பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்/இஸ்லாமியப் புத்தாண்டு தரும் செய்தி
முஹர்ரம் தரும் செய்தி
இறைமறை தரும்
சிறப்புமிகு மாதங்கள்
எதிலுமே மனித மனம் சிறப்பான தொடக்கத்தை எதிர்பார்த்து அவாவுவது இயற்கை. அதிலும் ஒவ்வோராண்டும் தொடங்கும்போது அவ்வாண்டு எல்லா வகையிலும் சிறப்பு மிகு ஆண்டாக அமைய வேண்டும் என ஒவ்வொருவர் உள்ளமும் எதிர்பார்ப்பது இயல்பான ஒன்றே. எனவே, தொடங்கவிருக்கும் இஸ்லாமியப் புத்தாண்டான முஹர்ரம் மாதம் பற்றியும் அம்மாதத்தின் புனிதமிகு தன்மைகளைக் குறித்தும் நினைவு கூர்வது எல்லாவகையிலும் சாலப் பொருத்தமுடையதாக இருக்கும்.
இயற்கை மார்க்கமாக இஸ்லாம் இறைவனால் மனித குலத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இயற்கையாகவே ஓராண்டுக் காலத்தை பன்னிரண்டு மாதக் கணிப்புகளாக்கி, அவற்றில் நான்கு மாதங்கள் சிறப்புடைய மாதங்களாக அமைத்துள்ளதைப் பற்றி இஸ்லாமியத் திருமறை திருக்குர் ஆன்.
“நிச்சயமாக, அல்லாஹ்வினிடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓராண்டில்) பன்னிரண்டு தான். இவ்வாறே வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வால் கற்பனை செய்யப்பட்டுள்ளது. அவைகளில் நான்கு மாதங்கள் சிறப்புமிக்கவை” (9:36)
திருமறை குறிப்பிடும் நான்கு புனித மாதங்களில் ஆண்டின் முதல் மாதமாகிய முஹர்ரம் மாதமும் ஒன்றாகும்.
முஹர்ரம் மாதம் அல்லாஹ்விடம் தனிச்சிறப்புப் பெற்ற மாதம் என்றும், அம்மாதத்தில் இறைவனை நோக்கிப் பிழை பொறுக்க ஒவ்வொருவரும் கேட்கும் “இறைவேட்டல்கள் (துஆ) அல்லாஹ்வால் ஏற்கப்பட்டு மன்னிப்பு வழங்கப்படுகிறது” என்றும் பெருமானார் (சல்) அவர்கள் கூறியுள்ளதிலிருந்து இந்நாளின் சிறப்புப் புலனாகும்.
“ஆண்டின் இறுதி மாதமாகிய துல்ஹஜ் திங்களின் இறுதி நாளிலும் ஆண்டின் முதல் மாதமாகிய முஹர்ரம் முதல் நாளன்றும் தொடர்ந்து நோன்பு நோற்போரின் ஐம்பதாண்டு காலப் பாவம் இறைவனால் பொறுக்கப்படுகிறது” என அண்ணலார் கூறியுள்ளதால் இவ்விரு நாட்களும் இறைவனின் கருணை பொழியும் நாட்களாகவே அமைந்துள்ளதெனலாம்.
நல்லுணர்வின் ஊற்றுக்கண்
முஹர்ரம்
நாயகத் திருமேனியின் பிறப்புக்கும் முன்பிருந்தே முஹர்ரம் மாதம் அராபியர்களால் புனிதமிகு மாதமாக, அமைதி போற்றும் அரிய மாதமாகப் போற்றப்பட்டு வந்துள்ளது. இம் முஹர்ரம் மாதத்தில் எக்காரணம் கொண்டும் வன்முறைச் செயல்களில் அரபிகள் ஈடுபடுவதில்லை. யாரிடத்தும் விரோதமோ, குரோதமோ காட்டுவதில்லை. வன்மம், பலாத்காரம் என்ற உணர்வுகட்கு மனதில் அறவே இடமளிப்பதில்லை. அன்பு, அருள், அமைதி, சாந்தம், மகிழ்ச்சி ஆகிய நல்லுணர்வுகள் பொங்கிப் பொழியும் ஊற்றாக நெஞ்சத்தை ஆக்கிக் கொண்டு மனிதப் புனிதர்களாக வாழ முற்படுவர். எனவே, தீய உணர்வுகள் நீங்கிய சதியினின்றும் அறவே, விலக்கப்பட்ட-அதாவது ஹராமாக்கப்பட்ட ‘அல்ஹராம்’ எனும் பொருளிலேயே ‘முஹர்ரம் என அழைக்கப்படுகிறது. துவக்க மாதமாகிய ‘முஹர்ரம்’ முதல் மாத உணர்வே ஆண்டு முழுவதும் வாழ்வில் அரசோச்ச வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் வேணவாவாகும்.
