பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்/சமய நல்லிணக்கத்துக்கு எது தடை?


சமய நல்லிணக்கத்துக்கு
எது தடை?


அழகுமிகு ஹவாய் தீவு

அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பசிபிக் மாகடலில் அமைந்துள்ள தீவான ஹவாய்த் தீவுக்கு மூன்றாவது முறையாக என் துணவியாரோடு சென்றிருந்தேன். தீவின் அழகும் அமைதியும் உள்ளத்தைக் கொள்ளைக் கொள்வதாக இருந்தது. சென்ற மறுநாள் சுற்றுலாக் குழுவொன்றோடு தீவைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்.

உலகிலேயே அழகான
நீண்ட கடற்கரை!

ஹவாய்த் தீவைச் சேர்ந்த வழிகாட்டியாக வந்த பெண்மணி மணல் நிறைந்த கடற்கரையை அணுகியபோது “உலகிலேயே மிக அழகான நீண்ட கடற்கரை இது” எனக் கூறி ஹோனலுலு நகருக்கு வெளியே அரை கிலோ மீட்டர் நீளம் கூட இல்லாத கடற்கரைப் பெருமையைப் பற்றிக் கூறி முடிக்குமுன், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர். “இதைவிட அழகான நீண்ட கடற்கரை இந்தியாவில் மெட்ராஸ் நகரையொட்டி அமைந்துள்ளது” என விரைந்து கூறினார். “உலகிலேயே மிக அழகான நீண்ட கடற்கரை பிரேசில் நாட்டுத் தலைநகரான ரியோடிஜெனீரோவில் உள்ளது. இரண்டாவது அழகிய நீண்ட கடற்கரை நாங்கள் வாழும் சென்னை நகரையொட்டி அமைந்துள்ள மெரினா கடற்கரையாகும்.” என நான் அப்பெண்மணி கூறியதையொட்டித் துணைத் தகவலாகக் கூறினேன். நானும் என் துணைவியாரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று அறிந்தவுடன் எங்களோடு நெருக்கமாக ஒட்டிக் கொண்டார். மிகுந்த அன்போது பழகினார். இந்தியாவைக் குறிப்பிடும் போதெல்லாம் ‘ஹோலி லேண்ட்’ (புனித பூமி) எனும் சொல்லை அடிக்கடி பயன்படுத்தினார். அதில் அன்பு கலந்த மரியாதை வெளிப்பட்டது. தான் புனிதமிகு இந்திய நாட்டை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைச் சுற்றிப் பார்த்திருப்பதாகவும் உலகில் வேறு எங்கும் காண முடியாத ஆன்மீக உணர்வு பொங்கும் நாடாக இந்தியாவைக் கண்டதாகவும் கூறிப் பாராட்டினார்.

இன ஒருமைக்கு எடுத்துக்காட்டான நாடு

எங்கள் உரையாடலின் இடையே அழகு கொஞ்சும் ஹவாய்த் தீவில் ஹவாய் பூர்வகுடி மக்களோடு அமெரிக்கர்களும் ஜப்பானிய, பிலிப்பைன் மக்களும் அமைதியாகவும் இணக்கமாகவும் வாழ்ந்து வரும் பாங்கைப் பாராட்டினேன். இஃது இன ஒருமைக்கோர் எடுத்துக்காட்டு எனக் கூறினேன். உடனே ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த அப்பெண்மணி இங்கு மூன்று நாட்டு இன மக்கள் ஒருங்கிணைந்து வாழ்வதைப் பாராட்டுகிறீர்கள். இது உங்கள் இந்தியப் பண்பாட்டைக்காட்டுகிறது. ஆனால், நான் இந்தியச் சுற்றுலாவின்போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் செய்தபோது எங்குமே காணமுடியாத மனித நேயத்தையும் ஒருமைப்பாட்டையும் கண்டு அதிசயித்தேன். எத்தனை வகையான இன மக்கள்; எத்தனை வகையான மொழிகள்; நடையுடை, பாவனைகள்; தங்களது சமயச்சார்புடைய கலை, பண்பாடுகளை விளக்கும் வகையில் அமைந்த கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், குருத்துவாரங்கள், புத்த விஹார்கள், ஜைனக்கோயில்; இத்தனை இனங்களும் மதங்களும் மொழிகளும் கலைகளும் பண்பாடுகளும் ஒன்றாக இணைந்து இயங்குவதைக் கண்டு அதிசயித்தேன். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமாக அமைந்திருப்பது ஆன்மீக உணர்வு எனும் ஆழமான வேரை இந்தியா கொண்டிருப்பதுதான் என்பதை என்னால் நன்கு உணர முடிந்தது. இந்த வகையில் சின்னஞ்சிறு நாடான ஹவாய்த் தீவு அல்ல, இந்தியாவே உலகத்துக்கு வழிகாட்டி நாடாக விளங்கி வருகிறது. பல் சமய, இன, மொழி, பண்பாட்டு ஒருங்கிணைவு எப்படியமைய வேண்டும் என்பதற்கு இந்தியாவே உலகத்துக்கு உத்வேக மூட்டி வருகிறது,” என உணர்ச்சி பூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் ஒரு குட்டிப் பிரசங்கமே நிகழ்த்தி விட்டார். இந்தியாவைப் பற்றி அப்பெண்மணி கொண்டிருந்த கருத்தும் உணர்வும் என் நெஞ்சத்தைத் தொட்டது. இந்தியாவைப் பற்றி அந்நிய நாட்டுப் பெண்மணி மனந்திறந்து கூறிய பாராட்டுரையால் நெகிழ்ந்து போன என் துணைவியாரின் கண்கள் பனித்து விட்டன. இந்தியாபற்றி ஸ்வீடன் நாட்டுப் பெண்மணி கொண்டிருந்த எண்ணம் இந்தியாவைப் பற்றி உலகம் கொண்டுள்ள உணர்வையே முழுமையாகப் பிரதிபலித்தது என்பதில் ஐயமில்லை.

