பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/ஐயோ, பிசாசு!

தியாக சிகரம் - அத்தியாயம் 65

தொகு

"ஐயோ, பிசாசு!"

ஆழ்வார்க்கடியான் அதுவரை மறைந்திருந்த தன் ஆட்களைத் திரட்டிச் சேர்த்துக் கொண்டு தஞ்சைக் கோட்டையின் வடக்கு வாசலை நோக்கி நடந்தான். கருத்திருமனுடன் அவன் துவந்த யுத்தம் செய்த போது தன் ஆட்களை அழையாததின் காரணத்தை வாசகர்கள் ஊகித்து உணர்ந்திருப்பார்கள். அவன் நிச்சயமாகத் தெரிந்து கொள்ள விரும்பிய மிக முக்கிய இரகசியமான விவரங்கள் மற்றவர்கள் காதில் விழுவதை அவன் விரும்பாததில் வியப்பில்லை அல்லவா?

பாதி தூரம் சென்ற பிறகு, எதிரே ஒரு தனி ஆள் வெறி கொண்டவனைப் போல் ஓடி வருவதைக் கண்டான். அப்படி ஓடி வந்தவன் இருட்டில் ஆழ்வார்க்கடியான் மீது முட்டிக் கொண்டு, பின்னர் மறுபடியும் ஓடப் பார்த்தான். திருமலை நம்பி அவனை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு "அடடே! வைத்தியர் மகன்? எங்கே அப்பா இப்படித் தலை தெறிக்க ஓடுகிறாய்?" என்று கேட்டான்.

"ஓகோ! வீர வைஷ்ணவனா? பேயோ, பிசாசோ என்று பயந்து போனேன். நல்லது; நீ எத்தனை தூரத்திலிருந்து இக்கரையோடு வருகிறாய்? எதிரே இரண்டு குதிரைகள் மீது இரண்டு ஆட்கள் போனார்களா?" என்றான்.

"ஆமாம்; போனார்கள்! அவர்களைப்பற்றி உனக்கு என்ன?"

"எனக்கு என்னவா? நல்ல கேள்வி! அவர்கள் யார் என்று தெரிந்தால் நீ இப்படிப்பட்ட கேள்வி கேட்கமாட்டாய்! ஆமாம் அவர்களில் ஒருவனையாவது உனக்கு அடையாளம் தெரியவில்லையா?"

"ஒருவன் மட்டும் எனக்குத் தெரிந்த ஆள் மாதிரிதான் தோன்றியது ஆனால்..?"

"யார், யார், யார் மாதிரி தோன்றியது?"

"வந்தியத்தேவனைப் போலத் தோன்றியது. அப்படியிருக்க முடியாது என்று தீர்மானித்துக் கொண்டேன்."

"அடப் பாவி! அப்படியா தீர்மானித்தாய்! அவன் சாட்சாத் வந்தியத்தேவன்தான்!"

"என்னப்பா, உளறுகிறாய்? வந்தியத்தேவன் பாதாளச் சிறையில் அல்லவோ இருந்தான்?"

"இருந்தான்; ஆனால், இப்போது இல்லை! வந்தியத்தேவனும் இன்னொரு பைத்தியக்காரனும் சிறையிலிருந்து தப்பிவிட்டார்கள். என்னைக் கட்டிப் போட்டுவிட்டு, அவர்கள் ஓடி விட்டார்கள்."

"அடடே! நல்ல வேலை செய்தார்கள்! அவர்கள் உன்னைக் கட்டிப்போடும் போது உன் கைகள் என்னப்பா, செய்து கொண்டிருந்தன? முதலில், பாதாளச் சிறைக்கு நீ எதற்காகப் போனாய்?"

"முதன்மந்திரியின் கட்டளையின் பேரில் போனேன், அதையெல்லாம் இப்போது சொல்லிக் கொண்டிருக்க நேரமில்லை. நீயும் முதன்மந்திரியிடம் சேவகம் செய்கிறவன் தானே? என்னுடன் வா! அவர்களைப் பிடித்துக் கொண்டு வரலாம்!..."

"எதற்காக அவர்களைப் பிடித்துக் கொண்டு வரவேண்டும்? ஓடிப் போனால் போகட்டுமே? உனக்கும் எனக்கும் அதனால் என்ன வந்தது?"

"முதன்மந்திரி நல்ல ஆளைப் பிடித்து வைத்திருக்கிறார்! உன்னைப்போல் எல்லாரும் இருந்தால் இந்தச் சோழ ராஜாங்கம் உருப்பட்டாற் போலத்தான்! வந்தியத்தேவன் இளவரசர் கரிகாலரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டவன் என்பது உனக்குத் தெரியாதா? அதுமட்டுமல்ல; சற்று முன்னால் அமுதன் குடிசைக்கு அருகில் இன்னொருவனையும் அவன் ஈட்டியால் குத்திவிட்டு ஓடி வந்து விட்டான் ..."

