பொங்குமாங்கடல்/கடற்கரை மணலில்
அடுத்த ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகலில் தூத்துக்குடி கடற்கரை மணலில் நான் அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தேன். குறுக்கு நெடுக்கே போகிறவர்களைப் பார்க்காதது போல, பார்த்துக் கொண்டு அலைந்தேன். படகுகள், கட்டு மரங்கள், செம்படவர்களின் வலைகள் இவற்றில் தடுக்கி விழாமலும், மோதிக் கொள்ளாமலும் ஜாக்கிரதையாக நடக்க வேண்டியிருந்தது. ஒரு சமயம் ஒரு மனிதன் குனிந்து ஒரு கிளிஞ்சலைப் பொறுக்கியதைப் பார்த்தேன். அப்போது மணலில் தோண்டியிருந்த பள்ளத்தில் நான் விழுந்து விட்டேன். நல்ல வேளையாக யாரும் பார்க்கவில்லையென்பதைத் தெரிந்து கொண்டு நானும் ஒரு கிளிஞ்சலைக் கையில் எடுத்துக் கொண்டு உலாவினேன். இன்னொரு கிளிஞ்சல் பேர்வழியைக் கண்டதும் என் கையில் உள்ள கிளிஞ்சல் தெரியும் படியாகப் பிடித்துக் கொண்டேன். அந்த மனிதர் 'வந்தேமாதரம்' என்று சொன்னார். நானும் திரும்பி 'வந்தேமாதரம்' என்றேன். அவர் என்னை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு அப்பாற் போய்விட்டார். மறுபடியும் சுற்றி அலைந்தேன். இரண்டு கிளிஞ்சல் பேர்வழிகள் ஒருவரையொருவர் சந்தித்தார்கள். அவர்களில் ஒருவர் 'வந்தேமாதரம்' என்றார். இன்னொருவர் 'வ.உ.சி.வாழ்க!' என்றார். 'ஓஹோ! இப்படியா மாற்றுக் கோஷம்' என்று மனதில் எண்ணிக் கொண்டு அவர்கள் அண்டை சென்று 'வந்தேமாதரம்' என்றேன். அவர்களில் ஒருவர் 'வ.உ.சி. வாழ்க!' என்றார். இன்னொருவர் "வெள்ளைக்காரன் வீழ்க" என்றார். 'சரியாப் போச்சு! மூன்று பேர் சேர்ந்தால் இப்படிச் சொல்ல வேண்டுமாக்கும்' என்று நினைத்துக் கொண்டேன். "மற்றவர்கள் எல்லாரும் எங்கே?" என்று கேட்டேன். "இருக்கிற இடத்தில் இருப்பார்கள்" என்று ஒருவர் பதில் சொல்லிக் கொண்டே மேலே நடந்தார். நானும் அவர்களைத் தொடர்ந்து போனேன். கடைசியாக, கடல் மணலில் கொஞ்சம் பள்ளத்தாக்கான ஓரிடத்திற்குப் போய்ச் சேர்ந்தோம். ஏற்கனவே ஏழெட்டுப் பேர் அங்கே உட்கார்ந்திருந்தார்கள். நாங்கள் வந்த அதே சமயத்தில் இன்னும் இருவர் வேறு பக்கத்திலிருந்து வந்தார்கள். ஆக மொத்தம் பதினைந்து பேர் இருக்கும்.
