பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/ஆழ்வானுக்கு ஆபத்து!
தியாக சிகரம் - அத்தியாயம் 46
தொகுஆழ்வானுக்கு ஆபத்து!
ஆழ்வார்க்கடியானும், பூங்குழலியும் மலையடிவாரத்து மரத்தினடியில் உட்கார்ந்தார்கள். "பெண்ணே! நான் வந்த காரியம் ஆகிவிட்டது. புறப்படலாமா?" என்றான் ஆழ்வார்க்கடியான்.
"வைஷ்ணவரே! நீர் வந்த காரியம் ஆகிவிட்டதென்றால் நீர் போகலாம். நான் வந்த காரியம் இன்னும் பூர்த்தி ஆகவில்லை!" என்றாள் பூங்குழலி.
"நீ என்ன காரியத்துக்காக வந்தாய்?"
"என் அத்தையைக் கொன்ற பாதகனைத் தேடிக் கொண்டு வந்தேன்."
"அவனைக் கண்டுபிடிக்கவில்லையா? அதோ அந்தச் சதிகாரரின் கூட்டத்தில் அவன் இல்லையா?"
"இருக்கிறான்!"
"பின்னே என்ன?"
"அவனைத் தரிசனம் செய்து புண்ணியம் கட்டிக்கொண்டு போவதற்காக வந்தேனா? கொலைக்குக் கொலை, பழிக்குப்பழி வாங்குவதற்காக வந்தேன்."
"பூங்குழலி! குற்றம் செய்தவர்களைத் தண்டிப்பதற்கு நாம் யார்? அதற்குக் கடவுள் இருக்கிறார்!"
"கடவுள் இருக்கிறாரா, இருந்தாலும் மனிதர்களுடைய துரோகச் செயல்களைத் தண்டிக்கிறாரா என்பதுபற்றி எனக்குச் சந்தேகமாயிருக்கிறது."
"கடவுளை விட்டுவிடுவோம். இந்த உலகில் குற்றம் செய்தவர்களைத் தண்டிக்கும் பொறுப்பு அரசர்களுடையது. அரசர்கள் நியமிக்கும் அதிகாரிகள் செய்ய வேண்டியது."
"அரசர்களும், அவர்களுடைய அதிகாரிகளும் தங்கள் கடமையைச் சரிவரச் செய்யாவிட்டால்?"
"செய்யவில்லையென்று நாம் எப்படித் தீர்மானிப்பது?"
"வைஷ்ணவரே! அதோ உள்ள பாதகர்களில் ஒருவன், மேல் மாடியிலிருந்து வேலை எறிந்து, அன்பே உருவான என் அத்தையைக் கொன்றான். வாயினால் பேசத் தெரியாதவளும், ஒருவருக்கும் ஒரு தீங்கும் நினையாதவளும், வாழ்க்கையெல்லாம் துர்ப்பாக்கியசாலியாக இருந்தவளுமான ஒரு பேதைப் பெண்ணைக் கொன்றான். சக்கரவர்த்தியும், அவருடைய ராணிமார்களும், தஞ்சைக் கோட்டை அதிகாரியான சின்னப் பழுவேட்டரையரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆயினும் அவனைத் தப்பி ஓடும்படி விட்டுவிட்டார்கள்..."
"பூங்குழலி! சோமன் சாம்பவனைப் பிடிப்பதற்கு யாதொரு முயற்சியும் அவர்கள் செய்யவில்லையா?"
"வாழ்நாளெல்லாம் என் அத்தையை நிராகரித்த சக்கரவர்த்தி அப்போது அவளை மடியில் போட்டுக்கொண்டு அழுதார். மற்றவர்கள் எல்லோரும் திக்பிரமை கொண்டு நின்றார்கள். 'கொலைகாரனைத் தொடர்ந்து நான் போகிறேன்' என்றதும், சின்னப் பழுவேட்டரையரும் எழுந்து வந்தார். ஆனால் சுரங்கப்பாதையில் அவர் திரும்பிப் போக நேர்ந்தது."
"அது என்ன?"
