பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்/தியாக உணர்வு தரும் ரமளான்

தியாக உணர்வு தரும்
ரமளான்


ஐந்தில் நான்கு

பிறை கண்டு மலரும் ரமளான் மாதம், இறைமறை மனித குலத்துக்குக் கிடைத்த மாண்புமிக்க மாதமுமாகும்.

இஸ்லாம் மனித குல சீர்மைக்கென வகுத்துத் தந்த ஐம்பெரும் கடமைகளுள் நான்கை முற்றாக நிறைவேற்ற வாய்ப்பளிக்கும் மாதம் ரமளான்.

இறை நம்பிக்கை எனும் கலிமா, தொழுகை, நோன்பு, ஏழை வரி எனும் ஜக்காத், ஹஜ் ஆகிய ஐம்பெரும் கடமைகளுள் ஹஜ் கடமை தவிர்த்துள்ள நான்கு கடமைகளும் இப்புளித மாதத்தில் ஒரு சேர முஸ்லிம்களால் நிறைவேற்றப்படுகிறது.

இஸ்லாமியக் கடமைகள் ஐந்துமே இறை வணக்க அடிப்படைகளைக் கொண்டுள்ளன. ‘இறைவன் ஒருவனே, முஹம்மது இறை தூதர்’ எனும் நம்பிக்கையை மனதுள் அழுந்தப் பதிக்கும் கலிமாவின் மூலம் மனத்தால் இறை வணக்கம் செய்யப்படுகிறது.

ஐவேளைத் தொழுகையும் ரமளான் மாத நோன்பும் மனத்தாலும் உடலாலும் இறை வணக்கம் புரிய வழியமைக்கிறது. ஏழை வரி எனும் ஜக்காத் கடமை பொருளால் இறை வணக்கம் புரிவதாகும். புனித மக்காவிலுள்ள இறையில்லமாகிய காஃபா செல்லும் ஹஜ் கடமை மூலம் இறைவனை மனத்தாலும் உடலாலும், பொருளாலும் இறை வணக்கம் செய்ய இயலுகிறது.

ஐங்கடமைகள் தரும்
அற்புதத் தியாக உணர்வு

ஐந்து இஸ்லாமியக் கடமைகளிலும் நீக்கமற நிறைந் திருக்கும் மற்றொரு சிறப்பு தியாக உணர்வாகும்.

வைகறை முதல் இரவு வரை ஐந்து முறை தொழும் ஒருவர் தன் அரிய நேரங்களை இறைவனுக்காகத் தியாகம் செய்து இறை வணக்கம் புரிகிறார். அதிகாலையில் தன் இன்பமான தூக்கத்தைத் துறக்கிறார். ஐவேளை தொழுகை நேரங்களில் தான் விரும்பும் கேளிக்கைகளையெல்லாம் உதறித் தள்ளி, பொருள் தேடும் வேட்கையை நிறுத்தி வைத்து இறைச் சிந்தனையாளராக மாறிவிடுகிறார்.

இறை வணக்கத்திற்காக தொழும் பொழுதெல்லாம் தன் உடலைக் குனிந்தும் மண்டியிட்டும், தரையில் நெற்றி படிய தலை சாய்த்தும், உடல் வருந்த தொழும்பொழுது தன் உடல் சுகத்தையெல்லம் தியாகம் செய்து விடுகிறார்.

ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்கும் ஒரு முஸ்லிம் புலர்காலைக்கும் முன்னதாகவே உணவு உண்பதை நிறுத்திவிடுகிறார். மாலை மயங்கிய பிறகு உணவு கொள்கிறார். இடைப்பட்ட பகற்பொழுது முழுவதும் ஒரு சொட்டு நீரும் பருகாமல் நோன்பு நோற்கிறார். பகல் முழுவதும் பசி, தாகம், அடக்கி இறைச் சிந்தனையாளராக மாறுகிறார். பகற்பொழுது முழுவதும் தான் விரும்பி உண்ணும் உணவுகளையெல்லாம் ஏறிட்டும் பாராது தியாகம் செய்கிறார். தான் அடிக்கடி குடிக்கும் தேநீர், காபி, சுவை நீர் போன்றவற்றையெல்லாம் உதறித் தள்ளி தியாகம் செய்கிறார். தான் விரும்பி உண்ணும் உணவு வகைகளையும் பருகி மகிழும் சுவை நீர்களையும் துறப்பதோடு பசியின் கொடுமையை பகல் முழுவதும் அனுபவிக்கிறார். இதன் மூலம் ஏழை எளியவர்களின் பசித்துன்பம் எத்தகையதென அறிந்துணர்ந்து, அவர்தம் பசிப்பிணி போக்க விழைகிறார். இவ்வாறு ஒவ்வொரு முஸ்லிமும் ஈகையாளராக மாறி வாரி வழங்க முற்படுகின்றனர். நோன்பின்போது வணங்குவதும் வழங்குவதுமான உணர்வுகொள்ளும் ஒவ்வொருவரும் தங்கள் வழக்கமான பல்வேறு பழக்கங்களையெல்லாம் தியாகம் செய்தவர்களாகிறார்கள்.

வாரி வழங்க வழி
வகுக்கும் ஜகாத்

ஏழை எளியவர்களுக்கு வசதி படைத்தோர் வாரி வழங்க வேண்டுவது ஆண்டு முழுவதும் கடமையாக அமைந்திருந்தபோதிலும், இப்புனித ரமலானிலே தான் அதிகமாக வழங்கப்படுகிறது. இதை வற்புறுத்துவதே இஸ்லாமிய கடமையான ஏழைவரி எனும் ஜகாத் கடமை. இதுவும் தியாக உணர்வை வளர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

ஒவ்வொரு முஸ்லிமும் அரிய முயற்சிகளின் மூலமும் கடும் உழைப்பின் வாயிலாகவும் பொருளைத் தேடி, சேமிக்கிறார். அவ்வாறு தேடிச் சேர்க்கும் பொருளை மேலும் மேலும் சேர்க்கவே விரும்புவார்கள். தான் பாடுபட்டுத் தேடிய பொருளை பாதுகாத்து அனுபவிக்க அவாவுவது மனித இயற்கை. ஆனால், இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ‘ஜகாத்’ கடமை, தான் தேடிய பொருளின் மீது கொள்ளும் பண ஆசையை, பொருள் வேட்கையைத் தியாகம் செய்யப் பணிக்கிறது.

சமுதாயத்தின் ஒரு அங்கமான மனிதன், தன் முயற்சியால், உழைப்பால் பொருளைத் தேடினாலும் அப்பொருள் மீது தனக்கு மட்டுமல்லாது, பிற மனிதர்கட்கும் உரிமை உண்டு எனப் பணிக்கிறது. தான் உழைத்துத் தேடிய பொருளில் நாற்பதில் ஒரு பங்கை அதாவது இரண்டரை சதவீதத்தை ஏழை எளியவர்களுக்கு, வயோதிகர்களுக்கு, பொருள் தேடி வாழ வழியில்லாத நோயாளிகள் போன்றவர்கட்கு வழங்கியே ஆக வேண்டுமெனக் கட்டளையிடுகிறது. இதையும் பொருள் தேடியவனே தன் சொத்தின் மதிப்பு, அந்த ஆண்டில் தான் தேடிய பொருளின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிட்டு வழங்கும் போது பொருள் மீதுள்ள பேராசையைத் துறக்கிறான். தனக்கு மட்டும் எனும் தன்னல உணர்வை இழக்கிறான். தன் பொருளாயினும் தனக்கு மட்டுமல்லாது அதில் மற்றவர்கட்கும் உரிமையுண்டு என எண்ணும் பொது நல உணர்வுக்கு முழுமையாக ஆட்பட்டு விடுகிறான்.

இவ்வாறு மனிதனை எல்லா வகையிலும் தியாக உணர்வு மிக்கவனாக, பொது நலம் பேணும் புனிதனாகப் புதுப்பிக்கும் புனித மாதமாக அமைந்திருப்பதே ரமளான் மாதம்.

நன்றி : மாலை முரசு