பொன்னியின் செல்வன்/புது வெள்ளம்/பராந்தகர் ஆதுரசாலை

புது வெள்ளம் - அத்தியாயம் 50

தொகு

பராந்தகர் ஆதுரசாலை

மறு நாள் காலையில் சூரிய பகவான் உதயமாகி உலகத்தை ஒளிமயமாகச் செய்து கொண்டிருந்தார். சூரியனுடைய செங்கிரணங்கள் பழையாறை அரண்மனைகளின் பொற்கலசங்களின் மீது விழுந்து தகதகா மயமாய்ச் செய்து கொண்டிருந்தன. குந்தவைப் பிராட்டியின் மாளிகை முன்றிலில் அம்பாரி வைத்து அலங்கரித்த மாபெரும் யானை ஒன்று வந்து நின்றது. குந்தவையும் வானதியும் மாளிகையின் உள்ளேயிருந்து வெளி வந்து மேடைப் படிகளின் மீது ஏறி யானையின் மேல் ஏறிக் கொண்டார்கள். படை வீடுகளுக்கு நடுவில் இருந்த பராந்தக சோழர் ஆதுர சாலையை நோக்கி யானைப் பூமி அதிரும்படி நடந்து சென்றது. யானைப் பாகன் அதனருகில் நடந்து, அதன் நடை வேகத்தைக் குறைத்து அழைத்துச் சென்றான். யானையின் மணி ஓசையைக் கேட்டு நகர மாந்தர் தத்தம் வீடுகளுக்குள்ளேயிருந்து விரைந்து வெளி வந்து பார்த்தார்கள். பெண்ணரசிகள் இருவரையும் கண்டதும் அவர்கள் முகமலர்ந்து கைகூப்பி நின்று முகமன் செலுத்தினார்கள்.

மற்ற வீதிகளைக் கடந்து, யானை, படை வீடுகள் இருந்த நகரத்தின் பகுதியை அடைந்தது. அந்த வீதிகளின் தோற்றமே ஒரு தனி மாதிரியாகத்தான் இருந்தது. கொழுத்த சேவற் கோழிகள் ஒன்றையொன்று சண்டைக்காகத் தேடிக் கொண்டு சென்றன. வளைந்து சுருண்ட கொம்புகளையுடைய ஆட்டுக் கடாக்கள் "போருக்கு வருவோர் யாரேனும் உண்டோ?" என்ற பாவனையுடன் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு நின்றன. ரோஸம் மிகுந்த வேட்டை நாய்களைத் தோல் வாரினாலும் மணிக் கயிறுகளினாலும் வீட்டு வாசல் தூண்களில் பிணைத்திருந்தார்கள். சின்னஞ் சிறு பிள்ளைகள் கைகளில் மூங்கில் கழி பிடித்து ஒருவரோடொருவர் சிலம்பம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சிலம்பக் கழிகள் மோதிக் கொண்ட போது, 'சடசடா படபடா' என்ற ஓசைகள் எழுந்தன.

வீடுகளின் திண்ணைச் சுவர்களிலே காவிக் கட்டிகளினால் விதவிதமான சித்திரக் காட்சிகள் வரையப்பட்டிருந்தன. பெரும்பாலும் அவை முருகப் பெருமானுடைய லீலைகளையும், சோழ மன்னர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் சித்திரித்தன.அவற்றில் யுத்தக் காட்சிகளே அதிகமாயிருந்தன. முருகப் பெருமான் சூரபதுமாசுரனுடைய தலைகளை முளைக்க முளைக்க வெட்டித் தள்ளிய காட்சியும், துர்க்கா பரமேசுவரி மகிஷாசுரனை வதம் செய்த காட்சியும் மிகப் பயங்கரமாக எழுதப்பட்டிருந்தன. தெள்ளாறு, தஞ்சை, குடமூக்கு, அரிசிலாறு, திருப்புறம்பயம், வெள்ளூர், தக்கோலம், சேவூர் முதலிய போர்க்களங்களில் சோழ நாட்டு வீரர்கள் நிகழ்த்திய அற்புத பராக்கிரமச் செயல்கள் திண்ணைச் சுவர்களில் தத்ரூபமாகக் காட்சி அளித்தன.

