பெரியாரும் சமதர்மமும்/07

7. சமதர்மத்தை நோக்கியே
சுயமரியாதை இயக்கம்

மாம்பிஞ்சு முற்றிய காயாகிறது; முற்றிய காய் செங்காயாகிறது; செங்காய் கனியாக மாறுகிறது.

அரசியல் விடுதலை இயக்கத்தின் வாயிலாக, ஈ.வெ.ராமசாமி பொதுத் தொண்டிற்கு வந்தார். முழு நேரத் தொண்டாகத் தியாகஞ் செறிந்த தொண்டாக, அது வளர்ந்தது. அதற்காக, வாணிகத்தை மூடி விட்டார். ஆண்டுக்கு இருபதாயிரம் ரூபாய் வருமானத்தைக் கொடுத்த தொழிலை விட்டு விட்டார்.

பம்பரம் போல், மூலை முடுக்கெல்லாம் சுற்றிச் சுற்றி, விடுதலை உணர்வைச் சுரக்க வைத்தார். காந்தியடிகளின் கட்டளையைக் கடைப் பிடித்தார். வழக்கு மன்றங்களுக்குப் போகக் கூடாது என்ற காந்தியத் திட்டத்தைப் பின் பற்றியதால், அய்ம்பதாயிரம் ரூபாய்களை இழந்தார்.

அமைப்பினை வளர்ப்பதிலும், போராட்டங்களை நடத்துவதிலும், வெற்றி வாகை சூடி வந்த ஈ.வெ. ராமசாமி தியாகங்களை அடுக்கிக் கொண்டிருந்த தலைவர், புகழ் ஒளியில் மயங்கி விடவில்லை. அடுத்துச் செய்ய வேண்டியனவற்றைப் பற்றிச் சிந்தித்தவாறே இருந்தார்.

இந்திய தேசிய காங்கிரசின் பார்வை, அரசியல் விடுதலைக்கு அப்பால் விரியவில்லை. சமுதாய மாற்றம் பற்றி, அதற்குப் போதிய அளவு முற்போக்குக் கண்ணோட்டம் இல்லை என்பது ஈ.வெ.ராமசாமிக்குப் புலனாயிற்று.

சாதிகளாகப் பிரிந்து கிடக்கும் சமுதாயத்தில், ‘வகுப்பு வாரி உரிமை,’ அடிப்படை நீதி என்று தமிழ்நாட்டுக் காங்கிரசாரின் மனதில் பதிய வைக்க முயன்றார். அது செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று.

பசுங்காயாக முற்றி வந்த ஈ.வெ.ராமசாமி, செங்காயாக மாறினார் எனலாம். காங்கிரசு இயக்கத்தை விட்டு வெளியேறினார். தன்மான இயக்கத்தைக் கண்டார். மக்கள் சமத்துவத்திற்குப் போராடினார். மக்களிடையே, ஏற்றத் தாழ்வு உணர்ச்சியினைப் பயிரிட்டு வந்த கடவுள் நம்பிக்கை முதல் சாத்திரங்கள், இலக்கியங்கள், நடைமுறைகள் ஈறாக அத்தனையையும் சாடிச் சாடி மக்களைத் தட்டி எழுப்பினார்; வகுப்புரிமைக்கும் தொடர்ந்து வாதாடினார்.

விழிப்புற்ற, மான உணர்வு பெற்ற மக்கள் முதலில் 1929இல் செங்கற்பட்டில், மாகாண மாநாட்டில் கூடினார்கள். அடுத்த ஆண்டு ஈரோட்டு மாகாண மாநாட்டில் கூடினார்கள்.

இதற்கிடையில், ஈ.வெ.ரா.வின் சிந்தனை மேலும், மேலும் விரிந்து கொண்டே இருந்தது. வகுப்புரிமை என்பதும், இடைக் கால நிவாரணமே; அது தேவையானதாயினும், நீண்ட காலச் சமூக நலனுக்குப் போதாது என்பது அவருக்குத் தெளிவாயிற்று. பின் எது தேவை? இக்கேள்விக்கும் பதிலைக் கண்டு பிடித்து விட்டார். புரட்சிச் சிந்தனையாளராகிய ஈ. வெ. ராமசாமி. அதை ஈரோட்டு மாநாட்டின் முடிவில் நன்றியுரை கூறிய போது, ஈ. வெ. ரா வெளிப்படுத்தினார்.

1916இல் நீதிக் கட்சி தொடங்கிய போது, பொது உடைமைக் கொள்கையின் சமதர்மக் கோட்பாடும், கருத்து மண்டலத்தோடு நின்றிருந்தது.

