பொன்னியின் செல்வன்/கொலை வாள்/தீயிலே தள்ளு!

கொலை வாள் - அத்தியாயம் 12

தொகு

"தீயிலே தள்ளு!"

கொல்லன் சிறிது நேரம் தன் வேலையிலேயே கவனமாயிருந்தான். வந்தியத்தேவன் இரண்டு மூன்று தடவை கனைத்த பிறகு நிமிர்ந்து பார்த்தான்.

"யார், அப்பனே, நீ! உனக்கு என்ன செய்ய வேண்டும்? வாள், வேல் ஏதாவது வேண்டுமா? வாளுக்கும் வேலுக்குந்தான் இப்போதெல்லாம் தேவையில்லாமல் போய்விட்டதே? நீ வாளுக்கு எங்கே வந்திருக்கப் போகிறாய்?" என்றான் கொல்லன்.

"என்ன ஐயா, இவ்வாறு சொல்கிறீர்? உம்முடைய கையில் வாளை வைத்து வேலை செய்து கொண்டே வாளுக்குத் தேவையில்லையென்கிறீரே?" என்றான் வந்தியத்தேவன்.

"இது ஏதோ அபூர்வமாக வந்த வேலை; பழைய வாளைச் செப்பனிடுவதற்காகக் கொண்டு வந்தார்கள். சில வருஷங்களுக்கு முன்னால் பாண்டிய நாட்டுப் போரும், வட பெண்ணைப் போரும் நடந்து கொண்டிருந்தபோது இந்தப் பட்டறையில் மலை மலையாக வேலும் வாளும் குவிந்திருக்கும். இலங்கை யுத்தம் ஆரம்பமான புதிதில் கூட ஆயுதங்களுக்குக் கிராக்கியிருந்தது. இப்போது வாளையும் வேலையும் கேட்பாரில்லை. பழைய வாள்களையும் வேல்களையும், என்னிடம் கொண்டு வந்து விற்பதற்காக வருகிறார்கள். நீ கூட அதற்காகத் தான் ஒரு வேளை வந்தாயா என்ன?"

"இல்லை, இல்லை! இன்னும் சில காலத்துக்கு எனக்கு வாள் தேவையாயிருக்கிறது. ஒப்புக் கொண்ட வேலையை முடித்து விட்டால், அப்புறம் கையில் தாளத்தை எடுத்துக் கொண்டு தேவாரம் பாடிக்கொண்டு சிவ ஸ்தலயாத்திரை புறப்படுவேன். அப்போது வேணுமானால் என் ஆயுதங்களை உம்மிடமே கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன்."

"பின்னே, இப்போது எதற்காக என்னைத் தேடி வந்தாய்?"

"என்னுடைய குதிரையைக் காட்டிலும் மேட்டிலும் விட்டுக் கொண்டு வந்தேன். இன்னும் வெகுதூரம் போயாக வேண்டும். குதிரைகளின் கால் குளம்புக்கு இரும்புக் கவசம் போடுவதாமே! அது உம்மால் முடியுமா?"

"ஆம், அரேபியா தேசத்தில் அப்படித்தான் வழக்கம். இங்கேயும் சிலர் இப்போது குதிரைக் குளம்புக்கு இரும்பு லாடம் அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். எனக்கும் கொஞ்சம் அந்த வேலையில் பழக்கம் உண்டு."

"என் குதிரைக்கு லாடம் போட்டுத் தருவீரா?"

"அதற்கு நேரம் அதிகம் பிடிக்கும். கையில் உள்ள வேலையை முடித்துவிட்டுத் தான் உன் வேலையை எடுத்துக் கொள்ள முடியும்."

வந்தியத்தேவன் யோசித்தான், அவனுக்கும் களைப்பாயிருந்தது. குதிரையும் கஷ்டப்பட்டுப் போயிருந்தது. சிறிது நேரம் காத்திருந்து, அதன் குளம்புகளுக்குக் கவசம் போட்டுக் கொண்டே போவது என்று முடிவு செய்தான்.

"கைவேலை முடியும் வரையில் காத்திருக்கிறேன், அப்புறமாவது உடனே செய்து தருவீர் அல்லவா?"

"அதற்கென்ன, ஆகட்டும்!"

வந்தியத்தேவன் சற்றுநேரம் கொல்லன் காய்ச்சிச் செப்பனிட்ட வாளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"இந்த வாள் அபூர்வமான வேலைப்பாடு அமைந்ததாயிருக்கிறதே? இராஜகுலத்து வாள் மாதிரி அல்லவா இருக்கிறது? இது யாருடைய வாள்?" என்றான்.