இந்தப் படை வீட்டு வீதிகளில் இளவரசிகள் ஏறியிருந்த யானை வந்ததும் ஒரே அல்லோல கல்லோலமாயிற்று. சேவல்கள் இறகுகளைச் சடசடவென்று அடித்துக் கொண்டு பறந்து, கூரை மீது உட்கார்ந்து கூவின. பிள்ளைகள் ஒருவரையொருவர் கூச்சலிட்டு அழைத்துக் கொண்டு ஓடினார்கள். அவரவர்களின் வீட்டுக் கதவுகளைத் தட்டி உள்ளேயிருந்தவர்களுக்குச் செய்தி அறிவித்தார்கள்.

படை வீட்டு வீதிகள் வழியாக யானை சென்றபோது வீட்டு வாசல்தோறும் பெண்களும் குழந்தைகளும் முதியோர்களும் நின்று "இளையபிராட்டி குந்தவை தேவி வாழ்க!" "சுந்தர சோழரின் செல்வத்திருமகள் வாழ்க!" என்று வாழ்த்தி மகிழ்ந்தார்கள். அவர்களில் சிலர் யானையைத் தொடர்ந்து செல்லவும் ஆரம்பித்தார்கள். வரவர இக்கூட்டம் அதிகமாகி வந்தது. பலவித வாழ்த்தொலிகள் மூலமாகத் தங்கள் மகிழ்ச்சியை அவர்கள் வெளியிட்டுக் கொண்டு வந்தார்கள்.

அப்படை வீடுகளில், இலங்கைக்குப் போர் புரியச் சென்றிருந்த வீரர்களின் பெண்டு பிள்ளைகளும் பெற்றோர்களும் அச்சமயம் வசித்து வந்தார்கள் என்பதை முன்னமே குறிப்பிட்டிருக்கிறோம். அவர்களுடைய நலத்துக்காக ஒரு மருத்துவச் சாலையைக் குந்தவை தன் சொந்த நில மான்யங்களின் வருமானத்தைக் கொண்டு ஸ்தாபித்திருந்தாள். சோழ குலத்தாரிடம் தம் முன்னோர்களைப் போற்றும் வழக்கம் சிறப்பாக இருந்து வந்தது. குந்தவையின் மூதாதைகளில் அவளுடைய பாட்டனாரின் தந்தையான முதற் பராந்தக சக்கரவர்த்தி மிகப் பிரசித்தி பெற்றவர். அவருடைய பெயர் விளங்கும்படி குந்தவை தேவி இந்தப் 'பராந்தகர் ஆதுரசாலை'யை ஸ்தாபித்து நடத்தி வந்தாள். அடிக்கடி அந்த வைத்திய சாலைக்கு வரும் வியாஜத்தை வைத்துக் கொண்டு போர் வீரர்களின் குடும்பத்தாருடைய க்ஷேமலாபங்களைப் பற்றி அவள் விசாரிப்பது வழக்கம்.

ஆதுர சாலைக்கு அருகில் வந்து சேர்ந்ததும் யானை நின்றது. முன்னங் கால்களை முதலில் மடித்துப் பிறகு பின்னங் கால்களையும் மடித்து அது தரையில் படுத்துக் கொண்டது. பெண்ணரசிகள் இருவரும் யானை மேலிருந்து பூமியில் இறங்கினார்கள்.

யானை சிறிது நகர்ந்து அப்பால் சென்றதும் ஜனக் கூட்டம், - முக்கியமாகப் பெண்கள் - குழந்தைகளின் கூட்டம் தேவிமார்களை நெருங்கிச் சூழ்ந்து கொண்டது.

