பெரியாரும் சமதர்மமும்/24
24. தமிழ்நாடா? திராவிட நாடா?
மக்கள் இன நல்வாழ்விற்கு, நிறை வாழ்விற்கு, ஏற்ற ஒரே வாழ்க்கை முறை சமதர்மப் பொருளியல் முறையாகும். அக்கோட்பாட்டினைப் பட்டி, தொட்டியெல்லாம் பரப்பியதற்காகப் பெரியார், ஆங்கில ஆட்சியால் தண்டிக்கப்பட்டுச் சிறைக்குள் தள்ளப்பட்டார். அரசின் அடக்கு முறை, சமதர்ம உணர்வை வெளிப்படுத்தாமல், சாதியொழிப்பில், மூடநம்பிக்கை யொழிப்பில், தன்மான இயக்கத்தை முனைய வைத்ததை முன்னர் கண்டோம். இந்திப் பாடத்தைக் கட்டாயமாக்கி, தமிழரின் எதிர்ப்பைக் கிளறி விட்டு, தமிழ் மக்கள், தொடர்ந்து சமதர்மச் சிந்தனைக்குப் போகாதபடி, திசை திருப்பியதையும் ஏற்கனவே கவனித்தோம்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது, பொங்கிய ஓர் உணர்வு, உருப்பெற்ற ஒரு கோட்பாடு, முட்டுச் சாலையாக முடிந்தது.
கட்டாய இந்திப் பாடத்தை எதிர்த்து நடந்த போரட்டத்தின் போது, திருச்சியிலிருந்து, நூறு பேர்களைக் கொண்ட படையொன்று, கால்நடையாகவே, சென்னை வந்து சேர்ந்தது. அப்படை வழி நெடுக, பல ஊர்களில் கூட்டங்களை நடத்தி, கட்டாய இந்தியால் விளையக் கூடிய தீமைகளைப் பற்றி விளக்கி வந்தது. அது பற்றிப் பொதுமக்களின் உணர்வு எப்படியிருந்தது? எழுச்சியூட்டும் ஆதரவைத் தருவதாக இருந்தது.
அப்படை, சென்னை வந்தடைந்த போது, என்றும் நினைத்து, ஊக்கம் பெறும் வகையில் ஆர்வமிக்க வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்படையினரை வரவேற்கும் பொருட்டு, சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில், பெரியதோர் கூட்டம் கூடியது. அப்பெருங்கூட்டத்தில் தந்தை பெரியார் உரையாற்றுகையில், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற கருத்தை முதன் முதலாக வெளியிட்டு முழங்கினார். அம்முழக்கத்தால், எழுச்சி பெற்றவர்கள் ஏராளம். அதிர்ச்சி கொண்டவர்களும் அநேகர்.
எழுச்சி கொண்டவர்கள், ‘புது வழி கண்டு விட்டோம்; புது வாழ்வு பெற்று விடுவோம்; பிறபகுதி இந்தியர்கள், சமதர்மக் கோட்டைத் தொடுவதற்கு முன்பே, தமிழர்கள் அதை எட்டிப் பிடித்து விடுவார்கள். தென்னகத்தில், எல்லார்க்கும், எல்லாம் கிடைக்கும். பெருவாழ்வு விரைந்து வரும்’ என்று எதிர்பார்த்தார்கள்.
அதிர்ச்சி கொண்டவர்கள், ‘பசுவை வெட்டுவதா? நாட்டைத் துண்டாடுவதா? துரோகம்; தேசத் துரோகம்; தடுப்போம், நாட்டைப் பிரிப்பதைத் தடுப்போம்,’ என்று ஆர்ப்பரித்தார்கள். ‘எலி வலை எலிகளுக்கே’ என்று கேலி செய்தவர்களும் உண்டு.
‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று பெரியாரும், அவரைப் பின்பற்றுவோரும் குரல் எழுப்பிய போது கூட, ஜின்னாவோ, அவரைச் சேர்ந்தவர்களோ, பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றி பேசவில்லை என்பதை நினைவில் கொண்டு மேற்செல்வோம்.
