பெரியாரும் சமதர்மமும்/22
22. கட்டாய இந்தியைப் புகுத்தி
இராஜாஜி திசை திருப்பினார்
பெரியார் உருவாக்கிய சுயமரியாதை சமதர்மத் திட்டத்தில், இரு பெருங் கூறுகள் இருந்தன. முதற் கூறு, இந்நாட்டை மட்டும் பிடித்துள்ள—இந்நாட்டுச் சமயங்கள் அரும் பாடுபட்டுக் காத்து வரும் வருண பேதங்களை, அதாவது, சாதி முறையை ஒழிப்பது ஆகும். இரண்டாவது கூறு, உலக சமதர்ம இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் ஆகும்.
அனைத்திந்திய அளவில் கட்டவிழ்த்து விட்ட அடக்கு முறையால், பொதுஉடைமைக் கட்சி தடை செய்யப்பட்டது. அதே பொது உடைமைக் கொள்கையை, வேறு இயக்கத்தின் சார்பில் பரப்பி வந்த பெரியாரும், அவருடைய அண்ணார், தங்கை ஆகியோரும் சிறைத் தண்டனைக்கு ஆளானார்கள். அரசின் கெடுபிடி நடவடிக்கைகள் ஏற்படுத்திய நெருக்கடியால், பெரியாரின் இயக்கம் அப்போதைக்குச் சாதியொழிப்புப் பணியோடு நின்று விட முடிவு செய்தது.
அப்பணி வெற்றி பெற்றால், சமதர்மம் வெற்றி பெறுவதற்கு நெடுங்காலம் ஆகாது. இதைத் தொலைப் பார்வையுடைய பெரியார் உணர்ந்தார். அவரோடு நெருக்கமாயிருந்த, பிற்கால குத்தூசியார் குருசாமி, அஞ்சா நெஞ்சர் அழகிரிசாமி, அ. பொன்னம்பலனார் போன்றவர்கள் உணர்ந்தார்கள்.
தொலை நோக்கு நம்முடைய தனிச் சொத்து அல்லவே. நமக்குத் தெரிந்த அளவு, இராசகோபாலாச்சாரியாருக்கும் தெரிந்தது. சாதியொழிப்புப் பணி அவருடைய கூட்டத்திற்குப் பெருங்கேடு. அதே போலப் பொது உடைமைக் கோட்பாடும், அவர்களுக்குப் பெருங்கேடு. இரண்டையும் எதிர்த்து ஒழிப்பது எளிதானதல்ல என்று இராசகோபாலாச்சாரியாரின் நுண்ணறிவுக்குப் பட்டது வியப்பல்ல. அடுத்துக் கெடுப்பதற்காகவே, அபேத வாதத்தைத் தானே முன்னின்று அறிமுகப்படுத்திப் பார்த்தார்.இருப்பினும், காங்கிரசுக்காரர்களோ, பிறரோ, அபேதவாதத்திற்கு, இந்தியக் குருநாதராகத் தன்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அவருக்குப் புலனாகி விட்டது. காங்கிரசு அபேதவாதிகள் இவரை விட்டு விட்டு, இயங்கத் தொடங்கி விட்டார்கள். அவர்கள் சார்பில், ஜெயப்பிரகாச நாராயணனே ஈரோட்டிற்கு வந்து, பெரியாரோடு பேசி, அவரை அனைத்திந்திய சமதர்ம இயக்கத்திற்கு அழைத்ததும், இராசகோபாலாச்சாரியாரின் நெஞ்சில், நெருஞ்சி முள்ளாக உறுத்திக் கொண்டிருந்தது.
தற்குறித் தமிழர்களுக்குப், பல தலைமுறைகளாகவே சிந்திப்பதை, மற்றவர்களுக்கு விட்டு விட்ட தமிழர்களுக்குப் பெரியாரின் இயக்கம், சமத்துவத்தையும், சமதர்மத்தையும், பெற்றுத் தரக் கூடிய ஒரே இயக்கம் என்பது புரியா விட்டாலும், இராசகோபாலாச்சாரியாருக்கு, அது துல்லியமாகத் தெரிந்தது.
இராசகோபாலாச்சாரியாரின் நுண்ணறிவு, திசை திருப்பும் திட்டத்தைக் கண்டு பிடித்தது.
நாட்டுப்புறங்களில், எவராவது வளமாக வாழ்வதாகத் தோன்றினால், அக்கம் பக்கத்தாரின் அழுக்காறு, நொடியில் வேலை செய்யத் தொடங்கி விடும். வளர்முகத்தில் தோன்றுபவரை, ஏதாவதொரு வம்பில் சிக்க வைத்து விடுவார்கள். அதிலிருந்து, மீட்டுக் கொள்வதில், அவர் சீரழிந்து விட்டால், வளர்ச்சி பழங்கதையாகிப் போகும்.
