பீதி

செங்கோடன் முதலில் கொஞ்ச நேரம் குடல் தெறிக்க ஓடினான். பிறகு அவனுக்கே, 'எதற்காக இப்படி ஓடுகிறோம்? என்ன பைத்தியக்காரத்தனம்!' என்று தோன்றியது. ஓட்டம் நடையாக மாறியது. குடிசையில் தான் பார்த்த வெளிச்சம் உண்மையாகப் பார்த்ததா அல்லது வீண் பிரமையா என்ற ஐயம் உதித்தது. திருட வந்தவர்கள் அவ்வளவு பெரிய வெளிச்சம் போட்டுக் கொண்டா திருடுவார்கள்? அவ்வளவு துணிச்சலுடன் திருட வரக் கூடியவர்கள்தான் யார்? அந்தப் பட்டணத்துச் சோம்பேறிகளுக்கு அவ்வளவு தைரியமா? ஒருநாளும் இராது!-வீண்பயம்!-ஒருவேளை செம்பா வந்திருப்பாள். தன்னைக் காணாதபடியால் சிறிது நேரம் காத்திருக்கலாமென்று விளக்கேற்றி இருப்பாள்... இருந்தாலும் குடிசை ஓலைக் குடிசை, பக்கத்தில் வைக்கோலும் சோளத் தட்டையும் போர் போட்டிருக்கிறது. விளக்கேற்றும் போதுகூட ஜாக்கிரதையாக ஏற்ற வேண்டும். ஆனால் செம்பா மிகக் கெட்டிக்காரி! அவளுக்கு ஜாக்கிரதை சொல்லித் தர வேண்டியதில்லை.

நடை கொஞ்சம் மெதுவானதும், "கவுண்டரே! கவுண்டரே!" என்று கூச்சல் போட்டுக்கொண்டு ஓடிவந்து குமாரி பங்கஜா செங்கோடனுடைய கையைப் பிடித்துக் கொண்டாள். "இப்படி என்னை விட்டுவிட்டு ஓடி வரலாமா!" என்று கேட்டாள்.

"சனியனே! நீ விடாமல் தொடர்ந்து வந்துவிட்டாயா? நீ வருவது தெரிந்திருந்தால் ஓட்டத்தை நிறுத்தியிருக்க மாட்டேனே?" என்றான்.

கையை உதறி குமாரி பங்கஜாவைத் தடுமாறிக் கீழே விழச் செய்துவிட்டுச் செங்கோடன் மறுபடியும் விரைவாக நடந்தான்.

"ஐயோ! நான் விழுந்துவிட்டேன். கொஞ்சம் இரு! என்னைத் தூக்கிவிடு" என்று பங்கஜா கத்தினான்.

செங்கோடன் அவளைத் திரும்பியே பார்க்காமல் நடந்தான்.

குடிசைக்குச் சுமார் நூறு கஜ தூரத்தில் வந்தபோது சோளக் கொல்லையில் ஏதோ வெள்ளையாய் விழுந்து கிடப்பது அவன் கண்ணில் பட்டது. ஒரு தீனமான, பரிதாபமான, இதயத்தைப் பிளக்கும் துன்ப ஒலியும் கேட்டது. அது என்னவென்று பார்க்காமல் செங்கோடனால் மேலே போக முடியவில்லை. அருகில் போய்ப் பார்த்தான். அது ஒரு நாய், அது சாகும் தறுவாயில் கிடந்தது. அதன் வயிற்றிலிருந்து இரத்தம் சிந்திக் கொண்டிருந்தது.

ஐயோ! இந்த வாயில்லாப் பிராணி இங்கே எப்படி வந்தது? எந்த மகாபாவி இதை வயிற்றில் குத்திக் கொன்றான்?...ஆஹா! அந்தப் போலீஸ்காரருடைய உயர்ந்த ஜாதி நாய் அல்லவா இது? இங்கே எப்படி வந்தது? யார் இதைக் குத்தியிருப்பார்கள்?

நாயைப் பார்த்ததனால் செங்கோடனுடைய மனத்தில் திகில் அதிகமாயிற்று. அதோடு ஆத்திரமும் பரபரப்பும் மிகுந்தன. குடிசையை மேலும் அணுகிச் சென்றான். ஆனால் இப்போது சர்வ ஜாக்கிரதையுடன் எந்தவித ஆபத்துக்கும் தயாராக நடந்தான். நாயைப் பார்ப்பதற்காக நின்ற நேரத்தில் குமாரி பங்கஜா அவனை வந்து பிடித்து விட்டாள். சளசளவென்று ஏதோ அவனைக் கேள்விகள் கேட்டு பேச வைக்க முயன்றாள். எதற்காக இவள் இவ்வளவு கூச்சல் போட்டுப் பேசுகிறாள்? செவிடனுடன் பேசுவது போலப் பேசுகிறாளே ஏன்?

