போதி மாதவன்/அற ஆழி உருட்டுதல்

பத்தாம் இயல்

அற ஆழி உருட்டுதல்

‘தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன்
இன்பச் செவ்வி மன்பதை எய்த
அருளறம் பூண்ட ஒருபெரும் பூட்கையின்[1]
அறக்கதிர் ஆழி திறப்பட உருட்டிக்
காமற் கடந்த வாமன்......’

–மணிமேகலை


பெ
ரும் புகழ் பெற்ற பார்த்திபர் பிரசேனஜித்தின் கோசல இராஜ்யத்திலே தலைநகர் சிராவஸ்தியும், சாகேதம் என்ற அயோத்தியும், வாரணாசி என்ற காசி மாநகரும் செல்வமும் செழிப்புமுள்ள பெருநகரங்களா யிருந்தன. இவற்றில் காசி மாநகர், செல்வமும் தொழில்களும் சிறந்திருந்ததோடு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பாரத நாட்டின் ஒப்புயர்வற்ற புனிதத் தலமாகவும், பூவுலகின் புராதன நகரங்களுள் ஒன்றாகவும் விளங்குவது. புராதன காலத்தில் தோன்றிய புத்தர்கள் ஒவ்வொருவரும் அங்கேதான் முதல் முதல் அறவுரை புகன்றதாயும் கூறுவர். காசியில் வசித்தாலே கைலாயம் கிட்டிவிடும் என்பது தொன்று தொட்டே இந்துக்களின் நம்பிக்கையாகும். கங்கைக் கரையிலே மங்கலம் ஓங்கும் மணிமண்டபங்களும், ஆலயங்களும், அரண்மனைகளும் நிறைந்திருந்த அந்நகரில் எந்த நேரமும் வேத கீதங்களும், வேத பாராயணமும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். சாதுக்களும், சந்நியாசிகளும், யாத்திரிகர்களும், பிச்சைக் காரர்களும் கங்கைக் கரையின் கட்டங்களில் பல்லாயிரக்கணக்காகக் குழுமியிருப்பார்கள். கங்கை புனிதமான நதி. அதில் ஒருமுறை நீராடினாலே முன் செய்த பாபங்களெல்லாம் போகும் என்று மக்கள் அதில் குளிப்பதுடன், செம்புகளில் கங்கை நீரைத் தத்தம் ஊர்களுக்கும் எடுத்து செல்வார்கள். காசி எப்பொழுதுமே கலைகளின் இருப்பிடமாயும், கல்வியின் நிலையமாயும், தத்துவ ஞானக் களஞ்சியமாயும் விளங்கி வந்திருக்கின்றது.

பிறவிப்பிணி மருத்துவரான புத்ததேவரும் காசியை நோக்கிச் சென்றதில் வியப்பொன்றும் இல்லை. காசியிலே செய்த உபதேசம் காசினியெல்லாம் பரவிவிடும் என்ற நம்பிக்கையோடு, அவர் தமது தருமம் பற்றிய முதல் உபதேசத்தை அங்கேயே நிகழ்த்தத் தீர்மானித்திருந்தார். காசியை அடைந்த அன்று மாலையிலும் இரவிலும் ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து விட்டு, மறுநாள் காலையில் அவர் தம் பழைய சீடர்கள் ஐவரையும் தேடிக் கொண்டு அருகேயிருந்த சாரநாத்தை[2] அடைந்தார். அங்கே கௌண்டின்யர் முதலிய ஐந்து சீடர்களும், தூரத்திலிருந்தே கௌதம புத்தரின் வருகையைக் கண்டு கொண்டனர்.

மான்சோலை

தமது ஞான ஆசிரியர் தம்மைத் தேடி வருவதைப் பொருட்படுத்தாமல், அவரை வரவேற்று உபசரிக்காமல் இருக்க வேண்டும் என்று அவர்கள் தங்களுக்குள் முடிவு செய்து கொண்டனர். அத்தகைய சீடர்களைத் தேடி அண்ணல் தம் அடிகள் வருந்தும்படி நடந்து வந்தது ஏன்? அத்தகைய சீடர்களே அவருக்குத் தேவையாயிருந்தனர். ஆசிரியரே தவறு செய்வதாகத் தெரிந்தால், அவரைக் கண்டித்து ஒதுக்கிவிட்டுத் தமது இலட்சியத்தை அடைய வேண்டும் என்று பிடிவாதத்துடன் தவம் புரிந்த தவசிகள் அல்லவா அவர்கள்! உண்மையை உணர்ந்து கொண்டால், அவர்கள் தமக்கும், தமது தருமத்திற்கும் உறுதுணையாக விளங்குவார்கள் என்று பெருமான் எண்ணியது முற்றிலும் பொருத்தமே!

உடலிலிருந்து ஒளிவீசிய வண்ணம் போதிவேந்தர், ஒரு கையிலே திருவோடும், மறுகையிலே ஒரு தண்டும் ஏந்திப் புன்னகை செய்து கொண்டே, மெல்ல மெல்ல நடந்து, மான் சோலையில் அமைந்திருந்த அவர்களுடைய தவப்பள்ளியுள் நுழைந்தார். அதுவரை ஐவரும் எழுந்திருக்கவேயில்லை. ஆனால், விரைவிலே அவர்கள் சித்தம் மாறிவிட்டது. ஒவ்வொருவரும் அவரை வணங்கி உபசரிப்பதில் போட்டியிட்டனர். ஒருவர் அவருடைய கழி யையும், திருவோட்டையும் வாங்கி வைத்தார்; ஒருவர் அவருடைய திருப்பாதங்களைச் சுத்தி செய்ய நீர் அணிவித்தார்; மற்றவர்கள் ஆசனம் அமைத்தும், உடைகள் எடுத்துவந்தும் மரியாதை செய்தனர். அவர்களால் வேறு முறையில் நடந்து கொள்ள முடியவில்லை. ‘ஐய, தங்கள் உடல் நலம் எப்படியுளது?’ என்று அவர்கள் கேட்டனர்.

புத்தர், ‘எல்லாம் நலமே! எல்லா விதத்திலும் நாம் நன்மையை அடைந்துள்ளோம்– அடைதற்கு அரிதான ஞானத்தை அடைந்தாயிற்று!’ என்றார். பின்னும் அவர் சீடர்களை நோக்கி, ‘ஆனால் நீங்கள் ததாகதரைப் பெயர் சொல்லியோ, நண்பர் என்றோ அழைத்தல் தகாது; ஏனெனில் அவர் புத்தர்; போதியடைந்த புனிதர்! புத்தர் எல்லா உயிர்களிடத்தும் ஒரே தகைமையான அன்புடன் விளங்குவதால், அவர் அனைவர்க்கும் தந்தையாக விளங்குகின்றார். தந்தையை இழிவுபடுத்தல் தகாது. அவரை வெறுத்தல் பாவம்!’ என்று கூறினார். பிறகு, உடலை வருத்திக் கொடுமையான தவங்கன் செய்யாமலும், உடலின் இன்பங்களில் ஆழ்ந்திராமலும், முக்தியடைவதற்குரிய நடுநிலை வழியைத் தாம் கண்டு கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

மனிதன் மயக்கங்களிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்றும், மீன், புலால் முதலிய உணவுகளை விலக்குவதாலோ, அம்மணமாக அலைவதாலோ, தலையை மழிப்பதாலோ, சடை வளர்ப்பதாலோ, உடலில் அசுத்தமான பொருளைப் பூசிக்கொள்வதாலோ, அக்கினிக்கு ஆகுதிகள் செய்வதாலோ அவன் பரிசுத்தமாகி விட முடியாது என்றும் அவர் பல நீதிகளை விளக்கிச் சொல்லி விட்டுத் தாம் மெய்யறிவு பெற்றுக் கண்டுள்ள ‘மத்திம வழி’யாகிய தரும மார்க்கத்தை அவர்களுக்கு உபதேசம் செய்யப் போவதாக உரைத்தார்.