1917 அக்டோபரில் உலகைக் குலுக்கிய புரட்சி நடந்தது. அதன் விளைவாக, உலகத்தின் முதல் சமதர்ம பாட்டாளி ஆட்சி உருவாயிற்று. சில நாட்களில் தொடங்கிய எதிர்ப் புரட்சியும், பின்னர் மூண்ட பதினான்கு வல்லரசுகளின் தாக்குதல்களும், புதிய ஆட்சியை அலைக்கழித்தது. அவை தோற்று, அமைதி நிலவி, சோவியத் ஒன்றியம் உருவாக சில காலமாயிற்று.

எனவே, தமிழ்நாட்டு முற்போக்காளர்கள், ‘இந்நாட்டு நோய்க்கு உள்நாட்டு மருந்தாகிய வகுப்புரிமை’ ஒன்றிலேயே நாட்டமாயிருந்தார்கள். செங்காய் நிலையாகிய அதையும் தாண்டி, சமதர்ம வழியில் சிந்தனையைச் செலுத்திய முன்னோடிகளில் ஒருவர் ஈ. வெ. ராமசாமி ஆவார்.

சிலரே படித்தவர்களாக, அரசு ஊழியத்தை நாடுபவர்களாக நிலைமை இருக்கும் வரை, வகுப்புரிமைக் கொள்கையின் நடை முறையே போதும். அது முழு வளர்ச்சியல்லவே! அது சமத்துவ நிலையாகாதே!((nop)) கடைக்கோடியில் இருப்பவரும், எல்லாம் பெறும் நிலையல்லவா முதிர்ந்த சமத்துவ நிலை? அந்நிலையொன்றே எல்லோரையும் வாழ வைக்கும் என்பதை 1930இன் தொடக்கத்திலேயே, ஈ.வெ. ராமசாமி உணர்ந்தார்; உலகறிய உரைத்தார்.

ஈரோட்டு மாநாட்டு நன்றியுரையில், புரட்சியாளர் ஈ.வெ. ராமசாமி கூறியதைப் பார்ப்போம்:

‘இந்த (தன்மான) இயக்கமானது, இன்றைய தினம் பார்ப்பனரையும், மதத்தையும், சாமியையும், பண்டிதர்களையும் கண்டித்துக் கொண்டு, மூடப்பழக்க வழக்கங்களையும் எடுத்துக் காட்டிக் கொண்டு, மூட மக்களைப் பரிகாசம் செய்து கொண்டிருப்பது போலவே, என்றைக்கும் இருக்குமென்றோ அல்லது இவைகள் ஒழிந்தவுடன் இயக்கத்திற்கு வேலையில்லாமல் போய் விடுமென்றோ யாரும் கருதி விடக் கூடாது என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

‘மேற்சொன்னவைகளின் ஆதிக்கங்கள் ஒழிவதோடு, ஒருவன் உழைப்பில் ஒருவன் நோகாமல் சாப்பிடுவது என்கிற தன்மை இருக்கிற வரையிலும், ஒருவன் தினம் ஒரு வேளைக் கஞ்சிக்கு மார்க்கமில்லாமல் பட்டினி கிடந்து சாவதும், மற்றொருவன் தினம் அய்ந்து வேளை சாப்பிட்டு விட்டுச் சாயுமான நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, வயிற்றைத் தடவிக் கொண்டிருக்கிறதுமான தன்மை இருக்கிற வரையிலும், ஒருவன் இடுப்புக்கு வேட்டியில்லாமல் திண்டாடுவதும், மற்றொருவன் மூன்று வேட்டி போட்டுக் கொண்டு உல்லாசமாகத் திரிவதுமான தன்மை இருக்கிற வரையிலும், பணக்காரர்கள் எல்லாம் தங்கள் செல்வம் முழுவதையும் தங்களது சுக வாழ்வுக்கே ஏற்பட்டது என்று கருதிக் கொண்டிருக்கிற தன்மை இருக்கிற வரையிலும், சுயமரியாதை இயக்கம் இருந்தேதான் தீரும்’ என்று அறிவித்தார். இந்த அறிவிப்பின் வழியாக சுயமரியாதை இயக்கம் சென்றடைய வேண்டிய கோட்டையும், அன்றைக்கே சுட்டிக் காட்டினார்,

ஈ.வெ.ராமசாமி தன்னேரிலாத சிந்தனையாளர், பேச்சாளர் எழுத்தாளர் ஆவார். மேடையேறியதும், மின்னும் கருத்தைச் சொல்லி விட்டுப் பாராட்டுக்குக் காத்திருப்பவர் அல்லர் அவர். சொல்லுகிற கருத்தின் ஆழத்தையும், பரப்பையும் உணர்ந்தே சொல்லுவார். சமதர்ம இயக்கம் பற்றி ஈ. வெ. ராமசாமி கொண்டிருந்த கருத்து ஆழமானது.