"ஆதுர சாலை உங்களுக்கெல்லாம் உபயோகமாயிருக்கிறதல்லவா? வைத்தியர்கள் தினந்தோறும் வந்து தேவையானவர்களுக்கு மருந்து கொடுத்து வருகிறார்கள் அல்லவா?" என்று இளவரசி கேட்டாள்.

"ஆம், தாயே! ஆம்!" என்று பல குரல்கள் மறுமொழி கூறின.

"மூன்று மாதமாக இருமலினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். ஒரு வாரம் வைத்தியரிடம் மருந்து வாங்கிச் சாப்பிட்டதில் குணமாகி விட்டது!" என்றாள் ஒரு பெண்மணி.

"அம்மா! என் மகன் மரத்தின் மேல் ஏறி விழுந்து காலை ஒடித்துக் கொண்டான். வைத்தியர் கட்டுப் போட்டு விட்டுப் பதினைந்து நாள் மருந்து கொடுத்தார். சுகமாகி விட்டது. இப்போது துள்ளி ஓடி விளையாடுகிறான். மறுபடி மரத்தின் மேல் ஏறவும் ஆரம்பித்து விட்டான்!" என்றாள் இன்னொரு ஸ்திரீ.

"என் தாயாருக்குக் கொஞ்ச காலமாகக் கண் மங்கலடைந்து வந்தது. ஒரு மாதம் இந்த ஆதுர சாலைக்கு வந்து மருந்து போட்டுக் கொண்டு வந்தாள். இப்போது கண் அவளுக்கு நன்றாய்த் தெரிகிறது!" என்றாள் இளம் பெண் ஒருத்தி.

"பார்த்தாயா வானதி! நம் தமிழகத்தில் வாழ்ந்த முன்னோர்கள் எப்பேர்ப்பட்டவர்கள்? இன்ன வியாதியை இன்ன மூலிகையினால் தீர்க்கலாம் என்று அவர்கள் எப்படித்தான் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை!" என்றாள் குந்தவைப்பிராட்டி.

"ஞானக் கண் கொண்டு பார்த்துத் தான் அவர்கள் இவ்வளவு அதிசயமான மருந்துகளைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். வேறு எப்படி முடியும்?" என்றாள் வானதி.

"எவ்வளவோ அதிசயமான மருந்துகளை அவர்கள் கண்டுபிடித்திருப்பது உண்மைதான். ஆனால் உன்னைப் போல் மனோவியாதியினால் வருந்துகிறவர்களுக்கு மருந்து ஒன்றும் கண்டுபிடிக்கவில்லையே? என்ன செய்வது?"

"அக்கா! எனக்கு ஒரு மனோவியாதியும் இல்லை. கருணை கூர்ந்து இவ்விதம் அடிக்கடி சொல்லாதிருங்கள்! என் தோழிகள் ஓயாது என்னைப் பரிகசித்து என் பிராணனை வாங்குகிறார்கள்!"

"நன்றாக வேண்டுமடி உனக்கு! உலகத்தில் ஒரு கவலையும் இல்லாமல் வாழ்ந்து வந்த என் தம்பியின் மனம் பேதலிக்கும்படி செய்து விட்டாய் அல்லவா? ஒவ்வொரு தடவையும் இலங்கையிலிருந்து ஆள் வரும்போதெல்லாம் உன் உடம்பு எப்படியிருக்கிறது என்று கேட்டு அனுப்புகிறானே!" என்றாள் இளையபிராட்டி.

இதற்குள் "வைத்தியருக்கு வழி விடுங்கள்! வைத்தியருக்கு வழி விடுங்கள்!" என்று கோஷம் கேட்டது.அங்கே சூழ்ந்து நின்றவர்களைக் காவலர்கள் விலக்கினார்கள். ஆதுர சாலையின் வயது முதிர்ந்த தலைமை வைத்தியர் வந்து இளவரசிகளை வரவேற்று உபசரித்தார்.

