பொன்னியின் செல்வன்/கொலை வாள்/ஐயோ! பிசாசு!

கொலை வாள் - அத்தியாயம் 8

தொகு

"ஐயோ! பிசாசு!"

கற்பக விருட்சம் பூங்குழலியின் மீது வர்ண மலர்களைச் சொரிந்தது. தேவலோகத்துக் கின்னரி வாத்தியங்கள் இன்ப கீதங்களைப் பொழிந்தன. ஏன்? பூங்குழலியின் மேனி நரம்புகளே யாழின் நரம்புகளாகித் தெய்வ கானம் இசைத்தன. இளவரசரின் கனிவு செறிந்த மொழிகள் அவளுக்கு அத்தகைய போதையை அளித்தன.

"இளவரசே! நான் தேவலோக கன்னிகை அல்ல; ஏழை ஓடக்காரப் பெண். தாங்கள் அருந்தியதும் தேவலோகத்து அமுதம் அல்ல. குழகர் கோயிலில் கிடைத்த பாலமுதம்!" என்றாள்.

"நீ தேவலோக கன்னிகையில்லையென்றால், நான் நம்பி விடுவேனோ? வருணனின் திருப்புதல்வி அல்லவா நீ? சமுத்திரகுமாரி! எத்தனை தடவை எனக்கு நீ உயிர் அளித்திருக்கிறாய்? உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?" என்றார் இளவரசர்.

"ஐயா! இன்னும் ஒரு பகலும், ஒரு இரவும் தங்களுடன் இருக்க இந்த ஏழையை அனுமதிக்க வேண்டும்" என்றாள் பூங்குழலி.

"அது எப்படி முடியும்? உடனே நான் பழையாறைக்குப் புறப்பட வேண்டுமே" என்றார் இளவரசர்.

"இல்லை, தங்களை நாகைப்பட்டினத்துக்கு அழைத்துச் செல்லும்படி செய்தி வந்திருக்கிறது."

"யாரிடமிருந்து?"

"இளைய பிராட்டியிடமிருந்துதான்!"

"அது யார் அங்கே, இன்னொருவன்? வந்தியத்தேவனுடன் படகை இழுத்து வருகிறவன்?"

"என் அத்தான் சேந்தன் அமுதன். இளையபிராட்டி அவனிடந்தான் செய்தி அனுப்பியிருக்கிறார். தங்களை நாகைப்பட்டினத்தில் உள்ள சூடாமணி விஹாரத்திற்கு அழைத்துச் செல்லும்படி."

"ஆஹா! என் தமக்கையின் மனம் மாறி விட்டதா? எனக்கு முடிசூட்டும் ஆசை அகன்று விட்டதா? வெகு காலமாக எனக்குப் புத்த சங்கத்தில் சேரவேண்டும் என்ற ஆசை உண்டு. புத்த சங்கத்தில் சேர்ந்து பிக்ஷு ஆவேன். தூர தூர தேசங்களுக்கு யாத்திரை செய்வேன்; சாவகம் - கடாரம் - மாயிருடிங்கம் - மாபப்பாளம் - சீனம்! ஆஹா என்னுடைய பாக்கியமே பாக்கியம்; பூங்குழலி! வா, போகலாம்!" என்று கூறி இளவரசர் எழுந்து நின்றார்.

அவருக்கு இன்னும் முழுநினைவு வரவில்லை, சுரவேகத்திலேயே பேசுகிறார் என்று பூங்குழலி சந்தேகித்தாள்.

அதே சமயத்தில் தூரத்தில் ஓலமிடும் குரல் ஒன்று கேட்டது.

இளவரசர் திடுக்கிட்டு நின்று, "பூங்குழலி! அது என்ன?" என்றார்.

"ஆந்தை கத்துகிறது ஐயா!" என்றாள்.

"இல்லை! அது மனிதக் குரல்! ஏதோ பெரும் அபாயத்தில் சிக்கியவனின் அபயக்குரல்! அவனைக் காப்பாற்றிவிட்டுப் போகலாம். புத்த சங்கத்தில் சேருவதற்கு முன்னால் ஒரு புண்ணிய காரியம் செய்யலாம்!" என்று இவ்விதம் கூறிவிட்டு இளவரசர் பாய்ந்து ஓட முயன்றார். அந்த முயற்சியில் திடீரென்று கீழே விழுந்தார். பூங்குழலி அவரைத் தாங்கிக் கொண்டாள்.

