பெரியார் — ஒரு சகாப்தம்/அறிவுப்புரட்சி கண்ட எம் தலைவா வாழி!

அறிவுப்புரட்சி கண்ட
எம் தலைவா வாழி!


"...நம்முடைய தனிப்பெருந்தலைவர் பெரியாரவர்களுடைய 89—வது பிறந்த நாள் விழாவில், நான் கலந்துகொள்வதற்கான வாய்ப்புக் கிடைத்தது பற்றி உள்ளபடியே மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நான் முதலமைச்சரான பிறகு எனக்கு ஏதாவது ஒரு பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டிருக்குமானால், இந்த விழாவிலே நான் கலந்து கொள்வது தான் அந்த பெரிய மகிழ்ச்சியாகும். ஆனால், உங்களிலே பலருக்கு இது புதுமையானதாகத் தெரியும். என்னைப் பொறுத்த வரையில் இடையில் சில நாள் இல்லாமலிருந்த பழைய நிகழ்ச்சித்தானே தவிர, இது புதிதல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன், பெரியார் அவர்களுடைய 89—வது பிறந்தநாள் விழாவானது இன்றைய தினம் தமிழகத்திலுள்ள எல்லாப் பண்பாளர்களாலும் கொண்டாடப்பட்டுவருவது இயற்கையானது.

கட்சிக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சியாக எல்லாக்கட்சியிலுள்ள பண்பாளர்களும் வரவேற்கத்தக்கதாக, தமிழக மக்கள் நல்வாழ்வில் அக்கறை உள்ளவர்கள் போற்றத் தக்க நிகழ்ச்சியாக இந்த மாபெரும் நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. இங்கே வந்திருக்கிற பல்லாயிரக்கணக்கான மக்கள், கிட்டத்தட்ட ஒரு லட்சம் மக்கள் இருக்குமென்று நினைக்கிறேன். நீங்கள் அனைவரும் இந்த மாபெரும் கூட்டத்தில் அமைதியாக இருந்தால் தான் இவ்விழாவிந்கு தனிச்சிறப்புத் தேடிக்கொடுத்தவர்களாவீர்கள்.

பெரியாருக்கு நன்றி செலுத்துவோம்

பெரியார் அவர்கள் இன்று 89-வது வயதில் அடி எடுத்து வைக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கிற நேரத்தில், அவர் நமக்கு இதுவரையில் ஆற்றியிருக்கிற தொண்டுக்கு—அவர்களால் தமிழகம் பெற்றிருக்கிற நல்ல வளர்ச்சிக்கு—பெயருக்கு அவர்களுக்கு நாம் நம்முடைய மரியாதையை—அன்பை—இதயத்தைக் காணிக்கையாக்குவதற்கே இங்கே கூடியிருக்கிறோம். பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளும் நேரத்தில் இங்கே நடந்த ஊர்வலமும், அதன் சிறப்பும் பெரியார் அவர்களுக்கு நம்முடைய வணக்கத்தைத் தெரிவிப்பதற்காகத்தான் என்று எண்ணுவது நமது கடமையாகும்.

புதிய வரலாறு படைத்தவர் பெரியார்

தமிழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும், இன்னும் உலகத்திற்கே கூட என்றும் சொல்லலாம்; அவர்கள் செய்திருக்கிற அரிய பெரிய காரியங்கள், ஆற்றியிருக்கிற அருந்தொண்டுகள், ஏற்படுத்தியிருக்கிற புரட்சிகர உணர்ச்சிகள், ஓடவிட்டிருக்கிற அறிவுப்புனல் தமிழகம் என்றுமே கண்டதில்லை . இதற்குப் பிறகும் இப்படிப்பட்ட மாபெரும் புரட்சி வேகத்தை நாம் காணப்போவதில்லை---வரலாற்றில் பொறிக்கத்தக்க புதிய வரலாறு என்று கருதும் நிலைமையை அவர்கள் தன்னுடைய பொதுத் தொண்டின் மூலம் நமக்கு அளித்திருக்கிறார்கள்.

சு.ம. ஆரம்ப காலத்தை நோக்கி என் நினைவுகள்

பிறந்தநாள் கொண்டாடுகிற நேரத்தில் என்னுடைய நினைவுகள், திராவிடர் கழகமாகவும், அதற்கு முன்னால் தமிழர் இயக்கமாகவும், சுயமரியாதை இயக்கமாகவும் இருந்த நேரங்களில். அவர்களோடு இருந்து பணியாற்றிய பல எண்ண அலைகளை நெஞ்சில் ஓட விட்டுக்கொண்டிருக்கின்றன. எத்தனை இரவுகள், எத்தனை பகல்கள், எத்தனை காடுமேடுகள் எத்தனை சிற்றாறுகள், எத்தனை பேராறுகள், எத்தனை மாநாடுகள் என்று எண்ணிப்பார்க்கிற நேரத்தில், ஒரு போர் வீரன் களத்தில் புகுந்து, 'இந்தப் படையை முறியடித்தேன், அந்தப் படையை வென்றேன்' என்று காட்டி மேலும் மேலும் செல்வதைப் போல அவர்கள் வாழ்நாள் முழுவதும் களத்தில் நிற்கிற ஒரு மாபெரும் போராட்டமே நம்முன் காட்சியளிக்கிறது.