சென்னை மாகாண பொதுமக்களைத் தட்டி எழுப்பி, அவர்களின் உரிய பங்கிற்காகப் போராடி, ஆறாண்டு காலம் ஊழலற்ற ஆட்சி நடத்தி,தொடக்கக் கல்வி நீரோட்டத்திற்கு உதவிய நீதிக் கட்சி, தமிழர் கட்சியல்ல; அக்கட்சி, தமிழர், தெலுங்கர், கன்னடியர், மலையாளிகள் ஆகிய நால்வருக்கும் உரியதாக இருந்தது. நான்கு மொழியினருக்கும் உரிய நீதிக் கட்சிக்குத் தந்தை பெரியார் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அவர் ‘தமிழர் தலைவர்’ என்ற நிலைக்கு மேல், வளர்ந்து விட்டார்; தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்து விட்டார். அந்நிலையில், பெரியாரின் முந்திய இலட்சியம் வளர்ந்து விட்டது; ‘திராவிட நாடு, திராவிடருக்கே’ என்ற குறிக்கோளாக விரிந்து விட்டது.
தலைவரைச் சிறையில் விட்டு விட்டு, அவரது உருவத்தை மேடையிலிருத்தி, நடவடிக்கைகளை மேற்கொண்ட நீதிக் கட்சியின் மாகாண மாநாடு, அனைவரும் எழுந்து நிற்க, உலகறியக் கொடுத்த உறுதி என்ன? தலைவரின் வழி நின்று, அவரது இலட்சியம் நிறைவேற, அயராது உழைப்போம் உழைப்போம் என்பதே, பல்லாயிரவர் திரண்டு கொடுத்த உறுதி மொழியாகும்.
ஏற்கனவே, காங்கிரசு ஏற்றுக் கொள்ளாத சுயமரியாதை சமதர்மத் திட்டத்தை நீதிக் கட்சி, பொப்பிலி அரசர் தலைமையில் இயங்கிய போது, ஏற்றுக் கொண்டது. அத்திட்டத்தின் முதற் கூறு, வருணப் பிரிவுகளை—சாதி முறையை, ஏற்றுக் கொள்ளாமல், அதை ஓழிக்கப் பாடுபடுவதாகும். மற்றோர் கூறு, அனைத்துலகச் சமதர்ம முறையாகிய உற்பத்திச் சாதனங்கள், போக்குவரத்துச் சாதனங்கள், வங்கிகள் ஆகியவற்றை மக்கள் உடைமையாக்குவதாகும்.
இத்தகைய திட்டத்தை, நீதிக் கட்சி உண்மையாக ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகத்தான், அடுத்த வாய்ப்பில் பெரியாரையே, கட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டது. அவரது குறிக்கோளை நிறைவேற்ற, அயராது பாடுபடுவதாக வாக்குறுதியும் தந்தது.
முப்பது கோடி மக்களைக் கொண்ட இந்தியாவைச் சமதர்ம வழிக்குப் பக்குவப்படுத்திக் கொண்டு வருவதைக் காட்டிலும், எளிதாகவும், விரைவாகவும் நான்கு கோடி பேர்களைக் கொண்ட சென்னை மாகாணத்தை ஆயத்தப் படுத்திவிடலாமென்று, பெரியாரும், அவரைப் பின்பற்றியவர்களும் நம்பினார்கள். அந்நம்பிக்கை, வெறும் அவாவில் எழுந்ததல்ல. அக்கால கட்டத்தில், அப்படி நம்புவதற்குச் சில காரணங்கள் இருந்தன. அவற்றைப் பார்ப்போம்.
அப்போதைய நிலையில், கேரளத்திலும், தமிழ்நாட்டிலும், பெரியாருடைய சாதிக் கலைப்பு, சமதர்மத் திட்டம், ஆகிய இரண்டிற்கும், நல்ல வரவேற்பு இருந்தது. இரு பகுதிகளிலும், பொதுமக்களுடைய நம்பிக்கைக்கும், மதிப்பிற்கும் உரியவர்களாக வாழ்ந்த பெரியவர்கள், பெரியாருக்கு வேண்டியவர்களாக விளங்கியது போலவே, அவரது கொள்கைக்கு ஆதரவோ, பரிவோ காட்டுபவர்களாக இருந்தார்கள். ஆநதிரா, கர்னாடகா பகுதிகளிலும் பெரியார் ஓரளவு அறிமுகமானவராக இருந்தார்.
