பொன்னொளி/பொன்னொளி

பொன்னொளி


புத்த மார்க்கம் மீண்டும் இங்கு பொலிவு பெறுது, நமது சர்க்காரின் சின்னமாக அசோக சக்கரம் இருப்பது காணீர்! கருத்தற்ற காரியமல்ல அது” என்று ராதாகிருஷ்ணன் கூறினார், சாஞ்சியில், புத்த மார்க்கப் பெரியோர்கள் கூடியிருந்த மாண்பு மிகுந்த மன்றத்தில்.

புத்தரின் முக்கியசீடர்களான சாரி புத்தர், மகாமொகலன்னர் ஆகியோரது நினைவுச் சின்னங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்—சாஞ்சியில், தனியாகக் கட்டிடம் அமைத்து, அந்த நினைவுச் சின்னங்களைப் புனிதப்பொருள் என்று பக்தியுடன் கொண்டாடிப் புனித விழா நடத்தினர். பண்டித ஜவஹர் பேசினார்— பல்வேறு நாடுகளிலிருந்தும் புனித விழாவுக்கு வந்திருந்த பெரியோர்கள் பேசினார்—டாக்டர் ராதாகிருஷ்ணன், அதுபோது பேசியது கேட்டு, புத்த மார்க்கத்திலே உள்ளவர்கள் மட்டுமல்ல, புத்த மார்க்கத்தின் மாண்புகளை மதித்திடும் அறிவுடையோர் அனைவருமே களித்திருப்பார்கள். உறுதியுடனும் உவகையுடனும், கேட்போர் சிந்தையிலே மகிழ்ச்சி பொங்கும் விதமாக அல்லவா, டாக்டர் பேசினார்—புத்த மார்க்கம் மீண்டும் இங்கு பொலிவு பெறுகிறது! என்று. பொதுப்படையாகக் கூறுவது போதாது என்று, ஆதாரமும் காட்டினார்— அசோக சக்கரம் நமது ஆளவந்தாரின் சின்னம், காணாய் என்று உண்மையாகவே, டாக்டரின் பேச்சு, புத்த மார்க்கத்தவருக்குப் புதியதோர் நம்பிக்கையையே கொடுத்திருக்கும். ஆனால்..........!

நடைபெற்றது விழா! பேசப்பட்டது களிப்பூட்டும் சொல்!! மறுக்கமுடியாது!! எனினும், டாக்டர் சொன்னார்படி, புத்தமார்க்கப் பொலிவு தெரிகிறதா? மக்கள் காண்கிறார்களா அந்தப் பொலிவை? அந்தப் பொலிவைக் காண விடுகிறார்களா, மக்களை! உவகையூட்டும் விதமாகப் பேசிய டாக்டரின் பெயரே, ராதாகிருஷ்ணன்! புத்த மார்க்கப் பொலிவா தெரிகிறது? அந்தோ! இல்லையே! அந்தப் பொலிவு இன்று இந்நாட்டிலே இருந்தால், மக்களிடை இத்துணை நலிவு இருக்குமா? இன்று இல்லை, என்பது வருத்தமூட்டுகிறது— பரவாயில்லை—அந்தப் பொலிவை மீண்டும் காண! முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றனவா என்று பார்த்தால், நன்றாகத் தெரிகிறது, முயற்சி எடுத்துக்கொள்ளப் படவில்லை என்பதுமட்டுமல்ல, அந்த நோக்கமே அரும்பிடக் காணோம் என்ற உண்மை—அந்த உண்மை, உள்ளத்திலே வேதனையையல்லவா மூட்டிவிடுகிறது! இந்த நிலையில் டாக்டர், புத்த மார்க்கப் பொலிவு மீண்டும் தெரிகிறது, என்று பேசினது கேட்டால், சிரிப்பதா, பெருமூச்செறிவதா என்று தெரியவில்லை! பெரியவர், டாக்டர்! அவர் கூறுகிறார், மிகச் சாமான்யர்களும் அறிந்திருக்கும் உண்மைக்கு மாறானதை! இருள் கப்பிக்கொண்டிருக்கிறது, டாக்டர் முழு நிலவு காணீர் என்கிறார்! சனாதனம் எக்காளமிடுகிறது டாக்டர் சாக்கியர் தந்த சன்மார்க்கம், நம் மார்க்கமாகத் திகழ்கிறது என்று உரைத்தார். உண்மை நிலைமை என்ன?

புனித விழாவிலே கூடியிருந்தோருக்கு, புத்தபிரானிடம் பற்றுக் கிடையாது என்றோ, புத்த மார்க்கத்திடம் மதிப்புக் கிடையாது என்றோ கூறவில்லை. பாராட்டினர்! கொண்டாடினர்! வணங்கினர்! ஆம்! விழா, நடைபெற்றது. ஆனால், புத்த மார்க்கத்தின பொலிவு நாட்டுக்குத் தேவை என்று உள்ளூர உணர்ந்தனரா—அந்தப் பொலிவின் பயனைப் பெற, முயற்சி எடுத்துக்கொள்வதாக, வாக்களித்தனரா? இல்லை!

சோமநாதர் கோயிலைப் புதுப்பிக்கும் வேளையில், சோமநாதருடைய பெருமை சொல்லொணாது என்று பேசுவதுபோல, கும்பமேளாவில் கலந்துகொள்ளும்போது, பாபத்தைப் போக்கிக்கொள்ள இதுவே சிறந்த வழி என்று கூறுவதுபோல, விநாயகசதுர்த்தியன்று ஆனைமுகத்தானே அவனியைக் காப்பான் என்று அகவல் பாடுவதுபோல, துர்க்கை பூஜையின்போது, ‘மாதாவி’ன் பெருமையை நெஞ்சு நெக்குருகப் பாடுவதுபோல, சாஞ்சியில் நடை பெற்ற விழா, புத்த மார்க்கத்தைச் சார்ந்ததாகையால், புத்த மார்க்கமே புனித மார்க்கம் என்ற புகழுரையைச் சொரிந்தனரே யன்றி, உண்மையாகவே, புத்த மார்க்கம் தந்த புதிய, அருமையான கருத்துக்களை, பொலிவுள்ள கருத்துக்களை மீண்டும் பரப்பவேண்டும் என்ற முயற்சி எடுத்துக்கொள்ளப்பட்டதா? டாக்டர், பதில் கூற மறுப்பார்! எந்தெந்த இடத்தில், எதைஎதைக் கூறுவது, பொருத்தமாகுமோ அதன்படி பேசினேன் என்றுதான் கூறுவார்—அதுவும் நெருங்கிய நண்பர்களிடம்! புத்த மார்க்கத்தினால், நாடு ஒரு காலத்தில் பெற்றிருந்த நிலை யாது? மக்களிடம் விளக்க முன் வருவாரா? வர, நேரமிராது! வேறு எவரேனும், அந்த விளக்கத்தைக் கூறிடும்போதாவது, புன்னகையைப் பரிசாக அளிப்பாரோ? பரிசுகூடத் தேவையில்லை. எதிர்ப்புச் செய்யாமலாவது இருப்பரோ? இல்லை, இல்லை. நிச்சயமாக எதிர்ப்புக் காட்டத் தவறார்! விழாக்களிலேயோ, புகழ்வர் போற்றுவர், பூரிப்பர், பூரிப்படையச் செய்வர். டாக்டர் ராதாகிருஷ்ணன் மட்டுமல்ல, வேறு பலரும்—பொதுவாகவே, “மேதைகள்!!” ஏன்? ஏனா? என்ன நஷ்டம் அதனாலே அவர்களுக்கு! புத்தமார்க்க விழாவிலே இரண்டே ‘உபசார மொழி’ புகல்வது என்ன சிரமம்; புகன்றுவிட்டால், நஷ்டம் என்ன ஏற்படப்போகிறது! புத்த மார்க்கத்தைப் புகழ்ந்து பேசியதுடன் அந்த மார்க்க மாண்புகளை நாடு பெறப் பாடுபடுவது தொடர்ந்து செய்யப்படவேண்டும் என்றால், கஷ்டம், நஷ்டம்! புகழுரை தந்தவர்கள் அது போன்ற நோக்கம் கொண்டவர்களா! இருந்தால், நாடு முன்னேறிவிட்டது, மக்கள் புதுவாழ்வு பெற்றுவிடப் போகிறார்கள், என்று கூவிக் கூத்தாடலாமே, களிப்புடன் அஃதல்ல, அவர்கள் நோக்கம்! நடைபெறுவது விழா, நாலு நல்ல வார்த்தைகள் சொல்லி வைப்போம், நஷ்டமென்ன அதனாலே, என்பது அவர்கள் நோக்கம்.

