பெரியாரும் சமதர்மமும்/19
19. சமதர்மத் திட்டம் : நீதிக் கட்சி
ஏற்றது—காங்கிரசு மறுத்தது
அரிமா, அச்சம் அறியாதது. தன்மான இயக்கத்தின் தந்தை. சிறைக்கஞ்சாச் சிங்கம். எனவே, பொது உடைமைக் கொள்கையைப் பரப்பியதற்காகச் சிறைப்படினும், அப்பணி நிற்கவில்லை. அது தொடர, வழிவகை செய்ததை முன்னர் கண்டோம். ஈ.வெ. ராமசாமி சிறையிலிருந்து விடுதலை பெற்று வந்த பிறகு, திருப்பூர் செங்குந்தர் மாநாட்டில், சமதர்ம முழக்கம் எழுப்பியதைக் கண்டோம்.
‘புரட்சி’ வார இதழ் வாயிலாகவும், மேடைப் பேச்சுகளின் வழியாகவும், சமதர்மக் கொள்கையைப் பெரியாரும், அவரது பெருந்தொண்டர்களும் பரப்பி வரும் வேளையில், தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற பெயருடைய நீதிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டமொன்று, சென்னையில் 1934 ஆம் ஆண்டு, ஜுன் 7,8 நாட்களில் நடக்குமென்று அறிவிக்கப்பட்டது. அக்கட்சியின் பேராதரவாளரான, ஈ. வெ. ராமசாமிக்கும் அழைப்பு வந்தது. அக்கட்சியை எடை போடவும், அதை எதற்குப் பயன்படுத்த வேண்டுமென்று வழி காட்டவும், அவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டார் பெரியார்.
‘புரட்சி’ இதழில் ஈ.வெ.ராமசாமி பின் வருமாறு எழுதினார்;
‘ஜஸ்டிஸ் கட்சியானது அரசியலிலும், சமூக இயலிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், வாழ்க்கைப் போட்டியில், சமசந்தர்ப்பம் இல்லாத மக்களுக்கும், விடுதலையும், சமத்துவமும் அளிப்பதற்காக என்று தோற்றுவிக்கப்பட்டது என்கிற உண்மை, யாவரும் அறிந்ததாகும். அப்படிப்பட்ட ,ஜஸ்டிஸ் கட்சியானது, இப்போது, நாளடைவில் செல்வந்தர்களான முதலாளிமார்கள், ஜமீந்தார்கள் ஆதிக்கத்திற்குள்ளாகி, அவர்களது நன்மைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும், பெருக்கிக் கொள்ளவுமான வழிகளுக்கே பயன்படக் கூடிய மார்க்கங்களில் திருப்பப்பட்டு வருகின்றது என்ற விஷயம் பார்ப்பனரல்லாத மக்களில் பெரும்பான்மையோர் அறிந்ததாகும்.அன்றைய நிலையைத் துல்லியமாக மதிப்பிட்ட, ஈ.வெ. ராமசாமி, அக்கட்சியைச் சரியான வழிக்குக் கொண்டு வரலாமென்று நம்பினார். அவர் எழுதியதை இப்போது படிப்போம்.
‘ஆனாலும், அதை (ஜஸ்டிஸ் கட்சியைப் பழையபடி), தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மக்கள் விடுதலைக்கும், சமத்துவத்துக்கும் திருப்ப முடியாது என்று சொல்லி விடுவதற்கில்லை, என்பது இன்னமும் நம்முடைய கருத்தாகும்.
‘மக்கள் ஒரு கட்டுப்பாடாய் இருந்து, நெருக்குவார்களானால், அவர்கள் வழிக்கு வந்து, கட்சியின் உண்மை நோக்கத்திற்கு உழைக்க முன் வந்தாலும் வரலாம்.’
அக்காலத்தில் தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில், தாழ்த்தப்பட்டவர்களின் மேல் சுமத்தப் பட்டிருந்த இழிவையும், ஏழைகளின் மேல் திணிக்கப்பட்டிருந்த வறுமைக் கொடுமையையும் ஒருங்கே தூக்கியெறியத் துடித்தவர்கள், பிற கட்சிகளை விடப் பெரியாரின் கட்சியில்தான் ஏராளமாக இருந்தார்கள். அன்று சாதியொழிப்பிற்கு, நீதிக் கட்சியாளரிடையே இருந்த அளவு ஆதரவு கூட, தமிழ் நாட்டின் பிற அரசியல் கட்சிகளிடம் இல்லை. எனவே, ஈ.வெ. ராமசாமி முழு நம்பிக்கையோடு, ஈரோடு சுயமரியாதைச் சமதர்மத் திட்ட அடிப்படையில், நீதிக்கட்சியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு, ஒரு செயல் திட்டத்தை அனுப்பி வைத்தார். புரட்சிகரமான அத்திட்டம் என்ன சொல்லிற்று?
