பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/நீ என் மகன் அல்ல!

தியாக சிகரம் - அத்தியாயம் 48

தொகு

"நீ என் மகன் அல்ல!"

ஆதித்த கரிகாலன் இறுதி ஊர்வலம் காவிரி நதிக் கரையோரமாகத் தஞ்சையை நோக்கிச் சென்றபோது, அந்த ஊர்வலத்தில் சோழ நாட்டு மக்கள் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள். வீரர்களைப் போற்றும் குணம் அந்நாளில் தமிழகத்தில் பெரிதும் பரவியிருந்தது. இடையில் சில காலம் சோழ குலம் மங்கியிருந்து. விஜயாலய சோழர் காலத்திலிருந்து மீண்டும் தலையெடுத்ததைக் கண்டோ ம் அல்லவா? நூறு ஆண்டுகளாக அந்தக் குலத்தில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் வீரப் புகழில் ஒருவரையொருவர் மிஞ்சிக் கொண்டு வந்தார்கள். விஜயாலயன் மகன் ஆதித்தவர்மன் பல்லவ குலத்தின் புகழை அழித்துத் தொண்டை நாட்டைக் கைப்பற்றினான். அவனுடைய மகன் பராந்தகச் சக்கரவர்த்தி, மதுரையும், ஈழமும் கொண்ட தென்னாடு முழுவதையும் தன் ஆட்சிக்கு உட்படுத்தினான். பராந்தகச் சக்கரவர்த்தியின் புதல்வர்கள் நால்வரும் ஒருவரையொருவர் வீரத்தில் மிஞ்சினார்கள். அவர்களில் ஒருவன் பாண்டிய நாட்டுப் போரில் உயிர் துறந்தான். மூத்த மகனாகிய இராஜாதித்தனோ, சமுத்திரம் போல் பொங்கி வந்த இரட்டை மண்டலக் கன்னர தேவனின் பெரும் படையுடன் தக்கோலத்தில் போர் தொடுத்து, அம்மாபெரும் சைன்யத்தை முறியடித்த பிறகு போர்க்களத்திலேயே வஞ்சனையினால் கொல்லப்பட்டு, 'யானை மேல் துஞ்சின தேவன்' ஆயினான். கண்டராதித்தர் சிவஞானச் செல்வராயினும் அவரும் வீரத்தில் குறைந்தவராக இல்லை. பின்னர் ஆற்றூர்த் துஞ்சிய அரிஞ்சயனுடைய குமாரர் சுந்தரசோழர் காலத்தில், தக்கோலப் போருக்குப் பிறகு சிறிது மங்கியிருந்த சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் மீண்டும் மகோந்நதமடைந்தது.

இவ்வாறு வழி வழியாக வந்த வீர பரம்பரையில் பிறந்தவர்களில் ஆதித்த கரிகாலனுக்கு ஒப்பாருமில்லை, மிக்காருமில்லை என்று மக்களின் ஏகோபித்த வாக்கே எங்கும் கேட்கக் கூடியதாயிருந்தது. பன்னிரண்டாம் வயதில் சேவூர்ப் போர்க்களத்தில் அவன் புரிந்த வீரதீர சாகசச் செயல்கள் அர்ச்சுனன் மகனான அபிமன்யுவின் புகழையும் மங்கச் செய்து விட்டனவல்லவா? இத்தகைய வீராதி வீரன் சில வருட காலமாகத் தஞ்சைக்கு வராமல், காஞ்சியிலேயே தங்கியிருந்த காரணம் பற்றிப் பலவித வதந்திகள் உலாவி வந்தன. சிற்றரசர்கள் சூழ்ச்சி செய்து மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டும் நோக்கத்துடன் ஆதித்த கரிகாலனைத் தஞ்சைப் பக்கம் வராதபடி செய்து வருகிறார்கள் என்பது ஒரு வதந்தி. முன்னொரு காலத்தில் கரிகால வளவன் வடநாட்டுக்குப் படையெடுத்துச் சென்று இமயமலையின் உச்சியில் புலிக் கொடியை நாட்டிவிட்டு வந்தது போல் அதே பெயர் கொண்ட ஆதித்த கரிகாலனும் செய்ய விரும்பிச் சபதம் செய்திருக்கிறான் என்றும், அந்தச் சபதம் நிறைவேறாமல் அவன் தஞ்சைக்குத் திரும்ப விரும்பவில்லையென்றும், அதற்குப் பழுவேட்டரையர் முதலியவர்கள் குறுக்கே நின்று தடுத்து வருகிறார்கள் என்றும் இன்னொரு வதந்தி பரவியிருந்தது.

