பொய்மான் கரடு/குமாரி பங்கஜா
குமாரி பங்கஜா
மறுநாள் காலையில் செங்கோடக் கவுண்டன் வழக்கத்தைக் காட்டிலும் அதிக ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் கேணியிலிருந்து நெல் வயலுக்குத் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தான். கவலை ஏற்றத்தில் பூட்டியிருந்த மாடுகளைச் சக்கையாக வேலை வாங்கினான். 'டிரேய்!' 'டிரேய்!' என்று அவன் மாடுகளை அதட்டிய சத்தம் அரை மைல் தூரம் கேட்டது.
செங்கோடனுடைய உள்ளமோ அடுப்பில் வைத்த சோற்று உலையைப்போல் அடிக்கடி கொதித்துக் கொண்டும் பொங்கிக் கொண்டும் இருந்தது. குமாரி பங்கஜாவைப் பற்றி அடிக்கடி நினைவு வரத்தான் செய்தது. அதோடு அவளைப் பார்த்த இடமாகிய அரசமரமும் அதற்குப் பின்னாலிருந்த பொய்மான் கரடும் கண் முன்னால் வந்தன. பொய்மானைத் தேடிப் போவது பற்றிப் பெரியவர்கள் எத்தனையோ கதை சொல்லுவார்களே? அது தன் விஷயத்தில் சரியாகப் போய் விட்டதல்லவா?
இத்தனை நாளாகத் தன்னை விரும்பிக் கட்டிக் கொள்ளக் காத்துக் கொண்டிருந்த செம்பவளவல்லியை விட்டுவிட்டு அந்தத் தளுக்குக்காரியிடம் தன் மூட மனம் போயிற்று அல்லவா? அதற்குச் சரியான தண்டனை கிடைத்துவிட்டது. பலர் முன்னால் அவமானப்பட நேர்ந்துவிட்டது! போதும்! போதும்! இந்த ஜன்மத்துக்குப் போதும்!
செங்கோடனுடைய உள்ளக் கொதிப்பை அதிகப் படுத்தும்படியான காரியங்கள் அன்று காலையிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக நேர்ந்து கொண்டிருந்தன.
வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஒரு ஹரிஜனச் சிறுவனைச் செங்கோடன் அவ்வப்போது கூலிக்கு அமர்த்திக்கொள்வது வழக்கம். அந்தச் சிறுவன் தான் முதன்முதலில் அவனுடைய வயிற்றெரிச்சலைக் கிளப்ப ஆரம்பித்தான்.
"என்ன எசமான்! நேற்று சினிமாக் கொட்டகையிலே ஏதோ கலாட்டாவாமே..." என்று அந்தப் பையன் மேலே பேசுவதற்குள், செங்கோடன் அவனுடைய தலையில் பலமாக ஒரு குட்டுக் குட்டி, "போடா! படவா ராஸ்கோல் சினிமாவாம்! கலாட்டாவாம்! ஓடிப்போய் மடையைச் சரியாக வெட்டிவிடு! இங்கே வம்பு பேசிக்கொண்டு நின்றாயோ, மண்வெட்டியால் உன்னை ஒரே வெட்டாய் வெட்டிவிடுவேன்!" என்றேன்.
"என்னாங்க இன்றைக்கு இவ்வளவு கோபம்! போலீஸ்காரன் கிட்டப் பூசை வாங்கிக்கிட்டது நெசந்தான் போலிருக்கு!" என்று சொல்லிக்கொண்டே சின்னான் தன்னை அடிக்கவந்த செங்கோடனிடம் அகப்படாமல் ஓடித் தப்பினான்.
பிறகு கிராமத்திலிருந்து ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள். வேறு வழியாகப் போக வேண்டியவர்கள் கூடச் செங்கோடனைப் பார்த்து விசாரித்து விட்டுப் போகலாம் என்று அந்தப் பக்கமாக வந்தார்கள். ஆனால் செங்கோடன் அவர்களுடைய விசாரணை விஷயத்தில் அவ்வளவாக உற்சாகம் காட்டவில்லை.