புத்த மார்க்கம், ஒரு புதிய பாதையை வகுத்துத் தந்தது.

புத்த மார்க்கம், பழைய பாதை வழி சென்றால், மானிட வர்க்கம், பெற வேண்டிய பெரு நிலையைப் பெற முடியாது, என்று எடுத்துரைத்தது.

புத்த மார்க்கம், புரோகித மார்க்கம், புரட்டர்களிடம் வெள்ளை உள்ளத்தாரைச் சிக்கிடச் செய்யும் சூதுத்திட்டம் என்று எச்சரிக்கை செய்தது.

புத்த மார்க்கம்; பழைய மார்க்கத்தினர், வலியுறுத்திக் கட்டிக் காத்துவந்த ஜாதிமுறையினால், சமுதாயம் சின்னா பின்னப்படும் என்பதை எடுத்துக்காட்டி, மனித குலம் ஒன்றுதான், என்ற உண்மையை உரைத்தது.

புத்த மார்க்கம் வேள்வியை மறுத்தது—வேள்வி செய்வதற்கென ‘பட்டயம்’ பெற்றிருந்த ‘ஜாதி’ முறையைக் கண்டித்தது.

மருட்டும் குருமார்கள், குருட்டுத்தனம் மிகுந்த சீடக் கூட்டம்—என்ற நிலைமை, நாதனை அறியும் நல்வழி அல்ல, என்று நாட்டுக்கும் உலகுக்கும் புத்த மார்க்கம் உணர்த்து வித்தது.

இந்தப் புது முறையை, புதிய பொலிவை, இப்போது காண்கிறோமா? காணவேண்டும் என்ற கருத்துக் கொண்டோர் எவ்வளவு தொகையினர் உளர்! அனைவரும் அறிவர், புத்த மார்க்கத்தின்மூலம் புகுத்தப்பட்ட ‘பொன்னொளி’யை, மீண்டும் பழைய முறை எனும் ‘அந்தகாரம்’ கப்பிக்கொண்டது என்பதை. எனினும் டாக்டர் பேசுகிறார், எங்கள் சின்னம் அசோகசக்கரம்! என்று,நெஞ்சறிந்து பொய் என்பதுமட்டுமல்ல, வெந்த புண்ணிலே வேலல்லவா அந்தச் சொல்!!

தாளச் சத்தமும் மேளச் சத்தமும், தந்தினம் பாடுவதும், வெந்ததைப் பிரசாதம் என உண்பதும், வேடமணிவதும், வேற்றுமை வளர்ப்பதும், யாத்திரை என்பதும், கோத்திரம் பார்ப்பதும், மனிதர் உய்யும் மார்க்கமாகாது; மனதைத் தூய்மைப்படுத்தி, ஆசாபாசங்களை விட்டொழித்தால் மட்டுமே மனித குலம் உய்வுபெறும்—என்று புதிய போதனை செய்தார் புத்தர்!

எந்தச் சத்தமும் குறையவில்லை—வலுக்கிறது—எந்த வேடமும் களையப்படவில்லை—புதுப் புது வேடதாரிகள் புறப்பட்ட வண்ணம் உள்ளனர்—வீண் ஆரவார விழாக்களும், விலாப்புடைக்கத் தின்பதும், வீணாட்டம் நடத்துவதும் ஓயக் காணோம், புத்தமார்க்கப் பொலிவு மீண்டும் காணப்படுகிறது என்கிறார் வேதாந்தி; சந்தேகம் கொள்வோர், அசோகச் சக்கரத்தைக் காணீர் என்று ஆதாரம் காட்டுகிறார்; எவ்வளவு நெஞ்சழுத்தம்! நெஞ்சழுத்தம்மட் டுமா? எவ்வளவு நம்பிக்கை, இந்த மக்களிடம் எதையும் பேசலாம், எப்படியும் பேசலாம், என்பதில்!

புத்தமார்க்கப் பொலிவு மீண்டும் இங்கே தெரிகிறதாம்.

தெரிகிறதா என்று பாருங்கள், நாட்டிலே இன்று தெரியும் காட்சிகளிலே ஏதேனும் ஒன்றை, மனக்கண்முன் நிறுத்திக்கொண்டு.

சிறுமதியாளர்கள் செய்யும் சில்லரைச் சேட்டைகளை விட்டுத் தள்ளுங்கள். காவடி தூக்கிடும் கருத்தற்றவன், வீதியில் புரளும் வீணன், எச்சிலிலை உண்ணும் ஏதுமறியாதான், மரத்தைச் சுற்றிவரும் ‘மகராஜிகள்’ இவர்களைக்கூடப் பார்க்கவேண்டாம்—பாமரர்!

படித்தும்,பஞ்சாங்கம் பார்க்கும் பயங்கொள்ளி, பட்டாளத்திலே சேர்ந்த பிறகு சகுனம் பார்க்கும் பழைமை விரும்பி, இவர்களையும் பார்க்கவேண்டாம்—பரிதாபத்துக்குரியவர்கள்.

குடியாட்சியின் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் இருக்கிறாரே, பீகாரில் தேசீயப் புயலை உண்டாக்கிய வீரர், அவரைப் பாருங்கள்!

அவருடைய அறிவாற்றலை அனைவரும் அறிவர்—மாற்றாரும் அவருடைய நாணயத்தை, சந்தேகிப்பதில்லை—சாது.

நாட்டு விடுதலைப்போரிலே, அவர் காட்டிய வீரம், அபாரம். பட்ட கஷ்ட நஷ்டம் அமோகம்! காந்தீயத் தியாகத்தீயிலே புடம்போட்ட தங்கம்! இவைகளை மறுப்பார் இல்லை!

வம்பு வல்லடிக்குப் போகாதவர்! சூழ்ச்சி சூது தெரியாதவர், என்று எல்லாக் கட்சியினரும் கூறுவர். அப்படிப் பட்ட பாபு ராஜேந்திரரை மனக்கண்முன் கொண்டுவாருங்கள்.

அதோ, டில்லிப் பட்டணத்தில், சாம்ராஜ்யாதிபதிகளும், ரணகளச் சூரர்களும் உலாவிய டில்லியில், உலகிலே உள்ள வியக்கத்தக்க மாளிகைகளிலே ஒன்றான, ‘ராஷ்ட்ரபதி பவனில்’ கொலுவீற்றிருக்கிறார். குற்றமென்று கூறவில்லை. இந்தியாவுக்கு ஆட்சித் தலைவராக வருபவர், குடிசையிலே வாழவேண்டும் என்று கூறினாரே காந்தியார், என்று கூடக்குத்தலுக்குக் கூறவில்லை! பாபு, ராஷ்ட்ரபதி பவனிலே இருப்பது கண்டு, கேலி பேசவில்லை. இருக்கிறார், எழில்மிக்க மாளிகையில்—இந்தியத் துணைக்கண்டத்தின் முடிசூடா மன்னராக!

அதோ, அமெரிக்க நாட்டுத் தூதுவர், அவருடன் கரம் குலுக்குகிறார்!

இதோ, நார்வேநாட்டு நல்லெண்ணத் தூதுக் குழுவினர்! பாபு, அவர்களுடைய கரத்தைக் குலுக்கி வரவேற்கிறார்.

இதோ, இந்தியத் துணைக்கண்டத்தின் ‘பாராளு மன்றம்’ நிறைவேற்றிய மசோதா—அதனைச் ‘சட்டம்’ என்ற உயர்நிலை பெறச்செய்வதற்கு, அவருடைய கையொப்பம் தேவை — பாபுவின் கரம், அதற்காக, எழுதுகோலை எடுக்கிறது!

அவர் பரோடா மன்னர்—இவர் ஜெயப்பூர் வேந்தர்—இதோ பம்பாய் கவர்னர்—இவர், படைத்தலைவர்—இவர்கள், பாபுவின் கரத்தைக் குலுக்கி, மதிப்பும் மகிழ்ச்சியும் பெறுகிறார்கள்!