எனவே, திடீர் என்று ஒரு நாள் ஆதித்த கரிகாலன் இறந்து விட்டான் என்றும், சம்புவரையரின் மாளிகையில் வஞ்சனையினால் கொல்லப்பட்டான் என்றும் செய்தி பரவவே, சோழ நாட்டு மக்களின் உள்ளக் கிளர்ச்சி எப்படியிருந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை அல்லவா? அந்த வீர புருஷனுக்கு இறுதி மரியாதை செய்வதற்கு மக்கள் லட்சக்கணக்கிலே திரண்டு வந்து சேர்ந்ததிலும் வியப்பில்லை தானே? ஊர்வலம் தஞ்சையை அணுகியபோது, ஜனக்கூட்டம் ஜன சமுத்திரமாகவே ஆகிவிட்டது. தஞ்சை நகர மக்களும் தஞ்சைக் கோட்டையைச் சுற்றிலும் சூழ்ந்திருந்த தென் திசைப் படை வீரர்களும் கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து விட்டார்கள். அவர்களையெல்லாம் கோட்டைக்குள் அனுமதித்தால் பல விபரீதங்கள் நேரிடலாம் என்று முதன்மந்திரி அநிருத்தர் எச்சரித்ததின் பேரில், துயரக் கடலில் மூழ்கியிருந்த சக்கரவர்த்தியும் அவருடைய குடும்பத்தாரும் கோட்டைக்கு வெளியிலேயே வந்துவிட்டார்கள்.

சுந்தர சோழரைப் பார்த்ததும், அந்த மாபெரும் கூட்டத்தில் ஒரு பேரிரைச்சல் எழுந்தது. "சோழ நாட்டைச் சுந்தர சோழர் அரசு புரிந்தபோது 'ஹா' என்ற சத்தமே கேட்டதில்லை" என்று சிலா சாசனங்கள் சொல்லுகின்றன. ஆதித்த கரிகாலரின் மரணத்துக்கு முன்னால் குடிகொண்டிருந்த நிலைமை அச்சிலாசாசனங்களில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

இன்றைக்கோ "ஹா! ஹா!" "ஐயையோ!" என்ற சத்தங்கள் லட்சகணக்கான குரல்களில் எழுந்தன. அபிமன்யுவைப் பறி கொடுத்த அர்ச்சுனனுடைய நினைவு அநேகருக்கு வந்தது. ஆனால் அபிமன்யுவோ பகைவர் கூட்டத்துக்கு மத்தியில் தன்னந்தனியாக நின்று அஸகாய சூரத்தனங்கள் செய்துவிட்டு உயிரை விட்டான்.

இங்கேயோ ஆதித்த கரிகாலன் மதுராந்தகனின் மண்ணாசையினாலும் சிற்றரசர்களின் அதிகார வெறியினாலும் சூழ்ச்சிக்கு ஆளாகிக் கொல்லப்பட்டான். மக்களின் மனத்தில் குடிகொண்டிருந்த இந்த எண்ணத்தை உறுதிப்படுத்தும் காரியங்களும் வெளியில் நடந்தன.

ஆதித்த கரிகாலனுடைய சடலம் தஞ்சைக் கோட்டைக்கு வெளியே எல்லோரும் வந்து பார்க்கும்படியாக வைக்கப்பட்டிருந்தது. அனைவரும் வந்து பார்த்துக் கண்ணீர் விட்டு விட்டுப் போனார்கள். ஆனால் மதுராந்தகர் மட்டும் வரவில்லை; பழுவேட்டரையர்களும் வரவில்லை.

பழுவேட்டரையர்கள் தங்கள் நண்பர்களைச் சைன்யங்களுடன் ஒன்று சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வதந்தி பரவவும் ஆரம்பித்திருந்தது. எனவே ஆதித்த கரிகாலருக்கு வீரமரணத்துக்குரிய முறையில் ஈமச் சடங்குகள் நடந்து, சக்கரவர்த்தியின் குடும்பத்தினர் தஞ்சைக் கோட்டைக்குள் பிரவேசித்த பிறகும் ஜனக் கூட்டம் விரைவாகக் கலையவில்லை.