படகைக் கரை சேர்ந்தவர்கள் இருவரும் ஓடி வந்தார்கள். மீண்டும் உணர்ச்சியை இழந்துவிட்ட இளவரசரை அவர்கள் மெதுவாகத் தூக்கிக் கொண்டு போய்ப் படகில் பத்திரமாய்ச் சேர்த்துப் படுக்க வைத்தார்கள்.

கால்வாயில் படகு போக ஆரம்பித்தது. இளவரசரைத் தவிர்த்து, மற்ற மூவரும் இட நெருக்கடியுடன் அதில் உட்கார்ந்திருந்தார்கள்.

வந்தியத்தேவன், "பூங்குழலி! நாலுபேரை இந்தப் படகு தாங்குவது கடினம். எப்படியும் நான் உங்களிடம் விடை பெற்றுக் கொள்ள வேண்டியவன். இங்கேயே இறங்கிக் கொள்கிறேன். இளவரசரைப் பத்திரமாய்க் கொண்டு போய்ச் சேர்ப்பது உங்கள் பொறுப்பு. உங்களுக்கு அதிகம் நான் சொல்ல வேண்டியதில்லை!" என்று சொன்னான்.

அவனுடைய குரல் தழுதழுத்தது. நிலாக் கிரணம் அவன் முகத்தில் விழுந்தபோது கண்களில் முத்துத் துளிகள் ஒளிவீசித் திகழ்ந்தன.

"கோடிக்கரைக் காடு தாண்டிய பிறகு இறங்கிச் செல்லலாமே? என் குதிரையையும் அங்கேதான் நிறுத்தி வைத்திருக்கிறேன். அடையாளம் நினைவிருக்கிறதல்லவா?" என்றான் சேந்தன் அமுதன்.

"வேண்டாம். நான் இங்கேயே இறங்கிக் கொள்கிறேன். குழகர் கோயில் பிராகாரத்தில் சற்று நேரம் படுத்துத் தூங்கிவிட்டுப் பொழுது விடிவதற்குள் எழுந்து புறப்படுகிறேன். இல்லாவிடில் நாளைக்குப் பிரயாணம் செய்ய முடியாது! வழியில் எவ்வளவு தடங்கல்களோ!" என்றான் வந்தியத்தேவன்.

பூங்குழலி அத்தனை நேரமும் தன் மடியில் பத்திரப்படுத்தி வைத்திருந்த பொட்டணத்தை எடுத்து அவனிடம் கொடுத்தாள். "இந்தா! குழகர் கோயில் பிரசாதம். இதை சாப்பிட்டு விட்டுத் தூங்கு!" என்றாள்.

"நீங்களும் ஒன்றும் சாப்பிடவில்லையே, உங்களுக்கு வேண்டாமா?"

"கோடிக்கரையிலிருந்து காத தூரம் கால்வாயில் போய் விட்டால் எத்தனையோ கிராமங்கள். நானாவது சேந்தனாவது போய் உணவு சம்பாதித்துக் கொண்டு வருவோம். உன் விஷயம் அப்படியல்ல. நீ ஒருவர் கண்ணிலும் படாமல் பழையாறை போய்ச் சேர வேண்டும் அல்லவா?"

"படகில் இளவரசர் இருக்கிறார் என்பதை நீங்களும் மறந்து விடக்கூடாது."

"இந்தப் படகில் இருப்பவர் இளவரசர் என்று யார் நம்புவார்கள்? அதைப்பற்றிக் கவலைப்படாதே! எங்கள் பொறுப்பு. இந்த ஓட்டைப் படகை யாரும் கவனிக்க மாட்டார்கள்."

"சரி, அப்படியானால் இங்கேயே நான் இறங்கிக் கொள்கிறேன்."

அச்சமயம் மறுபடியும் அந்த ஓலக்குரல் கேட்டது. "ஆ! அது என்ன?" என்று இளவரசர் கேட்டுவிட்டு மறுபடியும் உணர்வை இழந்தார்.

பூங்குழலி எழுந்து நின்றாள்.