தெரிந்த தலைவர், தியாகம் பல புரிந்த செல்வர், புதிய இலட்சியங்களுக்காகத் தொடர்ந்து தியாகம் புரியத் தயங்காத சிறைப் பறவை, அஞ்சாமையில் அரிமா, இப்படிச் சுடர் விட்ட தந்தை பெரியார், முன்னின்று நடத்தும் சமதர்மப் போராட்டம், தென்னகத்தைப் பொறுத்த மட்டில், வெற்றி பெறும் வாய்ப்பு இருந்ததாகத் தோன்றியது. தமிழ்நாட்டில், 150 சமதர்மச் சங்கங்கள் அமைக்க முடிந்ததே! திராவிட நாடு பிரிந்து விட்டால், சமதர்ம ஆட்சியை நிறுவுவது எளிதாகி விடும் என்று நம்பியதால், புது மழைக்குப் பின் தலை நீட்டும் பசும்புற்கள் போல், திராவிட நாட்டுக் கோரிக்கையைப் பெரியார் இயக்கத்தவர்கள் எழுச்சியோடு வரவேற்றார்கள். எந்த அளவிற்கு?உலகப் போர் நடந்து கொண்டிருக்கையிலேயே, 4-8-1940இல் திருவாரூரில் நடந்த நீதிக் கட்சியின் 15ஆவது மாகாண மாநாட்டில், சென்னை மாகாணத்தை ஒரு தனி நாடாகப் பிரிக்கப்பட வேண்டுமென்று முடிவு செய்யும் அளவிற்கு ஆதரவு இருந்தது.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இழிவுக்கு ஆளாகி, வறுமைக்கு ஆட்பட்டுத் தற்குறித் தன்மையில் வீழ்ந்து, புரோகிதனும், மற்றவனும் சுரண்ட, தவித்துக் கொண்டிருந்த பொது மக்கள், சமதர்ம வழியை, விடுதலை வழியாக—வாழ்வளிக்கும் பெருவழியாகக் கருதினார்கள்.
திருவாரூர் மாநாட்டில், திராவிட நாட்டுப் பிரிவினைக்கு வேண்டிய திட்டங்களைத் தயாரிக்க, திட்டக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அக்குழுவில் பெரியாரோடு, தோழர்கள் பி.டி. இராசன், கன்னையா (நாயுடு), பி. இராமச்சந்திர (ரெட்டி) இருவரும் ஆந்திரர்கள், எம்.ஏ.முத்தையா (செட்டியார்), என். ஆர். சாமியப்பா, நாராயணசாமி (நாயுடு), அப்பாதுரை (பிள்ளை), ஏ. துரைசாமி, மகாபல ஹெக்டே (கன்னடியர்) பி. பாலசுப்ரமணியம், சி.பாசுதேவ், கி.ஆ.பெ.விசுவநாதன், ஊ.பு.த.சௌந்தர பாண்டியன் ஆகியோர் இருந்தனர்.
பிரிவினை எண்ணத்தின் பின்னணி என்ன?
நெடுந்தொலைவில் இருந்து, இந்தியாவிற்கு வந்து, வணிகங்களைத் தொடங்கி, மெல்ல, மெல்ல, ஆட்சியாளர்களாக மாறிய ஆங்கிலேயர்கள், இந்திய அரசுரிமையைக் கைப்பற்றிய போது, இந்திய நாடு முழுவதையும், ஒரே மன்னரிடமிருந்தோ, ஆட்சியிடமிருந்தோ பறித்துக் கொண்டார்களா? இல்லை. பல அரசர்களிடமிருந்து கைப்பற்றினார்கள். ஆங்கிலேயர் வந்த போதோ, அதற்கு முந்திய எக்காலத்திலோ, இந்திய நாடு முழுவதும் ஒரே குடைக் கீழ் ஆளப்படவில்லை.
ஊரில் ஓர் வீடு, அண்ணன் தம்பிகள் நால்வர்; அவர்கள் தனித் தனிக் குடும்பம் நடத்தினர். அவர்களுக்குள் அழுக்காறு, சண்டையாகி, அன்னியர் தலையிடும் நிலையை உருவாக்கிற்று, நால்வர் சொத்துக்களையும், பொதுவான ஒருவர் ஏற்றுப் பராமரிக்கும் நிலை, சில காலம் இருந்தது. அச் சொத்துக்களை திருப்பிக் கொடுத்து விடும் காலம் வந்த போது, ‘மொத்தமாகக் கொடுத்து விட்டு ஓடாதே; அவர் அவரிடமிருந்து எடுத்ததை, அவர் அவரிடமே கணக்குச் சொல்லி, கொடுத்து விட்டுப் போ’ என்று சொல்ல மாட்டோமா?