"தெய்வமே! இது என்ன? அங்கே குத்தப்பட்டவன் யார்?"

"அது யார் என்று நான் பார்க்கவில்லை. வந்தியத்தேவனைத் தொடர்ந்து நான் ஓடி வந்தேன் ... சரி, சரி; நீ என்னுடன் வராவிட்டால் போ! வழியை மறிக்காதே! உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும்! என்னை விடு!"

"வைத்தியர் மகனே! இந்த உலகத்தில் எத்தனையோ மூடர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் எல்லாரையும் நீ தூக்கி அடித்துவிட்டாய்! அவர்கள் குதிரையின் மேல் போகிறார்கள். சாவுக்குத் துணிந்து தப்பி ஓடுகிறார்கள். நீ ஒருவன், கால் நடையாகத் தேடிப் போய் அவர்களைப் பிடித்து விடுவாயா? எனக்கு என்ன அதைப் பற்றி? போ! போ!"

"நீ சொல்வது உண்மைதான். அதனாலேயே உன்னையும் துணைக்கு வரும்படி கூப்பிட்டேன். நீ வர மறுக்கிறாய்!"

"நான் வந்து என்ன செய்கிறது? அவர்களைத் தடுத்து நிறுத்தப் பார்த்தேன். ஒருவன் கையிலிருந்த தடியினால் நன்றாய்ப் போட்டான் வாங்கிக் கொண்டு வந்தேன். இன்னும் அந்த வலி தீரவில்லை. எனக்கு அவ்வளவாகச் சண்டை போட்டுப் பழக்கம் இல்லை. நீ ஒருவேளை.. ஆமாம்; உன் கையில் என்ன? இரத்தக் கறை மாதிரி அல்லவா இருக்கிறது?"

"சிறையிலே அவர்கள் என்னைத் தாக்கிக் காயப்படுத்தி விட்டார்கள். பொல்லாத ராட்சதர்கள்!"

"பின்னே, அந்த இராட்சதர்களைத் தொடர்ந்து கால் நடையாகத் தனியே போகிறாயே? சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதே அவர்கள் உன்னை இந்தப் பாடுபடுத்தியிருக்கும் போது ..."

"அப்படியானால் என்னதான் செய்யச் சொல்லுகிறாய்?"

"நான் உன்னை ஒன்றும் செய்யச் சொல்லவில்லை. என் பேரில் எதற்காகப் பழி போடுகிறாய்? நான் உன் நிலைமையில் இருந்தால், திரும்பிப் போய் யாரிடமாவது தக்க மனிதர்களிடம் சொல்லி, ஐந்தாறு குதிரை வீரர்களையாவது துணைக்கு அழைத்துக் கொண்டு, திரும்பவும் மனித வேட்டைக்குப் புறப்படுவேன். நானும் குதிரை மேல் ஏறிக் கையில் வேலும் வாளும் எடுத்துக் கொண்டுதான் கிளம்புவேன் ..."

வைத்தியர் மகன் சிறிது யோசனை செய்தான். சேந்தன் அமுதனுடைய குடிசைக்கருகில் யாரோ ஒருவனைக் குத்திப் போட்டுவிட்டு அவன் ஓடி வந்திருக்கிறான். ஒருவேளை இராஜ குலத்தைச் சேர்ந்த மதுராந்தகராயிருக்கக் கூடும் என்ற நினைவு அவனுக்குக் கதி கலக்கத்தை உண்டாக்கியது. ஆனால் இந்த வைஷ்ணவன் சொல்வது போல் தனியாகக் கால் நடையாகச் செல்வதிலும் பொருள் இல்லை. அப்படி நந்தவனக் குடிசையருகில் தன் குத்தீட்டியினால் விழுந்தது மதுராந்தகத் தேவராக இருக்கும் பட்சத்தில் அந்தக் குற்றத்தையும் வந்தியத்தேவன் பேரில் போடுவதுதான் நல்லது. ஓர் இளவரசரைக் கொன்றவன் இன்னொரு இளவரசரையும் கொல்லலாம் அல்லவா? தண்டனை இரண்டுக்கும் ஒன்றுதானே?... இதை நினைத்தபோது, பினாகபாணி, 'இரண்டு இளவரசர்களையும் கொன்றவன் வந்தியத்தேவன்தான்!' என்றே நம்பத் தொடங்கி விட்டான்.