"முடியாது; என்னால் முடியாது, இளவரசருக்குத் தெரிந்தால் என்னை மன்னிக்க மாட்டார். இன்னும் கொஞ்ச நேரம் படகில் இரு. அந்த மந்திரவாதியைச் சேற்றிலிருந்து எடுத்து விட்டுவிட்டு வருகிறேன். இங்கிருந்து அந்த இடம் கிட்டத்தான் இருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டே படகிலிருந்து கால்வாயின் கரையில் குதித்தாள்.

"அப்படியானால் நானும் உன்னோடு வருகிறேன். அந்தப் பாதகனிடம் உன்னைத் தனியாக விடமாட்டேன்" என்றான் சேந்தன் அமுதன்.

"இல்லை, அமுதா! நீ படகில் இரு! இளவரசரைப் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள். நான் பூங்குழலியுடன் போய் வருகிறேன். எனக்கும் அந்த மந்திரவாதியைப் பார்க்க வேண்டிய காரியம் இருக்கிறது!" என்று சொல்லிவிட்டுப் பூங்குழலியைப் பின் தொடர்ந்து வேகமாக ஓடினான் வந்தியத்தேவன்.

பூங்குழலியின் மனக்கண் முன்னால் மந்திரவாதி மார்பளவு சேற்றில் புதைந்திருக்க, அவனைச் சுற்றி நரிகள் நின்று அவனைப் பிடுங்கித் தின்னப் பார்க்கும் பயங்கரக் காட்சி தோன்றிக் கொண்டிருந்தது. அதற்கிடையே இளவரசர் அவளைப் பார்த்து "பெண்ணே நீ கொலை பாதகி!" என்று குற்றம் சாட்டும் காட்சியும் தோன்றியது! இந்தக் காட்சிகள் அவளுடைய கால்களுக்கு மிக்க விரைவைக் கொடுத்தன. மந்திரவாதியை அமிழ்த்திய சேற்றுப் பள்ளத்தை அதி விரைவில் நெருங்கினாள். அங்கே மந்திரவாதியைக் காணாமல் பெரும் ஏமாற்றம் அடைந்தாள்.

பின் தொடர்ந்து வந்த வந்தியத்தேவன், அவள் பக்கம் நெருங்கியதும் அவள் தயங்கி நிற்பதன் காரணத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

"வேறு ஒரு சேற்றுப் பள்ளமாயிருக்கலாம். கோடிக்கரையில் எத்தனையோ பள்ளங்கள் உண்டு அல்லவா? நீ மறந்து போயிருப்பாய்!" என்றான்.

புதரில் ஒரு முனை கட்டியிருந்த சேந்தன் அமுதனின் மேல் துண்டைப் பூங்குழலி சுட்டிக் காட்டினாள். பாவம்! அவளால் பேச முடியவில்லை.

"சேற்றில் அமிழ்ந்திருப்பான் என்று நினைக்கிறாயா? இல்லை, இல்லை! ரவிதாஸனை அப்படியெல்லாம் கொன்று விட முடியுமா? அவனுக்கு நூறு உயிர் ஆயிற்றே? தப்பிப் போயிருப்பான்!" என்று சொல்லிக் கொண்டே வந்தியத்தேவன் புதரில் கட்டப்பட்டிருந்த துண்டை அவிழ்த்து எடுத்துக் கொண்டான். பூங்குழலிக்கு ஆறுதலாக அவ்விதம் சொன்னானே தவிர, அவன் மனத்திற்குள், 'ரவிதாஸன் மாண்டு தான் போயிருப்பான்; அவனுக்கு இந்தக் கோர மரணம் வேண்டியதுதான்!' என்ற எண்ணமும் தோன்றியது.

இருவரும் அங்கே மேலும் நிற்பதில் பயனில்லை என்பதை ஒருங்கே உணர்ந்தார்கள். மீண்டும் கால்வாயை நோக்கி நடந்தார்கள்.

கால்வாயின் கரைகளை அங்கே இருபுறமும் மரங்கள் மறைத்துக் கொண்டிருந்தன. ஒரு மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு நின்று இரு உருவங்கள் எட்டிப் பார்த்தது தெரிந்தது. அவற்றில் ஒன்று ஆண் உருவம்; இன்னொன்று பெண் உருவம்.

"அதோ!" என்று பூங்குழலி சுட்டிக் காட்டினாள்."

"ஆமாம்; அவர்கள் யார் என்று தெரிகிறதா?"