"அப்பனே! இங்கிருந்து கொஞ்ச தூரத்தில் அரிச்சந்திர நதி என்று ஓர் ஆறு ஓடுகிறது."

"நானும் கேள்விப்பட்டிருந்தேன். அதனால் என்ன?"

"நான் அரிச்சந்திர நதிக்குச் சென்று அடிக்கடி தலை முழுகி வருவது வழக்கம்."

"மிக்க நல்ல காரியம். போகும் இடத்துக்குப் புண்ணியம்."

"ஆகையால் கூடிய வரையில் மெய்யே சொல்லுவதென்றும், பொய் சொல்லுவதில்லையென்றும் வைத்துக் கொண்டிருக்கிறேன்."

"அதற்கு என்ன ஆட்சேபம்? உம்மை யார் பொய் சொல்லச் சொன்னது? நான் சொல்லவில்லையே?"

"நீ என்னை இந்த வாளைப் பற்றி ஒன்றும் கேள்வி கேட்காமலிருந்தால், நானும் பொய் சொல்லாமலிருக்கலாம்!"

"ஓஹோ! அப்படியா சமாசாரம்?" என்று வந்தியத்தேவன் மனத்திற்குள் எண்ணிக் கொண்டான்.

"நான் கேள்வியும் கேட்கவில்லை. நீர் விரத பங்கமும் செய்ய வேண்டாம். கைவேலையைச் சீக்கிரம் முடித்துவிட்டு, என் வேலையை எடுத்துக்கொண்டு செய்து கொடுத்தால் போதும்!"

கொல்லன் மௌனமாகத் தன் வேலையில் கவனம் செலுத்தினான்.

வந்தியத்தேவன் வாளைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அதன் அடிப்பகுதியில், பிடியின் பக்கத்தில் மீன் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து வியந்தான். மீன் உருவம் எதற்காக? அதற்கு ஏதேனும் பொருள் உண்டா? வெறும் அலங்காரத்துக்குத்தானா?

கொல்லன் அந்த மீன் உருவம் உள்ள இடத்தை மறுபடியும் தீயில் காட்டிக் காய்ச்சி அதன் பேரில் சுத்தியால் அடித்தான் மீன் உருவம் தெரியாமல் மறைப்பதுதான் அவனுடைய நோக்கம் என்று தோன்றியது. எதற்காக இக்காரியம் என்று வல்லவரையன் யோசனை செய்தான். யோசனை செய்து கொண்டிருக்கும் போதே, அவன் கண்கள் சுழலத் தொடங்கின. பல நாளாக அவனால் விரட்டியடிக்கப்பட்டு வந்த நித்திராதேவி இப்போது தன் மோக மாயவலையை அவன் பேரில் பலமாக வீச ஆரம்பித்தாள். வந்தியத்தேவன் அதிலிருந்து தப்ப முடியவில்லை. சிறிது நேரம் உட்கார்ந்தபடியே ஆடி விழுந்தான். பிறகு அப்படியே கொல்லன் உலைக்குப் பக்கத்தில், படுத்துத் தூங்கிப் போனான்.

தூக்கத்தில் வல்லவரையன் பல பயங்கரக் கனவுகள் கண்டான். கத்தியைப் பற்றியே ஒரு கனவு. ஒருவன் வந்து கொல்லனிடம் கத்தியைத் திரும்பக் கேட்டான். கொல்லன் கொடுத்தான். "என்ன கூலி வேண்டும்?" என்று அவன் கேட்டான். "கூலி ஒன்றும் வேண்டாம். பழுவூர் இளையராணிக்கு நான் அளிக்கும் காணிக்கையாயிருக்கட்டும்" என்றான் கொல்லன்.

"ஜாக்கிரதை! இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது. முக்கியமாக, பழுவூர் இளைய ராணியின் பெயரைச் சொல்லவே சொல்லாதே! சொன்னால் என்ன செய்வோம் தெரியுமா?..."

"நான் எதற்காக ஐயா, பழுவூர் ராணியின் பெயரைச் சொல்லப் போகிறேன்? ஒருவரிடமும் சொல்ல மாட்டேன்."

"இதோ இங்கே யாரோ ஒரு வாலிபன் படுத்திருக்கிறானே! சப்தம் போட்டுப் பேசுகிறாயே?"

"அவன் ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறான். இடிஇடித்தாலும் அவனுக்குக் காது கேட்காது."

"ஒருவேளை அவனுக்குத் தெரிந்து விட்டது என்று தோன்றினால் இந்த உலைக் களத்தின் நெருப்பில் அவனைத் தூக்கிப் போட்டு வேலை தீர்த்துவிடு!"