என்னை முதலில் சந்தித்துச் சந்தேகப்பட்ட மனிதரும் அவர்களில் இருந்தார். என்னைப் பார்த்தவுடனே அவர் பதினைந்து பேரில் நடுநாயகமாக வீற்றிருந்த மனிதரைப் பார்த்து, "சுவாமி! இதோ இந்த மனிதர் புதியவர். இவருக்குப் பதில் கோஷம் தெரியவில்லை. யார் என்று விசாரிக்க வேண்டும்" என்றார். அவரால் "சுவாமி!" என்று அழைக்கப்பட்டவர் என் பக்கம் தம் திருஷ்டியைத் திருப்பினார். யௌவன பிராயம்; இயற்கையில் எழில் வாய்ந்த முகம்; அதோடு யோக சாதனத்தினால் ஏற்பட்ட தேஜஸும் சேர்ந்திருந்தது. அவர் என்னை ஏறிட்டுப் பார்த்தபோது என் கண்கள் கூசின. "அப்பனே நீ யார்?" என்று கேட்டார். அவரை விட நான் வயதானவனாயிருந்தும் என்னை ஏகவசனத்தில் அவர் அழைத்தது சிறிது கோபம் அளித்தது. கோபத்தை அடக்கிக் கொண்டு, "நான் கோயம்புத்தூரிலிருந்து வருகிறேன். இந்த ஊர்க்காரர் அங்கே இருக்கிறார் அல்லவா. அவர் செய்தி சொல்லி அனுப்பினார்!" என்றேன். உடனே அந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பைப் பார்க்க வேண்டுமே! தலைக்குத் தலை "அப்படியா? என்ன சொன்னார்? எப்பொழுது சொன்னார்?" என்று பல கேள்விகளை ஏக காலத்தில் போட்டார்கள். தலைவர் அவர்களைக் கையமர்த்தி அடக்கி விட்டு "ஐயா! விவரமாகச் சொல்ல வேணும், இந்த ஊர்க்காரர் எத்தனையோ பேர் கோயம்புத்தூரில் இருக்கலாம். நீர் யாரைச் சொல்கிறீர்? அவர் சொல்லி அனுப்பியது என்ன?" என்று அதிகாரப் பூர்வமான குரலில் கேட்டார். இவர்தான் புதுச்சேரியிலிருந்து வந்திருக்கும் யோகி நீலகண்ட பிரம்மச்சாரியாயிருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டேன்.
இதற்குள் கூட்டத்தில் ஒருவர் "வெறும் வாய்ப் பேச்சுச் செய்தியா? அத்தாட்சி ஏதேனும் உண்டா என்று கேட்டுவிடுங்கள்" என்று படபடத்தகுரலில் கூறினார். அவர் பக்கத்திலிருந்தவர், "வாஞ்சி! நீ சும்மா இரு!" என்றார். இதிலிருந்து படபடத்த ஆசாமி செங்கோட்டை வாஞ்சி ஐயர் என்று தெரிந்து கொண்டு, அவரிடம் கொஞ்ச ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன்.
"நான் கேட்ட கேள்விக்குப் பதில் வேணும்!" என்று தலைவர் மறுபடியும் கூறினார்.
நான் உடனே அக்கூட்டத்திலிருந்த அனைவரையும் ஒரு தடவைகண்களைச் சுழற்றி நன்றாகப் பார்த்துவிட்டு உறுதியான குரலில் கூறினேன்:
"வெள்ளைக்காரனுக்குப் போட்டியாகக் கப்பல் ஓட்டிய வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையைத்தான் சொல்கிறேன். வேறு யாரைச் சொல்வேன்? ஒரு வருஷ காலம் அந்த மகானுக்குப் பணிவிடை செய்யும்படியான பாக்கியம் இந்த ஏழைக்குக் கிடைத்தது. பொய்யாக 'போர்ஜரி' குற்றம் சாட்டி எனக்குத் தண்டனை விதித்திருக்கிறார்கள். அப்படிப் பொய்க் குற்றம் சாட்டிய புண்ணியவான்களை நான் என்றென்றைக்கும் வாழ்த்தி அவர்கள் நன்றாயிருக்க வேணுமென்று கடவுளைப் பிரார்த்தித்து வருவேன். ஏனெனில் அம்மாதிரிப் பொய்க் குற்றம் சாட்டி, என்னைச் சிறைக்கு அனுப்பியதால்தானே பாரதமாதாவின் தவப் புதல்வரை நான் சந்திக்க நேர்ந்தது? அவருக்கு அவசியமாயிருந்தபோது பணிவிடைகள் செய்ய முடிந்தது? ஆகா! நானும் என் அற்ப வாணாளில் எத்தனையோ மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். இவரைப் போல் ஒரு வீரரை, ஒரு தீரரை, ஒரு தியாகியை, ஒரு குணவானை, ஓர் உத்தமனைக் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை, ஐயா! மாடு இழுக்க வேண்டிய செக்கை அந்த மகாபுருஷர் தம் திருக்கரங்களினால் இழுத்தார். அதை இந்தப் பாவியின் கண்கள் பார்த்தன...!" என்று சொல்லி வந்து போது எனக்கு அழுகை வந்து விட்டது. சற்று நேரம் விம்மி அழுதேன். அங்கே கூடியிருந்தவர்களில் மற்றும் சிலரும் அழுதார்கள். வாஞ்சி ஐயர் 'ஓ' வென்று அழுது தீர்த்து விட்டார். மடத்துக்கடைச் சிதம்பரம் பிள்ளை முகத்தில் துணியைப் போட்டுக் கொண்டு தேம்பினார். வந்தேமாதரம் சுப்பிரமணிய ஐயர் குப்புறப் படுத்துக் கொண்டு விம்மினார். கல் நெஞ்சர் என்று அனைவரும் எண்ணியிருந்த நீலகண்ட பிரம்மசாரியின் கண்களும் கலங்கிவிட்டன.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எல்லா விவரங்களையும் கூறி முடித்தேன். வ.உ.சிதம்பரம் பிள்ளை சொல்லி அனுப்பிய செய்தியையும் கடைசியாகச் சொன்னேன்.