"மந்திரவாதி ஒருவன்! இன்னொருத்தி என் அண்ணன் மனைவி எனக்கு முன்னால் அவள் வந்து மந்திரவாதியை விடுவித்திருக்கிறாள்."

"நல்லதாய்ப் போயிற்று."

"நல்லது ஒன்றுமில்லை. கால்வாயில் படகு வருவதை அவர்கள் உற்றுப் பார்க்கிறார்களே?"

அச்சமயம் இரண்டு உருவங்களில் ஒன்று திரும்பி இவர்கள் வரும் திசையைப் பார்த்தது. உடனே இரண்டு உருவங்களும் புதர்களும் அடியில் மறைந்து விட்டன. "ஐயோ! அவர்கள் நம்மையும் பார்த்து விட்டார்கள்!"

"பேசாமல் என்னுடன் வா! நான் ஒரு யுக்தி செய்கிறேன். நான் என்ன சொன்னாலும் ஆச்சரியப்படாதே! என்னை ஒட்டியே பேசு!" என்றான் வந்தியத்தேவன்.

இருவரும் மேற்கூறிய உருவங்கள் நின்ற இடத்துக்குச் சமீபமாகப் போனார்கள். அந்த இடத்தைக் கடந்து சிறிது அப்பால் சென்று கால்வாயின் ஓரமாக உட்கார்ந்து கொண்டார்கள். பின்னால் புதரில் மறைந்திருந்தவர்களுக்குத் தங்கள் பேச்சு நன்றாய்க் கேட்கும் என்று வந்தியத்தேவன் நிச்சயப்படுத்திக் கொண்டான்.

"பூங்குழலி! இதோ பார்! ஏன் கவலைப்படுகிறாய்? மந்திரவாதி செத்து ஒழிந்து போனான். போனதே க்ஷேமம்" என்றான் வந்தியத்தேவன்.

"ஐயோ! என்ன பயங்கரமான சாவு!" என்றாள் பூங்குழலி.

"கொலை செய்தது செய்துவிட்டு, இது என்ன பரிதாபம்?"

"ஐயோ! நானா கொலை செய்தேன்?"

"பின்னே அவன் சேற்றில் விழச் செய்தது யார்? நீ தானே? திடீரென்று அப்புறம் உனக்குப் பச்சாத்தாபம் வந்துவிட்டது. தப்புவிக்கலாம் என்று வந்தாய்! அதற்குள் அவனை சேறு விழுங்கிவிட்டது. தப்புவிக்கத்தான் வந்தாயோ, அல்லது செத்துப் போய் விட்டானா என்று பார்ப்பதற்குத்தான் வந்தாயோ. யார் கண்டது?"

"உன்னை யார் என்னைத் தொடர்ந்து வரச் சொன்னது?"

"வந்ததினால்தானே நீ செய்த கொலையைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது? அடி கொலை பாதகி!"

"நானா கொலை பாதகி!"

"ஆம், நீ கொலை பாதகிதான்! நான் மட்டும் யோக்கியன் என்று சொல்கிறேனா? அதுவும் இல்லை. நான் இளவரசரைக் கடலில் முழுக அடித்துக் கொன்றேன். நீ மந்திரவாதியைச் சேற்றில் அமுக்கிக் கொன்றாய். அதற்கும் இதற்கும் சரியாகப் போய் விட்டது. நான் செய்த கொலையைப் பற்றி நீ வெளியில் சொல்லாமலிருந்தால், நீ செய்த கொலையைப் பற்றி நானும் யாரிடத்திலும் சொல்லவில்லை!"

"இளவரசரைக் கொன்றவன் நீதானா? சற்றுமுன் அவரைப் பார்க்கவேயில்லை என்று சொன்னாயே?"

"வேண்டுமென்றுதான் அப்படிச் சொன்னேன். இனிமேல் அப்படி உன்னிடம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. நான் கூறியதை ஒப்புக் கொள்வாயா, மாட்டாயா?"

"மாட்டேன் என்று மறுத்தால்?"

"உடனே நந்தினி தேவியிடம் போய் நீ மந்திரவாதியைச் சேற்றில் அமுக்கிக் கொன்றதைக் கூறுவேன். நான் செய்த கொலைக்குச் சாட்சியம் இல்லை; உன் கொலைக்குச் சாட்சியம் உண்டு..."

