பொன்னியின் செல்வன்/மணிமகுடம்/கடம்பூரில் கலக்கம்
மணிமகுடம் - அத்தியாயம் 37
தொகுகடம்பூரில் கலக்கம்
ஆதித்த கரிகாலன் கடம்பூர் மாளிகைக்கு வந்ததிலிருந்து அம்மாளிகையில் நிரந்தரமாக வசித்தவர்களும் விருந்தினராக வந்தவர்களும் முள்ளின் மேல் நிற்பவர்கள் போலவும் நெருப்பின் மேல் நடப்பவர்கள் போலவும் காலங்கழிக்க வேண்டியிருந்தது. இளவரசரின் நாவிலிருந்து எந்த நிமிஷத்தில் எந்தவிதமான அஸ்திரம் புறப்படும் என்று யாராலும் ஊகிக்க முடியவில்லை. ஆகையால் எல்லாரும் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தார்கள்.
சோழ சிம்மாசனத்தில் மதுராந்தகனை ஏற்றி வைப்பதற்குச் செய்யப்படும் சதியாலோசனை பற்றிக் கரிகாலன் அடிக்கடி ஜாடைமாடையாகக் குறிப்பிட்டு மற்றவர்களைத் துடிதுடிக்கச் செய்து வந்தான். பழுவேட்டரையரால் இதைப் பொறுக்க முடியவில்லை. சிற்றரசர்களின் அபிப்பிராயத்தைக் கரிகாலனிடம் வெளிப்படையாகச் சொல்லிவிட வேண்டியதுதான் என்று சம்புவரையரிடம் வற்புறுத்தினார். சம்புவரையரோ, "கொஞ்சம் பொறுங்கள்; எப்படியும் நமது விருந்தாளியாக வந்திருக்கிறான்; வெறும் முரடனாகவும் இருக்கிறான். ஒன்று நினைக்க வேறொன்றாக முடிந்தால் என்ன செய்கிறது? நல்ல சமயம் பார்த்துச் சொல்வோம்" என்று தள்ளிப் போட்டு கொண்டேயிருந்தார்.
எப்படி அந்தப் பேச்சை ஆரம்பிப்பது என்ற தர்மசங்கடத்தை அவர்களுக்கு வைக்காமல் ஆதித்த கரிகாலனே ஒரு நாள் எல்லாரும் சேர்ந்திருந்த சமயத்தில் பட்டவர்த்தனமாக அதைப் பற்றிக் கேட்டு விட்டான்.
"பழுவூர்ப் பாட்டனிடமும் கடம்பூர் மாமனிடமும் ஒரு முக்கியமான விஷயத்தில் யோசனை கேட்பதற்காகவே நான் இங்கு வந்தேன். அதை இப்போது கேட்டுவிடுகிறேன். மூன்று வருஷங்களுக்கு முன் என் தகப்பனார் என்னைச் சோழ ராஜ்யத்தின் பட்டத்து இளவரசனாக்கிப் பகிரங்கமாக முடிசூட்டினார். அதற்கு நீங்கள் எல்லாரும் சம்மதம் கொடுத்தீர்கள். இப்போது சக்கரவர்த்தி தம் அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. மதுராந்தகனைச் சிம்மாசனத்தில் ஏற்றி வைத்து முடிசூட்ட வேண்டும் என்று விரும்புகிறாராம். அதற்காகவே தஞ்சாவூருக்கு வரும்படியாக எனக்கு அழைப்புக்கு மேல் அழைப்பு அனுப்பிக் கொண்டிருக்கிறார். நானும் போகாமல் தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறேன். எதற்காகத் தஞ்சாவூர் போகவேண்டும்? போய் என் தந்தையின் வார்த்தையை நேருக்கு நேர் ஏன் புறக்கணிக்க வேண்டும்? அதைவிடப் போகாமலிருந்துவிடுவதே நல்லது அல்லவா? பழுவூர்ப் பாட்டா! கடம்பூர் மாமா! நீங்கள் பெரியவர்கள். எல்லா நியாயமும் தெரிந்தவர்கள் நீங்களே சொல்லுங்கள். இராஜ்யத்தை மதுராந்தனுக்கு விட்டுக் கொடுத்துவிடும்படி என் தந்தை இத்தனை காலத்துக்குப் பிறகு என்னைக் கேட்பது நியாயமாகுமா? அதை நான் மறுதளித்தல் குற்றமாகுமா?" என்று ஆதித்த கரிகாலன் திட்டவட்டமாகக் கேட்டதும், எல்லாருமே திகைத்துப் போனார்கள்.