"என்னுடைய கஷ்டங்களை ஒருவரும் பொருட்படுத்த வேண்டாம். இம்மாதிரி இன்னும் நூறு மடங்கு கஷ்டங்களை வேணுமானாலும் பாரதத் தாயின் விடுதலைக்காக நான் அனுபவிக்கத் தயார். ஆனால் 'சிதம்பரம் பிள்ளையை உள்ளே தள்ளினோம்; எல்லாம் அடங்கிப் போய் விட்டது' என்று வெள்ளைக்காரன் கொட்டமடிப்பானே என்று நினைத்தால்தான் என் உள்ளம் கொதிக்கிறது. திருநெல்வேலி ஜில்லாவில் தூத்துக்குடி சிதம்பரம் பிள்ளை தவிர வேறு ஆண் மகனே இல்லை என்று சரித்திரம் சொல்ல இடம் கொடாதீர்கள்! 'சிதம்பரம் பிள்ளையையும் சுப்பிரமணிய சிவத்தையும் பிடித்துப் போட்டதும் சுதேசி இயக்கம் செத்து விட்டது' என்று சரித்திரம் எழுத இடம் கொடாதீர்கள்."
இவ்வாறு சிறைக்குள்ளிருந்து ஸ்ரீ வ.உ.சிதம்பரம் பிள்ளை அனுப்பிய செய்தியை அந்தக் கூட்டத்தாருக்குத் தெரிவித்து விட்டு, மடியிலிருந்து ஒரு கசங்கிய கடுதாசியை எடுத்தேன். "இங்கே யாருக்காவது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கையெழுத்துத் தெரியுமா?" என்று கேட்டேன். இரண்டு பேர் ஏக காலத்தில் "தெரியும்" என்று கையை நீட்டினார்கள். அவர்களில் ஒருவர் தூத்துக்குடி முத்துக்குமாரசாமிப் பிள்ளை; இன்னொருவர் கடையநல்லூர் சங்கரகிருஷ்ணய்யர். இருவரும் கடிதத்தைப் படித்து விட்டு கண்களில் ஒற்றிக் கொண்டார்கள். மற்றவர்களும் ஒவ்வொருவராய் பார்த்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு அடுத்தவர்களிடம் கொடுத்தார்கள்.
நீலகண்ட பிரம்மச்சாரி ஒரு சிம்ம கர்ஜனை செய்ததும் எல்லோருடைய கண்களும் அவர்பால் சென்றன.
"தோழர்களே! நம்மையெல்லாம் ஆண் பிள்ளைகள் என்றும், வீர சிம்மங்கள் என்றும் எண்ணிக் கொண்டு தேச பக்தர் சிதம்பரம் பிள்ளை செய்தி அனுப்பியிருக்கிறார். நாமோ சற்று முன்பு நெஞ்சி திடமில்லாத கோழைகளைப் போலவும் பெண் பிள்ளைகளைப் போலவும் நடந்து கொண்டோ ம். எல்லாரும் கண்ணீர் விட்டுத்தேம்பி அழுதோம். ஒப்பாரி வைப்பது ஒன்றுதான் மிச்சம். அதையும் வேணுமானாலும் இப்போது எல்லோரும் சேர்ந்து செய்து விடுவோம்!" என்று நீலகண்ட பிரம்மச்சாரி கூறிய மொழிகள் எல்லாரையும் வெட்கமடையும்படி செய்தன.