"வைத்தியரே! கோடிக்கரைப் பக்கத்துக் காடுகளில் சில உயர்ந்த மூலிகைகள் இருக்கின்றனவென்று சொன்னீர் அல்லவா? அங்கே போய் வருவதற்காக ஒரு வாலிப வீரரை அனுப்பினேனே? அவர் வந்தாரா?" என்று குந்தவை கேட்டாள்.

"ஆம், தாயே! அந்தச் சூடிகையான இளம் பிள்ளை வந்தான். ஈசான சிவபட்டர் அழைத்துக் கொண்டு வந்தார். அவனுடன் என் மகன் ஒருவனை அனுப்பி வைக்கிறேன். என் மகன் கோடிக்கரையிலிருந்து திரும்பி வந்து விடுவான். தாங்கள் அனுப்பிய வீரன் இலங்கைத் தீவுக்கும் போய் வருவதாகச் சொல்கிறான்....."

"இலங்கையிலிருந்து கூடவா மூலிகை கொண்டு வர வேண்டும்!" என்று வானதி கேட்டாள்.

"ஆம் தாயே! லக்ஷ்மணருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக அனுமார் சஞ்சீவி பர்வதம் கொண்டு வந்த போது கோடிக்கரை வழியாகத் தான் கடலைத் தாண்டினாராம். அப்போது சஞ்சீவி மலையிலிருந்து சில மூலிகைகள் கோடிக்கரைக் காட்டில் விழுந்தபடியால் தான் அங்கே இன்றைக்கும் நல்ல மூலிகைகள் கிடைக்கின்றன. இலங்கையில் சஞ்சீவி பர்வதமே இருந்தபடியால் அங்கே இன்னும் அபூர்வமான மூலிகைகள் கிடைக்கும் அல்லவா? நான் எதிர் பார்க்கும் மூலிகைகள் மட்டும் கிடைத்து விட்டால், சக்கரவர்த்தியின் நோயை நானே கட்டாயம் குணப்படுத்தி விடுவேன்....."

"கடவுள் கிருபையினால் அப்படியே ஆகட்டும். இப்போது அந்த வாலிபர்கள் இருவரும் எங்கே?"

"உள்ளே இருக்கிறார்கள், அம்மா! பிரயாணத்துக்கு ஆயத்தமாகத் தங்களிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்படக் காத்திருக்கிறார்கள்!"

தலைமை மருத்துவர் அழைத்துச் செல்ல இளவரசிகள் இருவரும் ஆதுர சாலைக்குள் சென்றார்கள். அங்கே தாழ்வாரங்களில் மருந்து வாங்கிக் கொண்டு வந்தவர்களையும் மருந்துக்காகக் காத்திருப்பவர்களையும் பார்த்துக் கொண்டு நடந்தார்கள். அவர்கள் அனைவரும் குந்தவைப்பிராட்டியைப் பார்த்ததும் அகமும் முகமும் மலர்ந்து இவ்வளவு நல்ல மருத்துவ சாலையைத் தங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்ததற்காக இளவரசியை வாழ்த்தினார்கள்.

தலைமை மருத்துவரின் அறையில் இருவர் காத்திருந்தனர். அவர்களில் நம் வந்தியத்தேவன் புதிய முறையில் உடை அணிந்திருந்ததைப் பார்த்து இளையப்பிராட்டி புன்னகை பூத்தாள். வானதிக்கும் அவ்வீரனை ஒருவாறு அடையாளம் தெரிந்து விட்டது. குந்தவையின் காதோடு, "அக்கா! குடந்தை ஜோதிடரின் வீட்டில் பார்த்தவர் மாதிரி இருக்கிறதே!" என்றாள்.