தொன்று தொட்டு, நம் குருதியின் அணுக்களில் இரண்டறக் கலந்துள்ள ‘சதி’ புத்தி வேலை செய்தது. ஓடுமீன் ஓட, உறுமீன் வருமளவும் காக்கும் கொக்கென, இராசகோபாலாச்சாரியார் காத்திருந்தார். அருமையான வாய்ப்பு 1937இல் சிக்கியது. சென்னை மாகாணத்திலும், வேறு பல மாகாணங்களிலும், ஆட்சி உரிமைகள் காங்கிரசுக் கட்சியிடம் சிக்கியது. நம் சென்னை மாகாணத்தில், இராசகோபாலாச்சாரியார் முதல் அமைச்சர் ஆனார்; கரடியை அவிழ்த்து விட்டார்.
ஆட்சியைக் கைப்பற்றிய சில தினங்களுக்குள், ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அது என்ன?
அடுத்து வரும் கல்வியாண்டிலிருந்து, நூறு உயர்நிலைப் பள்ளிகளில், கட்டாய இந்திப் பாடம் நடைமுறைக்கு வரும் என்றார். அதுவும் வெள்ளோட்டமே; சில ஆண்டுகளில் எல்லா உயர்நிலைப் பள்ளிகளிலும், கட்டாய இந்தி புகுத்தப்படும் என்றார். அது மிரட்டல். நுனிப்புல் மேய்வோர், இதை இந்தியாவின் மேல் கொண்ட பற்றாகக் கொள்வர். நாம் விருப்பு வெறுப்பின்றி ஆய்வோம்.
எதற்காக இந்தியைக் கட்டாயம் படிக்க வேண்டுமென்றார்? நாட்டின் ஒருமைப்பாட்டிற்குத் தேவையெனப்பட்டது. இந்திய அரசுப் பணிகளில் சேர்வதற்கு உதவுமென்று பறை சாற்றப்பட்டது.
நாட்டின் ஒருமைப்பாட்டை வளர்க்கக் கூடியவர்கள் எவர்? அய்யங்கார் குலத்து அஞ்சல் ஊழியர்களா? இந்திய அரசுப் பணியாளர்களா? அரசு வங்கி அலுவலர்களா? அவற்றில் வேலை செய்யும் கடைநிலை ஊழியர்களா? அரசியல் பெரியவர்களா? உள்ளூர் கொடி கட்டிகளா?
அரசியலிலும், அலுவல்களிலும் அனைத்திந்திய மட்டத்தில் தொண்டு செய்யக் கூடியவர்களே, ஒருமைப்பாட்டை வளர்க்கும் வாய்ப்பினையோ, சிதைக்கும் சூழலையோ பெற முடியும். அரசியலில் வேண்டுமானால், படிப்பு குறைவாக இருப்பதே, நல்ல ஆதாயமாக இருக்கலாம்.
இந்திய அரசு அலுவலகங்களில் சேர்வதற்கு, எந்த நிலை படிப்பாளிகளுக்கு அக்காலத்தில் வாய்ப்பு இருந்தது. மேல் மட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு, வாய்ப்பு இருந்தது. அடுத்துப் பட்டம் பெற்றவர்களுக்கு, ஓரளவு இருந்தது. உயர்பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு? மிக மிகக் குறைவு. எட்டாவதோடு நின்று விட்டவர்களுக்கு? அக்காலத்தில் வாய்ப்பே இல்லை எனலாம்.
இந்நிலையில் ஒன்றை நினைவு படுத்த வேண்டும். அது என்ன? அன்று நாட்டுடைமையாக்கப் பட்ட வங்கி ஒன்றே ஒன்றுதான். அது ‘ஸ்டேட் பாங்க்’ என்றழைக்கப்படுவது ஆகும். அதன் கிளைகள் சிறு நகரங்களுக்குக் கூட எட்டவில்லை. இரயில்வேக்களை ஆங்கிலக் கம்பெனிகள் நடத்தின. ஆயுள் ஒப்பந்தக் கம்பெனிகள்? அக்காலத்தில் தனியார் துறையில் இருந்தன. பிற்காலத்தில் முளைத்துள்ள நாட்டுடைமைத் தொழிற்சாலைகள் 1937இல் இல்லை.அப்படியென்றால், இந்திய அரசுப் பணிகள் எண்ணிக்கையில் மிகச் சொற்பம். அதற்குப் போக விரும்புவோர், பட்டப் படிப்பாவது படித்திருந்தால் சென்னை, நாகை போன்ற துறைமுக அலுவலகங்களில், அஞ்சல் நிலையங்களில் எழுத்தர்களாகலாம். இவர்களுக்கு இந்தி பேசும் பகுதிகளில், வேலை பார்க்க நேரிடுவது அருமையிலும் அருமை. ஆகவே, அவர்கள் ஒருமைப்பாட்டை வளர்க்க இயலாது.