இந்தியா உட்பட உலகெங்கும் பலவித ஆண்டுக் கணக்குகள் நிலவி வந்த போதிலும் உலகெங்கும் பேணப்பட்டு வரும் ஆண்டுக்கணக்குகள், கிருஸ்துவ ஆண்டுக் கணக்கும் இஸ்லாத்தின் ஹிஜ்ரி ஆண்டுக் கணக்குமேயாகும். உலகப் பெரும் சமயங்களாக இவ்விரண்டும் அமைந்திருப்பதும் இதற்கு முக்கியக் காரணமாகும்.
இஸ்லாமிய ஆண்டுக் கணக்கிற்கும் கிருஸ்தவ ஆண்டுக் கணக்கிற்கும் சிறிதளவு வேறுபாடு உண்டு. கிருஸ்தவ ஆண்டுக்கணக்கு சூரிய சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரி கணக்கு சந்திரப் பெயர்ச்சியை அடித்தளமாகக் கொண்டு அமைந்துள்ளது. சூரியக் கணக்குப்படி ஆண்டுக்கு 365 நாட்கள் சந்திரக் கணக்குபடி ஒராண்டுக்கு 354 நாட்கள். மட்டுமே. இரண்டிற்குமிடையே குறைந்தது 10 நாட்கள் வித்தியாசமுண்டு.
இறை கட்டளைகளை
நினைவூட்டும் முஹர்ரம்
எனினும், இஸ்லாமியப் புத்தாண்டான முஹர்ரம் வெறும் நாட்களை மட்டும் குறிப்பதாக அமையாமல் மனிதன்மாட்டு இறைவன் விதித்த கட்டளைகளையும் அவற்றை நிறைவேற்ற மனிதனுக்குள்ள கடப்பாடுகளையும் நினைவூட்டுவதாகவும் அமைந்துள்ளது. இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள நேசத்தையும் அதை முழுமையாக அடைய ஒவ்வொரு மனிதனும் மேற்கொள்ள வேண்டிய நல்லுணர்வுகளையும் செயல்பாடுகளையும் சுட்டிக்காட்டும் புனிதமிகு புத்தாண்டுத் தினமாகவும் உள்ளது. சுருங்கக் கூறின் இஸ்லாமியப் புத்தாண்டு எண்ணிக்கைக்காக மட்டுமின்றி எண்ணத்தை வளர்த்து வளப்படுத்தும் இனிய துவக்க நாளாகவும் அமைந்துள்ளதெனலாம்.
முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் புனிதமிகு ‘ஆஷூரா’ (யவ்முல்) தினமாகவும் பேணப்படுகிறது. யவ்முல் ஆஷூரா என்பதற்குப் ‘பத்தாம்’ என்பது பொருளாகும். இந்நாள் இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் மட்டுமல்லாது வரலாற்று அடிப்படையிலும் அதிஉன்னத நாளாகக் கருதப்படுகிறது. புனித ரமலான் நோன்பு நாட் களுக்கு அடுத்தபடியான சிறப்பு மிக்க நாட்களாக ஆஷூரா நோன்பு நாட்கள் போற்றப்படுகின்றன. ஆஷூரா நோன்பு நாட்கள் ஒராண்டும் தொழுகைக்குச் சமமாகும் எனப் பெருமானார் கூறியுள்ளார்.
பத்து நாள்
நிகழ்வுகள்
முஹர்ரம் பத்தாம் நாளாகிய ஆஷூரா தினத்தன்று பத்து முக்கிய வரலாற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.
மனித குலத்தின் முதல் தந்தையாகிய ஆதாமும் தாயாகிய ஹவ்வாவும் இந்நாளில் தான் அல்லாஹ்வால் நிலவுலகினில் கால் பதித்தனர். இறைக்கட்டளைக்கு மாறு செய்த அவர்களின் பிழை இறைவனால் பொறுக்கப் பட்டதும் இந்நாளிலே தான்.
ஊழி மழையின்போது கப்பலோடு ஆறுமாத காலம் கடலில் மிதந்த ‘நோவா’ எனும் நூஹ் (அலை) பிற உயிரினங்களோடு ஜூதி எனும் மலையில் இறங்கியதும் இதே ஆஷுரா நாளன்று தான்.
“ஓர் இறைக் கொள்கையை உரமாக மக்களிடையே பரப்பி, அதனால் சினமுற்ற நிம்ருது எனும் கொடுங்கோல் மன்னன் தந்த எண்ணற்ற துன்பங்களை ஏற்ற ‘ஆப்ரஹராம்’ எனும் இபுராஹீம் (அலை) பிறந்ததும், ‘இறைத்தூதர்’ எனும் ‘கலீல்’ பட்டத்தை அல்லாஹ்விடமிருந்து பெற்றதும் இதே முஹர்ரம் பத்தாம் நாளாகிய ஆஷுரா நாளன்றுதான்.
‘இறைவனைத் தவிர வணங்குதற்குரியவர் வேறு யாருமில்லை’ எனப் பிரச்சாரம் செய்த மோசஸ் எனும் மூஸா (அலை) பிர்அவ்னின் கொடுங்கோன்மையினின்றும் தப்பிச் செல்லும்போது செங்கடல் பிளந்து நின்று வழிவிட்டுக் காத்ததும் இதே ஆஷுரா நாளில் தான்.