தரும சக்கரப் பிரவர்த்தனம்

ஐந்து சீடர்களும் அமைதியோடு ஆயத்தமாக அமர்ந்திருந்தனர். தேவர்களும், நாகர்களும் உருக் கரந்து வந்து, மான் சோலையிலே மறைந்து நின்று, செவி மடுத்துக் கொண்டிருந்தனர். பூதல மக்கள் செய்த புண்ணிய வசத்தால் புத்தர் திருவாய் மலர்ந்து போதிக்கலானார் :

‘ஓ பிக்குக்களே! அமிதமான இரண்டு வழிகள் இருக்கின்றன; உலகப் பற்றை விட்டவன் அவை களைப் பின்பற்றலாகாது. உணர்ச்சி காரணமாகவும், முக்கியமாகப் புலனுணர்ச்சி காரணமாகவும், விரும்புதற்குரிய பொருள்களால் திருப்தியடையும் இழிவான பாமர வழி ஒரு பக்கத்தில் இருக்கின்றது–அது வழக்கமாக இருந்துவரினும் தகுதியற்றது; பயனற்றது; உலகப் பற்றுள்ளவர்களுக்கே பொருத்தமானது. மற்றொரு வழி (உடலைத் துன்புறுத்திக் கொள்ளும்) கடுமையான நோன்புகளை மேற்கொள்ளும் வழி–இதுவும் வழக்கமாயிருந்து வருகிறது; இதுவும் வேதனை தருவது; பயனற்றது.

‘ஓ பிக்குக்களே! ததாகதரால் கைவிடப்பட்ட அமிதமான . இரண்டு வழிகளையும் நீக்கி, கண்களைத் திறந்து (உண்மையை ) உணரச் செய்து, மனச் சாந்தியையும், பேரறிவையும், பூரணமான மெய்ஞ்ஞானத்தையும், நிர்வாண முக்தியையும் அடைவதற்கு அழைத்துச் செல்லும் அந்த மத்திய வழி எது? அதுவே உயர்ந்த அஷ்டாங்க மார்க்கமாகும். அதாவது:

நற்காட்சி–(ஸம்மாதிட்டி)

நல்லூற்றம்–(ஸம்மாஸங்கல்ப)

நல்வாய்மை–(ஸம்மா வாசா)

நற்செய்கை–(ஸம்மா கம்மந்த)

நல்வாழ்க்கை–(ஸம்மா ஜீவ)

நல்லூக்கம்–(ஸம்மா வாயாம)

நற்கடைப்பிடி–(ஸம்மா ஸதி)

நல்லமைதி–(ஸம்மா ஸம்மதி)

‘ஓ பிக்குக்களே! ததாகதரால் னகவிடப்பட்ட அமுதமான இரண்டு வழிகளையும் நீக்கிக் கண்களைத் திறந்து, (உண்மையை) உணரச் செய்து, மனச்சாந்தியையும், பேரறிவையும், பூரணமான மெய்ஞ்ஞானத்தையும், நிர்வாண முக்தியையும் அடைவதற்கு அழைத்துச் செல்லும் அந்த மத்திய வழி இதுவேயாகும்!’

‘ஓ பிக்குக்களே! துக்கத்தைப்பற்றிய உயரிய வாய்மை இது:

‘பிறப்பிலே வேதனை இருக்கின்றது; “தளர்ச்சி வேதனை, பிணி வேதனை, மரண வேதனை, இன்பகரமா யில்லாதவைகளின் சேர்க்கை வேதனை; நிறைவேறாத ஆசையும் வேதனையானது. சுருங்கக் கூறினால், பற்றுக் காரணமாக எழும் ஐந்து உபதான ஸ்கந்தங்களுமே[3] வேதனையாயுள்ளவை.

‘ஓ பிக்குக்களே! துக்கத்தைப் பற்றிய உரிய வாய்மை இது.

ஓ! பிக்குக்களே! துக்க உற்பத்தி பற்றிய வாய்மை இது:

‘உண்மையில் இதுதான் வேட்கை-புதுப் பிறவிக்குக் காரணமானதும், புலன்கள் இன்பத்தோடு அங்கும் இங்குமாக அலைந்து இன்பத் தேட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளத் தூண்டும் வேட்கை , அதாவது, (காமம் முதலிய) உணர்ச்சிகளைத், திருப்தி செய்யவோ, (எதிர்கால) வாழ்வில் ஆசைகொள்ளவோ, அல்லது (இந்த) வாழ்வில்) வெற்றியடையவோ, கொள்ளும் பேராவல். ‘ஓ பிக்குக்களே! துக்க உற்பத்தியை பற்றிய உயரிய வாய்மை இது.

‘ஓ பிக்குக்களே! துக்க நீக்கத்தைப் பற்றிய உயரிய வாய்மை இது:

‘உண்மையில், எனது வேட்கை சம்பந்தமான காமிய உணர்ச்சி எதுவும் எஞ்சியிராமல் அழித்து விடுதலே இது (துக்க நீக்கம்). இந்த வேட்கையை ஒதுக்கி உதறித் தள்ளி விட்டு, இதிலிருந்து அறவே விடுதலையாகி, (உள்ளத்தில்) இது தங்கு வதற்கு இடமேயில்லாமற் செய்தலாகும்.

ஓ பிக்குக்களே! இதுவே துக்க நீக்கம் பற்றிய வாய்மையாகும்.

‘ஓ பிக்குக்களே! இதுவே துக்க நீக்கத்திற்கு உரிய மார்க்கம் பற்றிய உயரிய வாய்மை இது. உண்மையில், இது அஷ்டாங்க மார்க்கமே. அதாவது:

நற்காட்சி

நல்லூற்றம்

நல்வாய்மை

நற்செய்கை

நல்வாழ்க்கை

நல்லூக்கம்

நற்கடைப்பிடி

நல்லமைதி

ஆகிய எட்டுப் படிகள் உள்ள வழி.

‘ஓ பிக்குக்களே! துக்கநீக்க மார்க்கம் பற்றிய உயரிய வாய்மை இது.

‘ஓ - பிக்குக்களே! துக்கம் பற்றிய உயரிய வாய்மை இது என்பது பரம்பரையாக (நமக்கு) வந்துள்ள தத்துவங்களில் (ஒன்றாக) அமைந் திருக்கவில்லை; ஆனால் (அதைக் கண்டுகொள்ளக் கூடிய ஞானமாகிய) கண் என்னுள்ளே தோன்றியது; (அதன் இயல்புபற்றிய) அறிவு எழுந்தது; (அதன் காரணம்பற்றிய) தெளிவு ஏற்பட்டது; (சாந்தியடையும் மார்க்கத்திற்கு வழி காட்டும்) பேரறிவு உண்டாயிற்று; (அதைச் சூழ்ந்துள்ள இருளை அகற்றும்) ஒளியும் உதயமாயிற்று.

‘ஓ பிக்குக்களே! துக்கம்பற்றிய உயரிய வாய்மை இது என்பதை–இது பரம்பரையாக (நமக்கு) வந்துள்ள தந்துவங்களில் (ஒன்றாக) அமைந்திருக்கவில்லை எனினும்–நான் தெளிவாக உணர்ந்துகொள்வதற்காக, (அதைக் கண்டு கொள்ளக்கூடிய–ஞானமாகிய) கண் என்னுள்ளே தோன்றியது, (அதன் இயல்பு பற்றிய) அறிவு எழுந்தது, (அதன் காரணம் பற்றிய) தெளிவு ஏற்பட்டது (சாந்தியடையும் மார்க்கத்திற்கு வழி காட்டும்) பேரறிவு உண்டாயிற்று, (அதைச் சூழ்ந்துள்ள இருளை அகற்றும்) ஒளியும் உதயமாயிற்று.