பழுவேட்டரையர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு, பதில் சொல்லச் சிறிது காலம் கடத்தலாம் என்று எண்ணி, "கோமகனே! இந்த விஷயமாகத் தங்கள் திருக்கோவலூர்ப் பாட்டனை யோசனை கேட்டிருப்பீர்களே? மலையமான் என்ன சொல்கிறார்?" என்றார்.
"ஆகா! அந்தக் கிழவனாரின் இயல்புதான் உங்களுக்கெல்லாம் தெரியுமே? அவருடைய பேரப்பிள்ளை சிம்மாசனத்தை இன்னொருவனுக்கு விட்டுக் கொடுத்துவிட அவர் சம்மதிப்பாரா? அதைக் காட்டிலும் என்னையும், என்னைப் பெற்ற தாயையும் சேர்த்து அவர் வெட்டிப்போட்டு விடுவார்! இப்போது மலையமான் சைன்யம் சேர்க்கத் தொடங்கி விட்டார் - அவருடைய பேரனுடைய சிங்காதன உரிமையை நிலைநாட்டுவதற்காக! ஆனால் நான் அவருடைய பேச்சைக் கேட்டு மட்டும் நடக்கப் போவதில்லை. நீங்கள் எல்லாரும் எப்படிச் சொல்கிறீர்களோ, அப்படி நடந்து கொள்வேன்!" என்று கரிகாலன் மிக்க சாதுப் பிள்ளையைப் போல் கூறினான்.
இதனால் ஏமாந்துபோன பழுவேட்டரையர், "மலையமானைப் போல் தந்தையைத் தனயன் எதிர்க்கும்படி தூண்டி விடக்கூடியவர்கள் நாங்கள் அல்ல. சக்கரவர்த்தியின் கட்டளை எதுவாயிருந்தாலும் அதை அனுசரித்து நடக்க நாம் எல்லாரும் கடமைப்பட்டவர்கள். ஆனால் நியாயம் இன்னது என்பதைச் சொல்லும் பாத்தியதை நமக்கு உண்டு. சக்கரவர்த்தி இந்த விஷயமாகச் சொல்வதில் நியாயமே இல்லையென்று சொல்ல முடியாது. இந்தச் சோழ ராஜ்யத்தின் மீது மதுராந்தகத் தேவருக்கு உரிமையே கிடையாது என்றும் சொல்வதற்கில்லை. இளவரசே! தாங்கள் கேட்கிறபடியினால் எங்கள் மனதை விட்டுச் சொல்கிறோம். முடிவு தங்கள் இஷ்டத்தைப் பொறுத்தது. இந்த விவாதத்தை வளரும்படி விடுவது இராஜ்யத்துக்கு மிக்க அபாயகரமானது என்று நாங்கள் கருதுகிறோம். ஆகையால், ஏதேனும் ஒரு சமரச முடிவுக்கு வருவது நல்லது. சோழ ராஜ்யம் இப்போது முன்னைப்போல் இரண்டு வெள்ளாறுகளுக்கு மத்தியில் குறுகிக் கிடக்கவில்லை. குமரி முனையிலிருந்து கிருஷ்ணை நதி வரையில் பரவிப் படர்ந்திருக்கிறது. இதை இரண்டாகப் பிரித்தாலும் ஒவ்வொன்றும் பெரிய இராஜ்யமாக இருக்கும். அவ்விதம் கொள்ளிடம் நதிக்குத் தெற்கேயுள்ள ராஜ்யத்தை மதுராந்தகத் தேவருக்கும் வடக்கேயுள்ள பகுதியைத் தங்களுக்கும் உரியதென்று பிரித்துக் கொடுப்பது நியாயமாயிருக்கும் இது எங்கள் முடிவான கருத்து. தாங்கள் இதை ஒப்புக் கொண்டால் மேலே செய்ய வேண்டியதைச் செய்யலாம். சக்கரவர்த்தியை இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதிக்கச் செய்யும் பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன்!" என்றார்.