"மதுராந்தகன் வீழ்க!" "பழுவேட்டரையர்கள் வீழ்க!" என்னும் கோஷங்கள் முதலில் இலேசாக எழுந்தன. நேரமாக, ஆக இந்தக் கோஷங்கள் பலம் பெற்று வந்தன.

திடீரென்று ஜனக்கூட்டத்தில் ஒரு பகுதியினர் கோட்டைக் கதவுகளை இடித்து மோதித் திறந்து கொண்டு தஞ்சை நகருக்குள் பிரவேசித்தார்கள். முதலில் அவர்கள் பழுவேட்டரையர்களின் மாளிகைக்குச் சென்றார்கள். வெளியிலே நின்று "பழுவேட்டரையர்கள் வீழ்க" என்று சத்தமிட்டார்கள்.

முதன்மந்திரி அநிருத்தரின் கட்டளையின் பேரில் வேளக்காரப் படை வீரர்கள் ஜனங்களைக் கலைந்து போகச் செய்ய நேர்ந்தது.

இதற்கிடையில், மதுராந்தகத் தேவன் அநிருத்தரின் வீட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்பதாக ஒரு வதந்தி பரவியது. ஜனங்கள் அநிருத்தரின் வீட்டைப் போய்ச் சூழ்ந்து கொண்டார்கள்.

"எங்கே அந்தப் பேடி மதுராந்தகன்? வெளியே வரச் சொல்லுங்கள் மதுராந்தகனை!" என்று கத்தினார்கள்.

அச்சமயம் உண்மையாகவே மதுராந்தகன் அநிருத்தரின் வீட்டுக்குள்ளிருந்தான். வெளியிலே ஜனங்களின் கூக்குரலைக் கேட்டுவிட்டு, அவன் நடுநடுங்கினான். அநிருத்தரைப் பார்த்து, "முதன்மந்திரி! என்னை எப்படியாவது கோட்டைக்கு வெளியே அனுப்பி விடுங்கள். ரகசியச் சுரங்க வழியாக அனுப்பி விடுங்கள். என்னை ஆதரிக்கும் நண்பர்களுடனே நான் போய்ச் சேர்ந்து கொள்கிறேன். இந்த உதவியைத் தாங்கள் செய்யும் பட்சத்தில் நான் சோழ சிம்மாசனத்தில் ஏறும் போது தங்களையே முதன்மந்திரியாக வைத்துக் கொள்ளுவேன்" என்று சொன்னான்.

"ஐயா! சிங்காசனம் ஏறுவதைப் பற்றி இப்போது ஏன் பேசவேண்டும்? இன்னும் சுந்தர சோழர் சக்கரவர்த்தி உயிருடன் இருக்கிறாரே" என்றார் முதன்மந்திரி அநிருத்தர்.

"சுந்தர சோழர் தம் குமாரனுக்கு ஈமக் கடன் செய்து விட்டுத் திரும்பி வந்ததை நீங்கள் பார்க்கவில்லையா? அவர் முகம் எவ்வாறு பேயடித்தது போலிருந்தது என்பதைக் கவனிக்கவில்லையா? நான் இந்த மச்சு மேடையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அதிக காலம் இனி உயிரோடு இருக்க மாட்டார். அருள்மொழிவர்மனாவது, நானாவது சிங்காதனம் ஏறி இந்த ராஜ்யத்தை ஆள வேண்டும். சுந்தர சோழர் எனக்கு பட்டம் கட்டவே பிரியப்படுகிறார். நீங்களும் அன்னையும் எதற்காக அதற்குக் குறுக்கே நிற்க வேண்டும்?" என்றான் மதுராந்தகன்.

"இளவரசே! தங்கள் அன்னை குறுக்கே நிற்பதற்கான காரணம் இல்லாமல் போகுமா? அதோ கேளுங்கள். இந்த வீட்டைச் சூழ்ந்திருக்கும் மக்களின் கூச்சலை சுந்தர சோழர் இஷ்டப்பட்டால் மட்டும் போதுமா? சோழ நாட்டு மக்கள் இஷ்டப்பட வேண்டாமா?" என்று கூறிவிட்டு, "ஆகா! இது என்ன?" என்று அநிருத்தர் வீதியில் எட்டிப் பார்த்தார்.