1. பொது மக்களின் சேவைக்கும், சௌகரியத்துக்கும், நன்மைக்கும் அவசியமென்று உற்பத்தி செய்யப்படும் சாமான்களின் தொழிற்சாலைகள், இயந்திர சாதனங்கள், போக்கு வரவு சாதனங்கள் முதலியவை அரசாங்கத்தாராலேயே நடைபெறும்படிச் செய்ய வேண்டும்.
2. உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும், அவற்றை வாங்கிப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் இடையே தரகர்கள், லேவாதேவிக்காரர்கள் இல்லாதபடி, கூட்டுறவு அமைப்புகளை ஏற்படுத்தி அவற்றின் வழியாக விவசாயிகளின் துன்பங்களையும், சாமான் வாங்குபவர்களின் நஷ்டத்தையும் ஒழிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
3. விவசாயிகளுக்கு இன்று உள்ள கடன்களை, ஏதாவது ஒரு வழியில் தீர்ப்பதுடன், இனிமேல் அவர்களுக்குக் கடன் தொல்லை ஏற்படாமல் இருக்கும்படியும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
‘அரசாங்க உத்தியோகச் சம்பளங்கள், மக்களின் பரிசுத்த தன்மையைக் கெடுக்கக் கூடியதாகவும் இந்தியப் பொருளாதார நிலைமைக்கு மிக மிக தாங்க முடியாததாகவும் இருப்பதால், அவைகளைக் குறைத்து, உத்தியோகஸ்தர்களுடைய வாழ்க்கையின் அவசிய அளவுக்கு ஏற்றதாகவும், மீத்துப் பெருக்கி வைப்பதற்கு லாயக்கில்லாததாகவும் இருக்கும்படிச் செய்ய வேண்டும்.’
தன்னாட்சி இந்தியா, உற்பத்திச் சாதனங்களைச் சமுதாய உடைமையாக்கத் தவறிய போதிலும், இலாபத்திற்கு உச்ச வரம்பு, சம்பளத்திற்கு உச்ச வரம்பு, சொத்துக்கு உச்ச வரம்பு ஆகியவற்றைக் கொண்டு வந்து நடைமுறைப் படுத்தியிருந்தால், நம் பொருளியல் நிலை இவ்வளவு படுமோசமாகியிராது.
நாட்டுடைமையானவை ஊட்டத்திற்குப் பதில் நலிவை வளர்த்திருக்காது. வேலை வாய்ப்பு வாய்க்கால்கள் அடைபட்டுப் போன நிலை உருவாகியிருக்காது. வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளோர், இவ்வளவு பெருகியிருக்க மாட்டார்கள். தேர்தலை மட்டும் சிந்தித்துக் கொண்டிருக்கும் எந்த இந்திய அரசியல் கட்சியும், வரம்புகள் கட்டும் சூழ்நிலையைக் கூட உருவாக்கப் போவதில்லை.
ஈ.வெ. ராமசாமி நீதிக் கட்சியின் ஆலோசனைக்கு அனுப்பிய திட்டத்தில், மத நம்பிக்கை பற்றியும் குறிப்பிட்டார். அந்த ஆலோசனை என்ன?
‘மதங்கள் என்பவைகள் எல்லாம், அவரவர்களுடைய தனி எண்ணமாகவும், தனி அமைப்புகளாகவுமே இருக்கும்படிச் செய்வதுடன், அரசியலில், அரசியல் நிர்வாகத்தில், அவை எவ்வித சம்பந்தமும், குறிப்பும் பெறாமல் இருக்க வேண்டும். சாதிக்கென்றோ, மதத்திற்கென்றோ எவ்வித சலுகையோ, உயர்வு, தாழ்வு நிலையோ, அவற்றிற்காக அரசாங்கத்திலிருந்து தனிப் பட்ட முறைகளைக் கையாளுவதோ, ஏதாவது பொருள் செலவிடுவதோ ஆகியவை கண்டிப்பாய் இருக்கக் கூடாது.