உலக அரங்கில் இந்திய
பெருமைக் குலைவு

பல்வேறு மதங்களும் இனங்களும் மொழிகளும் பண்பாடுகளும் சகிப்புணர்வோடு ஒத்து வாழும் ஒருங்கிணைவுக்கு உலகத்துக்கே வழிகாட்டும் ஒளி விளக்காக அமைந்துள்ள இந்தியப் பெருமையைக் குலைக்கும் வகையில் சிலரது நடவடிக்கைகள் அமைந்து வருவது ஸ்வீடன் நாட்டுப் பெண்மணி போன்ற உலக மக்கள் கொண்டுள்ள இந்தியாவைப் பற்றிய பெருமை உணர்வு எங்கே தகர்ந்து போகுமோ என்ற அச்ச உணர்வு நல்ல உள்ளங்களையெல்லாம் இன்று வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் தலையாய பண்பாகத் தொன்று தொட்டு இருந்து வருவது எந்தவொரு விஷயத்திலும் யார்? என்பதை விட என்ன? என்பதில் மட்டும் கருத்தைச் செலுத்தும் தகைமையே யாகும். இந்தியாவிலேயே இந்து, ஜைன, புத்த, சீக்கிய மதங்கள் உருவாகியிருந்த போதிலும், இந்தியாவுக்கு வெளியேயிருந்து வந்த கிருத்துவ, இஸ்லாமிய பார்ஸி சமயங்களையும் அவற்றின் மூலம் வந்த சமயத் தத்துவங்களையும் கலை, பண்பாடுகளையும் இருகரமேந்தி வரவேற்கத் தவறவில்லை. காலப் போக்கில் இவையெல்லாம் இந்தியச் சமயங்கள் என்ற உணர்வையும் மக்களிடையே உண்டாக்கின. இதுதான் இந்தியாவின் தனித்துவமாக உலக அறிஞர் பெருமக்களால் கணித்துப் போற்றப்படுகிறது. நல்ல சிந்தனைகள், சன்மார்க்க உணர்வுகள் எங்கிருந்து வந்தாலும் யாரால் கூறப்பட்டாலும், அவற்றை யெல்லாம் தனதாக்கிக் கொண்டு வலிமை பெறுவதுதான் இந்தியாவின் தனித்தன்மை எனத் தத்துவமேதை டாக்டர் இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் கூறியுள்ளனர். இதே உணர்வை இந்தியா ஆன்மீக மறு மலர்ச்சிக்கு அயராது உழைத்த விவேகானந்தரும் பலமுறை எடுத்தியம்பியுள்ளார்.

பெருமைமிகு பாரத நாடு பன்னெடுங்காலமாகக் கட்டிக்காத்து வளர்த்து வந்த இந்த உயரிய பண்பு, உலகத் துக்கே வழிகாட்டி வந்த மாண்பமைபோக்கு, இன்று குறுகிய உள்ளமுடைய, சுயநலவேட்கை மிக்க சிலரால், தடுமாற்றத்திற்காளாகக்கப்பட்டிருப்பதுதான் வேதனை தருகிறது.