"தலைவராகிய தாங்களுங் கூடத்தான்..." என்று கூட்டத்தில் ஒருவர் சொல்லுவதற்குள்ளே பிரம்மச்சாரி, "என்னையும் சேர்த்துத்தான். உங்களை மட்டும் நான் சொல்லவில்லை. எல்லோருமே சற்று முன்பு கோழைகளாகி விட்டோ ம். உண்மையில் நாம் புரட்சி வீரர்களாயிருக்கும் பட்சத்தில், சிதம்பரம் பிள்ளை சிறையில் பட்ட கஷ்டங்களைக் கேட்டு நாம் களிப்படைய வேண்டும். நமது நெஞ்சுகள் இரும்பாக மாற வேண்டும். ஈவிரக்கம், பச்சாத்தாபம், எல்லாவற்றையும் மனத்திலிருந்து துடைத்துவிட வேண்டும். எதிரிகள் விஷயம் ஒரு புறம் இருக்கட்டும். நம்மிலே யாராவது ஒருவன் துரோகியாகி விட்டதாகத் தெரிந்தால், அவனைக் கண்டதுண்டம் செய்யவும் தயாராயிருக்க வேண்டும். அப்போதுதான் நாம் பாரதத் தாயின் உண்மையான புதல்வர்களாவோம்!"
தலைவர் இப்படிச் சொன்னபோது, அந்தக் கூட்டத்தில் பூரண நிசப்தம் நிலவியது. ஒருவர் முகத்தை ஒருவர் ஏறிட்டுப் பாராமல் எல்லாரும் தலைகுனிந்தவண்ணம் இருந்தார்கள். நானும் அப்படித்தான் இருந்தேன். நிமிர்ந்து பார்த்தாலும் ஏதேனும் சந்தேகத்துக்கு இடமாகும் என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனத்திலும் இருந்தது. உள்ளக் கொதிப்பைப் பிரதிபலிப்பது போலச் சற்றுத் தூரத்தில் கடல் அலைகள் கரையில் மோதும் சத்தம் கேட்டது. அத்தனை நேரமும் கேட்காத அலைச் சத்தம் அப்போது ஏற்பட்ட நிசப்தத்தினால் காதிலே வந்து தாக்கிற்று. "தோழர்களே! ஒரு சில நிமிஷம் உணர்ச்சிக்கு இடங் கொடுத்து விட்டதற்காக நிரந்தரமான சோகக் கடலில் நாம் மூழ்கி விடக் கூடாது. இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்ததும் நன்மைக்குத்தான்! இனிமேல் தவறு செய்யாமலிருக்க உதவியாயிருக்கும். இந்தக் கடற்கரையிலே ஒரு காலத்தில் இரண்டு தேச பக்தச் சிம்மங்கள் கர்ஜனை புரிந்தன. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமண்ய சிவம் இந்த இரண்டு வீரர்கள் இங்கே வேலை செய்து ஒரு பெரும் புரட்சியை உண்டு பண்ணினார்கள். திருநெல்வேலி ஜில்லா முழுவதும் புரட்சித் தீ எரிந்தது. இந்தத் தூத்துக்குடி நகரத்தில் சுதேசி இயக்கத்துக்கு விரோதமாயிருந்தவர்களுக்கு நாவிதன் க்ஷவரம் செய்ய மறுத்தான்; வண்ணான் துணி வெளுக்க மறுத்தான். சிதம்பரம் பிள்ளை சொன்னாரென்றால், கடைக்காரர்கள் கடையைத் திறக்க மறுத்தார்கள். தொழிலாளிகள் ஆலைக்குப் போக மறுத்தார்கள். கலெக்டர் விஞ்சு ஓடி வந்து ஆன மட்டும் கெஞ்சிப் பார்த்தான்; முக்கிப் பார்த்தான்; தோப்புக்கரணம் போட்டுப் பார்த்தான்; பயன்படவில்லை. சிதம்பரம் பிள்ளையின் வாக்கு சர்க்கார் உத்தரவை விடச் செல்வாக்குப் பெற்றிருந்தது. அதைக் கண்ட விஞ்சு துரை மனங் கொதித்தான்; துள்ளிக் குதித்தான். "சிதம்பரம் பிள்ளையைக் கொண்டு வா" என்றான். யமகிங்கரர்கள் போன்ற போலீஸ் ஜவான்கள் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அப்போது நடந்த சம்பாஷணையை இன்று புதுச்சேரியில் வீற்றிருக்கும் நமது தேச மகாகவி அற்புதமாய்ப் பாடியிருக்கிறார், கேளுங்கள்!