"வைஷ்ணவனே! நீ சொல்வது என்னவோ சரிதான். நான் உன்னோடு வருகிறேன், நீ எனக்கு உதவி செய்ய வேண்டும். யாராவது தக்க மனிதனிடம் சொல்லி என்னோடு குதிரை வீரர்களை அனுப்பச் சொல்ல வேண்டும். பெரிய மனிதர்களின் சுபாவம் எனக்கு என்னமோ பிடிபடுவதில்லை. அவர்களுடன் எப்படிப் பழகுவது என்றும் தெரியவில்லை. இதோ பார், நான் சேனாதிபதி கொடும்பாளூர் வேளாரிடமும், முதன்மந்திரி அன்பில் அநிருத்தரிடமும், சொல்லிப் பார்த்தேன் - ஓடிப் போனவர்களைத் திரும்பப் பிடிக்க வேண்டியதைப் பற்றித்தான். சில வீரர்களை என்னுடன் அனுப்பும்படி வேண்டினேன். இரண்டு பேரும் என்னை முட்டாள், மூடன் என்று திட்ட ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுடைய நோக்கம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை ..."

"நோக்கம் வேறு என்ன? உன்னிடம் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. உன்னிடம் இக்காரியத்தை ஒப்புவிக்க அவர்கள் விரும்பவில்லை. சிறைக்குள்ளேயே ஏமாந்து, சிறையிலிருந்தவர்கள் தப்பி ஓடும்படி விட்டுவிட்டாய். அவர்களை எங்கே பிடிக்கப் போகிறாய் என்று நினைத்திருப்பார்கள் ..."

"அவர்களுடைய நினைவைப் பொய்ப்படுத்த எண்ணித் தான் தனியாகவாவது போகலாம் என்று கிளம்பினேன். எப்படியும் கோடிக்கரையில் அவர்கள் நின்றுதானே ஆக வேண்டும்? அங்கே வந்தியத்தேவன் ஒளிந்திருக்கக் கூடிய இடங்களெல்லாம் எனக்குத் தெரியும். அங்கே எனக்கு உதவி செய்யக் கூடியவர்களும் இருக்கிறார்கள்."

"அப்படியானால் போ! உன் சாமர்த்தியத்தைப் பார்!"

"இருந்தாலும், குதிரை மேலேறி இன்னும் சிலரையும் அழைத்துக் கொண்டு போனால் நல்லதுதான். நீ அதற்கு உதவி செய்வாயா?"

இதற்குள் அவர்கள் இருவரும் வடக்குக் கோட்டைப் பெரிய வாசலை நெருங்கி வந்து விட்டார்கள். இராஜபாட்டையில் வடக்கே சற்றுத் தூரத்தில் அம்பாரி வைத்த யானைகளும், குதிரைகளும் காலாள் வீரர்கள் பலரும் கும்பல் கும்பலாக வந்து கொண்டிருந்தது தெரிந்தது. கோட்டை வாசலிலும் ஒரு கும்பல் நின்றது. தீவர்த்திகளின் வெளிச்சத்தில் கொடும்பாளூர் வேளாரும், திருக்கோவலூர் மலையமானும், முதன் மந்திரி அநிருத்தரும் நிற்பது தெளிவாகத் தெரிந்தது.

"உனக்கும் எனக்கும் எஜமானர் அதோ கோட்டை வாசலில் நிற்கிறார், அவரிடம் போகலாம், வருகிறாயா?" வைத்தியர் மகன் தயங்கினான்.

"நான் ஒரு தடவை கேட்டாகிவிட்டது. பயன்படவில்லை. ஒருவேளை நீ இரண்டு பேர் தப்பி ஓடியதைப் பார்த்திருக்கிறபடியால் உன் பேச்சை நம்பினாலும் நம்பலாம். ஆனால் என்னை உடன் அனுப்பச் சம்மதிப்பாரா என்று சந்தேகிக்கிறேன்" என்றான்.

"நீ சொல்வது உண்மைதான். மேலும் கோட்டை வாசலில் ஏதோ முக்கியமான காரியத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் இச்சமயம் போவதில் பயனில்லை. எது சொன்னாலும் அவர்கள் காதில் ஏறாது. இந்தப் பக்கம் பழுவேட்டரையர்கள் வருவதாகக் காண்கிறது. அவர்களுடன் சம்புவரையரும் வருகிறார். அதோ, பார்த்திபேந்திரனும், கந்தமாறனும் காணப்படுகிறார்கள். அவர்களிடம் சொல்லிப் பார்க்கலாம். வந்தியத்தேவனைப் பிடிப்பதில் அவர்களுக்குத் தான் அதிக சிரத்தை இருக்கும்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