அந்தக் கரம்—உலகப் போரசுகள், சிற்றரசுகள், உள்நாட்டு அரசாளும் வாய்ப்புப் பெற்றோர், ஆகியோரின் கரங்களைக் குலுக்கிய கரம்—முப்பது கோடிக்கு மேற்பட்ட மக்களின் வாழ்வுக்கு, வழிகாட்டவேண்டிய பொறுப்பும், வாய்ப்பும் பெற்ற கரம், சாஞ்சித் திருநாள் நடைபெற்ற நாட்டிலே, காசி க்ஷேத்திரத்திலே, இருநூறு பிராமணர்களின் பாதத்தைக் கழுவிற்று! தெரிகிறதா காட்சி? இரு நூறு ‘பிராமணர்கள்’—வெள்ளியாலான மணைகள் மீது உட்கார்ந்துகொண்டிருக்கிறார்கள் — முப்பதுகோடி மக்களின் முடிசூடா மன்னர், வருகிறார், பூதேவர்களைத் தரிசிக்கிறார், வெறிபிடித்தலைந்த வெள்ளை ஏகாதிபத்யத்துக்குத் தலை சாய்ந்தறியாத வீரர், வெள்ளிமணைகள் மீது அமர்ந்திருக்கும் வேதியர் முன்பு சிரம் தாழ்த்துகிறார் — அம்மட்டோ— ஆட்சிபுரியும் கரத்தால், உலக ஆட்சி மன்றத்தின் உறுப்பினர்களை, ‘கௌரவப்படுத்திய’ கரத்தால், இருநூறு முப்புரியினரின் பாதங்களைக் கழுவினார்!! இந்தப் பெருமையைத் தனக்குத் தந்த பூசுரர்களுக்கு, தலா பதினோரு ரூபாய் தட்சணையும் தந்தாராம்! எப்போது? உரிமை வேட்கையும் சமத்துவ வேட்கையும், குக்கிராமங்களிலேயும் காணப்படும், நமது நாட்களில்! நாடாளும் நல்லவர்; காலைக் கழுவினார்—அவர்கள் பிராமணர்கள் என்பதால்! அதைச் செய்யவேண்டிய காரியமென்று எண்ணி, அவருக்கு இருக்கும் எவ்வளவோ அலுவல்களுக்கு இடையிலே, அவரைப் பேட்டி காண, பல்வேறு நாட்டுப் பிரமுகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலைமைக்கு இடையிலே, இருநூறு திருப்பாதங்களை, பக்தி சிரத்தையோடு கழுவினார்—அந்தப் புண்யத்தைத் தனக்கு அளித்ததற்காக. தட்சணையும் தந்தார்! தெரிகிறதா, காட்சி! ஊர்பேர் அறியாத, பார்ப்பனர்கள், வெள்ளி மணைமீது — உலக வரலாற்றிலே இடம்பெற்ற பாபுராஜேந்திரர், அவர்களுடைய காலைக் கழுவுகிறார்! திரள் திரளாக மக்கள், நாட்டு விடுதலைப்போர் நடாத்திய நல்லவரைக் காண!! அவரோ, பாபத்தைப் போக்கிக் கொள்ளவும், புண்யத்தைப் பெறவும், பகவானுடைய அனுக்கிரகத்தைப் பெறவும், பார்ப்பனருடைய காலைக் கழுவிக்கொண்டிருக்கிறார்! ஜே! ஜே! ஜே!! என்று மக்கள் வெளியே முழக்கமிடுகிறார்கள், மகிழ்ச்சியுடன்! ஸ்வாமி! ஸ்வாமி! என்று பாபு, பக்திப் பரவசத்துடன், கூறுகிறார், ஒன்று, இரண்டு, மூன்று என்று உயர்தர அதிகாரிகள், ‘இருநூறு’ வரை கணக்கெடுக்கிறார்கள்! ராஷ்டிரபதி பவனிலிருந்து, இங்கே அவர் வந்தார், அவருடைய வருகையை எதிர்பார்த்துக்கொண்டு காசிமகாராஜா அரண்மனையில் காத்துக்கொண்டிருக்கிறார், இருநூறு முப்புரியினர்—ஆற்றோரத்திலே இருந்துவந்தார்கள், குளக்கரைக்குத்தான் மீண்டும் செல்வார்கள்—அவர்களுடைய ‘பாதங்களை’ இவர் கழுவுகிறார்! பீரங்கி இருந்தால் என்ன, துப்பாக்கி இருந்தால் என்ன, துரைமகன் என்ற விருது இருந்தால் என்ன என்று வீராவேசமாகக் கேட்டவர்தான் வெள்ளையர்களை நோக்கி—வெறும் தர்ப்பைதான் இருக்கிறது வேதியர்களிடம்—எனினும், காலைக் கழுவுகிறார், அப்போது தான் கடவுளின் அருளுக்கு தான் பாத்திரமாக முடியும் என்ற நம்பிக்கையோடு! டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகிறார் புத்தமார்க்கத்தின் பொலிவு மீண்டும் தெரிகிறது என்று. தெரிகிறதா, நண்பர்களே.தெரிகிறதா? கண்ணும் கருத்தும் பழுதாகாத காங்கிரஸ் நண்பர்களே! தெரிகிறதா நாட்டின் நிலைமை? எந்தெந்த நாட்டுக்காரன், இதனைப் படம் எடுத்தானோ—எந்தெந்த நாட்டிலே மக்கள் இதைக் காண்கிறார்களோ—என்னென்ன பேசிக்கொள்கிறார்களோ—இங்கே, டாக்டர் பேசுகிறார், அசோக சக்கரத்தைப் பாரீர் என்று! அசோக சக்கரம், சின்னம்! ஆரியருக்கு அடிவருடுவதுகூட அல்ல, காலைக் கழுவி, கதிமோட்சம் கோருபவர்; அந்த சர்க்காரின் முதல் அதிகாரி! பாபு ராஜேந்திரர், தங்கள் காலைக் கழுவியபோது, அந்த இருநூறு பார்ப்பனர்கள் மட்டுமல்ல, இந்திய துணைக்கண்டத்திலே உள்ள பார்ப்பனர் அவ்வளவு பேரும், மார்பை முன்னாலே நிமிர்த்தி அல்லவா நடந்திருப்பர்! ஆரிய தர்மம் மீண்டும் அழகுறப் பிரகாசிக்கிறது—புரேகித மார்க்கப் பொலிவு மிகவும் நன்றாகத் திகழ்கிறது, என்று அவர்கள் கூறினால், வேதனை ஏற்படும் பகுத்தறிவாளர்களுக்கு. ஆனால் மறுத்துக் கூறமுடியாதே! இந்தநிலையிலே நாடு இருக்கும் போது டாக்டர் ராதா கிருஷ்ணன், புத்த மார்க்கப் பொலிவு தெரிகிறது என்று புனித விழாவிலே பேசுகிறார்!!

