பெரியாரும் சமதர்மமும்/09

9. கம்யூனிஸ்ட் அறிக்கையும்
சோவியத் புரட்சியும்

இடம் எண்ணங்களை விளைவிக்கிறது. காலக் கருவில் கருத்துக்கள் பிறக்கின்றன. நிலைமைகள், நினைப்புகளை மலரச் செய்கின்றன.

உலகில் எங்கும் இல்லாத, ஒட்டுவார் ஒட்டியாக, மூவாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் தீண்டாமை போன்ற சாதிக் கொடுமை, தந்தை பெரியாரின் சிந்தனையைக் கிளறிற்று; தன்மான இயக்கத்தைத் தொடங்க வைத்தது. ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடையே, போராடி, இதை வளர்க்க வைத்தது. ஏராளமானோரின் சிந்தனை விடுதலையும், கொள்கைப் பிடிப்பும், குறிக்கோளுக்காக இடர்ப்படும் துணிவும், தன்மான இயக்கத்தைப் பசுமையாகக் காத்து வருகின்றன.

நடக்கத் தெரிந்த குழந்தை முதலில் வீட்டுக்குள் நடக்கும்; பின்னர், தெருவில் காலெடுத்து வைக்கும். உரிமையைக் கட்டுப் படுத்தா விட்டால், அக்கம் பக்கத்தையும் சுற்றி வரும். இது சிந்தனைப் பழக்கத்திற்கும் பொருந்தும்.

சிந்திக்கத் தொடங்கிய போதே, மாந்தர் இனம் பிறந்தது. மனிதக் குரங்கிலிருந்து பிறந்தது; சிந்திக்கும் அளவிற்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. மனிதக் குரங்கின் விலங்குத் தன்மையிலிருந்து சிறுகச் சிறுக விடுபட்டு, முழு மனித நிலை நோக்கி நகர்கிறது. பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதும் மாமனித நிலைக்குப் போக வேண்டும்.

இந்தியச் சூழலில் வளரத் தொடங்கிய தமிழ் இனம் நெடுங்காலம், ‘தொன்மையானவை; புனிதமானவை’ என்னும் மரபுகளால் செய்யப்பட்ட சாத்திரத் தொட்டில்களில் படுத்துக் கிடந்தது. அந்நிலைக்கு மேலே வளரத் தொடங்கிய போது, சிந்திக்கத் துணிந்தோம்; சாத்திரங்களுக்குள் சிக்காமல், சிந்திக்கத் துணிந்தோம். எதிர்கால நாகரிகத்தின் ‘தலை’ தென்பட்டது.

சிறிது நேரம் நம் கடைக்கண் பார்வையை, மக்கள் வரலாற்றின் மேல் செலுத்துவோம்.

கண்டதைத் தின்று உயிர் வாழ்ந்த நிலை முதல் நிலை; அவல நிலை. மாந்தர் மூளை வேலை செய்யத் தொடங்கியது. மரத்திலிருந்து பழம் வீழ்ந்த இடத்தில் செடி முளைப்பதைக் கண்டார்சுள் வியந்தார்கள்; பயந்தவர்களும் உண்டு. இருப்பினும், சிலருடைய சிந்தனை தொடர்ந்து வளர்ந்தது; சோதனையாக வளர்ந்தது. விதையைப் போட்டு முளைத்த செடியை வளர்த்துப் பயிராக்கும் பரிசோதனையாகத் தொடர்ந்தது. இயற்கையைப் பயன்படுத்தக் கற்றார்கள். தங்கள் தேவைகளுக்கேற்ப நிலத்தைப் பண்படுத்தும் நுட்பத்தைத் தெரிந்து கொண்டார்கள்.

பயிரிடும் கலையை மானுடம் கற்றது.

தொடக்கத்தில், பயிர் ஒரு பருவத்தில் விளையும்; மூன்று பருவங்கள் சாவியாகும். ‘இறைவன் இட்டது இவ்வளவே’ என்னும் அறியாமைப் பாறை அழுத்திக் கொண்டிருந்த வரையில், பயிர்த் தொழில் சூதாட்டமாகவே இருந்தது; ‘பட்டா பாக்கியமாகவே’ தொடர்ந்தது. பயிர்த் தொழிலையும், கால்நடை வளர்ப்புத் தொழிலையும் நம்பியிருந்த போது நில உடைமைச் சமுதாயம் உருவாயிற்று. இது பல நூறு ஆண்டுகள் நீடித்தது.