பழைய கூக்குரலுக்குப் பதிலாக இப்போது "அருள்மொழிவர்மர் வாழ்க!" "பொன்னியின் செல்வர் வாழ்க!" "ஈழங்கொண்ட வீராதி வீரர் வாழ்க!" என்ற கோஷங்கள் கிளம்பின.

கம்பீரமான குதிரை மேலேறி அருள்மொழிவர்மர் அங்கே வந்து கொண்டிருந்தார். அவரைப் பின் தொடர்ந்து அத்தனை ஜனங்களும் போனார்கள். சில நிமிஷ நேரத்துக்கெல்லாம் அநிருத்தர் வீட்டின் வெளிப்புறம் வெறுமையாகி விட்டது. அநிருத்தருக்கு முன்னாலிருந்து மதுராந்தகனும் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய கண்கள் பொறாமைத் தீயினால் கோவைப்பழம் போலச் சிவந்தன. "ஆகா! இந்தப் பிள்ளையிடம் அப்படி என்னதான் வசீகரம் இருக்கிறதோ?" என்று தனக்குத்தானே சொல்லிப் பொருமிக் கொண்டான்.

அநிருத்தர் "இளவரசே! ஈழத்து இராணியைக் கொன்றவனைப் பின் தொடர்ந்து சின்னப் பழுவேட்டரையர் ஓடியபோது, நீர் அந்தப் பாதாளச் சுரங்க வழியில் இருந்ததற்குக் காரணம் என்ன?" என்று கேட்டார்.

"பொன்னியின் செல்வன் யானைப்பாகன் வேஷத்தில் அரண்மனைக்கு வந்த போது எனக்கு மிக்க மனச்சோர்வு உண்டாயிற்று. அவனும் நானும் ஒரே சமயத்தில் இந்தக் கோட்டைக்குள்ளிருக்கப் பிரியப்படவில்லை. பழுவேட்டரையர் சுரங்க வழியை எனக்குக் காட்டிக் கொடுத்திருந்தார். அதன் வழியாகப் போய்விடலாமா என்று யோசித்துக் கொண்டு அரண்மனைத் தோட்டத்தைச் சுற்றிக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவன் சுரங்கப்பாதை வழியாக வெளியே வருவதைப் பார்த்தேன். அவன் என்னை நெருங்கி, 'இளவரசே! தங்களைப் பார்க்கத்தான் வந்தேன். பெரிய பழுவேட்டரையரும், கந்தமாறனும் தங்களை உடனே அழைத்து வரும்படி என்னை அனுப்பினார்கள். தங்கள் சிம்மாசன உரிமையை ஆதரித்து நிற்கப் பெரிய சைன்யங்கள் தயாராயிருக்கின்றன' என்றான். அவனுடைய தோற்றம் எனக்குச் சிறிது சந்தேகத்தை உண்டாக்கிற்று. 'பெரிய சைன்யம் தயாராகியிருந்தால் நான் ஏன் வெளியே வரவேண்டும்? அவர்களே இங்கு வந்து கொடும்பாளூர்ப் படைகளைத் தோற்கடித்து விட்டு என்னைச் சிம்மாசனத்தில் ஏற்றி வைக்கட்டுமே?' என்றேன். அந்த மனிதன், 'இளவரசே! அது மட்டுமல்ல; தங்களுடைய பிறப்பைக் குறித்து ஒரு பயங்கரமான மர்மம் இருக்கிறது. அதை வேறு யாரும் உங்களுக்குச் சொல்லத் துணிய மாட்டார்கள். நான் சொல்வேன்' என்றான். 'அப்படியானால் வா! உடனே போகலாம்' என்றேன் நான். அதற்கு அவன், 'முதன்மந்திரி அநிருத்தருக்கு ஒரு செய்தி சொல்லவேண்டியிருக்கிறது. அதைச் சொல்லிவிட்டு வருகிறேன். நீங்கள் முதலில் போய்ச் சுரங்கப் பாதையில் ஒளிந்திருங்கள்' என்றான். அதன் பேரில் பொக்கிஷ நிலவறைக்குள் போய் நான் காத்திருந்தேன். முதல்மந்திரி! தங்களை அவன் வந்து பார்த்தானா? என் பிறப்பைக் குறித்த பயங்கரமான மர்மம் என்னவாக இருக்கக் கூடும்?" என்றான் மதுராந்தகன்.

