பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/பொன்மழை பொழிந்தது!

தியாக சிகரம் - அத்தியாயம் 90

தொகு

பொன்மழை பொழிந்தது!

வந்தியத்தேவன் ஆனைமலைக் காட்டுக்குத் தான் சென்று வந்த வரலாற்றைக் கூறி முடித்ததும், குந்தவை அவனைப் பார்த்து, "ஐயா! நீங்கள் கூறிய வரலாறு மிக அதிசயமாயிருக்கின்றது. உண்மை நிகழ்ச்சிகள் தானா என்று சந்தேகமும் சில சமயம் எனக்கு ஏற்பட்டது. கதை புனைந்து கூறுவதில் தாங்கள் கெட்டிக்காரர் என்பதை அறிவேன். அதிலும் தாங்கள் அடிக்கடி பேச்சை நிறுத்தி மேலும் கீழும் பார்த்து விழித்து விட்டுப் பேச்சை தொடங்கியபோது என்னுடைய சந்தேகம் மேலும் அதிகமாயிற்று!" என்றாள்.

வந்தியத்தேவன் மற்றும் ஒரு முறை மேலும் கீழும் பார்த்துவிட்டுக் குந்தவையை நோக்கினான். "தேவி! புனைகதை சொல்வதற்கு வேறு இடங்கள் இருக்கின்றன. என்னுடைய அந்தச் சாமர்த்தியத்தைத் தங்களிடம் இதுவரையில் நான் காட்டியதில்லை. இடையிடையே என் பேச்சுத் தடைப்பட்டதற்கு வேறொரு காரணம் உண்டு!" என்றான்.

"அதுவும் பெரிய இரகசியமா? பெண்களிடம் சொல்லக் கூடாதா?" என்று கேட்டாள் குந்தவைப் பிராட்டி.

"வேறு யாரிடமும் சொல்லக் கூடாத இரகசியந்தான். ஆனால் தாங்கள் அனுமதி கொடுத்தால் அதையும் சொல்லுகிறேன்!" என்றான் வந்தியத்தேவன்.

"உண்மையைச் சொல்லுவதற்கு எப்போதும் என்னுடைய அனுமதி உண்டு!" என்றாள் குந்தவை.

"அப்படியானால் சொல்லிவிடுகிறேன் பிறகு என்னைக் கோபித்துக் கொள்வதில் பயனில்லை. நான் தங்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது சில சமயம் தற்செயலாகத் தங்கள் விழிகளில் என் பார்வை பதிந்து விடுகிறது. தேவியின் கரிய கண்களில் என்ன அரிய மாயம் இருக்கிறதோ, தெரியவில்லை. அது என்னை அப்படித் திகைத்து நிற்கும்படி செய்து விடுகிறது. மறுபடியும் சமாளித்துக்கொண்டு பேச்சைத் தொடங்குகிறேன்!" என்றான்.

குந்தவையின் இதழ்கள் விரிந்தன; கன்னங்கள் குழிந்தன; கண்கள் சிரித்தன. "ஐயா! என்னுடைய கண்களில் அரிய மாயம் ஒன்றுமில்லை. கரிய மாயமும் இல்லை. சில காலமாக மையிட்டுக் கொள்வதையும் விட்டு விட்டேன். என்னுடைய கண்களில் தாங்கள் தங்களுடைய உருவத்தைத் தான் பார்த்திருப்பீர்கள். அதுதான் தங்களைத் திகைப்படையச் செய்திருக்கும்!" என்றாள்.

"தேவி! என்னுடைய உருவத்தை நான் கண்ணாடிகளில் பார்த்திருக்கிறேன். தெளிந்த நீரில் பிரதிபலிக்கப் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் எந்தவிதத் திகைப்பும் அடைந்ததில்லை!" என்றான் வல்லவரையன்.

"என் கண்களைக் கண்ணாடிக்கும் தண்ணீருக்கும் ஒப்பிடுகிறீர்களா? கண்ணாடி மங்கிவிடும்; தண்ணீர் கலங்கி விடும்!" என்றாள் இளவரசி.

"கண்ணாடி மங்கினால் துடைத்துச் சுத்தம் செய்வேன். தண்ணீர் கலங்காமல் பார்த்துக்கொள்வேன். தங்கள் கண்களின் இமைகள் மூடித் திரையிட்டு என் உருவத்தை மறைப்பதை நான் தடுத்து நிறுத்த முடியாதல்லவா?" என்றான் வந்தியத்தேவன்.

"கண்ணாடிக்கு எதிரில் நின்றால்தான் உருவம் பிரதிபலிக்கும். தண்ணீர் கலங்காமல் தெளிந்திருந்தால்தான் உருவம் தெரியும். ஆனால் என் கண்கள் திறந்திருந்தாலும், கண்ணிமைகள் மூடியிருந்தாலும் தாங்கள் என் முன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தங்கள் உருவம் எப்போதும் என் கண்களில் பொலிகிறது. இந்த அதிசயத்தின் காரணம் என்ன என்று தங்களால் சொல்ல முடியுமா?" என்று குந்தவை கேட்டாள்.

வந்தியத்தேவனின் மெய் சிலிர்த்தது. தழுதழுத்த குரலில், "தெரியவில்லையே, தேவி!" என்றான்.

"தெரியாவிட்டால் நான் சொல்லுகிறேன். தங்களிடத்திலே தான் அப்படி ஏதோ ஒரு மாய மந்திர சக்தி இருக்கிறது. சோழ குலத்தைப் பழிவாங்க வந்த வயிர நெஞ்சம் கொண்ட நந்தினியின் உள்ளமும் தங்களைக் கண்டு சஞ்சலம் அடைந்து விட்டதல்லவா?"

"சற்று முன் தாங்கள் அமுதினுமினிய வார்த்தை கூறி என்னைப் பரவசப்படுத்தினீர்கள். அதே மூச்சில், அந்தக் கொடிய விஷ நாகத்தின் பெயரை ஏன் சொல்லுகிறீர்கள்?"