கருத்துப் புரட்சி ஏற்படாத நாட்களிலே, நாடும் காடும், வீடும் தோட்டமும்போல நெருங்கி இருந்த நாட்களிலே, வீரனும் தீரனும், வாளும் வேலும் தவிர வேறு ஆயுதங்கள் பெற்றிராத நாட்களில், மாத்தடியிலே பள்ளிக்கூடமும், மலர்த் தோட்டங்களிலே பர்ணசாலைகளும் இருந்த காலத்தில், எதிர்த்தால் இடி விழும் தொட்டால் பஸ்மீகரம் என்று மக்களும் மன்னரும் நம்பிக் கொண்டிருந்த காலத்தில், புத்ரகாமேஷ்டி யாகம் செய்து வம்ச விருத்தி கோரியவர்கள் வாழ்ந்த நாட்களிலே, வேதத்தில் இல்லாதது ஒன்றுமில்லை, வேறெதிலும் இதிலுள்ளது இல்லை, என்று எவரும் நம்பியிருந்த நாட்களில், குருமார்களின் அடி பணிய அரசர்கள் முன் வந்ததும், காலைக் கழுவி கதி மோட்சம் தேடிட காவலர் காத்துக்கொண்டிருந்ததும் ஆச்சரியமில்லை; வசிஷ்டரும் வியாசரும், கண்ணுவரும் அத்திரியும், காகபட்டரும் பிறரும் பெற்ற நிலை பெருமைக்குரியதென்று பிரமாதப்படுத்துவதிலே பொருள் இல்லை; காலம் அப்படிப்பட்டது, ஆனால் இப்போது, இணையில்லாத ஆராய்ச்சி மலர்ந்திருக்கும் இந்நாளில், இலண்டனும் பாரிசும், நியூயார்க்கும் மாஸ்கோவும் போய் வருவது பந்தடி மைதானத்துக்கும் சிங்காரத் தோப்புக்கும் போய் வருவது போன்ற சாதாரணக் காரியம் போலாகிவிட்ட, வேகமான நாகரீகத்தின் விறு விறுப்பு உள்ள நாட்களில், பர்ணசாலைகள் ஒழிந்து போய் பண்டகசாலைகளிலே பணியாட்களாகிப் பாழும் வயிற்றைக் கழுவிடும் நிலைக்குப்பார்ப்பனர்கள் துரத்தப்பட்டு விட்ட இந்த நாட்களில், புரோகிதரின் நடை உடை பாவனை நையாண்டிக்குரியதாகிவிட்ட நவ நாகரீக நாட்களில், சந்தியாவந்தனத்தை மறந்தவர்களும் ‘சர்வம் கூட்டு மயம் ஜகத்’ என்ற காரிய வாதத்தை, நாலுவேதத்தினும் மேலானது என்று கண்டு கடைப்பிடிப்போரின் தொகை பூசுர இனத்திலே பெருகி இருக்கும் இந்த நாட்களில், துப்பாக்கிக்கு அஞ்சாத தீரர்களும், தூக்குமேடை சென்ற தியாகிகளும், சிறை புகுந்த தொண்டர்களும் செக்கிழுத்த பெரியோர்களும், நாட்டை மீட்க அறப்போர் தொடுத்த ஆண்மையாளர்களும், தோன்றிய நாட்டிலே, எமது தரிசனம் ஜென்மசாபல்யம் தரும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு, எங்களைத் தேடி யாத்திரை செய்து வந்து, எமது காலைக் கழுவினால், தனது பாபம் கழுவப்படும் என்று கருதி, பக்தி சிரத்தையோடு, மேலோர் நாங்கள் என்பதை மேதினி அறியும் விதமாக, எம்மை வெள்ளிப் பீடத்திலே எழுந்தருளச் செய்து, தட்சணையும் தந்து, எமது ஆதிபத்யத்தை அவனி அறியச் செய்தாரே, ராஷ்ட்டிரபதி பாபு ராஜேந்திரபிரசாத்! இதுவல்லவா உண்மையான பெருமை—வசிஷ்டர் பாதத்திலே மன்னர்கள் வீழ்ந்தார்களாம், அந்தப் பெருமை ஒரு பெருமையா—உலகம் விழிப்படைந்துவிட்டது, என்று உரத்த குரலில் எவனெவனோ கூவும் இந்த நாட்களிலே, பரந்த பாரத் வர்ஷத்தின் பரிபாலனாதிபதி, முப்பது கோடிக்கு மேற்பட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி, காலைக் கழுவினாரே, இதுவன்றோ பெறற்கரிய பெருமை—இதனைக் கண்டன்றோ உலகம் வியப்படையும்! ஜடாமுடிதாரியின் பாதத்திலே மணிமுடிதரித்தவன் பாரத் வருஷத்திலே வீழ்ந்து வணங்கிய காலத்திலே, பாரத் வர்ஷத்திலே மட்டுமல்ல, உலகிலே எங்குமே, குருமார்கள் காலிலே கொலுப்பொம்மைகள் வீழ்ந்து வணங்குவதுதான் முறையாக இருந்தது! புத்தனாம், புதுப்புதுக் கருத்தூட்டும் புரட்சிக்காரர்களாம், அரசுகளைக் கவிழ்த்தவர்களாம், அன்னக் காவடிகளை ஆற்றல் பெறச்செய்த வீரர்களாம், வால்டேராம், ரூசோவாம், லிங்கனாம், தூதராம்,மார்க்சாம், லெனினாம், கமாலாம், சன்யாட்சனாம்,—நீட்டோலை படிக்கிறார்கள் இவர்களைப்பற்றி—இவர்களெல்லாம் தத்தமது கைவரிசையைக் காட்டியான பிறகு, எமது காலைக் கழுவுகிறார் உலக வீரர் பட்டியலில் பெயர் பொறிக்கப்படவேண்டிய தகுதி பெற்ற, ராஷ்டிரபதி! இதனினும், பெருமையை, இங்கு மட்டுமல்ல, எங்கேனும் கண்டதுண்டா—என்று சனாதனி கேட்பது, தெரிகிறதா! நிலை இது—நாடு இது—நாட்டின் பெரும் தலைவர் போக்கு இவ்விதம்—விழாவிலே பேசியதோ, புத்தப் பொலிவு மீண்டும் தோன்றத் தொடங்கிவிட்டது, என்று!

புத்த மார்க்கம், இப்படிப்பட்ட பொருளற்ற, குல பேதத்தை மட்டுமல்ல, ஜாதி ஆணவத்தை வளர்க்கக்கூடிய முறைகளைக் கண்டித்து, எழுப்பப்பட்ட அறிவுப் புயல்.

அரசுகளை ஆட்டிப் படைத்து வந்த வேத மார்க்கம், மனித குலத்தின் மாண்பையே மாய்த்துவிடும் என்று எடுத்துரைத்த பகுத்தறிவு மார்க்கம், புத்த மதம்.

வேத மார்க்கத்தவர் திண்டாடித் தவிக்கும் விதமான அறிவுப் பிரசாரம் நடாத்தி, பாமரனும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்குப் பகுத்தறிவு புகட்டி, மணிதகுல மேம்பாட்டுக்குத் தேவையான பண்புகளை எடுத்துக் காட்டிய, புத்த மார்க்கம், எளிதிலே கிடைத்ததல்ல—இந்த அறிவாயுதத்தைக் காண சித்தார்த்தர் பட்டபாடு கொஞ்சமல்ல.

அரச மன்றங்களிலெல்லாம் ஆரியக் குருமார்கள் ஆதிக்கம் பெற்றிருந்த காலம்.

காலாகாலத்தில் மழை பெய்யாவிட்டாலும், கொடிய நோய் ஏதேனும் ஏற்பட்டாலும், போர் மூண்டாலும், பூபதிக்குப் புத்ரபாக்கியம் இல்லை என்றாலும், வேள்விகளைச் செய்து, விசேஷ பலன்களைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை ஆழப் பதிந்திருந்த காலம். படைபலத்தை விட அதிகமாக, பூஜாபலத்தை நம்பிக்கொண்டு, மன்னர்கள் இருந்த காலம்.

சோமதேவனுக்கும், இந்திரனுக்கும்,வாயுவுக்கும், வருணனுக்கும், அக்கினிக்கும் மற்றும் பல தேவதைகளுக்கும், ‘யாகம்’ செய்யப்பட்டு, ஒவ்வோர் வகையான யாகத்தின் மூலமும் ஒவ்வோர் விதமான ‘பலன்’ கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், நாடாள்வோர் இருந்த காலம். ஓம குண்டத்தருகே கிளம்பும் வேதமந்திர ஒலிக்கு ஈடான சக்தி வாய்ந்த குரல்; வேறெதற்கும் இல்லை என்று பலரும் நம்பிக்கொண்டிருந்த நாட்கள். வேள்வி நடத்தவும் வேத மோதவும் ‘பிராமணர்’களுக்கு மட்டுமே பிறப்புரிமை உண்டு என்ற ‘தர்மம்’ எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்த காலம்.

பிராமண மார்க்கம், ஈடு எதிர்ப்பற்று அரசோச்சி வந்த நேரம்.

ஜாதி முறையைச் சந்தேகிக்கவோ, எதிர்க்கவோ, முடியும் என்ற எண்ணமே, ஏற்படாத நாட்கள்.

கடவுள், அவரவர்களுக்கென்று, குலத்தையும், ஒவ்வோர் குலத்துக்கென ஓர் தர்மத்தையும்,ஏற்கனவே அமைத்து வைத்துவிட்டிருக்கிறார், எனவே அந்தத் தர்மத்தைத் தவறினால் ஆண்டவனால் அழிக்கப்படுவர், என்ற அச்சம், எவர் உள்ளத்திலும் குடிகொண்டிருந்த காலம்.

வீராதி வீரனும், சாம்ராஜ்ய சிருஷ்டிகர்த்தாக்களும், பிராமண மார்க்கத்துக்கு அடிபணிந்தாலொழிய வாழமுடியாது என்ற அளவுக்கு, வைதிக மார்க்கத்துக்கு ஆதிக்கம் இருந்த காலம்.

விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பிரம்மாண்டமான கோயில்கள் கட்டப்பட்டு வேந்தர்களின் காணிக்கைகள் குவிக்கப்பட்டு, வேதமோதிகளின், ஆதிக்கத்தின் கீழ்விடப்பட்டிருந்த காலம்.

ஆலய அதிபர்களாக ஆரியக் குருமார்கள் வீற்றிருந்த காலம்.