சுகபோகங்களைத் துறந்த நம் தந்தை

முதல் போராட்டம் அவர் உள்ளத்தில் தோன்றியிருக்க வேண்டும்......!செல்வக் குடியில் பிறந்தவர் அவர்! தன்னுடைய செல்வத்தை— செல்வாக்கைக் கொண்டு ஊரை அடக்கிப் போகபோக்கியத்தில் மிதந்து மகிழ்ந்திருக்கலாம், அப்போதிருந்த பலருங்கூட அப்படிப்பட்ட வாழ்க்கையில்தான் இருந்தார்கள். அப்படிப்பட்ட வாழ்க்கையிலிருந்து தன்னைத் தனியாக்கிக் கொண்டு, தன்னைப் பிரித்துக்கொண்டு, 'என்னுடைய செல்வம் எனக்கில்லை; என்னுடைய செல்வத்தைக்கொண்டு போகபோக்கியத்தில் திளைக்கப் போவதில்லை; பொது வாழ்க்கையில் ஈடுபடப்போகிறேன்' என்று எண்ணிய நேரத்தில் அவர்களுக்கிருந்த செல்வமும், அவருடைய குடும்பத்திலிருக்கின்ற செல்வாக்கும் அதனால் அடையக்கூடிய சுகபோகங்களும், அவர்களுடைய மனத்தில் ஒரு கணம் நிழலாடியிருக்கவேண்டும். அப்போது உள்ளத்தில் நிச்சயமாக ஒரு போராட்டம் எழுந்து இருக்கவேண்டும். 'செல்வத்தில் புரளலாமா? அல்லது வறுமையில், அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் தமிழ் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு என்னை நான் ஒப்படைப்பதா?' என்ற போரட்டத்தில், தொண்டு உள்ளத்தில் வெற்றியடைந்தார். 'செல்வத்திற்காக அல்ல நான்; சுகபோகத்திற்காக அல்ல நான், என்னிடத்தில் உள்ள அறிவு, உழைப்புத்திறன், என்னிடத்தில் அமைந்திருக்கிற பகுத்தறிவு அனைத்தும் தமிழக மக்களுக்குத்தேவை; தமிழகத்திற்குமட்டுமல்ல—முடிந்தால் இந்தியா முழுவதற்கும் தேவை; வசதிப்பட்டால் உலகத்திற்கே தேவை; வீட்டை மறப்பேன், செல்வததை மறப்பேன், செல்வம் தரும் சுகபோகங்களை மறப்பேன்' என்று துணிந்து நின்று அந்தப் போராட்டத்தில் முதன்முதலில் வெற்றி பெற்றார்.

இதில் பிரமாதம் என்ன இருக்கிறது என்று. எண்ணக்கூடும் செல்வம் இல்லாதவர்கள். செல்வம் உள்ள வர்கள் அவற்றை விட்டு விட்டு வெளியே வருவது ஒருபுறம் இருந்தாலும் ஒருவர் கையில் ஒரு பலாப்பழத்தைக் கொடுத்து ஒரு மணி நேரம் அதை உற்றுப்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்றால், வைத்திருப்பவர் வாயில் நீர் ஊரும்; நேரம் செல்லச் செல்ல பலாச்சுளையில் மொய்த்துக்கொண்டிருக்கிற ஈயோடு சேர்த்துச் சாப்பிடுவார்களே தவிர, பார்த்துக் கொண்டே இருக்கமாட்டார்கள்.

பெரியார் குடும்பத்தின் சிறப்பு

பெரியார் குடும்பத்தின் நிலை எப்படிப்பட்டது? எந்தப் பக்கம் திரும்பினாலும் குடும்பச் செல்வாக்கு; எப்பக்கம் திரும்பினாலும் வாணிபத்தில் ஆதாயம்;நிலபுலன்கள், வீடுவாசல்கள், இவைகள் எல்லாவற்றையும் பார்த்து, 'இவைகள் எனக்குத் தேவை இல்லை' என்றார். 'என் நாட்டு மக்களுக்கு, அறியாமையில் மூழ்கிக்கிடக்கும் நாட்டு மக்களுக்கு, நல்லது கெட்டது ஆராய்ந்து பார்க்கும் பக்குவம் அற்றுப்போயிருக்கும் மக்களுக்கு வேறு ஒரு செல்வத்தைத் தருவேன்; அறிவுச் செல்வத்தைத்தரப் போகின்றேன்; சிந்தனைச் செல்வத்தைத் தரப் போகிறேன்; பகுத்தறிவுச் செல்வத்தைத்தரப் போகிறேன்; அவற்றை ஏற்று நடக்கத்தக்க துணிவைத் தரப்போகிறேன்; அதைத் தடுப்பார் எவரேனும் குறுக்கிடுவார்களானால், அவர்களுடைய ஆற்றல்களையும் முறியடிப்பேன்;—இதுதான் என்னுடைய வாழ்க்கையின் குறிக்கோள்' என்று அவர்கள் கிளம்பினார்கள், அதுதான் வாழ்க்கையின் முதல் போராட்டத்தில் அவர் பெற்ற வெற்றி!

