பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்/பெரிய புராணத்தில் சில வினாக்களும் விடைகளும்
140. கோட்புலி நாயனார் இறைவனுக்கு வைத்த நெல்லை உண்டதற்காக - பச்சிளம் குழந்தையையும் கொன்றது சரிதானா?
141. சிறுத்தொண்ட நாயனார் பிள்ளைக்கறி சமைத்தது நியாயம்தானா?
142. இயற்பகை நாயனாரிடம் அவர்தம் துணைவியாரை இறையடியார் வேண்டியதும், அவர் தந்ததும் சரிதானா?
143. சண்டீசர் பதம் பெற்ற விசாரசருமர், தம் தந்தையின் கால்களை வெட்டியது முறைதானா?
ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்திற்கு உடந்தையாகவோ, அதில் பங்கு கொண்டோ இருப்பவர் களும் குற்றவாளிகள்தாம்.
நாம் ஏறிச் செல்லும் மகிழ்வுந்து ஒட்டுநர் வேறு ஆளாக இருக்கலாம். அவர் ஒருவர்மேல் வண்டியை ஏற்றிப் பெருங்குற்றத்தை இழைத்துவிட்டால் ஒட்டுபவர் மட்டுமே அதற்குப் பொறுப்பு- நமக்கதில் தொடர்பு இல்லை என்று சொல்ல முடியாது. வண்டிக்குச் சொந்தக் காரராகிய நாமும் அக்குற்றத்திற்கு ஒரளவு பொறுப் பாளிகள் ஆவோம்.
இன்றைய சட்டம் கூட இதனை ஏற்றுக் கொண்டு Vicarious Liablity இதற்குப் பெயரும் இட்டுள்ளது.
இதனை நன்கு அறிந்தவர் சேக்கிழார்.
குற்றம் செய்த யானையை வெட்டி வீழ்த்திய எறி பத்தர் கடமையிலிருந்து தவறிய யானைப் பாகனையும், அதனை வழி நடத்திச் செல்ல வேண்டிய கடமை தவறிய ஆட்களையும் கொன்றுவிடுகிறார்.
இதனை அறிந்த அரசன், அவர்களைப் பணிக்கு அமர்த்திய தவறு தன்னுடையது ஆதலால் தானும் அதற்குப் பொறுப்பு என்று கூறித் தம்மையும் கொல்லுமாறு வாளை நீட்டுவது எறிபத்த நாயனார் வரலாற்றில் சேக்கிழாரால் சொல்லப்பட்டிருக்கக் காணுகின்றோம்.
ஆகவே, இறைவனுக்கு என்று நெல்லை வைத்து அதனைத் தொடுபவர் பெருங்குற்றத்திற்கு ஆளாவர் என்று ஊரறிய "விரையாக்கலி" என்று மக்களுக்கு அறிவித்த கோட்புலியார் அந்த நெல்லை உண்ட தாயை வெட்டியது சரியே. அவள் பாலை உண்ட குழந்தையும் vicarious liability-யின்படி அக்குற்றத்திற்கு ஆளாகிறது.
மனிதாபிமானம் என்ற அடிப்படையில் அடியார்கள் வாழ்க்கையில் விளக்கம் காண முற்படுவது சரியன்று; சராசரி மனிதர்களிடமிருந்து பல மடங்கு உயர்ந்து நிற்கின்ற இந்த நாயன்மார்கள், கொள்கை என்ற ஒன்றை எடுத்துக்கொண்டால் ஒரு நாளும் அதனைவிட மாட்டார்கள். நாம் அவர்கள் நிலையிலிருந்து அவர்கள் செயலை ஆராய வேண்டுமே தவிர, நம்முடைய நிலைக்கு அவர்களை இழுத்து வந்து ஆராய்வது சரியன்று.
தனி ஒருவனைக் கொல்வது கொலைக் குற்றம். நாட்டைக் காப்பதற்காகக் கடமை பூண்டு தன்னை ஒத்த மனிதர்களைப் பகைவர் என்று பெயரிட்டுக் கொலை புரிவது வீரம் என்று பேசப் படுகின்றது; அதற்கு விருதும் வழங்கப்படுகின்றது.
ஆயினும் கொலை, கொலைதானே! அப்படியிருக்க இந்த இரண்டு கொலைகளையும், வேறுபடுத்தி ஒன்றுக்கு மரண தண்டனையும், மற்றொன்றிற்கு விருதும் வழங்குவது எப்படிச் சரியாகும்?
இதைப் புரிந்துகொண்டால், கோட்புலியார் செயலையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.
அடுத்தபடியாக- சிறுத்தொண்டர் தம்பிள்ளையைக் கறிசமைத்தது சரியா என்ற வினாவைப் பார்ப்போம்.
கொள்கை அல்லது கடமை என்ற ஒன்றிற்காகத் தம் பிள்ளையைக் கறிசமைக்கும் சோதனை யாருக்கு ஏற்பட்டது? நம்மைப் போன்ற சாதாரண மனிதருக்கு அன்று.