ஊர்வலம் விரைவில் அவர்களை அணுகியது. முன்னால் கட்டியக்காரர்கள் பழுவேட்டரையர்களின் தொல்குலப் பெருமையையும், அம்மாதிரியே கடம்பூர் சம்புவரையர், மழபாடி மழவரையர், பார்த்திபேந்திர பல்லவன், நீலதங்கரையர், இரட்டைக் குடை இராஜாளியார் முதலியவர்களின் விருதுகளையும் வீரச் செயல்களையும் வரிசைக் கிரமமாக சொல்லிக் கொண்டு வந்தார்கள். இடையிடையே முரசுகள் முழங்கின. சங்கங்கள் ஆர்த்தன.

ஊர்வலத்தின் முன்னிலையில் சின்னப் பழுவேட்டரையரும், பார்த்திபேந்திரனும், கந்தமாறனும் வெண் புரவிகளின் மீது அமர்ந்து கம்பீரமாக வந்தார்கள். அடுத்தாற்போல் வந்த மத்தகஜத்தின் அம்பாரியில் பெரிய பழுவேட்டரையரும் சம்புவரையரும் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் மற்றக் குறுநில மன்னர்கள் யானை மீதும் குதிரை மீதும் வந்தார்கள். முன்னும் பின்னுமாக ஏறக்குறைய நூறு வீரர்கள் கையில் வேலும், இடையில் வாளும் தரித்து நடந்து வந்தார்கள்.

இந்த ஊர்வலத்துக்கு முன்னால் ஆழ்வார்க்கடியானும் வைத்தியர் மகன் பினாகபாணியும் பாதை நடுவில் நின்றதைப் பார்த்ததும், சின்னப் பழுவேட்டரையர் தம் குதிரையைச் சிறிது நிறுத்தி "வைஷ்ணவனே! முதன்மந்திரியிடமிருந்து முக்கியமான செய்தி ஏதேனும் உண்டா?" என்று கேட்டார்.

"தளபதி! முதன்மந்திரி என்னிடம் செய்தி ஒன்றும் அனுப்பவில்லை. சொல்ல வேண்டிய செய்தியைக் கோட்டை வாசலில் தங்களிடமே சொல்லுவார். ஆனால் முக்கியமான செய்தி ஒன்றிருக்கிறது" என்று ஆழ்வார்க்கடியான் நிறுத்தினான்.

"என்ன? என்ன? என்ன?" என்று மூன்று பேரும் ஆவலுடன் கேட்டார்கள்.

"பாதாளச் சிறையிலிருந்து வந்தியத்தேவன் தப்பி ஓடிவிட்டான் ..."

"அது எப்படி முடியும்? அவன் என்ன இந்திரஜித்தா மாயமாய் மறைந்து போவதற்கு?" என்று கேட்டார் சின்னப் பழுவேட்டரையர்.

"இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது. வேறு யாராவது அவனுக்கு ஒத்தாசை செய்திருக்க வேண்டும்!" என்றான் பார்த்திபேந்திரன்.

"எல்லாம் அந்தக் கொடும்பாளூர்ப் பெரிய வேளாரின் வேலைதான்!" என்றான் கந்தமாறன்.

"அப்படித் தப்பி ஓடினாலும் எங்கே ஓடி விடுவான்? கோட்டைக்குள்ளேதானே இருக்கவேண்டும்?" என்றார் சின்னப் பழுவேட்டரையர்.

"அப்படித்தான் வேளார் சொல்லுகிறார். முதன்மந்திரி முன் ஜாக்கிரதையாக என்னைக் கோட்டையைச் சுற்றி வந்து பார்த்துக் கொள்ளும்படி பணித்தார். கடம்பூர் வம்சத்தின் மீது அபவாதம் எதுவும் ஏற்படக்கூடாது என்று முதன்மந்திரி கவலைப்படுகிறார் ..."

"அப்படிக் கவலையுள்ளவர் ஒருவராவது இருக்கிறாரே, அந்த வரைக்கும் மிகவும் திருப்தியான காரியம்" என்று சொன்னான் கந்தமாறன்.

"வைஷ்ணவனே! உண்மையைச் சொல்! தப்பி ஓடுவதைத் தடுப்பதற்காக நீ சுற்றி வருகிறாயா? அல்லது உதவி செய்வதற்காகச் சுற்றி வருகிறாயா?" என்று பார்த்திபேந்திரன் கேட்டான். அவனுக்கு வைஷ்ணவன் பேரில் எப்போதுமே சந்தேகம்தான்.