அவர்களின் தாய்மொழியான, சமஸ்கிருதம், ‘தேவ பாஷை’ என்பதை, அனைவரும் ஏற்றுக்கொண்டிருந்த நாட்கள்.

ஜெபமாலை, செங்கோலை ஆட்டிப்படைத்த காலம்.

பூஜாரியின் கண் செல்லும் வழி செல்ல பூபதிகள் காத்துக்கிடந்த காலம்.

வங்கம், கலிங்கம், துளுவம், பாஞ்சாலம், நேபாளம், கூர்ஜரம், மகதம், அங்கம், எனும் எந்த அரசிலும், வைதீக பிராமண மார்க்கமே, ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த காலம்.

வேதமார்க்கம், வேள்வி முறை, ஜாதி, அமைப்பு, குல தர்மம், மந்திர உச்சாடன பலம், எனும் இம் முறைகளுக்கு, மேலானவைகளாகவோ, இவைகளைப் போன்றவைகளாகவோ வேறு ஏதேனும் இருக்கிறதா, என்ற கேள்வியே பிறக்காத காலம்.

வேத மார்க்கத்தின் பயனாக, ஜாதி முறையும், ஜாதி முறையின் பயனாக, பிராமண ஆதிக்கமும் ஏற்பட்டிருக்கிறதே, இது சரியா, பயன் தருவதுதானா என்பது பற்றி, எண்ணமும் எழாமலிருந்தது.


வேதமோதி வேள்வி நடாத்துவதன்மூலம், இகத்திலே இடுக்கண்களைக் களைந்துகொள்ள முடிவதில்லையே, வாழ்க்கையிலே ஏற்படும் கஷ்டங்களும், பஞ்சம், பிணி, போர், கலகம் முதலிய பெரும் நாசப் புயல்கள் வீசாமல் தடுக்க முடிவதில்லையே, இந்நிலையிலே, வைதிக மார்க்கம், என்ன சாதித்துவிட்டது, என்று எவரும் கேட்கத் துணியவில்லை.

சாந்தி இல்லை—சமர்கள் ஏராளம்! ராஜகோலாகலத்துக்குக் குறைவில்லை இராப்பட்டினிகளுக்கும் குறைவில்லை! கண்டாரைக் கொல்லும் கட்டழகியருக்கும், காதல் வாழ்க்கை நடத்தும் சீமான்களுக்கும் குறைவில்லை—கண்டு கொண்டிருக்கும் போதே, ஊன் உருகி, எலும்புக்கூடாகி, மடியும், பஞ்சைகளுக்கும் குறைவில்லை!

இன்பத்துக்கு அருகே துன்பம்! செல்வத்துக்கு அருகே வறுமை! அரண்மனைக்கருகே அன்னக்காவடிகள்! சாந்தோபதேச மண்டபத்துக்கருகே பாசறைகள், மாயப் பிரஞ்ச உபதேசியாருக்குப் பக்கத்திலே, மண்டலம் பல ஜெயித்து, மணிமுடியின் ஜொலிப்பை அதிகப்படுத்திடும், கூர்வாள் ஏந்திய படைத்தலைவர்! இப்படி இருந்தது—இவ்வண்ணமிருப்பது சரியா என்ற கேள்வியும் எழாமலிருந்தது.

மழை இல்லையா, வருண பூஜை செய்வோம்–மாற்றானை வெல்லவேண்டுமா, மற்றோர் யாகம் செய்வோம்—ஆடுகள், பசுக்கள் (முக்கியமான நேரத்திலே நாபலியும்கூட) அறுத்துப் போட்டு, வேள்வி நடாத்துவோம்—விசேஷ பலன் கிடைக்கும் என்று குருமார்கள் கூறக் கேட்டு, கோல்கொண்டோன் அதுபோலவே செய்திடும் காலம்.

அந்தக் காலத் திரையைக் கிழித்துக்கொண்டு கிளம்பிற்று, கதிரொளி—கபிலவஸ்து நகரில்.

ஆரிய மார்க்கத்தின் கோட்டையாக விளங்கிய அரண்மனைக்குள்ளிருந்தே கிளம்பிற்று, ஆரியத்தை ஒழிக்கும் அறிவொளி!

அரச வம்சத்தை ஆட்டிப் படைத்த ஆரியமார்க்கத்தை எதிர்த்திடும் ஆற்றலுள்ள ஆண்மகனொருவன், அதே அரச வம்சத்திலிருந்தே கிளம்பினான்!

ஆரிய மார்க்கத்தினர், எதிர்பார்த்திருக்கவே முடியாத இடத்திலிருந்து கிளம்பிற்று, புத்தொளி—புத்தமார்க்கம்.

பூர்வ புண்ய பலனால், அரசனாகப் பிறந்து, பிராமண ஆசீர்வாத பலனால் வாழ்ந்துவரும், எத்தனையோ ‘ராஜா’க்களிலே அவரும் ஒருவர்தான்.

அவர், மற்ற மன்னர்களைப் போலவே, ஆரியத்துக்கு, செல்வத்தையும் அன்பையும் காணிக்கையாக அளித்தவர் தான்—அறிவுப் புரட்சிக்கென அவர் ஓர் ஒப்பற்ற காணிக்கையை—சித்தார்த்தரைத் தருவார் என்று ஆரியம், எண்ணியிருந்திருக்க முடியாது ஆரிய ஆசிர்வாத பலனாலேயே, தமக்கோர் ஆண்மகவு பிறந்தது என்று தான், மன்னர் எண்ணிக் களித்திருப்பார். அவர்என்னகண்டார், தங்கத் தொட்டிலில் புன்னகை தவழும் முகத்துடன் உள்ள அக்குழந்தை மக்களின் எண்ணத்துறையிலே, பெரியதோர் புயலைக்கிளப்பப் போகிறது என்பதை.

இளவரசர் பிறந்திருக்கிறார்!—என்று தான் மக்கள் எண்ணிப் பூரித்தனர்—புதுமார்க்கப் போதகர் பிறந்தார், என்று எங்கனம் அறிவர்.

அரண்மனையில் தாதியரும் ஊழியரும் சீராட்டிப் பாராட்ட, மன்னரும் அவர்தம் மனையாட்டியும் மகிழ்ந்து கொண்டாட, சித்தார்த்தர் வளர்ந்து வந்தார்.

'ஆரியகும், தமது அடிபணியப் புதிய ராஜகுமாரன் வளர்ந்து வருகிறான்’ என்று தான் எண்ணினர்.

எல்லா அரசிளங்குமார் போலவே அவருக்கும் திருமணம் நடந்தது—பேசும் பொற்சித்திரம் அவருக்கு கிடைத்த இல்லாள்! இன்பப் பெருக்காம், குழந்தையும் பிறந்தது—இன்னமும் என்ன வேண்டும்? பொன் விலங்கு போதுமான அளவுக்குப் பூட்டப்பட்டு விட்டது! சித்தார்த்தருக்குள் புத்தர் இருப்பது யாருக்கும் தெரியவில்லை—எதிர்கால அரசர்மட்டுமே அனைவர் கண்களுக்கும் தெரிந்தார்.

அவர் கண்களிலேயோ, மனிதன் தெரியலானான்!
வறுமையின் பிடியிலே சிக்கிய மனிதன்!
மரணத்தால் தழுவப்பட்டுவிட்ட மனிதன்!

இந்தக் காட்சிகளைக் கண்டார் சித்தார்த்தர், மெள்ளச் சிரித்தார்!