"கூட்டங்கூடி வந்தே மாதர மென்று கோஷித்தாய் - எமைத் - தூஷித்தாய் ஓட்டம் நாங்கள் எடுக்க வென்றே கப்பல் ஓட்டினாய் - பொருள் ஈட்டினாய்!"
என்று கலெக்டர் விஞ்சு துரை குற்றம் சாட்டினானாம். அதற்கு நம் வீரர் சிதம்பரம் பிள்ளை,
"வந்தேமாதரம் என்றுயிர் போம்வரை வாழ்த்துவோம் - முடி - தாழ்த்துவோம் எந்தமாருயிர் அன்னையைப் போற்றுதல் ஈனமோ - அவமானமோ!"
என்று பதில் சொன்னாராம். உடனே கலெக்டர் விஞ்சு துரை கோபத்தால் துடி துடித்தானாம்.
"சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திடச் சொல்லுவேன் - குத்திக் - கொல்லுவேன் தட்டிப் பேசுவாருண்டோ - சிறைக்குள்ளே தள்ளுவேன் - பழி - கொள்ளுவேன்!"
என்று பயமுறுத்தினானாம். அதற்கு நம் தேச பக்த வீரர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?
"சதையைத் துண்டு துண்டாக்கினாலும் உன் எண்ணம் சாயுமோ - ஜீவன் - ஓயுமோ இதயத்துள்ளே இலங்கு மகாபக்தி ஏகுமோ - நெஞ்சம் - வேகுமோ?"
என்று சிறிதும் அஞ்சாமலும், நெஞ்சம் கலங்காமலும் பதில் கூறினார். அத்தகைய வீர புருஷர் வாழ்ந்த இந்தத் தூத்துக்குடி நகரமும், இந்தத் திருநெல்வேலி ஜில்லாவும் இப்போது ஒரே தூக்கமாகத் தூங்குகின்றன...!"
"ஒன்றும் தூங்கவில்லை! யாராவது தப்பித் தவறித் தூங்கினால் அவன் ஜேபியிலிருப்பதைச் சுரண்டுவதற்கு இந்த ஜில்லாவில் எல்லாரும் தயாராயிருக்கிறார்கள்!" என்று கூட்டத்தில் ஒருவர் இலேசாகச் சொன்னார். அவர் பெயர் சாவடி அருணாசலம் பிள்ளை என்றும் தெரிந்து கொண்டேன்.
"இப்போது யார் என்ன சொன்னார்கள்?" என்று நீலகண்ட பிரம்மச்சாரி அதட்டிக் கேட்ட போது, சாவடிப் பிள்ளை, "தூங்குகிறவர்களையாவது எழுப்பலாம்! தூங்குகிறதாகப் பாசாங்கு செய்கிறபடியால் எழுப்பவும் முடியாது என்று சொன்னேன்!" என்றார்.
"இல்லை; அப்படி நினையாதீர்கள், கட்டாயம் எழுப்பலாம்! ஒரு வேட்டுச் சத்தம் கேட்க வேண்டியதுதான்; எல்லாரும் எழுந்து விடுவார்கள். தோழர்களே! வெறுமனே பேசிக் கொண்டிருக்கிற காலம் போய் விட்டது. காரியத்தில் இறங்க வேண்டிய காலம் வந்துவிட்டது. உங்களில் எவ்வளவு பேர் காரியத்தில் இறங்கத் தயாராயிருக்கிறீர்கள்? தயாராய் இருப்பவர்கள் கையைத் தூக்குங்கள்!" என்றதும் அவ்வளவு பேரும் கையைத் தூக்கினார்கள். நானும் தூக்கினேன். வாஞ்சி ஐயர் இரண்டு கையையும் தூக்கினார். "ஆறு மாதமாக நாங்கள் காரியத்துக்குத் தயாராகத்தான் இருக்கிறோம். நீங்கள்தான் 'இன்னும் காலம் வரவில்லை', 'காலம் வரவில்லை' என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஊர் கூடிச் செக்குத் தள்ளுதல் நடக்கிற காரியமா?" என்று வாஞ்சி ஐயர் மீண்டும் படப்படப்பாய்ப் பேசினார்.