ஜீஸசாகிய ஈஸா (அலை) அவர்களைக் கொலையாளிகளிடமிருந்து இறைவன் விண்ணுக்கு உயர்த்திக் கொண்ட தும் இப்புனிதமிகு ஆஷூரா நாளின்போதுதான் என்பது வரலாறு.
இஸ்லாமியக் கோட்பாட்டின்படி வானம், பூமி, சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள் அனைத்தும் அல்லாஹ்வால் படைக்கப்பட்டதும் முஹர்ரம் பத்தாம் நாளன்றுதான். முதன்முதலாக மண்ணுலகின் இறைவனருளால் மழை பெய்வித்ததும் புனிதமிகு முஹர்ரம் அன்று தான்.
மனுக்குலத்தின் இறுதித் தீர்ப்பு நாள் ஆஷூரா தினத்தன்றே அமையும் என்பது இறைமறை தரும் செய்தியாகும்.
இதுவரை கூறப்பட்ட வரலாற்று நிகழ்ச்சிகள் பெருமானார் பிறப்பதற்கு முன்னதாக நடைபெற்றவை களாகும்.
கர்பலா துன்ப
நிகழ்வு
பெருமானார் பெருவாழ்வு முடிவுற்ற பின்னர் அவர் தன் பேரர் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களும் அவரது குடும்பத்தினரும் தோழர்களும் கர்பலா எனுமிடத்தில் இதே முஹர்ரம் பத்தாம் நாளன்றுதான் படுகொலை செய்யப்பட்டனர். நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டவும் இஸ்லாமிய ஜனநாயகப் பண்பைக் கட்டிக் காக்கவும் இறைநெறியை நிலைநிறுத்தவுமே இன்னுயிர் ஈந்தனர். இமாம் ஹுஸைனின் இத்துன்ப முடிவு இஸ்லாமியரின் இதயத்தின் துன்பச் சுமையேற்றிய நிகழ்வு என்பதில் ஐயமில்லை. எனினும், இதன்மூலம் முஹர்ரம் மாதத்தின் சிறப்போ ஆஷூரா நாளின் புனிதத் தன்மையோ கூடவும் இல்லை. குறையவும் இல்லை. ஏனெனில் பெருமானார் மூலம் இஸ்லாமிய நெறியை நிறைவு செய்துவிட்டதாக இறைவன் தன் திருமறையில் தெளிவாகக் கூறியுள்ளான். எனவே, முஹர்ரம் மாதத்தின் மேன்மையை ஆஷூராவின் புனிதமிகு சிறப்பை கருத்திற்கொள்ளாது துக்கதினமாக மட்டும் கொண்டு செயல்படுவது இறைநெறிக் கோட்பாட்டிற்குப் பொருத்தமுடையதன்று.
முஹர்ரம் தரும்
எழுச்சிமிகு சிந்தனைகள்
புனிதமிகு முஹர்ரம் புத்தாண்டு அன்று எழுச்சிமிகு எண்ணங்களை நெஞ்சத்தில் தேக்கி எதிர்வரும் நாட்களை மகிழ்ச்சிப் பெருக்கோடு எதிர்கொள்ளவேண்டும். இறையாணைக்கொப்ப அமைதி மாதமெனும் முஹர்ரம் முதல்நாள் முதல் ஒவ்வொரு முஸ்லிமும் தன் அக வாழ்விலும் புற வாழ்விலும் அமைதிச் சூழ்நிலை உருவாவதற்காக முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும். அமைதி உணர்வுக்கு ஊறு ஏற்படுத்தும் வேற்றுமை உணர்வுகளை அறவே விலக்கி அன்பும் அமைதியும் நிலைபெற அரும்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் இனிய பண்பு வாழ்வில் அரசோச்ச வேண்டும். உலக மக்கள் அனைவரையும் ஆதாமின் வழிவந்த சகோதரர்களாகப் பாவிக்கும் இயல்புடைய இஸ்லாமியச் சகோதரர்கள் எக்காரணம் கொண்டும் வேற்றுமை உணர்வுகள் தங்களிடம் படியாவண்ணம் காத்துக் கொள்ள வேண்டும். ஒருங்கிணைவான உணர்வூட்டும் செயல்களை மட்டுமே மேற்கொள்ளவேண்டும். தன்னலம் மறுத்துப் பிறர் நலம் பேணும் பேரறிவாளர்களாக வாழ இப்புத்தாண்டில் உறுதி கொள்ள வேண்டும். ஆஷூரா நோன்பு நோற்பதோடு ஏழை எளியோர்க்கு வாரி வழங்கியும் மார்க்கப் பெரியோர்களைத் தேடிச் சென்று கண்டும், தன் குடும்பத்தாரையும் தன்னைச் சார்ந்து நிற்போரையும் மகிழ்ச்சிப்படுத்தும் செயல்களை மேற்கொள்ள வேண்டும். இயன்ற வரை நஃபில் எனும் கூடுதல் தொழுகைகளை நிறைவேற்றி இறைவனின் இன்னருளைப் பெற்று உய்தி பெற முயல வேண்டும்.
நன்றி: தினமணி