மனிதன் என்றால் இதுதானா!—என்று சிந்தை குழம்பிய நிலையில் கேட்டார் சித்தார்த்தர்—“வேறென்னவாம்! மனிதன் என்றால் மலர்முகவதி, அவள் தரும் மதுநிகர் இன்பம், மழலை மொழிக் குழவி, மணம் தரும் தோட்டம், மந்தகாசம் தரும் அரசு, இவ்வளவுதான் என்றுஎண்ணிக்கொண்டாய்! மனிதன் துக்கம், பிணி, மரணம், எனும் கொடிய பிடிகளிலே சிக்கிக் கொள்ளக்கூடிய மிக மிகப் பலஹீனன், என்றார் புத்தர் ! ஏன்? என்று அச்சத்துடன் கேட்டார் சித்தார்த்தர்—இதுவரையாரும் கேட்காதகேள்வி இது என்றார் புத்தர்—பதில் கிடைத்தாக வேண்டுமே, பதில் கிடைக்காவிட்டால் மனக் கொந்தளிப்பு அடங்காதே என்று கூறினார் சித்தார்த்தர். பதில் தெரியவேண்டுமா—தேடு,கிடைக்கும் என்றார் புத்தர். தேடத்தொடங்கினார்—அரண்மனை, அழகு மனைவி, அன்புக்கனி, எதுவும் அவரைத் தடுக்கமுடியவில்லை —தேடினார், தேடினார்—காடுகளில் கானாறுகளில், கடும் தவத்தில், குருமார்களிடத்தில், தேடாத இடமில்லை—நாடாதமுறைகிடையாது. சித்தார்த்தருக்கு விடைகிடைக்கவில்லை, விசாரம் மேலிட்டது—கிடைக்குமிடத்தை விட்டு வேறு எங்கெங்கோ தேடி அலைகிறாயே!—என்று கேலிபேசினார், உள்ளே இருந்தவர்—எங்கே இருக்கிறது, என்றுகேட்டார் சித்தார்த்தர்—உன்னிடமே இருக்கிறது, உள்ளத்திலேயே இருக்கிறது என்றார் உள்ளுறைபவர்—புன்னகை பேரறிவு கிடைத்தது.

சித்தார்த்தர்—புத்தரானார்—சிறுமதியாளரின் செருக்கும் பகையும் அவரைத் தொடவும் சக்தியற்றுப் போயின. அவருடைய அறிவுரை கேட்க, ஆயிரமாயிரம் மக்கள் கூடுகின்றனர்! அவர் நடமாடும்காடுகள், நாடுகளாகின்றன! அவர் தங்கும் இடம், புனிதம் பெறுகிறது! அவர் மொழி, புது வழியைக் காட்டுகிறது.

மன்னராகி மணி முடி தரித்து, படைபலத்துடன், சித்தார்த்தர், வேறு அரசுகளுக்குள் சென்றிருந்தால், அவரை வாளும் வேலும், கரியும் பரியும், ஆளும் அம்பும், சதியும் பிறவும், எதிர்த்துத் தாக்கியிருக்கும்—வென்றால், தோற்ற மன்னர்கள், பொறாமையால் அவரைத் தூற்றியிருப்பர்—தோற்றுப்போயிருந்தால், வெற்றிபெற்றவேந்தன், அவரை விரட்டி விரட்டி அடித்திருப்பான்.

இதோ வருகிறார் புத்தர்—அரசர்கள், எதிர்கொண்டழைக்கிறார்கள். அவர் பார்க்கிறார், மன்னர்கள், தங்களைப் பாக்கியசாலிகளென்று கருதிப்பூரிக்கிறார்கள். அரசுகள் பல அவர் இட்ட கட்டளையை நிறைவேற்ற முன் வருகின்றனர். அரசர் பலர், அவருக்கு ஏவலராகின்றனர். புதியதோர் சாம்ராஜ்யம், போரும்பகையும் இன்றி, அன்பும் அறமும்கொண்டு ஆக்கப்பட்டு விட்டது.

வேத நிந்தகன்—என்றுவெறுப்புடன், ஆனால், மெதுவாகத்தான், கூறுகிறார்கள், வைதீகமார்க்கக் குருமார்கள்.

வாதத்திற்கு இழுத்து, வம்பு வல்லடியில் ஈடுபட வைப்போம், என்று எண்ணி, பிரபஞ்சத்தின் ஆதி அந்தம் கூறவல்லாயோ, மரணத்துக்குப்பின் ஜீவன் உள்ள நிலையை அறிந்துரைக்க வல்லாயோ? ஆதிமத்யாந்தரகிதனின் அந்த சங்கத்தை அறிந்திடும் ஆற்றல் பெற்றாயோ?—என்று ஆர்ப்பரிக்கின்றனர், ஆரிய குருமார் சிலர். அவர் புன்னகை புரிகிறார் என் கடன், இவ்வுலகிலே உள்ள மக்கள் தூயவர்களாக வாழ்வதற்கு என்ன வழி என்பதுபற்றிய எண்ணத்தை வெளியிடுவதுதான்—என்று கூறுகிறார். சுழலில் சிக்க மறுக்கிறாரே, என்று சூதுமதியினர் ஆயாசமடைகின்றனர்; அவரோ, அரசு பல வென்று, முரசு கொட்டியபடி செல்கிறார்.

வேதத்தை—வேள்வியை—ஜாதியை—பேதத்தை—அவர் அறவே கண்டித்து வருகிறார்.

நாட்டிடை உலவி, காய்ந்த புல்லினைக் காட்டி, தீ மூட்டி, ஆண்டவனின் படைப்புகளைக் கொன்று, அதிலே கொட்டி, மந்திரம் ஜெபித்து, அதன்மூலம், மக்களை ஈடேற்றும் வேள்வி முறையை, அவர் மடைமை, கொடுமை, என்று கண்டிக்கிறார். ஆரியம் திணறுகிறது.

நிரீஸ்வரவாதி!—என்று நிந்திக்கிறார்கள்—அவரை—ஆனால் உரத்த குரலில் அல்ல! புத்தர்பக்கம் நாட்டவர் திரண்டெழுந்து நிற்கின்றனர்.

மன்னர்களுக்குப் புதியதோர் சிக்கல் ஏற்பட்டுவிட்டது. மக்கள் புதியதோர் மகானிடம் சொக்கிக் கிடக்கிறார்கள், அவரோ புதியதோர் மார்க்கத்தைக் காட்டுகிறார்; அந்தப் புதிய மார்க்கமோ, பூசுரத் தலைவர்கள் கூறிவரும் கொள்கைகளை மறுப்பதாக இருக்கிறது; அந்தப் பூசுரத் தலைவர்களோ, தங்களுக்குப் பரம்பரைக்குருமார்கள்; அவர்களின் ஆசீர்வாத பலம் இல்லாத அரசு ஆண்டவனால் அழிக்கப்பட்டுவிடும் என்று அச்சம் வேறு இருக்கிறது; இந்நிலையில், என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்தனர், மன்னர்கள்.

புத்த மார்க்கத்தை அலட்சியப்படுத்திடவோ முடியவில்லை. மக்கள், அதன் வயப்பட்ட வண்ணமிருக்கிறார்கள். பழைய வைதீக பிராமண மார்க்கத்தையோ அடியோடு வெறுத்துத் தள்ளிவிடுவதற்கில்லை. பல இடங்களிலே அரச மதமாக இருக்கிறது ஆரியம். இந்தச் சிக்கல், மன்னர்களுக்கு.

மக்களின் மனதை மயக்கி, அதன்மூலம், மன்னர்களை மருளச்செய்து மண்டலம் பலவற்றிலும் வெற்றிகொள்ளும் புத்த மார்க்கத்தை எதிர்த்தொழிக்கும் ஆற்றல் இல்லை, ஆரியமதத் தலைவர்களுக்கு. அலட்சியப்படுத்திப் பார்த்தனர்—பலனில்லை. அவன் ஒர் மாயாவி; மக்களை வசியப் படுத்துகிறான், என்று பேசிப் பார்த்தனர்; பலன் இல்லை! அவன் வேத நிந்தகன், நாஸ்திகன், என்று தூற்றிப் பார்த்தனர்; அதிலும் பலன் இல்லை! அருளொழுகும் கண்களுடன் புத்தர், இந்த அவனியையே தன் அரசுக்குக் கொண்டு வந்து விடுவார்போல் தெரிந்தது—அஞ்சினர்.

எதிர்த்தொழிக்க முடியாததை, அடுத்துக் கெடுத்து விடலாமல்லவா! அச்சம் கொண்ட ஆரியத் தலைவர்களின் மனதிலே இந்த எண்ணம் உதித்தது, புதிய நம்பிக்கை கொண்டனர். புத்தரைப் புகழ்ந்து பாராட்டுவதை அவர் உரை கேட்டு விழாக்கள் நடத்துவதை, தடுக்கவில்லை; தாராளமாக இவை நடைபெறட்டும், அவர் ஓர் அருளாளர்; அவருடைய அன்பு மார்க்கம், ஆதிமகரிஷிகள் அறியாததல்ல; உபநிஷத உண்மைகளையேதான், புதிய முறையில், அந்த உத்தமர் எடுத்துரைக்கிறார்—என்று பேசலாயினர்

இந்தப் போக்கு, சிக்கலைக் கண்டு சிந்தை நொந்து கிடந்த மன்னர்களுக்கு, மிகவும் பிடித்தமானதாகிவிட்டது.