"அவர் மாதிரிதான் எனக்கும் தோன்றுகிறது. ஜோதிடரைப் பார்த்த பிறகு வைத்தியரிடம் வந்திருக்கிறார். உன் மாதிரியே இவருக்கும் ஏதாவது சித்தக் கோளாறு போலிருக்கிறது!" என்று சொல்லிவிட்டு, வந்தியத்தேவனைப் பார்த்து, " ஏன் ஐயா! சக்கரவர்த்தியின் உடல் நலத்துக்காக மூலிகை கொண்டு வருவதற்கு இலங்கைக்குப் போக ஒப்புக் கொண்டவர் நீர்தானா?" என்று கேட்டாள்.

வந்தியத்தேவனுடைய கண்களும் கண்ணிமைகளும் வேறு ஏதோ இரகசிய பாஷையில் பேசின. அவன் வாயினால், "ஆம், இளவரசி! நான்தான் இலங்கைக்குப் போகிறேன். ஒருவேளை அங்கு இளவரசரைப் பார்த்தாலும் பார்ப்பேன். அவருக்கு ஏதாவது செய்தி சொல்ல வேண்டுமா?" என்று கேட்டான்.

"பார்த்தால் அவசியம் இந்தச் செய்தியைச் சொல்லுவீர். கொடும்பாளூர் இளவரசி வானதிக்கு உடம்பு சரியாகவே இல்லை. அடிக்கடி நினைவு இழந்து மூர்ச்சை போட்டு விழுகிறாள். இளவரசியைச் சுயப் பிரக்ஞையோடு பார்க்க வேண்டுமானால் உடனே புறப்பட்டு வர வேண்டும் என்பதாகத் தெரிவிக்க வேண்டும்" என்றாள் இளையபிராட்டி.

"அப்படியே தெரிவிக்கிறேன், அம்மணி!" என்று கூறி வந்தியத்தேவன் வானதியை நோக்கினான்.

குந்தவையின் வார்த்தைகளைக் கேட்டதும் உண்டான நாணத்தினால் வானதியின் இனிய முகம் இன்னும் பன் மடங்கு அழகு பெற்றுப் பொலிந்தது. பொங்கி வந்த நாணத்தையும் கூச்சத்தையும் சமாளித்துக் கொண்டு வானதி தட்டுத் தடுமாறி, "ஐயா! அப்படியொன்றும் தாங்கள் சொல்லி விடவேண்டாம். ரொம்பவும் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். கொடும்பாளூர் வானதி, இளையபிராட்டியின் போஷணையில் தினம் நாலு வேளை உண்டு உடுத்துச் சுகமாக இருப்பதாகத் தெரியப்படுத்துங்கள்" என்றாள்.

"அப்படியே தெரிவித்து விடுகிறேன், அம்மணி!" என்றான் வந்தியத்தேவன்.

"அழகாயிருக்கிறது! நான் கூறியதையும் 'அப்படியே தெரிவிக்கிறேன்' என்றீர். இவள் சொன்னதையும் 'அப்படியே தெரிவிக்கிறேன்' என்று ஒப்புக் கொள்கிறீரே? இரண்டில் ஏதாவது ஒன்றுதானே உண்மையாக இருக்க முடியும்?"

"அதனால் என்ன, அம்மணி! வாதி கூறியதையும் பிரதிவாதி சொன்னதையும் அப்படி அப்படியே நான் சொல்லி விடுகிறேன். எது உண்மை, எது இல்லை என்பதை இளவரசரே நீதிபதியாக இருந்து தீர்மானித்துக் கொள்ளட்டும்!" என்று சொன்னான் வந்தியத்தேவன்.

"ஆனால் ஒருவர் சொன்னதை இன்னொருவர் சொன்னதாக மட்டும் மாற்றிச் சொல்லி விடவேண்டாம்! உமக்குப் புண்ணியம் உண்டு!" என்றாள் வானதி.

குந்தவை இந்தப் பேச்சை அத்துடன் நிறுத்த விரும்பி, "வைத்தியரே! அரண்மனைத் திருமந்திர அதிகாரியிடமிருந்து இவர்களுக்குக் கொடுத்து அனுப்ப ஓலை கிடைத்ததா?" என்று கேட்டாள்.