சமதர்மத்தின் இன்றியமையாத கூறு, இரண்டறக் கலந்த கூறு, எது? சாதி பற்றியோ, மதம் பற்றியோ எவருக்கும் சலுகை தராமை. இப்போதுள்ள சலுகைகள் பற்றிப் புழுங்குவோர், கூப்பாடு போடுவோர், எதிர்த்துப் போராடத் துடிப்போர், சமதர்மத்திற்குப் போராடினால், அப்போராட்டத்திற்குப் பொருள் உண்டு. இல்லாவிடில், சுரண்டல் கூட்டத்தின், பங்கு சண்டை என்ற அளவில்தான் அது முடியும். அது எல்லோரையும் வாழ்விக்கப் பயன்படாது.
‘மனிதன் ஆயிரங் காலத்துப் பயிர்’ என்பது உலக வழக்கு. தனி மனிதனுடைய வயது. அதிகம் போனால், நூறு ஆண்டுகள். மக்கள் இன வயது அதற்கு மேலும். மனிதர்கள் மறைந்த பிறகும், இனம் தொடரும்; பல்லாயிரம் ஆண்டுகள் தொடரும், இதை நினைவுபடுத்துவதே மேற்கூறிய வழக்கு. சரி, அது நமக்குக் கற்பிக்கும் பாடம் என்ன?
நெம்பு கோல், தேரை நிலையிலிருந்து கிளப்பி விடலாம். அதே போல், சில தலைவர்களின் நெம்புதலால், தேங்கிக் கிடக்கும் சமுதாயம் நகரலாம். நகர்த்துவதற்கு உறுதியும், கூர்மையும் உடைய சிலர் போதுமானவர்களாக இருக்கலாம்.
நம்முடைய சமுதாயத்தின் தேவை என்ன? நகர்தல் அல்ல; தலைகீழான மாறுதலே. அத்தகைய மாறுதலும், ஒரோவேளை, பல முற்போக்காளர்களின் முயற்சியால் நிகழலாம். அது போதாது. அது நிலைத்து நிற்க வேண்டும். நிலையான தலைகீழ் மாற்றத்திற்கு வேர் எது? கல்வி அறிவு. அக்கல்வி அறிவின் உட்கரு எது? எழுத்தறிவு.
தன்னாட்சி இந்தியாவின் பெரியவர்கள் இதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.
’மந்திரத்தால் மாங்காய் விழும்’ என்பதை நம்பாத, காரண, காரியங்களின் தொடர்புகளை உணர்ந்த, பகுத்தறிவுப் பகலவனாகிய ஈ. வெ. ராமசாமி, அவை உருவாக என்னென்ன தேவை என்பதைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை.
சமதர்ம ஆட்சி முறைக்கு உயிர் நாடியான அறிவுக்கு வழி செய்வதையும், ஈ.வே ராமசாமி தமது திட்டத்தில் சேர்த்தார்.இதோ அப்பகுதி :
‘குறிப்பிட்ட ஒரு காலத்துக்குள், குறிப்பிட்ட ஓர் அளவு கல்வியாவது, எல்லா மக்களுக்கும் ஏற்படும்படியாகவும் செய்வதுடன், இது நடந்து வருகிறதா என்பதையும் அடிக்கடிக் கவனித்து, தக்கது செய்ய, ஏற்பாடு செய்ய வேண்டும்.
சமுதாய மாற்றத்திற்குச் சரியான, முறையான, கல்வியின் பங்கு மிகப் பெரியது. அத்தகைய கல்வியை உறுதிப்படுத்தாமல், நடக்கும் எந்த மாற்றமும், நெடுநாளைக்கு நிலைக்காது. அதை உணர்ந்தவர்களில், முன்னே நிற்பவர் மாமேதை லெனின்; அவருக்கு இணையாகத் தோன்றுபவர் ஈ.வெ. ராமசாமி.
புரட்சிப் புகை மண்டியிருந்த போதும், சமதர்மக் குழந்தை வாழ்விற்குப் போராடிக் கொண்டிருந்த போதும், பொதுக் கல்வியை மறக்காது, அதன் மேல் கருத்தாயிருந்து, வயது வந்தோர்க்கெல்லாம் கல்வியின் வாடை வர விட்ட பெருஞ்சாதனையாளர், லெனின் ஆவார். சாதித்துக் காட்ட வாய்ப்புப் பெறாத, பெரியார் ஈ.வெ. ராமசாமியும், பொது மக்களின் கல்வித் தேவையை நாள்தோறும் சுட்டிக் காட்டினார்; விழிப்பூட்டினார்.