"இளவரசே! தங்களுக்கு அதை வெளியிட்டுச் சொல்லும் உரிமை பெற்றவர் தங்கள் அன்னை செம்பியன் மாதேவி ஒருவர் தான். எனக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும் நான் அதைச் சொல்லக் கூடாது" என்றார் அநிருத்தர்.

இந்தச் சமயத்தில் அம்மாளிகையின் வாசலில் மறுபடியும் கலகலப்புச் சத்தம் கேட்டது. முதன்மந்திரி எட்டிப் பார்த்தார். "ஆகா! இதோ உங்கள் அன்னையே வந்து விட்டார்!" என்றார்.

சிறிது நேரத்திற்கெல்லாம் செம்பியன் மாதேவி அநிருத்தரின் வீட்டுப் பெண்மணிகளைப் பார்த்துப் பேசிவிட்டு மேல் மாடிக்கு வந்தார். அந்தத் தேவியின் முகத்தில் அப்போது சோகம் ததும்பிக் கொண்டிருந்தது. அநிருத்தர் எழுந்து உபசரித்துச் சுட்டிக் காட்டிய ஆசனத்தில் தேவி உட்கார்ந்தார். சிறிது நேரம் தரையைக் குனிந்து பார்த்த வண்ணமாக இருந்தார். அந்த மேல்மாடத்திலும் மாளிகைக்கு வெளியிலும் வீதியிலும் நிசப்தம் குடிகொண்டிருந்தது. பின்னர் செம்பியன் மாதேவி, மதுராந்தகனையும், அநிருத்தரையும் ஒரு முறை பார்த்துவிட்டு "ஐயா! என் கணவர் என் தலை மீது இந்தப் பாரத்தைச் சுமத்திவிட்டு மேற்றிசைக்கு எழுந்தருளி விட்டார். தவறு செய்தது என்னவோ நான்தான். ஆனால் அவர் இச்சமயம் இருந்திருந்தால் நான் இவ்வளவு துன்பப்பட நேர்ந்திராது" என்றாள்.

அப்போது மதுராந்தகன் கண்களில் கோபக்கனல் பறக்க, "நீ ஏன் இப்படி வேதனைப்படுகிறாய்? ஏன் அடிக்கடி என் தந்தையின் பெயரை எடுக்கிறாய்? தஞ்சாவூர்ச் சிம்மாதனத்தில் நான் ஏறப்போவதென்னமோ நிச்சயம். அதற்குத் தடையாக இருந்தவர்களில் ஒருவன் இறந்து போனான். அருள்மொழிவர்மனோ என்னை விட வயதில் சிறியவன். நான் உயிரோடு இருக்கும்போது அவனுக்கு ஒருநாளும் பட்டம் கட்ட மாட்டார்கள். நீ மட்டும் குறுக்கே நில்லாமல் கருணை செய்ய வேண்டும். அம்மா! பெற்ற பிள்ளைக்குத் துரோகம் செய்யும் அன்னையைப் பற்றி யாராவது கேள்விப்பட்டதுண்டா? சிவபக்த மணியாகிய நீ ஏன் எனக்குத் துரோகம் செய்யப் பார்க்கிறாய்?" என்றான்.