"ஐயா! வேறு சந்தர்ப்பமாயிருந்தால் தங்களுக்கு வேறு விதமாகப் பதில் சொல்வேன். இப்போது நாம் சொந்தத்தில் சண்டை போடும் சமயம் அல்ல. இந்த வைத்தியர் மகன் பினாகபாணி, ஒரு விசித்திரமான செய்தியைக் கூறுகிறான். இரண்டு பேர் குதிரைகள் மீது ஏறிப் போனதாகவும் அவர்கள் தான் சிறையிலிருந்து தப்பி ஓடிய வந்தியத்தேவனும், கருத்திருமனும் என்றும் சொல்லுகிறான். இரண்டு பேர் குதிரை மேலேறி இந்தச் சாலை வழியாக விரைவாகப் போனதை நானும் பார்த்தேன்."

"பினாகபாணி! இந்த வைஷ்ணவன் சொல்லுவது உண்மையா?" என்றார் சின்னப் பழுவேட்டரையர்.

"சத்தியம்; ஐயா!"

"பின்னே, உடனே போய் முதன்மந்திரியிடமாவது வேளாரிடமாவது சொல்லுவதற்கென்ன?"

"அவர்கள் இருவருக்கும் என் பேரில் அசாத்திய கோபம்."

"எதற்காக?"

"அவர்களை நான்தான் தப்ப விட்டுவிட்டேன் என்று."

"அது எப்படி?"

"பாண்டிய குலக் கிரீடமும் இரத்தின ஹாரமும் இருக்குமிடம் தெரியுமென்று ஒரு பைத்தியக்காரன் பாதாளச் சிறையில் சொல்லிக் கொண்டிருந்தான் அல்லவா? அவனை அழைத்து வருவதற்காக அநிருத்தர் என்னை அனுப்பினார். அதற்காகப் போன இடத்தில் இரண்டு பேருமாகச் சேர்ந்து என்னைப் பாதாளச் சிறையிலே கட்டிப் போட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டார்கள்!"

"போயும் போயும் முதன்மந்திரிக்கு உன்னைப் போன்ற முட்டாள்தானா இந்தக் காரியத்துக்கு அகப்பட்டான்?" என்று கூறிவிட்டுப் பார்த்திபேந்திரப் பல்லவன் சிரித்தான்.

வைத்தியர் மகன் கோபமாக "ஐயா! நீங்கள் சிரிப்பதற்காக நான் இங்கே வரவில்லை. உதவி செய்வதாயிருந்தால், செய்யுங்கள்!" என்றான்.

"என்ன உதவி கேட்கிறாய்?"

"என்னுடன் நாலு குதிரை வீரர்களை அனுப்புங்கள். எனக்கு ஒரு குதிரை கொடுங்கள். தப்பி ஓடியவர்களைப் பிடித்துக் கொண்டு வருவது என் பொறுப்பு. ஏற்கனவே எனக்கு இட்ட காரியங்களை நான் நிறைவேற்றவில்லையா? தளபதி சின்னப் பழுவேட்டரையருக்குத் தெரியுமே?" என்றான் வைத்தியர் மகன் பினாகபாணி.

"நீ என்ன சொல்லுகிறாய்?" என்று சின்னப் பழுவேட்டரையர் பார்த்திபேந்திரனைக் கேட்டார்.

"அனுப்ப வேண்டியதுதான். சக்கரவர்த்தி உங்களைத் திரும்ப அழைத்து வரும் பொறுப்பை என்னிடம் ஒப்புவித்திருக்கிறார். இல்லாவிட்டால் நானே இவனுடன் போவேன். வந்தியத்தேவனைப் பிடிக்க வேண்டியது மிக முக்கியமான காரியம்" என்றான் பார்த்திபேந்திரன்.

அச்சமயம் கந்தமாறன், "அந்தப் பொறுப்பை என்னிடம் ஒப்புவியுங்கள். இவனுடன் நானும் போகிறேன். வந்தியத்தேவன் யமலோகத்தின் வாசலுக்குப் போயிருந்தாலும் அவனைத் திரும்பப் பிடித்துக் கொண்டு வருகிறேன்" என்றான்.

சின்னப் பழுவேட்டரையரும் அதற்குச் சம்மதித்தார். சம்புவரையர் முதலியவர்களுக்குச் சமாதானம் சொல்லும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.

உடனே கந்தமாறனும், வைத்தியர் மகனும் மற்றும் வீரர்கள் நால்வரும் வடவாற்றின் வடகரையோடு விரைந்து செல்லக் கூடிய குதிரைகள் மீதேறி வாயுவேக மனோவேகமாகச் சென்றார்கள்.