அதைப் போலவே, ‘எத்தனையோ மன்னர்களிடமிருந்து பறித்த ஆட்சி உரிமையை, அந்தந்தப் பகுதி மக்களிடம் ஒப்படைத்து விட்டுப் போ’ என்று கேட்கத் தோன்றிற்று.
இத்தகைய சிந்தனை, அரசியல் உலகில், எங்காவது எழுந்தது உண்டா? உண்டு. எங்கே எழுந்தது? சோவியத் நாட்டில் எழுந்தது; செயல்பட்டது. எப்போது? எப்படி?
இரஷ்ய மக்களின்—மன்னராகத் தோன்றிய சார், அக்கம் பக்கத்தில் இருந்த பிற மன்னர்களை, ஆட்சிகளைக் கவிழ்த்து விட்டு, பல இன மக்களை சாரின் பேரரசில் இணைத்து, அடக்கி வைத்திருந்தான். இது இந்திய மக்களை, ஆங்கிலேயர் ஒரு கூண்டுக்குள் அடைத்து ஆண்டதற்கு ஒப்பாகும்.
1917 அக்டோபரில் வெடித்த, உலகத்தின் மாபெரும் புரட்சி, சார் ஆட்சியைத் தொலைத்தது; பாட்டாளி ஆட்சியை அமைத்தது; சமதர்ம ஆட்சியைக் கொண்டு வந்தது. அதோடு நிற்கவில்லை. சிலருக்குத் தனி நாடு தந்தது. அக்டோபர் புரட்சியின் தலைவரும், சோவியத் முறையின் தந்தையுமான, பிரதமர் லெனின், சார் பிடித்த மண்ணெல்லாம் புதிய ஆட்சியில் இருக்க வேண்டுமெனக் கூறி, அடக்கி வைக்க முயன்றாரா? இல்லை. மாறாக, இரஷ்யரல்லாத பிற இன மக்களுக்கு, சுய நிர்ணய உரிமை உண்டு. அவர்கள் விரும்பினால், இரஷ்யாவிலிருந்து பிரிந்து போகலாம்; தங்களுக்கேற்ற ஆட்சி முறையை அமைத்துக் கொள்ள, அவர்களுக்கு உரிமை உண்டு என்று அறிவிப்பு செய்தார்.
அது ஏட்டு அறிவிப்பு அல்ல; நடைமுறைக்கு வந்த உரிமையாகும். அவ்வுரிமையைப் பயன்படுத்தி, எஸ்பெக்கியர், அர்மீனியர் போன்றவர்கள், இரஷ்யாவிலிருந்து பிரிந்து போனார்கள். தனியாட்சி நிறுவிக் கொண்டார்கள்; சமதர்ம ஆட்சியை உருவாக்கிக் கொண்டார்கள்; சில ஆண்டுகளுக்குப் பிறகு, பெரிய சமதர்ம ஒன்றியம் மிக நல்லது என்று அவர்கள் எண்ணித் தாமாகவே, சமத்துவ அடிப்படையில் இரஷ்ஷிய சமதர்ம சோவியத் கூட்டாட்சியோடு இணைந்து கொண்டார்கள். பிரிந்தவர் கூடினும், தனித் தனிக் கொடியோடு, சோவியத் ஒன்றியத்தில் வாழ்கிறார்கள்.
மாமேதை லெனின், பல்வேறு இனங்களுக்கு, சுய நிர்ணய உரிமை வழங்கியதும், சார் ஆட்சியில் அடிமைப்பட்டு, மொழியிழந்து வாழ்ந்த சில இனத்தவர், அவ்வுரிமையைப் பயன்படுத்தியதும், தென்னிந்தியாவில் உள்ள பலரிடையே ஒத்த உணர்வுகளைத் தூண்டியது. இந்தியாவிலிருந்து பிரிந்தால்தான், சாதிக் கொடுமையை, சாதி இழிவை ஒழிக்க முடியும்; சமதர்ம முறையை, சில ஆண்டுகளில் கொண்டு வர இயலும் என்ற மதிப்பீட்டில் எழுந்தது திராவிட நாட்டுக் கோரிக்கை. அது குருட்டுச் சிந்தாக முடிந்தது எதனால்?