"என்னப்பா, செங்கோடா?"
"ஓகோ! நீங்கதானா? எப்போது வந்தீங்க? கவனிக்கவே இல்லையே!"
"எங்களையெல்லாம் நீ கவனிப்பாயா? பெரிய மனுஷனாய்ப் போய்விட்டாய்!"
"அதுதான் தெரிஞ்சிருக்கே! பின்னே எதற்காக வந்தீங்க?"
"நேற்று ராத்திரி சினிமாக் கொட்டகையிலே ஏதோ கலாட்டா என்று சொன்னார்கள்! அதைப்பற்றிக் கேட்கலாம் என்று வந்தேன்."
"அதைப்பற்றி என்ன கேட்கலாம் என்று வந்தீங்க?"
"அது நெசமா, என்னதான் நடந்தது என்று கேட்பதற்காகத்தான்!"
"நெசமில்லாதது உங்கள் காதில் வந்து விழுமா?-ட்ரேய்! ட்ரேய்! சுத்தப் படுக்காங்குளி மாடு! நீயும் வெறும் வம்பு கேட்டுக்கொண்டா நிற்கிறாய்? வேலை வெட்டி இல்லாத பெரிய மனிதர்கள் தான் வம்பு பேசுவதற்காக வருகிறாங்க! உனக்கு என்ன கேடு! ட்ரேய்! ட்ரேய்!"
இப்படியாக மாட்டைத் திட்டுகிறதுபோல் வம்பு பேச வந்தவர்களையெல்லாம் திட்டிச் செங்கோடன் அனுப்பிக் கொண்டு வந்தான். கடைசியாக, ஒரே ஓர் ஆசாமியிடம் அவனுடைய ஜம்பம் பலிக்கவில்லை. அன்றைக்குச் செம்பா வராமலிருந்தால் நல்லது என்று செங்கோடன் எண்ணிக் கொண்டிருந்தான். தன்னுடைய மனம் சரியில்லாத நிலைமையில் தாறுமாறாக ஏதாவது தான் பேசிவிட்டால் என்ன செய்கிறது என்று அவனுக்குக் கவலையாயிருந்தது. ஆனால் நாம் விரும்பியபடி இந்த உலகத்தில் என்னதான் நடக்கிறது? செம்பா வழக்கமாகத் தன் அப்பனுக்கு சோறு கொண்டு போகும் வழியில் செங்கோடன் கேணிக்கு வந்து சேர்ந்தாள்.
செங்கோடன் அவளை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்துவிட்டு, மறுபடி 'ட்ரேய்' 'ட்ரேய்' என்று மாட்டை ஓட்டத் தொடங்கினான்.
கேணித் தண்ணீர் வாய்க்காலில் விழும் சலசலப்புச் சத்தம் தொடர்ந்து கேட்டது.
செம்பா கொஞ்சம் நேரம் நின்று பார்த்தாள். செங்கோடன் அவளைப் பார்த்துப் பேசாமலிருக்கவே அவளுக்கும் கோபம் வந்துவிட்டது.
"ஓகோ! இதற்குள் அவ்வளவு ராங்கி வந்துவிட்டதா? என்னைப் பார்த்துப் பேசக்கூட பிடிக்காமல் போய்விட்டதா? ஒரு நாளிலேயே இப்படியா? சரி; நான் போய்விட்டு வாரேன்!" என்றாள் செம்பா.
"போவானேன்? அப்புறம் திரும்பி வருவானேன்?" என்றான் செங்கோடன்.
"நான் திரும்பி வந்தால் உனக்கு இனிமேல் பிடிக்காதுதான்! ஒரே போக்காக நான் தொலைந்து போய்விட்டால் உனக்குச் சந்தோஷமாயிருக்கும்! இல்லையா?"
"எதற்காக இவ்வளவு கோபதாபம் என்று தெரியவில்லை. இப்போது என்ன வந்துவிட்டது? நேற்றைக்கு இந்த நேரத்திலேதான் எல்லாம் பேசி முடிவு செய்து கொண்டோமே!"