மதுராந்தகன் குதிரை ஏற்றத்தில் அவ்வளவு பழக்கப்பட்டவன் அல்ல. கருத்திருமன் பழக்கப்பட்டவன் ஆனபோதிலும், பாதாளச் சிறையில் நெடுங்காலம் இருந்தவனானபடியால், மிக்க உடற்சோர்வு உற்றிருந்தான். ஆயினும் இரண்டு பேருடைய உள்ளங்களிலும் இப்போது ஒரு புதிய உற்சாகம் பிறந்திருந்தது. உள்ளத்தின் பலத்தினால் தளர்ச்சியைச் சகித்துக் கொண்டு அவர்கள் பிரயாணம் செய்தார்கள்.

நள்ளிரவு வரையில் பிரயாணம் செய்த பிறகு இருவரும் நின்றார்கள். அங்கே நதிக்குக் குறுக்கே மூங்கில் கழிகளைச் சேர்த்துக் கட்டி அமைந்த பாலம் ஒன்று இருந்தது. எப்படியும் தங்களைப் பின்தொடர்ந்து பிடிக்க ஆட்கள் வருவார்கள் என்று கருத்திருமன் எதிர்பார்த்தான். ஆகையால், அந்த இடத்தில் நதியைக் கடந்து அக்கரை சேர்ந்துவிடுவது நல்லது என்று எண்ணினான். நதியின் தென் கரையோடு சிறிது தூரம் சென்று பின்னர் கோடிக்கரைப் பாதையில் திரும்பிப் போகலாம்.

அங்கே நதியைக் கடப்பதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. மதுராந்தகனால் குதிரையைச் செலுத்திக் கொண்டு ஆற்று வெள்ளத்தைக் கடக்க முடியுமா என்று கருத்திருமன் ஐயமுற்றான். வெள்ளம் அதிகமாயிருந்தால் நிச்சயம் முடியாத காரியம். மதுராந்தகனைப் பாலத்தின் வழியாகப் போகச் சொல்லி விட்டு இவனே இரண்டு குதிரைகளையும் ஒவ்வொன்றாக அக்கரை கொண்டு போய்ச் சேர்த்துவிடலாம்.

இந்த யோசனைகளெல்லாம் மதுராந்தகனுக்கும் சம்மதமாயிருந்தது. நதி வெள்ளத்தில் இறங்குவதற்கு முன்னால் இருவரும் சிறிது சிரம பரிகாரம் செய்து கொள்வதற்காக மரத்தடி வேரில் உட்கார்ந்தார்கள். ஆற்று வெள்ளம் 'சோ' என்ற சத்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. நாலாபுறத்திலிருந்தும் மண்டூகங்களின் குரல்கள் கிளம்பிக் காதைத் துளைத்தன. வானத்தில் விரைவாகக் கலைந்து சென்று கொண்டிருந்த மேகத் திரள்களுக்கு மத்தியில் விண்மீன்கள் எட்டிப் பார்த்து ஒற்றர் வேலை செய்து கொண்டிருந்தன.

பெரும்பாலும் அரண்மனைகளில் சப்ர மஞ்சக் கட்டில்களில் பஞ்சணை மெத்தைகளுக்கு மத்தியில் உறங்கிப் பழக்கமான மதுராந்தகனுக்கு நள்ளிரவில் ஆற்றங்கரையில் மரத்து வேர்களின் மீது உட்கார்ந்திருக்க நேர்ந்தது மிக்க மனச் சோர்வையும் வருங்காலத்தைப் பற்றிய பீதியையும் உண்டாக்கியது.