மனித நேயமும்
சமய ஒருங்கிணைவும்

இந்து சமயமாகட்டும், கிருஸ்தவமதமாகட்டும், இஸ்லாமிய மார்க்கமாகட்டும் எதுவுமே பிற மதங்களை வெறுக்கவோ பகைக்கவோ கூறவே இல்லை. மனித நேயத்தையும் சமய ஒருங்கிணைவையுமே அவை வலியுறுத்துகின்றன.

இஸ்லாத்தைப் பொருத்தவரை, உலகிலுள்ள அனைத்துச் சமயங்களும் மரியாதைகக்குரியன எனப் போதிக்கிறது. பிற சமயத்தவர் வேதங்கள், வணக்கத் தலங்கள், அவர்கள் போற்றிப் பின்பற்றும் வேதங்கள்; அவர்கள் மேற் கொண்டொழுகும் சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆகிய அனைத்தையும் ஒரு முஸ்லிம் மதிக்க வேண்டும் எனப் பணிக்கிறது. அவற்றைப் பற்றித் தவறாகப் பேசுவதை அறவே தடுக்கிறது.

“அல்லாஹ்வை விடுத்து அவர்கள் எவற்றை வணங்குகிறார்களோ அவற்றைப் பற்றி நீங்கள் தீங்கு பேசாதீர்கள்” (6:-08) என்பது திருமறையாகிய திருக்குர்ஆன் வாசகமாகும்.

அவரவர் சார்ந்துள்ள மார்க்கத்தை-மதத்தை அவரவர் வழியில் பேணி, பின்பற்ற இஸ்லாம் எடுத்துக் கூறுகிறது, இதைப்பற்றி திருக்குர்ஆன்.

“உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு” என எடுத்தோதுகிறது.

“இஸ்லாம் எந்தச் சமயத்திற்கும் எதிரானது அல்ல,” என்பது நபிகள் நாயகத்தின் வாக்காகும்.

அதுமட்டுமல்ல, உலகிலுள்ள அனைத்துச் சமயங்களையும் அவற்றின் வேதங்களையும் அவற்றிற்குக் காரணமான தீர்க்கதரிசிகளையும் பெரிதும் மதிக்கப் பணிக்கிறது. அவை அனைத்தும் இறைவனால் வழங்கப்பட்டவைகளே என இஸ்லாம் எடுத்துக் கூறுகிறது. இஸ்லாமிய மரபுப்படி முதல் மனிதரும் முதல் இறைதூதருமான ஆதாம் நபி தொடங்கி, இறுதி நபி அண்ணல் நபிகள் நாயகம் வரை ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபிமார்கள் - தீர்க்க தரிசிகள் - இறைதூதர்களாக மக்களுக்கு நேர் வழிகாட்ட இறைவனால் அனுப்பப்பட்டு உள்ளனர்.

“அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நம்முடைய) தூதர் வராத எந்த வகுப்பாரும் (பூமியில்) இருக்கவில்லை.” (35:24).

“ஒவ்வொரு வகுப்பினருக்கும் (நம்மால்) அனுப்பப்பட்ட ஒரு தூதர் உண்டு” (10:47) எனக்கூறும் திருக்குர்ஆனின் இவ்விரு வசனங்களிலிருந்து உலகெங்கும் உள்ள எல்லா நாடுகளிலும் எல்லா இனத்திலும் இறை தூதர்கள் தோன்றி, மக்களை நல்வழிப்படுத்தியிருக்கிறார்கள் என்ற பேருண்மை வெளிப்படுகிறது.

இவர்கள் மூலமே இறைவேதங்களும் அவ்வக் காலகட்டத்திற்கேற்ப இறக்கியருளப்பட்டுள்ளது என்பதும் திருக்குர்ஆன் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது. இவ்வேதங்கள் அவரவர் தாய்மொழியிலேயே இறைவனால் வழங்கப்பட்டுள்ளன என்பதை,

“நபியே! ஒவ்வொரு தூதரும் தம் மக்களுக்குத் தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு, அவரவருடைய மக்களின் மொழியைக் கொண்டே (போதனை புரியுமாறு) நாம் அவர்களை அனுப்பி வைத்தோம், ! (14:4) எனத் திருக்குர்ஆன் மொழிகின்றது. இதிலிருந்து மண்ணுலகின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் அவரவர் தாய்மொழியிலேயே இறை வேதங்கள் இறை தூதர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் இந்தியாவிலும் பலப்பல இறை தூதர்களும் இறை வேதங்களும் வந்திருக்கலாம் என்பதில் ஐயமில்லை. அத்துடன் இந்தியா உட்பட உலகெங்கும் தோன்றி மக்களுக்கு நல்வழிகாட்டிய அனைத்து இறை தூதர்களும் அவர்கட்கு இறைவனால் வழங்கப்பட்ட இறை வேதங்களும் ஒவ்வொரு முஸ்லிமாலும் மதிக்கப்பட வேண்டியவை என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளத் தெளிவாகும்.