‘ஓ பிக்குக்களே! துக்கம் பற்றிய உயரிய வாய்மை இது என்பதை-இது பரம்பரையாக (நமக்கு) வந்துள்ள தத்துவங்களில் (ஒன்றாக) அமைந்திருக்கவில்லை எனினும் - நான் தெளிவாக உணர்ந்துகொண்டேன்; (அதைக்கண்டுகொள்ளக் கூடிய ஞானமாகிய ) கண் என்னுள்ளே தோன் றியது; (அதன் இயல்புபற்றிய) அறிவு எழுந்தது; (அதன் காரணம் பற்றிய) தெளிவு ஏற்பட்டது; (சாந்தி யடையும் மார்க்கத்திற்கு வழிகாட்டும்) பேரறிவு உண்டாயிற்று; (அதைச் சூழ்ந்துள்ள இருளை அகற்றும்) ஒளியும் உதயமாயிற்று.

‘ துக்க உற்பத்தியைப் பற்றிய உயரிய வாய்மை இது என்பதை-இது பரம்பரையாக (நமக்கு) வந்துள்ள தத்துவங்களில் (ஒன்றாக) அமைந்திருக்கவில்லை எனினும்–நான் தெளிவாக உணர்ந்து கொண்டேன்.......

‘ஓ பிக்குக்களே! துக்க உற்பத்தியை நீக்கித் தள்ளுதற்குரிய வாய்மையை... நான் தெளிவாக உணந்துகொண்டேன்......

ஓ பிக்குக்களே! துக்க உற்பத்தியை நான் முற்றிலும் நீக்கித் தள்ள முடிந்தது.......

‘ஓ பிக்குக்களே! துக்க நீக்கம் பற்றிய உயரிய வாய்மை இது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்........

‘ஓ பிக்குக்களே! துக்க நீக்கத்தை நான் பூரணமாக உணர்ந்து கொள்ள முடிந்தது......

‘ஓ பிக்குக்களே! துக்க நீக்கத்தை நான் பூரணமாக நிறைவேற்றிக்கொள்ள முடிந்தது......

‘ஓ பிக்குக்களே! துக்க நீக்க மார்க்கம் பற்றிய உயரிய வாய்மை இது என்பதை நான் உணர்ந்து கொள்ள முடிந்தது......

‘ஓ பிக்குக்களே! துக்க நீக்க மார்க்கத்தை நான் அடைந்து விட்டேன்......

‘ஓ பிக்குக்களே! இந்த மூன்று வரிசைகளாக, இந்தப் பன்னிரண்டு வகைகளில் உயரிய வாய்மைகள் நான்கினில் ஒவ்வொன்றைப் பற்றியும் எனது அறிவும் உள்ளுணர்வும் முற்றும் தெளிவு கொள்ளும்வரை, (எனக்குச் சந்தேகந்தான்; )–வான மண்டலங்களிலும், அல்லது பூமியிலும், சிரமணர்கள், பிராமணர்களுடைய குலம் முழுவதிலும் தன்னிகரற்று விளங்கக்கூடிய அந்த மெய்ஞ்ஞானம் பற்றிய உள்ளுணர்வை நான் பூரணமாகப் பெற்றேனோ என்பது எனக்குச் சந்தேகந்தான்.

‘ஓ பிக்குக்களே! இந்த மூன்று வரிசைகளாக நான்கினில் ஒவ்வொன்றைப் பற்றியும், எனது அறிவும் உள்ளுணர்வும் தெளிவு கொண்டவுடனே, வான மண்டலங்களிலும் அல்லது பூமியிலும், சிரமணர்கள், பிராமணர்களுடைய குலம் முழுவதிலும், அல்லது தெய்வங்கள், மனிதர்களிடத்திலும் தன்னிகரற்று விளங்கக்கூடிய அந்த மெய்ஞ்ஞானம் பற்றிய உள்ளுணர்வை நான் பூரணமாகப் பெற்றுவிட்டேன் என்பது எனக்கு நிச்சயமாயிற்று.

‘ஆகவே இப்பொழுது இந்த அறிவு–இந்த உள்ளுணர்வு–என்னுள்ளே எழுந்துள்ளது. என் இதயத்தின் விடுதலை அசைக்க முடியாதது. இதுவே எனது இறுதிப் பிறவி. இனி எனக்குப் பிறவியில்லை !’[4]

‘பிறப்பின் துன்பமும் பிறவா இன்பமும்
அறத்தகை முதல்வன் அருளிய வாய்மை’
[5]

மேலே கூறப்பட்டுள்ளது. இதுவே ‘தரும சக்கரப் பிரவர்த்தனம்’ என்று புகழப் பெறும் புத்த பகவர் அற ஆழி உருட்டிய வைபவம்! சத்திய சாம்ராஜ்யத்தின் தர்ம சக்கரம்–அற ஆழி–இனி நில்லாது சுழன்று கொண்டே யிருக்கும்!

தரும சக்கர மகிமை

பரிசுத்தமான ஒழுக்க விதிகளே அந்தச் சக்கரத்தின் ஆயக்கால்கள்; அவைகள் ஒரே நீளமுள்ளவையாயிருத் தலே நீதி; ஞானமே சக்கரத்தைச் சுற்றியுள்ள இருப்புப் பட்டை; அடக்கமும் கருத்துடைமையும் சேர்ந்து அமைந்த குடத்தில் அசைவில்லாத சத்தியமாகிய அச்சு பொருத்தப் பட்டிருக்கிறது.

தரும சக்கரம் பளபளப்பாக ஒளிமயமாயுள்ளது. அதற்கு நடுவுமில்லை, முடிவுமில்லை. போலித் தத்து-

வங்கள் அதன் அடியில் நசுக்குண்டு நசித்துப் போய் விடுவன.

‘ஆதி முதல்வன் அறவாழி ஆள்வோன்
மாதுயர் எவ்வம் மக்களை நீக்கி.
விலங்கும் தம்முள் வெரூஉம்பகை நீக்கி,
உடங்குயிர் வாழ்க என்(று) உள்ளம் கசிந்துகத்
தொன்று காலத்து நின்(று) அறம் உரைத்த’[6]

(மாதுயர் எவ்வம்-மிகுந்த துன்பம். விலங்கு-மிருகங்கள். வெரூஉம்-பயப்படும். உடங்குயிர் வாழ்க-உயிர் உடங்கு வாழ்க-உயிர்கள் யாவும் தம்முள் வேற்றுமையில்லாமல் ஒத்து வாழட்டும். கசிந்துக-இரங்கிக் கரைய.)

இந்தப் பெருமையைப் பின்னால் எழுந்த சரிதைகளும் காவியங்களும் விரிவாக விளக்கிக் கூறுகின்றன.

பிறவிக் கடலில் விழுந்து தவிக்கும் மக்களுக்கு அப் பெருங்கடலைத் தாண்டிச் செல்வதற்கு ஏற்ற ‘அறவி நாவாய்'–தருமமாகிய ஓடம்-கிடைத்து விட்டது!