"நந்தினியை உள்ளத்தில் நஞ்சுடைய பாம்பு என்று நான் வெறுத்த காலம் உண்டு. இப்போது அவளை நினைக்கும்போது எனக்கு அவள் பேரில் இரக்கந்தான் உண்டாகிறது.."

"நந்தினியிடம் தாங்கள் இரக்கம் கொள்வது சோழ குலத்தை நாசமாக்கவரும் ஆலகால விஷத்திடம் இரக்கம் கொள்வதாகும்."

"ஐயா! சோழ வம்சத்தாருக்குக் குல தெய்வமாகிவிட்ட மந்தாகினி தேவியின் மகள் அவள்! என் அருமைச் சகோதரன் அருள்மொழியைப் பலமுறை காப்பாற்றிய தேவியின் மகள் அவள்! என் தந்தையைச் சதிகாரனுடைய வேலுக்கு இரையாகாமல் காப்பாற்றித் தன்னுடைய உயிரைப் பலி கொடுத்த மாதரசியின் மகள் நந்தினி!"

"ஆனால் அந்தச் சதிகாரனுடைய வேலை எறியத் தூண்டியவள் அவள்! ஆதித்த கரிகாலருக்கு யமனாக வந்தவள் அவள்! வீராதி வீரராகிய பெரிய பழுவேட்டரையரின் மதியை மயக்கி பொம்மை போல் ஆட்டிவைத்தவள்..."

"பெரிய பழுவேட்டரையரின் மதியை மட்டுந்தானா மயக்கினாள்? பார்த்திபேந்திர பல்லவன், கந்தமாறன் முதலியவர்களையும் தன் கைக் கருவி ஆக்கிக்கொண்டாள்! இவையெல்லாம் தெரிந்திருந்தும் அவளை என்னால் வெறுக்க முடியவில்லை. வீரபாண்டியனுடைய மரணத்துக்குப் பழிவாங்கவே இவ்வளவும் செய்தாள்! எடுத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வெற்றி அடைந்தாள்! வீர மறக் குலத்துப் பெண்! அவள் இப்படியெல்லாம் பயங்கரமான செயல்களில் இறங்குவதற்கு நானும் காரணமாயிருந்தேன் என்பதை நினைத்தால் வருத்தமாயிருக்கிறது. அவளுடைய குழந்தைப் பிராயத்தில் பழையாறையிலிருந்து விரட்டியடித்தோம்..."

"நல்ல காரியமே செய்தீர்கள், தேவி! தங்களுடைய நெஞ்சிரக்கத்தின் மிகுதியால் அவள் சோழ குலப் பகைவனுடைய மகள் என்பதை மறந்துவிட வேண்டாம். வீர பாண்டியனுடைய மகன் சோழர் வீட்டில் வளர்ந்து அதனால் விளைந்த அனர்த்தம் போதாதா? வீர பாண்டியனுடைய மகளும் சோழர் வீட்டில் வளர்ந்து ஆதித்த கரிகாலரைத் திருமணம் புரிந்து கொள்ள நேர்ந்திருந்தால்..."

"மிக்க நன்மையாக முடிந்திருக்கும், இந்த இரண்டு பெருங்குலங்களின் பகைமை தீர்ந்து இரு குலமும் ஒரு குலமாயிருக்கும். ஆனால் அந்தச் செய்தி உண்மையாயிருக்குமா?"

"எதைக் கேட்கிறீர்கள், தேவி!"

"நந்தினி வீர பாண்டியனின் மகள் என்பது உண்மையாயிருக்குமா?"

"நந்தினி அவ்வாறு ஆதித்த கரிகாலரிடம் கூறியதை என் காதினால் நானே கேட்டேன். பெரிய பழுவேட்டரையரும் கேட்டார். அதுதான் பெரிய பழுவேட்டரையரின் மனத்தை அடியோடு மாற்றி அவரை ரௌத்ராகாரம் கொள்ளச் செய்தது. அந்தக் கொடிய வார்த்தைதான் இளவரசர் ஆதித்த கரிகாலரின் உயிருக்கும் யமனாக முடிந்தது!"

"சிறிது யோசியுங்கள்! கரிகாலன் மீது பழி முடிப்பதற்காகவே அவள் அவ்விதம் சொல்லியிருக்கலாம் அல்லவா? வீர பாண்டியனைக் கரிகாலன் கோபத்திலிருந்து காப்பாற்ற விரும்பியபோது அவளே வேறு விதமாகக் கூறியிருக்கிறாள். பெற்ற தகப்பனைக் குறித்துக் 'காதலன்' என்று எந்தப் பெண்ணாவது தன் வாயினால் சொல்லியிருப்பாளா?"

"தேவி! கரிகாலர் அப்போது வெறி கொண்டவராயிருந்தார். அவள் என்ன சொன்னாளோ, இவர் என்னவென்று பொருள் செய்து கொண்டாரோ, யாருக்குத் தெரியும்? கரிகாலர் சொல்லியதுதானே? அவரே பின்னால் நந்தினி 'என் தகப்பன் வீர பாண்டியன்' என்று சொன்னபோது நம்பிவிட்டாரே? மேலும் வீர பாண்டியன் இறந்த பிறகே அவளுக்கு இது தெரிந்திருக்கலாம். தன் பிறப்பைக் குறித்த உண்மையை அறிவதற்காக நந்தினி என்னென்ன பிரயத்தனங்கள் செய்தாள் என்பது தங்களுக்குத் தெரியுமே? நள்ளிரவில் அவளுடைய அன்னையின் ஆவியைப் போல் நடித்துச் சுந்தர சோழரைப் பைத்தியம் பிடிக்க அடிக்க வில்லையா? அதைத் தங்கள் தோழி பார்த்து மூர்ச்சையடைந்து விழவில்லையா..?"

"பாதாளச் சிறையில் மூன்று வருஷமாக அடைப்பட்டிருந்து தங்களுடன் விடுதலை அடைந்த பைத்தியக்காரனை ஆழ்வார்க்கடியான் பயமுறுத்திக் கேட்டபோது அவன் சொன்னதும் தங்களுக்குத் தெரிந்திருக்கும்.."