மானுடம் பயிர்த் தொழிலோடு நிற்கவில்லை. கைவினைகளில் ஈடுபட்டது. ஓலைகளை முடைந்து தட்டிகள் செய்யக் கற்றது. அவற்றை முட்ட வைத்துக் குடிசையாக்கிற்று.

கைவினைகள் தொழில்களாயின. பின்னர் சிக்கலான தொழில்கள் ஆயின. பழமையிலிருந்து விடுபட, விடுபட புதுமையைக் காண முடிந்தது. அத்தகைய கண்டுபிடிப்புகளில் ஒன்று நீராவி இயந்திரம். புரட்சிகரமான அக்கண்டுபிடிப்பு பெருந்தொழில்களை வளர்த்தன. அதனால், பெரிய நூற்பாலைகள், நெசவாலைகள் எழும்பின. இயந்திரங்கள் செய்யும் தொழிற்கூடங்கள் தோன்றின. சிறு, சிறு பட்டறைகளில், தறிகளில் பொருள்கள் உருவாக்கப்பட்டது மாறி, பெரும் ஆலைகளில் மலை, மலையாகப் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

அம்மாற்றத்திற்குப் பெயர் தொழிற்புரட்சி.

தொழிற்புரட்சி பெருஞ் சந்தைகளைத் தேட வைத்தது. உள்நாட்டுச் சந்தைகள் போதாத நிலை ஏற்பட்டது. பிற நாட்டுச் சந்தைகளைத் தேடிச் செல்ல நேர்ந்தது. தரை வழியாகவும், கடல் வழியாகவும் போக்கு வரவுகள் பெருகின. தொழிற் புரட்சியில் முன்னணியில் இருந்த நாடுகளுக்கிடையில், சந்தைப் போட்டி வலுத்தது. அது நாடு பிடிக்கும் போட்டியாக ஊதிற்று. விளைவு? பிற நாடுகளைப் பிடித்தாளும் ஏகாதிபத்தியங்கள் உருவாயின.

பெருந்தொழில்கள், புதிய சமுதாயப் பிரிவுகளை உருவாக்கின உடலுழைப்பை மட்டும் சொத்தாகக் கொண்ட கூட்டம், தொழிலாளிகளாயினர். காசு, பணம், முதலீடு செய்யக் கூடியவர்கள் முதலாளிகள் ஆயினர். இரு பிரிவினுடைய நோக்கங்களும், வேறானவை; ஒன்றுக்கு ஒன்று முரணானவை.

முதலாளிகள் நோக்கம் என்ன? இலாபம்; இன்னும் பெரிய இலாபம்; வளர்ந்து கொண்டே இருக்கும் இலாபம். இலாபம் எப்படிக் கிடைக்கும்? மேலும், மேலும் அதிகமாகும் இலாபத்தைப் பெறுவது எப்படி?

உற்பத்திப் பொருட்களுக்கு, பொதுமக்களை அடிமைப் படுத்தல்; அப்பொருட்கள் இன்றி, வாழ முடியாத உணர்வை பொதுமக்களிடம் உருவாக்குதல். அப்புறம்? விலைகளை விருப்பப்படி ஏற்றி விற்றல். பொதுமக்களைச் சுரண்டுவதால் மட்டுமா இலாபம் பெருகுகிறது? இடையறாது வளர்கிறது?

தொழிற்கூடங்களில், ஆலைகளில், பிற இயந்திரச் சாலைகளில் உழைப்போரிடம் மிக அதிகமான வேலை வாங்குதல்; மிகக் குறைவான ஊதியம் அளித்தல்; மிகக் குறைவான வசதிகளைச் செய்து கொடுத்தல்; இவற்றாலும் இலாபஞ் சம்பாதித்தார்கள்.

‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்னும் அநீதி பொது மக்களை உறிஞ்சிற்று; உழைப்பாளர்களை உறிஞ்சிற்று.

பொதுமக்கள்—ஒட்டாத ஆற்று மணல்கள். பாட்டாளிகள் அப்படியல்ல. மெல்ல மெல்ல களிமண்ணைப் போன்று ஒன்றுபட்டு, இயங்கக் கற்றார்கள். தங்களுக்கு வசதிகள் வேண்டுமெனக் கோரினார்கள். வேலைப் பளுக் குறைப்புக்குக் குரல் கொடுத்தார்கள். ஊதிய உயர்வுக்குக் கிளர்ச்சி செய்தார்கள். முற்காலத்தில், இவை பல வேளை பலிக்காவிட்டாலும், சில வேளை பலித்தன.

