பெரியாரும் சமதர்மமும்/பதிப்புரை

பதிப்புரை

“கம்யூனிசம் ஒன்றுதான் உலக அமைதிக்கே, உலக மேம்பாட்டிற்கே உற்ற சாதனமாகும்.”

“உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மைகளில் மற்ற தேசத்திற்கும், இந்தியாவுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்து வருகிறது. அதென்னவென்றால், மற்ற நாடுகளில் ஒரு விஷயந்தான் முக்கியமாய்க் கருதப் படுகிறது. அதாவது, முதலாளி (பணக்காரன்)—வேலையாள் (ஏழை) என்பதுவேயாகும். ஆனால், இந்தியாவிலோ மேல் சாதியார், கீழ்ச் சாதியார் என்பது ஒன்று அதிகமாகவும், முதன்மையானதாகவும் இருப்பதால், அது பணக்காரன்—ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகின்றது.

— பெரியார் ஈ.வெ.ரா.

புதுவாழ்வுப் பதிப்பகத்தின் முதல் வெளியீடான, கலசம் மொழி பெயர்த்த—ஆந்திர நாட்டு நாத்திகச் செம்மல் கோரா அவர்களின் ‘நாங்கள் நாத்திகரானோம்’ என்னும் தமிழாக்க நூலினை வரவேற்றுப் பரவச் செய்த தமிழ்மக்களுக்கு, நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேடைப் பேச்சு, நாள்—கிழமை—மாத ஏடுகள் என இவைகளுக்கு அடுத்த நிலையில், கொள்கை பரப்பும் பணியைச் செய்து கொண்டிருப்பவை நூல்களே ஆகும்.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் தோழர் நெ.து. சுந்தர வடிவேலு அவர்கள் ‘அறிவுவழி’ மாத ஏட்டில் 1979 சூன் முதல் 1983 பிப்ரவரி வரை, ‘பெரியாரும் சமதர்மமும்’ என்னும் தலைப்பில் தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கித் தமிழ் மக்களிடையே உலவச் செய்வது, சமதர்மக் கொள்கையைப் பரப்புவதற்கும், பெரியார் ஒரு சமதர்மக்காரர் என்பதை இளந்தலைமுறையினர் அறிவதற்கும், உதவியாக அமையும் என்று கருதினோம். அக்கருத்தின் விளைவே இந்நூல்.

தோழர் நெ.து.சு. அவர்கள், பெரியாரின் பேச்சுகளை நேரில் கேட்டறிந்தவர்; அவருடைய எழுத்துக்களைப் படித்தறிந்தவர்; அவருடைய செயல் முறைகளைத் தொடர்ச்சியாக உற்று நோக்கியவர். சுருங்கச் சொன்னால், தந்தை பெரியாரை நன்கு புரிந்து கொண்டவர்; அதே வேளையில், சமதர்மக் கொள்கையையும் நன்கு புரிந்து கொண்டவர். எளிமைக்கும், தோழமைக்கும் உரியவராக வாழ்ந்து வரும் அவர் உலக நாடுகள் பலவற்றிற்கும் சுற்றுப் பயணம் செய்துள்ளார். ஏழு முறை சோவியத் நாட்டுக்குச் சென்று, சமதர்ம வாழ்க்கை முறையினை நேரில் அறிந்து வந்துள்ளார்.

குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து, இருபதாம் நூற்றாண்டின் ‘மனு’வாகச் செயல்பட்ட பார்ப்பன இராஜாஜியின் சூது நிறைந்த திட்டத்தை முறியடித்து, காமராசரும், பெரியாரும் தமிழ்நாட்டில் கல்விப் புரட்சியை நடத்திய நாள்களில், அரசுப் பணியில் கல்வித் துறை இயக்குநராக இருந்து நெ.து.சு. அவர்கள் உழைத்த உழைப்பு குறிப்பிடத் தக்கதாகும். அந்த உழைப்பு அத்தலைவர்களின் சிந்தனை, செயலாக்கம் பெறத் துணை செய்தது.

நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் சமகாலத்தவர் என்னும் நிலையில் இருந்து கொண்டு, அவர் கடந்த அறுபதாண்டுகளாகத் தமிழ் நாட்டில் நிலவிய சமுதாய—அரசியல் பின்னணியினையும் ஆங்காங்கே நமக்குப் புரியும்படி எடுத்துச் சொல்கிறார்.

கடந்த அறுபதாண்டுகளில், தமிழ்நாட்டு அரசியலில் நீதிக் கட்சி—சுயமரியாதை இயக்கம்—காங்கிரசு—பொதுவுடைமைக் கட்சி ஆகிய கட்சிகளுக்கிடையே நிலவிய உறவுகளையும், அவைகளுக்கிடையே வெளிப்பட்ட மோதல்களையும் இந்நூலைப் படிப்போர் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

நண்பர் ஸ்டெனி இந்நூலுக்கு மேலட்டையினை அழகுற வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.

இந்நூலுக்குத் தமிழ் மக்கள் தங்களுடைய பேராதரவினை வழங்கி உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

—பதிப்பகத்தார்