"தெரியாமலென்ன? நந்தினிக்கும், அவள் சகோதரனுக்கும் தானே தகப்பன் என்று அவன் கூறினான்."

"அதுவே உண்மையாகவும் இருக்கலாம் அல்லவா!"

"அப்படியானால், சில சமயம் பொய்யும் மிக்க வலிமையுடையதாகிறது. அரண்மனைக்குள்ளேயே வளர்ந்து சண்டையென்றால் பயந்து கொண்டிருந்த பழைய மதுராந்தகத்தேவர் தாம் வீரபாண்டியனுடைய மகன் என்று அறிந்ததும் எத்தகைய வீர புருஷர் ஆகிவிட்டார் என்பதைத் தாங்கள் பார்த்திருந்தால் பிரமித்துப் போயிருப்பீர்கள். ஒரு முறை சின்னப் பழுவேட்டரையர் தமது வயிரக் கரத்தால் என் தோளைப் பற்றினார். அதை நினைத்தால் இன்னமும் அவர் பிடித்த இடத்தில் எனக்கு வலியுண்டாகிறது. அத்தகைய மகாவீரருடன் நாமெல்லாரும் 'கோழை' என்று எண்ணிய மதுராந்தகன் சரிசமமாக வாட்போர் இட்ட காட்சியை என்றும் நான் மறக்க முடியாது."

"அதைக் குறித்தே எனக்கும் தங்கள் வார்த்தையில் சந்தேகம் உண்டாகிறது என்று சொன்னேன்."

"நம்புவதற்கு அரிதான சம்பவந்தான். நந்தினியின் மூடுபல்லக்கில் பிரயாணம் செய்துகொண்டிருந்தவனும், பழுவேட்டரையர்களின் பெயரைச் சொன்னாலே நடுநடுங்கியவனுமான நாம் அறிந்த மதுராந்தகன் சின்னப் பழுவேட்டரையருடன் வாட்போர் செய்யத் துணிவான் என்று யார் நம்ப முடியும்? ஆயினும் அது உண்மையில் நடந்தது என்பதை ஆழ்வார்க்கடியான் திரும்பி வந்து தங்களுக்குக் கூறுவான்."

"ஐயா! தாங்கள் நந்தினி தேவியைப் பார்க்க முடியவில்லையா?"

"அந்தப் பெண் உருக்கொண்ட ராட்சஸியை நான் ஏன் பார்க்க வேண்டும்?"

"நந்தினியைப் பற்றி இனி அவ்விதம் சொல்லவேண்டாம். என்றைக்காவது ஒரு நாள் நானே அவளைச் சந்திப்பேன். உண்மையில் அவளுடைய தந்தை யார் என்னும் இரகசியத்தை அறிவேன். ஆனால் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். நந்தினியைப் பற்றி என்னிடம் எதுவும் தவறாகக் கூற வேண்டாம். அவளுடைய தகப்பனார் யாராயிருந்தாலும், அவளுடைய அன்னை யார் என்பதில் சந்தேகமில்லை அல்லவா? அவளிடம் நான் அன்பு கொள்வதற்கு அது ஒன்றே போதும், அதற்கு மேலே இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது.."

"அது என்ன காரணம்?"

"நந்தினி தங்களிடம் பிரியம் கொண்டிருந்தாள். அவளுடைய முத்திரை மோதிரத்தைத் தங்களிடம் கொடுத்தாள். தஞ்சைக் கோட்டையிலிருந்து தப்பிச் செல்வதற்கு உதவி செய்தாள். கொள்ளிடக் கரைக் காட்டில் ரவிதாஸன் கூட்டத்தாரிடம் தாங்கள் சிக்கிக்கொண்டிருந்த போது மறுபடியும் தங்கள் உயிரைக் காப்பாற்றினாள்..."

"கடைசியாக, ஆதித்த கரிகாலரைக் கொன்ற பயங்கரமான பழியை என் பேரில் சுமத்தினாள் அதற்காகவே அத்தனை சூழ்ச்சிகளும் செய்தாள்!"

"ஏன் அப்படிச் செய்தாள் என்று தங்களுக்குத் தெரியவில்லையா?"

"பாம்பு ஏன் கடிக்கிறது என்பதற்குக் காரணம் சொல்ல வேண்டுமா? சிறுத்தை ஏன் பாய்கிறது என்பதற்குக் காரணம் கூற வேண்டுமா?"

"நந்தினி பிறக்கும்போதே பாம்பாகவோ, சிறுத்தையாகவோ பிறக்கவில்லை. நாங்கள்தான் அவளை அப்படிச் செய்து விட்டோம். சந்தர்ப்பங்கள் அவ்விதம் சதி செய்து விட்டன. தாங்களும் அதற்குக் காரணமாயிருந்தீர்கள்!"

"ஐயையோ! என் பேரில் ஏன் வீண் பழி? நான் அவளுக்கு அப்படி என்ன தீங்கு செய்தேன்?"

"தாங்கள் அவளுக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை. அவள்தான் தங்களிடம் அன்பு கொண்டிருந்தாள்."

"தெய்வமே!.."

"புருஷர்கள் சில காரியங்களில் கண்ணிருந்தும் குருடர்களாயிருப்பார்கள் போலிருக்கிறது. ஐயா இதைக் கேளுங்கள்! நந்தினியின் உள்ளம் தங்களுக்குத் தெரியவில்லை. நான் நன்றாகத் தெரிந்து கொண்டேன். அந்தத் துர்ப்பாக்கியசாலி உண்மையில் வீர பாண்டியனிடம் அன்பு கொண்டிருக்கவில்லை. ஆதித்த கரிகாலனிடம் அவளுக்கு உண்மையான நேசம் கிடையாது. அவர்களிடம் அன்பு கொண்டதாக நடித்ததெல்லாம் அவள் அரசு பீடத்தில் அமர்வதற்காகத்தான்!"

"இதை நானும் அறிவேன், தேவி! அவளுடைய கிராதக நெஞ்சில் அன்புக்குச் சிறிதும் இடமே இல்லை!"