இந்தச் சம்பாஷணையின் முடிவில் கொல்லனும், கத்திக்கு உடையவனும் வந்தியத்தேவனை இழுத்துப் போய் உலைக் களத்தில் போடப் போவதாக வந்தியத்தேவன் கனவு கண்டான். பிறகு அந்தக் கனவு மாறியது.

வந்தியத்தேவனை யம தூதர்கள் நரகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். யம தர்மராஜன் பூலோகத்தில் வந்தியத்தேவனுடைய நடவடிக்கைகளைப் பற்றி விசாரித்தான். "பொய் சொல்வதில் இவன் நிபுணன். எத்தனை பொய்தான் சொல்லியிருக்கிறான் என்பதற்கு அளவே கிடையாது" என்றான் சித்திரகுப்தன் கையிலிருந்த ஓலையைப் பார்த்துவிட்டு.

"இல்லை, இல்லை! எல்லாம் சக்கரவர்த்தி குடும்பத்தாரின் சேவையிலேதான் சொன்னேன். எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பதற்காகச் சில பொய்களைச் சொன்னேன்."

"எதற்காகச் சொல்லியிருந்தாலும் பொய் பொய்தான். தள்ளுங்கள் இவனை நரகத்தின் பெரிய நெருப்புக் குழியில்!" என்றான் யமன். உடனே நரகத்தின் உட்புறத்திலிருந்து நூறாயிரம் குரல்கள் பயங்கரமாக ஊளையிட்டன.

யம தூதர்கள் அவனை அழைத்துப் போனார்கள். பயங்கரமாகக் கொழுந்து விட்டெரிந்த பெரு நெருப்பில் அவனைத் தள்ளுவதற்கு ஆயத்தம் செய்தார்கள். அந்த யம தூதர்கள் இருவரையும் பார்த்தால், முகங்கள் பழுவேட்டரையர்களின் முகங்களைப் போலிருந்தன. அதைப் பற்றி அவன் திடுக்கிட்டு நிற்கையில் குந்தவைதேவி அங்கே வந்தாள். "என்னுடைய கட்டளையை நிறைவேற்றுவதற்காகவே அவர் பொய் சொன்னார். ஆகையால், அவருக்குப் பதிலாக என்னை நெருப்பில் போடுங்கள்!" என்று கூறினாள்.

இந்தச் சமயத்தில் நந்தினி தேவியும் அங்கு எப்படியோ வந்து சேர்ந்தாள். "இரண்டு பேரையுமே சேர்த்து நெருப்பிலே போட்டு விடுங்கள்!" என்றாள் அந்தப் புண்ணியவதி. யம தூதர்கள் அவர்கள் இருவரையும் பிடித்து நெருப்பில் தள்ளப் போனார்கள். "ஐயோ வேண்டாம்" என்று வந்தியத்தேவன் அலறிக் கொண்டு திமிறினான்; கண் விழித்து எழுந்து உட்கார்ந்தான். கண்டது கனவு என்ற எண்ணம் ஆறுதல் கொடுத்தது. ஆனால் எல்லாம் உண்மையாக நடந்தது போலவே தோன்றியபடியால் அவன் உடம்பு இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது.

'சேச்சே! இனிமேல் எக்காரணத்திற்காகவும் பொய் சொல்லக்கூடாது' என்று தீர்மானித்துக் கொண்டான்.

"ரொம்ப நேரம் தூங்கிப்போய் விட்டேனா!" என்று கொல்லனைப் பார்த்துக் கேட்டான்.

"அப்படி ரொம்ப நேரம் ஆகிவிடவில்லை, இரண்டு ஜாமந்தான். அப்பனே! நீ கும்பகர்ணன் வம்சத்தில் வந்தவனோ? பட்டப்பகலில் இப்படித் தூங்குகிறாயே? இரவிலே எப்படித் தூங்கமாட்டாய்?" என்றான் கொல்லன்.

"கடவுளே! இரண்டு ஜாம நேரமா தூங்கி விட்டேன்? குதிரைக் குளம்புக்குக் கவசம் செய்தாகி விட்டதா?"

"இனிமேல்தான் செய்யவேண்டும். ஆனால் உன்னைப் போன்ற தூங்கு மூஞ்சிக்கு அதனால் என்ன பயன்? நீ குதிரையையே பறிகொடுத்து விடுவாய்! இன்னும் உன்னையே கூடப் பறிகொடுத்து விடுவாய்!"

வந்தியத்தேவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவன் மனத்தில் ஒரு சந்தேகம் உதித்தது. எழுந்து ஓடிப் போய் வாசற் பக்கம் பார்த்தான். குதிரையை நிறுத்திய இடத்தில் அதைக் காணோம்!