"என் குழந்தாய்! பெற்ற பிள்ளைக்குத் தாய் விரோதமாக இருப்பது பயங்கரமான துரோகம்தான். ஆனால் என் கணவர் எனக்கு அவ்விதம் கட்டளையிட்டுச் சென்றிருக்கிறார். அவருடைய கட்டளையை நிறைவேற்றுவது என் கடமை. சொல்லுகிறேன் கேள்! மண்ணாசை ரொம்பப் பொல்லாதது. ராஜ்யத்தின் மேல் ஆசை அதை விடக் கொடியது. தலையிலே முடிசூட்டிக் கொண்டிருப்பவர்களைப் போல் இவ்வுலகத்தில் கவலைக்குள்ளாகிறவர்கள் வேறு யாருமில்லை. சிங்காதனத்தில் வீற்றிருப்பவர்களைப்போல் மன அமைதியின்றிச் சங்கடப்படுபவர்களும் யாரும் இல்லை. தலையிலே கிரீடம் வைத்துக் கொண்டிருந்த காரணத்தினால் அல்லவா வீரபாண்டியன் உயிரை விட நேர்ந்தது? பூலோக ராஜ்யத்தைக் காட்டிலும் எவ்வளவோ மடங்கு மேலானது சிவலோக சாம்ராஜ்யம். நாம் இந்த ஊரைவிட்டே போய்விடுவோம் வா. க்ஷேத்திர தரிசனம் செய்து கொண்டு கைலையங்கிரி வரையிலே போவோம். சாக்ஷாத் கைலாசநாதரின் கருணைக்குப் பாத்திரமாவோம்."

"ஆகா! கைலாச யாத்திரை போவதற்குத் தங்களுக்குத் தக்க பருவம்தான்,. எனக்கு இன்னும் பிராயம் ஆகவில்லை. இந்த உலகத்தின் சுகதுக்கங்கள் எதையும் நான் பார்க்கவில்லை. உடம்பெல்லாம் சாம்பலைப் புசிக் கொண்டு 'சிவ சிவா' என்று பைத்தியக்காரனைப் போல் அலைந்து திரியும்படி என்னை நீ வளர்த்துவிட்டாய். அந்தப் பரமசிவனுடைய பெருங் கருணையினாலேயே என்னிடம் இப்போது ராஜ்யம் நெருங்கி வந்திருக்கிறது. அதை ஏன் நான் கைவிட வேண்டும்?" என்று கேட்டான் மதுராந்தகன்.

"அப்பனே! உன்னை நெருங்கி வந்திருக்கும் ராஜ்யம் எத்தனையோ அபாயங்களுடன் சேர்ந்து வந்திருக்கிறது. நீ சிங்காதனம் ஏறுவதற்கு ஒரு தடை நீங்கிவிட்டது. ஆதித்த கரிகாலன் இறந்துவிட்டான் என்று சொன்னாய். சற்று முன்னால் இந்த வீட்டைச் சுற்றி நின்று கொண்டிருந்த ஜனங்கள் கூச்சலிட்டது உன் காதில் விழவில்லையா? மதுராந்தகா! ஆதித்த கரிகாலன் இறந்ததற்கு நீயும் பழுவேட்டரையர்களுமே காரணம் என்று மக்கள் நினைக்கிறார்கள். உன்னை எப்படிச் சக்கரவர்த்தியாக அவர்கள் ஒப்புக்கொள்வார்கள்?"

"அம்மா அதையெல்லாம் ஜனங்கள் வெகு சீக்கிரம் மறந்து விடுவார்கள். என்னைச் சிங்காதனத்தில் ஏற்றி விட்டால் என்னையே சக்கரவர்த்தி என்று ஒப்புக் கொள்வார்கள். இன்னும் சொல்கிறேன் கேள்! கரிகாலனுடைய மரணத்துக்கு யார் காரணம் தெரியுமா? அருள்மொழிவர்மரின் அருமைச் சிநேகிதன் வந்தியத்தேவன் தான். சம்புவரையர் வீட்டில் கரிகாலன் செத்துக் கிடந்த இடத்தில் வந்தியத்தேவன்தான் இருந்தானாம். சம்புவரையரையும், வந்தியத்தேவனையும் பாதாளச் சிறையில் போட்டிருக்கிறார்கள். தனக்குச் சிம்மாதனம் கிடைக்கும் பொருட்டுத் தமையனைக் கொலை செய்ய ஏற்பாடு செய்தவன் அருள்மொழிவர்மன். இது மட்டும் ஜனங்களுக்குத் தெரியட்டும், அப்புறம் பொன்னியின் செல்வரின் கதி என்ன ஆகிறதென்று பார்க்கலாம்."