"அது தவறு. தங்களைக் கண்டபோதுதான் அவள் உள்ளத்தில் உண்மையான அன்பு உதயமாயிற்று. தங்கள் அபிமானத்தைக் கவர்வதற்காக அவள் எதுவும் செய்யச் சித்தமாயிருந்தாள்..."

"என் பேரில் இளவரசரைக் கொன்ற பழியைச் சுமத்தவும் சித்தமாயிருந்தாள்."

"அது எதற்காக? தங்களை என்றென்றைக்கும் சோழ குலத்தாருடன் நட்பும், உறவும் கொள்ளாமலிருக்கச் செய்வதற்குத்தான்."

"அதற்காக என்னைத் தஞ்சாவூர் இராஜ வீதிகளின் நாற்சந்தியில் கழுவில் ஏற்றச் செய்வதற்கு ஏற்பாடு செய்து விட்டாள். அதைவிட அவளுடைய கையில் பிடித்திருந்த கத்தியினாலேயே என்னைக் கொன்றிருக்கலாமே?"

"தங்களைக் கொல்ல எண்ணியிருந்தால் அவ்விதம் செய்திருக்கலாம். அல்லது ரவிதாஸன் கூட்டத்தைக் கொண்டு தங்களைக் கொல்லச் செய்திருக்கலாம். பெரிய பழுவேட்டரையர் குற்றத்தைத் தன் பேரில் போட்டுக்கொண்டிராவிட்டால், பொன்னியின் செல்வர் குறுக்கிட்டிராவிட்டால், தங்களை உண்மையிலேயே கழுவில் ஏற்றக் கட்டளை பிறப்பித்திருந்தால் ரவிதாஸன் கூட்டத்தார் வந்து தங்களை விடுவித்துக் கொண்டு போயிருப்பார்கள். தாங்களும் ஒருவேளை இன்று ஆனைமலையின் மேல் சேர்ந்திருக்கும் கூட்டத்துடன் கலந்து கொண்டிருந்தாலும் இருப்பீர்கள்."

"அத்தகைய விபத்து நேராமல் கடவுள்தான் என்னைக் காப்பாற்றினார்."

"சோழ நாட்டையும் காப்பாற்றினார், தங்களைப் போன்ற ஒரு வீரரின் சேவை சோழ சாம்ராஜ்யத்துக்கு நஷ்டமாகாமல் காப்பாற்றினார்..."

"தேவி! சோழ சாம்ராஜ்யம் மகத்தானது. ஐந்நூறு லட்சம் வீரர்களின் வாள்களும், வேல்களும் இந்த ராஜ்யத்தைக் கண் போலக் காத்து நிற்கின்றன. நான் ஒருவன் இதன் உதவிக்கு அவ்வளவு அவசியமாயிருக்க முடியாது..!"

"சோழ நாட்டை நலாபுறமும் புதிய அபாயங்கள் சூழ்ந்து கொண்டிருப்பதாகத் தாங்களே சொன்னீர்கள்."

"அது உண்மைதான், தேவி! ரவிதாஸனுடைய சூழ்ச்சித் திறன் அதிசயமானது. பாண்டிய நாட்டுச் சிங்காதனத்துக்கு உரிமையாளர் இரண்டு பேரை உண்டாக்கி விட்டான். முன்னே ஒரு சிறு குழந்தைக்குக் கொள்ளிடக்கரைக் காட்டில் பாண்டிய மன்னன் என்று பட்டம் சூட்டினான். அந்தப் பராங்குசன் நெடுஞ்செழியனுடன், இப்போது அமர புஜங்கன் நெடுஞ்செழியன் ஒருவனும் சேர்ந்து விட்டான்..."

"அது யார் அமரபுஜங்கன் நெடுஞ்செழியன்?"

"நம் பழைய மதுராந்தகரின் பெயர் இப்போது அதுதான். பாண்டிய அரசுக்கு உரிமை கொண்டாடுவோன், 'மதுராந்தகன்' என்ற பெயருடன் இருக்க முடியாதல்லவா? சின்னப் பழுவேட்டரையர் அருவிப் பள்ளத்தில் விழுந்ததும், மலை உச்சியில் 'பாண்டியன் அமரபுஜங்கன் நெடுஞ்செழியன் வாழ்க!' என்று எழுந்த கோஷம் அந்தப் பெரிய அருவி விழும் சத்தத்தையும் அடக்கிக்கொண்டு எழுந்தது."

"இம்மாதிரி இரண்டு உரிமையாளரை ஏற்படுத்தி வைப்பதில் ரவிதாஸன் கூட்டத்தாருக்கு என்ன லாபம்?"

"ஒருவனுக்கு ஏதாவது நேர்ந்தால் இன்னொருவன் கையில் இருக்கட்டும் என்றுதான். ஒருவனைக் கொண்டு இலங்கை அரசன் மகிந்தன் உதவியைப் பெறவும், இன்னொருவனைக் கொண்டு சேர மன்னனின் கூட்டுறவைப் பெறவும் அக்கூட்டத்தார் முயற்சிப்பார்கள்..."

"ஐயா! என் சகோதரனும் தாங்களும் சேர்ந்து சதி செய்து உத்தமச் சோழரின் தலையில் மணி மகுடத்தைச் சூட்டினீர்கள். உத்தமச் சோழருக்கு நீங்கள் பெரிய நன்மை செய்து விட்டதாக நான் கருதவில்லை. தற்சமயம் சோழ சாம்ராஜ்யத்தின் பாரத்தை வகிப்பது அவ்வளவு எளிய காரியமாகத் தோன்றவில்லை..."