"ஐயோ! குதிரை எங்கே?" என்று இரைச்சல் போட்டுக் கொண்டே உடைவாளின் பிடியில் கை வைத்தான்.

"பயப்படாதே! உன் குதிரை பத்திரமாயிருக்கிறது. கொல்லைப்புறத்தில் போய்ப் பார்!"

வந்தியத்தேவன் கொல்லைப்புறம் சென்று பார்த்தான். அங்கே மூன்று பக்கம் அடைக்கப்பட்ட கீத்துக் கொட்டகையில் அவனுடைய குதிரை நின்று கொண்டிருந்தது. கொல்லன் உலைக்களம் ஊதிய சிறுபிள்ளை அதன் வாயில் புல் கொடுத்துக் கொண்டிருந்தான். வந்தியத்தேவனைப் பார்த்ததும் குதிரை உடலைச் சிலிர்த்துக் கொண்டு கனைத்தது.

"ஐயா! இங்கே வந்து கொஞ்சம் உங்கள் குதிரையைப் பார்த்துக் கொள்ளுங்கள். இதன் குளம்புகளுக்கு அளவு எடுக்க வேண்டும்!" என்றான் பையன்.

வந்தியத்தேவன் குதிரை அருகில் சென்று அதைத் தடவிக் கொடுத்துக் கொண்டு நின்றான். பையன் குதிரையின் குளம்புக்கு அளவு எடுத்தான்.

"இதை யார் இங்கே கொண்டு வந்து கட்டினார்கள்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"நான்தான் கட்டினேன்."

"எதற்காக?"

"அப்பா கட்டச் சொன்னார்."

"அது எதற்காக?"

"இந்த ஊர் வழியாகச் சற்று முன்னால் பெரிய பழுவேட்டரையரும், அவர் பரிவாரங்களும் போனார்கள். குதிரையை வாசலில் பார்த்திருந்தால் கட்டாயம் கொண்டு போயிருப்பார்கள்."

வந்தியத்தேவனுக்குப் பழைய ஞாபகம் - திரு நாராயணபுரத்து ஞாபகம் - வந்தது. தான் செய்த தவறை எண்ணி வெட்கம் அடைந்தான். கொல்லனிடமும், அவன் மகனிடமும் மனத்திற்குள் நன்றி உணர்ச்சி கொண்டான். குதிரையின் குளம்புக்கு அளவு எடுத்துக் கொண்டதும் இருவரும் உலைக் களத்துக்குள் வந்தார்கள்.

கொல்லன் இரும்புத்துண்டை எடுத்துக் குளம்பைப் போல் வளைத்து வேலை செய்யத் தொடங்கினான்.

"என் குதிரையைக் காப்பாற்றிக் கொடுத்தீரே? அதற்காக மிக்க வந்தனம்" என்றான் வல்லவரையன்.

"என்னைத் தேடி வருகிறவர்களுடைய உடைமையை நான் காப்பாற்றிக் கொடுக்க வேண்டுமல்லவா? அது என் கடமை."

"பழுவேட்டரையர் பரிவாரம் இந்தப் பக்கம் போய் எத்தனை நேரம் இருக்கும்?"

"இரண்டு நாழிகைக்கு மேலேயிருக்கும். அவ்வளவு ஆர்ப்பாட்டத்துக்கும் நீ தூங்கிக் கொண்டிருந்தாயே, அதை நினைத்தால்தான் எனக்கு வியப்பாக இருக்கிறது."

"நான்தான் தூங்கிப் போய் விட்டேன். இத்தனை நேரம் நீர் வீணாக்கி விட்டீரே? அவர்கள் போன பிற்பாடாவது வேலையை உடனே ஆரம்பித்திருக்கலாமே?"

"எப்படி ஆரம்பிப்பது? அவர்கள் கொண்டு வந்த செய்தியைக் கேட்ட பிறகு, யாருக்கு வேலை செய்ய மனம் வரும்? உனக்காக மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு இதை நான் செய்கிறேன். எங்கிருந்து அப்பனே நீ வருகிறாய்?"

அவர்கள் கொண்டு வந்த செய்தி என்னவாயிருக்கும் என்று யோசித்துக் கொண்டே வந்தியத்தேவன், "இலங்கையிலிருந்து வருகிறேன்" என்றான்.

கொல்லன் அவனுடைய முகத்தை ஏற இறங்கப் பார்த்தான். பிறகு குரலைத் தாழ்த்திக்கொண்டு, "இலங்கையில் இருந்தபோது இளவரசர் அருள்மொழிவர்மரைப் பார்த்தாயா?" என்றான்.