"நேற்றுச் சங்கதி நேற்றோடு போய்விட்டது. இன்றைக்கு என்ன? எல்லாம் எனக்குத் தெரியும். என்னிடம் மறைக்கலாம் என்று பார்க்காதே!"
"என்னத்தை நான் செய்துவிட்டேன். என்னத்தை உன்னிடம் மறைக்கப் போகிறேன்?"
"ஏ ஆத்தாடி! இந்த ஆண்பிள்ளைகளின் புனை சுருட்டை என்னவென்று சொல்ல? நேற்றுச் சாயங்காலம் அரசமரத்தடியில் நீ அந்தப் பெண்பிள்ளையைப் பார்த்து இளிச்சிக்கிடு நின்றது, அப்புறம் சினிமாவிலே அவளைத் தூக்கிக்கிட்டு ஓடியது எல்லாம் எனக்குத் தெரியாது என்றா எண்ணிக் கொண்டாய்?"
செங்கோடனுடைய மனத்தில் சுருக்கென்றது; முகத்தில் அசடு வழிந்தது. ஆயினும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு, "நேற்றுச் சங்கதி நேற்றோடு போயிற்று என்று நீதானே சற்று முன்பு சொன்னாய்?" என்றான்.
"நம்முடைய பேச்சைப்பற்றியல்லவா சொன்னேன்? அந்தப் பெண்பிள்ளை அப்படி நேற்றுச் சங்கதி என்று விட்டு விடுவாளா! அந்த...." என்று செம்பவளவல்லி இங்கு எழுதத் தகாத வசை ஒன்றைச் சொன்னாள்.
"இந்தா! இதோ பார்! என்னை நீ என்ன வேணுமானாலும் ஏசிக்கொள்! என் முட்டாள்தனத்துக்கு வேண்டியதுதான் என்று ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அந்நியப்பெண் பிள்ளையைப்பற்றிக் கன்னாபின்னாவென்று பேசாதே! நாக்கு அழுகிப் போகும்!" என்றான் செங்கோடன்.
"என் நாக்கு எதற்காக அழுகவேண்டும்! பொய்யும் புனைசுருட்டும் சொல்லுகிறவர்கள் நாக்கு அழுகட்டும்! அவள் அந்நியப் பெண்பிள்ளையாயிருந்தால், இங்கே எதற்காகப் பட்டப் பகலில் உன்னைத் தேடிக்கொண்டு வருகிறாள்? பட்டிக்காட்டுக் குடியானவன் வயலுக்குத் தண்ணீர் இறைக்கும் இடத்தில் பட்டணத்துச் சீமாட்டிக்கு என்ன வேலை?" என்றாள் செம்பா.
"செம்பா! என்ன உளறுகிறாய்? பட்டணத்துச் சீமாட்டியாவது, இங்கே என்னைத் தேடிக்கொண்டு வரவாவது? எப்போது வந்தாள்? ஒரே புளுகாய்ப் புளுகுகிறாயே?" "நான் புளுகினால் என் நாக்கு அழுகிப் போகட்டும். என் தலையில் இடி விழட்டும், மாரியாத்தா என்னைக் கொண்டு போகட்டும். நீ சொல்லுவது பொய்யாக இருந்தால்?"
"ஐயையோ! எதற்காக இப்படியெல்லாம் கோரமான சபதங்களைச் செய்கிறாய்?"
"இங்கே இந்த மேட்டிலே ஏறி வந்து நீயே பார்த்துக் கொள்; வருகிறாளா, இல்லையா என்று. நான் இச்சமயம் வந்தது உனக்கு ஏன் பிடிக்கவில்லையென்று இப்போதல்லவா தெரிகிறது! பூசைவேளையில் கரடி புகுந்தது போல் நான் வந்துவிட்டேன். ஆனால் நான் வெட்கத்தையும் மானத்தையும் விட்டவள் அல்ல. யாராவது காலிலே விழுந்து கேட்டுக்கொண்டாலும் இங்கே ஒரு நிமிஷங்கூட நான் தாமதிக்க மாட்டேன். நீயும் உன் மோகனாங்கியும் கழுத்திலே கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றிலே விழுந்தாலும் சரிதான்!"