பழைய மார்க்கத்தையும் கைவிடாமல், புதிய மார்க்கத்தையும் இகழாமல், எம்மதமும் சம்மதமே என்ற போக்கைக் கொண்டனர். புத்தரின் பொன்மொழிகளையும் போற்றினர், முனிபுங்கவர்களின் முதுமொழிகளையும் போற்றினர். ஆலயங்களும் அமைத்தனர், ஆதி தெய்வங்களுக்கு; புத்த மடங்களும் கட்டித் தந்தனர், புதிய மார்க்கத்தினருக்கு. மன்னர் உதவி புரியக் கண்டு; ஆரிய குருமார்களும் மகிழ்ந்தனர். தங்கள் ஆதிக்கத்தை ஓரளவு அசைத்திடும் ஆற்றல் கொண்ட புதுப்புயலை, எதிர்ப்பதைவிட, சற்றுப் பொறுத்துக் கொண்டிருந்துவிட்டு, அதன் வேகம் தணிந்த பிறகு, மீண்டும் ஆதிக்கவேட்டை ஆடலாம் என்று திட்டமிட்டனர். வேட்டைக்காரனின் பறைஒலி கேட்டதும், அடர்ந்த புதருக்குள் பதுங்கிக்கொள்ளும் சிறுத்தைபோல, ஆள் அரவம் கேட்டதும், புற்றுக்குள் புகுந்துகொள்ளும் பாம்பு போல, ஆரிய மார்க்கம், புதிய வேகத்துடன் கிளம்பி திக்கெட்டும் வீசிய புத்த மார்க்கத்தைக் கண்டு, பதுங்கிக் கொண்டது.

சிவவிஷ்ணு ஆலயங்கள் எப்போதும்போலிருந்தன—சிகை வளர்த்து, ஜெபமாலை ஏந்திய குருமார்களும் வழக்கம்போல எங்கும் அரச அவையிலும் இருந்துவந்தனர்; திருவிழாக்கள் எப்போதும்போலவே நடைபெற்று வந்தன். ஆனால், இவைகளிடம், மக்களுக்கு முன்பிருந்த ஆர்வம் இல்லை; அவர்களின் மனமெல்லாம், புத்தர் காட்டிய புது நெறியிலே சென்று படிந்தது.

புத்த மார்க்கம், மக்களைக் கூவி அழைத்தது—அதிலும், சமூகத்திலே, ஜாதியினால் தாழ்த்தப்பட்டுக் கிடந்த மக்களை, தங்கள் மீட்சிக்கு ஓர் வழி உண்டு என்ற நம்பிக்கை கொள்ளும்படி செய்தது. ஆண்டவன் அருளைப் பெறுவது, பாமரராகிய நம்மாலும் ஆகக்கூடிய காரியம் தான் என்று பௌத்தம் கூறிற்று. அடவி சென்று கடுந்தவம் புரிந்தால்தான் அவன் அருள் பெறலாம்: வேதாகமம் தெரிந்தால்தான் திருவருள் பெற முடியும் வேள்வி செய்தால்தான் விமோசனம் கிடைக்கும், பூதேவரின் ஆசி இருந்தால்தான் இகத்திலும் பரத்திலும் இன்பம் கிடைத்திடும், என்று பழைய மார்க்கம் கூறி வந்தது! இது தங்களால் முடியாத காரியம் என்பதால், நாட்டுப் பெருங்குடி மக்கள், தங்கள் விடுதலையும் விமோசனமும் யாராவது ஓர் குருவினாலேதான் தேடித் தரமுடியும் என்று எண்ணி, மேய்ப்பவன் அழைத்துச் செல்லும் இடம் செல்லும் மந்தைபோலிருந்தனர். புத்தரோ, புதியபாதை வகுத்துக் காட்டினார்—வேதம் வேண்டுவதில்லை—வேள்வி செய்ய வேண்டுவதில்லை—தவம் தேவையில்லை, அதற்காக ஊசி முனைமீது நிற்பது, மண்டையை உருக்கும் வெயிலில் நிற்பது, நீரில், நெருப்புக்குண்டத்தில், தலைகீழாக, முட்பாயின்மீது, இவ்விமெல்லாம் இருந்தாகவேண்டும் என்பதில்லை—எல்லையற்ற இன்பம் பெற, மனத்தூய்மை வேண்டும், நல்வாழ்க்கை வாழவேண்டும், இது உன்னால் செய்யக் கூடிய காரியம்தான், என்று கூறித் தைரியமும் தன்னம்பிக்கையும் ஊட்டினார்.

ஆரியம், எல்லா நிலைகளுக்கும், பூர்வாகமத்தையே காரணமாகக் காட்டிற்று; அவன் அரசனாக இருப்பதும் இன்னொருவன் அன்னக்காவடியாக இருப்பதும்; ஒருவன் பொன்மேனியனாக இருப்பதும், மற்றொருவன் புழு நெளியும் புண்கொண்ட உடலுடன் இருப்பதும், ஒருவன செல்வத்தில் புரள்வதும் வேறொருவன் வறுமையால் வாடுவதும், எல்லாம், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட திட்டம்; தாப்பட்ட தீர்ப்பு; ஏற்படுத்தப்பட்ட அமைப்பு, கடவுளின் திட்டம்; இதை மாற்றவோ, எதிர்க்கவோ, இது கண்டு மனம் குமுறலோ, கூடாது; செய்திடின் மற்றும் பாபம் வந்து சேரும்—அந்தப் பாப மூட்டைகளைச் சுமந்துகொண்டு, நரகம் சென்று நாசமாகவேண்டும், என்று கூறிவந்தது.

புத்தமார்க்கமோ, ஒழுக்கம், ஆசையைக் களைதல், அன்பு எனும் அருமுறைகளைக் கடைப்பிடித்தால், மக்கள் பேரின்பம் பெற முடியும் என்ற நம்பிக்கையைத் தந்தது.

மக்களின் வாழ்க்கைப் பிரச்சினையை,—தேவ பாஷையில் அல்ல—மக்களின் மொழியில் கூறிற்று புத்த மார்க்கம்.

புத்த மார்க்கத்தினரின் ஒழுக்கமும் உயர் பண்பும், அன்பு நெறியும், அற உரையும், மக்களை, ஆரியத் தளைகளை நொறுக்கிடும் நிலைக்குக் கொண்டுவந்தது. அஞ்சிய ஆரியம் மூலைசென்றது, முக்காடிட்டுத் திரிந்தது, பிறகு புத்த மார்க்கத்துக்கு ‘முகஸ்துதி’ செய்யலாயிற்று! நெஞ்சிலே மூண்ட பொறாமைத் தீயை மறைத்துக்கொண்டு, புத்த மார்க்கத்தின் பொன்மொழிகளைத் தாமும் ஏற்றுக்கொண்டு, அதற்கேற்றவண்ணம், ஆரிய மார்க்கத்தின் முறைகளையும், திருத்தி அமைத்துக் கொள்வதாகக் காட்டிக்கொண்டது. ஆனால் சமயம் கிடைத்தபோதெல்லாம், கலகமூட்டிவிடுவதும், மோதுதல்களை உண்டாக்குவதுமாக இருந்தது. சிலர் வஞ்சக நினைப்புடனேயே புத்த மார்க்கத்தைத் தழுவிக் கொண்டு, உள்ளிருந்தே கேடு செய்யலாயினர்—நாலந்தா பல்கலைக்கழகமே தீயோரால் தீக்கிரையாக்கப்பட்டது. புத்தருக்குப் பிறகு, இந்தக் கேடுதரும் முறை புதிய வலிவு பெற்றது. மீண்டும் மக்களை மயக்கினர் மதவேடமிட்டு–மன்னர்களும் கிடைத்தனர்— சமர்கள், சச்சரவுகள் கிளம்பலாயின! அடுத்துக் கெடுத்தல் எனும் முறை ஆரியத்துக்கு வெற்றி தரலாயிற்று புயல் ஓய்ந்துவிட்டது—புறப்படலாம் வெளியே என்று கிளம்பினர்—கலகம், குழப்பம், பெருகிற்று—ஆரியம் மீண்டும் அரசோச்சக் கிளம்பிற்று.

தெளிவற்றோரின் மனதிலே பொருளற்ற கதைகளும் மருளூட்டும் நிகழ்ச்சிகளும், எளிதிலே மாற்றத்தை உண்டாக்கிவிடுகிறது — இந்த நிலை, ஆரியத்துக்கு மெத்தப் பயன்பட்டது.

மனதை நெகிழச்செய்யும் பிரச்சார முறையான கலையை ஆரியம் மிகமிகத் திறமையுடன் கருவியாக்கிக்கொண்டது. 

புத்தரை இகழ்வதில்லை—மாறாகப் புகழ்ந்தனர். எந்த அளவுக்கு என்றால், தமது தெய்வங்களிலே ஒருவர், என்ற அளவுக்கு—எந்த முறையிலே என்றால், புத்தர் போதித்ததும் ஆதிரிஷிமார்கள் போதித்ததும், அடிப்படையிலே ஒன்றுதான், எனவே புத்தமார்க்கத்தைக் கொண்டாடுவதற்காக, மூதாதையர் மார்க்கமான ஆரியத்தை விட்டுவிடத் தேவையில்லை, என்று பேசும் முறையிலே!!

ஆரியத்துக்குக் கிடைத்த பிரசாரசாதனம்,-கலை.

பாட்டு, கூத்து, கதை—இவை மக்கள் மனதிலே இலகுவாக ஆரியக் கருத்துக்களைப் பதியவைத்தது. சிற்பம் இந்தக் கருத்துக்களை, மக்கள் மனதிலே நெகிழச் செய்வதற்கான நீண்டகாலத் திட்டமாயிற்று!

மெள்ள மெள்ள, கள்ளத்தனம் வென்றது—வெள்ளை உள்ளத்தினர் பலியாயினர்—புத்த மாக்கம் புனிதவான்களிடம் அடைக்கலம் புகுந்தது—வெளிநாடுகளிலே ஒளிவீசிற்று—பிறந்த நாட்டிலே, மீண்டும் ஆரியமே, அரச மார்க்கமாகிவிட்டது—பாமரரை அணைத்துக்கொண்டது. புத்தர், மகா விஷ்ணுவின் அவதாரம், என்று புகழ்வதுபோலப் பேசி, பகவான் மாகாவிஷ்ணு புத்தாவதாரத்தின்போது, இன்னின்ன பெருஞ்செயல்களைச் செய்தார், பக்தகோடிகளே! இராமாவதாரத்தில், கிருஷ்ணாவதாரத்தில், பகவான் செய்த திருவிளையாடல்களைக் கேளீர் என்று பேசினர்—மக்கள் வீழ்ந்தனர்.

இதுபோல, புத்த மார்க்கத்தின் மூலம், இந்நாட்டுப் பெருங்குடி மக்கள் பெற்றிருக்கக்கூடிய பெரும் பலனை, புத்தறிவை, புத்தொளியை, பொற்கதிரை, பாழ்படுத்தி சனாதனச் சேற்றிலே மீண்டும் மக்களைத் தள்ளிற்று!! சேறு, சந்தனமணம் வீசுகிறது என்று பாமரர் நம்பினர்—சொக்கினர். ஓரளவுக்கு மக்களுக்கு விழிப்பு ஏற்பட, பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டன. உலகப் பேரறிவாளர்களின் உரைகளையும் பகுத்தறிவாளரின் பேச்சையும், மக்கள் கேட்டுக் கேட்டு, நமது நாட்களிலே மெள்ளத் திருந்தலாயினர்—ஆரியம் சீறிக் கிளம்பித் தாக்குகிறது.

நிலை இது; நாடு, இவ்வண்ணம்.

நடந்த சதி, சரிதத்தை ஊன்றிப் படித்துச் சிந்திப்பவருக்கு விளங்குகிறது—எனினும், எந்த புத்தமார்க்கத்தைச் சுட்டுப் பொசுக்கத் தமது ஆற்றல் அத்தனையையும் செலவிட்டனரோ, எந்த புத்த மார்க்கத்தை மறைந்திருந்தும் உடனிருந்தும்; உபசாரம் பேசியும், உட்சுலகம் விளைவித்தும் ஒடுக்கினரோ, அந்த புத்த மார்க்கத்தை, நாட்டிலே பெரும் அளவிலே பரவி, ஆரியத்தை வேரறக் களையும் அளவுக்குப் பரவிடமுடியாது என்றநிலை ஏற்பட்டு விட்டதாக நம்பிக்கை பிறந்ததும், அதே புத்த மார்க்கத்தை வெறுப்பதாக வெளியே தெரிய ஒட்டாதபடி தந்திரமாகநடந்து கொண்டும் பாராட்டுதலைக்கூடத் தந்து கொண்டும், வாழ்ந்து வருகிறது ஆரியம். ஜாதி இருக்கிறது—ஜாதியை ஆதரித்துப் பேசும் அறிஞர்களும் உலவுகிறார்கள் அமெரிக்கா வரை சென்று பேசுகிறார்கள்! மூட நம்பிக்கை இருக்கிறது—மூதாதையர் தந்த பொக்கிஷம் இது—இதனை இழக்கலாமா என்று மூட மதியினருக்குச் சூது மதியினர் சாகசமாகக் கூறியபடி தான் உள்ளனர்! கட்டுக் கதைகள், காவியம்! வெட்டி வேலைகள், ஆச்சாரம்! வீணருக்குவாழ்வளிக்க, திருவிழாக்கள்! எல்லாம் இருக்கிறது—எதையும் ஆதரிக்கும், துணிவும் இருக்கிறது!} இல்லாமலா, பாபு ராஜேந்திரர், இருநூறு பார்ப்பனர்களின் காலைக் கழுவினார்—நாட்டிலே ‘ரோஷ’ உணர்ச்சி தலைகாட்ட வில்லையே! இந்நிலையில் நாடு இருக்கிறது, டாக்டர், புத்தமார்க்கம் தெரிகிறது, என்று பேசுகிறார்.

குழந்தையைக் கொன்று குளத்தில் போட்டு விட்டு, அதன் காதணியைக் கொண்டுவந்து, கதறும் தாயிடம் கொடுத்து, இதை அணிந்து கொண்டு உன் அருமைக் குழந்தை துள்ளி விளையாடுவதை இப்போது நினைத்துக் கொண்டாலும், என் நெஞ்சம் வெடித்துவிடும் போலிருக்கிறது, என்று கூறிடும் கதைபோல—கதையிலேயும் இப்படிப்பட்ட காதகன் காணப்படமாட்டான்–புத்த மார்க்கத்தைப் பரவாதபடி தடுத்து, புத்தமார்க்கத்தின் மூலம் கிடைத்த பொன்னொளியைக் காண முடியாதபடி மக்களைக் கருத்துக் குருடர்களாக்கி விட்டு—இப்போது புத்தமார்க்கம், புனித மார்க்கம், அதன் பொலிவு மீண்டும் ஈண்டு தெரிகிறது என்று புகழுரை வழங்குகிறார்கள்.

புத்த மார்க்கப் பொலிவு உள்ளபடி நாட்டிலே காண வேண்டுமென்றால், புத்த மார்க்கப் பொன்னொளி மீண்டும் மக்களுக்குத் தெரியவேண்டுமானால், மக்களின் அறிவுக்கண்கள் திறக்கப்பட வேண்டும்—கருத்தைக் கெடுக்கும் கயவர் எந்தப் பெயருடன் உலவினாலும், எத்துணை உயரத்திலே ஏறிக்கொண்டிருந்தாலும், அதனை அழித்தொழிக்கும் ஆகமையாளர்கள் முன்வரவேண்டும், டாக்டர் ராதாகிருஷ்ண போன்றார், சாஞ்சி விழாக்களிலே பேசிடும் உபசார மொழி மூலம், அந்தப் பொன்னொளியைப் பெற்றுவிட முடியாது. அந்தப் பொன்னொளியைப் பெற, போர்க்கோலம் பூண்டுள்ள பகுத்தறிவாளர்களின் கரம் வலுக்கவேண்டும்! உங்கள் கரம், என்னசெய்யப்போகிறது? புத்தரின் பொன்மொழிகளை மக்கள் உள்ளபடி அறிந்துணர, ஆரிய அந்தகாரத் திரையைக் கிழித்தெறியும் ஆண்மை மிக்க காரியத்தைச் செய்யப்போகிறதா, அல்லது, பாபு ராஜேந்திரர் செய்ததுபோல புரோகிதரின் காலைக் கழுவப்போகிறதா!–என்று கேட்டால், கோபம் வேண்டாம் நண்பர்களே—கோபம் வேண்டாம்—பதில் வேண்டும்—செயல் மூலம்!



"https://ta.wikisource.org/w/index.php?title=பொன்னொளி/பொன்னொளி&oldid=1669894" இலிருந்து மீள்விக்கப்பட்டது