"சோழ சாம்ராஜ்ய பாரத்தை வகிப்பது தற்சமயம் மிகப் பிரயாசையான காரியந்தான். ஆனால் அதை உத்தமச் சோழரா தாங்கப் போகிறார்? அவர் தமது அன்னைக்கு உதவியாக ஆலயத் திருப்பணியில் ஈடுபட்டுக் காலம் கழிக்கப் போகிறார். சோழ சாம்ராஜ்யத்தைத் தாங்கப் போகிறவரும் பாதுகாக்கப் போகிறவரும் தங்கள் தம்பி அருள்மொழித் தேவர்தான்"

"அது உண்மையே. அருள்மொழிக்கு அதற்கு ஆற்றலும் உண்டு. ஆனாலும் அவன் பிராயத்தில் சிறியவன். அனுபவம் இல்லாதவன். சோழ சாம்ராஜ்யத்தைத் தாங்கி வந்த இருபெரும் வயிரத் தூண்கள் - பழுவூர் அரசர்கள் போய்விட்டார்கள். பெரியவர் நம்மை விட்டே சென்று விட்டார்! தாங்கள் சொல்வதைப் பார்த்தால், சின்னப் பழுவேட்டரையர் பிழைத்து வருவதும் துர்லபம் என்று தோன்றுகிறது..."

"அவர் பிழைத்து வந்தாலும் இராஜ்யத்துக்கு பயன்படமாட்டார். தமது மகளையும் மருமகனையும் நினைத்து நொந்து கொண்டிருப்பார்..."

"சம்புவரையரும் அதே நிலையை அடைந்துவிட்டார். சில தினங்களில் அவருடைய உள்ளமும் உடலும் சோர்ந்து பலவீனமடைந்து விட்டன. மலையமான் முன்னமே முதுகிழவர். தமது பேரர்களில் ஒருவன் இறந்து, இன்னொருவனுக்குப் பட்டமில்லை என்று ஆனதும் அவரும் அடியோடு தளர்ந்து போனார். கொடும்பாளூர்ப் பெரிய வேளாரின் மனம் ஒரு நிலையிலில்லை. அருள்மொழி முடிசூட்டிக் கொள்ளப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்து கடைசி நிமிஷத்தில் தம்மை ஏமாற்றி விட்டதை அவரால் மன்னிக்க முடியவில்லை. வானதியை அருள்மொழி மணந்ததில் கூட அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. இனிமேல் இராஜ்ய விவகாரங்களில் தாம் தலையிடுவதில்லை என்றும் கொடும்பாளூரில் ஆலயத் திருப்பணி செய்யப் போவதாகவும் கூறிவிட்டுப் போய்விட்டார். கடம்பூர் மாளிகையில் நடந்த சதிக்கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற சிற்றரசர்கள் அனைவரும் அவர்கள் ஒன்று நினைக்கக் காரியம் வேறாக முடிந்தது பற்றி வெட்கி மனம் குன்றிப் போனார்கள். ஐயா! அருள்மொழிக்கு உதவி செய்யத் துணைவர்கள் வேண்டும். வாள் வலி - தோள் வலியுடன் அறிவுத் திறமையும் வாய்ந்த உற்ற நண்பர்கள் அவனுக்கு வேண்டும்..."

"நல்ல வேளையாகப் பல்லவப் பார்த்திபேந்திரர் இருக்கிறார்!" என்று சொன்னான் வந்தியத்தேவன்.

"அவருடைய துணை வலியும் அருள்மொழிக்குக் கிடைக்கும் என்று சொல்லுவதற்கில்லை. அவரை ஊரை விட்டு அனுப்பி விட்டு உத்தமச் சோழருக்கு முடிசூட்டியதில் அவருக்குக் கோபம். அதைக் காட்டிலும் அருள்மொழி தன் அந்தரங்கத் தோழராகத் தங்களைப் பாவிப்பது அவருக்குப் பிடிக்கவில்லை..."

"அவருடைய கோபத்துக்கு நியாயம் இருக்கிறது. சோழ குலத்துக்கு அவர் எவ்வளவோ தொண்டு செய்திருக்கிறார். நானோ புதிதாக வந்தவன். அவரிடம் நான் வேணுமானால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்."

குந்தவை சிறிது யோசித்துவிட்டு, "அது எரிகிற தீயில் எண்ணெய் விட்டது போலாகும்" என்று கூறினாள்.

"பார்த்திபேந்திரன் மகா வீரர் அவரைச் சமாதானப்படுத்துவதற்கு வேறு வழி இல்லையா?" என்றான் வந்தியத்தேவன்.

"அவரே அந்த வழியைக் குறிப்பிட்டார் என் தந்தையிடமும் தமது விருப்பத்தைத் தெரிவித்தார்..."

"பார்த்திபேந்திர பல்லவருடைய விருப்பத்தை நிறைவேற்றச் சக்கரவர்த்தி மறுத்திருக்க மாட்டார்.."

"ஆனால் அது சக்கரவர்த்தியைப் பொருத்ததல்ல. அவருடைய மகளைப் பொறுத்தது. அவருடைய மகள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டாள்! ஆம், ஐயா! சிவாலயத்துக்கு மலர் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தவர் திடீரென்று சிங்காதனம் ஏறி மணி மகுடம் சூடிக் கொண்டதைப் பார்த்துப் பல்லவ குலத் தோன்றலுக்குப் பொறுக்கவில்லை. கடலில் படகு விட்டுக்கொண்டிருந்தவள் சிங்காதனம் ஏறியதும் அவருக்குச் சகிக்கவில்லை. பழைய பல்லவ நாட்டுக்குத் தன்னைச் சுதந்திர மன்னனாக்கிச் சிலாசாஸனம் எழுதும் உரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டார்...."

"ஆகா! அது எப்படிக் கொடுக்க முடியும்? சோழ ராஜ்யத்தைச் சின்னாபின்னாப் படுத்துவதாகுமல்லவா?"

"அந்த உரிமை கொடுக்க என் தந்தை சம்மதித்து விட்டார். அத்துடன் பல்லவ குமாரர் நிற்கவில்லை. முன்னொரு சமயம் பல்லவ அரச குமாரி சோழ குமாரன் ஒருவனை மணந்து கொண்டாளாம். அதற்கு ஈடாகச் சுந்தர சோழரின் குமாரியைத் தமக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று கோரினார்!"

இதைக் கேட்டதும் வந்தியத்தேவனின் முகம் மிக்க மன வேதனையைக் காட்டியது. அதை மறைத்துக் கொள்வதற்காக அவன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.

குந்தவையின் முகம் புன்சிரிப்பால் மலர்ந்தது. வேண்டுமென்றே அவள் மேலே ஒன்றும் சொல்லாமலிருந்தாள்.