செம்பியன் மாதேவி தம் கண்களில் கனல் வீச, "அடபாவி! கருணையே உருக்கொண்ட அருள்மொழியைப் பற்றி என்ன வார்த்தை சொல்கிறாய்? உன்னைப் போன்ற துராசை பிடித்தவனையே அவன் கோவிலில் வைத்துக் கும்பிடத் தயாராக இருக்கிறானே. அவனைப்பற்றி நீ மறுபடியும் இப்படிச் சொன்னால் நீ எரிவாய் நரகத்துக்குத் தான் போவாய். உனக்கு இம்மையிலும், மறுமையிலும் கதி மோட்சம் கிடையாது" என்றாள்.

இதைக் கேட்டதும் மதுராந்தகன் குதித்தெழுந்தான். "அடி பேயே! உன் சொந்த மகனுக்குச் சாபம் கொடுக்கிறாய். என்னுடைய விரோதிக்கு ஆசி கூறுகிறாய். நீ என்னுடைய தாயாராக இருக்க முடியுமா? இல்லவே இல்லை" என்று மதுராந்தகன் உள்ளம் நொந்து கொதித்துக் கூறினான்.

அப்போது செம்பியன் மாதேவி, "அப்பா! உனக்கு நான் இதை என்றைக்கும் சொல்லவேண்டாம் என்றிருந்தேன். உன்னுடைய பிடிவாதத்தினால் சொல்லும்படி செய்து விட்டாய். உண்மையிலேயே நான் உன்னைப் பெற்ற தாயார் அல்ல. நீ என் மகனும் அல்ல" என்றாள்.

மதுராந்தகன் கம்மிய குரலில், "ஆகா நான் சந்தேகித்தது உண்மையாகப் போய்விட்டது. நீ என் தாயாரில்லாவிட்டால் என் தாயார் யார்? நான் உன் மகன் இல்லையென்றால் பின் யாருடைய மகன்?" என்றான்.

தேவி முதன்மந்திரி அநிருத்தரைப் பார்த்து, "ஐயா! தாங்கள் சொல்லுங்கள். என்னுடைய அவமானத்தை நானே சொல்லும்படி தயவு செய்து வைக்க வேண்டாம்" என்றாள்.

முதன்மந்திரி அநிருத்தர், மதுராந்தகனைப் பார்த்துச் சொன்னார்: "இளவரசே! தங்களைச் சின்னஞ்சிறு குழவிப் பருவத்திலிருந்து எடுத்து வளர்த்த அன்னையை மனம் நோகும்படி செய்து விட்டீர்கள். எப்படியும் ஒருநாள் தாங்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டியதுதான். இப்போதே அதைத் தெரிந்து கொள்ளுங்கள்."

செம்பியன் மாதேவிக்குக் கல்யாணமான புதிதில் தன் வயிற்றில் ஒரு குழந்தை பிறக்க வேண்டுமென்றும் அக்குழந்தை சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக வேண்டுமென்றும் ஆசை இருந்தது. அவள் கர்ப்பந்தரித்து குழந்தைப் பேற்றை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், அவருடைய கணவர் வெளியூருக்குச் சென்றிருந்தார். அதே சமயத்தில் அதே காலத்தில் அக்காளும் தங்கையுமான இரண்டு ஊமை ஸ்திரீகள் அரண்மனைத் தோட்டத்தில் குடியிருந்தார்கள். அவர்களில் ஒருத்தி கர்ப்பந்தரித்து குழந்தைப் பேற்றை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். செம்பியன் மாதேவி க்ஷேத்திராடனம் சென்றிருந்த போது அனாதையாகக் காணப்பட்ட அந்த கர்ப்ப ஸ்திரீயை அழைத்து வந்திருந்தாள். அவளுடைய சகோதரி தஞ்சாவூருக்கருகில் இருக்கிறாளென்று கேள்விப்பட்டுக் கர்ப்ப ஸ்திரீக்கு உதவி செய்வதற்காக அவளை வரவழைத்துக் கொண்டிருந்தாள். செம்பியன் மாதேவிக்குக் குழந்தை பிறந்தது. முதன்மந்திரி அநிருத்தர் ராஜ்யத்துக்குப் பிள்ளை பிறந்திருப்பதன் பொருட்டு வாழ்த்துக்கூற வந்தார். அப்போது செம்பியன் மாதேவி கண்ணீர் விட்டுக் 'கோ'வென்று அழுதாள். பிறந்த குழந்தை உயிரில்லாமல் அசைவற்றுக் கட்டையைப் போல் கிடந்தபடியால் அவ்வாறு அவள் துக்கப்பட்டாள்.