உண்மையே சொல்லுவதென்று சற்றுமுன் சங்கல்பம் செய்து கொண்டிருந்த வந்தியத்தேவன், "பார்த்தேன்" என்றான்.

"கடைசியாக அவரை நீ எப்போது பார்த்தாய்?"

"இன்று காலையில் பார்த்தேன்."

கொல்லன் வந்தியத்தேவனைக் கோபமாய் நோக்கினான்.

"விளையாடுகிறாயா தம்பி?"

"இல்லை ஐயா! உண்மையைத்தான் சொன்னேன்."

"இளவரசர் இப்போது எங்கேயிருக்கிறார் என்று கூடச் சொல்வாய் போலிருக்கிறதே?"

"ஓ! கேட்டால் சொல்லுவேன்!"

"இளவரசர் எங்கே இருக்கிறார், சொல் பார்க்கலாம்."

"நாகைப்பட்டினம், சூடாமணி விஹாரத்தில் இருக்கிறார்!"

"அப்பனே நானும் எத்தனையோ பொய்யர்களைப் பார்த்திருக்கிறேன். உன்னைப் போல் கட்டுக்கதை புனைந்துரைக்கக் கூடியவர்களைப் பார்த்ததேயில்லை."

வந்தியத்தேவன் தன் மனத்திற்குள் சிரித்துக் கொண்டான். புனைந்து கூறும் பொய்யை நம்புவதற்கு எல்லாரும் ஆயத்தமாயிருக்கிறார்கள். உண்மையைச் சொன்னால் நம்ப மறுக்கிறார்கள். இது நமது ஜாதக விசேஷம் போலும்!

"தம்பி! நீ இலங்கையிலிருந்து எப்போது புறப்பட்டாய்?"

"நாலு நாளைக்கு முன்னால்!"

"அதனாலே தான் உனக்குச் செய்தி தெரியவில்லை."

"என்ன செய்தி ஐயா?"

"பொன்னியின் செல்வரைக் கடல் கொண்டு விட்டது என்ற செய்திதான்!"

வந்தியத்தேவன் கஷ்டப்பட்டுத் திடுக்கிடுவது போல் பாசாங்கு செய்தான்.

"ஐயோ, அப்படியா! யார் சொன்னார்கள்?"

"நேற்று முதல் இங்கெல்லாம் அப்படிப் பேச்சாயிருந்தது. இன்றைக்குப் பழுவேட்டரையர் இவ்வழியாகப் போனபோது ஊர்த்தலைவர்கள் அவரைக் கேட்டார்கள். அந்தச் செய்தி உண்மைதான் என்று பழுவேட்டரையர் கூறினார். அந்தச் சண்டாளப் பாவியின் தலையில் இடி விழவில்லையே!"

"ஏன் அந்தக் கிழவரை வைகிறாய்?"

"அவராலேதான் இது நடந்திருக்கிறது. ஏதோ சூழ்ச்சி செய்து இளவரசரை அவரே கடலில் மூழ்க அடித்து விட்டார் என்று ஊரார் சொல்கிறார்கள். அதனால் அவருக்காக ஏற்பாடு செய்திருந்த உபசாரங்களையும் நிறுத்திவிட்டார்கள்."

"இளவரசர் மீது இந்த ஊராருக்கு அவ்வளவு பிரியமா?"

"கேட்க வேண்டுமா? ஊர் மக்கள் அவ்வளவு பேரும் இப்போது கண்ணீரும் கம்பலையுமாயிருக்கிறார்கள். இந்த ஊரார் மட்டும் என்ன? சோழநாடு முழுவதும் ஓலமிட்டு அழப் போகிறது. பழுவேட்டரையர்களைச் சபிக்கப் போகிறது. ஏற்கெனவே, சக்கரவர்த்தி நோய்வாய்ப்பட்டிருக்கிறார். இந்தச் செய்தி கேட்டு என்ன பாடு படுவாரோ, தெரியாது. இன்னும் என்னவெல்லாம் விபரீதங்கள் நடக்குமோ? சில நாளாக வானத்தில் தூமகேது தோன்றி வருகிறதே? அதற்கு ஏதேனும் நடந்துதானே தீரவேண்டும்?"

நடக்ககூடிய விபரீதங்கள் என்னவாயிருக்கக் கூடும் என்று வந்தியத்தேவன் எண்ணிப் பார்த்தான். தான் கூறியதை இந்தக் கொல்லன் நம்பாமலிருந்ததே நல்லதாய்ப் போயிற்று. தான் இனிமேல் பொய் சொல்லாவிட்டாலும், இளவரசரைப் பற்றிய உண்மையைச் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. இளையபிராட்டி ஏதோ முக்கிய காரணத்திற்காகத்தானே அவரைச் சூடாமணி விஹாரத்தில் இருக்கச் சொல்லியிருக்கிறார்! இளவரசியைக் கண்டு பேசிய பிறகு, அவர் சொல்லும் யோசனைப்படி நடந்து கொள்ள வேண்டும்.