"கிடைத்தது தாயே! 'சக்கரவர்த்திக்கு வைத்தியம் செய்வதற்காக இவர்கள் மூலிகை கொண்டு வரப்போவதால் வழியிலுள்ள அரசாங்க அதிகாரிகள் எல்லாரும் இவர்கள் கோரும் உதவி செய்ய வேண்டும்' என்று பொதுவாக ஓர் ஓலையும், கோடிக்கரைக் கலங்கரைவிளக்கக் காவலருக்குத் தனியாக ஓர் ஓலையும் கிடைத்தன. இவர்களிடம் கொடுத்து விட்டேன்!" என்றார் வைத்தியர்.

"அப்படியானால் ஏன் தாமதம்? உடனே புறப்பட வேண்டியதுதானே?" என்றாள் இளையபிராட்டி குந்தவை.

"ஆம்; புறப்பட வேண்டியதுதான்!" என்றான் வந்தியத்தேவன்.

ஆனால் உடனே புறப்பட்டு விடும் காரியம் அவ்வளவு சுலபமாக இல்லை.

மருத்துவ சாலையிலிருந்து அவர்கள் வெளியேறி வெளியில் வந்தார்கள். அரச குமாரிகளை ஏற்றிச் செல்ல அம்பாரி யானை காத்திருந்தது. வந்தியத்தேவனையும் அவனுடைய துணைவனையும் ஏற்றிக் கொண்டு காற்றாகப் பறந்து செல்வதற்கு அரண்மனைக் குதிரைகள் இரண்டு துடிதுடித்துக் கொண்டு நின்றன.

ஆனால் வந்தியத்தேவனுக்குத் திடீர் திடீர் என்று ஏதாவது சந்தேகம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. குந்தவைக்கும் புதிது புதிதாக எச்சரிக்கை செய்வதற்கு ஏதேனும் விஷயம் தோன்றிக் கொண்டிருந்தது. போகும் வழியில் அவர்களுக்கு ஏற்படக் கூடிய அபாயங்களைப் பற்றிக் குந்தவை முக்கியமாக எச்சரிக்கை செய்தாள்.

அரசகுமாரிகள் அம்பாரி யானை மீது ஏறிக் கொண்டார்கள். பிறகு வந்தியத்தேவனும் அவனுடைய துணைவனும் குதிரைகள் மீது ஏறினார்கள்.

யானை புறப்படுகிற வழியாகத் தோன்றவில்லை. நெடுந்தூரம் பிரயாணம் போகிறவர்கள்தான் முதலில் புறப்பட வேண்டும் என்று குந்தவை குறிப்பினால் தெரியப்படுத்தினாள்.

வந்தியத்தேவன் மனமின்றித் தயக்கத்துடன் குதிரையைத் திருப்பினான். இன்னும் ஒரு முறை ஆவல் ததும்பிய கண்களுடன் இளவரசியைத் திரும்பிப் பார்த்தான். பிறகு குதிரையின் பேரில் கோபங்கொண்டவன் போல் சுளீர் என்று ஓர் அடி கொடுத்தான். ரோஸம் மிகுந்த அந்தக் குதிரை நாலு கால் பாய்ச்சலில் பிய்த்துக் கொண்டு பறந்து சென்றது. அவனைத் தொடர்ந்து போவதற்கு வைத்தியரின் புதல்வன் திணற வேண்டியிருந்தது.

யானை திரும்பிச் செல்லத் தொடங்கிய பிறகு குந்தவை சிந்தனையில் ஆழ்ந்தாள். இந்த மனதுதான் என்ன விசித்திரமான இயல்பை உடையது? மன்னாதி மன்னர்களையும் வீராதி வீரர்களையும் நிராகரித்த இந்த மனது வழிப்போக்கனாக வந்த இவ்வாலிபனிடம் ஏன் இவ்வளவு சிரத்தை கொள்கிறது? இவன் ஏற்றுக் கொண்ட காரியத்தை வெற்றியுடன் முடித்துக் கொண்டு பத்திரமாய்த் திரும்ப வேண்டுமே என்று ஏன் இவ்வளவு கவலைப்படுகிறது?.....