எந்த ஒரு குறிக்கோளோ, கோட்பாடோ, திட்டமோ, அதன் உயர்ந்த தன்மையாலோ, அதனுள் பொதிந்துள்ள பெரும் தன்மையாலோ, அதுவாகவே, வெற்றி பெற்று விடாது. நீதிக்குத் துணையாக, வலிமை, வரும் போதே, அது வெற்றி பெற வாய்ப்பு உண்டு. சின்னஞ்சிறு நீதிக்கு, மாறுதலுக்குப் போராட, சிறு வலிமை போதும். பெரியதோர் நீதிக்கு, குறிக்கோளுக்குப் போராட, பெரும் வலிமை தேவை.
அய்ந்தாறு கோடி மக்களின் வருங்காலம் பற்றிய, கோட்பாடே, திராவிட நாடு பிரிவினை கோரிக்கையாகும். அது தென்னக மக்களின் வருங்கால அரசியலை மாற்றும்; பொருளியல் நிலையைத் தலை கீழாகப் புரட்டிப் போடும்; சமுதாயத்தில் நிலவி வந்த பிறவி ஏற்றத் தாழ்வு உணர்வுகளை உடைத்தெறியும் என்று கூறப்பட்டது. அதற்காகவே, நாட்டுப் பிரிவினை கேட்கப்பட்டது. இதில் எவ்வித ஒளிவு மறைவும் இல்லை.
பொதுமக்களிடமிருந்து இதற்குப் போதிய ஆதரவும், தியாகமும் கிடைத்தனவா? இல்லை.
நிலக்கிழார்களும், வட்டிக் கடைக்காரர்களும், வணிகர்களும், பிற செல்வர்களும் சமதர்மம் வந்தால், குடி முழுகிப் போகுமென்று அஞ்சினார்கள். இது இயற்கை. எளிய மக்களும் மிரண்டார்கள். இப்போது கூட, பெட்டிக் கடைக்காரர்களும் வேலையற்ற பட்டதாரிகளுமே, நடைபாதை வாசிகளுமே, சமதர்மம் என்றால், மிரளும் போது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், அவர்கள் நிலை எப்படியிருந்திருக்குமென்று ஊகிக்கலாம்.எந்த ஏழைகளுக்காகச் சமதர்மம் வர வேண்டுமோ, அந்த ஏழைகளே ஆதரவு கொடுக்கத் தவறிய போது, திராவிட நாட்டுப் பிரிவினைக்குப் போதிய வலிமை சேரவில்லை.
சமுதாயத்தின் அடித்தட்டுகளில் உள்ளவர்கள் கூட, தங்களுக்கிடையில் உள்ள உட்பிரிவுகளைக் கலைக்க, இன்றைக்கும் பாடுபடுவதில்லை. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, கேட்கவா வேண்டும்.
பெரியார் இயக்க மாநாடுகளில், எல்லாச் சாதியாரும் சேர்ந்து உட்கார்ந்திருப்பதோடும், கலந்து அமர்ந்து உண்பதோடும், சாதியொழிப்பு உணர்வு நின்று விட்டது. இதுவே கசப்பான உண்மை.
கலப்புத் திருமணங்கள் ஆண்டு தோறும் நடந்தனவே என்று கேட்கத் தோன்றுகிறதா? நடந்தது உண்மை. பத்தாயிரம் பேர்கள் சாதியொழிப்பு மாநாடுகளில் கூடி விட்டு, இரண்டொருவர் மட்டுமே கலப்புத் திருமணத்திற்குக் காரணமாயிருந்தார்கள். சமத்துவ உணர்வு முழுமையான செயல் உருவம் பெறுவதற்குப் போதுமான துணிவுடையவர்கள் ஏராளம் இல்லை.
மெய்யாகவே திராவிட நாடு உருவாகி விட்டால், சாதியொழிப்புச் சட்டம் வந்து விடும்; உற்பத்திச் சாதனங்கள் நாட்டுடைமையாகி விடும் என்று எண்ணற்றோர் உள்ளூர அஞ்சினர்.
அக்கால கட்டத்தில், தமிழ் நாட்டைப் பொறுத்த வரை, பெரியாரிடம் இருந்த ‘தற்கொலைப்’ பட்டாளத்தை விட, சிறந்த பட்டாளம் எவரிடமும் இல்லை. இருப்பினும், அது திராவிட நாட்டைப் பிரித்து வாங்குவதற்குப் போதியதாக இல்லை.
