பெரியார் — ஒரு சகாப்தம்/சமூக நீதியின் இருப்பிடம் பெரியார்!

சமூக நீதியின் இருப்பிடம்
பெரியார்!

"சமூக நீதியற்ற தன்மைகளுக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட மக்களுக்காகத் தமிழ்நாட்டில் போராட்டத்தை நடத்தியவர் பெரியார் (ராமசாமி) அவர்களே. அதேபோன்று தெனாலியில் முதலில் குரலெழுப்பியவர் ராமசாமி சவுதரி என்பவராவார். இந்த இரு பெரும் சமூகச் சீர்திருத்தத் தலைவர்களுக்கும் ஒரே பெயர் பொருந்தியிருப்பது வியப்புக்குரியதாகவிருக்கிறது. கடவுளின் அவதாரமென்று கூறப்படுகிற ராமசாமியையும் அதையொட்டிய கருத்துக்களையும் நிறுவனங்களையும் எதிர்த்து—ராமசாமி என்ற அதே பெயருள்ள இரு பெரியார்களும் கண்டன மாரிகளைப் பொழியும் பிரசாரங்களைச் செய்யும் தகுதி பெற்றவர்களாகியுள்ளனர்.

தமிழ்நாட்டில் நாங்கள் இந்தப் பிடிவாதமான மக்களை எங்களுடைடய கருத்துக்களுக்கு ஏற்ப வளைத்துக்கொண்டு வருவதற்கு இருபதாண்டு காலமாக விவாதித்து வந்திருக்கிறோம்; இறுதியாக நாங்கள் வெற்றி பெற்றோம். பூமியிலுள்ள தீமையை ஒழிக்கக் கடவுள் 10 அவதாரங்களுக்குக் குறையாமல் எடுத்ததாகக் கூறப்படுகிறகிறது. ஆனாலும் தீமைகள் முழுவதும் ஒழிந்தபாடில்லையே. மனிதர்களாகிய நமக்குத் தான் தீமைகள். எதிராகப் போரிட்டு, அதை வேரோடு ஒழித்துக்கட்டும் மிக உயர்ந்த கடமை ஏற்பட்டிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சுயமரியாதைக்காரர்களாகிய எங்களில் சிலர் சுயமரியாதைத் திருமணம் என்ற சீர்திருத்தத் திருமணங்களை நடத்த, போலீஸ் உதவியை நாடவேண்டியதாயிருந்தது. அந்தத் திருமணங்கள், குருக்கள் இல்லாமலும். மந்திரங்கள் சொல்லப்படாமலும், ஓமத்தீ இல்லாமலும் நடத்தப்படும் திருமணங்களாகும்.

சுயமரியாதைத் திருமணத்தின்
நெடுங்கதை பாரீர்

ஒரு கிராமத்தில் பெரியார் (ராமசாமி) அவர்களும், நானும் ஒரு சுயரியாதைத் திருமணத்தை வைக்கச் சென்றபோது, போலீஸ் அதிகாரி ஒருவர் எங்களைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும்படி சொல்லி அனுப்பினார், நாங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றபோது, எங்களைக் கைது செய்யவோ, காவலில் வைக்கவோ அழைக்கவில்லையென்றும், சனாதனிகளால் தொல்லை நேராது எங்களைப் பாதுகாக்கவே அழைத்ததாகவும் அந்தப் போலீஸ் அதிகாரி கூறினார். ஆனால், இன்றோ தமிழ்நாடெங்கும் அத்தகைய சுயமரியாதைத் திருணங்கள் நடைபெற்றவண்ணமுள்ளன. அவைகள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாக மசோதாவொன்று நான் கொண்வந்து நிறைவேற்றிவிட்டேன்."

[ஆந்திராவிலுள்ள தெனாலியில் கவிராசு
ராமசாமி சவுதரி—ஆவுல கோபாலகிருஷ்ண
மூர்த்தி "பவ விகாச கேந்திர"த்தை 29-1-68
அன்று திறந்துவைத்து ஆற்றிய உரையின்
ஒரு பகுதி]