பெரியார் — ஒரு சகாப்தம்/பகுத்தறிவு ஊட்டிய பெரியாரே என் தலைவர்

பகுத்தறிவு ஊட்டிய
பெரியாரே என் தலைவர்

"...... நமது தமிழ் நாட்டில் மட்டும், வயதானவர்கள் வீட்டிற்குப் பெரியவர்களாக வீட்டிலேயே இருப்பார்கள். அவரது பிள்ளைகள் வெளியூர்களில் ஒருவர் டாக்டராகவும். ஒருவர் எஞ்சினீயராகவும், ஒருவர் வக்கீலாகவும் இருப்பர். வீட்டில் நடைபெறும் விழா நிகழ்ச்சியின் போது, அந்தப் பெரியவர் தன் மகன்களைச் சுட்டிக்காட்டி "அதோ போகிறானே அவன்தான் பெரியவன், டாக்டராக இருக்கிறான்; இவன் அவனுக்கு அடுத்தவன், எஞ்சினீயராக இருக்கிறான் ; அவன் சிறியவன், வக்கீலாக இருக்கிறான். இவர்கள் எல்லோரும் எனது பிள்ளைகள்” என்று கூறி, பூரிப்பும் மகிழ்ச்சியும் அடைவார். அதுபோன்று பெரியாரவர்கள், தம்மாலே பயிற்சியளிக்கப்பட்டவர்கள் பல்வேறு கட்சிகளிலிருந்தாலும் 'அவன் என்னிடமிருந்தவன் ; இவன் என்னுடன் சுற்றியவன் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய பெருமை இந்தியாவிலேயே ஏன் ? உலகிலேயே பெரியார் அவர்களுக்குத்தான் உண்டு. அவர் காங்கிரசிலிருப்பவர்களைப் பார்த்து—தி. மு. க.வில் இருப்பவர்களைப் பார்த்து—கம்யூனிஸ்டுக் கட்சியில் இருப்பவர்களைப் பார்த்து—சோஷ்யலிஸ்டுகளைப் பார்த்து இவர்கள் என்னிடமிருந்தவர்கள்; இவர்களுக்கு நான் பயிற்சி கொடுத்தேன்; இன்று இவர்கள் சிறப்போடு இருக்கிறார்கள்' என்று சொல்லிக்கொள்ளக்கூடிய பெருமை அவர்கள் ஒருவரையே சாரும்.

பெரியார் அவர்கள் தமிழ்போல் என்றும் இளமை குன்றாது வாழவேண்டும்; எந்தக் குழந்தையும் தப்பிப்போகாமல் பாதுகாக்க வேண்டும். அவர் என்னுடைய தலைவர்! நானும் அவரும் பிரிகிறபோதுகூட நான் அவரையேதான் தலைவராகக் கொண்டேன்; வேறு ஒருவரைத் தலைவராகப் பெறவில்லை ; அந்த அவசியமும் வரவில்லை. அன்று ஏற்றுக்கொண்டது போல் இன்றும் அவரையே தலைவராகக் கொண்டுதான் பணி செய்து வருகின்றேன்.

கருத்து வேற்றுமை இருப்பினும்
குறிக்கோள் ஒன்றே

ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் என்றாலும் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு இருக்கலாம். குடும்பத்தில், அப்பன்—மகன்—அண்ணன்—தம்பி அவரவர்களுக்கு ஒரு கொள்கை ! அவரவர் கொள்கை அவரவருக்குப் பெரிது.

'கடவுள் கதைகளிலிருந்து மனித சமுதாயத்தைத் திருத்தலாம்; மனித சமுதாயத்தை முன்னேற்றலாம்' என்று குன்றக்குடி அடிகளார் கருதுகின்றார்; அத்துறையின் மூலம் தொண்டாற்றிவருகின்றார். கடவுள் கதைகள் மனித சமுதாயத்தைக் கெடுக்கிறது என்பதை எடுத்துக்காட்டும்போது அவமானம் புழுங்குவதில்லை. மதத்துறையில் நின்று மனித சமுதாயத்தை முன்னேற்றலாம் என அவர் கருதுகின்றார். நாம் பகுத்தறிவுத் துறையால்தான் மனித சமுதாயம் முன்னேற முடியும், என்று கருதித் தொண்டாற்றி வருகிறோம். நாமும் முழு அளவு வெற்றி பெற்றோமா என்றால் இல்லை; அவரும் முழு அளவு வெற்றி பெற்றார் என்றால் இல்லை. நமது வெற்றியைப்பற்றி நாமும் சந்தேகப்படுகிறோம்; அவரும் அவரது வெற்றி குறித்து சந்தேகப்படுகிறார். அவரவர்கள் நேர்மையாக நடந்து, தங்கள் துறையில் தொண்டாற்ற வேண்டும்.

சுயமரியாதை இயக்கத்தின் சிறப்பு

சுயமரியாதை இயக்கம் ஒழுக்கச் சிதைவு இயக்கமல்ல.மனித சமுதாயத்தை ஒழுக்க நெறிக்குக் கொண்டுவந்து முன்னேற்ற வேண்டுமென்பதற்குப் பாடுபடும் இயக்கமாகும். முதல் முதல் உள்ளத்தில் சுயமரியாதை இயக்கம், அடுத்துப் பகுத்தறிவு இயக்கம். பிறகு தமிழ் இயக்கத்தோடும் பிணைத்துக்கொண்டது.