"நந்தினி என்னை என்ன செய்துவிடுவாள்?"

"வேறொன்றும் செய்யமாட்டாள். உன்னைப் பூமியில் கழுத்து வரையில் புதைத்து யானையின் காலினால் இடறும்படி செய்வாள்!"

"ஐயோ! என்ன பயங்கரம்!"

"வேண்டாம் என்றால், நான் கூறுகிறபடி செய்வதாக ஒப்புக்கொள்."

"என்ன செய்ய வேண்டும்?"

"அதோ உன் அத்தான் கொண்டு வருகிறானே, அந்தப் படகில் ஏறிக்கொள். இரண்டு பேரும் நேரே இலங்கைக்குப் போய்விட வேண்டும். அங்கே போய் உன் இளவரசரை நினைத்து அழுதுகொண்டிரு!"

"எதற்காக நான் இலங்கை போகவேண்டும்? இங்கேயே இருந்தால் உனக்கு என்ன?"

"ஆ! நீ போய் பழுவேட்டரையரிடம் என்னை பற்றிச் சொல்லிவிட்டால்! அவருக்கு என்ன இருந்தாலும் இளவரசர் பேரில் அபிமானம் உண்டு. என்னைப் பழி வாங்கப் பார்ப்பார்; எனக்கு இந்த உலகில் இன்னும் கொஞ்சம் வேலை இருக்கிறது."

"அட பாவி! இளவரசரை நீ ஏன் கொன்றாய்! அதையாவது சொல்லிவிடு!"

"சொன்னால் என்ன? நன்றாகச் சொல்லுகிறேன். இளவரசரும் அவருடைய தமக்கையும் சேர்ந்து, ஆதித்த கரிகாலரின் இராஜ்யத்தைப் பறிப்பதற்குச் சதி செய்தார்கள். ஆதித்த கரிகாலர் என்னுடைய எஜமானர். அவருடைய விரோதி என்னுடைய விரோதி. அதனால்தான் இளவரசரைக் கொன்றேன். தெரிந்ததா?"

"இந்த மகாபாவத்துக்கு நீ தண்டனை அநுபவிப்பாய்."

"அதைப்பற்றி நீ கவலைப்படாதே! நான் சொன்னபடி நீ செய்யப்போகிறாயா, இல்லையா?"

"செய்யாவிட்டால் வேறு வழி என்ன? அதோ படகு வருகிறது, போய் ஏறிக் கொள்கிறேன்."

"இதோ பார்! நன்றாய்க் கேட்டுக் கொள். படகில் ஏறியதும் நேரே கடலை நோக்கிச் செல்ல வேண்டும். கோடிக்கரைப் பக்கம் திரும்பினாயோ, உன் கதி அதோ கதிதான்! இங்கேயே இருந்து நான் உங்கள் படகைப் பார்த்துக் கொண்டிருப்பேன். படகு கடலை அடைந்த பிறகுதான் இங்கிருந்து நகருவேன்."

"சரி சரி! இங்கேயே இரு! உன்னை நூறு நரிகள் பிடுங்கித் தின்னட்டும்!" வந்தியத்தேவன் செய்த சமிக்ஞையைப் பார்த்து விட்டுப் பூங்குழலி அங்கிருந்து விரைந்து போய்ப் படகில் ஏறிக் கொண்டாள். படகு மேலே சென்றது. வந்தியத்தேவன் அவளிடம் கூறியபடி அங்கேயே உட்கார்ந்திருந்தான். அரை நாழிகை சென்றது. படகு கால்வாயில் வெகு தூரம் வரை சென்று மறைந்தது.

திடீரென்று வந்தியத்தேவனுக்குப் பின்னால் 'ஹா ஹா ஹா' என்ற ஒரு பயங்கரச் சிரிப்பு கேட்டது. வந்தியத்தேவன் திடுக்கிட்டவன் போலப் பாசாங்கு செய்து, சட்டென்று எழுந்து நின்று பார்த்தான்.

மந்திரவாதி புதர்களுக்கு மத்தியில் எழுந்து நின்று பேய் சிரிப்பது போலப் பயங்கரமாய்ச் சிரித்தான்.

"ஐயோ! பிசாசு" என்று அலறிக்கொண்டு வந்தியத்தேவன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.