கேணிக்கரை மேடும் அதன் அருகில் தென்னை மரமும் குடிசை வாசற் புறத்தை மறைத்துக் கொண்டிருந்தன. ஆனால் அந்தப் பக்கத்திலிருந்து ஒரு மனிதன் வெளிப்பட்டு வந்தது தெரிந்தது. அவன் யார் என்று சீக்கிரத்திலேயே தெரிந்துவிட்டடு. எஸ்ராஜ் என்பவன் தான். இவன் ஏன் இங்கே வந்தான்? இன்னொருவன் எங்கே?-சந்தேகித்ததெல்லாம் உண்மைதான்போல் இருக்கிறது. செங்கோடா! உன்னை இந்தப் பட்டணத்துச் சோம்பேறிகள் ஏமாற்றி விட்டார்களா? நல்லவேளை! காரியம் மிஞ்சிப் போவதற்குள் வந்துவிட்டாய்! பார் ஒரு கை!

செங்கோடன் ஒரு கை பார்க்க யத்தனிப்பதற்குள்ளே வேறு காரியங்கள் நடந்துவிட்டன.

"எஸ்ராஜ்! எஸ்ராஜ்! இந்தக் கவுண்டன் என் கன்னத்தில் அறைந்தான்! விடாதே இவனை! இங்கேயே கொன்று குழியை வெட்டிப் புதைத்துவிடு!" என்று குமாரி பங்கஜா கத்தினாள்.

"அப்படியா! உன்னையா இந்தப் பட்டிக்காட்டான் தொட்டு அடித்தான்? அவ்வளவுக்கு ஆகிவிட்டதா? இதோ பார்! ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கிறேன்!" என்று எஸ்ராஜ் கர்ஜித்துக்கொண்டே செங்கோடனுடைய மார்பில் ஒரு குத்து விட்டான். அவ்வளவுதான்! செங்கோடனுடைய உள்ளத்தில் குமுறிக் கொண்டிருந்த எரிமலை பொங்கியது. எஸ்ராஜின் மார்பிலும் தலையிலும் முதுகிலும் மோவாய்க் கட்டையிலும், கண்ட கண்ட இடங்களிலெல்லாம் செங்கோடனுடைய இரும்புக் கைகள் சரமாரியாக அடிகளையும் குத்துக்களையும் பொழிந்தன.

'ஐயோ!' 'அப்பா!' 'போதும்!' 'வேண்டாம்!' என்னும் எஸ்ராஜின் அபயக் குரல்கள் செவிடன் காதில் ஊதின சங்காகவே முடிந்தன.

இவர்கள் இருவரும் இவ்விதம் முஷ்டி யுத்தம் செய்து கொண்டிருக்கையில் குமாரி பங்கஜா குடிசையை நோக்கிச் சென்றாள். கேணிக்கரையில் ஏறி அப்பாலும் இறங்கி விட்டாள்.

அச்சமயம் குடிசைக்குள்ளேயிருந்து, "ஐயோ ஓஓஓ!" என்ற ஒரு நீடித்த பரிதாப ஓலம் கேட்பவர்களின் உடம்பின் இரத்தத்தைச் சுண்டச் செய்யும் பயங்கரத்துடன் எழுந்தது. அதே குரல் ஒரு கணம் நின்று, மறுபடியும், "ஆ! செத்தேன்!" என்று அலறியது. பிறகு, ஒரு நிண்ட முக்கல், விம்மல், அப்புறம் நிச்சப்தம்! சகிக்க முடியாத நிச்சப்தம்!

முதல் ஓலத்திலேயே எஸ்ராஜும் செங்கோடனும் சண்டையை நிறுத்திவிட்டார்கள். மறுஓலத்திற்குப் பிறகு இருவரும் குடிசையை நோக்கி ஓடினார்கள். அவர்களுக்கு எதிர்ப்புறமாக வந்த குமாரி பங்கஜா கேணி மேட்டில் செங்கோடன் மேல் முட்டிக் கொண்டாள்.