"தம்பி! என்ன யோசிக்கிறாய்?" என்றான் கொல்லன்.

"நடுக்கடலில் சுழற்காற்றில் நானும் அகப்பட்டுக் கொண்டேன். கடவுள் அருளால் நான் தப்பிப் பிழைத்ததை நினைத்துப் பார்த்துக் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்."

"கடவுள் அருள் என்பது ஒன்று இருக்கிறதா, என்ன?"

"பெரியவரே! அது என்ன அப்படிச் சொல்கிறீர்?"

"கடவுள் அருள் என்பதாக ஒன்று இருந்தால் பழுவேட்டரையர்களின் அக்கிரமங்கள் இன்னும் நடந்து கொண்டிருக்குமா! பொன்னியின் செல்வர் கடலில் மூழ்கியிருப்பாரா?"

"பெரியவரே! பழுவேட்டரையர் அதிகாரத்தில் உள்ளவர்கள். அவர்களைப் பற்றி இப்படியெல்லாம் பேசலாமா? யார் காதிலாவது விழுந்தால்? கொஞ்சம் ஜாக்கிரதையாயிருங்கள்."

"என்னைவிட நீதான் ஜாக்கிரதையாகயிருக்க வேண்டும். நானாவது விழித்துக் கொண்டிருக்கும் போது பேசுகிறேன். நீ தூக்கத்தில் உளறுகிறாய்!"

"ஐயையோ? என்ன உளறினேன்?"

"பழுவேட்டரையர்களை யம தூதர்கள் என்று சொன்னாய். பழுவூர் இளைய ராணியைப் பெண் பேய் என்று சொன்னாய். நீ சொன்னது என்னமோ உண்மைதான். ஆனால் என்னைத் தவிர வேறு யார் காதிலாவது விழுந்தால் உன் கதி என்ன? நீ அப்படிப் பிதற்றிக் கொண்டிருக்கிற சமயத்திலேதான் அந்தச் சாலை வழியாகப் பழுவேட்டரையர்களின் பரிவாரங்கள் போயின. எனக்கு ரொம்பத் திகிலாய்ப் போய்விட்டது."

"நீர் என்ன செய்தீர்?"

"வாசற் பக்கம் போய் நின்று இந்த உலைக் களத்தின் கதவையும் சாத்திக் கொண்டேன். அதற்கு முன்னால் உன் குதிரையைக் கொல்லைப்புறம் கொண்டு போய்க் கட்டியாயிற்று."

"தூக்கத்தில் நான் இன்னும் ஏதாவது உளறினேனா?"

"உளறலுக்குக் குறைவேயில்லை."

"ஐயோ! என்ன உளறினேன்?" "நீ இளவரசரைப் பழையாறைக்கு வரும்படி வற்புறுத்தினாய். அவர் பழுவேட்டரையர் கட்டளைப்படி சிறைப்படுவேன் என்றார். இன்னும் என்னவெல்லாமோ சொன்னாய். தம்பி! பழையாறை இளைய பிராட்டியைக் குறித்துக் கூட ஏதேதோ சொன்னாய். ஜாக்கிரதை, அப்பனே! ஜாக்கிரதை!"

வந்தியத்தேவன் வெட்கித் தலை குனிந்தான். இளையபிராட்டியைக் குறித்து அனுசிதமாக ஏதாவது பேசி விட்டோ மோ என்று பீதி அடைந்தான். இனிமேல் தூங்குவதாயிருந்தால் தனி அறையில் கதவைத் தாளிட்டுக் கொண்டு தூங்க வேண்டும். அல்லது மனித சஞ்சாரம் இல்லாத காட்டிலோ, பாலைவனத்திலோ, மலைக் குகையிலோ தூங்க வேண்டும்.

"தம்பி! சுழற் காற்றில் நீ எப்படி அகப்பட்டுக் கொண்டாய்? எப்படிப் தப்பிப் பிழைத்தாய்?"

"நான் ஏறி வந்த கப்பல் இடி விழுந்து கடலில் முழுகி விட்டது. முறிந்த பாய்மரத்தைப் பிடித்துக் கொண்டு வெகு நேரம் மிதந்தேன். பிறகு ஓடக்காரப் பெண் ஒருத்தியின் உதவியால் தப்பிக் கரையேறினேன்."