இன்றைய தமிழ்நாட்டில், குடிசை தோறும், கல்வி வேட்கையைக் காண்கிறோம். அவ்வேட்கையை வளர்த்ததில், மற்றவர்களைக் காட்டிலும், தந்தை பெரியாரின் பங்கே அதிகம். அவ்வேட்கையைத் தணிக்கும் பெரும் முன்னோடி முயற்சிகளில், ஏழை பங்காளர் காமராசர், எடுத்துக் கொண்ட நடவடிக்கைகளுக்கு ஈடே இல்லை.
சிங்கத்தை அதன் குகைக்குள்ளே சண்டைக்கு இழுப்பது போலச் செல்வர்கள் நிறைந்த நீதிக் கட்சிக்கு ஈ.வெ.ராமசாமி, சமதர்மக் கொள்கைகளை உள்ளடக்கிய தீர்மானங்களை அனுப்பி வைத்தார்.
நீதிக் கட்சித் தலைவர்களின் கூட்டம், 1934ஆம் ஆண்டு சூன் திங்கள் 7,8 நாள்களில் சென்னையில் நடந்தது. கட்சித் தலைவர் பொப்பிலி அரசர் தலைமை ஏற்றார். ஈ.வெ.ராமசாமி கலந்து கொண்டு ஆலோசனைகள் கூறினார்.
ஈ.வெ.ராமசாமியின் தீர்மானங்களைத் தலைவர் பொப்பிலி அரசர், ஈ.வெ.ரா, ஆர் கே. சண்முகம், டபிள்யூ.பி.ஏ. சௌந்தர பாண்டியன் போன்றவர்களோடு கலந்து பேசி, வேண்டிய சொல் திருத்தங்களோடு நீதிக்கட்சியின் அடுத்த மாநாட்டில் வைப்பதென்று அக்கூட்டம் ஒப்புக் கொண்டது. அது வெறும் கண் துடைப்பா? இல்லை. ஒப்புக் கொண்டபடியே, 1935ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் முதல் வாரத்தில், தலைவர் பொப்பிலி, ஈ.வெ. ராமசாமியையும், மற்றவர்களையும் அழைத்துப் பேசினார். மூன்று நாள்கள் பேசிய பின், தீர்மானங்களை மாநில மாநாட்டிற்கு அனுப்பினார். அம்மாநாடு அவற்றை ஆலோசித்தது. மீண்டும் தனிக் குழுவொன்றிற்கு அனுப்பியது. அதுவும் காலங்கடத்தும் முயற்சியாகப் போய் விடவில்லை. அப்படித் தேங்க விடுவாரா பெரியார்?
தனிக் குழுவின் பரிந்துரைகளோடு அத்தீர்மானங்கள், அடுத்த நீதிக்கட்சி மாநில மாநாட்டில் வைக்கப்பட்டன; ஏற்றுக் கொள்ளப் பட்டன. ஆம்; சமதர்மத் திட்டம், நீதிக்கட்சியால் ஏற்றுக் கொள்ளப்பட்டது,
வேறு பக்கத்தின் போக்கு எப்படியிருந்தது?
இந்திய தேசியக் காங்கிரசு அபேதவாதிகள், சென்னையில் கூடிச், சமதர்மக் கொள்கையை முன்னிலைப் படுத்தி முடிவு செய்ததை, முன்னரே சுட்டிக் காட்டினேன். அத்தகையோர் உறங்கி விடவில்லை. அங்கும், இங்கும் மாநாடுகளைக் கூட்டினார்கள். சமதர்மக் கோட்பாட்டைப் பரப்பினார்கள். சமதர்மம் இல்லாத தன்னாட்சி உரிமை பயனற்றது என்று தெளிவு படுத்த முயன்றார்கள்.
22-10-1934இல் பம்பாயில் காங்கிரசு சமதர்ம மாநாடு நடந்தது. அம்மாநாடு,‘பூரண சுயேச்சை’ என்பதற்கு விளக்கம் தரும் ஓர் முடிவை மேற்கொண்டது. அம்முடிவைப் பார்ப்போம்.
‘உழைக்கும் பொதுமக்களின் கைக்கு ஆட்சியும், அதிகாரமும் வருவது என்பதாகப் பொருள் பட வேண்டும்.’ உழைக்கும் மக்களைச் செல்லாக் காசுகளாக்கவே, வயது வந்தோர்க்கெல்லாம் வாக்குரிமை என்னும் முறையை நம் தலைவர்கள் பிற்காலத்தில் ஏற்றுக் கொண்டார்களோ?