பெரியாரின் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி

அதற்குப் பிறகு அவர்கள் சந்தித்த ஒவ்வொரு களத்திலேயும் வெற்றிதான் கிடைத்திருக்கிறது. அந்த வெற்றிகள் எல்லாம் நாம் எடுத்துக்கொண்டிருக்கிற காரியங்களுக்குப் போதுமானதாக அமையவில்லையென்று செட்டிநாட்டரசர் அவர்கள் சொன்னார்கள். ஒப்புக்கொள்கிறேன்; —அந்தப் போராட்டத்துக்கான இன்றையதினச் சூழ்நிலை என்ன? எந்த நிலையில் மொழிப்பிரச்சனை வந்திருக்கிறது? என்று பார்க்க வேண்டும். 1934,35,36-ம் ஆண்டுகளில் இந்தியை அவர்கள் ஆட்சிமொழி என்று அல்ல; இணைப்பு மொழி என்றல்ல; தேசிய மொழி, என்றழைத்தார்கள். இந்தத் தேசத்திற்கென்று ஒரு மொழி உண்டு; அதுதான் இந்தி; இந்தத்தேசத்திற்கு இருக்கத் தக்க தேசிய மொழி இந்திதான் என்று 1935-ல் அவர்கள் சொன்னார்கள். பெரியார் அவர்களின் போர் முறையின் தன்மை உங்களிலே பலருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் என்று கருதுகிறேன். அவர்கள் எதிரில் உள்ள படையை மட்டுமல்ல; முதலிலே அப்படைக்கு எங்கே மூலபலம் இருக்கிறது என்று கண்டு பிடித்து அந்த மூல பலத்தைத் தாக்குவதுதான் அவருடைய போர் முறையாகும்.

'தேசிய'த்தை எதிர்த்து பெரியார் போர்க்கொடி

ஆகையினால், இந்தியாவின் தேசிய மொழி இந்தி தான் என்று சொன்னவுடன், 'தேசியம் என்பது மகாப்புரட்டு! இந்தியா என்கிறீர்களே, இந்தியா என்பது மிகப்பெரிய கற்பனை' என்றுகூறி, அவை இரண்டையும் உடைத்து எறிவதுதான் என்னுடைய வேலை' என்று கிளம்பினார்கள். அப்படி இந்தியைக் கொண்டு வந்தவர்கள் இந்தியைக் காப்பாற்றிக்கொள்ளக் கருதி தேசியத்தையும், இந்தியாவையும் உடைத்துவிடக்கூடாது என்று தேசியம்' என்று சொல்லியதை மாற்றிக்கொண்டு, “இந்தியாவில் தேசிய மொழிகள் பதினான்கு இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்தி ; ஆனால், இந்தி பெரும்பாலானவர்கள் பேசுவதால் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கவேண்டு' மென்று சொன்னார்கள். அப்போது பெரியார், 'ஆட்சிமொழி என்பது பின்னால் இருக்கட்டும்; உங்களுடைய ஆட்சியின் லட்சணம் என்ன? யார் யாரை ஆளவேண்டும்?. எதற்காக ஆளவேண்டும்?' என்று ஆட்சி முறையைப்பற்றி அவர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள். உடனே இந்தியை ஆதரிக்கிறவர்கள் ஆட்சிமொழி இந்தி என்பதை விட்டு விட்டு, ஒரு இணைப்பு மொழியாக இருக்கட்டும் என்று நேசம் கொண்டாடுகிறார்கள்; பாசம் காட்டுகிறார்கள்: சொந்தம் கொண்டாடுகிறார்கள்; 'நாம் இணைந்திருக்கவேண்டாமா? அதற்கு இணைப்பு மொழிதேவையில்லையா?' என்று வலியவலிய கேட்கிறார்கள். தேசியத்திலிருந்து நழுவி, இன்று இணைப்பு மொழி என்ற இடத்திற்கு இந்தி வந்ததற்கு மிகப் பெரிய காரணம் பெரியார் அவர்கள் கடத்திய அறப்போராட்டம் தான்.


மொழிப்பிரச்சனை, அவர்களைப் பொறுத்தவரையில் மிகச்சாதாரணமான பிரச்சனை . அவர்கள் முக்கியமாகக் கருதுவது தமிழ்நாட்டு மக்களிடையே மனிதத்தன்மை வர வேண்டும்; அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிற காட்டுமிறாண்டித்தனமான கொள்கைகள், நாட்டை கடக்கத்தக்க கொள்கைகள், மனிதனை மிருகமயமாக்கத்தக்க கொள்ளைகள், வெளிஉலகத்தாராலே இரண்டு மூன்று நூற்றாண்டுகளுகு முன்பே உதறித் தள்ளப்பட்ட, உருப்படியற்ற கொள்கைகள் மறைய வேண்டும்; இவைகள் நீக்கப்பட்டுத் தமிழக மக்கள் துல்லியமான மனத்துடன், தூய்மையான எண்ணத்தில் —செயல் —திறனில் பகுத்தறிவாளர்களாக, பண்பாளர்கத் திகழவேண்டும்; அதற்கு ஒரு அறிவுப்புரட்சி தேவை என்பதிலே அவர்கள் நாட்டம் அமைந்திருக்கிறது; அந்த நாட்டத்தின் உருவம்தான் பெரியார் அவர்கள் என்றால் அதுமிகையாகாது.