பல்லவ மன்னனுக்குச் சேனாதிபதியாக இருந்தவர் பரஞ்சோதி. இவர் சாளுக்கியனை எதிர்த்து அவனுடைய தலைநகராகிய வாதாபி வரை சென்று ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்தார் அல்லவா!
தாய்நாட்டைக் காக்கும் கடமை காரணமாக இதனைப் பரஞ்சோதி செய்தார். பல்லவ மன்னனும் அவர் செயலைப் போற்றிப் பரிசளித்து ஒய்வு தந்தார்.
நாட்டைக் காத்தல் என்ற கடமைக்காக முன்பின் தெரியாதவர்களை வெட்டி வீழ்த்துவது சரி என்று அவரும் கருதினார். உலகமும் அதனை ஏற்றுக்கொண்டது.
அடியார்கள் எது கேட்டாலும் அப்பொருள் தம்பால் இருப்பின் அதனை மறுக்காமல் கொடுப்பது தம் கடமை. தம் கொள்கை என்ற முடிவில் வாழ்ந்தவர் பரஞ்சோதியார். எனவே நாட்டுப்பற்று என்ற கொள்கைக்காகப் பிறரைப் பலியிடுவது போல், தம் கொள்கையைக் காப்பாற்றுவதற்காகத் தம் மகனை அவர் பலியிடத் தயாராக இருப்பாரா என்பதுதான் வினா. பரஞ்சோதியார் என்ற தனிமனிதருக்கு- அவர் கொண்ட கொள்கைக்கு ஏற்பட்ட சோதனையாகும் இது. அந்தச் சூழ்நிலையில் அவர் செய்த செயலைச் சராசரி மனிதர்கள் ஆகிய நாம், நம்முடைய சிறிய அளவு கோலைக் கொண்டு அளவிடுவது சரியாகாது.
அதனால்தான் நாயன்மார்களை சராசரி மனிதரிலிருந்து மிக உயர்ந்து நிற்கும் அடியார்கள் - வீரர்கள் என்று சேக்கிழாரே போற்றுகிறார்.
அகங்கார, மமகாரமாகிய இரண்டையும் அறவே போக்கினால்தான் அடியாராக ஆக முடியும். இவை இரண்டும் போன பிறகு மகன் என்றும், மனைவி என்றும் உறவு கொண்டாடக் கூடியவர்கள் நாயன்மார்களாக இருக்க இயலாது.
நான் என்ற அகங்காரமும், எனது என்ற மமகாரமும் போன பிறகு, என் மனைவி, என் பிள்ளை என்று நாயன்மார்கள் எண்ண மாட்டார்கள்.
எனவே அகங்கார, மமகாரம் அற்ற இவர்கள் செயலை- இவை இரண்டின் வடிவமாக வாழுகின்ற நாம் அளவிட முற்படுவதும், ஆராய்வதும் பொருத்த மற்றதாகும்.
அகங்கார, மமகாரம் அற்றவர்கள்தாம் நாயன்மார்கள். அத்தகைய நாயன்மாராக இயற்பகையாரை நம் கண்முன் நாம் காணவேண்டும்.
தூர்த்த வேடத்தில் வந்த ஒருவர் "காதல் உன் மனைவியை வேண்டி வந்தனம்" என்று எதிரே சொன்ன போதிலும் இயற்பகையாருக்கு எவ்வித உணர்ச்சி வேறுபாடும் தோன்றியதாகத் தெரியவில்லை.
"இது நமக்கு முன்பு உள்ளது" என்று கூறுகின்ற அளவிற்கு வளர்ந்துநிற்கின்றார் இயற்பகையார். "உன் மனைவியை வேண்டி வந்தனம்" என்ற சொல் அவரைப் பொறுத்தமட்டில் எவ்வித உணர்ச்சியையும் ஏற்படுத்தாமல் "இது நமக்கு முன்பு உள்ளது" என்று அவர் பேசுகிறார் என்றால் நாம் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மமகாரத்தின் முழு வடிவமாக இருப்பவள் மனைவி. ஆனால் இயற்பகையாரைப் பொறுத்த மட்டில் அந்த மனைவி அவருடைய வீட்டிலுள்ள குடம், தவலை, நாற்காலி, கைக்குடை என்பவை போலவே கருதப்படும் பொருளாக ஆகிவிட்டது. அதனால்தான் "இது நமக்கு முன்பு உள்ளது" என்று பேசுகிறார்.
அடுத்த வீட்டுக்காரர் நம்முடைய குடையைச் சற்று இரவல் கேட்டால், எவ்வித மனக்கிலேசமும் இல்லாமல் "இதோ இருக்கிறது. எடுத்துப் போங்கள்" என்று சொல்லுவதைப் போல இயற்பகையார் விடை இறுக்கிறார்.
நம் போன்ற சாதாரணமான மக்களைப் பொறுத்த மட்டில் மனைவிக்கும், குடைக்கும் வேறுபாடு உண்டு. இரண்டும் மமகாரத்தின் விளைவுதான் என்றாலும் மனைவி உயிரோடு கூடிய பொருளாகவும், குடை தேவைப்படும் பொழுது பயன்படக்கூடிய பொருளாகவும் வேறுபட்ட நிலையில் உள்ளன.
