பொங்குமாங்கடல்/கூதல் மாரி

"கூதல் மாரி நுண் துளி தூங்கும் குற்றாலம்" என்று சம்பந்த சுவாமிகள் வர்ணித்தார். குற்றாலத்தைச் சாரல் காலத்தில் பார்த்துவிட்டுத்தான் அந்தப் பால கவி அவ்விதம் பரவசமடைந்திருக்க வேண்டும். ஆனால் குற்றாலத்துச் சாரல் காலத்தை நான் அவ்வளவாக விரும்புவதில்லை. காரணம் 'சாரல்' 'சாரல்' என்று சார்ந்திருக்கும் ஊர்களிலேயிருந்தெல்லாம் ஜனங்கள் கூடிவிடுவதுதான். இது காரணமாகச் சாரல் காலத்தில் குற்றாலம் பெரிதும் சுகாதாரக் குறைவு அடைந்து விடுகிறது. கோடைக்கானலுக்கும், உதக மண்டலத்துக்கும் வெள்ளைக்கார ஆட்சியில் எவ்வளவு பணம் செலவழித்தார்களோ, அதில் நூற்றில் ஒரு பங்கு குற்றாலத்துக்குச் செலவு செய்திருந்தால்...

அடடா! கடைசியில் எழுதிய மேற்படி வாக்கியத்தை எங்கே கேட்டேன்? நினைவுக்கு வருகிறது.

சாரல் காலத்தில் குற்றாலத்துக்கு நான் அதிகம் போவதில்லையென்று சொன்னேனல்லவா? அதற்கு மாறாக நல்ல வேனிற்காலத்திலேதான் போவது வழக்கம். வேனிற் காலத்தில் குற்றாலத்தில் ஜனக் கூட்டம் அதிகம் இராது. ஊரெல்லாம் நசநசவென்று ஈரமாயிராது. மலைமேல் தாராளமாய் ஏறிப் போகலாம். பொங்குமாங்கடலுக்குப் போகலாம்; அதற்கு மேலே மரப் பாலத்துக்குப் போகலாம்; இன்னும் மேலே செண்பகாதேவிக்கும், அதற்கும் அப்பால் உள்ள தேனருவிக்கும் கூடப் போகலாம்.

அப்படி மலை மீது ஏறிப் போவதிலுள்ள ஆனந்தம் வேறு எதிலும் கிடையாது.

அதிலும் குளிர்ந்த காலை நேரத்தில் மலைமேல் ஏறிப் போவதில் தனித்ததோர் மகிழ்ச்சி உண்டு. கிழக்கே உதிக்கும் சூரியன் மலையில் அங்கங்கே இடம் கொடுக்கும் சந்துகளின் வழியாகத் தன் பொற்கிரணங்களை அனுப்பி நம்மை உபசரணை செய்யும். ஒரு மலையிலிருந்து இன்னொரு மலை மீது ஏறும் போது பதினாயிரம் விதவிதமான பச்சை நிறப் போர்வையுடன் மரங்கள் வரிசை வரிசையாகக் காட்சி அளிக்கும். அருவி விழும் சலசலத்த ஓசையும் பறவைகளின் கலகலவென்னும் கீதங்களும் சேர்ந்து நம்மை புதியதொரு நாதப் பிரபஞ்சத்துக்குக் கொண்டு போய்விடும்.

ஒருநாள் காலையில் மேலே கூறிய ஆனந்தங் களையெல்லாம் அநுபவித்துக் கொண்டு மலைமேலே ஏறிக் கொண்டிருந்தேன். சிற்றருவிக்குப் போகலாமென்று புறப்பட்டவனைக் குற்றாலக் குன்றின் இயற்கை இன்பம் மேலே மேலே கவர்ந்து இழுத்துச் சென்றது. கடைசியாக, செண்பகாதேவிக்கே போய்ச் சேர்ந்து விட்டேன். செண்பகாதேவி அருவி விழும் இடத்திற்கு கிழக்கே செங்குத்தான பாறையையும், அதன் மேலே உயரமான விருட்சங்களும் ஆகாயத்தைத் தொடுவன போல் ஓங்கி நிற்கின்றன. காலை நேரத்தில் அங்கே வெயில் என்பதே கிடையாது. மனிதர்களும் வர மாட்டார்கள். தனிமையும், தானுமாக இருக்க விரும்புகிறவனுக்குத் தகுதியான ஏகாந்தப் பிரதேசம்.