"இளவரசரும் ஒருவேளை அவ்விதம் தப்பிப் பிழைத்திருக்கலாம் அல்லவா?"

"கடவுள் சித்தமாயிருந்தால் தப்பிப் பிழைத்திருக்கலாம்."

"நேற்றிரவு நீ எங்கே தங்கினாய்?"

"கோடிக்கரையிலேதான் கடற்கரையோரத்தில் பழுவேட்டரையர் பரிவாரங்கள் ஒரே கூட்டமாயிருந்தன. ஆகையால் குழகர் கோவிலில் சிறிது நேரம் படுத்துத் தூங்கினேன். பொழுது விடிவதற்குள் புறப்பட்டு விட்டேன்."

"அதனால்தான் உனக்கு இளவரசர் பற்றிய செய்தி தெரியவில்லை போலிருக்கிறது."

"நீர் தெரியப்படுத்தியதற்காக வந்தனம், ஐயா! நான் பழையாறைக்குக் கூடிய சீக்கிரம் போக வேண்டும் பழுவேட்டரையரின் பரிவாரத்திடம் சிக்காமல் போக வேண்டும். எந்த வழியாகப் போவது நல்லது?"

"பழுவேட்டரையர் தஞ்சாவூர் இராஜபாட்டையில் போகிறார். நீ முல்லையாற்றங் கரையோடு போனால் பழையாறையை அடையலாம்."

"நீங்கள் கொஞ்சம் சீக்கிரமாகவே குதிரைக் குளம்புக்குக் கவசம் அடித்துக் கொடுத்தால் நல்லது."

"இதோ!" என்றான் கொல்லன். வளைத்துக் காய்ச்சியிருந்த இரும்பைச் சுத்தியினால் அடிக்கத் தொடங்கினான்.

"இது பெரிய பழுவேட்டரையருக்கு! இது சின்னப் பழுவேட்டரையருக்கு! இந்த அடி சம்புவரையருக்கு! இது மழவரையருக்கு!" என்று சொல்லிக் கொண்டே அடித்தான். இதிலிருந்து அந்தச் சிற்றரசர்கள் பேரில் நாட்டு மக்கள் எவ்வளவு கோபம் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒருவாறு வந்தியத்தேவன் தெரிந்து கொண்டான்.

குதிரைக் குளம்புக்கு லாடம் அடித்து முடிந்தது. செய்து கொடுத்த வேலைக்காகக் கொல்லனுக்குக் காசு தர வந்தியத்தேவன் யத்தனித்தான். கொல்லன் அதைப் பெற்றுக் கொள்வதற்கு மறுத்து விட்டான்.

"நீ நல்ல பிள்ளை என்பதற்காகச் செய்து கொடுத்தேன். காசுக்காகச் செய்து தரவில்லை" என்றான்.

வந்தியத்தேவன் மறுபடியும் கொல்லனுக்கு நன்றி கூறி விட்டு விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டான்.

புறப்படும் சமயத்தில் கொல்லன், "தம்பி! பழையாறைக்கு நீ எதற்காகப் போகிறாய்?" என்று கேட்டான்.

"ஐயா! நீங்கள் என்னை அதைப் பற்றி ஒன்றும் கேட்காமலிருந்தால், நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது" என்றான் வல்லவரையன்.

கொல்லன் சிரித்துவிட்டு, "அப்பனே! நீ துரிதமாகக் கெட்டிக்காரன் ஆகி வருகிறாய்! தூங்குகிறபோதும் இவ்வளவு ஜாக்கிரதையாயிரு!" என்று சொல்லி, விடை கொடுத்து அனுப்பினான்.

வந்தியத்தேவன் மறுபடியும் பிரயாணம் தொடங்கிய போது சூரியன் அஸ்தமிக்கும் நேரமாகி விட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் அந்தி மயங்கி இருள் சூழ்ந்து வந்தது. இதற்குள் முல்லையாற்றங்கரையை வல்லவரையன் பிடித்து விட்டான். அதற்கு மேல் ஆற்றங்கரையோடு போக வேண்டியதுதான். வழி விசாரிக்க வேண்டிய அவசியம் கூடக் கிடையாது.

முன்னிருட்டு வேளைதான். ஆனால் வானத்தில் ஆயிரங்கோடி நட்சத்திரங்கள் ஒளிச்சுடர்களாக விளங்கின. முல்லை நதியின் கரைகளில் மரங்கள் அதிகம் இல்லை. சிறிய சிறிய புதர்கள்தான் இருந்தன. ஆகையால் வழி கண்டுபிடித்துப் போவதற்கு வேண்டிய வெளிச்சம் விண்மீன்கள் தந்தன.