நாமே மயக்கமுற்றுள்ள நிலையில் இருக்கும் பொழுது பக்கத்தில் உள்ளவர்கள் "கண்ணைத் திறந்து பாருங்கள். உங்கள் மனைவி வந்திருக்கிறாள். உங்கள் மகன் வந்திருக்கிறான்" என்று சொல்லும் பொழுது Deep Coma போன்ற ஆழந்த மயக்கத்தில் உள்ளபொழுது எவ்வித வேறுபாட்டையும் தோற்றுவிப்பதில்லை.
மமகாரத்தை அறவே ஒழித்த இயற்பகையார், அடியார்கள் விரும்பியதைக் கொடுப்பதுதான் தம் பிறப்பின் பயன் என்ற முடிவில் உறுதியாக நிற்கின்றார். எனவே "இது என்னிடத்தில் ஏற்கனவே உள்ளது. எடுத்துப் போகலாம்" என்கிறார்.
அகங்கார, மமகாரங்களை அறவே ஒழித்து இறைவுணர்வில் ஆழ்ந்து நிற்கின்றவர்கள் செய்கின்ற செயலை, அவர்களுடைய அளவு கோலைக் கொண்டு அளக்க வேண்டுமே தவிர, நம்முடைய அளவு கோலில் அளப்பது சரியன்று.
லிட்டரும், மீட்டரும் அளவுக் கருவிகள்தான். பாலை லிட்டரில் அளக்க வேண்டும். துணியை மீட்டரில் அளக்க வேண்டும். லிட்டர் அளவுக் கருவி இல்லாத பொழுது, மீட்டரும் அளவுக்கருவிதானே என்று கூறிக் கொண்டு, பாலை மீட்டரில் அளக்க முற்படுவது சரியான செயல் ஆகாது.
ஆகவே அடியார்கள் செயலை அவர்களின் அளவுகோலைக் கொண்டுதான் அளக்க வேண்டும்.
சண்டேசர் என்று பின்னர்ப் பெயர் பெற்ற விசாரசருமர், சிவபூஜையில் ஈடுபட்டிருந்தார். பால் குடத்தில் அபிடேகத்திற்குரிய பால் வைக்கப்பட்டிருந்தது.
பால் ஒன்றுதான். ஆனால், காப்பி போடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் பாலை நாம் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இறைவனின் அபிடேகத்திற்கு உரியது என்று குறிக்கப்பட்டு ஒரு பாத்திரத்தில் வைத்துவிட்டால் அதன் தன்மையே வேறு.
அரசு ஊழியர்களுக்கு இது நன்கு தெரியும். ஒரு குறிப்பிட்ட செயலுக்கு என்று பணத்தை ஒதுக்கி வைத்து விட்டால் (Earmarked Fund) எக்காரணத்தைக் கொண்டும் அதை மற்றொரு துறைக்குப் பயன்படுத்தக் கூடாது. இதே நிலைமைதான் விசாரசருமர் வரலாற்றில் நிகழ்கின்றது. அவர் குடிப்பதற்கென்று பாலை வைத்திருந்து அதை ஒருவர் காலால் இடறிவிட்டால் உலகம் ஒன்றும் நின்றுவிடாது. ஆனால், இறைவனின் அபிடேகத்திற்கு என்று குறிக்கப்பட்ட பொழுது அந்தப் பால் தனிப் பெருமை பெற்று விடுகின்றது.
விசாரசருமரின் தந்தை வைதிகன். ஆதலால் சிவலிங்கத்தையோ, அபிடேகத்தையோ, சிவபூசையையோ அவன் நம்பாதவன், ஏற்றுக் கொள்ளாதவன். ஆகவேதான் அவன் அந்தக் குடத்துப் பாலைக் காலால் இடறினான்.
விசாரசருமர் சிவ அபராதம் நிகழ்ந்துவிட்டதற்காகக் கீழே கிடந்த குச்சியை எடுத்து அவன் காலில் அடித்தார். சிவ அபராதம் ஆதலால், குச்சி கோடலியாக மாறிற்று. இதில் விசாரசருமர் செய்த செயல் ஒன்றும் இல்லை. இதைப் புரிந்துகொள்வது எளிது.
நம்முடைய வீட்டில் ஒருவன் பணத்தைத் திருடி விட்டால் அதற்குரிய தண்டனை வேறு. அரசாங்கப் பணத்தைக் கையாடிவிட்டால் அதற்குரிய தண்டனை வேறு.
இரண்டும் பணத்திருட்டுத்தான். ஆனால் ஒன்று தனி மனிதராகிய நம்முடைய பணம். மற்றொன்று அரசின் சொத்தாகிய பொதுப்பணம். எனவேதான் தண்டனை மாறுகிறது.
குடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த குடத்துப் பால் அன்று, அபிடேகத்திற்குரிய பால் ஆதலால் பெருந் தண்டனை கிடைத்தது.