"அக்கா! என்ன யோசிக்கிறீர்கள்?" என்ற வானதியின் குரல் குந்தவையை இந்த உலகத்துக்குக் கொண்டு வந்தது.

"ஒன்றுமில்லை வானதி! அந்த வாலிபனுடைய அகம்பாவ சுபாவத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அவனிடம் என் தம்பிக்கு ஏன் செய்தி சொல்லி அனுப்பினோம் என்று இப்போது தோன்றுகிறது......."

"ஆம், அக்கா! அவன் ரொம்பப் பொல்லாதவன்தான்! பெரிய கொள்ளைக்காரன் என்று கூடச் சொல்லத் தோன்றுகிறது......."

"அது என்ன? கொள்ளைக்காரன் என்று எதனால் சொல்கிறாய்?"

"சாதாரண கொள்ளைக்காரர்கள் பொன் வெள்ளி முதலிய பயனற்ற பொருள்களைக் கொள்ளையடிப்பார்கள். இந்த வாலிபன் சோழ வள நாட்டின் குல தெய்வத்தையே கொள்ளையடித்துக் கொண்டு போய் விடுவான் என்று எனக்குப் பயமாயிருக்கிறது. தாங்கள் அதற்கு இடங்கொடுக்க மாட்டீர்கள் அல்லவா?" என்று வானதி கூறினாள்.

"அடி கள்ளி! உன்னைப் போல் என்னையும் நினைத்து விட்டாயா? அப்படியெல்லாம் ஒருநாளும் நடவாது!" என்றாள் குந்தவை.

யானை திரும்பிச் சிறிது தூரம் சென்றபோது வீதியில் ஓரிடத்தில் பெண்கள் பலர் கூட்டம் கூடி நிற்பதை அரசிளங்குமரிகள் பார்த்தார்கள்.யானையை நிறுத்தச் செய்து விட்டு, "ஏன் கூட்டம் கூடி நிற்கிறீர்கள்? ஏதாவது சொல்ல வேண்டுமா?" என்று இளையபிராட்டி குந்தவை கேட்டாள்.

அந்தப் பெண்களில் ஒருத்தி முன் வந்து, "தாயே! இலங்கையில் உள்ள எங்கள் புருஷர்களைப் பற்றி ஒரு செய்தியும் இல்லையே! அவர்களுக்கு இங்கிருந்து அரிசி அனுப்பக் கூடாதென்று தஞ்சாவூர்க்காரர்கள் தடுத்து விட்டார்களாமே? வயிற்றுக்குச் சாப்பாடு இல்லாமல் எப்படி அம்மா, அவர்கள் சண்டை போட முடியும்?" என்று கேட்டாள்.

"அதற்காக நீங்கள் கவலைப்படவேண்டாம். மாமல்லபுரம் துறைமுகத்திலிருந்து அவர்களுக்கு வேண்டிய தானியம் போய்க் கொண்டிருக்கிறது. தஞ்சாவூர்க்காரர்கள் என்ன செய்தாலும், உங்கள் இளவரசர் சும்மா விட்டு விடுவாரா? சோழ நாட்டு மகாவீரர்கள் பட்டினி கிடக்கும்படி பார்த்துக் கொண்டிருந்து விடுவாரா!" என்றாள் இளையபிராட்டி.

வேறொரு சந்தர்ப்பமாயிருந்தால், குந்தவை அங்கேயே இறங்கி அந்தப் பெண்களுக்கு மேலும் சமாதானம் சொல்லியிருப்பாள்.இப்போது அவளுடைய மனம் வேறுவிதமான சஞ்சலத்துக்கு உள்ளாகியிருந்த படியால் தனிமையை விரும்பினாள். யானை அரண்மனையை நோக்கிச் சென்றது.