"பங்கஜா! என்ன? என்ன?" என்று நடுங்கிய குரலில் எஸ்ராஜ் கேட்டான்.

"தெரியவில்லையே? ஐயோ! தெரியவில்லையே" என்றாள் பங்கஜா.

"சத்தம் குடிசைக்குள்ளிருந்தா?"

"ஆமாம்."

"நீ அங்கே-குடிசைக்குள்ளே-போனாயா?"

"இல்லை; வாசலண்டை போனதும் சத்தம் கேட்டது. திரும்பிவிட்டேன்!"

"கவுண்டரே! தீக்குச்சிப் பெட்டி வைத்திருக்கிறீரா? உள்ளே போய்ப் பார்க்கவேண்டும்?"

"பார்க்க வேண்டும்; பார்க்கத்தான் போகிறேன். முதலில் நிஜத்தைச் சொல்! எதற்காக இங்கே இந்த நேரத்தில் வந்தாய்? உன்னுடன் யார் வந்தது? குடிசைக்குள் யார்? என்ன செய்தீர்கள்?"

"அதெல்லாம் அப்புறம் சொல்கிறேன், கவுண்டரே! முதலில் உள்ளே போய்ப் பார்க்கலாம்."

"அப்படியானால் நீங்கள் இரண்டு பேரும் என்னுடன் வாருங்கள். ஓடிப் போய்விடாதீர்கள்!"

"சத்தியமாய் நாங்கள் ஓடவில்லை. எப்படி ஓட முடியும்? நடந்ததைத் தெரிந்துகொள்ளாமல்?... நீர் முதலில் தீக்குச்சிப் பெட்டியைக் கண்டுபிடித்து விளக்கைப் பொருத்தும்!"

நிலா வெளிச்சத்தில் எஸ்ராஜ், பங்கஜா இவர்களுடைய முகங்களைச் செங்கோடன் பார்த்தான். அந்த முகங்களில் பீதி குடிகொண்டிருந்தது. அவர்களுடைய கால்களும் கைகளும் வெடவெடவென்று நடுங்கின.

செங்கோடனுக்கும் திகிலாய்த்தான் இருந்தது. ஆயினும் மர்மம் இன்னதென்று தெரிந்துகொள்ள அவன் ஆவல் கொண்டிருந்தான். அதுமட்டுமா? சாம்பல் குவிந்த அடுப்பின் அடியில் யாருக்கும் தெரியாது என்று எண்ணிப் புதைத்து வைத்திருந்த பணம் என்ன ஆயிற்று? பரபரப்புடன் செங்கோடன் மேலே நடந்தான். தென்னை மரத்துக்குப் பின்னால் குடிசைச் சுவர் ஓரமாக ஒரு நிழல் ஒரு கணம் தெரிந்து உடனே மறைந்தது! சீச்சீ! செங்கோடா! உனக்குக் கூடவா இந்தப் பிரமை! பேய், பிசாசு, பூதம் எல்லாம் வெறும் பொய் என்பாயே? அறிவு எங்கே போயிற்று?

குடிசையின் முன்கூரை முகப்பில் செங்கோடன் வழக்கமாகத் தீப்பெட்டி வைப்பது வழக்கம். ஹரிக்கன் லாந்தரைச் சுவருக்கு வெளியே நீண்டிருந்த மூங்கில் கழியில் கட்டித் தொங்கவிடுவது வழக்கம். தீப்பெட்டியை வழக்கமான இடத்திலிருந்து எடுத்துக் கொண்டான்; லாந்தரையும் எடுத்துப் பொருத்தினான்.

லாந்தர் வெளிச்சத்தில் குடிசையின் வாசற் கதவு திறந்து உட்புறமாகச் சுவரோடு சாத்தியிருந்தது தெரிந்தது. திறந்திருந்த வாசற்படியின்மேல் சில இரத்தத் துளிகள் சிந்தியிருந்தன. இன்னும், அதோ இரத்தத்தைப் போலவே சிவப்பாகக் கிடந்து பளபளக்கும் பொருள் என்ன? செங்கோடன் குனிந்து அதைக் கையில் எடுத்துக் கொண்டான். பின்னால் வந்தவர்கள் அறியாதபடி அதை மடியில் செருகிக் கொண்டான். பிறகு குடிசைக்குள்ளே சென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பொய்மான்_கரடு/பீதி&oldid=6447" இலிருந்து மீள்விக்கப்பட்டது