'இனிது இனிது ஏகாந்தம் இனிது'

என்று தமிழ் மூதாட்டி பாடியதாகக் கூறுவார்களே, அது அந்த இடத்தின் ஏகாந்தத்துக்குப் பொருந்தும்.

இப்படியாக எண்ணமிட்டுக் கொண்டு செண்பகாதேவி ஆலயத்தைத் தாண்டி அப்பால் சென்றதும், எதிரே வெள்ளை வெளேரென்று பாலருவி விழும் அற்புதத் தோற்றம் காணப்பட்டது. இரு பக்கமும் உயர்ந்து நின்ற பாறைகளும், மரங்களும் இயற்கைத் தேவிக்கு இறைவன் கட்டிய கோயில் எனத் தோன்றியது.

அடடா! என்ன ஆனந்தம்! என்ன ஏகாந்தம்! தனிமையில் இனிமையைக் காண்பது என்றால், இங்கேயல்லவா காண வேண்டும்!"

இப்படி நான் எண்ணிய ஒரு கணத்திற்குள்ளே என் எண்ணம் தவறு என்று தெரிய வந்தது.

"ஸுஜலாம் ஸுபலாம் மலயஜ சீதலாம்" என்னும் வந்தேமாதர கீதத்தின் முதல் அடி புருஷக் குரலில் கேட்டது. புருஷக் குரலிலும், கிழக்குரலாய்த் தொனித்தது. குரல் வந்த இடத்தைப் பார்த்தேன். அருவி விழும் இடத்துக்குச் சற்றுத் தூரத்தில் கீழேயிருந்த பள்ளத்தாக்கில் மொட்டைப் பாறை ஒன்றில் ஒரு சாது உட்கார்ந்திருந்தார்.

பெரிய தாடியோடும், சடா மகுடத்தோடும் விளங்கிய போதிலும், உடுத்தியிருந்த துணி மட்டும் வெளுப்பாயிருந்தது. ஆம்; துணி மட்டுந்தான் வெளுப்பாயிருந்தது. தாடியும் சடாமகுடமும் நல்ல கருநிறமாயிருந்தன! குரல் கிழக்குரல்; தாடியும் சடையும் யௌவனப் பருவத்துக்குரியவை. இது என்ன விந்தை? இப்படி ஒரு நிமிஷம் நான் யோசித்துக் கொண்டிருக்கையில் அந்தப் பரதேசி என்னைப் பார்த்துவிட்டார். சற்று நேரம் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு கையினால் தாம் மேலே வரப் போவதாகச் சமிக்ஞை செய்து விட்டு அவ்விதமே மேலேறி வந்தார். நான் நின்ற இடத்துக்கு எதிரில் தாம் உட்கார்ந்து கொண்டு என்னையும் உட்காரச் சொன்னார். தாடியையும் சடையையும் சாவதானமாக எடுத்துக் கீழே வைத்தார். அவற்றை நீக்கியவுடன் தும்பைப் பூவைப் போல் நரைத்த தலையுடன் எழுபது வயதுக்கு மேலான கிழவர் என் முன் காட்சி அளித்தார். ஆழ்ந்து குழி விழுந்த கண்களினால் என்னை உற்றுப் பார்த்து, "இந்த இடமெல்லாம் எவ்வளவு மோசமாயிருக்கிறது பார்த்தீரா? கோடைக்கானலுக்கும், உதகமண்டலத்துக்கும் வெள்ளைக்காரர் ஆட்சியில் எவ்வளவு பணம் செலவழித்தார்களோ, அதில் நூற்றில் ஒரு பங்கு குற்றாலத்துக்குச் செலவு செய்திருந்தால் இப்படியிருக்குமா?" என்றார் கிழவர்.