நாம் மனித இயற்கையின்பாற்பட்டு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்துகொண்டிருக்கிறோம். நான் பெரியாருடன் இருந்தபோது பல ஆண்டுகளுக்கு முன் அரித்துவாரத்திற்குப் பெரியாருடன் நானும் சென்றேன். கங்கைநதி தீர்த்தில் அவர் கம்பீரமாக நடந்து செல்கையில் வீசிய தென்றல் பெரியாரின் வெண்தாடியைத் தழுவி அசைத்து, அவர்மேல் போட்டிருந்த மஞ்சள் சால்வையையும் அசைத்துச் சென்றது. எனக்கு அவர் கம்பளிக்கோட்டு வாங்கிக்கொடுக்காத காரணத்தால், நான் குளிரால் கைகளைக் கட்டிக்கொண்டு அவர் பின் சென்றேன். அது குருவுக்குப்பின் சீடன் மிகுந்த பய பக்தியுடன் செல்வது போல் இருந்தது. பெரியாரைக் கண்டதும் தமிழ் நாட்டிலிருந்து வந்திருக்கும் பெரியசாமி யார் என்று அவரையும், அவருக்குப்பின் கைகட்டிச் சென்ற என்னை அந்தச்சாமியாரின் (பெரியாரின்) சீடன் என்றும் கருதி, வழி நெடுக எங்கள் காலில் விழுந்தனர். பெரியார் அவர்கள் என்னைப் பார்த்து, 'நம் நாட்டு மக்கள் யாரையெல்லாம் சாமியாராக்குகிறார்கள் பார்' என்று சொன்னார்கள்.

பகுத்தறிவால்தான் மனித சமுதாயம் முன்னேற முடியும்.

பகுத்தறிவு வாதிகளாகிய நாங்கள் பகுத்தறிவால் தான் மனித சமுதாயத்தை முன்னேற்றத்திற்குக் கொண்டுவரமுடியும் என்றும், அதற்கு எதிராக இருக்கிற மதம், புராணம் இவைகள் எல்லாம் மக்களின் எண்ணத் திலிருந்து அகற்றப்படவேண்டுமென்பதற்காகவும் பாடுபட்டுக்கொண்டுவருகிறோம். மதவாதிகள் மதத்தில்தான் நியாயம் இருக்கிறது; மதம்தான் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டி என்று கருதிக்கொண்டிருக்கின்றனர்.

சுயமரியாதை இயக்கத்தின் வெற்றிகள்

சுயமரியாதை இயக்கம் வளர்ந்து வளர்ந்து பெண்ணுரிமை பெற்றிருக்கிறது; ஆலயங்களில் நுழையும் உரிமை பெற்றிருக்கிறது; இன்னும் பல உரிமைகளைத் தமிழர்களுக்குப் பெற்றுத்தந்துள்ளது. தமிழர்களின் குடும்பங்களில் பல சுயமரியாதைத் திருமணங்களை ஏற்று நடத்தியிருக்கிறது, அவர்கள் நமது வணக்கத்திற்குரியவர்களாவார்கள். சட்டப்படி செல்லாது என்று தெரிந்ததனால் ஏற்படும் தொல்லைகளையும் பொருட்படுத்தாமல், மக்களுக்காகத்தான் சட்டம் என்பதை உணர்ந்து, சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர்கள் நமது வணக்கத்திற்குரியவர்கள் ஆவார்கள்.

எங்களது ஆட்சியில் விரைவில், சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்படி செல்லத்தக்கதாக சட்டம் கொண்டுவர இருக்கிறோம். ஏற்கனவே நடத்திவைக்கப்பட்ட திருமணங்களும் சட்டப்படி செல்லத்தக்கதாகும் என்று சட்டம் கொண்டுவர இருக்கிறோம். பெரியார் அவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிரூந்ததை நாங்கள் வந்து செய்யும் வாய்ப்புக் கிடைத்தமைக்காகப் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். நெடுந்தொலைவு பிரிந்து சென்றிருந்த மகன், தன் தந்தைக்கு மிகப்பிடித்தமான பொருளைக் கொண்டுவந்து கொடுப்பதைப் போல, நாங்கள் பெரியார் அவர்களிடம் இக்கனியை (சட்டத்தை) சமர்ப்பிக்கிறோம். இதை எனக்கு முன் இருந்தவர்கள், கூட செய்திருக்க முடியும். நான் போய் நடத்தவேண்டிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்குப் பெருமகிழ்ச்சியடைகின்றேன். நான் திருமணம் ஆனபின் இயக்கத்திற்கு வந்ததால், எனக்கு இந்த வாய்ப்புக் கிடைக்காமல் போய்விட்டது!"

(திருச்சி நகரிலுள்ள "பெரியார் மாளிகை" யில் 7-6-67 அன்று தந்தை பெரியார் அவர்களால் நடத்திவைக்கப்பெற்ற மறைந்த ப. ஜீவாநந்தம் மகள் திருமண விழாவில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி)