பொங்குமாங்கடல்/பௌர்ணமி

இரண்டு வார காலம் ரொம்பச் சாவகாசமாகவே சென்றது. பௌர்ணமிக்கு மூன்று நாளைக்கு முன்பு நீலகண்ட பிரம்மச்சாரி வந்து இராமபத்திர சர்மாவின் பங்களாவில் உட்கார்ந்து கொண்டார். பலர் அவரை வந்து பார்ப்பதும் போவதுமாயிருந்தார்கள். நானும் இரண்டொரு தடவை சென்று பார்த்தேன். பேசினேன். அபாரமான படிப்பும் கூரிய அறிவும் உள்ளவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் இவர் சொல்கிறபடியெல்லாம் நடக்கப் போகிறதா, ஒரே நாளில் பிரிட்டிஷ் ராஜ்யம் கவிழ்ந்து விடப் போகிறதா என்று நினைத்துப் பார்த்த போது கொஞ்சம் வியப்பாகத்தானிருந்தது. அது எப்படியானால் என்ன? நம்முடைய கடமையை நாம் செய்து விட வேண்டியது என்று உறுதி கொண்டேன். நீலகண்ட பிரம்மச்சாரியைப் பார்க்கப் போன சமயத்தில் அந்தப் பங்களாவின் தோட்ட வீட்டிலே குடியிருந்த முருகையனும் பொன்னியம்மாவும் எவ்வளவு அன்புமயமான வாழ்க்கை நடத்தினார்கள் என்பதையும் கவனித்தேன். பாவம்! அவர்களுடைய வாழ்க்கையின் இன்பத்தைக் கெடுப்பதற்கு இந்தப் பிரம்மச்சாரி வந்து சேர்ந்தார். பொன்னியம்மாவின் முகத்தில் கவலைக்குறி முன்னைவிட அதிகமாயிருந்ததை நான் கவனியாமல் இல்லை.

பௌர்ணமியன்று மாலை, செண்பகாதேவியில் பொன்னியம்மாவுக்குத் தைரியம் கூறிய சாமியார், சர்மாவின் பங்களாவுக்கு வந்து சேர்ந்தார். தோட்டக் கதவைத் திறந்து கொண்டே உள்ளே பிரவேசித்தார். பங்களாவில் ஒருவரும் இல்லை. தோட்டத்திலும் ஒருவருமில்லை. விசாரிக்க வேண்டியவர்கள் எல்லாரும் வந்து விசாரித்துக் கொண்டு மலைமேல் ஏறிவிட்டார்கள். தோட்டக் குடிசையில் பொன்னியம்மா மட்டும் தன்னுடைய ஐந்து வயதுப் பெண் குழந்தையுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

சாமியாரைப் பார்த்ததும் அவள் குடிசைக்குள்ளேயிருந்து விரைந்து வந்தாள்.

"சாமி! இது என்ன இந்த நேரத்தில் வந்தீர்கள்? இங்கே ஆண் பிள்ளைகள் ஒருவரும் இல்லையே!" என்றாள்.

"பொன்னியம்மா! இராத்திரி இங்கே தங்குவதற்காக நான் வரவில்லை. மலைமேல் இராத்திரி எனக்கு வேலையிருக்கிறது. இதோ திரும்பிப் போகிறேன். ஆனால் உனக்கு வாக்கு கொடுத்தேனே, அதை நிறைவேற்றி விட்டுப் போகத்தான் அவசரமாக வந்தேன்!"

"என்ன வாக்கு, சாமி?"

"உன்னுடைய புருஷனைப் பற்றித்தான்! மறந்து விட்டாயா, என்ன? அல்லது அபாயம் நீங்கி விட்டது என்று நினைத்தாயா?"

"அவருக்கு ஓர் அபாயமும் இல்லை சாமி, நான் தான் பெண் புத்தியினால் வீணாகப் பயப்பட்டேன்."

"பொன்னியம்மா! நீ சுத்த அசடு! உன்னை யாரோ ஏமாற்றி விட்டிருக்கிறார்கள். உண்மையில் உன் புருஷனுக்கு இன்று இரவு பெரிய அபாயம் வரப் போகிறது. இங்கே மூன்று நாளாயிருந்தேனே, ஒரு பிரம்மச்சாரித் தடியன், அவனும் உன் புருஷனும் இப்போது எங்கே போயிருக்கிறார்கள் தெரியுமா? மலைமேலே செண்பகாதேவியம்மன் கோயிலுக்குத்தான் போயிருக்கிறார்கள். மொத்தம் இருபது பேருக்கு மேல் இன்று இரவு அங்கே வரப் போகிறார்கள். எல்லாருமாகச் சேர்ந்து உன் புருஷனை அம்மனுக்கு பலி கொடுக்கப் போகிறார்கள்!"

"ஐயோ!" என்று அலறினாள் பொன்னி.

"மலையாள மந்திரவாதிகள் என்றால், பின்னே என்னவென்று நினைத்துக் கொண்டாய்? நான் சொல்கிறபடி கேட்டால் உன்புருஷனைக் காப்பாற்றிக் கொள்ளலாம், கேட்பாயா?"

"கேட்கிறேன், ஸ்வாமி!"

"இதோ இந்தக் கடிதத்தில் எல்லாம் விவரமாக எழுதியிருக்கிறேன். உடனே இதை எடுத்துச் சென்று தென்காசி போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்க வேணும். கொடுத்தால் போலீஸார் வந்து பலியைத் தடுத்து, உன் புருஷனைக் காப்பாற்றுவார்கள்."

"போலீஸ் என்னத்துக்கு சாமி! நானே போய் என் புருஷனைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறேன்."

"அசட்டுப் பெண்ணே! அவர்கள் இருபது பேர், நீ ஒருத்தி என்ன செய்வாய்? உன்னையும் சேர்த்துப் பலிகொடுத்து விடுவார்கள்." பொன்னியம்மாள் யோசித்தாள்.

"என்ன சொல்கிறாய்? நீ போகிறாயா, அல்லது நான் போகட்டுமா? மலைமேலே நான் இப்போதே போனால் போலீஸார் வரும் வரையில் எப்படியாவது உன் புருஷனை காப்பாற்றி வைப்பேன்!"

"நான் போகிறேன், சாமி!" என்று சொல்லிப் பொன்னியம்மா கடிதத்தை வாங்கிக் கொண்டாள்.

"போகாவிட்டால் உன் புருஷன் உயிர் உன் தலைமேலே!" என்று சொல்லி விட்டுச் சாமியார் விடுவிடு என்று நடையைக் கட்டினார்.

அன்று சாயங்காலம் அந்தி மயங்கி அஸ்தமன இருள் சூழ்ந்து வந்த நேரத்தில் நான் குற்றாலத்துமலை மீது ஏறிக் கொண்டிருந்தேன். இன்னும் சிறிது நேரத்தில் பூரண சந்திரன் உதயமாகி விடுவான். ஆயினும் மலைப்பாதை வழியில் மலைகளும் மரங்களும் நிலாவைத் தடுத்து இருளை நிலை நாட்டிக் கொண்டுதானிருக்கும். அதைப் பற்றி அன்றைக்கு என்ன கவலை? மலைமேல் இருபது பேருக்கு மேல் போயிருக்கிறார்கள். செண்பகாதேவிக்கு அருகில் காய்ந்த மரக்கட்டைகளைப் பிடுங்கிப் போட்டு பெரிய தீ வளர்ப்பார்கள். கூட்டம், பிரசங்கம், விவாதம், சபதம் - எல்லாம் இரவு வெகு நேரம் வரையில் நடக்கும். அப்புறம்... ஆகா! அப்புறம் என்ன நடக்குமோ யாருக்குத் தெரியும்? எனக்கே பிறகு நடக்கப் போவதைப் பற்றி நினைக்க மனமில்லை. ஏதோ செய்ய வேண்டிய கடமையை நாம் செய்தாகிவிட்டது. இனிமேல் நடக்கிறது நடக்கட்டும் என்று மன நிம்மதியோடு இருப்பதுதான் சரி.

இம்மாதிரி எண்ணத்துடன் மேலே ஏறிக் கொண்டிருந்த போது பின்னால் இன்னும் யாரோ ஒருவர் வருகிற மாதிரி தோன்றியது. ஒருவர் அல்ல; இருவர் வருகிறார்கள் என்று பேச்சிலிருந்து தெரிந்தது. ஆகா! வாஞ்சியும் தர்மராஜனும் போல் அல்லவா தோன்றுகிறது? நமக்கும் பின்னால் இவர்கள் வருகிறார்களே?

அவர்களைச் சந்திப்பதற்கு முன்னால் நான் அவசியம் செய்ய வேண்டிய காரியம் ஒன்று இருந்தது. நன்றாய் இருட்டட்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அதை முடிப்பதற்குள் இவர்கள் விரைந்து நடந்து நம்மைப் பிடித்துவிட்டால் ஆபத்தாய்ப் போய்விடும்.

எனவே, சட்டென்று மலைப் பாதையில் ஒரு முடுக்குத் திரும்பியதும் காட்டுக்குள் புகுந்து சிறிது தூரம் சென்று ஒரு பாறைக்குப் பின்னால் மறைந்து கொண்டேன். வேஷத்தைக் களைந்தேன், தாடியையும் சடையையும் ஒரு கைக்குட்டைக்குள் வைத்துச் சுற்றிக் கைக்குட்டையை முடிச்சுப் போட்டேன். அடையாளமாக ஒரு மரப் பொந்துக்குள் வைத்தேன். இதற்குள், பின்னால் வந்தவர்கள் முன்னால் போயிருக்க வேண்டும் என்று எண்ணிப் பாதைக்கு வந்தேன். முன்னால் கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கு ஆட்களைக் காணவில்லை. பின்னாலும் யாரும் வருவதாகத் தெரியவில்லை. சரி; முன்னால் ரொம்ப விரைந்து போய் இன்னொரு வளைவில், அவர்கள் திரும்பியிருக்க வேண்டும் இவ்வாறு எண்ணிக் கொண்டு நானும் விரைந்து நடந்தேன்.

மரப்பாலத்துக்கு அருகில் சென்றபோது பின்னால் ஆள் வரும் சத்தம் மறுபடி கேட்டது. நின்று அவர்கள் வரட்டும் என்று காத்திருந்தேன். அதே வாஞ்சி ஐயரும் தர்மராஜனுந்தான். "அடே! இவர்கள் வழியில் எப்படி மாயமாய் மறைந்தார்கள்?" என்று மனதில் ஏற்பட்ட, அதிசயத்தை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. வாஞ்சி வழக்கம் போல் கையில் ஒரு சிறு தோல் பெட்டி வைத்திருந்தார். அதோடு இப்போது ஒரு சின்னத் துணி மூட்டையும் காணப்பட்டது. தோல் பெட்டி நடக்கும் போது 'கிலுக்' 'கிலுக்' என்ற சத்தம் கேட்டது. துணி மூட்டை சத்தம் போடவில்லை. இரண்டுக்குள்ளும் என்ன இருக்கும்?

"என்ன வாஞ்சி! என்ன தர்மராஜா! இப்பத்தான் வருகிறீர்களா?" என்று கேட்டேன்.

"என்ன ராகவாச்சாரி! நீங்களும் இப்போதுதான் போகிறீர்களா, என்ன?"

மூன்று பேரும் கலகலவென்று குதூகலமாகப் பேசிக் கொண்டு மேலே ஏறினோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பொங்குமாங்கடல்/பௌர்ணமி&oldid=6906" இலிருந்து மீள்விக்கப்பட்டது