"பெரியவரே! தாங்கள் யார்?" என்று கேட்டேன்.

"நான் யாராயிருந்தால் என்ன? நான் கூறிய விஷயம் உண்மையா, இல்லையா?"

"உண்மைதான்!"

"பின்னே விடுங்கள்!"

அப்படியே நான் விட்டுவிட்டு, அதாவது பேச்சை விட்டுவிட்டுச் சும்மாயிருந்தேன். ஆனால் அவர் சும்மா இல்லை. "நீர் கதை எழுதுகிறவர் என்று கேள்விப்பட்டேன். உண்மைதானா?" என்றார். நான் சொன்ன பதில் என் காதிலேயே விழவில்லை. ஆனால் அவர் மறுபடியும் சொன்னது மட்டும் கணீர் என்று என் காதில் விழுந்தது. "அப்படியானால் என்னுடைய கதையையும் எழுதுவீரா?" என்றார். அவருக்குக் கொடுத்த வாக்குறுதியை இதோ நிறைவேற்றப் போகிறேன்.

இப்படி ஒரு நிமிஷம் நான் யோசித்துக் கொண்டிருக்கையில் அந்தப் பரதேசி என்னைப் பார்த்துவிட்டார். சற்று நேரம் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு கையினால் தாம் மேலே வரப் போவதாகச் சமிக்ஞை செய்து விட்டு அவ்விதமே மேலேறி வந்தார். நான் நின்ற இடத்துக்கு எதிரில் தாம் உட்கார்ந்து கொண்டு என்னையும் உட்காரச் சொன்னார். தாடியையும் சடையையும் சாவதானமாக எடுத்துக் கீழே வைத்தார். அவற்றை நீக்கியவுடன் தும்பைப் பூவைப் போல் நரைத்த தலையுடன் எழுபது வயதுக்கு மேலான கிழவர் என் முன் காட்சி அளித்தார். ஆழ்ந்து குழி விழுந்த கண்களினால் என்னை உற்றுப் பார்த்து, "இந்த இடமெல்லாம் எவ்வளவு மோசமாயிருக்கிறது பார்த்தீரா? கோடைக்கானலுக்கும், உதகமண்டலத்துக்கும் வெள்ளைக்காரர் ஆட்சியில் எவ்வளவு பணம் செலவழித்தார்களோ, அதில் நூற்றில் ஒரு பங்கு குற்றாலத்துக்குச் செலவு செய்திருந்தால் இப்படியிருக்குமா?" என்றார் கிழவர்.

"பெரியவரே! தாங்கள் யார்?" என்று கேட்டேன்.

"நான் யாராயிருந்தால் என்ன? நான் கூறிய விஷயம் உண்மையா, இல்லையா?"

"உண்மைதான்!"

"பின்னே விடுங்கள்!"

அப்படியே நான் விட்டுவிட்டு, அதாவது பேச்சை விட்டுவிட்டுச் சும்மாயிருந்தேன். ஆனால் அவர் சும்மா இல்லை. "நீர் கதை எழுதுகிறவர் என்று கேள்விப்பட்டேன். உண்மைதானா?" என்றார். நான் சொன்ன பதில் என் காதிலேயே விழவில்லை. ஆனால் அவர் மறுபடியும் சொன்னது மட்டும் கணீர் என்று என் காதில் விழுந்தது. "அப்படியானால் என்னுடைய கதையையும் எழுதுவீரா?" என்றார். அவருக்குக் கொடுத்த வாக்குறுதியை இதோ நிறைவேற்றப் போகிறேன்.