சற்றுப் பொறுத்து வந்தியத்தேவன், "அதற்குச் சக்கரவர்த்தி என்ன விடை கூறினார்?" என்றான்.

"அதற்குச் சக்கரவர்த்தி எப்படி பதில் கூறமுடியும்? அது அவர் மகள் விருப்பத்தைப் பொறுத்ததல்லவா? சக்கரவர்த்தி தம் மகளைக் கேட்டார்..."

"சக்கரவர்த்தித் திருமகள் அதற்கு என்ன பதில் கூறினார்?"

"பார்த்திபேந்திரனைக் கைபிடிக்கச் சம்மதமில்லை என்று சொல்லி விட்டார்!"

"ஏன்? ஏன்?" என்று வந்தியத்தேவன் கேட்ட குரலில் அடங்காத ஆர்வம் ததும்பியது.

"சக்கரவர்த்தித் திருமகள் காரணம் கூறினாள். தெய்வப் பொன்னி நதி பாயும் புனல் நாட்டை விட்டு, வெளிநாட்டுக்குப் போக விருப்பமில்லை என்று கூறினாள்."

"அது ஒன்றுதானா காரணம்?"

"வேறு காரணமும் இருக்கலாம். அதில் சிரத்தை உள்ளவர்களுக்கு அல்லவா சொல்ல வேணும்? ஏனோதானோ என்று கேட்பவர்களிடம் எதற்காகச் சொல்ல வேண்டும்?" என்றாள் குந்தவை!

"தேவி! அளவில்லாத சிரத்தையுடன் ஆர்வத்துடனும் கேட்கிறேன்."

"அவ்வளவு சிரத்தையும் ஆர்வமும் உள்ளவர்கள் தாங்களாகவே அதைத் தெரிந்து கொள்வார்கள். அவர்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை."

குந்தவையின் முகத்தை அப்போதுதான் முதன் முதலில் பார்ப்பவன் போல் வந்தியத்தேவன் பார்த்தான்.

மின்னலை மின்னல் தாக்கியது. அலையோடு அலை மோதியது. சொர்க்கம் பூமிக்கு வந்தது. மண்ணுலகம் விண்ணுலகம் ஆயிற்று. விழிக்கோணத்தில் விஷமப் புன்சிரிப்புடன் குந்தவை "ஒரு பெண்ணின் மனத்தில் உள்ளதை அறிய முடியாமல் அவள் வாயினால் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஆண் மகனைப் பற்றி என்னவென்று நினைப்பது? சோழ சாம்ராஜ்யத்தின் பகைவர்களுடைய தந்திரச் சூழ்ச்சிகளையெல்லாம் அவர் அறிந்துகொள்ள முடியும் என்று எவ்விதம் எதிர்பார்ப்பது?" என்றாள்.

வந்தியத்தேவன் சற்று நேரம் மேலும் கீழும் பார்த்து விட்டு "தேவி! பழம்பெரும் பல்லவ குலத்தில் வந்த பார்த்திபேந்திரன் கோரிய அதே கோரிக்கையைத் தங்குவதற்கு ஒரு குடிசை நிழலும் இல்லாத அனாதை வாலிபன் ஒருவன் வெளியிட்டால், அதைப் பற்றிச் சக்கரவர்த்தி என்ன நினைப்பார்?" என்றான்.

"அவர் என்ன நினைத்தாலும், தம் மகளுடைய விருப்பம் என்னவென்று கேட்பார். அதன்படியே பதில் சொல்லுவார்."

"தேவி! சக்கரவர்த்தியின் திருக்குமாரி என்ன பதில் சொல்லுவாள்?"

"இப்படிச் சுற்றி வளைத்துக் கேட்டுக் கஷ்டப்படுவானேன்? சக்கரவர்த்தியிடம் நேரில் கேட்டுப் பார்த்து விடலாமே? பதில் உடனே தெரிந்து விடுகிறது!" என்றாள் குந்தவை.

"அது எப்படிக் கேட்க முடியும்? ஈழம் முதல் வேங்கி வரையில் ஒரு குடை நிழலில் ஆளும் மன்னர் மன்னனின் திருமகளைத் தனக்கு மணம் செய்து கொடுக்கும்படி ஊரும் பேருமில்லாத வாலிபன் உற்றார் உறவினர் அற்ற அனாதைச் சிறுவன் எப்படித் துணிந்து கேட்க முடியும்?" என்றான் வல்லவரையன்.

"வாணர் குலத்தில் பிறந்த வீரருக்கு இவ்வளவு தன்னடக்கம் எங்கிருந்து வந்தது? முதன் முதலில் தாங்கள் என்னைப் பார்த்தபோது தங்கள் குலப்பெருமை பற்றிக் கூறியதை நான் மறந்து விடவில்லை. சேர சோழ பாண்டியர்களின் அரண்மனைகளில் ஆண் குழந்தைகள் பிறந்தால், அக்குழந்தையின் மார்பு அகலமாயிருந்தால், மாவலி வாணனின் பெயர்கள் எல்லாவற்றையும் அந்தக் குழந்தையின் மார்பில் எழுதலாம் என்று அரசிமார்கள் களிப்படைவார்கள் என்றீர்கள். வாணர் குல மன்னரின் அரண்மனை வாசலில் மூவேந்தர்களும் காத்திருப்பார்கள் என்றும், புலவர்கள் அம்மன்னனிடம் பெற்றுப் போகும் பரிசுகளைப் பார்த்து, 'இது என் குதிரை! இது என் யானை! இரு என் கிரீடம்! இது என் குடை!' என்று அவர்கள் பேசிக் கொள்வார்கள் என்றும் சொன்னீர்கள். அவ்வாறு பெருமையடித்துக் கொண்டவர் இவ்வளவு அடக்கம் கொண்டவரானது ஏன்?"