இருநூற்றாண்டுப்பணியை
20 ஆண்டுகளில் செய்துகாட்டினார்

எந்த நாட்டிலும் இரண்டு நூற்றாண்டுகளில் செய்து முடிக்கக்கூடிய காரியங்களை இருபதே ஆண்டுகளில் அவர்கள் செய்துமுடித்திருக்கிறார்கள், அய்ரோப்பா கண்டத்தை எடுத்துக்கொண்டால் நாட்டினுடைய விழிப்பிற்கு 50 ஆண்டுகள் அமைந்த ஆட்சியை மாற்றுவதற்கு 50 ஆண்டுகள் என்ற அளவில் ஒரு பகுத்தறிவு மனப்பான்மையைத் தோற்றுவிப்பதற்காக ஒரு வால்டேர், ரூஸோ இப்படித் தொடர்ச்சியாகப் பலர் வந்து வந்து இரண்டு மூன்று நூற்றாண்டுகள் பாடுபட்டுத்தான் பகுத்தறிவுப் பாதையில் அந்த நாடுகள் செல்ல முடிந்தது. இப்படி இரண்டு நூற்றாண்டுகளில் செய்ய வேண்டிய காரியங்களைப் பெரியார் அவர்கள் இருபதே ஆண்டுகளில் செய்துமுடிக்க வேண்டுமெனக் கிளம்பினார்கள்; திட்டமிட்டார்கள்; அந்த திட்டத்தின் அடிப்படையில் பணியாற்றிக்கொண்டுவருகிறார்கள். ஆங்கிலத்தில் சொல்வார்கள். "Puttiing centurico into capsules” என்று. சில மருந்துகளை உள்ளடக்கிச் சில மாத்திரைகளிலே தருவது போல, பல நூற்றாண்டுகளை இருபது ஆண்டுகளில் அடைத்து, அவர்கள் தம்முடைய வாழ்காளிலேயே சாதித்துத் தீரவேண்டுமென்று, வெற்றி பெற்றே தீரவேண்டுமென்று; அறிவோடும், உணர்ச்சியோடும், நெஞ்சு ஊக்கத்தோடும் யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்பதைக்கூட இரண்டாந்தரமாக வைத்துக்கொண்டு, எந்த அளவு முன்னேறுகிறோம் என்பதைக் காண்பதிலேயே அவர்கள் வாழ்க்கை முழுவதும் போராட்டக் களத்தில் நின்றிருக்கிறார்கள்.

பெரியார் போராட்டப்பாதையில் நான்

அந்தப் போராட்டக்களத்தில் அவர்கள் நின்றிருந்த நேரத்தில், சில பகுதிகளில் நான் உடனிருந்து பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தமைக்காக, மகிழ்ச்சியடைகிறேன். நான் கல்லூரியை விட்டு வெளியே வந்ததும் முதலில் அவர்களிடத்தில்தான்.. சிக்கிக்கொண்டேன். நான் சிக்கிக்கொண்டது வாலிபப் பருவத்தில்...! எங்கெங்கோ போய்ச்சிக்கிக்கொண்டிருக்க வேண்டியவன். அவர்களிடத்தில்தான் முதன்முதலில் சிக்கிக்கொண்டேன், நான் காஞ்சிபுரத்தில் கல்லூரியில் படித்த படிப்பையும், அதன் மூலம் என்னென்ன எண்ணங்கள் ஏற்படுமோ, அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு, ஈரோட்டில் போய்க் குடியேறினேன். எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. இதுபற்றி என்னுடைய பாட்டியார் அப்போது அவரை ஒத்த மூதாட்டிகளோடு பேசும் போது அடிக்கடி சொல்லுவார்கள். ஆறுமாதம், அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை காஞ்சிக்குச் செல்கிற நேரங்களில், அவர்கள் என்னைப்பற்றி, மற்றவர்களிடம் சொல்லும்போது யாரோ ஈரோட்டிலிருந்து வந்த ஒருவன் என்னுடைய பிள்ளையைப் பிடித்துக்கொண்டு போய்விட்டான் என்று பேசுவார்கள். அவர்களே ஒரு தடவை காஞ்சிபுரத்தில் ஆடிசன்பேட்டையிலே நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், பெரியார் அவர்களுடைய பேச்சைக் கேட்ட பிறகு சொன்னார்கள், என்னைப்பார்த்து; 'நீ ஈரோட்டிலேயே இரு' என்று. இத்தனைக்கும் அவர்களுக்கு அதிகமாக படிப்பு அறிவு இல்லை . எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், துவக்கத்தில் அவர்களிடத்தில் இருந்த காலத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் பலப்பல இருக்கின்றன; என்னுடைய வாழ்நாள் முழுதும் எண்ணி எண்ணி மகிழத்தக்கவை அவை. இப்போது எனக்குக் கிடைத்திருப்பது, இனி எனக்குக் கிடைக்கக்கூடியது என்று எந்தப் பட்டியலைக்காட்டினாலும் நான் ஏற்கனவே பெற்றிருந்ததைவிட இவையெதுவும் மகிழ்ச்சியிலோ, பெருமையிலோ நிச்சயமாக அது அதிகமானதாக இருக்க முடியாது.