திருவாரூர் மாநாட்டில், திராவிட நாட்டுப் பிரிவினைக்குத் திட்டந் தீட்ட அமைக்கப் பட்ட குழுவின் உறுப்பினர்கள் பட்டியலை மறு முறை படித்துப் பாருங்கள். பெரியார் ஒருவர்தானே சிறைக்கஞ்சாத சிங்கம்: எத்தகைய விலையையும் கொடுக்கத் தயங்காத பெருந்தியாகி.
மற்றவர்கள்? அனைவரும் மேடை முழங்கிகள் கூட இல்லை. பாதிப் பேர்கள் போல பேச்சாளர்கள்; களங்காணாத பேச்சாளர்கள். அவர்களில் அநேகர் பொதுமக்களின் பார்வைக்கும் கிட்டாதவர். அத்தகையோர், மக்களிடம் எப்படி எழுச்சியூட்ட முடியும்? போதிய போராட்ட உணர்வினை வளர்க்க முடியும்? புதிய பிரிவினைத் திட்டத்திற்குத் தேவையான அளவு சூடு பிடிக்காவிடினும் பழைமை விரும்பிகள், இப்போது உள்ள பொருளியல் முறையை—சாதி முறையைக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஒரே வழி திராவிட நாட்டை எதிர்ப்பது என்று முடிவுக்கு வந்தார்கள். எனவே, சமயப் பாதுகாப்பு, பண்பாட்டுப் பாதுகாப்பு என்னும் பெயரில் ஒரு கூட்டம் எதிர்த்தது. ‘நாட்டுப் பற்று’ என்ற பெயரால் ஒரு கூட்டம் எதிர்த்தது. கீரைக் கடைக்குப் போட்டிக் கடை வைக்கும் போக்கால், பலர் எதிர்த்து விளம்பரம் தேடினர். இத்தகைய காரணங்களால், திராவிட நாட்டுக் கோரிக்கை நிறைவேறுவதற்கு வேண்டிய போராட்ட வலிமை குவியவில்லை.
தனி நாடு பெற, கூட்ட வலிமை போதாது; நியாய அடுக்குப் போதாது; நாவன்மை போதாது என்பது புலனாயிற்று.
பெரியார் திராவிட நாடு கேட்ட பிறகும், சில ஆண்டுகள் வரை ஜின்னா, பாகிஸ்தான் பிரிவினை கேட்கவில்லை. இருந்தும் அக்கோரிக்கை வெற்றி பெற்றது. எதனால்? தலைவர் ஜின்னா சொல்லி விட்டால், கண்ணை மூடிக் கொண்டு எத்தகைய போராட்டத்திற்கும் குதிக்கக் கூடியவர்கள், போதிய எண்ணிக்கையில், அவர் பின்னால் இருந்தார்கள்; செயல் பட்டார்கள்.
பெரியார் அறிவுப் பூர்வமாக, எவ்வளவுதான் காந்திய முறைகளைக் கண்டித்தாலும், நடைமுறை என்று வரும் போது, காந்தியை மிஞ்சும் ‘சாத்வீகி’யாகவே நடந்து வந்தார்.
அவராலோ, அவரது இயக்கத்தாலே, எவருடைய உயிருக்கோ, உடைமைக்கோ, பொதுச் சொத்துக்கோ சிறிதளவு இழப்பும் ஏற்பட்டதில்லை என்பது பெரியாருக்குரிய தனிச் சிறப்பாகும். அச்சிறப்பு அவருக்குப் பின்னரும், தொடர்வதைக் காண்கிறோம்.
இருப்பினும், ஏதோ தொல்லைகளும், கொடுமைகளும், பெரியார் இயக்கத்தால் கட்டவிழ்த்து விடப் பட்டது போல, ‘மேலோர்’ அன்றும் அலறினார்கள்; இன்றும் அலறுகிறார்கள்; அத்தனையும் பொய் அழுகை.
இல்லையென்றால், மடியில் கனமிருப்பதால், வழியில் பயமேற்பட்டு, ஒப்பாரி வைத்துக் கொண்டே முன்னேறச் செய்யும் சூழ்ச்சியாக இருக்கலாம். மூவாயிரம் ஆண்டுகளாகப் பிறவி முதாளித்துவத்தால், பிறரைச் சுரண்டியதில் வாழ்வு வாழ்பவர்களுக்கு—சாதி ஆணவக் கனம் மடியில் இருப்பவர்களுக்கு எதைக் கண்டாலும் அச்சம் ஏற்படுவது இயற்கை.