இதோ அவரது சொற்களிலேயே படிப்போம்:

‘சமதர்ம இயக்கம், உலக மக்கள் எல்லோரையும் பொருத்த இயக்கம்: சாதி, மதம், வருணம், தேசம் என்கிற கற்பனை நிலைகளை எல்லாம் தாண்டிய இயக்கம். பிராமணன், சத்திரியன், சூத்திரன், அரிசனன் என்கிற வருணங்களை ஒழித்து, எல்லோரும், எப்பொழுதும் மனிதரே என்று கூவும் இயக்கம்,

‘ஏழை என்றும், பணக்காரன் என்றும், முதலாளி என்றும், தொழிலாளி என்றும், எசமான் என்றும், கூலி என்றும், ஜமீந்தார் என்றும், குடியானவன் என்றும் உள்ள சகல வகுப்புகளையும், வேறுபாடுகளையும் நிர்மூலமாக்கித் தரை மட்டமாக்கும் இயக்கம்,’ என்று ஈ.வெ. ராமசாமி விளக்கினார். அவர் மேலும் கூறியதாவது:

‘மற்றும் குரு என்றும், சிஷ்யன் என்றும், பாதிரி என்றும், முல்லா என்றும், முன் ஜென்மம், பின் ஜென்மம், கர்ம பலன் என்றும், அடிமையையும், எஜமானனையும் மேல் சாதிக்காரனையும், முதலாளியையும், தொழிலாளியையும், ஏழையையும், பணக்காரனையும், மகாத்மாவையும், சாதாரண ஆத்மாவையும், அவனுடைய முன் ஜென்ம கர்மத்தின்படி அல்லது ஈசுவரன் தன் கடாட்சப்படி உண்டாக்கினான் என்று சொல்லப்படும் அயோக்கியத்தனமான சுயநலங் கொண்ட சோம்பேறிகளின் கற்பனைகளையெல்லாம் வெட்டித் தகர்த்துச் சாம்பலாக்கி, எல்லோர்க்கும் எல்லாம் சமம், எல்லாம் பொது என்ற நிலைமையை உண்டாக்கும் இயக்கம்.

‘சாதி, சமய, தேசச் சண்டையற்று, உலக மக்கள் யாவரும் தோழர்கள் என்று சாந்தியும், ஒற்றுமையும் அளிக்கும் இயக்கம்; இன்று உலகமெங்கும் தோன்றித் தாண்டவமாடும் இயக்கம்’ என்று தமிழ்நாட்டின் பொதுமக்களுக்குத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டினார்.

தன்மான இயக்கத் தந்தை ஈ.வெ.ரா.காட்டிய புது வழியில், பெருவழியில் இயக்கம் வீறு நடை போடத் தொடங்கியது.

இயக்க மேடைகளிலும், எழுத்துகளிலும் சாதியொழிப்பு, சாதிகளுக்கு ஆணி வேரான கடவுள் மறுப்பு, சமய மறுப்பு இடம் பெற்றது போன்றே, ஏழைப் பணக்காரத் தன்மை ஒழிப்பும இடம் பெற்றது. பெரியாரே சமதர்மப் பிரச்சாரத்தைச் சேர்த்துக் கொண்டார்.

கடவுள் மறுப்பு இல்லாமல், செல்வ ஏற்றத் தாழ்வு எதிர்ப்பை நியாயப்படுத்த முடியாது.

எல்லாம் அறிந்த, எல்லாம் வல்ல, எல்லாரையும் படைத்த ஒருவன் என்கிற கற்பனையை ஏற்றுக் கொண்டால், அவன்தான் ஆயிரம் பேர்களைக் கோடீசுவரர்களாகப் படைத்தான்; அறுபது கோடி மக்களை ஏழைகளாகப் படைத்தான் என்று புரோகிதர் புளுகுவதையும் ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்.

அப்படியானால், அடுத்து கையிலுள்ள நாலு காசையும் அர்ச்சகருக்கு அழுது விட்டு, அடுத்த பிறவியில், இலட்சுமி கடாட்சம் பெறலாம் என்று நம்பிக் கிடக்க வேண்டியதுதானே! ‘தலைவிதி முன்னை வினைப் பயன்’ என்பது மன நோய். அதன் வெளிப்பாடு ஏழ்மையை ஏற்றல்; உயர் சாதித் தன்மைக்கு உடன்படல்.