நீதிக்கட்சியின் தலைமையும்
சு. ம. இயக்கத்தின் வெற்றியும்

அவரிடத்திலே அப்போது, ஓடாது என்ற காரணத்தால் தரப்பட்ட ஒரு ஃபோர்டு மோட்டார் இருந்தது. அதிலேதான் நானும், அவரும் ஏறிக்கொண்டுசெல்வோம். ஏறிக்கொண்டு செல்வோம் என்று சொல்வதற்குக் காரணம் அது பலநேரத்தில் ஓடாது; பிடித்துத் தள்ள வேண்டும். அந்த மோட்டாரில் கிளம்பிய நேரம் தமிழகத்தில் நீதிக்கட்சி அடியோடு தரைமட்டமாக்கப்பட்ட நேரம். இனி, காங்கிரசுக்கு எதிராக வேறு மாற்றுக் கட்சி உண்டாகவே முடியாது என்ற நிலைமை ஏற்பட்ட பொழுது; நீதிக்கட்சியின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டே வருடத்தில் அந்த நீதிக்கட்சி என்ற அரசியல் இயந்திரத்தை சுயமரியாதை இயக்கம் என்ற எஞ்சினோடு பூட்டி, வெகு வேகமாக அதை இயக்க ஆரம்பித்தார். இதே திருச்சியில் புத்தூர் மைதானத்தில் திராவிடர் கழக மாநாடு ஒன்று நடைபெற்ற நேரத்தில்—நாளை காலை மாநாடு; இன்றிரவு மிகப்பெரிய மழை; அதனால், கொட்டகை முழுவதும் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கியிருந்தது. பெரியார் பார்த்து, அவருடைய தொண்டர்களை அழைத்து, இப்படி இருக்கிறதே, நாளைகாலை மாநாடு நடக்குமா ?' என்று கேட்டார்கள், அதற்கு அத்தொண்டர்கள் நடக்கும் என்றார்கள்; அப்படியே காலையில் நடந்தது. தண்ணீரிலா என்றால் இல்லை; தொண்டர்களின் உழைப்பினால் தண்ணீர் இறைக்கப்பட்டு, மணல் தூவப்பட்டு, . காலையில் மாநாடு வெற்றிகரமாக நடந்தது. இதை நான் சொல்வதற்குக் காரணம் முழங்கால் அளவுக்குச் சேறு இருந்த இடம் பக்குவப்படுத்தப்பட்ட மாதிரி தமிழகமக்களின் மனத்தில் ஊறிப்போயிருந்த சேற்றை அவர்கள் துடைத்தெறிந்தார்கள்; தனது வாழ்நாளிலேயே அதை முடித்தார்கள்.

வடநாட்டினரை வியப்புறச்செய்த பெரியார்

20 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களோடு நான் வடநாட்டிற்குச் சென்றிருந்த நேரத்தில், வடநாட்டில் உள்ள பல தலைவர்கள், இந்தியப் பேரரசில் பெரிய உத்தியோகத்தில் இருந்தவர்களெல்லாம்—பெரியாரைப் பார்த்து, "பெரியார் அவர்களே! உங்களை இன்னுமா விட்டுவைத்திருக்கிறார்கள்" என்று கேட்டார்கள். அதற்குப் பெரியார் அவர்கள், “நான் என்ன தவறு செய்தேன் ? எதனால் எனக்கு ஆபத்து வரப்போகிறது?" என்று சொல்லிய நேரத்தில், "நீங்கள் பேசுவதில் பத்தாயிரத்தில் ஒரு பகுதியை, நீங்கள் செய்வதில் ஆயிரத்தில் ஒரு பகுதியை நாங்கள் சொன்னாலும், செய்தாலும் எங்களை அடியோடு அழித்திருப்பார்கள். நீங்கள் எப்படித் தப்பிப் பிழைக்கிறீர்கள் ?" என்று சொன்னார்கள். அப்படிக் கூறும் அளவுக்கு வீரமிக்க காரியங்களை, வேறுயாரும் எண்ணிப்பார்க்க முடியாத காரியங்களை, நடத்திக் காட்ட முடியாத காரியங்களை நடத்திக் காட்டி, அதில் பெற்ற வெற்றிகளை நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அவர் சாதித்த காரியங்கள் மிகப்பெரியவை. என்றாலும் அவர் துணையோடு நாம் சாதிக்கவேண்டிய காரியங்கள் நிரம்ப இருக்கின்றன். ஒரு பெரிய மலை பிளக்கப்பட்டிருக்கின்றது. கற்பாறைகள் எல்லாம் கீழே உருண்டு வந்துகொண்டிருக்கின்றன. அவைகளையெல்லாம் பக்குவப்படுத்தி, அவைகளை எந்தெந்த வடிவத்திலே நாம் செதுக்க வேண்டுமோ, அதில் நாம் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். பெரியார் அழைக்கிற அழைப்பைக் கேட்காத தமிழ்மக்கள் என்றுமே இருந்ததில்லை. அவர்கள் கூப்பிடும் குரலுக்கு ஓடிவரத் துடிக்காத இளைஞர்கள் இருந்ததில்லை. அப்படிப்பட்ட மாபெரும் தலைவருடைய 89வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்; பெருமையடைகின்றேன். என்னுடைய நண்பர்கள் என்னை இவ்விழாவுக்குத் தலைமையேற்க வேண்டுமென்று கேட்ட நேரத்தில், திராவிடர் கழகம் நடத்துகின்ற இந்த விழாவில் தலைமை வகிக்கவேண்டுமென்று கேட்டார்கள் அவர்களுக்குத் திராவிடர் கழகத்தின் வரலாறு தெரியாத காரணத்தால் ! "திராவிடர் கழகம் என்று பெயர் வைத்தவனும் நான் தான். அதைக்கொண்டு நாட்டிலே பெரிய புரட்சியை உண்டாக்க முடியும் என்ற நம்பிக்கையையும் நிரம்பப் பெற்றவன் நான் ! ஆகையினால் நான் இங்கே தலைமை வகிப்பது இயற்கைக்கு மாறானதல்ல.