சமயத்திற்கும் சமயத்தவர்களுக்கும்
இடையேயுள்ள இடைவெளி

தாங்கள் எந்த சமயத்தைச் சார்ந்துள்ளார்களோ அந்த சமயம் வகுத்து கூறியுள்ள வாழ்வியல் நெறிகளை தத்துவக் கருத்துகளை உண்மையான உணர்வுகளை தெளிவாகத் தெரிந்து கொள்ளாதவர்களாலேயே மதக் குழப்பங்களும் மோதல்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஒரு இந்துவுக்கு மகனாகப் பிறந்துவிட்ட காரணத்தினாலேயே இந்துவாக இருப்பவர்கட்கு, ஒரு முஸ்லிமுக்கு மகனாகப் பிறந்த காரணத்தாலேயே ஒரு முஸ்லிமாக நடமாடி வருபவர்கட்கு, ஒரு கிறிஸ்தவனுக்குப் மகனாகப் பிறந்ததனால் மட்டும் தன்னை ஒரு கிறிஸ்தவனாகக் கருதி வாழ்பவர்கட்கு, தங்கள் சமயங்கள் கூறும் வாழ்க்கை வழிமுறைகளை தத்துவக் கருத்துகளை முழுமையாகத் தெரிந்து தெளிவடையும் வாய்ப்புகள் இன்றைய கல்வி முறையால் அறுகி வருகின்றன. எனவே, மதங்களுக்கும் மதப் பெயர்களால் மட்டும் வாழ்பவர்களுக்கும் இடையே மாபெரும் இடைவெளி இன்று ஏற்பட்டு வருகிறது. இதனால் சாமர்த்தியமாக வெறும் மதவெறியூட்டப்படும் இவர்கள், தாங்கள் மேற்கொள்ளும் தவறான நடவடிக்கைகள் ஏன்? எதற்காக? என்பதைத் தெளிவாக அறிந்துணரும் திறனற்றவர்களாக இருக்கிறார்கள் என்றே கூறவேண்டும். உண்மையான சமய உணர்வு உடையவர்களாக இருந்திருந்தால் கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாக இராமர் சிலையை வைத்துக் கோயிலாகக் கருதி வழிபட்டு வந்த இறையில்லத்தை உடைப்பார்களா? கோயில் கட்ட கோயிலை இடிக்கும் விந்தை மனிதர்களாக மாறியிருப்பார்களா?

இத்தகையவர்களுக்கு உண்மையான சமய உணர்வு மட்டுமல்ல, சமுதாய உணர்வும் இல்லை என்றே கூற வேண்டும்.

தனிமனிதனின் கடமைகளும்
சமுதாய மனிதனின் கடமைகளும்

ஒவ்வொரு மனிதனும் இரு வகைகளில் இயங்குகிறான். ஒன்று, தனிமனிதன். மற்றொன்று சமுதாய மனிதன். வீட்டளவில் அவன் வாழும்வரை தனி மனிதன். வீட்டை விட்டு வீதியில் காலெடுத்து வைக்கும்போது அவன் சமுதாய மனிதனாகி விடுகிறான். வீட்டிற்குள் இருக்கும் தனிமனிதன், தன் விருப்பம் போல் அனைத்து உரிமைகளையும் சுதந்திரமாக நான்கு சுவற்றுக்குள் அனுபவிக்க முடியும். ஆனால், அதே மனிதன் பல்வேறு உணர்வுகளும் சிந்தனைகளும் கருத்துகளும் உலவும் வீதிக்கு வரும்போது அவன் உரிமைகளும் சுதந்திரமும் கட்டுப்படுத்தப்படுகிறது. வீதியில் கழியைச் சுழற்றிச் செல்ல உரிமை உண்டெனினும் அது பிறர் மீது படாதபடி சுழற்றிச் செல்லவே உரிமை உண்டு.

சமயம் என்பது தனி மனிதன் சம்பந்தப்பட்டதாகும். சமயத் தத்துவங்களும் உணர்வுகளும் மனம் சம்பந்தப்பட்டதாகும். இறையுணர்வால் தங்கள் உள்ளத்தைப் பொங்கிப் பொழியும்படி செய்வதன் மூலம் இறையருளைப் பெற முடியும் என்பதுதான் ஒவ்வொரு சமயமும் உணர்த்தும் உண்மை.