"தாங்கள் தம்பியின் சினேகந்தான் அதற்குக் காரணம். பழைய குலப் பெருமையைக் கூறிச் சிறப்படையப் பார்ப்பதை அருள்மொழிவர்மர் வெறுக்கிறார். சூரிய குலத்தில் தோன்றியவர்கள் என்றும், கரிகால வளவன் வம்சத்தினர் என்றும், விஜயாலயச் சோழரின் பேரரின் பேரர் என்றும் பெருமை அடித்துக் கொள்வதை நினைத்து அவர் சிரிக்கிறார். ஒரு நாள் அவர் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா? என் குலத்து முன்னோர்கள் இது வரையில் செப்புப் பட்டயமும், சிலாசாஸனமும் எழுதுவிக்கும் போதெல்லாம் சூரிய வம்சத்திலிருந்தும், மனுநீதிச் சோழனிலிருந்தும், சிபிச் சக்கரவர்த்தியிலிருந்தும் தொடங்கி எழுதச் செய்து வந்திருக்கிறார்கள். நான் அரச பீடம் ஏறினால் இந்த வழக்கத்தை மாற்றி விடுவேன். நான் எழுதுவிக்கும் சிலாசாஸனங்களிலும் செப்புப் பட்டயங்களிலும் நான் சாதனை செய்த காரியங்களை மட்டும் பொறிக்கச் செய்வேன். அப்போது அச்சாஸனங்கள் புனைந்துரைகளோ என்ற ஐயத்துக்கு இடந்தராத மெய்க்கீர்த்தியாக விளங்கும்!' என்றார். தேவி! நானும் அவருடைய கருத்தை ஒப்புக்கொண்டேன். பழைய குலப் பெருமை பேசுவதை விட்டுவிட உறுதி கொண்டேன். தங்கள் தந்தையாரிடம் சென்று என் பழைய குலப் பெருமைகளைக் கூறித் தங்கள் கரம்பிடிக்கும் பாக்கியத்தைக் கோரமாட்டேன். அருள்மொழிவர்மரும் நானும் இந்தச் சோழ சாம்ராஜ்யத்தின் மேன்மைக்கு எங்கள் ஆயுளை அர்ப்பணித்திருக்கிறோம். வடக்கே விந்திய பர்வதத்திலும், தெற்கே திரிகோண மலையிலும், மேற்கே லட்சத்தீவிலும், கிழக்கே கடல்களுக்கு அப்பாலுள்ள சாவகத்திலும், கடாரத்திலும், காம்போஜத்திலும் புலிக்கொடியைப் பறக்கச் செய்யத் தீர்மானித்திருக்கிறோம். நாங்கள் மேற்கொண்ட காரியங்களை ஓரளவேனும் சாதித்த பிறகு சுந்தர சோழ சக்கரவர்த்தியிடம் சென்று இதோ நான் அணிந்து வந்திருக்கும் வெற்றி மாலைகளைத் தங்கள் திருக்குமாரியின் கழுத்தில் சூட அனுமதி கொடுங்கள்!' என்று விண்ணப்பித்துக் கொள்வேன். இலங்கைக்குச் சென்று மகிந்தனை வென்று, பாண்டியன் மகுடத்தையும், இந்திரன் ஹாரத்தையும் கொண்டு வந்து இளவரசியின் முன்னால் வைப்பேன். வைத்து விட்டு, 'தங்கள் திருக்கரத்தைப் பிடிப்பதற்கு நான் தகுதியுள்ளவனானால் அந்தப் பாக்கியத்தை எனக்கு அளியுங்கள்!' என்று பெருமையோடு கேட்பேன்..."

"ஐயா! தங்கள் தீர்மானத்தை நான் பாராட்டுகிறேன். தங்களுக்கும் பார்த்திபேந்திரர் மனப்போக்குக்கும் உள்ள வேற்றுமையைக் கண்டு வியந்து மகிழ்கிறேன். ஆனால் ஆண் பிள்ளையாகிய தாங்கள்தான் இவ்வாறெல்லாம் செய்யலாம். வெற்றிகளையும், சாதனைகளையும் கொண்டு வந்து சமர்ப்பிக்கலாம். அவற்றைக் குறித்துப் பெருமையடையலாம். பெண்ணாய்ப் பிறந்தவர்களுக்கு இவை ஒன்றும் சாத்தியமில்லை. அவர்களுக்குத் தேவையும் இல்லை. அரச குலத்துப் பெண்களுக்குச் சுயம்வரம் நடத்தும் வழக்கம் நம் தேசத்தில் வெகு காலம் இருந்து வந்தது. இப்போது ஏனோ மறைந்து விட்டது. ஐயா! என் தந்தை எனக்கு ஒரு சுயம்வரம் நடத்தி அதற்கு இந்தப் பரந்த தேசத்திலுள்ள அத்தனை அரசகுமாரர்களையும் அழைத்திருந்தாரானால், என் கையிலுள்ள மாலையை அவர்கள் யாருடைய கழுத்திலும் போட்டிருக்க மாட்டேன். தஞ்சைக் கோட்டையிலிருந்து தப்பி ஓடி வந்து, பழையாறை ஆலய பட்டரின் துணையுடன் ஓடமேறி ஓடையைக் கடந்து, அரண்மனைத் தோட்டத்துக்குள் புகுந்து என்னைத் தனிமையில் சந்தித்த அனாதை வாலிபர், அத்தனை அரசகுமாரர்களுக்கு மத்தியில் எங்கேயாவது இருக்கிறாரா என்று தேடுவேன். அவருடைய கழுத்திலேதான் என் கையிலுள்ள சுயம்வர மாலையைப் போடுவேன்!"

வந்தியத்தேவனுடைய செவிகளில் ஆயிரம் கிண்கிணிகள் ஒலித்தன. வானத்திலிருந்து பொன் மழை பொழிந்தது. தளிர்களும் மலர்களும் குலுங்கிய மரங்களின் உச்சியில் வர்ணப்பட்டுப் பூச்சிகள் இறகுகளை விரித்து நடனம் புரிந்தன. இதுவரையில் உட்கார்ந்திருந்த வந்தியத்தேவன் எழுந்து நின்றான்.

"நான் கூறியது தங்களுக்குப் பிடிக்கவில்லையா?" என்றாள் குந்தவை.