பெரியார் இருநூறாண்டு வாழவேண்டும்

செட்டிநாட்டரசர் (எம்.ஏ. முத்தையா செட்டியார்) அவர்கள் நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் கடந்த 30 ஆண்டுகளாக நம்மோடு இருந்திருக்கிறார்கள். தமிழ் காப்பாற்றப்படவேண்டும் என்ற காலத்திலேயும், நீதிக்கட்சி காலத்திலேயும், மற்ற எல்லாக் கட்டங்களிலும் அவர்கள் நம்மோடு இருந்து நமக்குத் துணைபுரிந்திருக்கிறார்கள். ஆங்கில மொழியின் அவசியத்தை, அவர்கள் இன்று நேற்றல்ல, 30 ஆண்டுகளாக, இங்கு மட்டுமல்ல, சட்ட மன்றங்களில் கூட வெகு தெளிவாக எடுத்துச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அப்படிப்பட்டவர் இன்று பெரியார் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தியது. என்னைப் பொறுத்தவரையில் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது என்பதனை நான் சொல்லிக்கொள்ளவா வேண்டும்? ஒரு சமயம் அந்தப் பொன்னாடைக்கும் பெரியாருடைய மேனிக்கும் வித்தியாசமில்லாததால், அது பொன்னாடை என்று அறிந்துகொள்ள முடியாமலிருந்திருக்கலாம். ஆனால், அதைப் போர்த்திய நேரத்திலே செட்டிநாட்டரசர் அவர்களிடத்தில் காணப்பட்ட கனிவு. அதைக் கண்டவுடன் பெரியாருக்கு ஏற்பட்ட உருக்கம், அதைக் கண்டு நமக்கெல்லாம் ஏற்பட்ட மகிழ்ச்சி இவை வாழ்க்கையில் என்றோ ஒரு நாள் கிடைக்கக்கூடியவை அதனால்தான், அந்த மகிழ்ச்சியை இனியும் நாம் பெற வேண்டும் எனபதால்தான் பெரியார் அவர்கள் நூறு ஆண்டுகள், இரு நூறு ஆண்டுகள் வாழவேண்டுமென்று நாம் நம்முடைய நல்லெண்ணத்தை அவருக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பெரியார் வாழ்வே தமிழினத்தின் பெருவாழ்வு

ஏன் அவ்வளவு காலம் வாழவேண்டுமென்று சொல்கிறோமென்றால், அவர்களை மறக்கிற நேரத்தில், நம்மையறியாமல் ஒரு பலவீனம் நமக்கு வருகிறது; அவர்களை எண்ணிக்கொள்கிற நேரங்களில் நமக்குத் தைரியம் வருகிறது. அவர் இருக்கிறார் என்ற நினைவு வரும் போது, அவர் இருக்கிறார் என்றவுடன், பரவாயில்லை பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியமும் நமக்கு வருகிறது. அந்த நினைவு அரசியல் துறையில் உள்ள என்போன்றோர்க்கு மட்டுமல்ல; வணிகத் துறையில் தமிழர்கள் சங்கடப்படும் போது பெரியாரைத்தான் எண்ணிக்கொள்கிறார்கள். பெரியார் சொல்கிறபடி நடந்தால் நாம், பிழைக்க முடியும் என்று தமிழ்ப்புலவர்கள் கருதுகிறார்கள். பெரியார் சொல்கிறபடி 'இந்தி’ விரட்டப்பட்டால்தான் நமக்கு மதிப்புக் கிடைக்குமென்று எண்னும் அரசியல் வாதிகளைப்பற்றி நான் சொல்லத்தேவையில்லை. இன்றைய தினம் பெரியாருடைய குடும்பத்தில், ஒரு பெரிய குடும்பத்தில் நான்கு பிள்ளைகள் பிறந்து, ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு திக்கிற்குச்சென்று, 'நான் இந்தத் திக்கில் போய் இதைக் கொண்டு வந்தேன்; அண்ணன் அந்தத் திக்கிலே போய் அதைக்கொண்டுவந்தான்.' என்று சொல்வதைப் போல் அவருடைய பிள்ளைகள், எல்லாக்கட்சிகளிலும் இருக்கிறார்கள். எந்தக் கட்சியில் அவர்கள் இல்லை? எந்தப்பிள்ளையும் ஒருவருக்கொருவர் சோடை போனவர்கள் அல்லர். அவர்கள் எதையெதைப் பெறவேண்டுமென்று கருதுகிறார்களோ, அதைப்பெற்றுக் குடும்பத்தில் நடக்கிற விழாவில் அவர்கள் பெற்றவற்றைப் பெரியார் அவர்களிடம் காட்டி, 'இதோ பாருங்கள் நான்பெற்றது' என்று ஒவ்வொருவரும் காட்டும்போது உரிய புன்னகையோடு அவற்றைப் பார்த்து, 'நான் கேட்டது இதுவல்லவே' என்கிறார்கள்; அவர்கள் கேட்டதைப் பெற்றுத் தரத்தக்க ஆற்றல் யாரிடத்திலும் இல்லை. ஆனால், அதைப் பெற்றுத்தரும் பொறுப்பு அவர்களிடத்தில்தான்! அப்படிப் பெற்றுத்தந்தால் அதைப் போற்றிப் பாதுகாத்துக்கொள்ள என்னாலே முடியும்; அது கிடைத்தால் யாருக்கு என்ன பங்கு என்று கேட்கச் சிலர் இருக்கலாம்.