இருப்பினும், பெருகி வரும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்குப் பரிகாரம் கிடைக்கவில்லை. பொதுமக்கள் சுரண்டப்படுவது நிற்கவில்லை.

அறிஞர்களில் சிலர், புது வழிகளில் சிந்தனையைச் செலுத்தினார்கள். அக்காலத்தில் உலகளாவியிருந்த தனியுடைமை முறையைப் பற்றிச் சிந்தித்தார்கள். அதன் தீய விளைவுகளை இனம் கண்டு கொண்டார்கள்.

தனியுடைமை, முதலாளித்துவம் மானுடத்தின் வளர்ச்சியில் சில நிலைகள் அவ்வளவே! இவையே முடிவான நிலைகள் அல்ல. இந்நிலையைத் தாண்டி, மானுடம் வளர வேண்டும்.

எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும் நிலை, வெறும் அவாவல்ல. மனித இன ஆற்றலுக்குட்பட்டதே. இந்நிலையைப் பெறுவதற்குத் தேவையான இயற்கை வளம் உண்டு. அதை முழுமையாகப் பயன்படுத்தப் போதுமான உழைக்கும் கரங்கள் உள்ளன. அதற்கேற்ற, அறிவுப் பெருக்கத்திற்குக் குறைவில்லை; நுட்பத் திறனும் பெற முடியும். அடிப்படைத் தேவை ஒன்றே ஒன்று. அது என்ன? மாற்று முறை.

தனித் தனிக் கணக்குகளில் வைத்துக் காக்கும் பல்வகைச் சொத்துக்களைப் பொதுக் கணக்கில் கொண்டு வந்து விடல்; பொதுவாகக் காத்தல்; நிர்வகித்தல்; எல்லோரும் பங்கு போட்டுக் கொண்டு உழைத்தல்; எல்லோரும் பங்கு போட்டுக் கொண்டு துய்த்தல். இம்மாற்று முறைக்குப் பெயர் பொது உடைமை.

பொது உடைமைச் சமுதாயத்தை, எல்லோரும் சேர்ந்து நிர்வகிப்பார்கள். அங்கே உயர்ந்தோர் இரார்; தாழ்ந்தோர் இரார்; குபேரர் இரார்; அன்னக் காவடிகள் இரார்; அறிஞர்கள் இருப்பர்; ஆனால் தற்குறிகள் இரார். அத்தகைய புதிய, பொதுஉடைமைச் சமுதாயம் சில அறிஞர்களின் அறிவில் புலப்பட்டது. அதோடு நின்றதா? இல்லை. பொது உடைமை அறிக்கையாக உருவாயிற்று.

1847இல் இலண்டனில் பொது உடைமை வாதிகள் சிலர் கூடினார்கள்; கலந்து பேசினார்கள். அறிக்கையொன்றை உருவாக்கினார்கள். அதன் பெயர் என்ன? ‘கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ’ (பொதுவுடைமை அறிக்கை) என்பதாகும்.

காரல் மார்க்சும், எங்கல்சும், மற்றும் சில அறிஞர்களும் இவ்வறிக்கையை வெளியிட்ட போது, உலகம் விழிப்படையவில்லை. கோடிக்கணக்கானோர் அதைப் பொருட்படுத்தவேயில்லை. அறிவாளிகள் பலர் நுனிப்புல் மேய்ந்தார்கள். ‘நல்ல கற்பனை’ என்று இதை ஒதுக்கி விட்டார்கள்.

புதிய ஏற்பாடு எவர்களுக்கு எட்ட வேண்டுமோ, அவர்களுடைய காதுகளுக்கு எட்டத் தொடங்கியது. தனியுடைமைக் கேடுகளிலிருந்து, மக்கள் இனத்தை விடுவிக்கக் கூடிய சமதர்ம முறை பற்றி, உழைக்கும் தொழிலாளி வர்க்கம் கேள்விப்பட்டது. பல நாட்டுப் பாட்டாளிகள் கேள்விப்பட்டார்கள். எல்லோரும் இல்லாவிட்டாலும், பல பாட்டாளிகள் இதைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினார்கள்.

கடலெனப் பெருகி வரும் உலக மக்களுக்குத் தனியான சமுதாயக் கடமையொன்று இருப்பதை உணரத் தலைப்பட்டார்கள். ஊதியத்திற்காகப் போராடுவது குழுக் கடமை. அவ்வளவே! அதற்கு மேற்பட்ட தனிக் கடமை பாட்டாளிகளின் தோள்களில் இருக்கிறது. அது என்ன?