"வாஞ்சி! நீ சற்று சும்மா இரு. பேச்சிலே வீரனாயிருப்பவன் காரியத்திலே கோழையாயிருப்பான். 'ஊர் கூடிச் செக்குத் தள்ள முடியாது' என்றா சொல்கிறாய்? முடியும் என்று நான் சொல்லுகிறேன். தமிழ் நாட்டில் நூறு இடத்தில் ஒரே தேதியில் சேர்ந்தாற்போல் புரட்சி நடக்கப் போகிறது. அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் நடந்திருக்கின்றன. ஆயுதங்கள், ஆட்கள் எல்லாம் தயார். தேதி குறிப்பிட வேண்டியது ஒன்றுதான் பாக்கி. குறிப்பிட்ட தேதியில் இந்த மாகாணத்திலுள்ள அவ்வளவு வெள்ளைக்காரர்களும் சுட்டுத் தள்ளப்படுவார்கள். ஜார்ஜ் பெஞ்சமனுடைய ஆட்சி முடிவடையும். மறுநாள் நமது சிதம்பரம் பிள்ளைதான் தமிழ்நாட்டுக்கு மகாராஜா. இப்படியே ஒவ்வொரு மாகாணத்திலும் நடக்கப் போகிறது."
இதைக் கேட்டதும் எல்லோருக்கும் ரோமம் சிலிர்த்தது. என்னுடைய நெஞ்சு பட், பட் என்று அடித்துக் கொண்டது. அவ்வளவு சீக்கிரமாகக் காரியங்கள் நடக்கப் போகின்றன என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆகா! தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை இட்ட தீ பெரிய தீதான்.
கூட்டத்தில் சிலர் "தேதி எப்போது சொல்லப் போகிறீர்கள்?" என்று கேட்டார்கள். "அன்றைக்கு என்ன செய்ய வேண்டும்? என்ன மாதிரி செய்ய வேண்டும்?" என்று இன்னும் சிலர் கேட்டார்கள்.
நீலகண்ட பிரம்மச்சாரி கூறினார்: "இன்ன தேதி என்பதையும் அன்றைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் அடுத்தக் கூட்டத்தில் சொல்வேன். இதுவரையில் வெறுமனே பேசிக் கொண்டிருந்தோம். ஆகையால் எங்கே வேணுமானாலும் கூட்டம் போட்டோ ம். காரியத்தில் இறங்க வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டதால், இடம் பொருள் ஏவல் அதற்குத் தக்கபடி இருக்க வேண்டும். தோழர்களே! நம்முடைய அடுத்த கூட்டத்தைக் குற்றாலத்தில் கூட்டப் போகிறேன். அடுத்த பௌர்ணமியன்று கூட்டம். குற்றாலத்தில் கூட்டம் எங்கே கூடும், எந்த நேரத்தில் கூடும் என்பதைக் காசி மேஜர்புரத்திலுள்ள நமது முருகையனைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்... என்ன, முருகையா? சரிதானே?"
முருகையன் - பொன்னியம்மாவின் கணவன் - யார் என்பதை அப்போது ஐயமறத் தெரிந்து கொண்டேன்.
"சுவாமி! நான் இப்போது காசிமேஜர் புரத்தில் இல்லை. குற்றாலத்தில் சர்மா பங்களாவில் இருக்கிறேன்! என்றான் முருகையன்.
"அப்படியானால் விசாரிக்க வருகிறவர்களுக்கு இன்னும் சௌகரியமாய்ப் போச்சு. ஆனால் பங்களாவில் சர்மா இருக்காகளா?"
"இல்லை ஐயா! நல்ல வேளையாகத் திருவிதாங்கூருக்குப் போனாக, திரும்பி வருவதற்கு இரண்டு மாதம் பிடிக்குமாம்!"
"பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் ஆச்சு! இராமபத்ர சர்மா நல்ல மனுஷர்தான். ஆனால் பழுத்த மிதவாதி. அவரோடு விவாதம் செய்வதைக் காட்டிலும் குட்டிச் சுவரில் முட்டிக் கொள்ளலாம். ஆனாலும் அவரோடு நான் செய்த விவாதத்தைக் கேட்டுத்தானே நீ நம்ம கோஷ்டியில் சேர்ந்தாய், முருகையா! சர்மா நன்றாயிருக்க வேணும்!" என்றார் பிரம்மச்சாரி. பிறகு இரண்டு இரண்டு பேராயும், மூன்று மூன்று பேராயும் அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றார்கள் வாஞ்சி ஐயரையும் தர்மராஜா ஐயரையும் பிடித்துக் கொண்டு நான் சென்றேன். அந்த இரண்டு மனிதர்களையும் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.