பெரியாரின் அறிவுப்புரட்சி வெற்றி பெற்றே தீரும்

வர்களால் ஏற்படுத்தப்பட்ட அறிவுப்புரட்சி சுலபத்தில் நிற்கப்போவதில்லை. அது போகவேண்டிய தூரத்திற்குப் போய், அடையவேண்டிய சக்தியை, இலக்கைத் தொட்டுத்தான் நிற்கும். எப்படி வில்லை விட்டுக் கிளம்பிய கணை அடையவேண்டிய இடத்தில் பாய்ந்தால்தான் அதன் வேகம் நிற்குமோ அதைப்போல், அவர்களிடத்தில் இருந்து பிறந்த அறிவுக்கணை எந்த இலட்சியத்தை அடையவேண்டுமோ அதையடைந்தே தீரும்; அதில் அய்யம் யாருக்கும் இல்லை; அதில் கால அட்டவணையைக்கூட நாம் கருதத் தேவையில்லை. அந்தப் பாதையிலே நாம் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்.

30 ஆண்டுகளுக்கு
முன்பும் இன்றும்.........

30 ஆண்டுகளுக்கு முன்னாலே தமிழகத்தில் பேசுவதற்குக் கூச்சப்பட்டுக்கொண்டிருந்த விஷயங்களை இன்று நமது எட்டு வயதுச் சிறுவன் வெகு தாராளமாகப் பேசுகிறான். 20 ஆண்டுகளுக்கு முன்னாலே நம்முடைய மனத்தில் பயந்துகொண்டிருந்த தத்துவங்கள், இன்றைய தினம் கேலிக்குரியதாகுமென்று நாடே சொல்கிறது. இரண்டு நூற்றாண்டுகள் பாடுபட்டு உண்டாக்க வேண்டிய அறிவுப்புரட்சியை இருபது ஆண்டுகளில் அவர்கள் சாதித்துக் கொடுத்ததால் நமக்கெல்லாம் எளிதாக இருக்கிறது; எல்லாம் சுலபமாக இருக்கிறது.

ஆனால், இது எளிதாகும். அளவுக்கு அவர்கள் பட்ட கஷ்டங்கள் எத்தனையோ, நன்றாக நினைவுக்கு வருகிறது. நானும் அவரும் ஒருமுறை சிவகங்கை மாநாட்டுக்குப் போன நேரத்தில், அந்த ஊர் முழுதும் பழைய செருப்புக்களை அங்கே தோரணமாகக் கட்டித் தொங்கவிட்டார்கள். இன்று நடந்த ஊர்வலத்தில் மாலை போட்டார்கள்; கம்பீரமாகச் செல்கிறோம்; ஆங்காங்கே கொடிகளும் அசைந்து வாழ்க! வாழ்க! வென்று வாழ்த்துகின்றன. ஆனால், அப்போது சிவகங்கையிலே தொங்கியது தோரணங்கள் அல்ல; அறுந்துபோன பழைய செருப்புக்கள். அப்படி அறுந்துபோன செருப்புக்களை எடுத்துத் தோரணமாகக்கட்டியவர்களின் பிள்ளைகளிலே சிலர் இந்த மண்டபத்திற்கு வந்திருக்கலாம் என்று கருதுகிறேன்; அப்படிப்பட்ட மாறுதல் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. அவரை முதலிலே புரிந்துகொள்ள மறுத்தார்கள்; புரிந்துகொள்ள மறுத்தவர்கள் பிறகு புரிந்து ஏற்றுக்கொண்டனர்; ஏற்றுக்கொண்டவர்களும் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள்தான் அப்போதிருந்தார்கள். இப்போது அவர் பேசுவது எல்லோருக்கும் புரிந்துவிட்டது; பெரும்பாலோருக்கு அது பிடித்துவிட்டது; அதில் மிகப்பெரும்பாலோர். அவற்றைத் தங்களுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாகக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்ச் சமுதாயத்தின் உயிர்ச்சக்தி பெரியார்