"சுரங்கப்பாதையில் நானும் அவரும் சென்றபோது இருளில் ஓர் ஓலக்குரல் கேட்டது. சின்னப் பழுவேட்டரையர் அந்தக் குரல் வந்த இடத்தை நோக்கிப் பாய்ந்து அங்கே இருந்தவனைப் பிடித்துக் கொண்டார். 'இதோ கொலைகாரன் அகப்பட்டு விட்டான்!' என்று ஒரு குரல் வந்தது. 'இல்லை, இல்லை! நான் கொலை செய்யவில்லை!' என்று ஒரு குரல் வந்தது. அது யாருடைய குரல் என்பது சின்னப் பழுவேட்டரையருக்குத் தெரிந்ததும் அவர் திகைத்துப் போய், 'ஐயோ! நீ ஏன் இங்கு வந்தீர்?' என்றார். 'பொக்கிஷமெல்லாம் பத்திரமாக இருக்கிறதா என்று பார்ப்பதற்கு வந்தேன்' என்றது இருளில் வந்த குரல். 'ஐயோ! தெய்வமே! உம்மை இங்கே யாராவது பார்த்தால் என்ன நினைத்துக்கொள்வார்கள்? நீ அல்லவோ சக்கரவர்த்தியைக் கொல்ல முயன்றதாக எண்ணிக் கொள்வார்கள்?' என்றார் காலாந்தக கண்டர். 'சக்கரவர்த்தி செத்துப்போய் விட்டாரா?' என்று ஆவலுடன் கேட்டார் சின்னப் பழுவேட்டரையருடைய அருமை மருமகரான மதுராந்தகத் தேவர். 'அசட்டுப் பிள்ளையே! என்னுடன் வா! யாரும் பார்ப்பதற்கு முன் வா!' என்று சொல்லிக் காலாந்தக கண்டர் அவருடைய மருமகப்பிள்ளையின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போய்விட்டார். பிறகு நான் மட்டும் இந்தக் கொலைகாரனைத் தொடர்ந்து வந்தேன். இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்து என் நோக்கத்தை நிறைவேற்றாமல் திரும்பிப் போகச் சொல்கிறாயா?" என்றாள் பூங்குழலி.
"பெண்ணே! நீ ஆண் பிள்ளையாகப் பிறந்திருக்க வேண்டியவள். பிறந்திருந்தால் பெரியதொரு சாம்ராஜ்யத்தின் சர்வாதிகாரியாக இருந்திருப்பாய். அது போனால் போகட்டும். இதைக் கேள் ஒரு நியாயம் சொல்லு! ஒருவரைக் கொல்ல நினைத்து, இன்னொருவரைத் தற்செயலாகக் கொன்றவன் மீது கொலைக் குற்றம் சாட்ட முடியுமா?"
"உம்முடைய கேள்வி எனக்கு விளங்கவில்லை. கொன்றவன் கொலைக்குற்றம் செய்தவன்தானே!"
"அது எப்படிச் சொல்ல முடியும்? இராமாயணம் கேட்டிருப்பாய். தசரதர், யானை தண்ணீர் குடிப்பதாக நினைத்து, அம்பை விட்டார். அது ரிஷி குமாரன் மீது விழுந்தது. ரிஷி குமாரனைக் கொன்ற கொலைக் குற்றத்துக்காகத் தசரதர் தண்டிக்கப்பட்டாரா? இல்லை! இப்போது நீ தொடர்ந்து வந்த சோமன் சாம்பவனை எடுத்துக்கொள். அவன் சக்கரவர்த்தியைக் கொல்வதற்காக வேலை எறிந்தான். ஆனால் சக்கரவர்த்தி உயிரோடிருக்கிறார். உன் அத்தை குறுக்கே வந்து வேலைத்தாங்கி உயிரை விட்டாள். அவள் தற்கொலை செய்து கொண்டவள் தானே? பின் சோமன் சாம்பவன் மீது கொலைக்குற்றம் எப்படிச் சேரும்?"
"வைஷ்ணவரே! உம்முடைய நீதி முறை அதிசயமாக இருக்கிறது..."
"என்னுடைய நீதி குறை மட்டும் அல்ல. சர்வலோக நாயகனான சாக்ஷாத் நாராயண மூர்த்தியின் நீதி முறையே விசித்திரமாகத்தான் இருக்கிறது. இந்த உலகில் பாவம் செய்கிறவர்கள் செழிப்புடன் இருக்கிறார்கள். நல்லவர்கள் - புண்ணியாத்மாக்கள் - கஷ்டப்பட்டு உயிரை விடுகிறார்கள். இதற்கெல்லாம் கடவுளுடைய நியாயம் ஏதோ இருக்கத்தானே வேண்டும்?"
"நீரும் உம்முடைய நாராயணனும் எப்படியாவது போங்கள். எனக்குத் தெரிந்த நியாயத்தை நான் நிறைவேற்றி விட்டுத்தான் வருவேன்."
"பூங்குழலி! உனக்காக மட்டும் நான் இந்தப் பேச்சை எடுக்கவில்லை. அதோ அந்த மலைக்குகையில் இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஆதித்த கரிகாலரைக் கொன்றவர். ஆனால் கரிகாலரைக் கொல்லவேணுமென்று நினைத்துக் கொல்லவில்லை. வேறொருவரைக் கொல்ல நினைத்து எறிந்த கத்தி, இளவரசரின் பேரில் விழுந்து அவரைக் கொன்றுவிட்டது. அவரைக் கொலைகாரர் என்று சொல்ல முடியுமா?"