தருமத் தேர்

பிறவிக் காட்டினுள் சிக்கி அலையும் மக்களுக்குத் கருமத் தேர் கிடைத்து விட்டது! காசி நகரிலே, இஸிபதனச் சோலையிலிருந்து அந்த இரதம் புறப்பட்டு விட்டது! ‘தரும இரதம்! ஞானமடைந்து நம்பிக்கை கொண்டவர் உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி ஏறிச் செல்லும் இரதம் அது. அது நீதி நெறிமுறைகள் என்னும் பலகைகளால் செய்யப்பெற்றது. அதன் ஏர்க்காலாக விளங்குவது அந்தக் கரணம் அல்லது மனச்சான்று; உள்ளமே அதன் நுகத்தடி; ஆனந்தமே அதன் அச்சு; சக்தியே அதன் சக்கரங்கள்; உள்ள நிறைவும் அமைதியுமே இழுத்துச் செல்லும் குதிரைகள்; கருத்துடைமையே கவனமுள்ள சாரதி; அவாவின்மையே இரதத்தின் அலங் காரங்கள்; ‘ பற்றற்ற உள்ளத்தில் விளையும் அன்பும் அஹிம்சையுமே பாதுகாப்புக்கான ஆயுதங்கள். பொறுமையே தருமத்தின் கவசம். சாந்தி நிலையத்தை நாடி இரதம் உருண்டு ஓடுகின்றது, அந்த இரதம் ஒருவர் தாமே தமக்காகச் செய்து கொள்வது–அதற்கு ஈடும் இல்லை; எடுப்பும் இல்லை. அதிலே அமர்ந்து கொண்டு முனிவர்கள் உலகை விட்டுச் செல்லுகிறார்கள்; உண்மையிலேயே அவர்கள் குறித்த வெற்றியை அடைகிறார்கள்.[7]

தரும இரதத்திலே செல்வோர்க்கு வழிகாட்டும் சோதி நற்காட்சி என்ற நல்லறிவு; நல்லூற்றமென்ற நல்ல சிந்தனையே வழிகாட்டி; வழியிலே தங்கும் இடம் நல் வாய்மை; நற்செய்கை அவர் நிமிர்ந்து நிற்க வலிமை யளிக்கும்; - நல்வாழ்க்கையில் நியாயமான தொழிலைச் செய்து தேடும் பொருள்களே வழிக்கு உணவாம்; நல்லூக்கமே அவர் நடை; நற்கடைப்பிடியாகிய நினைவோடு கூடிய சிந்தனைகளே அவருடைய மூச்சு; நல்லமைதி தியானத்தால் வரும் சாந்தி–அவர் செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து செல்லும்.[8]

மற்ற உபதேசங்கள்

அற ஆழியை உருட்டிப் புத்தர் பெருமான் செய்த முதல் உபதேசம் ஆணித்தரமான ஒரு சொற்பொழிவு. உலக சரித்திரத்தில் முக்தி மார்க்கத்திற்கு இது போன்ற எளிமையுள்ள ஒரு திட்டம் கூறப்பட்டதில்லை என்றும், ஆன்மா என்ற ஒன்றைக் குறிப்பிடாமலும், அதை மறுத்தும், மனித இயல்புக்கு மேற்பட்ட எதிலும் நம் பிக்கை வைக்காமலும், இறை நம்பிக்கையையும் எதிர் கால சுவர்க்கத்தையும் மறுத்தும், அத்திட்டம் ஆரம்பம் செய்யப்பெற்றது என்றும் பல பௌத்த நூல்களின் புகழ் பெற்ற ஆசிரியரான அறிஞர் ரைஸ் டேவிட்ஸ் ஆச்சரியப் பட்டிருக்கிறார்.[9]

புத்தர் பெருமானின் போதனையை ஒருவர் ஏற்றுக் கொள்ளலோ, எதிர்த்தலோ வேறு விஷயம். ஆனால் அவருடைய உபதேசம் உலகம் தோன்றிய நாள் முதல் அன்று வரை சமய வாழ்க்கையில் மனிதன் சென்று கொண்டிருந்த பாதையை நேர்மாறாகத் திருப்புவதாக அமைந்திருந்தது வியக்கத்தகுந்த விஷயமாகும். எண்ணி லடங்காத சாத்திரங்கள்; எண்ணிலடங்காத தத்துவங் கள் நிறைந்திருந்த நாட்டிலே, அவைகளை எல்லாம் ஐயம் திரிபு அறக் கற்றுணர்ந்து, தாமாகச் சிந்தனை செய்த ஒரு மனிதர் கூறிய அறமே அது! அவரை எதிர்த்து நின்ற பெருங் கூட்டத்தை அவர் அறிவார். ஆயினும், சிறிதும் துளங்காமல் சிறிதும் அஞ்சாமல், அவர் தாம் கண்ட மெய்ப்பொருளை உலகுக்கு அறிவித்து விட்டார்!

உள்ளத்தைப் புனிதமாக்கிக் கொண்டு, உண்மையை உணர்ந்து, இந்தப் பிறவியிலேயே, இவ் உலகிலேயே மனிதன் தானாக முக்தி பெற முடியும் என்று அவர் போதித்தார். ‘இனியேது எமக்கு உன்னருள் வருமோ?’ என்று மனிதன் இரங்கி ஏங்க வேண்டியதில்லை! இடை விடாத தற்பயிற்சியால் இதயம் மாற வேண்டும்; தன்னடக்கம் வேண்டும்; ஆசைக்காட்டை அழித்துக் கணமேனும் நேரம் வீணாகதபடி கருத்தோடு முயலவேண்டும்–இவைகளால் மாரனை வெல்லலாம்; கூற்றையும் ஆடல் கொண்டு அழியா வாழ்வு பெறலாம் என்பதே அவர் சித்தாந்தம்.

‘பிறவி ஏற்படக் காரணமாகிய விதிகளைப் பற்றி விவாதம் செல்யக் கூடிய அறிவாளர் அனேகர் இங்கே இருக்கின்றனர்; ஆனால் பிறப்பை நிறுத்தும் வழியை அறிந்தவர் ஒருவர் கூட இல்லை !’ என்று புத்தர் சீடர்களுக்குக் கூறினார்.

‘உலக வாழ்வாகிய பெரிய விஷ விருட்சத்திற்கு வேராக அமைந்துள்ளது பேதைமை...’ என்று அவர் எடுத்துக் காட்டினார்.

தம்முடைய தருமத்தைப் பரிசுத்தமான உள்ளத்தோடு செவிமடுப்பவனே மக்களுக்குத் தலைசிறந்த வழிகாட்டி என்றும், அவனுக்கு நிகரில்லை என்றும், அவன் அழியாத சோதிமயமான ஆபரணம் என்றும் அவர் கூறினார். சகல ஜீவர்களிடத்தும் அருள் சுரந்து புத்தர்கள் உபதேசித்த ஒப்பற்ற தருமம் எந்த வீட்டில் நிலைத்திருக்கிறதோ, அந்த வீட்டிலே வசிப்பவன் கூட அதனால் ததாகதனாகி விடுவான் என்றும் அவர் அருளினார்.

அண்ணலின் அறிவுரையைக் கேட்ட சீடர் ஐவரில் கௌண்டின்யர் என்ற முதியோர், தருமத்தை அறிந்து, அதிலே ஆழ்ந்து நிலைத்து நின்று ஐயம், திரிபு, மயக்கம் நீங்கித் தவத்திறம் பூண்டு, பவத்திறம் அறுத்து, உய்வு பெற வேண்டும் என்று உறுதியடைந்து, புத்தர் முன்பு சென்று அடிபணிந்து நின்றார். ‘இறைவ! என்னைப் பகவர் ஆட்கொண்டு தருமத்தில் சேர்த்துக் கொண்டு அருள்புரிய இயலுமோ?’ என்று வேண்டினார்.