இதற்காக அவரவர் எந்த அளவுக்கு மனப்பக்குவமும் ஆன்மீக உணர்வும் இறைப்பற்றும் பெறுகிறாரோ அந்த அளவுக்கு அவர் பரகதி பெற முடியும். இதற்குரிய இடமாகத் தாங்கள் வாழும் இல்லமும், இதற்கெனவே உருவாக்கப்பட்ட இறையில்லங்களும் அமைந்துள்ளன. எனவே, தனி மனிதத் தொடர்புடைய சமய நடவடிக்கைகள் முழுமையாகச் செயல்பட வேண்டிய இடங்களும் இவை இரண்டும் மட்டுமே. சமுதாய வீதி இதற்குரிய களமல்ல என்பதை ஒவ்வொருவரும் நன்கு உணர்ந்து செயலாக்க வேண்டும். பல்வேறு சமய உணர்வு கொண்ட சமுதாய மக்களிடையே சமய உணர்வுகளை, சமயச் சடங்குகளைத் தூக்கிச் செல் வதன் மூலமே அனைத்துப் பிரச்சினைகளும் குழப்பங்களும் தோற்றுவிக்கப்படுகின்றன. கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், விஹார்கள், குருத்துவாராக்களுக்குள் சடங்குகள் நடப்பதாயின் எந்தப் பிரச்சினையும் ஏற்பட வழியில்லாமல் போய்விடும்.

சமயப் பிரச்சினைக்குத்
தீர்வு காண்பது யார்?

சமயம் சம்பந்தப்பட்ட எந்தவொரு பிரச்சினையும் சமயத் தலைவர்களாலேயே கையாளப்பட வேண்டுமே யொழிய வெறும் ஒட்டுச் சேகரிப்பையும் அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றத் துடிக்கும் சுய நல அரசியல்வாதிகளால் அல்ல. சமயத்தின்பால் உண்மையான பற்றோ சமய அறிவோ இல்லாத அரசியல் வாதிகளால் உண்மையான சமயத் தத்துவக் கருத்துகளும் சமயச் சிந்தனைகளும் பாழ்படுகின்றன. கேலிக்குறியவையாக் கப்படுகின்றன. இவை உண்மைச் சமயத்துக்கு நேர் மாறானவையாக அமைய நேர்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே அரசியல், அரசியலாக இருக்க வேண்டும். சமயம், சமயமாகவே இருக்க வேண்டும். இரண்டின் தன்மைகளும் வெவ்வேறானவை. இரண்டும் இணைவது விபரீத விளைவுகளுக்கே வழியாயமையும். அதுவும் இந்தியா போன்ற சமயச் சார்பற்ற அரசு இயங்கும் நாட்டில் மதத்தில் அரசியல் கலப்பது மிக மோசமான விளைவுகளுக்கு வழி வகுக்கும் என்பது கடந்தகால கசப்பான உண்மையாகும்.

எனவே, வீட்டிலும், வழிபாட்டுத் தலங்களிலும், அதற்கென உருவாக்கப்பட்டுள்ள வளாகங்களோடு சமய நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டு, சமுதாய வீதிக்கு வரும்போது சமயங்கடந்த இந்தியனாக எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் இந்திய மக்கள், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் இந்திய மக்கள், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் ஓர் விலை, எல்லோரும் இந்நாட்டு மக்கள் எனப் பாரதி கூறிய வாழ்வியல் நெறிக் கேற்ப வாழ முனைய வேண்டும். இதன் மூலம் உண்மையான இந்தியப் பண்பாட்டை நிலை நிறுத்த முடியும். சமயங்களைக் கண்ணியப்படுத்தவும் மனித நேயத்தை வளர்க்கவும் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தவும் இயலும். இதுவே வலுவான பொருளாதார வளர்ச்சிக்குரிய ராஜபாட்டையாக அமைய முடியும்.

‘மந்தையை விட்டுச் செல்லும் ஆட்டைத்தான் ஓநாய் இரையாக்கிக் கொள்கிறது’ என்ற பால பாடத்தை நாம் எப்போதும் நினைவில் கொண்டு, நாட்டுப் பாதுகாப்புக்கு வலுமிக்க கேடயமாக வேண்டும். சமய நல்லிணக்கமே சமுதாய வலுவுக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படை என்பதை இனியேனும் மறக்காமல் கடைப்பிடித்து வெற்றி காண்போமாக.