வானத்தில் ஜொலித்த நட்சத்திரங்களோடு போட்டியிடுவது போல ஆயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் நதிக் கரைப்புதர்களைச் சுற்றி வட்டமிட்டு விளையாடிக் கொண்டிருந்தன. வந்தியத்தேவனுடைய உள்ளத்தில் உற்சாகம் ததும்பியது. அதற்குப் பல காரணங்கள் இருந்தன. நாடெல்லாம் இளவரசரைப் பற்றிய கவலையில் ஆழ்ந்திருக்கும் போது அவனுக்கு மட்டும் அவர் பத்திரமாயிருக்கிறார் என்ற செய்தி தெரிந்திருந்தது. இளவரசரிடம் சோழ நாட்டு மக்கள் எவ்வளவு பிரியம் வைத்திருக்கிறார்கள் என்பதை ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது. மந்திரவாதி ரவிதாஸனை அவன் மறுபடியும் ஏமாற்ற முடிந்ததை நினைக்கக் குதூகலமாயிருந்தது. இதையெல்லாம் விடக் குந்தவை தேவியைச் சீக்கிரத்தில் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணம் அவனுக்கு எல்லையில்லாத மனக் கிளர்ச்சியை அளித்தது.

வெறுமனேயா பார்க்கப் போகிறான்? இளைய பிராட்டி கூறிய காரியத்தைச் செய்து முடித்து விட்டுப் பார்க்கப் போகிறான்! அந்தக் காரியத்துக்கு ஏற்பட்ட தடங்கல்களையெல்லாம் நினைத்து, அவற்றையெல்லாம் தான் எதிர்த்து வெற்றி கொண்டதையும் எண்ணி அவன் பெருமிதம் அடைந்தான். நாளை மாலை இந்த நேரத்துக்குள் இளையபிராட்டியைச் சந்தித்து விடுவோம் என்பதில் சந்தேகமில்லை. ஆகா! அந்தச் சந்திப்பைக் குறித்து எண்ணும்போதே அவனுக்கு மெய்சிலிர்த்தது.

நட்சத்திரச் சுடர்களால் விளங்கிய வானமும், மின்மினி பறந்த பூமியும், சலசலவென்ற சப்தத்துடன் ஓடிய முல்லையாற்று வெள்ளமும், மந்த மந்தமாக வந்த குளிர்ப் பூங்காற்றும் வந்தியதேவனைப் பரவசமடையச் செய்தன. வானமும் பூமியும் ஒரே ஆனந்த மயமாக அவனுக்கு அச்சமயம் தோன்றின. பழைய காதல் பாட்டு ஒன்று அவனுக்கு நினைவு வந்தது. தான் வாய்விட்டு உற்சாகமாகப் பாடுவதற்குத் தகுந்த இடந்தான் இது. சுற்றுப்புறமெங்கும் மனித சஞ்சாரமே கிடையாது. ஏன் பட்சிகள் கூடக் கூடுகளிலே சென்று அடங்கிவிட்டன. அவன் பாடுவதற்குத் தடை என்ன இருக்கிறது? இதோ அவன் பாடிய பாட்டு. யாரை மனத்தில் நினைத்து கொண்டு பாடினான் என்று சொல்ல வேண்டியதில்லை அல்லவா?

     "வானச் சுடர்க ளெல்லாம்
          மானே உந்தனைக் கண்டு
     மேனி சிலிர்க்குதடி - அங்கே
          மெய்மறந்து நிற்குதடி!
     தேனோ உந்தன் குரல்தான்
          தென்ற லோஉன் வாய் மொழிகள்
     மீனொத்த விழி மலர்கள் - கண்டால்
          வெறி மயக்கம் தருவதேனோ?"

வந்தியத்தேவன் இப்படிப் பாடி முடித்தானோ இல்லையோ, அவனுடன் போட்டி போடுவது போலத் தூரத்தில் நரிகள் ஊளையிடத் தொடங்கின.

அதே சமயத்தில் மனிதக் குரலில் கலகலவென்று சிரிக்கும் சத்தம் கேட்டது.

வந்தியத்தேவன் சிறிது மிரண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். அவனுடைய கை உடைவாளில் சென்றது.

புன்னைமரம் ஒன்றின் கரிய நிழலிலிருந்து ஓர் உருவம் வெளிப்பட்டது.

"தம்பி உன் பாட்டு பிரமாதம்! நரிகளின் பேட்டி கானம் அதைவிடப் பிரமாதம்!" என்று கூறிவிட்டுத் தேவராளன் மீண்டும் சிரித்தான்.