"ஐயா! என் கணவன் வந்து கேட்கும்போது நான் என்ன பதில் சொல்வேன்?" என்று விம்மியழுதாள். அவளுடைய துயரத்தைக் கண்டு பொறுக்கமுடியாமல் அநிருத்தர் ஒரு யோசனை கூறினார். தோட்டத்தில் குடியிருந்த ஊமைப் பெண்ணுக்கு ஓர் ஆணும், ஒரு பெண்ணுமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதை அவர் அறிந்திருந்தார். அந்த ஊமைப் பெண்ணிடம் சென்று குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டுப் போய்விட்டால், அவர்கள் அரண்மனையில் வளர்வார்களென்று ஜாடையினால் தெரிவித்தார். அந்த ஊமைப் பெண் வெறிபிடித்த பைத்தியக்காரி போல் இருந்தாள். முதலில் அவள் குழந்தைகளைக் கொடுக்க மறுத்தாள். சற்று நேரம் கழித்துக் குழந்தைகளை விட்டுவிட்டு ஓடியே விட்டாள். உடனே அநிருத்தர் அவளுடைய தங்கையைக் கொண்டு ஆண் குழந்தையைச் செம்பியன் மாதேவியிடம் கொண்டுவிடச் செய்தார். உயிரின்றிக் கட்டை போல் இருந்த குழந்தையை ஒருவருக்கும் தெரியாமல் கொண்டு போய்ப் புதைத்துவிடும்படி ஊமைத் தங்கையிடம் கொடுத்தனுப்பி விட்டார். மற்றொரு பெண் குழந்தையைத் தன்னுடைய வீட்டுக்கு எடுத்துச் சென்று அங்கிருந்த தன்னுடைய சீடன் ஆழ்வார்க்கடியானிடம் கொடுத்துப் பாண்டிய நாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார்.

இவ்விதம் குழந்தை மாற்றம் செய்தது செம்பியன் மாதேவியின் உள்ளத்தில் உறுத்திக் கொண்டே இருந்தது. ஒரு நாள் கண்டராதித்த தேவரிடம் உண்மையை ஒப்புக் கொண்டு விட்டாள். அந்த மகான், "அதனால் பாதகமில்லை! பெண்ணே! யார் வயிற்றில் பிறந்த குழந்தையாக இருந்தால் என்ன? சிவபெருமான் அளித்த குழந்தைதான். உன் வயிற்றில் பிறந்த குழந்தையைப் போலவே வளர்த்து வா. ஆனால் வேறு குலத்தில் பிறந்த பிள்ளை சோழ சிங்காதனத்தில் ஏறக்கூடாது. அப்படிச் செய்வது குலத் துரோகமாகும். ஆகையால் சிறு பிராயத்திலிருந்தே இவனைச் சிவ பக்தனாகும்படி வளர்த்து வருவோம். 'சோழ சாம்ராஜ்யம் வேண்டாம். சிவபக்தி சாம்ராஜ்யமே போதும்!' என்று இவனே சொல்லும்படி வளர்ப்போம். ஆனால் எந்தக் காரணத்தை முன்னிட்டும் இவனைத் தஞ்சாவூர் சிங்காதனத்தில் ஏற்றி வைப்பதற்கு மட்டும் நாம் உடந்தையாக இருக்கக்கூடாது. அந்தச் சந்தர்ப்பம் வரும்போது நான் உயிரோடு இல்லாவிட்டாலும், நீ உறுதியுடனிருந்து சோழர் குலத்தைக் காப்பாற்ற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

"மதுராந்தகா! நீ கண்டராதித்த தேவருடைய புதல்வனுமல்ல. செம்பியன் மாதேவி வயிற்றில் பிறந்த பிள்ளையுமல்ல. ஊர் சுற்றித் திரிந்த அனாதை ஊமைப் பெண்ணின் மகன். உன்னை இந்தத் தேவி தம் சொந்தக் குழந்தையைவிட நூறு மடங்கு அதிகமாகச் சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தார். இப்போது அவருடைய கருத்துக்கு மாறாக நடக்காதே! தேவி சொல்வதைக் கேள், அதனால் உனக்கு நன்மையே விளையும்" என்றார் அநிருத்தர்.