‘வருக, என் சகோதர! தருமம் நன்கு உபதேசிக்கப் பெற்றிருக்கிறது. துக்கத்தை அறவே ஒழிப்பதற்காகப் புனித வாழ்வு வாழ்வாயாக!’ என்று கூறிப் பகவரும் அவரை ஏற்றுக் கொண்டார். பௌத்த தருமத்தில் சரணடைந்து முதல் பிக்குவாகச் சேர்ந்தவர் கௌண்டின்யரே. முதன் முதலாக ஒரே உபதேசத்திலேயே தருமத்தை உணர்ந்து கொண்டதால் அவருக்கு அஜ்ஞரத[10] கௌண்டின்யர் என்று புத்தரே பெயர் கொடுத்தார். அப் பெயரே பின்னாலும் நிலைத்து விட்டது.

மற்ற நான்கு சீடர்களும் பின்னால் புத்தரையும் தரு மத்தையும் சரணடைந்து பிக்குக்களாயினர். சீடர்கள் காசிமா நகரில் பிச்சையெடுத்து வரும் உணவை அருந்திக் கொண்டு புத்தரும் சிலநாள் அங்கேயே தங்கி அற உரைகள் பகர்ந்து கொண்டிருந்தார்.

ஆன்மாவின் இலக்கணம்

ஆன்மாவின் இலக்கணம் பற்றிப் போதிநாதர் ஐந்து சீடர்களுக்கும் செய்த உபதேசம் வருமாறு :

‘பிக்குக்களே! உடல் ஆன்மாவற்றது. பிக்குக்களே, உடலே ஆன்மாவாயிருந்தால், இந்த உடல் நோய்க்கு உட்படாது. உடல் சம்பந்தமாக, “என் உடல் இப்படியிருக்கட்டும், என் உடல் அப்படியிருக்கட்டும்” என்று சொல்லக் கூடியதாக இருக்கும். பிக்குக்களே, உடல் ஆன்மாவற்றதாக இருப்பதாலேயே உடல் நோய்க்கு உள்ளாகின்றது, “என் உடல் இப்படியிருக்கட்டும், என் உடல் அப்படியிருக்கட்டும்” என்று சொல்ல முடியவில்லை.

உணர்வும் ஆன்மாவற்றது. பிரக்ஞையே ஆன்மாவாக இருந்தால், அது பிணிக்கு உட்படக் கூடாது. பிரக்ஞை சம்பந்தமாக, “என் பிரக்ஞை இப்படியிருக்கட்டும், என் பிரக்ஞை அப்படியிருக் கட்டும்” என்று சொல்லக்கூடியதாக இருக்கும். பிரக்ஞை ஆன்மாவற்றிருப்பதால், பிரக்ஞை பிணிக்கு உட்பட்டிருக்கின்றது அது சம்பந்தமாக, “என் உணர்வு இப்படியிருக்கட்டும், என் உணர்வு அப்படியிருக்கட்டும்” என்று சொல்ல முடியவில்லை.

‘பிக்குக்களே! உடல் நித்தியமான தா, அநித் தியமானதா, நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?’

‘வேதனையுள்ளது, பகவன்!’

‘ஆனால் அநித்தியமாயும், வேதனையுள்ள தாயும், மாறும் இயல்புள்ள தாயும் உள்ள ஒன்றை, “இது எனது, இது நான், இது எனது ஆன்மா” என்று கருதுதல் தகுமா?’

‘தகாது பகவன்!’

[உடலைப் போலவே உணர்வு, புலனறிவு, ஸ்கந் தங்கள், பிரக்ஞை முதலியவையும் அநித்தியமாயும், வேதனையுள்ளவையாயும், மாறுவன வாயும் உள்ளன என்பதை விளக்கி விட்டுப் புத்தர் மேலும் கூறினார் :]

‘ஆதலால் பிக்குக்களே, இறந்தகாலம், எதிர் காலம், நிகழ்காலம் ஆகிய எந்தக் காலத்திலும் உள்ள எந்த உடலையும் உணர்ந்து கொண்டவன்–அதன் தோற்றத்தைக் கொண்டோ, உள் அமைப்பைக் கொண்டோ, அதன் தூல உருவைக் கொண்டோ, சூக்கும உருவைக் கொண்டோ, அது தாழ்ந்திருந்தாலும், உயர்ந்திருந்தாலும். அது அருகிலிருந்தாலும், தொலைவிலிருந்தாலும் அதை முறையாகவும் சரியாகவும் உணர்ந்து கொண்டவன் “இந்த உடலெல்லாம் என்னுடையதன்று, இது நான் அன்று, ஆன்மா என்னுடையது அன்று!” என்று கருத வேண்டும்’

[இதைப் போலவே உணர்வு, புலனறிவு, ஸ்கந்தங்கள், பிரக்ஞை முதலியவையும் “நான் அன்று” என்று கருத வேண்டும்.]

‘பிக்குக்களே! இவ்வாறு கண்டு கொண்டு கற்றறிந்த கண்யமுள்ள சீடன் உடலிடத்தும், உணர்விடத்தும், புலனறிவிடத்தும், ஸ்கந்தங்களிடத்தும், பிரக்ஞையிடத்தும் அருவருப்படைகிறான். அருவருப்படைந்து அவன் காமம் முதலிய உணர்ச்சிகளைக் கடக்கிறான். உணர்ச்சிகளைக் கடந்து செல்வதால் அவன் விடுதலை யடைகிறான்; விடுதலையடைந்தவனிடம் அவ் விடுதலை பற்றிய அறிவு தோன்றுகிறது. அவன் தனக்கு மறுபிறப்பு இல்லை என்பதையும், தான் தரும முறைப்படி வாழ்ந்தாயிற்று என்பதையும், செய்ய வேண்டியதைச் செய்தாயிற்று என்பதையும், (தனக்கு) இந்த உலகுக்கு அப்பால் (இனி) எதுவும் இல்லை என்பதையும் தெரிந்து கொள்ளுகிறான்.[11] இந்தச் சொற்பொழிவைக் கேட்டபின் சீடர்கள் ஐவருடைய உள்ளங்களும் தெளிவடைந்து, ஆஸவங்கள் அழிந்து, வாழ்க்கையில் பற்றற்று நின்றன. அவர்களும் பூரண ஞானம் பெற்று அருகத்துக்களாயினர்.

சங்கம்

மான்சோலையிலே இருந்துகொண்டு புத்தர் அங்கு வந்தோர் அனைவருக்கும் தமது சித்தாந்தத்தை உபதேசம் செய்து வந்தார். நாள்தோறும் ஆண்களும், பெண்களும் அதிகமாக வந்து உபதேசம் கேட்டுச் சென்றனர்.

‘பிறப்பின் துன்பமும் பிறவா இன்பமும்
அறத்தகை முதல்வன் அருளிய வாய்மை’[12]

மக்கள் உள்ளத்தைக் கவர்ந்து வந்தது.

கோபம், குடி, மூடப் பிடிவாதம், துவேஷம், ஏமாற்று, பொறாமை, தற்புகழ்ச்சி, பிறரைப் பழித்தல், இறுமாப்பு, தீய சிந்தனைகள் ஆகியவையெல்லாம் மனிதனின் பரிசுத்தத்தைக் கெடுக்கின்றன என்று காட்டி’ அவர் நல்லொழுக்கத்தை விளக்கிக் கூறினார். தீவினைகள் இவை, நல்வினைகள் இவை என்று பிரித்துக் காட்டி, அவற்றால் உள்ளத்திற்கு ஏற்படும் நன்மை தீமைகளை எடுத்துரைத்தார். உலக வாழ்வின் போகங்களில் ஆழ்ந்துகொண்டு ஒருவன் துன்பக்கடலைத் தாண்ட முடியாது என்பதை, ‘ஒருவன் தன் விளக்கில் தண்ணீரை ஊற்றி நிரப்பினால், இருளை நீக்கமுடியாது. உளுத்துப் போன கட்டையைக் கொண்டு தீக்கடைந்து நெருப்பை உண்டாக்க முடியாது!’ என்ற உபமானத்தின் மூலம் அவர் விளக்கினார்.