ஆதித்த கரிகாலன் அப்போது கலகலவென்று சிரித்தது பழுவேட்டரையருடைய வயிற்றில் அனலை மூட்டியது. "பாட்டா! சோழ ராஜ்யத்தை இரண்டாகப் பிரித்துத் தெற்கு இராஜ்யத்தில் பழுவேட்டரையர்களும் வடக்கு இராஜ்யத்தில் சம்புவரையர்களும் அதிகாரம் செலுத்துவது சரியான பங்கீடுதான். உங்கள் இரு குடும்பங்களும் என் பாட்டனுக்குத் தகப்பனார் காலத்திலிருந்து செய்து வந்திருக்கும் சேவைக்கு உரிய வெகுமதிதான். ஆனால் இராஜ்யத்தைப் பிரிப்பதில் எனக்குச் சிறிதும் விருப்பமில்லை. வழிவழியாக வந்த இராஜ்யத்தைப் பங்கிட்டுக் கொள்வதும் ஒன்றுதான்; தாலி கட்டிய மனைவியை பங்கிட்டுக் கொள்வதும் ஒன்றுதான்! கிழவர்களாகிய உங்களுக்கு அது சம்மதமாயிருக்கலாம்! எனக்குச் சம்மதம் இல்லை!" என்று கரிகாலன் கூறியபோது பெரிய பழுவேட்டரையரின் கண்களில் தீப்பொறி பறந்தது. அவர் கொதிப்புடன் எழுந்து நின்றார். உடைவாளை உறையிலிருந்து எடுப்பதற்கும் ஆயத்தமானார்.
அச்சமயத்தில் கரிகாலன் "பாட்டா! என்ன, இதற்குள் எழுந்து போகப் பார்க்கிறீர்கள்? என்னுடைய யோசனையை முழுதும் கேட்டு விட்டுப் போங்கள். சோழ ராஜ்யத்தைப் பிரிப்பதற்கு எனக்குச் சம்மதமில்லை. என் குலத்து முன்னோர்களும், நீங்களும் உங்கள் முன்னோர்களும் ஐந்து தலைமுறையாகப் பாடுபட்டு எத்தனையோ வீராதி வீரர்களின் உயிர்களைப் பலி கொடுத்துச் சோழ ராஜ்யம் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறது. இதை இரண்டாகப் பிரித்துச் சிறிய பகுதிகளாக்குவது பாவமாகும். வீர சொர்க்கத்திலுள்ள இராஜாதித்தர் முதலிய நம் முன்னோர்கள் நம்மைச் சபிப்பதற்கு ஏதுவாகும். ஆகையால் அந்த யோசனையை விட்டுவிடுங்கள். இந்தப் பெரிய சோழ ராஜ்யம் முழுவதையும் மதுராந்தகனுக்கே விட்டுக் கொடுத்து விட நான் ஆயத்தமாயிருக்கிறேன்; அதற்கு நியாயமும் உண்டு. என் பெரிய பாட்டனாரின் மகன் மதுராந்தகன். ஆகையால் என் தந்தைக்குப் பதிலாகவே மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டியிருக்க வேண்டும். பராந்தகச் சக்கரவர்த்தியின் ஏற்பாட்டினால் என் தந்தை முடிசூட்டிக் கொள்ள வேண்டியதாயிற்று. அந்தத் தவறு அவரோடு போகட்டும். 'தந்தைக்குப் பிறகு மகன்' என்ற நியதிப்படி எனக்கு இந்த ராஜ்யத்தின் பேரில் பூரண உரிமை இருந்தாலும் அதை விட்டுக் கொடுத்து விடுகிறேன். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது. வடதிசையின் மீது படை எடுத்துச் செல்ல மூன்று லட்சம் போர் வீரர் கொண்ட சைன்யம் எனக்கு வேண்டும். சைன்யத்துக்கு வேண்டிய தளவாட சாமான்களும் சாமக்கிரியைகளும் ஒரு வருஷத்துக்கு உணவுப் பொருள்களும் திரட்டித்தர வேண்டும். மாகடலில் செல்லக் கூடிய முந்நூறு பெரிய மரக்கலங்களும் வேண்டும். பார்த்திபேந்திரனைக் கப்பல் படைத் தலைவனாக்கிக் கடலோரமாக வரச் செய்துவிட்டு நான் தரை மார்க்கமாக வட நாட்டின் மீது படை எடுத்துச் செல்வேன். கங்கை நதியின் முகத்துவாரத்தில் நானும் பார்த்திபேந்திரனும் சந்திப்போம் பிறகு மேலும் வடக்கே போவோம். என் குலத்து முன்னோன், என் பெயர் கொண்ட கரிகால் வளவன், இமயமலை மீது புலிக் கொடியை நாட்டினான் என்று கவிஞர்கள் பாடி வைத்திருக்கிறார்கள். என் முன்னோர் சாதித்ததை நானும் இப்போது மறுபடியும் சாதிப்பேன். என்னுடைய வாள் வலிகொண்டும், எனக்குத் துணை வரும் வீரர்களின் தோள் வலிக்கொண்டும், கிருஷ்ணை நதிக்கு வடக்கே நானாகக் கைப்பற்றும் நாடுகளுக்குச் சக்கரவர்த்தியாவேன். அன்றி, போரில் மடிந்தால், சோழ குலத்தின் வீரப் புகழை நிலை நாட்டினோம் என்ற மகிழ்ச்சியுடன் வீர சொர்க்கம் அடைவேன். பழுவூர்ப் பாட்டா! கடம்பூர் மாமா! என்ன சொல்கிறீர்கள்? இந்த நிபந்தனையை நிறைவேற்றித் தர நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா?"
இவ்விதம் கம்பீரமாக கேட்டுவிட்டுக் கரிகாலன் நிறுத்தினான். கிழவர்கள் இருவரும் திகைத்துப் போனார்கள். பழுவேட்டரையர், தடுமாற்றத்துடன், "இளவரசே! தங்களுடைய நிபந்தனையை ஒப்புக் கொள்ள நாங்கள் யார்? எங்களுக்கு என்ன உரிமை? சக்கரவர்த்தியை அல்லவா கேட்க வேண்டும்!" என்றார்.
கரிகாலன் கொதித்து எழுந்து, இடி முழக்கக் குரலில் கர்ஜனை செய்தான்: "பாட்டா! சக்கரவர்த்தியின் பெயரைச் சொல்லி யாரை ஏமாற்றலாம் என்று பார்க்கிறீர்கள்? என்னை ஏமாற்ற முடியாது! என் தந்தையை நீங்கள் அரண்மனையில் சிறைப்படுத்தி நீங்கள் ஆட்டி வைத்தபடி ஆடும் பொம்மையாக வைத்து கொண்டிருக்கிறீர்கள்! அது எனக்குத் தெரியாது என்றா எண்ணினீர்கள்? சின்னப் பழுவேட்டரையர் அனுமதியின்றி யாராவது என் தந்தையைப் பார்க்க முடியுமா? என் தம்பியை ஈழத்திலிருந்து சிறைப்படுத்திக் கொண்டு வருவதற்கு என் தந்தை கட்டளை போட்டது சக்கரவர்த்தியின் சொந்த விருப்பத்தினாலா? உங்கள் கட்டாயத்தினாலா? தேச மக்களின் கண்ணுக்குக் கண்ணான அருமை மகனை, வீராதி வீரனை, சிறைப்படுத்திக் கொண்டு வரும்படி எந்தத் தகப்பனாவது இஷ்டப்பட்டுக் கட்டளையிடுவானா? அருள்மொழியைச் சிறைப்படுத்திக் கொண்டு வந்து கடலில் மூழ்க அடித்துக் கொன்றுவிட்டதாக உங்கள் பேரில் இன்று சோழ நாட்டு மக்கள் எல்லாரும் ஆத்திரப்பட்டுக் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள்...."
"இளவரசே! அத்தகைய அபாண்டமான பழியை யார் சொன்னது? சொன்னவனுடைய நாவைத் துண்டித்து அவனையும் கண்டதுண்டமாக்குவேன்...!" என்று பழுவேட்டரையர் அலறினார்.
"பழி சொல்லுகிறவர் ஒருவராயிருந்தால் நீங்கள் கண்டதுண்டம் செய்யலாம். பதினாயிரம், லட்சம், பத்து லட்சம் பேர் சொல்லுகிறார்கள். அவ்வளவு பேரையும் நீங்கள் தண்டிப்பதாயிருந்தால் சோழ நாடு பிணக்காடாகவும் சுடுகாடாகவும் மாறிவிடும். சிவபக்தனாகிய மதுராந்தகன் ஆட்சி புரிவதற்குச் சோழ நாடு தகுந்த இராஜ்யமாயிருக்கும்! ஆனால் பாட்டா! அந்தப் பேச்சை நான் நம்பவில்லை மக்கள் அறிவற்ற மூடர்கள். ஆராய்ந்து பாராமல் ஒருவன் கட்டிவிட்ட கதையையே மற்றவர்களும் திரும்பிச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். சோழ குலத்துக்குப் பரம்பரைத் துணைவர்களான நீங்கள் அத்தகைய படுபாதகத்தை ஒரு நாளும் செய்திருக்க மாட்டீர்கள். அருள்மொழி கடலில் மூழ்கியிருந்தால் அது அவனுடைய தலைவிதியின் காரணமாகத்தான் இருக்க வேண்டும். 'மூன்று உலகமும் ஆளப் பிறந்தவன்' என்று கூறி வந்த ஜோதிடர்கள், ஆருடக்காரர்கள், ரேகை சாஸ்திரிகள் வாயில் மண்ணைப் போடுவதற்காகவே அவன் கடலில் மூழ்கி மாண்டிருக்க வேண்டும். பாட்டா! நீங்கள் எவ்வளவு பெரிய வீராதி வீரராயிருந்தாலும் நடுக்கடலில் சுழிக்காற்றை வரவழைப்பதற்கும் கப்பலின் பாய்மரத்தின் மீது இடிவிழச் செய்வதற்கும் உங்களால் கூட முடியாது. ஒருவேளை அது பாண்டிய நாட்டு மந்திரவாதிகளின் காரியமாயிருக்கலாம்; நீங்கள் அதற்குப் பொறுப்பில்லை. ஆகையால் அருள்மொழியின் கதிக்கும் நீங்கள் பொறுப்பாளியில்லை. ஆனால் 'சக்கரவர்த்தியைக் கேட்டுச் சொல்ல வேண்டும்' என்று மட்டும் இனி என்னிடம் சொல்லாதீர்கள். அப்புறம் அந்த அன்பில் பிரம்மராயனைக் கேட்டுச் சொல்ல வேண்டும் என்று கூடச் சொல்வீர்கள். சக்கரவர்த்தியும் முதன்மந்திரியும் ஏதோ அந்தப் பட்டங்களைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் விருப்பத்தை மீறி அவர்கள் எதுவும் செய்ய முடியாது. பழுவூர் பாட்டி நந்தினிதேவியைக் கேட்டுச் சொல்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லுங்கள்..!"
இச்சமயம் கந்தமாறன் குறுக்கிட்டு, "ஐயா! எங்கள் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருப்பவர்களை..." என்று ஏதோ தடுமாற்றத்துடன் இரைந்து சொல்ல ஆரம்பித்தான்.
கரிகாலன் அவன் பக்கம் கண்களில் தீ எழ நோக்கி, முப்புரம் எரித்த சிவனைப்போலச் சிரித்து "கந்தமாறன்! இது உங்கள் வீடா? மறந்துவிட்டேன்! கொல்லி மலை வல்வில் ஓரியின் வம்சத்தில் பிறந்த வீராதி வீரன் நீ என்பதையும் மறந்து விட்டேன். உன் வீட்டில், அதுவும் நீ இருக்கும் இடத்தில் கொஞ்சம் பயந்துதான் பேசவேண்டும்! தவறாக என்ன சொல்லிவிட்டேன். உன் வீட்டு விருந்தாளிகளை என்ன செய்துவிட்டேன்?.... கந்தமாறன்! ஏன் உன் கைகால் நடுங்குகிறது? ஈழத்தில் பரவியிருக்கும் நடுக்கு ஜுரம் உனக்கும் வந்து விட்டதா? நீ ஈழத்துக்குக் கூடப் போகவில்லையே!" என்றான்.