அவனுடைய மனோநிலையை உள்ளுணர்ச்சியினால் அறிந்து கருத்திருமன் அவனுக்குத் தைரியம் சொல்ல முயன்றான். இலங்கை மன்னன் மகிந்தன் பாண்டிய குலத்தின் பரம்பரைச் சிநேகிதன் என்றும், அவனிடம் மதுராந்தகன் போய்ச் சேர்ந்துவிட்டால் பிறகு ஒரு கவலையுமில்லையென்றும் தெரிவித்தான். பாண்டிய குலத்தின் மணி மகுடமும் இந்திரன் தந்த ரத்தின ஹாரமும் இலங்கையிலே தான் இருக்கின்றன. இருக்குமிடமும் தனக்குத் தெரியும். அங்கேயே மகிந்தன் மதுராந்தகனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்து விடுவான்! அதற்குள் சோழ நாட்டுச் சிற்றரசர்களுக்குள் போர் மூண்டு சோழ சாம்ராஜ்யம் சின்னாபின்னம் அடைந்து விடப் போகிறது. ஆதித்த கரிகாலனைக் கொன்று விட்டதாக பழுவேட்டரையர் - சம்புவரையர் கட்சியின் மீது மற்றவர்கள் குற்றம் சாட்டுவார்கள். மதுராந்தகன் இப்போது தன்னுடன் வந்து விட்டபடியால், அவனைக் கொன்றுவிட்டதாக வேளார் கட்சியின் மீது பழுவேட்டரையர்கள் குற்றம் சுமத்துவார்கள். இந்தப் படுகொலைகளுக்கு அருள்மொழிவர்மனும் உடந்தையாக இருந்ததாக மக்களிடையே வதந்தி பரவப் போகிறது. ஆகையால் அவனையும் மக்கள் வெறுக்கத் தொடங்குவார்கள். இப்படியெல்லாம் சோழ ராஜ்யம் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் போது இலங்கை மன்னன் ஒரு பெரிய சைன்யத்தைத் திரட்டிக் கொண்டு பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருவான். மதுரையைக் கைப்பற்றுவான். மதுராந்தகனுக்கு உலகம் அறிய இரண்டாந் தடவையாக முடிசூட்டு விழா நடத்தி வைப்பான். 'மதுராந்தகன்' என்ற பெயரையும் மாற்றிச் 'சோழ குலாந்தகப் பெருவழுதி' என்ற அபிஷேகப் பெயரையும் சூட்டுவான்!...

இவ்வாறெல்லாம் கருத்திருமன் சொல்லி வந்தபோது மதுராந்தகனுடைய உள்ளம் விம்மியது. அவனுடைய வாழ்க்கையில் அதுவரை கண்டிராத உற்சாகத்தை அவன் அடைந்தான். போர்க்களங்களில் கேட்கும் வெற்றி முரசுகள் அவன் காதில் ஒலித்தன. பட்டாபிஷேக வைபவங்களுக்குரிய பலவகை இன்னிசைக் கருவிகள் மற்றொரு பால் முழங்கின. ஆயிரமாயிரம் மக்களின் குரல்கள் "பாண்டிய சக்கரவர்த்தி வாழ்க! சோழ குலாந்தகப் பெருவழுதி வாழ்க!" என்று கோஷமிட்டன.

இப்படி இன்பமயமான கற்பனை உலகத்தில் மதுராந்தகன் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோது, அந்தக் கற்பனைக் கனவைக் கலைத்துக் கொண்டு குதிரைகளின் காலடிச் சத்தம் கேட்டது. சற்றுத் தூரத்தில் தீவர்த்திகளின் வெளிச்சமும் தெரிந்தது. கருத்திருமன் அவ்வளவு விரைவாக ஆட்கள் தங்களைத் தொடர்ந்து வரக்கூடும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆகையால் மிக்க பரபரப்புடன் குதித்தெழுந்து, "இளவரசே! எழுந்திருங்கள். குதிரை மேல் ஏறுங்கள்! அவர்கள் வருவதற்கு முன் நதியைக் கடந்து விடவேண்டும்! என்றான்.

ஒரு கணத்தில் அவன் குதிரை மேல் பாய்ந்து ஏறி கொண்டான். மதுராந்தகன் குதிரை மேல் ஏறுவதற்கு கஷ்டப்படுவதைப் பார்த்துவிட்டு, "ஐயா! ஒன்று செய்யுங்கள். தாங்கள் பாலத்தின் மேல் நடந்து அக்கரை போய்விடுங்கள். நான் தங்கள் குதிரையையும் அக்கரைக்குக் கொண்டு வந்து சேர்த்து விடுகிறேன்!" என்றான்.

"அழகாயிருக்கிறது! என்னைப் பயங்காளி என்று நினைத்தாயா? குதிரை மேலேறி இந்த ஆற்றைக் கடக்க என்னால் முடியாவிட்டால், அப்புறம் கடல் கடந்து இலங்கை போவது எப்படி? பாண்டிய ராஜ்யத்தைப் பிடித்துச் சிங்காதனம் ஏறுவது எப்படி?" என்று வீரியம் பேசியபடியே மெதுவாகக் குதிரை மேலே ஏறினான்.

இரண்டு குதிரைகளும் நதியில் இறங்கின. மதுராந்தகனுடைய குதிரை தண்ணீர்க் கரையண்டை திடீரென்று முன்னங்கால் மடிந்து படுத்தது. "ஐயோ!" என்று அலறினான் கருத்திருமன். நல்லவேளையாகக் குதிரை சமாளித்து எழுந்து தண்ணீரில் இறங்கியது.

மதுராந்தகனுடைய மனத்திற்குள் திகில்தான். ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளாமல் "இது என்ன பிரமாதம்? இப்படிப் பயந்து விட்டாயே?" என்றான்.