செம்பாவின் வார்த்தைகள் செங்கோடன் மனத்தில் ஓர் ஆசையையும் ஒரு நம்பிக்கையையும் உண்டு பண்ணின. கொஞ்சம் பயமும் ஆவலுங்கூடத் தோன்றின. கவலை மாடுகளை அப்படியே விட்டுவிட்டு, கிணற்றங்கரை வாய்க்கால் மேட்டில் ஏறிப் பார்த்தான். செம்பா சொன்னது உண்மைதான். சற்றுத்தூரத்தில் குமாரி பங்கஜா வந்து கொண்டிருந்தாள். ஆனால் தனியாக வரவில்லை. அவளுக்கு இருபுறத்திலும் இரு ஆண்பிள்ளைகள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் சினிமாக் கொட்டைகையில் செங்கோடன் அரைகுறையாகப் பார்த்த மனிதர்கள் என்றே தோன்றியது.
செங்கோடன் முகத்தில் அவனை அறியாமல் ஒரு மலர்ச்சி, ஒரு புன்னகை தோன்றியது. அதோடு கொஞ்சம் அசடும் வழிந்தது. செம்பா அதைப் பார்த்துப் பொங்கினாள்.
"அடே! அப்பா! சந்தோஷத்தைப் பார்! வாயிலுள்ள அத்தனை பல்லுந் தெரிகிறதே?" என்றாள்.
"அவர்கள் வேறு எங்கேயாவது போகிறார்களோ, என்னமோ? என்னைப் பார்க்கத்தான் வருகிறார்கள் என்று எதனால் சொல்கிறாய்?" என்றான் செங்கோடன்.
"எல்லாம் எனக்குத் தெரியும், கவுண்டா! பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும். பின்னே எதற்காக அந்த அல்லி ராணி இந்தக் காட்டிலும் மேட்டிலும் நடந்து வருகிறாள்? ஒன்று சொல்கிறேன்; அதை மட்டும் மனசில் நன்றாகப் பதித்து வைத்துக்கொள்! நன்றாய்த் தீட்டிக் கூராக்கி ஒரு கத்தி வைத்திருக்கிறேன். சமயம் பார்த்திருக்கிறேன். அந்தக் கத்தியினால் குத்திக் கொன்றும் விடப்போகிறேன். அப்படிச் செய்யாவிட்டால் என் பெயர் செம்பா அல்ல; என் பெயரை மாற்றி அழை!"
"செம்பா! எதற்காக இந்த மாதிரி கொடுமையான வார்த்தை சொல்லுகிறாய்? அந்தப் பெண் உன்னை என்ன செய்தாள்? நான் தான் அப்படி என்ன செய்துவிட்டேன்?"
"அவள் என்ன செய்தாளோ? நீ என்ன செய்தாயோ! இரண்டு பேரும் கோவலன்-மாதவி நாடகம் நிஜமாகவே நடத்தப் பார்க்கிறீர்கள். ஆனால் கண்ணகியைப் போல் நான் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டேன். என்னுடைய பாட்டன் ஒன்பது பேரைக் கொலை செய்து விட்டு, 'எல்லாக் கொலைக்கும் ஒரே தூக்கு மேடைதானே' என்று சொன்னவன்! தெரியும் அல்லவா? அவனுடைய இரத்தம் என் உடம்பிலும் ஓடுகிறது என்பதை மனசில் வைத்துக்கொள்!"
இப்படிச் சொல்லிவிட்டுச் செம்பா விடுவிடு என்று வேறு பக்கமாக நடந்து போனாள்.
குமாரி பங்கஜாவும் மற்ற இருவரும் கேணியை நெருங்கி வந்து கொண்டிருந்தார்கள். செங்கோடன் கேணிக் கரையில் மடித்து வைத்திருந்த பட்டுச் சட்டையை அவசர அவசரமாக எடுத்துப் போட்டுக் கொண்டான்!