வந்தியத்தேவன் அப்போது, "கோமகனே! கந்தமாறனுக்கு நடுக்கு ஜுரம் இல்லை. தாங்கள் பழுவூர் இளைய ராணியைப் பாட்டி என்று சொன்னதில் அவனுக்குக் கோபம்!" என்றான்.
கந்தமாறன் வந்தியத்தேவனைக் குரோதத்துடன் பார்த்துக் கொண்டு கத்தியை எடுக்கத் தொடங்கினான். பார்த்திபேந்திரன் அவன் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்துக் காதோடு ஏதோ சொன்னான் கந்தமாறன் அடங்கினான். அவனுடைய உடல் மட்டும் சிறிது நேரம் நடுங்கிக் கொண்டிருந்தது.
கரிகாலன் அவனைப் பார்த்துச் சிரித்துவிட்டு, பழுவேட்டரையர் பக்கம் திரும்பி, "பாட்டா! இளங்காளைகள் இப்படித்தான் கட்டுக் கடங்காமல் சில சமயம் துள்ளிக் குதிப்பார்கள். அவர்களை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம். நீங்கள் எனக்குப் பாட்டன் முறை ஆகையால் இளைய ராணி எனக்குப் பாட்டிதானே? அப்படி நான் அழைப்பதில் என் பாட்டிக்கும் வருத்தம் இல்லை; தங்களுக்கும் வருத்தமில்லை. இந்தச் சிறு பிள்ளைகளுக்கு எதற்காக ஆத்திரம் பொத்துக் கொண்டு வருகிறது? போனால் போகட்டும்! நான் ஆரம்பித்த விஷயத்தை விட்டுவிட்டு எங்கேயோ போய்விட்டேன். என் தந்தை - சக்கரவர்த்தியின் பேரில் தாங்கள் பாரத்தைச் சுமத்த வேண்டாம். தாங்கள் சம்மதித்தால் என் தந்தையும் சம்மதித்தாற் போலத்தான். பொக்கிஷம் தங்கள் கையில் இருக்கிறது. வடபுலத்துக்குப் படையெடுத்துப் போகிறேன் என்றால், சோழ நாட்டிலிருந்து மூன்று லட்சம் என்ன, முப்பது லட்சம் வீரர்கள் போட்டியிட்டுக் கொண்டு வருவார்கள். முந்நூறு கப்பல்களைச் சேகரித்துக் கொடுப்பதிலும் கஷ்டம் ஒன்றுமில்லை. தாங்கள் சம்மதிக்க வேண்டும்! மதுராந்தகத் தேவனும் சம்மதிக்க வேண்டும்! அவ்வளவுதான்! என்ன சொல்லுகிறீர்கள்?" என்று கரிகாலன் நிறுத்தினான்.
திணறித் திண்டாடித் திக்கு முக்காடிப் போன பழுவேட்டரையர் தொண்டையை மறுபடியும் கனைத்துக் கொண்டு கூறினார்: "கோமகனே! தங்கள் அதிசயமான விருப்பத்துக்கு நான் சம்மதித்தாலும், மதுராந்தகத் தேவரின் சம்மதம் எப்படியும் வேண்டும் அல்லவா? சக்கரவர்த்தியிடம் விடை பெற்றுக் கொள்ளாமல் தாங்கள் திக்விஜயத்துக்குப் புறப்பட முடியுமா? ஆகையால் எல்லோருமாகத் தஞ்சாவூருக்குப் போவோம்..."