இப்படி ஒரு சமூகத்தை, நாட்டுமக்களை ஆளாக்கி விட்ட பெருமை உலகத்தில் பல தலைவர்களுக்குக் கிடைத்ததில்லை; நம்முடைய தமிழகத்தில் பெரியார் அவர்களுக்குத்தான் அந்தத் தனிப்பெருமை சேர்ந்திருக்கிறது; அந்தப் பெருமைக்குரியவர்களாக நாம் நம்மை ஆக்கிக்கொள்ள வேண்டும். அவர் அளித்துள்ள செல்வம்—அவர் நமக்குக் காட்டியுள்ள லட்சியப்பாதையில் நடந்து செல்லுதற்கேற்ப ஆற்றல் நமக்கு வரவேண்டுமென்று, அவர் இன்றைய தினம் நமக்கெல்லாம் வாழ்த்துச்சொல்ல வேண்டும். அந்த வாழ்த்துநமக்குப் புதிய வல்லமையை, புதிய உற்சாகத்தைத்தரும் என்பதில் அய்யமில்லை.

அய்யாவே! தமிழினத்தை வாழ்த்துங்கள்

"என்னுடைய வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டவர்களே! என்னுடைய வழியைப் பின்பற்றியவர்களே ! நாம் செல்லுகின்ற பயணம் மிக நீண்ட பயணம்; அதிலே நடந்து செல்வதற்கான வல்லமை, வலிவு தாங்கும் சக்தி உங்களுக்கெல்லாம் வேண்டும்; அவைகள் எல்லாம் உங்களுக்கு வரவேண்டும் என்று நான் வாழ்த்துகின்றேன்" என்று அவர் நமக்கு வாழ்த்துக்கூற வேண்டும்.

பெரியார் கட்டளையை ஏற்போம்

அப்படிப்பட்ட வாழ்த்தை நமக்குக் கொடுத்து வழிகாட்டி, அழைத்துச் செல்ல அவர்களைப் பார்த்துக்கேட்கும்போது, அவரே பார்த்து, யார் யாரை எங்தெந்த வேலைக்கு அனுப்ப வேண்டுமென்று கருதுகின்றாரோ, அந்தந்த வேலைக்கு அனுப்பி தமிழகத்திற்கு மொத்தத்தில் நன்மை கிடைக்கும் ஒரு சந்தர்ப்பத்தை, அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்து இன்னும் பன்னெடுங்காலம் நம்மோடு வாழ்ந்திருந்து, நம்முடைய தமிழகம் யாருக்கும் தாழ்ந்துவிடாமல், யாரையும் தாக்காமல், எவராலும் சுரண்டப்படாமல், எந்தப் புரட்டுக்கும் ஆளாகா மல், எந்தப் புரட்டையும் மூட்டிவிடாமல் தன்னிகரற்ற காலத்தை உருவாக்கித் தந்துவிட்டு, அதை அவர் கண்டு களிக்கவேண்டும் அதிலேதான் அவர் கவலை—லட்சியத்தில் வெளிப்படையாகத் தெரிகிற பொன் ஓவியத்தை அவர் காண இயலும் அதைக் காணுவதற்கான அறிவாற்றலோடு, திறமையோடு, தகுதியோடு தமிழ்மக்கள் இன்றைய தினம் அவரை இலட்சக்கணக்கான பேர் பின்பற்றிக்கொண்டு வருகிறார்கள். அவர்களிலே ஒருவனாக இருப்பதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய உளம் கனிந்த நன்றியை நான் பெரியார் அவர்களுக்குக் காணிக்கையாக்கிக் கொள்கிறேன்—அவர்களுடைய அன்பினையும், ஆதரவினையும் பெற்றவன் என்ற முறையில் என்றைய தினமும் அவர்கள் கடுமொழியைக் கேட்காதவன் என்ற முறையிலே, அவர்களுக்கு என்னிடமிருக்கின்ற தனிப்பட்ட பாசத்திற்கு என்னுடைய இதயம் கலந்த, கனிவு நிறைந்த, நட்பு மிகுந்த, தூய்மை நிறைந்த வணக்கத்தையும், மரியாதையையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

[திருச்சியில் 17-9-67-ல் நடைபெற்ற தந்தை பெரியார்
அவர்களின் 89-வது பிறந்தநாள் விழாவிற்குத்
தலைமையேற்று ஆற்றிய உரை]


இராமாயணத்தை எரிப்பது எதற்காக?

இராமாயணம், பெரியபுராணம் ஆகியவை புளுகுகள். அவை மக்களின் மனத்தைப் பாழ் செய்கின்றன; ஒரு இனத்தை ஒரு இனம் ஆதிக்கம் செய்ய வேலை செய்கின்றன. ஆகவே, அவை களை மக்கள் வெறுக்க வேண்டும்—கண்டிக்க வேண்டும் என்பதைக் காட்டவே நாங்கள் அவைகளைக் கொளுத்தவேண்டுமென்று கூறுகிறோமே யன்றி, அவைகளைக் கொளுத்திவிடுவதாலேயே மூடப்பழக்க வழக்கம் போய்விடும் என்று நாங்கள் சொன்னதில்லை.

[11-2-44ல் ஈரோட்டில் தமிழ் மாநில
நாடகக் கலை அபிவிருத்தி மாநாட்டில்]