உழைக்கும் மக்களுக்கு, எல்லா அதிகாரங்களையும் மாற்றி விட வேண்டுமென்று பறை சாற்றிய பம்பாய் மாநாடு, பொருளாதார விடுதலையே உயிர் நாடி என்று காட்டுகிறது.‘இந்தியா வேண்டுவது விடுதலை; பட்டினியாகக் கிடக்கும் கோடிக் கணக்கானவர்களுக்குக் குடிக்க கஞ்சி வேண்டும்’ என்ற முழக்கம் அம்மாநாட்டில் ஒலித்தது.
முகவரி இல்லாத எவரோ கூறிய விளக்கமா? இல்லை. அன்றைய காங்கிரசு வட்டாரங்களில், புகழ் பெற்ற திருமதி கமலா தேவி சட்டோபாத்யாயா, சுவாமி முக்தானந்தர் போன்றவர்கள் விடுதலைக்குக் கூறிய சரியான விளக்கம் இது.
ஈ. வெ. ராமசாமி நீதிக் கட்சிக்கு அனுப்பிய சமதர்மத் திட்டங்களை, அப்போதே தமிழ்நாடு காங்கிரசுக் குழுவிற்கு அனுப்பி வைத்தார். எந்தக் கட்சி அவற்றை ஏற்றுக் கொள்கிறதோ, அந்தக் கட்சிக்குச் சுயமரியாதை இயக்கத்தின் ஆதரவு கிடைக்கும் என்றும் அறிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரசு அதைப் பொருட் படுத்தவில்லை. திரு. சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரியார், பெரியாரிடம் நேரில் பதில் உரைத்தார். வகுப்புரிமையை இடைக்கால மருந்தாகச் சேர்த்திருப்பதால், அது காந்தியாருக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லி விட்டார்.
காங்கிரசு அன்று ஏறிட்டுப் பார்க்க மறுத்த சமதர்மத் திட்டத்தை, நீதிக்கட்சி ஏற்றுக் கொண்டபோது, ராசகோபாலாச்சாரியார் என்ன சொன்னார் தெரியுமா?
‘நீதிக்கட்சி இதைச் செறிக்க முடியாது’ என்றார்.
அக்காலச் சிந்தனைகளை நெருக்கமாக அறியாதவர்களுக்கு, இது வியப்பாக இருக்கும். எனவே அக்காலச் சிந்தனையை அறிந்த நான், அக்கால அறிஞர்களின் கருத்துப் போக்கைக் கோடிட்டுக் காட்ட வேண்டும்.
1917ஆம் ஆண்டு அக்டோபரில் நிகழ்ந்த உலகத்தின் மிகப் பெரிய சமதர்மப் புரட்சி, உலகம் முழுவதும் ஆதிக்க சக்திகளை அதிர்ச்சியடையச் செய்தது. நான்கு ஆண்டுகள் தொடர்ந்த உள்நாட்டுப் போர்களும், வெளிநாட்டுத் தாக்குதல்களும் பாட்டாளி ஆட்சியை நசுக்கி விடுமென்று, அவர்கள் மனப்பால் குடித்தார்கள். நடந்ததோ, வேறாக இருந்தது. சமதர்ம ஆட்சி வெற்றி பெற்று விட்டது; வேர் ஊன்றி விட்டது. அது மட்டுமா? பல் துறையிலும் தழைத்தது; போற்றத் தக்க வகையில், அளவில் தழைத்தது இதோ, பானை சோற்றுக்குச் சில சோறு பதம்.1917இல் இரஷ்யாவில் எழுத்தறிவு எவ்வளவு? நூற்றுக்கு இருபத்தைந்து பேர்களுக்கே உண்டு. அது 1920இல் 44.4 விழுக்காடாயிற்று. 1926இல் 52.8 விழுக்காடாயிற்று. அடுத்த அய்ந்தாண்டுகளில் மேலும் தாவிற்று. 1931இல் நூற்றுக்கு 78.6 பேர்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். இதன் பொருள் என்ன? பள்ளி வயதை அடையாத குழந்தைகளும், அய்ம்பது வயதைத் தாண்டி விட்டவர்களுமே, தற்குறிகளாக இருந்தார்கள். எவ்வளவு விரைவான வளர்ச்சி?