"வைஷ்ணவரே! என் மூளையைக் குழப்ப வேண்டாம். மலைக்குகைக்குள் இருப்பவர்கள் யார்?"
"சோழ சாம்ராஜ்யத்தின் தனாதிகாரி, தஞ்சை அரண்மனையில் சர்வாதிகாரி, இருபத்தி நான்கு போர்க்களங்களில் போரிட்டு அறுபத்து நாலு விழுப்புண்களைத் தம் திருமேனியில் சுமந்திருக்கும் வீராதி வீரர். இறை விதிக்கும் தேவர், குறுநில மன்னர் குழுவின் மாபெரும் தலைவர். நந்தினி தேவியின் கணவர் - பெரிய பழுவேட்டரையர் அந்த மலைக் குகையில் வீற்றிருக்கிறார்...!"
இவ்வாறு ஆழ்வார்க்கடியான் பெருங்குரலில் கட்டியும் கூறுவதுபோல் கூறினான். அதே சமயத்தில் ரவிதாஸன், ரேவதாஸன், பரமேசுவரன், சோமன் சாம்பவன் முதலியவர்கள் திடு திடுவென்று ஓடி வந்தார்கள். பூங்குழலி சட்டென்று அப்பால் விலகி நின்றாள். ரவிதாஸன், கையில் குறுந்தடி ஒன்று இருந்தது. அதை ஓங்கிய வண்ணம், ரவிதாஸன், "அடே வேஷதாரி வைஷ்ணவனே! அன்பில் அநிருத்தரின் ஒற்றனே! கடைசியில் எங்களிடம் அகப்பட்டுக் கொண்டாயா? நாங்கள் செய்த மூன்று முயற்சியில் ஒன்றிலேதான் வெற்றி அடைந்தோம். மற்ற இரண்டிலும் தோல்வி அடைந்தோம். அந்தத் தோல்விகளைப் பற்றி எங்களுக்கு இனி கவலையில்லை. மூன்று ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்த உன்னைப் பிடித்துவிட்டோ மல்லவா? இந்தத் தடவை நீ எங்களிடமிருந்து தப்பமுடியாது?" என்றான்.
உடனே ஆழ்வார்க்கடியான், முன்னை விட உரத்த குரலில் "அப்பனே! தேடுகிறவன் யார்? தப்பி ஓடுகிறவன் யார்? எல்லாரும் அந்த சாக்ஷாத் நாராயண மூர்த்தியின் குமாரர்கள் தான்! அவனன்றி ஓரணுவும் இந்த உலகில் அசையுமா? ரவிதாஸா! நீயும் கேள்! உன்னைச் சேர்ந்தவர்களும் கேட்கட்டும். வேறு வேறு சில்லறைத் தெய்வங்களையெல்லாம் விட்டுவிட்டு சாக்ஷாத் மகா விஷ்ணுவைச் சரணமடையுங்கள்! பகவான் உங்களுடைய பாவங்களையெல்லாம் மன்னித்துக் காப்பாற்றுவார்! மானிடர்களுக்காக உழைத்து வாழ்க்கையை வீணாக்கி மடிந்து போகாதீர்கள். நாராயணனைத் தொழுது நரஜன்மம் எடுத்ததின் பலனை அடையுங்கள், பரம பதத்தில் உங்களுக்கு இடம் தேடிக்கொள்ளுங்கள்! எங்கே என்னுடன் சேர்ந்து எல்லாரும் பாடுங்கள், பார்க்கலாம்:-
நாராயணனே தெய்வம்-
நாமெல்லோரும் துதிசெய்வோம்!"
என்று பாடத் தொடங்கினான்.
ரவிதாஸன் கலகலவென்று சிரித்துவிட்டு, "ஏனப்பா வைஷ்ணவனே! சாக்ஷாத் பரமசிவன் மட்டும் தெய்வம் இல்லையா? பரமசிவனைத் துதித்தால் பரம பதம் கிட்டாதா?" என்றான்.
ஆழ்வார்க்கடியான் உற்சாகத்துடன், "பரமசிவன் அழிக்கும் தெய்வம்! நாராயணன்தான் காக்கும் தெய்வம்! அன்று முதலை வாயில் அகப்பட்டுக் கொண்டு தவித்த கஜராஜனை எங்கள் நாராயணமூர்த்தி காப்பாற்றியதை மறந்து விட்டீர்களா?" என்றான்.