"அது மட்டும் முடியாது; பாட்டா, தஞ்சாவூருக்குப் போன பிறகு என் தந்தை வேறு விதமாகக் கட்டளையிட்டால் என்னால் அதை மீற முடியாமற் போய்விடும். அப்புறம் அங்கே என் அன்னை, மலையமான் மகள், இருக்கிறாள். என் சகோதரி இளைய பிராட்டி இருக்கிறாள். அவர்களுக்கு நான் முடிதுறந்து தேசாந்தரம் செல்வது சம்மதமாயிராது. அவர்கள் பேச்சை மீறுவதும் கஷ்டமாயிருக்கும். பாட்டா! இந்த விஷயம் இந்தக் கடம்பூர் மாளிகையில்தான் முடிவாக வேண்டும். தாங்கள் தஞ்சைக்குப் போய் மதுராந்தகனை இங்கே அழைத்து வாருங்கள். நமக்குள் பேசி முடிவு செய்த பிறகு தந்தையிடம் தெரிவிக்கலாம். படையெடுப்புக்கு எல்லாம் ஆயத்தமான பிறகு நான் தஞ்சைக்கு வந்து என் பெற்றோர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்புகிறேன். அல்லது மதுராந்தகனுக்கு இப்போதே பட்டம் கட்டிவிட்டு என் பெற்றோர்கள் காஞ்சிக்கு வரட்டும். அங்கே நான் கட்டியிருக்கும் பொன் மாளிகையில் அவர்களை இருக்கச் செய்துவிட்டு நான் புறப்படுகிறேன்" என்றான்.
பழுவேட்டரையர் சம்புவரையரைப் பார்த்தார். சம்புவரையரோ கூரை மேட்டைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடமிருந்து உதவி ஒன்றும் கிடைப்பதற்கில்லையென்று கண்டு, பழுவேட்டரையர் "கோமகனே! தங்களுடைய கட்டளைக்கு மாறாக நான் என்ன சொல்ல முடியும்?" என்றார்.
"கட்டளை என்று சொல்லாதீர்கள், பாட்டா! சோழ சாம்ராஜ்யத்தின் சேவையில் தலை நரைத்துப் போன தங்களுக்கு இந்தச் சிறுவனா கட்டளையிடுவது? என்னுடைய பிரார்த்தனையை நிறைவேற்றி வைப்பதாகச் சொல்லுங்கள்!" என்றான் ஆதித்த கரிகாலன்.
"ஆகட்டும்" என்று சொல்லிப் பழுவேட்டரையர் கனைத்துக் கொண்டார்.
"மிக்க வந்தனம், பாட்டா! அப்படியானால் சீக்கிரமே புறப்படுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்! மதுராந்தகனைப் பகிரங்கமாகவே யானை மீது ஏற்றி வைத்து இவ்விடத்துக்கு அழைத்து வாருங்கள். அல்லது பொன் ரதத்தில் ஏற்றி அழைத்து வாருங்கள். இளைய பாட்டியின் மூடு பல்லக்கு மட்டும் இந்தத் தடவை வேண்டாம்!" என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் கரிகாலன்.
பின்னர் கந்தமாறன் முதலியவர்களைப் பார்த்து, "கந்தமாறா! உன்பாடு யோகந்தான்! உன் வீட்டுக்கு மேலும் விருந்தாளிகள் வரப் போகிறார்கள். சுந்தர சோழருக்குப் பிறகு சோழ நாட்டுக்குச் சக்கரவர்த்தியாகப் போகிற மதுராந்தகர் வரப் போகிறார். அவருக்குப் பட்ட மகிஷியாகப் போகும் சின்னப் பழுவேட்டரையரின் மகளையும் உடன் அழைத்து வந்தாலும் வருவார். கடம்பூர் மாளிகை ஒரே கோலாகலமாகத் தானிருக்கும். பழுவூர்ப் பாட்டனார் தஞ்சைக்குப் புறப்படட்டும். நாம் வேட்டைக்குப் புறப்படலாம். வாருங்கள்! வில் வித்தையில் ஒரு காலத்தில் நான் வல்லவனாக இருந்தேன். 'அர்ச்சுனனுக்கு அடுத்தபடி ஆதித்த கரிகாலன் தான்' என்று பெயர் வாங்கியிருந்தேன். மூன்று வருஷங்களாக வில்லைத் தொடாமல் வில் வித்தையே மறந்து போய் விட்டது. மறுபடியும் பழக்கம் செய்து கொள்ள வேண்டும். பார்த்திபேந்திரா! வந்தியத்தேவா! எல்லாரும் கிளம்புங்கள்! வேட்டைக்கு எங்கே போகலாம்? கொல்லிமலைக்குப் போகலாமா?" என்று பொதுப் படையாகக் கரிகாலன் கேட்டான்.