மதுராந்தகனுடைய குதிரையின் காலில் ஏதாவது காயம் பட்டிருந்ததோ என்னமோ, அது வெள்ளத்தில் மற்றக் குதிரையைப் போல் விரைந்து செல்லவில்லை. அடிக்கடி அது வெள்ளத்தோடு வெள்ளமாகப் போகப் பார்த்தது. அதைத் திருப்பி எதிர்க்கரையை நோக்கிச் செலுத்துவதற்கு மதுராந்தகன் மிக்க சிரமப்பட்டான். கரையோடு வந்த குதிரைகளின் காலடிச் சத்தமோ நெருங்கி, நெருங்கி வந்து கொண்டிருந்தது.

பாதி ஆறு வரையில் கருத்திருமன் இளவரசனுக்காக நின்று நின்று போய்க்கொண்டிருந்தான். பிறகு ஒரு யோசனை அவன் மனத்தில் உதித்தது. மதுராந்தகனுக்குத் தைரியம் சொல்லிவிட்டு அக்கரையை நோக்கி விரைந்து சென்றான். கரையில் ஏறிக் குதிரையை ஒரு மரத்தினடியில் நிறுத்தினான். குதிரை மேலிருந்து பாய்ந்து இறங்கி மூங்கில் பாலத்தின் வழியாகத் திரும்பவும் வடகரைக்கு வந்தான். மதுராந்தகனிடமிருந்த சிறிய கத்தியை அவன் ஏற்கெனவே வாங்கி வைத்துக் கொண்டிருந்தான். அதைக் கொண்டு அவசர அவசரமாகப் பாலத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்த கயிறுகளை அறுத்து முடி போட்டான். அது போதிய நீளமானதாகத் தெரிந்தது, ஒரு முனையைப் பாலத்தில் சேர்த்துக் கட்டிவிட்டு மற்றொரு முனையைச் சாலையின் மறுபுறத்திலிருந்த மரத்தின் அடியில் சேர்த்துக் கட்டினான்.

மர நிழலினால் அதிகமாயிருந்த இருட்டில் அவ்விதம் சாலை நடுவில் குறுக்கே ஒரு கயிறு கட்டியிருந்ததை யாரும் பார்க்க முடியாது அல்லவா? அதிலும் குதிரை மேல் வேகமாக வருகிறவர்கள் நிச்சயம் பார்க்க முடியாது. இந்தக் காரியத்தை அவன் செய்து முடித்ததும் பாலத்தின் வழியாகத் திரும்பி ஓடி விடலாமா என்று யோசித்தான். அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு அங்கே இருந்த மரம் ஒன்றின் பேரில் சரசர என்று ஏறிக் கிளைகளின் மறைவில் உட்கார்ந்து கொண்டான்.

மதுராந்தகருடைய குதிரை கிட்டத்தட்ட நதியைக் கடந்து அக்கரையை நெருங்கியிருந்தது. இன்னும் சில நிமிஷ அவகாசம் கிடைத்தால், கரைமேல் ஏறி மதுராந்தகன் குதிரை அப்பால் சென்றுவிடும். இந்த எண்ணம் அவன் மனத்தில் தோன்றி மறைவதற்குள் சாலையோடு வந்த குதிரைகள் அந்த மரத்தடியை நெருங்கி விட்டன. ஐந்தாறு குதிரைகள் இருக்கும், அவற்றில் இரண்டு குதிரைகள் முன்னணியில் வந்தன. அவை இரண்டும் ஒரு கணம் முன் பின்னாகக் கருத்திருமன் கட்டியிருந்த குறுக்குக் கயிற்றினால் தடுக்கப்பட்டுத் தலை குப்புற உருண்டு விழுந்தன.

கருத்திருமன் மரத்தின் மேலிருந்தபடி தன்னையறியாமல் 'ஹா ஹா ஹா' என்று பலமாகச் சிரித்தான்.

குதிரைகள் மேலிருந்து விழுந்தவர்களில் ஒருவன் "ஐயோ! பிசாசு! என்று பயங்கரமாக அலறினான்.

குரலிலிருந்து அவன் வைத்தியர் மகன் பினாகபாணி என்பதைக் கருத்திருமன் தெரிந்துகொண்டான். விழுந்தவன் கழுத்து நெறித்து இறந்திருக்கக் கூடாதா, இன்னமும் உயிரோடிருக்கிறானே என்று எண்ணிக் கொண்டான்.

இன்னொரு குதிரை மேலிருந்து விழுந்தவன் சிறிதும் அதிர்ச்சியடையாமல் தரையிலிருந்து எழுந்தான். அவன் நமது பழைய நண்பன் கந்தமாறன்தான்!