உலக வாழ்விலே உடலின் தேவைக்குத் தக்கபடி உண்ண வும் பருகவும் வேண்டியது அவசியம் என்றும், அவை பாவமல்ல என்றும், உடலைப் பாதுகாப்பது கடமை என்றும், உடல் நலம் இல்லாமல் ஞானச்சுடரை ஏற்ற முடியாது என்றும் அவர் எடுத்துக் காட்டினார்.

ஆனால் புலன்களின் போக்குப்படி இன்பங்களைத் துய்த்தல் உடலுக்கும் உள்ளத்திற்கும் சோர்வு உண்டாக்கும் என்றும், அப்படி வாழ்பவன் தன் உணர்ச்சிகளின் அடிமை என்றும், இன்ப வேட்டையாடிக் கொண்டிருத்தல் மனிதனை இழிநிலைக்குத் தள்ளிப் பாமரனாக்கிவிடும் என்றும் எளிய முறையிலேயே அவர் தமது தருமத்தை உபதேசித்து வந்தார்

அந்நிலையில், தமது தருமம் நிலைத்து நிற்பதற்கும், எங்கும் பரவுதற்கும், தம் சீடர்கள் தனித்தனியாகப் பிரிந்து முயன்று கொண்டிருப்பதைவிட ஒன்றுசேர்ந்து சங்கமாக ஐக்கியப்படவேண்டும் என்றும் அவர் கருதினார். அதன்படி முதலில் சேர்ந்த ஐந்து சீடர் களையும் சங்கமாகக் கூடச் செய்தார். அப்போது அவர் கூறியவதாவது:

‘சத்திய மார்க்கத்திலே செல்லத் தீர்மானிக்கும் ஒரு மனிதன் தனித்து நின்றால், அவன் வலிமை குன்றித தன் பழைய பழக்கங்களுக்கே திரும்பிவிடக்கூடும் ஆதலால் நீங்கள் ஒன்று சேர்ந்து இருங்கள். ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொள்ளுங்கள். ஒருவர் முயற்சிகளை மற்றவர்கள் பலப்படுத்துங்கள்.

‘சகோதரர்களைப் போலிருங்கள்; அன்பில் ஒன்றாகவும், துறவறத்தில் ஒன்றாகவும், சத்தியத்தை நாடும் ஆர்வத்தில் ஒன்றாகவும் இருங்கள்.

‘உலகின் திசைகளிளெல்லாம் சத்தியத்தையும் தருமத்தையும் பரப்புங்கள்; முடிவில் சகல ஜீவன்களும் தரும இராஜ்யத்தின் குடிகளாக இருக்கும் படி செய்யுங்கள்.

‘இதுவே புனிதமான சங்கம்; இதுவே புத்தரின் சங்கம்; புத்தரைச் சரணடைந்துள்ளவர் அனைவருக்கும் ஒருமைப்பாட்டை அமைக்கும் சங்கம் இதுவே!’

அஜ்ஞாத கௌண்டின்யர் முதலிய ஐந்து சீடர்களும் பௌத்த மும்மணிகளாகிய சரணங்களைக் கூறிக் கொண்டு சங்கத்தில் சேர்ந்தனர்:

நமோ தஸ்ஸ பகவதோ அரஹதோ
ஸம்மா ஸம்புத்தஸ்ஸ

‘புத்தம் சரணம் கச்சாமி,
தம்மம் சரணம் கச்சாமி,
சங்கம் சரணம் கச்சாமி!

‘துதியம்பி புத்தம் சரணம் கச்சாமி,
துதியம்பி தம்மம் சரணம் கச்சாமி,
துதியம்பி சங்கம் சரணம் கச்சாமி!

‘ததியம்பி புத்தம் சரணம் கச்சாமி,
ததியம்பி தம்மம் சரணம் கச்சாமி,
ததியம்பி சங்கம் சரணம் கச்சாமி!’

மான்சோலையில் தங்கியிருக்கையில் புத்தர் காசி நகரத்தைச் சேர்ந்த சில வேதியர்களுக்கும் குருக்களுக்கும் உபதேசம் செய்து தமது சங்கத்தில் சேர்த்துக் கொண்டார். காசிகை' என்னும் தாசி ஒருத்தி அவரைச் சரணடைந்து தன் குமாரர்களைச் சங்கத்தில் சேர்த்துவிட்டு முக்தியடைந்தாள். அஜயன், அவன் குமரன் நாலகன், சஞ்சயன் முதலிய விந்தியப் பிரதேசத்து வேதியர்களும் சில வணிகர்களும் சங்கத்தில் சேர்ந்தனர்.

யசன்

அந்தக் காலத்தில் காசியில் அளப்பருஞ் செல்வமுள்ள ஒரு வணிகரின் மைந்தனான யசன் வசித்திருந்தான். ஒரு நாள் இரவு, அவன் தன் அரண்மனையிலிருந்த ஆண்களும் பெண்களும் அலங்கோலமான நிலையில் துயில் கொண் டிருந்த காட்சியைக் கண்டு, சித்தார்த்தரைப் போலவே வெறுப்படைந்து, இரகசியமாக வெளியேறி விட்டான். அவன் வெளியே வரும்போது உயர்ந்த உடைகளையும் நகைகளையும் அணிந்திருந்தான். சோகமயமான வாழ்க் கையில் மக்கள் மோகங்கொண்டு மூழ்கியிருக்கும் பரிதாபத்தைப் பற்றி எண்ணியவண்ணம் அவன் நடந்து சென்று கொண்டிருந்தான். வழியில் இஸிபதனத்தில் மான்சோலையருகே செல்லுகையில், பொழுது விடியும் நேரமாயிற்று.

‘அந்தோ! அந்தோ! எத்தனை துன்பங்கள்! எத்தனை துக்கங்கள்!’ என்று அவன் தனக்குள்ளேயே உரக்கக் கூவிக் கொண்டான்.

அங்கே இரவிலிருந்தே உலாவிக்கொண்டிருந்த ததா கதர் அதைக் கேட்டு, ‘என்ன துக்கம்! இங்கே துக்கமுமில்லை, துயரமுமில்லை. உனக்கு நல்வரவு! இங்கே வந்தால் மன அமைதி பெறலாம். உனக்குத் தருமத்தை உபதேசிக்கிறேன், தருமமே துக்கத்தை நீக்கும்!’ என்று அன் போடு அழைத்தார்.

யசன் ஞானம் பெறும் வேளை வந்துவிட்டது. அவன் உள்ளே சென்று, வள்ளலை வணங்கி, அருகே அமர்ந்து உபதேசம் கேட்டான். அவனுக்கு மெய்யறிவு தோன்றிற்று. அந்நிலையில் அவன் ஆடை ஆபரணங்களால் அலங்கரித்திருந்த தன் உடலை உற்று நோக்கி வெட்கமடைந்தான். முத்துக்களும், நவரத்தினங்களும் அவனைப் பரிகசித்துக் கொண்டிருந்தன.

அருள் நிறைந்த அண்ணல் அவனுடைய உள்ளக் கிடையை உணர்ந்து பேசினார்; ‘அன்ப! ஒருவன் புறத்திலே நகைகள் அணிந்திருந்தாலும், அவன் மனம் புலன்களை வெற்றி கொண்டிருக்க முடியும். வெளித்தோற்றம் தரும வாழ்க்கை அன்று, அது உள்ளத்தைத் தீண்டாது. சிரமணன் சீவர ஆடையைப் புனைந்து கொண்டே, உலகப் பற்றுக்களில் ஆழ்ந்திருக்கவும் முடியும்.