"நன்றாகக் கேட்டீர்கள். நான் விழித்திருக்கிறேனா, என் காதில் விழுந்ததெல்லாம் உண்மையா, அல்லது கனவு காண்கிறேனா என்று சோதித்தேன். கனவு காணவில்லை. உண்மை தான் என்று தெரிந்து கொண்டேன்! பாற்கடலைக் கடைந்து தேவர்கள் அமுதத்தை அடைந்தார்கள். அதை அருந்தி அமரரானார்கள் என்று கேட்டிருக்கிறேன். தாங்கள் இப்போது கூறிய மொழிகள் என்னை அமுதமுண்டவனாகச் செய்து விட்டன. எனக்குப் புத்துயிர் அளித்து விட்டன!"

குந்தவை அப்போது "ஐயா! ஒன்று மாத்திரம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் போகுமிடங்களில் எத்தனையோ அபாயங்களுக்கு உட்படுவீர்கள். எவ்வளவோ போர்க்களங்களில் போர் செய்வீர்கள். பகைவர்கள் வஞ்சகச் சூழ்ச்சியால் தங்களை மேலுலகம் அனுப்ப முயற்சிப்பார்கள். அப்படி ஏதாவது தங்கள் உயிருக்கு அபாயம் நேர்ந்துவிட்டால், இந்தத் தொல் பெருமை வாய்ந்த சோழ குலத்தில் பிறந்த ஓர் இளவரசி கலியாணம் ஆவதற்கு முன்னாலேயே கைம்பெண் ஆவாள்! இதை மறந்து விடாதீர்கள்!" என்றாள்.

"தேவி! அப்படி ஒன்றும் நிச்சயமாக நேராது. நான்தான் அமுதமுண்டு அமரனாகி விட்டேனே! எனக்கு இனி மரணம் இல்லை! கன இருள் சூழ்ந்த வனாந்தரங்களில் காற்றும் மழையும் கடுகிப் பெய்து நான் திசை தெரியாமல் தடுமாறும் சமயங்களில், தாங்கள் அக்காட்டு மத்தியில் உள்ள வீட்டில் பலகணிக்கு அருகில் விளக்கேற்றி வைத்துக் கொண்டு எனக்காகக் காத்திருப்பீர்கள். அந்த நினைவு எனக்குத் தைரியமளித்துக் காற்று, மழை கனாந்தகாரத்திலிருந்து தப்புவதற்கு துணை செய்யும். அலை கடலின் நடுவில் மரக்கலத்தில் ஏறி நாளும் வாரமும் மாதமும் கணக்கு மறந்து திக்குத் தெரியாமல் மதி மயங்கிக் கதி கலங்கி நிற்கும்போது, ஸப்தரிஷி மண்டலத்தின் அடியில் என்றும் நிலைத்து நின்று சுடர் விட்டு வழி காட்டும் துருவ நட்சத்திரமாகத் தாங்கள் ஒளிவீசுவீர்கள். நான் திசை அறிந்து என் மரக் கலத்தைத் திருப்பிக் கொண்டு வருவேன். கடற்கரை ஓரத்துப் பாறைகளில் மாமலைகள் போன்ற பேரலைகள் தாக்கிக் கடல் கொந்தளித்துக் கொண்டிருக்கும் இரவு நேரங்களில் கலங்கரை விளக்கிலிருந்து வரும் உயிர் காக்கும் ஒளியாகத் தாங்கள் பிரகாசிப்பீர்கள். அந்தப் பிரகாசத்தைக் கொண்டு என் படகு பாறையில் மோதாமல் கரையிலே கொண்டு வந்து சேர்ப்பேன். புல்லும் பூண்டும் முளையாத அகண்டமான பாலைவனப் பிரதேசத்தில் வடவைக் கனல் எனக் கொளுத்தும் வெய்யிலில் அனல் பிழம்பெனச் சுட்டுப் பொசுக்கும் மணலில் நான் தாகத்தினால் நா உலர்ந்து வியர்வைக் கால்கள் வறண்டு தவித்துத் தத்தளிக்கும் நேரங்களில் தென்னை மரங்களும், தேன் கதலிகளும் சூழ்ந்த ஜீவ நதி ஊற்றாகத் தாங்கள் எனக்கு உதவுவீர்கள். தேவி! இந்த விரிந்து பரந்த உலகத்தில் நான் எங்கே போனாலும் எத்தனை கஷ்டங்களுக்கு உட்பட்டாலும் ஒரு நாள் கட்டாயம் திரும்பி வருவேன். திரும்பி வந்து தங்களைக் கரம் பிடித்து மணந்து கொள்வேன். இந்த என் மனோரதம் நிறைவேறும் வரையில் என்னை யமன் நெருங்க மாட்டான். அமுதமுண்ட அமரனாக இருப்பேன்!"

இவ்விதம் வந்தியத்தேவன் தன் வாழ்க்கையில் என்றும் பேசி அறியாதவாறு பேசிவிட்டு உட்கார்ந்தான். இளைய பிராட்டி மெய்மறந்து அவன் முகத்தைப் பார்த்த வண்ணமிருந்தாள். இந்த வார்த்தைகளையெல்லாம் இந்த வீரன் முதல் முறையாகத் தன்னிடம் சொல்லவில்லையென்றும், எத்தனை எத்தனையோ ஆண்டுகளுக்கு முற்பட்ட யுக யுகாந்திரங்களில் எவ்வளவோ தடவை இதே சொற் பிரவாகத்தை இவனிடம் கேட்டிருப்பதாகவும் அவளுக்குத் தோன்றியது.

இந்தச் சித்தப்பிரமையின் விசித்திரத்தைப் பற்றி அவள் சிந்தித்துக் கொண்டிருந்தபோது "அக்கா! அக்கா!" என்ற வானதியின் குரல் கேட்டது. இருவரும் திரும்பி பார்த்தார்கள்.

வானதி விரைந்து அவர்கள் அருகில் வந்து, "அக்கா! இவருக்கு ஓர் அவசர ஓலை வந்திருக்கிறது. மணிமேகலையின் தமையன் கந்தமாறனிடமிருந்து வந்திருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டே ஓலையை நீட்டினாள்.