பொதுச் சமுதாயம் முழுவதற்குமான நல்வாழ்வுக்காகப் போராடுதல். அப்போராட்டத்தின் முன்னணியில் நிற்க வேண்டியவர்கள் உழைக்கும் மக்களே. சமதர்மத்தைப் பெற்றெடுப்பதில், மற்றவர்களுக்கு இல்லாத பெரும் பொறுப்பு, உழைக்கும் மக்களுக்கு உண்டு. இவற்றை உணர்ந்த பாட்டாளிகளின், குடியானவர்களின் துணையோடு, பின்பற்றுதலோடு, மாமேதை லெனின் உலகப் புகழ் பெற்ற அக்டோபர் புரட்சியை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அது வரை, உலகம் கண்டிராத சமதர்ம ஆட்சியை— அதுவும் பாட்டாளிகளால் நடத்தப்படும் ஆட்சியை நிறுவினார். இரஷ்யப் பெருநாட்டில், பல்வேறு பக்கங்களிலும் தூண்டி விடப்பட்ட உள்நாட்டுப் போர்களையும், பதினான்கு வல்லரசுகளின் படையெடுப்புகளையும் சமாளித்து முறியடித்தார்.

பாட்டாளி ஆட்சி புல் அல்ல; சமதர்ம ஆட்சி நாணல் அல்ல; இரண்டும் காலத்தின் தேவை; உயிர்த் துடிப்பும், எல்லையற்ற வலிமையும் கொண்டவை; எதையும் வெல்லும் ஆற்றல் மிக்கவை என்று மெய்ப்பித்துக் காட்டினார் மாவீரர் லெனின்.

புரட்சியென்ற சொல்லைக் கேட்டாலே நடுங்குவோர் கோடி கோடி. அவர்களுக்கு ஒரு விளக்கம் :

உலகைக் குலுக்கிய அக்டோபர்ப் புரட்சி பத்து நாள்கள் நடந்தன. அப்பத்து நாள்களில் இரு தரப்பிலுமாக இழந்த உயிர்கள் ஒன்பதே. நாள் தோறும், சாலை விபத்துக்களில், பல நூறு ஒன்பது உயிர்களை நாம் இழக்கவில்லையா? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆனால், நாடு தழுவிய எதிர்ப் புரட்சிகளும், வெளிநாடுகளின் படையெடுப்புகளும், நான்காண்டு தொடர்ந்த போதே, அந்நாடு இலட்சக்கணக்கான உயிர்ப் பலி கொடுக்க நேர்ந்தது. புரட்சியென்றால், உயிர்க் கொலை, இரத்த ஆறு முதலியவற்றை இணைத்துக் கொண்டு மிரளுவோர், இதைச் சிந்திக்கட்டும்.

1930க்குள் சோவியத் சமதர்ம ஆட்சி, பரிசோதனை நிலையைத் தாண்டி விட்டது; நிலையான வாழ்க்கை முறையாகி விட்டது. எழுத்தறிவு பெறாத முதியோர்க்கெல்லாம் எழுத்தறிவு கொடுப்பதில், வெற்றிக் கோட்டை நெருங்கி விட்டது. எல்லோர்க்கும் வேலை கொடுப்பதிலும், வெற்றி நிலையை எட்டிக் கொண்டிருந்தது. இவை சமதர்ம முறையின் சிறப்பினை உலகறியச் செய்தது.

தன்மான இயக்கத்தின் தந்தை, பெரியார் ஈ.வெ.ராமசாமி சமதர்மக் கொள்கையை ஏற்றுக் கொண்டார். காலத்தின் கருவூலமாகிய இம்முறையைப் பரப்புவதில் முனைந்தார். பிறவி ஏற்றத் தாழ்வைத் தகர்க்கத் துணிந்த சிந்தனைக்குச் செல்வ ஏற்றத் தாழ்வைத் தாக்க முற்படுவது இயல்பாக அமைந்தது.

விளைவு? 1931 ஆகஸ்டில், விருதுநகரில் நடந்த மூன்றாவது மாகாண சுயமரியாதை வாலிபர் மாநாட்டில், வெளிப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பெரியாரும்_சமதர்மமும்/09&oldid=1690020" இலிருந்து மீள்விக்கப்பட்டது