பொங்குமாங்கடல்/செண்பகாதேவி அருவி

இரவு சுமார் பத்துமணி ஆயிற்று. செண்பகாதேவி அருவிக்குப் பக்கத்தில் உள்ள ஒரு தட்டையான பாறையில் இருபத்தைந்து ஆட்கள் வட்டமாய் உட்கார்ந்திருந்தார்கள். நடுவில் மரக்கட்டைகள் சடசடவென்று சத்தத்துடன் எரிந்து வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தன. ஜுன் மாதத்துக் கடுங் கோடையானாலும் அருவிக்குப் பக்கமான படியால் கொஞ்சம் குளிர் இருந்தது. நெருப்பு அதற்கு இதமாயிருந்தது.

முன் போலவே நீலகண்ட பிரம்மச்சாரி அக்கிரஸ்தானத்தை வகித்து ஆவேசமான பிரசங்கம் செய்தார்:

"தோழர்களே! ஸ்ரீ வேதவியாச முனிவர் பிரம்மவைவர்த்த புராணத்தில் சொல்லியிருக்கும் காலம் நெருங்கி விட்டது. நந்தன வருஷத்துக்கும் ஆனந்த வருஷத்துக்கும் மத்தியில் வெள்ளைக்காரனுடைய சாம்ராஜ்யம் அழிந்துபோகும் என்று வியாச பகவான் எழுதி வைத்திருக்கிறார். ஐயாயிரம் வருஷங்களுக்கு முன்பே ஞான திருஷ்டியால் உணர்ந்து சொல்லியிருக்கிறார். அந்த மகானுடைய வாக்குப் பொய்யாகுமா? ஒருநாளும் பொய்யாகாது. ஆகையால் இன்னும் மூன்று வருஷத்துக்குள் வெள்ளைக்காரன் பூண்டோ டு அழிந்து கூண்டோ டு யமலோகம் போகப் போகிறான்."

இவ்வாறு பிரம்மச்சாரி வெறி கொண்டவர் போல் பேசிக் கொண்டே போனார். வெள்ளைக்காரனுடைய ராஜ்யம் பாரத புண்ணிய பூமியில் ஏற்பட்டதிலிருந்து தேசம் அடைந்து வரும் கஷ்ட நஷ்டங்களையெல்லாம் சரமாரியாக எடுத்துச் சொன்னார்.

"நமது தர்மத்தை அழித்தார்கள்; நமது தொழில்களை அழித்தார்கள்; நமது தங்கத்தையெல்லாம் கொள்ளை கொண்டு போனார்கள்; செல்வம் கொழித்த நாட்டில் பஞ்சத்தை உண்டு பண்ணினார்கள். தோழர்களே! இந்தமாதிரி அக்கிரமங்களைத் துஷ்ட நிக்ரஹசிஷ்ட பரிபாலனம் செய்யும் விஷ்ணு பகவான் பொறுப்பாரா? ஒரு நாளும் பொறுக்க மாட்டார். அக்கிரமத்தை அழித்துத் தர்மத்தை நிலை நாட்ட பாலகங்காதர திலகர் என்ன, அரவிந்தகோஷ் என்ன, லாலா லஜபதிராய் என்ன, விபின் சந்திரபாலர் என்ன, அசுவினி குமார தத்தர் என்ன இப்பேர்ப்பட்டவர்களை அனுப்பி வைத்தார். நமது செந்தமிழ் நாட்டுக்கும் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவம், சுப்பிரமணிய பாரதி முதலிய வீரர்களை அனுப்பி வைத்தார். இந்த வீரர்களில் பலர் இப்போது சிறையில் இருக்கிறார்கள்; சிலர் தேசப் பிரஷ்டர்களாகயிருக்கிறார்கள். அதனால் என்ன? கிருஷ்ண பகவான் சிறைச் சாலையில் இல்லையா? இராமபிரான் வனவாசம் செய்யவில்லையா? ஒரு காலம் வரும். அப்போது சிறைக் கதவுகள் உடைத்துத் திறக்கப்படும், என்று சொல்லிக் கொண்டிருந்தேன், தோழர்களே! அந்தக் காலம் இப்போது வந்து விட்டது. நீங்கள் தயாரா?"

"தயார்! தயார்!" என்று எல்லோரும் கூறினார்கள். என் எதிரே இருந்த வாஞ்சி ஐயர் மட்டும், "இந்த மாதிரி நூறு தரம் கேட்டு நூறு தடவை பதில் சொல்லியாகி விட்டது!" என்று முணுமுணுத்தார்.

அருகிலிருந்த தர்மராஜய்யர் வாஞ்சி ஐயரை அடக்கிப் 'பேசாமலிரு' என்றார்.

"வாஞ்சி ஐயர் என்ன முணுமுணுக்கிறார்?" என்று சுப்பையாப் பிள்ளை கேட்டார்.

"பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே என்று பாரதியார் பாடியாகி விட்டது. இன்னமும் ஐயர் பட்டம் என்ன? 'வாஞ்சி' என்று சொன்னால் போதும்" என்றார் வந்தேமாதரம் சுப்பிரமணிய ஐயர்.

நீலகண்ட பிரம்மச்சாரி குறுக்கிட்டு, "வாஞ்சி காரியத்தில் இறங்க வேண்டும், பேசியது போதும் என்று துடியாயிருக்கிறார். அது நியாயந்தான். ஏற்கனவே சபதம் செய்தவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் உடனே சபதம் எடுத்துக் கொள்ளட்டும்!" என்றார்.

அன்றைக்கு அங்கே வந்திருந்த இருபத்தைந்து பேரில் இருபது பேர் ஏற்கனவே பிரதிக்ஞை எடுத்துக் கொண்டவர்கள் என்றும், ஐந்து பேர் புதிதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஏற்பட்டது. அந்த ஐவரில் நான் ஒருவன். மடத்துக் கடைச் சிதம்பரம்பிள்ளை பிரதிக்ஞா பத்திரத்தை எடுத்துப் படித்தார். அதன் வாசகம் கேட்கவே பயங்கரமாயிருந்தது. "பாரதத் தாயின் விடுதலைக்காக உயிரையும் கொடுப்பேன்; தலைவர் கட்டளையை நிறைவேற்றுவேன்; துரோகம் செய்ததாக ஏற்பட்டால் காளிக்கும் பலியாவேன்" என்பவை அதன் முக்கியமான அம்சங்கள். கை விரலைக் கத்தியால் வெட்டி அந்த இரத்தத்தில் பெரு விரலை நனைத்துப் பத்திரத்தின் அடியில் கைநாட்டுச் செய்ய வேணும். காளியின் படத்துக்கு முன்னால் குங்குமம் கலந்த செந்நீரைக் குடிக்க வேணும். இதுதான் பிரதிக்ஞை முறை என்று தெரிந்தது.

ஐந்து பேரும் இந்த முறைப்படியே பிரதிக்ஞை செய்தோம். பிறகு நீலகண்ட பிரம்மச்சாரி கூறினார், "தோழர்களே! இனிமேல் நான் தேதியைச் சொல்லலாம். அடுத்த அமாவாசை தினம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சபதம் செய்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு வெள்ளைக்காரனைக் குறிப்பிட்டு வைத்துக் கொண்டு அவனைப் பின் தொடர்ந்து வரவேண்டும். அமாவாசையன்று ஆளைத் தீர்த்துவிட வேண்டும். முடிந்தால் ஓடித் தப்பித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் தன்னையும் திருப்பிச் சுட்டுக் கொண்டு வீர சொர்க்கம் அடைய வேண்டும். இதுதான் திட்டம். புதுச்சேரியில் வேண்டிய ஆயுதங்கள் கொண்டு வந்து சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆயுதம் இல்லாதவர்கள் புதுச்சேரிக்குப் போய் வாங்கிக் கொள்ளலாம். தோழர்களே, அதற்கு முன்னால் இன்னும் ஒரு விஷயம் இருக்கிறது! அதையும் சொல்லி விடுகிறேன். எந்தக் காரியத்தையும் சரிவரச் செய்து முடிப்பதற்கு இடம் பொருள் ஏவல் மூன்றும் வேண்டும். நமக்கு இடம் ஏவல் இரண்டும் இருக்கிறது! பொருள்தான் இல்லை. 1857 ஆம் வருஷத்தில் நடந்த இந்திய சுதந்திர யுத்தம் ஏன் தோல்வி அடைந்தது தெரியுமா? பணம் இல்லாதபடியால்தான். ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்த அமாவாசைக்குள் தலைக்கு ஆயிரம் ரூபாயாவது சேர்த்துக் கொண்டு வந்து என்னிடம் கொடுக்க வேண்டும்."

இந்தச் சமயத்தில் வாஞ்சி எழுந்து நின்றார். தலைவரைப் பார்த்து, "ஐயா! பத்திரிகைகளிலே ஒரு செய்தி வந்திருக்கிறதே, அதைப் பற்றிய உண்மை என்ன?" என்று கேட்டார்.

"எந்தச் செய்தியை, எந்த உண்மையைக் கேட்கிறாய்?" என்று பிரம்மச்சாரி கர்ஜித்தார்.

"அரவிந்த கோஷ் ஆசிரமத்தார் விடுத்திருக்கும் அறிக்கையைப் பற்றித்தான் கேட்கிறேன். அதில் உங்களுடைய பெயரைக் குறிப்பிட்டு, ஆசிரமத்துக்கும் உங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதாகச் சொல்லியிருக்கிறதே? அதன் உண்மை என்னவென்று தான் கேட்கிறேன்."

பிரம்மச்சாரி ஒரு பயங்கரச் சிரிப்புச் சிரித்தார். "வாஞ்சி! என்ன கேள்வி கேட்டாய்! உன் தலைவனையே சந்தேகிக்கலாமா? அரவிந்த கோஷ் ஆசிரமத்தார் அப்படி அறிக்கை விடாமல் வேறு என்ன செய்வார்கள்? என்னுடைய காரியங்களுக்கு அவர்கள் பொறுப்பாளிகள் என்று ஒப்புக் கொள்வார்களா? அப்படியானால் அவர்கள் புதுச்சேரியில் இருக்க முடியுமா? மேலும் வேலை செய்ய முடியுமா? மூடாத்மா! இதுகூட உன் புத்திக்கு எட்டவில்லையா? நாளைக்கு உன்னைப் போலீஸார் கைது செய்து விசாரித்தால், எங்கள் பெயர்களையெல்லாம் எழுதிக் கொடுத்து விடுவாயா?" என்று பிரம்மச்சாரி கர்ஜித்தார்.

அதற்கு வாஞ்சி சாவதானமாக, "ஐயா! உங்கள் பெயர்களையெல்லாம் நான் எழுதிக் கொடுக்க வேண்டியதில்லை. ஏற்கனவே நம் எல்லோருடைய பெயர்களும் இரண்டொரு பெயரைத் தவிர தென்காசி போலீஸ் ஸ்டேஷனில் இருக்கின்றன. இன்று சாயங்காலம் தென்காசியில் என் மருமகன் சொன்னான். அவன் போலீஸ் ஸ்டேஷனில் குமாஸ்தா. நம் எல்லாருடைய பெயர்களையும் குறிப்பிட்டு ஒரு மொட்டை கடிதம் ஸ்டேஷனுக்கு வந்திருக்கிறதாம்! என்னை ஜாக்கிரதையாயிருக்கும்படி சொன்னான்!" என்றார்.

"அப்படியானால் இந்தக் கூட்டத்திலேதான் யாரோ ஒரு துரோகி இருக்க வேண்டும். அவன் யார்? காளி மாதாவின் மேல் ஆணை! உண்மையை ஒப்புக் கொண்டு விடுங்கள்!" என்று பிரம்மச்சாரி கர்ஜித்தார்.

"அதோ காளி மாதா!" என்று அச்சமயம் ஒரு கூச்சல் எழுந்தது. கூச்சல் போட்டவர் சுப்பையா பிள்ளை. அவர் நோக்கிய திக்கை எல்லாரும் நோக்கினோம். சற்று தூரத்தில் ஒரு பாறை முனையில் விரித்த கூந்தலுடன் பயங்கரத்தினால் அகன்ற விழிகளுடன் பெருமூச்சு விட்டுக் கொண்டு ஒரு பெண் உருவம் நின்றது. காளிமாதா என்று நினைக்கக் கூடியதாகத் தான் இருந்தது. ஆனாலும் அவள் காளி இல்லை. பொன்னியம்மா என்று எனக்குத் தெரிந்துவிட்டது. முருகையனும் அதைத் தெரிந்து கொண்டு தலைவரைநோக்கி, "ஐயா, அந்தப் பெண் காளிமாதா அல்ல; என்னுடைய மனைவி பொன்னி. எதற்கு இங்கே வந்தாள் என்று இதோ போய் விசாரித்துக் கொண்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டுப் போனான்.

அவன் போன உடனே வாஞ்சி, "நான் சொன்னதின் உண்மை இப்போது தெரிந்து விட்டதல்லவா? யார் யாருக்கோ இந்தக் கூட்டத்தின் விஷயம் தெரிந்து போயிருக்கிறது. அந்தப் பெண் இன்று மாலை ஒரு கடிதம் வைத்திருந்தாள். அது தென்காசி போலீஸுக்கு எழுதப்பட்ட கடிதம். இன்று இரவு இங்கே நடக்கும் கூட்டத்தைப் பற்றி அதில் எழுதியிருந்தது!" என்றார்.

"இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?" என்று சங்கர கிருஷ்ணயர் கோபக் குரலில் முழங்கினார்.

"சாயங்காலம் இங்கே நான் வந்து கொண்டிருந்த போது அந்தப் பெண் வழிமறித்துக் கடிதத்தில் என்ன எழுதி இருக்கிறது என்று பார்க்கச் சொன்னாள். கடிதத்தில் ஏதோ மர்மமான விஷயம் எழுதியிருக்கிறதென்றும், போலீஸுக்குக் கொண்டு போக வேண்டாமென்றும் அவளுடைய புருஷனிடம் கொடுக்கும்படியும் நான் சொல்லி விட்டு வந்தேன். அந்த கடிதத்தில் ரொம்ப அதிசயமான விஷயம் என்னவென்றால்..."

இதற்குள்ளே முருகையனும் பொன்னியம்மாளும் அங்கே வந்து விட்டார்கள். முருகையன் பொன்னியம்மாளிடம் இருந்த கடிதத்தை வாங்கித் தலைவரிடம் கொடுத்தான்.

தலைவர் படித்து விட்டு "ஆஹா! கடிதம் ரொம்ப விசித்திரமானதுதான்! இதை யார் அம்மா உன்னிடம் கொடுத்தது?" என்று கேட்டார். "தாடிச் சாமியார் ஒருவர் கொடுத்தார். ஐயா! இந்தச் செண்பகாதேவியில் அவரை அடிக்கடி நான் பார்த்திருக்கிறேன்" என்றாள் பொன்னியம்மா.

"அப்படியா சேதி! துரோகி யாராயிருப்பான் என்று உங்களில் யாராவது ஊகித்துச் சொல்ல முடியுமா?" என்று தலைவர் கேட்டார்.

உடனே நான் எழுந்து நின்று, "நான் சொல்ல முடியும்!" என்றேன்.

"யார்? தெரிந்தால் பயப்படாமல் சொல்லு!"

"அதோ, அந்தப் படபடத்த மனுஷர்தான்! அவர் கையிலுள்ள மூட்டையை அவிழ்க்கச் சொல்லுங்கள்"

"சுப்பையாப்பிள்ளை! வாஞ்சியின் மூட்டையை எடுத்து அவிழ்த்துப் பார்!" என்றார் பிரம்மச்சாரி.

சுப்பையாப்பிள்ளை அப்படியே பாய்ந்து வாஞ்சியின் துணி மூட்டையை எடுத்து அவிழ்த்தார். அதற்குள்ளேயிருந்து தாடியும் சடையும் விழுந்தன.

"தோழர்களே! சந்தேகமில்லை; வாஞ்சிநாதன் துரோகி. இந்தக் கடிதத்தின் கையெழுத்தும் அவனுடைய கையெழுத்துத்தான்!" என்று நீலகண்ட பிரம்மச்சாரி கூறினார்.

எல்லாரும் வியப்போடும் பயங்கரத்தோடும் வாஞ்சி ஐயரைப் பார்த்தார்கள்.

இதெல்லாம் நடந்து கொண்டிருந்தபோது வாஞ்சி சும்மா இல்லை; ஒரு காரியம் செய்து கொண்டிருந்தார். அதாவது கையிலிருந்த தோல் பெட்டியைத் திறந்து கொண்டிருந்தார். எதற்கு என்று யாரும் ஊகிக்க முடியவில்லை. கையில் பளபளவென்று மின்னிய ரிவால்வருடன் அவர் குதித்து எழுந்து நின்றபோதுதான் தெரிந்தது. ரிவால்வரை ஒருமுறை எங்கள் எல்லாரையும் பார்த்துச் சுழற்றி விட்டு வாஞ்சி கூறினார்: "தோழர்களே! இந்த ரிவால்வரில் ஆறு குண்டுகள் இருக்கின்றன. வேறு முக்கிய காரியத்துக்காக இதை வைத்திருக்கிறேன். சிதம்பரம் பிள்ளையைச் செக்கு இழுக்கச் செய்ததற்குப் பழி வாங்குவதற்காக வைத்திருக்கிறேன். கலெக்டர் ஆஷ் துரைக்குப் பரிசு அளிப்பதற்காக வைத்திருக்கிறேன். ஆனால் யாராவது அருகில் நெருங்கினீர்களோ, அப்புறம் என் பெயரில் பழி சொல்ல வேண்டாம். மறுபடியும் எச்சரிக்கை செய்கிறேன். துரோகி நான் அல்ல! யார் என்று ஒருவாறு ஊகித்திருக்கிறேன். ஆனாலும் காட்டிக் கொடுக்க விருப்பமில்லை. எல்லாரும் ஓடித் தப்பிப் பிழையுங்கள். கடவுள் அருளால் தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் மொட்டைக் கடிதத்தை நம்பவில்லை. யாரோ பைத்தியக்காரன் எழுதியது என்று சொல்லி சும்மா இருந்து விட்டார். ஆனால் இரண்டு நாளில் அப்படிச் சும்மா இருக்க மாட்டார்கள். உங்கள் எல்லோரையும் தேடிப் பிடிக்க முயலுவார்கள். ஆகையால் ஓடிப் போய் பிழையுங்கள். உயிரை இப்போது காப்பாற்றிக் கொண்டால் பிற்பாடு உங்கள் சபதத்தை நிறைவேற்றலாம். ஓ! வாய்ப் பேச்சில் வீர தலைவரே! எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரியே ஊருக்குப் போய்க் கல்யாணம் செய்துகொண்டு சுகமாயிரும். புரட்சி இயக்கத்தை நடத்த உம்மால் முடியாது. உம்மால் பேச்சுப் புரட்சிதான் செய்ய முடியும். முருகையா! உன் சம்சாரத்தைக் கேள், சொல்வாள்!" இவ்விதம் எரிமலை நெருப்பைக் கக்குவது போல் கக்கி விட்டு வாஞ்சி ஐயர் அங்கிருந்து ஒரே ஓட்டம் பிடித்தார். அவருடன் தொடர்ந்து தர்மராஜய்யரும் ஓடினார்.