‘ஏகாந்தமான வனங்களிலே தங்கியிருந்தும் ஒருவன் வையகத்தின் ஆடம்பரங்களை விரும்பினால், அவன் உலகப் பற்றில் ஆழ்ந்தவனாவான்; உககத்தாரைப் போல உடைகள் அணிந்த ஒருவன், தன் இதயத்தை வான மண்டலத்திலே பறக்கவிட்டு, உன்னதமான சிந்தனைகளை மேற்கொள்ளவும் கூடும்.

‘துறவியும் இல்வாழ்வோனும் “நான்” என்ற அகங்காரத்தை அகற்றிவிட்டால், இருவர்க்குள்ளும் பேதமேயில்லை.

‘பகைவனை வென்று வீரத்தை நிலைநிறுத்திய போர் வீரன் வீரச்சின்னங்களை அணிவான்– அதே போலத் துறவி துக்கம் என்ற பகைவனை வீழ்த்தித் துவராடை என்னும் வீரச்சின்னத்தை அணிவான்!’


‘மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து
பிறர்க்(கு) அறம் அருளும் பெரியோன் ....’

கூறிய அறிவுரைகள் யசனுடைய உள்ளத்தை உருக்கி விட்டன. ஊசி காந்தத்திடம் அணுகல்போல, அவன் பகலரிடம் ஐக்கியமாகித் திளைத்துப் பெருகும் இன்பத்தோடு இருந்தனன். அவனுக்குப் பக்குவம் வந்துவிட்டது என்பதை அறிந்த அண்ணலும், ‘சங்கத்தில் சேர்ந்து, ததாகதரைப் பின்பற்றுவாயாக!’ என்றார். என்றாலுமே, யசனுடைய அணிகளும் உடைகளும் மாறி, அவன் காவி யுடையுடன், கனிந்த பிக்குவாகத் தோன்றினான்.

மருளுடைய மக்களின் மனமாசு கழுவும் மருத்துவரான புத்தர் பிரான் பின்னால் யசனைத் தேடிவந்த அவன் தந்தைக்கும் உபதேசம் செய்து, அவர்களுடைய அரண்மனைக்குச் சென்று, யசனுடைய மனைவியையும், அன்னையையும் தருமத்தை மேற்கொள்ளச் செய்தார். யசனுடைய தந்தை இல்லறத்தில் இருந்துகொண்டே தருமத்தை ஏற்றார். இல்வாழ்வில் இருந்து கொண்டே பௌத்த தருமத்தை மேற்கொண்ட முதற் பெண்டிர் அவர் மனைவியும், மருமகளுமே. பிறகு யசனுடைய நண்பர்கள் ஐம்பத்து நால்வர், அவன் முண்டிதமாகித் துறவு பூண்டதை அறிந்து, தாங்களும் புத்தம், தருமம், சங்கத்திடம் அடைக்கலம் புகுந்தனர்.

தருமப் பிரசாரர்கள்

நாள்தோறும் அறம் கேட்க வந்தவர்களின் தொகை பெருகிக்கொண்டிருந்தது. மக்களுக்கு உபதேசம் செய்ய வும், துறவிகளைச் சங்கத்தில் சேர்க்கவும் பிக்குக்களை வெளியே அனுப்ப வேண்டிய காலம் வந்து விட்டதைத் ததாகதர் உணர்ந்தார். அப்போது அறுபத்தொரு அருத்துக்கள் அவரைச் சூழ்ந்திருந்தனர். அவர் அவர்களைப் பார்த்துக் கூறியதாவது:

‘சோதரர்களே! நான் சகல பந்தங்களிலிருந்தும் விடுதலை பெற்றுள்ளேன், மானிட இயல்புக்கு மேற்பட்ட பந்தயங்கள், மானிட பந்தயங்கள் யாவற்றிலிருந்தும் விடுதலையடைந்துள்ளேன். சகோதரர்களோ, நீங்களும், அமானுஷ்ய மான பந்தங்கள், மானிட பந்தங்கள்–யாவற்றிலிருந்தும் விடுதலை பெற்றிருக்கிறீர்கள். சோதரர்களே, பல்லோருடைய நன்மைக்காகவும், பல்லோருடைய பேரின்பத்திற்காகவும், உலகின் மீது கருணை கொண்டு, தேவர்கள், மனிதர்கள் (யாவருடைய) சுகத்திற்காகவும், நன்மைக்காகவும், இன்பத்திற்காகவும் நீங்கள் வெளியே புறப்பட்டுச் செல்லுங்கள்!

‘எந்த இருவரும் சேர்ந்து செல்லாதீர்கள். சோதரர்களே, தொடக்கத்தில் இனிதாயும், நடுவில் இனிதாயும், முடிவில் இனிதாயும், உள்ள தருமத்தைப் பிரகடனம் செய்யுங்கள். பூரணமாக நிறைவு பெற்றுள்ள. பரிசுத்தமான தரும வாழ்வின் அமிசங்களையும், அவற்றின் உட் பொருளையும் நீங்கள் தெரியப்படுத்துங்கள். காம வெறி முதலிய மண்ணினால் அதிகம் மறைக்கப் பெறாத கண்களையுடைய மக்கள் இருக்கின்றனர். தரும உபதேசத்தைச் செவியுறாமல் அவர்கள் நசித்துக் கொண்டிருக்கின்றனர். சிலராவது புரிந்து கொள்வர். அறவழியைப் போதிக்க நான் நேரில் உருவேலாவுக்குச் செல்கிறேன்.’[13]

பிக்குக்கள் வெளியேறும்போது, பெருமான் அவர் களுக்கு மேலும் கூறவேண்டிய ஆலோசனைகளை யெல்லாம் கூறினார். தருமமும் விநய ஒழுக்கமும் மறைத்து வைக்கப் பெறாமல் உலகிலே நன்கு துலங்கும் படி செய்ய வேண்டும் என்றார். சத்தியம் நிறைந்த உன்னதமான தருமம் அதற்குத் தகுதியற்ற இழிதகை மாக்களிடம் சிக்கிவிடாமல் கவனிக்க வேண்டும் என்றார். அத்தகையோர், மார்க்கத்தை ஏளனம் செய்து வெறுத்துக் கண்டித்து, இழிவுபடுத்தக் கூடும் என்று எச்சரிக்கை செய்தார். அதுவரை தாமே துறவிகளுக்குத் தீக்கை அளித்து வந்ததுபோல், அவர்களே மேற்கொண்டு சங்கத்தில் சேரும் துறவிகளுக்குத் தீக்கை அளிக்கவம் அனுமதி அளித்தார்.

உடைகள், பாதரட்சைகள், உணவு முதலிய ஒவ்வொரு விஷயம் பற்றியும் பிக்குக்களுக்குக் கண்டிப்பான விதிகள் அமைத்து, அவைகளை அவர்கள் நன்கு உணர்ந்துகொள்ளும்படி செய்யப் பெற்றது.

அக்காலம் முதல் பிக்குக்கள் நாடெங்கும் சுற்றி அறவுரை புகன்று, மாரிக்காலத்தில் திரும்பி வந்து மூன்று மாதங்கள் மட்டும் ததாகதருடன் தங்கியிருந்து உபதேசம் கேட்பது வழக்கமாயிற்று.

சாரதாத்

ஞானாசிரியரான புத்தர் இஸிபதனம் என்று பெயர் பெற்ற சாரநாத்திலிருந்து முதன் முதல் தரும சக்கரப் பிரவர்த்தனம் செய்ததால், அந்த இடம் பௌத்தர் களுக்கும் உலகுக்குமே முக்கியமான தலமாகிவிட்டது. பிற்காலத்தில், ஆயிரக்கணக்கான பௌத்த பிக்குக்கள் தங்கியிருக்கத்தக்க மடாலயங்களும் விகாரையும் அங்கே அமைந்திருந்தன. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் அங்குச் சென்று பார்வையிட்ட சீன யாத்திரிகரான பாஹியான் அங்கேயிருந்த இருநூறு அடி உயரமுள்ள விகாரையில் புத்தர் அற ஆழியை, உருட்டுவது போன்ற கற்சிலை ஒன்று இருந்ததாகவும், ஆயிரம் துறவிகள் அங்கே இருந்ததாகவும் குறித்துள்ளார். ஏழாம் நூற்றாண்டில் மற்றொரு சீன யாத்திரிகரான ஹுயன்-சாங்கும் அங்கு விஜயம் செய்து குறிப்பு எழுதியுள்ளார்.