இத்தனை நேரமும் எந்தப் பேச்சிலும் கலந்து கொள்ளாமலிருந்த சம்புவரையர், "கோமகனே! கொல்லிமலை வெகு தூரத்தில் இருக்கிறது. அவ்வளவு தூரம் போக வேண்டியதில்லை. வீரநாராயண ஏரியின் மேற்குக் கரையில் அடர்ந்த காடு இருக்கிறது. அதைத் 'தண்டகாரண்யம்' என்றே சொல்வதுண்டு. வேட்டைக்கு வேண்டிய காட்டு மிருகங்களும் அங்கே ஏராளமாக இருக்கின்றன. அந்தக் காட்டிலிருந்து வேட்டையாடிக் கொண்டு வந்த மிருகங்கள் தான் நமது வேட்டை மண்டபத்தில் உள்ளவை. ஏரிக்கரைக் காடு, இம்மாளிகைக்குச் சமீபத்திலும் இருக்கிறது. காலையில் வேட்டையாடப் புறப்பட்டுச் சென்றால் இரவு வீடு திரும்பி விடலாம்!" என்றார்.
"அப்படியே செய்யலாம், ஐயா! இந்த மாளிகையில் நான் விருந்தாளியாயிருக்கும் வரையில் தாங்கள் வைத்ததே எனக்குச் சட்டம். தங்கள் குமாரி மணிமேகலையையும் வேட்டைக்கு அழைத்துப் போகலாமா? அவள் இருக்குமிடம் எப்போதும் கலகலப்பாயிருக்கிறது!" என்றான் ஆதித்த கரிகாலன்.
"எனக்கு ஆட்சேபமில்லை; மணிமேகலையைக் கேட்டுப் பார்க்கலாம்" என்றார் சம்புவரையர்.
அப்போது கந்தமாறன் "வேட்டைக்குப் போகும் இடத்தில் பெண்கள் எதற்கு? அவர்கள் பத்திரமாயிருக்கிறார்களா என்று பார்ப்பதற்குத்தான் வேலை சரியாயிருக்கும். வேட்டையில் கவனம் செலுத்த முடியாது. மேலும், நந்தினி தேவிக்கு இங்கே துணை வேண்டுமல்லவா?" என்றான்.
"ஆமாம்; ஆமாம் கந்தமாறனுக்கு எப்போதும் பழுவூர் பாட்டியைப் பற்றித்தான் கவலை. மணிமேகலையை அழைத்துப் போவதில் இன்னொரு கஷ்டமும் இருக்கிறது. அவள் துள்ளிக் குதிப்பதைப் பார்த்துவிட்டு மான் துள்ளிக் குதிப்பதாக நினைத்து யாராவது அவள் பேரில் அம்பை விட்டாலும் விடுவார்கள். பெண்கள் அரண்மனையிலேயே இருக்கட்டும், நாம் வேட்டைக்குப் போகலாம். நாளை அதிகாலையில் புறப்பட வேண்டும். இன்றிரவு குரவைக்கூத்தைச் சீக்கிரம் முடித்துவிட்டு, அவரவர்களும் சீக்கிரமாகத் தூங்குங்கள். ஐயா! வேட்டைக்காரர்களுக்கெல்லாம் இப்போதே சொல்லி வைத்துவிடுங்கள். வந்தியத்தேவா! வா! நம்முடைய ஜாகைக்குப் போகலாம்!" என்று சொல்லி ஆதித்த கரிகாலன் வந்தியத்தேவனைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு புறப்பட்டான். கந்தமாறனும் பார்த்திபேந்திரனும் அவர்களைச் சிறிது அசூயையுடன் பார்த்துக் கொண்டு நின்றார்கள். சம்புவரையர் வேட்டைக்காரர்களுக்குக் கட்டளை பிறப்பிப்பதற்காகச் சென்றார். பழுவேட்டரையர் நந்தினியைத் தேடி அந்தப்புரத்துக்குப் போனார்.