அதே போன்று, பெரும்பாலோருக்கு வேலை இல்லை என்ற நிலையும் விரைந்து ஒழிந்தது. 1935க்குள் வேலை செய்யும் வயதில் இருந்த அனைவருக்கும், வேலை கொடுத்து விட்டார்கள்.
அது மட்டுமா? விபசாரம் ஒழிக்கப்பட்டு விட்டது, எவரையும், எவரும் பணம் கொடுத்து வாங்க, துய்க்க முடியாது. ஆண், பெண் சமத்துவம் நடை முறையாகி விட்டது.
இருநூறு ஆண்டுகளிலும், தனியுடைமை நாடுகள் எட்ட முடியாத நிலையை, அந்தச் சமதர்ம நாடு இருபது ஆண்டுகளில் அடைந்து விட்டதைக் கண்ட அறிவாளிகள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் அம்முறையிடம் ஆழ்ந்த அக்கறை காட்டினார்கள்.
கல்லூரி மாணவர்களிடையிலும், அரசு ஊழியர்களிடையிலும், அரசியல் கட்சியாளர்களிடையிலும், எழுத்தாளர்களிடையிலும், முற்போக்குச் சிந்தனையாளர்கள், சமதர்மவாதிகளாகவே இருந்தார்கள். இத்தென்றல் செல்வந்தர்களிடையிலும் வீசிற்று.
அன்று, சோவியத் நாட்டில் மட்டும் நடைபெற்ற சமதர்ம வாழ்க்கை முறை, விரைவில் உலகளாவிய வாழ்க்கை முறையாக மாறி விடும் என்று பல செல்வந்தர்கள் கூடக் கருதினார்கள். தடுக்க முடியாத அம்முறை—புதிய நாகரிகத்தை ஏற்றுக் கொண்டு, அதைப் பரப்புவதே காலமறிந்த அறிவுடைய செயல் என்று எண்ணினார்கள். தொடக்கக் காலத் தியாகங்கள், பொது உடைமை ஆதரவாளர்களைத் தடுத்து நிறுத்த முடியாது என்ற கருத்தினை வளர்த்தது.
தியாகத் தீயில் புடம் போட்ட சக்திகளைப் போட்டி போடும் சக்திகளாக, தேர்தல் கானல் நீரைத் தேடியோடும் சக்திகளாக எளிதில் மயக்கி விட முடியுமென்று அவர்கள் நினைக்கவில்லை போலும். எனவே, பல நிலைகளிலும், பல வட்டாரங்களிலும் ஆர்வமுடைய சமதர்மவாதிகளைக் காண முடிந்தது. சமதர்மக் காற்றின் விளைவுகளில் ஒரு பகுதி சமதர்மக் கவிதைகள்.
முன்னரே சுட்டிக் காட்டியபடி, தோழர் ஜீவானந்தம் கவிதைகள் ‘புரட்சி’யில், பின்னர் வந்த ‘பகுத்தறிவி’ல் வெளியாயின. ஏறத்தாழ, ஈராண்டுக் காலம் ஈ.வெ.ரா. வின் வார இதழ்களில் வாரந் தவறாது, அத்தகைய பாடல்கள் வெளியாயின.
தொழிலாளர் படும் துயரங்களை, அவற்றைப் போக்கும் வழியான சமதர்மப் பொருளியலின் சிறப்புகளை விளக்கும் அப்பாடல்கள், பிழைப்புக் கவிஞர்களால் பாடப்பட்டவையல்ல; கொள்கையின் கொப்பளிப்பில் பாடிய அக்கவிஞர்கள் பலராவர். அவர்களில் ஒருவராகிய கடம்பங்குளம் நாராயணன் என்பவரின் ‘ஏழைகள் முறையீடு’ என்ற பாடலில் ஒரு பகுதியை, உங்கள் முன் வைக்கத் தோன்றுகிறது.
“மாடிவீடு வேண்டாம்—படுக்க
மஞ்சம் மெத்தை வேண்டாம்
ஓடக்கார் வேண்டாம்—தோழா!
உடமைபல வேண்டாம்
பசிக்குணவு வேண்டும்—பாலர்
படிப்பிற்குதவ வேண்டும்
நசிக்கும்வரை யுடலம்—தோழா!
நான் வினையாற்றுகிறேன்
இந்த முறைதனக்கே உலகம்
இசையவில்லை யானால்
எந்த முறை கொண்டும்—தோழா!
இயக்குதல் குற்றமையா!