மற்றவர்கள் எல்லோரும் சிறிது நேரம் திகைத்து நின்று விட்டுப் பிறகு அவர்களும் நாலாபக்கமும் சிதறி ஓடினார்கள். நானும் முருகையனும் பொன்னியம்மாவும் மட்டும் மீதமிருந்தோம். "ஐயா! பைத்தியங்கள் எல்லாரும் ஓடிப் போய் விட்டன. நீங்கள் வரப் போகிறீர்களா, அல்லது செண்பகாதேவியிலேயே இருந்து நிஷ்டை செய்யப் போகிறீர்களா?" என்று முருகையன் கேட்டான். "இல்லை; நானும் உங்களுடன் வருகிறேன்!" என்றான். மூன்று பேருமாகப் புறப்பட்டுச் சாவதானமாய்ப் பேசிக் கொண்டு சென்றோம். "பொன்னியம்மா! துரோகி யாராயிருக்கும்? ஏதோ உன்னைக் கேட்டால் தெரியும் என்று அந்த வாஞ்சி ஐயர் உளறி விட்டுப் போனாரே?" என்றான் முருகையன்.

"அதுதான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் பிடிபடவில்லை. ஏங்கறேன், அந்தத் தாடியும் சடையும் என்ன ஆச்சு?" என்று பொன்னி கேட்டபோது எனக்குக் கொஞ்சம் திடுக்கிட்டது.

"எது? என்னத்துக்கு அந்தச் சனியன்! எங்கே யானும் போவட்டும்" என்றான் முருகையன்.

குறுக்கு வழியாக அருவியைப் பிடித்துக் கொண்டு நாங்கள் இறங்கிச் சென்றோம். பெரிய அருவி விழும் மலை உச்சியை அடைந்தோம். "அப்பா! இங்கேயிருந்து உருண்டு கீழே விழுந்தால் எப்படியிருக்கும்!" என்றான் முருகையன். "இது என்ன கேள்வி?" என்றாள் பொன்னியம்மா.

மெதுவாகப் பாதி வழி இறங்கினோம், பொங்குமாங்கடலுக்கு அருகில் வந்து சேர்ந்தோம்.

வெண்ணிலாவில் பொங்குமாங்கடல் அலை மோதிக் கொண்டு அழகாகக் காட்சி அளித்தது. அருவியில் தண்ணீர் கொஞ்சம் என்றாலும் பொங்குமாங்கடல் பொங்கி வழிந்து கொண்டுதானிருந்தது.

ஐயோ! இது என்ன? ஒரு நொடியில் அலைமோதிய அந்தப் பொங்குமாங்கடலில் நான் விழுந்துவிட்டேன்! எப்படி விழுந்தேன் என்று தெரியவில்லை. கடலுக்கு அருகில் வந்து நின்ற போது முதுகில் யாரோ கை வைத்தது போலிருந்தது. ஒருவேளை, முருகையன் - சே! அவன் ஏன் நம்மைத் தள்ளப் போகிறான்! இதோ அவனும் அவன் சம்சாரமும் கரையிலே உட்கார்ந்து எவ்வளவு கவலையுடன் நம்மைக் கரை சேர்ப்பதற்காகக் காத்திருக்கிறார்கள்?

கரை அருகில் நான் வந்ததும் முருகையன் கை கொடுத்தான் - ஆனால் இதென்ன? பிடித்து இழுப்பதற்குப் பதிலாக நம்மை ஏன் திருப்பித் தள்ளுகிறான்?

புருஷனும் பெண்சாதியும் ஏன் சிரிக்கிறார்கள்? பௌர்ணமி நிலவினால் அவர்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா, என்ன?

கடவுளே! அன்று இரவு அனுபவத்தை இன்றைக்கு நினைத்தாலும் எனக்குக் குடல் நடுங்குகிறது. வேண்டாம் ஆண்டவனே, வேண்டாம்! ஈரேழு பதினாலு ஜன்மங்களுக்கும் வேண்டாம்!

என் கைகளும் கால்களும் களைத்துத் தண்ணீரில் மூழ்கி இரண்டு வாய்த் தண்ணீரும் குடித்து இனிச் செத்தாற் போலத்தான் என்று எண்ணிய பிறகு என்னைக் கரையில் இழுத்துக் குற்றுயிரும் குலை உயிருமாகப் போட்டு விட்டு அந்தப் புண்ணியசாலிகள் போய்ச் சேர்ந்தார்கள். இந்த மட்டும் உயிர் கொடுத்தார்களே, அவர்கள் பிள்ளை குட்டிகள் தலைமுறை தலைமுறையாக நன்றாயிருக்க வேணும்.