பிறவியால் ஏற்படுவதாகச் சொல்லப்படும் சாதி உயர்வு தாழ்வு, சட்டத்தால் வளர்த்துக் காப்பாற்றப்படும் பணக்கரார், ஏழைத் தன்மையும் நச்சு மரங்களுக்கு ஒப்பானவை. அவற்றின் ஆணி வேர்களாவன: சமய நம்பிக்கை, முன் வினைப் பயன், தலை விதி என்பவை. அவை உயிர்த் துடிப்போடும் வீறோடும் இருக்கும் வரை, சாதி ஏற்றத் தாழ்விலிருந்து விடுபட்டுக் கரையேறுவது இயலாது; எல்லார்க்கும் எல்லாம் கிடைப்பதான நல்ல சமதர்ம சமுதாயத்தை உருவாக்க முடியாது.

அந்நம்பிக்கையை அடியோடு புரட்டித் தள்ளி விட்டால், அவற்றின் கிளைகளும், கொப்புகளும் எளிதில் ஒடிந்து சாம்பலாகி விடும்.

எனவே, சுயமரியாதை இயக்கம் மேலெழுந்த வாரியாகப் பேசி விட்டும், எழுதி விட்டும் காலந் தள்ளவில்லை. நுனிப் புல் பேச்சுக்களாலும், எழுத்துக்களாலும் கிடைக்கும் செல்வாக்கில் திளைத்துக் கிடக்கவில்லை. ஈராயிரம் ஆண்டுகளாக ஆழப் பதிந்துள்ள சமய நம்பிக்கைகள், கோதானம், கன்னிகாதானம் முதலிய மூடப்பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைச் சாடும் பணியும், தேவையான அடிப்படைப் பணியாயிற்று.

நம் சிந்தனையில் இணைந்து விட்ட மூட நம்பிக்கைகளை நீக்கித் துப்புரவாக்குவதைக் காட்டிலும், இளமைப் பருவத்தில் அவை சேராதபடி தடுத்தல் பெரும் பயன் விளைக்கும். இதை உணர்ந்த சுயமரியாதைக்காரர்கள் 1930 மே திங்கள் ஈரோட்டில் கூடிய இளைஞர் மாநாட்டில், இது பற்றி ஓர் முடிவுக்கு வந்தார்கள். பதின்மூன்றாம் எண்ணுடைய அம்முடிவு என்ன சொல்லுகிறது? அது இதோ :

(அ) பள்ளிக்கூடங்களில், மாணவர்களுக்கு மத விஷயங்களைப் போதிக்காதிருக்கும்படியும், மூடப் பழக்க வழக்கங்களைப் போதிக்கும் புத்தகங்களைப் பாடமாக வைக்காதிருக்கும்படியும், பள்ளிக்கூட அதிகாரிகளையும்,

(ஆ) மத விஷயங்களைப் போதிக்கும் பள்ளிக்கூடங்களுக்கு, உதவி செய்யாதிருக்கும்படி அரசாங்கத்தையும் இம்மாநாடு கேட்டுக் கொள்ளுகிறது.

ஈரோட்டு மாநாட்டின் முடிவில், நன்றியுரையில் ஈ. வெ. ராமசாமி, தன்மான இயக்கத்தின் எதிர்காலப் பணியைத் தெளிவாகவே காட்டி விட்டார். அது முதல், இயக்கக் கொள்கை பரப்புப் பணியில், சமதர்மக் கோட்பாடு இடம் பெற்று வளர்ந்து வந்தது.

இயக்கத் தலைவருடைய—அதன் முன்னணித் தொண்டர்களுடைய கருத்தாக முழங்கின சமதர்மம், இயக்கத்தின் கொள்கையாகவே விரைவில் உருப் பெற்றது. அது எப்போது? ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தொன்றில். அவ்வாண்டு விருதுநகரில், மூன்றாவது மாகாண சுயமரியாதை மாநாடு நடந்தது. பொது மாநாட்டிற்கு, திரு. ஆர். கே. சண்முகம் தலைமை தாங்கினார்.

பொது மாநாட்டில் நிறைவேறிய முதல் முடிவை இப்போது கவனிப்போம்:

‘மனிதத் தன்மையைத் தடைப்படுத்துவதற்கு, மதங்களின் பேரால் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களே காரணமாயிருப்பதால், அப்படிப்பட்ட எல்லா மதங்களும் மறைந்து போக வேண்டுமென்றும், மதங்கள் ஒழியும் வரை, மனிதர்களுக்குள் சகோதரத்துவம் வளராதென்றும், இம்மாநாடு அபிப்பிராயப்படுகிறது.’

"https://ta.wikisource.org/w/index.php?title=பெரியாரும்_சமதர்மமும்/07&oldid=1690018" இலிருந்து மீள்விக்கப்பட்டது