இப்போது சாரநாத்திலே முக்கியமாக உள்ளது மூல கந்தகுடி விகாரை. ஆசிய மகாபோதிக் கழகத்தார் பெரியகோபுரத்துடன் இந்த அழகிய விகாரையை அமைத்திருக்கின்றனர். உள்ளே தரையெல்லாம் சலவைக்கல்; சுவர்களிலே புத்தருடைய சரித்திர நிகழ்ச்சிகள் பல கண்கவரும் வருணச் சித்திரங்களாகத் தீட்டப் பெற்றுள்ளன. புத்தருடைய புனித அஸ்தியும் அங்கே உள்ளது. மூலகந்த குடி விகாரைக்கு அருகிலேயே சீனப் பெருமக்கள் நிறுவியுள்ள அழகு நிறைந்த புத்தர் கோயிலும் இருக்கின்றது.

மௌரிய சக்கரவர்த்தியாகிய அசோகர், ததாகதர் அமர்ந்து அறம் உணர்த்திய இடத்தில், அழகிய கல் தூண் ஒன்றை நிறுத்தியிருந்தார். இந்தத் தூண் பின்னால் உடைந்து போய்விட்டது. இதன் உச்சியில் அமைந்திருந்த சிங்க உருவம் இன்றும் பார்த்தவர்களைப் பரவசப்படுத்துவதாக விளங்குகின்றது. உபதேசம் செய்யும் பாவனையில் கை முத்திரையுடன் புத்தர் தாமரை மலரில் அமர்ந்திருக்கும் கற்சிலை ஒன்றும், நிற்கின்ற பாவனை யிலுள்ள போதி சத்துவரின் உடைந்த சிலை ஒன்றும் சாரநாத்திலே இருக்கின்றன. மண்ணுள் புதைந்து கிடந்த வேறு பல கல்வெட்டுக்களும், சிலைகளும் அங்குள்ள பொருட்காட்சிச் சாலையிலே எடுத்து வைக்கப் பெற்றிருக்கின்றன.

  1. பூட்கையின்- கொள்கையின்.
  2. சாரநாத் பனாரஸ் கண்டோன்மென்டு ரயில் நிலையத்திலிருந்து ஆறு மைல் காரக்கிலிருக்கிறது.
  3. அறிவுள்ள பிராணிகள் யாவும் ஐந்து ஸ்கந்தங்களின் சேர்க்கையால் உண்டானவை. அவை உருபு (ரூபம்), நுகர்ச்சி (வேதனை), குறி (ஸம்ஜ்ஞை ), பாவனை (ஸம்ஸ்காரம்), உள்ள அறிவு (விஞ்ஞானம்), இங்கு ஸ்கந்தங்கள் என்றது ஐந்து ஸ்கந்தங்களின் சேர்க்கையால் ஏற்படும் நிலைமைகளையும் அவைகளின் காரணங்களையும்.
  4. புத்தர் பெருமான் மெய்ஞ்ஞானம் பெற்றபின் நிகழ்த்திய இந்த முதற் சொற்பொழிவு ‘அங்குத்தர நிகாயம்–தர்ம சக்ரப் பிரவர்த்தன சூத்திர’த்திலுள்ளது. இதன் எளிமையும், தெளிவும், திட்ப நுட்பமும் கருத்து ஊன்றிக் கவனிக்கத்தக்கவை. ஒருமுறை பார்த்ததும் சிலர்க்கு, ‘இது இவ்வளவு தானா!’ என்று கூடத் தோன்றலாம். எதிரேயிருந்து உபதேசம் கேட்டுக் கொண்டிருந்த ஐந்து சீடர்களும் சகல சாத்திரங்களையும் கற்றுப் பல்லாண்டுகளாகத் துறவறத்தில் நிலைத்திருந்தவர்கள், குறிப்பால் விஷயங்களைத் தெளிவுறத் தெரிந்துகொள்ளக் கூடியவர்கள்; புத்தர் மெய்ஞ்ஞானம் பெறும் வரை ஆறு ஆண்டுகள் அவர் அருகில் அவருடனேயே இருந்தவர்கள். ஆதலால் இந்த உபதேசத்தில் அதிக விளக்கங்களோ, உபமானங்களோ, விவாதத்திற்குரிய விஷயங்களோ கூறப்படவில்லை. இந்த உபதேசமே புத்தர் போதித்த பெளத்த தருமத்தின் வித்து எனலாம். பின்னால் புத்தர் தருமப் பிரசாரம் செய்து வந்த 45 ஆண்டுகளிலும் இதையே கூறி வந்ததோடு கேட்போரின் தன்மைக்கு ஏற்றபடி விளக்கங்கள், கதைகள், உபதேசக் கதைகள், கேள்விகள் முதலியவைகளைச் சேர்த்தும் கூறி வந்தார்.
  5. ‘மணிமேகலை’.
  6. மணிமேகலை’.
  7. ‘சம்யுக்த நிகாயம்’.
  8. அசுவகோஷரின் ‘புத்த சரிதை’.
  9. தரும சக்கரப் பிரவர்த்தன சூத்திர'த்திற்கு அவர் எழுதியுள்ள முகவுரை பார்க்கவும். (Sacred Books of the East, Vol. XI.)
  10. அஜ்ஞாத-அறிந்தவர்.
  11. ‘அனந்த லக்கண சூத்திரம்’ அல்லது பஞ்ச சூத்திரம்’. ஆன்மா இல்லை என்று புத்தர் கூறுவதில், சாதாரணமாக உலகியல் முறையில் ‘உயிர்’ என்றும் ‘ஆன்மா’ என்றும் கூறுவதை அவர் மறுக்கவில்லை; ஆனால் உடலுக்குள்ளே, உடலோடு ஒட்டாமல், கண்ணினால் காண்- பவனாயும், காதினால் கேட்பவனாயும், மற்றைப் புலன்களால் உணர்பவனாயும், ‘நான்’ என்ற உண்மைப் பொருளாயும், அழியாத் தன்மையுள்ளவனாயும் உள்ள தனி ஆன்மா இல்லை–அதாவது உடலின் தோற்றத்தின் போது அதனுள் புகுந்து கொண்டு, அது மடியும் போது வெளியேறும் ஆன்மா ஒன்று இல்லை என்றே அவர் மறுத்துள்ளார்.
    ‘Buddhism denies the reality of the selfhood of the soul. It denies the existence of a soul-substratum, of a metaphysical soul-entity behind the soul; but not of the feeling, thinking, aspiring soul, such as we know from ‘ experience ourselves to be.’
    –Dr. PAUL CARUS in ‘The Gospel of Baddha;.'

    The soul (atman) which is denied is not the self of actual experience, but a theory of the permanent nature of the soul, a reality held to be behind all the physical phenomena. The argument is that whatever part of the individual is taken, bodily or mental, we cannot point to any one element in it as permanent, and when the individual is free from any passion (raga) or crackina (tanha), which impel these elements to rebirth; he is emancipated.

    –EDWARD J THOMAS, M.A., D.Litt.
    in ‘The Life of Buddha as legend and History'
  12. ‘மணிமேகலை’
  13. ‘விநயபிடகம்.’