அப்படியிருக்க, எட்டாவது வரை படித்து நின்றவர்கள், இந்திய அலுவலகங்களில் என்ன வேலை பெறக் கூடும். கடைநிலை ஊழியர் வேலைகள் கிடைக்கலாம். அத்தகையோர் எண்ணிக்கை, அன்று ஒரு சில நூற்றுக்கு மேல் ஏறாது. அவர்களும் இந்தி பேசும் பகுதிகளில் பணி புரியப் போவது அத்தி பூத்தது போலவே.
மேல் மட்டப் படிப்போ, பட்டப் படிப்போ பெற்றவர்கள் இந்தி தெரிந்து கொண்டால், எல்லோரும் இல்லாவிட்டாலும், சிலராவது அதைப் பயன்படுத்தி, ஒருமைப்பாட்டை வளர்க்க வாய்ப்புப் பெறுவார்கள்.
அன்றைய நிலையில், பதினோராவது வரையில் படித்தவர்கள் இந்தி தெரிந்து கொண்டிருந்தால், சூதாட்டம் போலவே இருக்கும். ஆறாவது வகுப்பு படிப்பவர்கள் இந்தியைக் கற்றுக் கொண்டால், அதைப் பயன்படுத்தி அன்று எந்த இந்திய அரசின் பணிக்குப் போயிருக்க முடியும்? எத்தனை முறை இந்தி மாநிலங்களுக்குச் செல்லக் கூடும்? எந்த அளவிற்கு, இந்தி மக்களோடு அளவளாவி ஒருமைப்பாட்டை வளர்த்திருக்க முடியும்? கடலிலே பெருங்காயம் கரைத்த அளவிற்கே பயன் கிட்டியிருக்கும்,
ஒருமைப்பாட்டை வளர்க்க இந்தி என்றிருந்தால், பிற காங்கிரசு ஆட்சி மாகாணங்களில், இந்தியை ஏன் கட்டாயப் பாடமாக்கவில்லை? மற்றவர்களுக்கு இல்லாத அக்கறை நம் இராசகோபாலச்சாரியாருக்கு மட்டும் ஏற்பட்டு விட்டதாக நம்பாதீர்கள். அத்தகைய பயனுக்காக, இந்தியைக் கட்டாயமாக்க விரும்பினால், அதை மேல் மட்டப் படிப்புக்குக் கட்டாயப்படுத்தி இருப்பார். குறைந்த அளவு உயர்நிலை வகுப்புகளில் கொண்டு வந்திருக்க வேண்டும். அதையும் விட்டு விட்டு, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இந்தி கட்டாய பாடம். ஆறாவது வகுப்பில், இந்தியில் போதிய மதிப்பெண் பெறா விட்டால் ஏழாவது வகுப்புக்குப் போக முடியாது என்பதே அவருடைய திட்டம். ஓராண்டு தவறியவனை, அடுத்த ஆண்டு படிக்க விடுவது அக்காலத்தில் அருமை. ஏதோ சில உயர்நிலைப் பள்ளிகளில் மட்டுமே இரண்டாம் ஆண்டும் படித்துப் பார்க்க விடுவார்கள்.
கட்டாய இந்தித் திட்டத்தின் உள்ளுறை என்ன?
நாட்டுப்புறங்களிலிருந்து, ஆறாம் வகுப்பிற்கு வந்து சேரும் பதினாயிரக்கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் புதிதாக இரு மொழிகளை—ஆங்கிலத்தையும், இந்தியையும் படிக்க வேண்டும். இரண்டிலும் தேர்ச்சி பெற வேண்டும்.
இல்லா விட்டால், மாடு மேய்க்க, விறகு பொறுக்க, துணி வெளுக்க, மூட்டை தூக்கப் போக வேண்டும்.
தப்பித் தவறி, சிலர் இந்தியிலும் தேர்ச்சி பெற்றால், ஒன்பதாவதில் தொடர்ந்து படிக்க வாய்ப்பு கிடையாது; ஒன்பதாவதிலோ, பத்திலோ, பதினொன்றிலோ விருப்பப் பாடமாகப் படிக்கவும் இடம் இல்லை. அந்நிலையில் இந்தி அறிவு எவ்வளவு காலத்திற்குப் பசுமையாக இருந்து, ஓருமைப்பாட்டை வளர்க்கவோ, வேலை வாங்கவோ பயன்படுமென்பதைச் சிந்தியுங்கள்.