"அப்பனே! கஜராஜனைக் காப்பாற்றிய விஷ்ணு பகவான் முதலையைக் கொல்லத்தானே செய்தார்? அது போலவே இராவணன் கும்பகர்ணன், இரணியாட்சன், இரணிய கசிபு, சிசுபாலன், தந்தவக்கிரன் ஆகியவர்களை உங்கள் மகாவிஷ்ணு அழித்துப் போடவில்லையா?" என்றான் ரவிதாஸன்.
"எங்கள் பெருமாளின் கையால் வதையுண்டவர்களும் சாக்ஷாத் ஸ்ரீ வைகுண்டத்தை அடைவார்கள். இரணியனையும், இராவணனையும், சிசுபாலனையும் கொன்ற பிறகு அவர்களுக்குப் பகவான் வைகுண்ட பதவியை அளித்தார். உங்கள் பரமசிவனோ திரிபுரர்களை ஒரேடியாக நெற்றிக் கண்ணால் எரித்து அழித்துப் போட்டார். அவர்களுக்கு மோட்சத்தைக் கொடுத்தாரா?"
"சரி, சரி! உன் கதையை நிறுத்து! உன்னுடைய நாராயணன் இப்போது உன்னை வந்து காப்பாற்றட்டும்!" என்று சொல்லிக் கொண்டே ரவிதாஸன் தன் கையிலிருந்த குறுந்தடியை ஓங்கினான். அந்தச் சமயம் பூங்குழலி ஆழ்வார்க்கடியானுக்கு உதவி செய்ய விரும்பி இடுப்பில் செருகியிருந்த கத்தியை எடுத்தாள். அதே நேரத்தில் மலைக்குகையிலிருந்து தலைவிரி கோலமாக ஒரு பெண்ணுருவம் ஓடி வருவதைப் பார்த்தாள். ஒரு கணநேரம் அவளைத் தன் அத்தை மந்தாகினி என்று எண்ணிப் பிரமித்து நின்றாள். பின்னர், 'இல்லை, இவள் பழுவூர் ராணி நந்தினி' என்று தெளிந்தாள்.
இதற்குள் நந்தினி ஆழ்வார்க்கடியான் அருகில் வந்து விட்டாள். ரவிதாஸனுடைய ஓங்கிய கைதடியைத் தன் கரங்களினால் தடுத்து நிறுத்தினாள்.
"வேண்டாம்! என் சகோதரனை ஒன்றும் செய்யாதீர்கள்! ரவிதாஸா! நான் உங்கள் ராணி என்பது உண்மையானால் தடியைக் கீழே போடு!" என்றாள்.
ஆழ்வார்க்கடியான் அப்போது, "சகோதரி உனக்கு நன்றி; ஆனால் இவர்களால் எனக்கு எந்தவிதத் தீங்கும் செய்திருக்க முடியாது. நான் வணங்கும் தெய்வமாகிய நாராயணமூர்த்தி என்னைக் காப்பாற்றியிருப்பார்!" என்றான்.
ரவிதாஸன் சிரித்துவிட்டு, "எப்படிக் காப்பாற்றியிருப்பார்? அன்றைக்குப் பிரஹலாதனைக் காப்பாற்றத் தூணிலிருந்து வந்தது போல் இன்று இந்த மரத்தைப் பிளந்து கொண்டு நாராயண மூர்த்தி வந்திருப்பாரா?" என்றான்.
"மந்திரவாதி! என் பேச்சில் உனக்கு நம்பிக்கை இல்லையா? நல்லது! அதோபார்! சற்றுத் தூரத்தில் தெரியும் அய்யனார் கோவிலைப் பார்! அந்தக் கோவிலுக்கு முன்னால் மூன்று குதிரைகள் இருக்கின்றன அல்லவா? ஸ்ரீமந் நாராயணனுடைய கருணையினால் அந்த மண் குதிரைகள் உயிர் பெற்றுவிடும்! அவற்றின் பேரில் வேல் பிடித்த வீரர்கள் ஏறிக்கொண்டு வந்து உங்களைச் சிறைப்பிடித்து என்னைக் காப்பாற்றுவார்கள்!"
ஆழ்வார்க்கடியான் மேற்கண்டவாறு சொல்லிக் கொண்டே கையினால் சுட்டிக்காட்டிய திக்கை அனைவரும் நோக்கினார்கள். தங்கள் கண்களை நம்பமுடியாமல் திண்டாடிப் போனார்கள்! ஏனெனில் அந்த மண் குதிரை உண்மையாகவே உயிர் பெற்று அவர்களை நோக்கிப் பாய்ந்து ஓடி வந்ததாக அவர்களுக்குத் தோன்றியது. ஒவ்வொரு குதிரையின் பேரிலும் வேல் பிடித்த வீரன் ஒருவன் உட்கார்ந்திருந்தான்!