருந்தார்.

பெஞ்சமினும் அவரது மகனும் தனது வீட்டுக்கு வந்த போது இருவரையும் அவர் வணக்கம் கூறி வரவேற்றார். பிறகு வால்டேர், ஃபிராங்ளினைப் பார்த்த உடனே, ‘ஓ, சுதந்தரமே, சொர்க்க ஒளியுடன் தோன்றும் சுதந்திரத் தாயே!’ என்று கூறி வணங்கி அவர்களை வால்டேர் வரவேற்றார்.

உடனே ஃபிராங்ளின், ‘இவன் எனது பேரன், தாங்கள் வாழ்த்துவீர்களாக?’ என்று பணிவாகக் கேட்டார்.

‘ஆண்டவனும் சுதந்திரமும் இதுதான். தங்களது பேரனுக்கு பொருந்தக்கூடிய அருள் வாழ்த்து’ என்று கூறி வாழ்த்தினார் வால்டேர்.

‘எனக்கு மற்றொரு பேரன் உண்டு. அவன் அமெரிக்காவிலே இருக்கின்றான். அவனையும் எனது பேத்தி பாச்சியையும் அருள்கூர்ந்து வாழ்த்துங்கள்’ என்றார் பெஞ்சமின் இதைக் கேட்ட வால்டேர், அவர்கள் இருவரையும் நாற்காலியில் சாய்ந்த முதுமை நிலையோடு “சுதந்திரமும்-சமத்துவமும்” என்று வாழ்த்தினார்.

இந்த ‘சுதந்திரமும் சமத்துவமும்’ என்று. பெஞ்சமின் பேரப்பிள்ளையினையும், மகனையும் வாழ்த்திய அந்த வாழ்த்துச் சொற்கள்தான், பிரெஞ்சுப் புரட்சியின் மக்களிடம் எதிரொலித்த வெற்றி முழக்கங்களாகிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோஷங்களுக்கு மூலாதாரமான துவக்கச் சொற்களாக அமைந்தன. இறுதியில் வால்டேரும், பெஞ்சமினும் பிரியா விடைபெற்றப் பிரிந்தார்கள்.

பிரெஞ்சு மன்னரான பதினாராம் லூயியை மீண்டும் பெஞ்சமின் சந்தித்து; அமெரிக்கா செல்ல விடை கேட்டார். அப்போது, மன்னர் தனது உருவத்தைப் பொறித்ததும், நானூறு வைரக் கற்களைப் பதித்ததுமான ஒரு மதிப்புள்ள பதக்கத்தைப் பரிசாகத் தந்து விடைகொடுத்து மன்னர் பதினாராம் லூயி பெஞ்சமினை அனுப்பி வைத்தார்.

பெஞ்சமின் மன்னரிடம் விடைபெற்றுப் போகும் போது, “நீங்கள் சென்றுதான் ஆகவேண்டுமா?” என்று கேட்டார். ‘ஆம்’ என்று அவர் கூறவே, பிரான்ஸ் நாட்டின் கடற்கரைவரை தங்களுக்குரிய பாதுகாப்புக்காக, உங்களுடைய பல்லக்கை எனது ராஜபட்டம் அணிந்த குதிரைகள் இழுத்துச் செல்லும் ஜாக்கிரதையாகச் சென்றுவாருங்கள்’ என்று பதினாறாம் லூயி மன்னர் கூறி வழியனுப்பி வைத்தார்.

பெஞ்சமின் ஊர்வலமாகப் புறப்பட்டார். ஆயிரக்கணக்கான மக்கள் வழியெல்லாம் கூடி நின்று மலர் மாலைகளைச் சூட்டி, வாழ்க என்ற வாழ்த்தொலியோடு கடற்கரைவரை சென்று கப்பலேற்றி பெஞ்சமினையும் அவரது மகன் வில்லியத்தையும் வழியனுப்பி வைத்தார்கள்.

பிலடெல்பியா நகர் வந்து சேர்ந்த பெஞ்சமின் ஃபிராங்ளின், தனது வீட்டுப் படிக்கட்டுகளை ஏறும்போது, தனது தள்ளாத வயதால் தவறிக் கீழே விழுந்தார். அதிலிருந்து அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிறு காய்ச்சலுக்குப் பிறகு 1790-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், 17ம் தேதியன்று அவர் உயிர் துறந்தார்.

ஃபிராங்ளின் சவப்பெட்டியின் பின்னாலே, பல்லாயிரக் கணக்கான பிலடெல்பியா நகர மக்கள், பெரிய பிரமுகர்கள் வரிசை வரிசையாக, சோகமும் துயரமும் கவ்விய நடையோடு அனைவரும் சென்றார்கள். அவரது சவ ஊர்வலத்திலே பிலடெல்பியா நகரில் அவ்வளவு மாபெரும் மக்கட் கூட்டம் இதற்கு முன்பு யாருக்கும் கூடியதில்லையாம்!

மனிதன் என்பவன் யார்? அவன் தனது வாழ்வுக்காகவும், தான் வாழும் மக்கட் சமுதாயத்துக்காகவும், தனது நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், ஆற்றிய செயற்கறிய செயல்கள் எல்லாம் சேர்ந்து பெஞ்சமின் ஃபிராங்ளினை ஒரு சிறந்த சிந்தனை புத்தகமாக, நமக்கெல்லாம் நற்றொண்டு பாடங்களாக அமைந்துவிட்டதைக் கண்டார்கள் மக்கள்.

‘எங்கு சுதந்திரம் வாழ்கிறதோ; அங்கேதான் எனது தேசம் இருக்கிறது’ என்ற தாரக மந்திரத்தை ஓதிய மாபெரும் மனித ஞானி, இறுதியில் அமெரிக்க மண்ணிலே சமாதி ஆனார்.

பெஞ்சமின் ஃபிராங்ளின் புதைக்கப்பட்ட இடத்திலே, தான் இறந்து போனால், தனது கல்லறையிலே என்ன எழுத வேண்டும் என்பதையும் முன்கூட்டியே கி.பி. 1728ம் ஆண்டே எழுதி வைத்திருந்தார். அந்த மரண சாசனம் இது. படியுங்கள்! கண்ணீர் சொரியுங்கள்!

“அச்சாளரான இந்த பெஞ்சமின் ஃபிராங்ளினின் உடல், ஒரு பழைய புத்தகத்தின் மேலட்டையைப் போலவே, அதன் பொருளடக்கங்கள் எல்லாம் நைந்து கிழித்து போய், அதன் எழுத்துக்களும் மெருகும் கீலகமாகிக் கிடப்பதைப் போல இங்கே கிடக்கிறது, - புழுக்களுக்கு உணவாக! ஆனால், உழைப்பு என்றுமே அழிந்துபோகாது: ஏனென்றால் அது மறுபடியும் ஒரு நூலாசிரியனால் திருத்தி எழுதப்பட்டு, இன்னும் அழகான புதிய புதிய பதிப்பாக வெளிவரும் என்பது எனது நம்பிக்கை” என்று தனது கல்லறையிலே எழுதுமாறு கூறி மறைந்தார்.

——————————